42

     அந்தச் சேரியின் சேரிக்கு ஒரு காலத்தில் வெறுங் காலோடு நடந்த சுயம்பு இப்போது மேகலையாய் காரோடு போனான்.

     அதே அந்த வெள்ளைக் கார், வெளியே உள்ள பிரதான சாலையின் ஓரத்தில் நின்றபடியே, குறுகலான அந்தச் சேரிப்பாதைக்குள் போக முடியுமா என்பதுபோல் அங்குமிங்குமாய் பாவலாப் போட்டு பதுங்கிப் பதுங்கி முன்னாலும் பின்னாலும் நகர்ந்தது. இப்போது, அப்போதைய தேநீர்க்கடையை ஹோட்டலாக்கிக் கொண்டவர், தற்செயலாக வெளியே வந்தார். அந்தக் காரின் கவர்ச்சிக்கு உட்பட்டு “உள்ளே போகாதுங்க...” என்றார்.

     அந்தக் கார் அங்கேயே ஓரம் கட்டப்பட்டது. முன்னாலிருந்து நீலிமாவும் மார்கரெட்டும், பின்னாலிருந்து குஞ்சம்மாவும் லட்சுமியும் ஆளுக்கு ஒரு வழியாக இறங்கினார்கள். பிறகு உள்ளே எட்டிப்பார்த்து இருவருமே கையை நீட்டினார்கள். மேகலை நஸிமாவுடன் வெளியே வந்தாள். கூத்தாண்டவர் கோவிலில் உடைத்த - உடைபட்ட வளையல்களுக்குப் பதிலாக, வெள்ளையும் மஞ்சளும் கலந்த பிளாஸ்டிக் வளையல்களைப் போட்டிருந்தார்கள். மற்றவள்களைப் போலவே கொண்டை நிறையப் பூக்குவியல். அதே வெளிர் மஞ்சள் புடவை, பட்டுச்சேலை தான்.

     அவர்களைப் பார்த்ததும் ‘லேடி லயன்கள்’ என்று நினைத்தவர்கள், வேட்டிகளை இழுத்துப் போட்டு, முகங்களை நிமிர்த்தி, தங்களின் வேண்டுகோள்படி, அவர்கள் அங்கே வந்திருப்பதாக ஒரு அனுமானம் காட்டினார்கள். மேகலை, ஆவலை அடக்க முடியாமல் ‘குருவக்கா - பச்சையம்மா இருக்காங்களா’ என்று கேட்டாள். கூடியவர்களின் முகம் சுண்டியது. ஹோட்டல்காரர், அந்தக் கொண்டை முகத்திற்குள்ளும், சேலை உடம்பிற்குள்ளும் லுங்கி கட்டிய சுயம்புவை அடையாளம் கண்டு இளக்காரமாய்ச் சிரித்தார். மற்றவர்களைப் பார்த்துக் கண் சிமிட்டினார். அப்போதுதான், எல்லோரும் உற்றுப் பார்த்தார்கள். இப்போது வேட்டிகளையும் லுங்கிகளையும் டவுசர்கள் தெரியும்படி மடித்துக் கட்டி னார்கள். காட்டினார்கள். அடே... இதுகளா...

     அந்த அறுவரும், சேர்ந்தாற்போல் நடந்தார்கள். அந்தப் பாதையிலிருந்து ஒரு ஒற்றைப் பாதை பிரியப் போன இடத்தில் மேகலை லேசாய் நின்றாள். அப்போது “ஒம்போதுகடா... எல்லாம் கில்ட் நகைடா” என்ற பேச்சு. அந்த ஏரியாவுக்கு முன்பு சம்பந்தப்படாதவர்கள் மாதிரியான நாகரிக உடைக்காரர்கள். லட்சுமி திட்டப் போனபோது சிரிப்பாய் சிரித்தவர்களை எரித்துப் பார்த்தபடியே, மேகலை, அவள் உள்ளங்கையை அழுத்தினாள்... லட்சுமியின் வாயை ஆன் செய்யவும் ஆப் செய்யவும் அது தான் ஸ்விட்ச் என்பதுபோல். மேகலை, நல்ல சாலை போடப்பட்ட அந்தப் பகுதியை நின்று கவனித்தாள். மளிகைக்கடை, இப்போது பல்பொருள் அங்காடியாய் மாறிவிட்டது. அதே கடைக்காரர்தான். உடையில் மாற்றமில்லை. ஆனால் தோரணையில் ஒரு துரைத்தனம். தொலைவில் தெரிந்த அப்போதைய பளிங்குக் கட்டிடம். இப்போது அக்கம் பக்கமும் கிளைவிட்டு ஒரு குட்டி நகரமாகத் தோன்றியது.

     மேகலை, அந்தச் சேரியின் சேரிக்கான வளைவுப் பாதைக்குள் திரும்பினாள். உதட்டைச் சப்புக் கொட்டினாள். மாற்றம் ஏதுமிருந்தால், அது மோசமான மாற்றம். அதே குட்டை. அநேகமாக அப்போதைய தண்ணிர்தான். பல மடங்கு நாற்றம் கொசுக்களின் தொகையும் மக்கள் தொகையைப்போல் பெருகியிருந்தது. அதே எலிவளைப் பொந்துகள், அதே கோழிக்கதவுக் குடிசைகள், அதே தகர டப்பா சுவர்கள்.

     சிறிது பின்வாங்கிய தோழிகளை இழுத்துப் பிடித்த படியே, மேகலை, ஊரில், வீட்டுக்குப் போன வேகத்தைப் போல் ஒரு வேகத்துடன் நடந்தாள். அங்கிருந்த எல்லா அலிகளும், கும்பல் கும்பலாய் ஓடி வந்தார்கள். மேகலை, முதலில், தெரிந்த மேட்டுக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தாள். புடவையின் உட்பக்கத்தை வெளிப்பக்கமாக்கி, ‘புதுச்சேலை’ கட்டிக்கொண்டிருந்த குருவக்கா, சிறிது அசந்து நின்றாள். பிறகு புடவை முனையை அப்படியே விட்டுவிட்டு “அடியே என் ராசாத்தி” என்று கட்டிப் பிடித்துக் கொண்டாள். அந்த அணைப்பின் சுகத்தோடு, மேகலை, அவள் தோளில் கிடந்தபோது, அவள் தோழிகள் கொசுக்கடித்த கால்களை ஒன்றோடொன்று தேய்த்தார்கள். நீலிமா தன்னை இம்சை செய்த கொசுக்களை டோலக்கை அடித்து அடித்துத் துரத்தப் போனாள்.

     மேகலை, குருவக்காவின் தோளிலிருந்து விடுபட்டு லேசாய்க் கேட்டாள்.

     “எங்கம்மா... எப்படி இருக்காள்?”

     “ஏதோ இருக்காள்.”

     “எப்படிக்கா என்னை அடையாளம் கண்டே...”

     “நாங்க நெனச்சாக்கூட ஒன்ன மறக்க முடியாதுடி. நாங்கதான் ஒன்ன கடத்துனோம்னு போலீஸ்காரங்க எங்களப் படுத்தன பாடு... அடிச்ச அடி... அவனுவ வீட்டிலயும் ஒரு பொட்டை விழ. இப்போகூட பழைய கேஸ் இருக்குதுன்னு புதுப் போலீஸ்காரன் கூட கேப்பான். அவங்களே ஒன்ன அடிச்சுக் கொன்னுருப்பாங்களோன்னு எங்களுக்கும் பயம். அந்தப் பயத்தை பயந்துகிட்டே சொன்ன பிறகுதான் போலீஸ்காரன் எங்கள விட்டு வச்சான்.”

     “ஒங்கள ரொம்ப சிரமப்படுத்திட்டேன். என்ன மன்னிச்சிடுங்க...”

     “நீதான் எங்கள மன்னிக்கணும். ஒரு தடவ ஒன்ன டில்லியில் காருக்குள்ள பார்த்ததாய் பத்தாவது வகுப்புக் காரி பாத்திமா சொன்னாள். டில்லியில டி.வி.யிலயும் பார்த்ததா சொன்னாள். நான் நம்பலை.”

     “அவள் எங்கே இருக்காள் குருவக்கா?...”

     “அஞ்சு வருஷத்துக்கு முன்னால பம்பாய் போனாள். ஒன்ன மாதிரி நல்லா ஆனாளோ, இல்ல எங்களமாதிரி பீச்சு பீச்சா திரிஞ்சுட்டு அலையுறாளோ... அக்காளால இப்ப முடியலைடி... நம்மளுல ஒன்ன மாதிரி ஆயிரத்துல ஒன்றுதானே கரையேறுது... அந்த வகையில எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். இப்படிச் சந்தோஷப் பட்டது, ஒரு தடவ எங்கம்மா இங்க வந்து என்ன பார்த்துவிட்டுப் போனபோதுதான் இப்போ என் மகள் வந்திருக்காள்.”

     மேகலை, குருவக்காவின் தலையை நிமிர்த்தினாள். நகத்தைக் கடித்துக்கொண்டிருந்த தோழிகளைப் பார்க்காமலே, அவள் நெற்றியில் முத்தமிட்டாள். முகம் மேடுபள்ளமாகிவிட்டது. பழைய அழகு கலைந்து போனது. புருவங்களுக்குக் கீழே கருப்புத் திட்டுகள். அசத்தலான கண்கள் இருந்த இடத்தில், வெறும் குழிகள். முர்கே மாதா பழைய குருவக்கா எங்கே போனாள்... உடம்பைக் குலுக்காமலே பேசுவாளே... இப்போது அந்தப் பேச்சின் வேகம் தாங்காமல், உடம்பு தானாய் குலுங்குதே. அதே அந்த சிரட்டைப் பொட்டு முகம். எப்படி சில்லு சில்லாய்ப் போனது...

     குருவக்கா மேகலையை வழிநடத்தினாள். கூடவே, அந்த டில்லிக்காரிகளும் போனார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு அலிப்பட்டாளம். நீலிமா அங்குமிங்குமாய் பொறுக்கிய தமிழ் வார்த்தைகளை அவர்கள் காதுகளில் போட்டுப் போட்டுக் காட்டினாள். “என்னடி... ஒம்மாள... கபிரீச்சிங்களா...”

     மேகலை கிழிந்த சேலைகளில் உடம்பே கிழிபட்டது போல் தோன்றிய அந்தப் பஞ்சைப் பராரிகளைப் பார்க்க மனமிருந்தும், முகம் அதற்கான திராணியை இழந்தது போல் நடந்தாள். அந்தக் குடிசை வாசலுக்குள் நின்று முர்கே தேவியின் படத்துக்கு முன்னால் காலும் தலையும் ஒன்றை ஒன்று தொட, முடங்கிக் கிடந்தவளைப் பார்த்து...

     “எம்மா... எம்மா...”

     முடங்கிக் கிடந்த உருவம் கூப்பிட்ட குரல்காரியின் முகத்தைப் பார்க்காமலே ‘சுயம்பு... சுயம்பு என் மவளே’ என்று வாரிச்சுருட்டி எழுந்தது. மேகலையின் உடையையும் நகை நட்டுக்களையும் பக்கத்தில் நின்ற தோழிகளின் மிடுக்கையும் பார்த்து அணைக்கப்போன கைகளை அப்படியே வைத்துக்கொண்டது. அதற்குள் மேகலை ‘அம்மா அம்மா’ என்று அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பி, அவளை அணைத்துக் கொண்டாள். சிக்கெனப் பிடித்துக் கொண்டாள். சிறுகச் சிறுக அழுகை, பதில் அழுகை பச்சையம்மா மேகலையின் முகத்தை நிமிர்த்தி, மாறிமாறி முத்தமிட்டாள். அவள் கையைத் தனது கையில் பிடித்துக் கொண்டே பாருங்கடி என் மவளை என்பது மாதிரி வெளியே பார்த்தாள். பச்சையம்மாவின் லட்சணக் கருப்பு முகமும், இப்போது மேக மூட்டமாய்த் தெரிந்தது. நாட்டுக்கட்டை உடம்பு சீக்குக் கட்டையாய் மாறி விட்டது.

     இதற்குள் ‘குட்டி’ அலிகள், அங்குமிங்குமாய் ஓடி, நாற்காலிகளைக் கொண்டு வந்தன. மூன்றே மூன்று நாற்காலிகள்தான் கிடைத்தன. அதுவும் ‘சராசரி’ சேரிக் காரர்களின் வீடுகளில் கிடைத்தவை. நீலிமாவும், நஸிமாவும் அதில் உட்காரப் போனபோது, மேகலை அவர்களைக் கொஞ்சலாகவும் கெஞ்சலாகவும் பார்த்துவிட்டு, குருவக்காவையும், பச்சையம்மாவையும், அவற்றில் பலவந்தமாக உட்கார வைத்தாள். பச்சையம்மா ஒப்பாரி போல் குரலிட்டாள்.

     “நீ இப்படிச் சொல்லாம கொள்ளாமப் போகலாமா மகளே... இந்தப் பாவிய போலீஸ் வந்து ஒன்ன ஒப்படைக்கும்படி கேட்டுது. அதுல ரெண்டு பல்லு போயிட்டு... ஒரு காலு ஊனமாயிட்டு... இப்போ ஒன்னரைக் காலுலதான் நடக்கேன். நானாவது குற்றவாளி. குருவக்கா என்ன செய்தாள், மூணு மாசம் ஆஸ்பத்திரியில கெடந்தாள். ‘அதுல’ மிதிச்ச மிதில இப்போ அவளுக்கு ‘ஒண்ணுக்கு’ சரியா போகமாட்டக்கு... அவஸ்தைப் படறாள்.”

     “பழைய கதை எதுக்கு பச்சம்மா... நமக்கு சந்தோஷம் என்கிறதே ரொம்பக் குறைச்சல். அதை வேற மேலும் குறைக்கணுமா... சுயம்பு. எப்படி இருக்கே... நீ நல்லா இருக்கது நாங்க நல்லா இருக்கதுமாதிரி இருக்குடி.”

     “ரெண்டுபேரும் என்கூட டில்லிக்கு வந்துடுங்க.”

     “வேண்டாண்டி... நான் இங்க இல்லாட்டா... இவளுவள போலீஸும், பொறுக்கிங்களும், சீரழிச்சுடுவாங்க நான் இருக்கக்கண்டிதான் அவங்க கையில காலுல விழுந்து இவளுவ வயித்துல அடிபடாம பார்த்துக்கறேன்.”

     “அப்போ எங்கம்மாவ மட்டுமாவது கூட்டிட்டுப் போறேன்.”

     “எனக்குக் கை ஒடிஞ்சதுமாதிரி இருக்கும். இருந்தாலும் கூட்டிட்டுப் போ. இவ்வளவு நாளும் ஒன்னத் தான் நெனைச்சுட்டிருந்த அப்பாவி... ஒன் பக்கத்துல இருந்தாத்தான் இன்னும் கொஞ்ச நாளைக்காவது உயிரோட இருப்பாள்.”

     பச்சையம்மா, எழுந்தாள். மேகலையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு “மவளே, மவளே... நீ என்ன மறக்கலை மகளே. அந்த ஆஸ்பத்திரியில பார்த்த அதே மகளாத்தான் இருக்கே மகளே!” என்று பழைய பச்சையம்மாவாய் அதே மாதிரி அரற்றியபோது

     “ஆம்புள கெடைக்காம இப்போ பொட்டைக்கு பொட்டையே கட்டிப் பிடிக்கீங்களா?”

     எல்லோரும் எதிர்த்திசையைப் பார்த்தார்கள்.

     ஏழெட்டு போலீஸ்காரர்கள், அவர்கள் மத்தியில் இடுப்பில் துப்பாக்கி வைத்த இன்ஸ்பெக்டரோ சப் இன்ஸ்பெக்டரோ. எஞ்சியவர்கள் கையில், லத்திக் கம்புகள் ‘மிஞ்சின’. அவர்களின் கனமான பூட்ஸ் கால்கள் ஆங்காங்கே பள்ளங்களை ஏற்படுத்தின. துப்பாக்கி அதிகாரி, லத்திக்கம்பை அங்குமிங்குமாய் ஆட்டியபடியே குருவக்காவைப் பார்த்துக் கேட்டார்.

     “இந்தப் பொட்டைங்கள எப்போடா இறக்குமதி செய்தே... இந்தத் தொழிலுக்கு ஆளு பத்தலையா?”

     குருவக்காவும், பச்சையம்மாவும் பதறிப்போய் எழுந்தார்கள். “உட்காருங்க சார்... உட்காருங்க சார்...” என்று தங்களது நாற்காலிகளை அவர்கள் பக்கமாய் இழுத்துப் போட்டார்கள். துப்பாக்கிக்காரர் மேகலையை ஏற இறங்கப் பார்த்தார். அவள், தன்னையோ, தனது துப்பாக்கியையோ அங்கீகரிக்காததில் ஒரு ஏமாற்றம், கர்வபங்கம்.

     “அந்தப் பொட்டப்பயல் எழுந்திருக்க மாட்டானோ! எதுவும் எக்ஸ்ட்ராவா மொளச்சிருக்கோ... டேய், பொட்டை! வாடா இங்கே!”

     மேகலை, நிதானமாக எழுந்தாள். அவளைப் பிடித்திழுத்த டில்லிக்காரிகளை உதறித் தள்ளிவிட்டு, அவர் முன்னால் ஓடிப்போய் நின்றாள். இடுப்பில் கை வைத்த படியே ஒரு சந்தேகம் கேட்டாள்.

     “நீங்க போலீஸ்தானே! இந்த காக்கி யூனிபாரம் உங்கதுதானே!”

     துப்பாக்கிக்காரர் கோபத்தை அடக்கிக்கொண்டு, மேகலையைப் பேசவிட்டார். சரிந்து போகப்போன லத்திக் கம்புகளை கையமர்த்தினார்.

     “எதுக்குக் கேட்டே முன்னால், போலீஸ்காரங்களை ‘உங்கள் நண்பன்’னு சொல்லுவாங்க... ஒரு குடிமகனையோ, மகளையோ ரெண்டுமே இல்லாமப்போன எங்களையோ மரியாதை போட்டு பேசணுமுன்னு சட்டம் சொல்லாமச் சொல்லுது. அதனால்தான் கேட்டேன்! நீங்க போலீஸ்காரங்களா தெரியலை; ஒருவேளை போலீஸ்ல இருந்து காக்கி யூனிபாரத்தை திருடுன பொறுக்கிப் பசங்களாய்...”

     மேகலையால் மேற்கொண்டு பேச முடியவில்லை. கீழே விழுந்து கிடந்தாள். வாயில் ரத்தம். துப்பாக்கிக்காரரின் பூட்ஸ்கால் இன்னும் காலைத் தூக்கிய நிலையிலேயே தாண்டவத்திற்குத் தயாராகியபோது, அவரது வாய் வார்த்தைகளால் சுட்டன.

     “என்னடா நெனச்சே பொட்டப்பயலே... வெள்ளைக் கார்ல கஞ்சா கடத்தினா விட்டுடுவோமா. ஒவ்வொரு பொட்ட வீடா சோதனை போடுங்கப்பா. எத்தனை கிலோடா கொண்டு வந்தே... ஒன்ன பாலோ செய்துக்கிட்டுத்தான் இருக்கோம்: காலையிலேயே வந்து இந்த பச்சையம்மாகிட்டே காதுல மந்திரம் போடுறியா...”

     சப்-இன்ஸ்பெக்டர் ஓங்கிய காலை, மேகலையின் முகத்துக்கெதிராய் கொண்டு போகப்போனபோது...

     “டேய் போலீஸ் பொறுக்கி... ஒன் வீட்லயும் பொட்டை விழும்டா, கூசாம பொய் சொல்றியே. இதுக்கே நீயும் ஒரு பொட்டையாப் போவே... எங்கே என் ராசாத்தி மேல கால் வை பார்க்கலாம்...”

     சப்-இன்ஸ்பெக்டர் அசந்தார். தன்னை ஒரு பொட்டப்பயல் - அதுவும் பச்சையம்மா, அப்படிக் கேட்டதில் அதிர்ந்து போன அந்தத் துப்பாக்கி, குருவக்காவை ஆறுதலாகப் பார்த்தது. அவளும் ஆவேசப்பட்டாள்.

     “இப்படித் தராதரம் தெரியாமக் குதிக்கீங்களே... நீங்க உருப்படுவீங்களா. போன மாசம் மாமுல் கட்டுனோம். இந்த மாசம் இன்னும் கட்டலன்னு இப்படியா குதிக்கது. பிச்சக்காச நேராய் கேளேய்யா!”

     குருவக்காவும் கீழே விழுந்தாள். ஆனால் மேகலை எழுந்தாள். இதற்குள், பித்து பிடித்து நின்ற, நீலிமா, சப்-இன்ஸ்பெக்டர் கையைப் பிடித்து இழுத்தாள். லட்சுமி ‘என்னைச் சுடுடா’ என்று முந்தானையைக் கீழே போட்டு விட்டு, மார்பைக் காட்டினாள். அதே சமயம், ஆறு போலீஸ்காரர்களும் அந்த அலிக் குடிசைகளை சிதைத்து சின்னா பின்னம் செய்து கொண்டிருந்தார்கள். பல மொட்டையாயின. சில கட்டையாயின. மண் பானைகள் சில்லு சில்லாய் நொறுங்கின. ஈயப் பானைகள் அந்தப் பழைய குட்டையில் விழுந்தன. குடிசைகளைக் காப்பாற்ற ஓடிய பல அலிகள், திரெளபதிகளாக நின்றனர். இதற்குள் நீலிமா குரல் கொடுத்தாள்.

     “போலீஸ் மர்தாபாத்... போலீஸ் மர்தாபாத்.”

     அந்த மர்தாபாத் என்ற வார்த்தையின் பொருள் புரியாத அத்தனை பேரையும் அந்த வார்த்தை எப்படியோ பற்ற வைத்தது. ஒவ்வொரு உடம்புக்குள்ளும் ஒரு நெருப்பு ஜ்வாலை எரிந்தது. அடிபட்டு நோகும் அத்தனை அலிகளும் கிலி விட்டுப் போனது போல் போலீஸாரை சூழ்ந்தார்கள். ரத்த சாட்சியோடு கத்தினார்கள். இதற்குள் அந்தக் காட்டுத் தீயின் உஷ்ணத்தால் சூடு வந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். அந்தச் சேரியிலுள்ள சராசரிகளும், இப்போது அசாதாரணங்களாத் திரண்டனர். தடியடிக் கம்புகளைத் தாவிப் பிடித்தார்கள். எங்கிருந்தெல்லாமோ ஓடி வந்தார்கள். வெளிமன அவமானச் சுவடுகளும் அவற்றின் எச்சங்களான அச்சங்களும் அடிமனக் கோபாவேசத்திற்கு வழிவிட்டன, தெரு நாய்கள், வேட்டை நாய்களாயின. வீட்டுப்பூனைகள் காட்டுப் பூனைகளாயின. உள்ளேயும், வெளியேயும் ஒரே சத்தம்.

     தொலைவிலிருந்து கல்விச்சு... அருகிலிருந்து எழுத்தில் கொண்டுவர முடியாத இதயம் பதித்த வசவுகள்... சிலர் ஆவேசப்பட்டு உடைகளைத் தூக்கியதும் உண்மைதான். அந்தச் சேரியே பற்றி எரிவது போலிருந்தது. வயிற்றில் எரிந்தது, அந்த வளாகத்தையே எரிப்பதுபோல் தோன்றியது. சரமாரியான கல்விச்சு. கதவடைப்பு. அந்தப் போலீஸ் அதிகாரி துப்பாக்கிப் பக்கம் கையைக் கொண்டு போனார். மேகலை அந்தத் துப்பாக்கியின் குழாயைத் தனது கைகளால் மூடினாள். உடனே டில்லிக்காரிகள் அவளையும் அந்தத் துப்பாக்கிக்காரரையும் அங்கு மிங்குமாய் தள்ளினார்கள். கூச்சல் போட்டார்கள். குமுறிக் குமுறி முழங்கினார்கள். ஏச்சுக்கள், அந்த ஏரியாவின் எல்லையைத் தாண்டின.

     அந்த போலீஸ் ஆசாமி, அதிர்ச்சியடைந்தார். ஆழம் தெரியாமல் காலை விட்ட கவலை. துப்பாக்கியால் சுட்டால் எத்தனை பேர் சாவார்கள்? எஞ்சியவரை என்ன செய்யமுடியும்? ஆறே ஆறு லத்திக்கம்புகள் என்ன செய்ய முடியும்? அவர் பின்வாங்கப் போனார். ‘இரவில் ரதகஜ துரக பதாதிகளோடு வரலாம்’ என்றால், ஒரு வழியடைப்பு. போதாக்குறைக்கு, பென்சிலும் குறிப்பு நோட்டுமாய் ஏழெட்டுப்பேர். செகரட்டேரியட் பிரஸ்மென்... வீட்டுக்குத் திரும்பியவர்கள், சத்தம் கேட்டு வந்ததுபோல் தெரிந்தது. ஜோல்னாப் பையை ஒரு கையால் தடவி மறுகையால் மோவாயைத் தடவி அங்குமிங்குமாய் சூழ்ந்தார்கள். மேகலையிடம் ஒரு பேட்டி, நீலிமாவிடம் ஒரு பேச்சு. பச்சையம்மாவிடம் ஒரு கிசுகிசுப்பு. துப்பாக்கிக்காரரிடம் ஒரு குறுக்கு விசாரணை.

     இதற்குள், ஒரு அலிஸ்டெண்ட் கமிஷனர் ஒரு பெரும் படையோடு வந்தார். எந்த டெலிபோன் சொன்னதோ. அங்கே நின்ற செய்தியாளர்களைப் பார்த்ததும் அவரது இரும்புமுகம், கரும்பு முகமானது. தடியடிக்கு ஆணையிடப் போனவர், தடியடி பட்டவர்போல் தவித்தார். பத்திரிகைக் காரர்களையே உற்றுப் பார்த்தார். ‘இந்து’ ரவி, ‘எக்ஸ்பிரஸ்’ கோபால், ‘தினத்தந்தி’ சுகுமார், ‘தினமலர்’ நூருல்லா, ‘பிடிஐ’ வெங்கடேஷ், ‘யுஎன்ஐ’ ரமேஷன், ‘மாலைமுரசு’ மோகன்ராஜ், ‘தினத்தூது’ கனகராஜ், ‘தினமணி’ ஜெகன்னாதன் இந்த மாதிரி செய்திகளை மருந்துக்கும் போடாத ‘வானொலி’ செய்தி ஆசிரியர் சமுத்திரம்.

     அந்த நட்சத்திர அஸிஸ்டெண்ட் கமிஷனர் மேகலைப் பக்கம் போனார்.

     “என்னம்மா நடந்தது?”

     “நீங்களே என்ன நடந்திருக்குமுன்னு தெரிஞ்சுக்க லாம். அந்தக் குட்டையில கிடக்கிற பாத்திரங்களைப் பாருங்க. மண்ணுல சரிஞ்ச குடிசையைப் பாருங்க. என் வாயில வழியற ரத்தத்தைப் பாருங்க. குறுக்கே பேசாத லட்சுமிக்கா... இந்தாங்க சார் என் விசிட்டிங் கார்டு... இதையும் வச்சுக்குங்க. இது என்னோட பிதாஜி கார்டு... அவரு வீட்லயும் ஒரு ஐ.பி.எஸ். இருக்கார்.”

     “ஸாரி. நீங்க யாருன்னு தெரியாமல்...”

     “இங்கதான் ஸார் எல்லாருமே தப்பு செய்யுறோம். யாருன்னு தெரியாமல் அடிக்கிறத பொறுத்துக்கலாம். தெரிஞ்சுக்கிட்டே அடிக்கிறத எப்படி சார் பொறுத்துக்க முடியும்? இந்த அலி ஜீவராசிகளுக்கு என்ன சார் இருக்குது? அரசாங்கத்துலயும் வேலை கிடையாது. கடைகண்ணியிலயும் சேர்த்தியில்ல... யாருக்கெல்லாமோ கருணை காட்டுறதாய் சொல்ற தமிழ்நாடு அரசு, இவங்க பக்கம் கண்ணைக் காட்டல... இவ்வளவுக்கும் அமைச்சருங்க போகிற சாலைப் பக்கம்தான் இவங்க அலையுறாங்க... நடக்கிறாங்க.”

     “இதெல்லாம் எங்க அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விஷயம்... நடந்ததைச் சொல்லுங்க.”

     “ஏ.ஸி.லார்... ஒங்களுக்கு சொல்லாட்டாலும் பிரஸுக்கு சொன்னதாய் நெனச்சு சும்மா இருங்க... இந்தாம்மா, ஒங்களப் பத்திச் சொல்லுங்க.”

     மேகலை, போலீஸ்காரர்களைப் பொருட்படுத்தாது செய்தியாளர்களிடம் தன்னைப் பற்றிச் சுருக்கமாகவும், அங்கே நடந்தவற்றை விவரமாகவும் சொன்னாள். அலிஸ்டெண்ட் கமிஷனர் புன்னகைத்துப் பேசினார்.

     “இந்தாப்பா... எல்லாப் போலீஸும் வெளியில போங்க. நாளைக்கு என்ன ஆபீஸ்ல பாரும்மா... இதுதான் என் கார்டு...”

     “போகாதக்கா... அடி அடின்னு அடிப்பாங்க.எனக்கு கிடைச்சது மாதிரியே கிடைக்கும்.”

     ஒரு லுங்கிப் பெண், அசல் பெண் தோற்றக் குரலில் பேசியபோது எல்லோரும் சிரித்தார்கள். அப்புறம் சிரித்தது தப்பு என்பது போல் வாயை மூடினார்கள். ஆங்காங்கே சூழ்ந்து நின்ற கும்பல்கள் இப்போது கூட்டங்களாகி, குழைந்து நின்றன. ஏ.சி.யும் பிரஸ்மென்னும் ‘ஆழமாகப்’ பேசிக்கொண்டார்கள்.

     “வாங்களேன். உங்கள நானே டிராப் செய்யுறேன். மூணு ஜீப் இருக்குது...”

     “வேண்டாம் சார்... ஸ்கூட்டர் இருக்குது. பஸ் ஸ்டாண்டும் பக்கத்துல இருக்குது.”

     “என்ன பண்றது... நான் இல்லாட்டால் துப்பாக்கிப் பிரயோகம் அளவுக்குப் போயிருக்கும். சேதி கேட்டு ஓடி வாறேன். சி.எம். செக்யூரிட்டுக்குப் போகணும்...”

     “நீங்க போங்க ஸார்...”

     “பார்த்துப் போடுங்க...”

     “நடக்கிறதத்தான் பார்க்கோமே...”

     அந்த அளிஸ்டெண்ட் கமிஷனர், தனது பரிவாரங் களோடு தயங்கித் தயங்கிப் போனார். நாளைக் காலை வரை உயிரைக் கையில் பிடிக்கவேண்டிய நிலை. எதுக்கும் கமிஷனருக்கு... டெப்டி கமிஷனர் தாளிச்சிடுவார்... ‘டி.சி.’ கிட்ட சொல்லிடலாம். அவர் பாடு... கமிஷனர் பாடு... கமிஷனர் பாடு... டி.ஜி.பி. பாடு...

     போலீஸ் அகன்றதும், மேகலை செய்தியாளர்களைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

     “தயவுசெய்து எங்கள கவர்ச்சிப் பொருளாய் செய்தி போடாதீங்க... நாங்க படுற பாட்டையெல்லாம் சொல்லிட்டோம். ஒங்க வீட்லயும். எங்கள மாதிரி ஒரு பொட்டை விழலாம்... அத நெனைச்சு ஆண்மையா செய்தி போடுங்க. விளம்பரம் கட்டாயிடுமேன்னு பயப்படாதீங்க... இந்த சேரிப்பக்கமும். ஓங்க பேனா... மனிதாபி மானத்தோட திரும்பட்டும்...”

     செய்தியாளர்கள் அசந்து போனார்கள். அவர்களே அந்தச் சேரியின் சேரியை அப்போதுதான் பார்ப்பது போல் முகம் சுளித்தார்கள். இதற்குள் அதே லுங்கிப் பெண், மேகலையிடம் ஒரு போடு போட்டாள்.

     “ஓங்களுக்கென்ன... நீங்க பாட்டுக்கு டெல்லிக்கோ பம்பாய்க்கோ போயிடுவீங்க... ஒரு வாரம் கழிச்சு போன போலீஸ் மச்சான் திரும்பி வருவான் லத்திக் கம்போட. அப்போ யாரு வருவா தொணைக்கு...”

     மேகலை அந்த லுங்கிக்காரியையே பார்த்தாள். அவளும் ஒரு முடிவுக்கு வந்தாள்.