43

     ஆண், பெண், அலி என்ற அத்தனை தன்மை களையும் தாண்டிப் போனவள்போல், மேகலா அக்காவின் படத்தைப் பார்த்த விதத்தைப் பார்த்தான், பார்த்தாள், பார்த்தது. என்றுகூடச் சொல்லமுடியாது. இதற்கும் மேலான ஒரு வார்த்தையை இனிமேல்தான் தேட வேண்டும். கண்டுபிடிக்க வேண்டும்.

     வீட்டிலிருந்து கொண்டுவந்த, அக்காவின் படத்தைச் சிறிது பெரிதாக்கி கங்காதேவியின் புகைப்படத்திற்கு அருகே மாட்டிவிட்டாள். அக்கா எழுதிய அந்தக் கசங்கிய ‘எட்டு வயதுக்’ காகிதத்தை அதைவிடப் பெரிய கலர்த் தாளில் ஒட்டிவிட்டாள். அதையும் பிரேம் செய்து அக்காவின் படத்திற்குக் கீழே மாட்டிவிட்டாள். அந்தக் கடிதத்தை டில்லிக்குத் திரும்பிய பிறகு, இந்த ஒரு மாத காலத்தில் ஐநூறு தடவைக்குமேல் படித்திருப்பாள். அக்காவுக்குச் செலுத்தப்போகும் லட்சார்ச்சனை போல், இன்னும் படித்துக்கொண்டே இருக்கிறாள். அவளுக்கு அது ஒரு திருக்குறள். படிக்கப் படிக்க மீண்டும் படிக்கத் தூண்டும் பாசக்குறள். அந்தக் குறளில் அக்காவின் குரலும் ஒலித்தது...

     மெத்தை நாற்காலியில் உட்கார்ந்தபடியே, அக்காவின் படத்தையும், கோவில்களில் வைத்திருப்பது போன்ற மந்திரத் தகடாய் அக்கா படத்திற்குக் கீழே சாத்தி வைக்கப்பட்ட அந்தக் கடிதமிருக்கும் கண்ணாடிச் சட்டத்தையும் உற்றுப் பார்த்தவள், அக்காவும் தானும் உறவாடிய ஊருக்கு மீண்டும் போகப் போகிற மகிழ்ச்சியை நினைத்தபடியே எழுந்தாள். இதற்குள், நீலிமா இரண்டு சூட்கேஸ்களை ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கி வைத்து விட்டு, போர்வைகளை மடித்து, ஒயர்க் கூடைக்குள் திணித்தபடியே, “ஜல்தி, ஜல்தி” என்றாள். பிறகு மேகலையின் முன்னால் போய், தனது கடிகாரம் கொண்ட கையைத் தூக்கிக் காட்டினாள்.

     மேகலை அவசர அவசரமாக எந்தப் புடவையைக் கட்டலாம் என்பதுபோல் யோசித்தாள். காலத்தின் கோபத்தையும் கருணையையும் நினைத்தபடி வெளிர் மஞ்சள் புடவையை எடுத்து உடம்பில் சுற்றியபடியே உள்ளத்தைச் சுற்றவிட்டாள். அண்ணனின் கடிதம் முந்தா நாள் கிடைத்தது. பதினைந்து நாட்களுக்கு முன்பு கலியாண அழைப்பிதழுடன் அவன் அனுப்பிய கடிதம். தேதி நன்றாகவே தெரிகிறது. தபால் முத்திரையும் அப்படியே. ஆனால் தபால்துறை, இதர சகோதரத் துறைகளைப்போல் பின்வாங்குவதில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதே நிலை நீடித்தால், சம்பந்தப்பட்ட பெண்ணுக்குக் குழந்தை பிறந்தபிறகு கூட கலியாண அழைப்பிதழ் கிடைக்கலாம். கிடைக்குமே... அதுவே பெரிசு.

     மேகலை இவ்வாறு தனக்குள் பேசியதைத் தானே ரசித்து, மெல்லச் சிரித்தாள். அண்ணனின் கடிதத்தையும், மீண்டும் மனதுக்குள் வாசித்தாள். அண்ணன் மகன் மோகன் என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்து விட்டானாம். போன மாதம் அனுப்பியதுபோல் அவனுக்குக் கண்டபடி பணம் அனுப்பிச் செல்லம் கொடுக்கக் கூடாதாம். தங்கையின் கலியாணத்திற்கு இதுவரை அனுப்பிய பணத்தில் நிறைய மிச்சமிருக்கிறதாம். ‘ஆபீஸ்கார’ மாப்பிள்ளைக்கு, அளவுக்கு மீறிச் செய்து அவன் ஆசையை பேராசையாக்கக் கூடாதாம். வீட்டுக்கு மனம் போன போக்கில் வாங்கிக்கொண்டு வரக்கூடாதாம். அப்பாவுக்கு பெருமளவு சுகமாகி, இப்போது கம்பை ஊன்றி நடக்கிறாராம். பழைய ஸ்டைலில் பேசத் துவங்கி விட்டாராம். அம்மாதான் இன்னும் சரியான உடல் நிலைக்கோ, அல்லது மனநிலைக்கோ திரும்பவில்லையாம்.

     மேகலை யோசித்தாள். அண்ணியைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை. ஏதாவது செய்ய வேண்டும். அம்மாவையும் இங்கே கூட்டி வரவேண்டும். வீட்டில் இருக்கும்போது, கூப்பிட்டதற்கு, மோகனாவுக்குத் தலைப் பிரசவம் பார்த்துவிட்டுத்தான் வருவேன் என்று சொல்லி விட்டாள். அந்தக் கடிதத்தில், அண்ணன் இன்னொரு தகவலும் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. ஊரில் பெருமையாய்ப் பேசுகிறார்களாம். சின்ன வயதில் வந்த கோளாறு இடையிலேயே வந்து இடையிலேயே போய் விட்டதாக நினைக்கிறார்களாம். ஆகையால் ஒரு நாலு நாளைக்கு வேட்டி சட்டை உடுத்தி அதைப் பல்லைக் கடித்தாவது பொறுத்துக் கொள்ள வேண்டுமாம். இதுகூடப் பெரிதாகத் தெரியவில்லை. - ‘இப்படிக்குப் புத்தி சொல்ல யோக்கியதை இல்லாத அண்ணன் ஆறுமுகப்பாண்டி’ என்ற முடிவுரை அவளை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது.

     மேகலை அந்தக் கலியாண அழைப்பிதழை மூக்கில் வைத்து ஆட்டியபடியே டேவிட்டை நினைத்தாள். இதற்குள் அண்ணனின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. அவசர அவசரமாய் எழுந்தாள். புடவையைக் களைந்து விட்டாள். அத்தனைப் பெண் உடைகளையும் கழற்றி விட்டு, வேட்டியை உடுத்திக் கொண்டாள். சட்டையைப் போட்டுக்கொண்டாள். இப்போதே பழகிக் கொள்ளலாம். மேகலை, சுயம்புவானான்.

     இதற்குள் உள்ளே ஓடி வந்த லட்சுமி, குஞ்சம்மா வகையறாக்கள், அவளை ஆச்சரியத்தோடு பார்த்தாலும் அதிர்ச்சியாகப் பார்க்கவில்லை. அந்தக் கடித விவரம், அவர்களுக்கும் தெரியும். வீட்டிலிருக்கும் போது வாயில் புடவையைக் கட்டிக் கொண்டிருக்கும் பச்சையம்மா, மகள் வாங்கிக் கொடுத்த ஒரு பட்டுச் சேலையைக் கட்டிய படியே மேகலையை ஒரு மாதிரி பார்த்தாள். அவள் முகத்தில் இன்னும் மினுக்கம் இல்லையென்றாலும், கிறக்கமும் இல்லை. அவள் பார்வையைப் புரிந்துகொண்ட மேகலை சிறிது கண்டிப்போடே பேசினாள்.

     “பேசாமல் இங்கேயே இரும்மா... ஏகப்பட்ட நோய். இன்னும் ஊசி போடவேண்டியிருக்கு... இந்த டாக்டர் மாதிரி எந்த டாக்டரும் வராது. இன்னும் ஒனக்கு மெட்ராஸ் வாடை போகலியா... பட்டது போதாதா... குருவக்கா அங்க இருக்க வேண்டியதால இருக்க வச்சிருக்கேன்... லட்சுமிக்காவக்கூட கூட்டிட்டுப் போகலை. இந்த நீலிமாவை அவளுக்காகவே கூட்டிட்டுப் போறேன். அம்மா இறந்துட்டான்னு கல்கத்தாப் பக்கம் சொந்த ஊருக்குப் போனவளை அண்ணன் தம்பிங்க கழுத்தைப் பிடிச்சு வெளியில தள்ளிட்டாங்க. அவளால, மானபங்கம் என்கிறதைவிட, சொத்து பங்கம் வந்துடு மோன்னு பயம். அதனாலயே இவள் பித்துப் பிடிச்சுக் கிடக்கிறாள். லட்சுமிக்கா! அதோ காந்தி, காரல்மார்க்ஸ், ஹெலன் கெல்லர், படம் போட்ட புத்தகங்கள் இருக்கு பாரு... எல்லாவற்றையும் எடுத்து பெட்டிக்குள்ள வைக்கா. ஏன் அப்படிப் பார்க்கே...”

     “உன்னப் புரிஞ்சுக்கவே முடியலைடி. கூத்தாண்டவர் கோயிலுல குழந்தையா மாறி அப்படி லூட்டி அடிச்சே, மெட்ராஸ்ல என்னடான்னா சப்-இன்ஸ்பெக்டருக்கு சஸ்பெண்ட் வாங்கிக் கொடுத்தே. எல்லா தமிழ்ப் பத்திரிகைகளையும் நம்ம பிரச்னையைப் பத்தி பெரிசா செய்தி போட வச்சே... ஆனாலும், நம்ம ஊருக்காரங்க எச்சிக்கலை புத்தி அவங்கள விட்டுப் போகாது. ஒரு பேப்பர்ல ‘அலி அழகிகளின் ஆர்ப்பாட்டம் படு தமாஷ்’னு போட்டான் பாரு. நம்ம பிரச்னையவிட அவனுக்கு நம்ம நெளிவு சுழிவுதான் பெரிசாப் போச்சு. அவன் வீட்ல ஒரு பொட்டை விழ. ஆனாலும் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால், தமிழ்ப் பத்திரிகைங்க நம்ம தலை நிமிர வச்சிட்டு.”

     குஞ்சம்மாவினால் சும்மா இருக்க முடியவில்லை. பி.டி.ஐ., யு.என்.ஐ. ஏஜென்ஸிகளால் நாடு முழுக்க இந்தச் செய்தி எப்படியோ ஒருவிதத்தில் வந்தது அவளுக்குத் தெரியாது. ஆனால், மலையாளத்தில் வந்தது நல்லாவே தெரியும். என்ன நெனெச்சுக்கிட்டாள் இந்த லட்சுமி...

     “ஏ.டீ... பிராந்தி... தமிழ்நாடு, மாத்ரம் ஆனோ... பத்திரிக்கை உள்ளன்னு விஜாரிக்கலே... எங்கட... மலையாளத்துல... கூடியும் வந்துட்டுண்டு...”

     மேகலை, அந்தக் காகிதப் புலிகளைக் கையாட்டித் தடுத்தபோது, பச்சையம்மா, தான், அவளோடு போக வேண்டியதன் அவசியத்தைக் கடைசி நிமிட முயற்சியாகச் சொன்னாள்.

     “ஊருக்காக இப்பவே வேட்டி சட்டையில நிக்கே... கொண்டைய எப்படி மறைக்க முடியும். இந்த நீலிமாவுக்கு என்ன தெரியும்? நான் கூட வந்தால், தலைக்கு முண்டாசு கட்டிவிடுவேன். நீலிமாவ என் மகள்னு சொல்லி, ஒனக்கு அந்த நாலு நாளைக்கும் மாமியார் மாதிரி நடிப்பேன். யோசிச்சுப் பாரு...”

     “யோசிக்கிறதுக்கு எதுவுமில்ல பச்சை. ஒரு பெரிய டோபாவ வாங்கி கொண்டைய உள்ளுக்குள்ள திணிச்சிடலாம்.”

     “லட்சுமிக்கா... அம்மாவ பொட்டையா கூப்பிடாதே. நீ சொல்ற டோபாவோ... அக்கா சொல்ற முண்டாசோ தேவையில்ல. என் தங்கைக்கு நல்ல இடத்தில முடிஞ்சால் மொட்டை போடுறதாய், பழனி மொட்டையாண்டி கிட்ட வேண்டிக்கிட்டேன். போகும்போதே மொட்டை போட்டுக் கிட்டுத்தான் போகப்போறேன்!”

     “என்னடி இது அக்கிரமம்... யாரக் கேட்டு இப்படி நேர்ந்தே... கண்ணாடி முன்னால ஒவ்வொரு முடியா, நீவி ரசிப்பியே... இன்னும் விட்டால், தலையைக் கூட வெட்டிக்கிறேன்னு வேண்டுவே போலிருக்கே...”

     மேகலை, லட்சுமியக்காவைப் பார்த்து மீண்டும் சிரித்தாள். எல்லோரும் அவளை பிரமித்துப் பார்த்த போது, அவள் தன்னை ஒரு சாதாரண மனுஷியாக காட்டிக்கொள்ள நினைத்து, தலையை சிறிது குனிந்தாள். அவள் படித்த ஒரு காந்தியப் புத்தகத்தில், ‘ஒருத்தர்’ பிறரிடம் தன்னைப்பற்றி எந்த பிரமிப்பையும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. தோழமை உணர்வே மேலோங்கி நிற்கணும். அவர்களும், நம்மைப்போல் ஆக முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது அடிக்கடி நினைவுக்கு வருவது போல் இப்போதும் வந்தது. லட்சுமியக்காவின் தோளில் ஒரு கையும், மார்கரெட்டின் தோளில் இன்னொரு கையும் போட்டபடி பொதுப்படையாகச் சொன்னாள்.

     “வீட்ட பத்திரமா பாத்துக்குங்க... இந்திரபுரி வீட்டு வாடகைய முதல் தேதியே வாங்கிடுங்க... யாராவது உதவிக்கு வந்தால், கையில இருக்கத கொடுங்க. ஒங்களயும் இவ்வளவு பெரிய வீட்டையும் விட்டுட்டுப் போக சங்கடமாத்தான் இருக்கு...”

     “இதுக்குத்தான் நீயும் ஒரு மகள சுவீகாரம் செய்யனும் என்கிறது...”

     “தேவையில்ல அம்மா. எனக்கு என் அலித்தன்மையே மகள். அந்த அலித்தன்மை யார் யாரிடமெல்லாம் ஊடுருவி நிற்கோ, அவங்க எல்லாமே என் வாரிசுகள்தான். சரி, சரி, பிதாஜி கார் வந்திட்டு. நீலிமா ஒன் முகத்துக்கு எத்தனை தடவை பெயிண்டடிப்பே...”

     “ஆமா, நீலிமாவுக்கு அங்க போயி பாண்ட் சர்ட் கொடுக்கப் போறியா...”

     “இல்ல.இப்படியேதான் வருவாள். பார்க்கிறவங்க அவள என் ஃபாரின் பெண்டாட்டின்னு நினைச்சுட்டுப் போகட்டுமேடி.”

     எல்லோரும் சிரித்தார்கள். நீலிமா, தனது மேக்கப்பைத்தான் அவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்று உதட்டில் ஓவராய்ப் போன லிப்ஸ்டிக்கைத் துடைக்கப் போனாள். மேகலை, அவசரப்பட்டு, அவசரப் படுத்தினாள். “ஜல்தி, நீலிமா.. .ஜல்தி. நாம் போகப்போறது பட்பட் வண்டி இல்ல. ட்ரெயின்.”

     நீலிமா, சூட்கேஸ்களைத் தூக்கிக்கொண்டு மேகலையுடன் புறப்படப் போனபோது தபால்காரர் ஒரு கத்தை காகிதங்களைப் போட்டு விட்டுப் போனார். பெரும்பாலானவை பத்திரிகைகள். குரு அலிகளின் விழா நிகழ்ச்சிகள்... அதற்குள்ளே ஒரு இன்லண்ட் கவர். எடுத்துப் பார்த்தால் மோகனா பெயர். படித்துப் பார்த்தாலோ

     “என் அன்புள்ள அண்ணன் அல்லது அக்காவுக்கு,

     “மோகனாவின் வணக்கம்.

     “நீங்கள் என்னிடம் காட்டிய கருணைக்கு, நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் உதவி மட்டும் இல்லையானால், மொட்டை மரமாய் முடிந்திருப்பேன். ஒருவேளை நமது அக்காவின் நிலமை எனக்கும் வந்திருக்கலாம். எப்படியோ எல்லாம் நல்லபடியாய் முடியப்போகிறது. என்னடா ஊருக்கு வரப்போகிற தனக்குத் தங்கை இப்படி ஒரு கடிதம் எழுதுகிறாளே என்று நீங்கள் நினைக்கலாம். அதற்குக் காரணமும் இருக்கிறது.

     “அண்ணன் உங்களை எப்படியாவது கலியாணத்திற்கு வரவழைக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறான். அவன் படிக்காதவன். அறிவிலி. ஆனால் நீங்கள் படித்தவர், பண்பாளர், என்னதான் வேட்டி சட்டையோடு வந்தாலும், உங்கள் பேச்சும் நடையும் ‘அவர்களுக்குக்’ காட்டிக் கொடுத்துவிடலாம். என் வாழ்க்கை மரகதக்காவாக முடியலாம். அப்புறம் உங்கள் இஷ்டம். என்னை எப்படி பஸ் நிலைய சமாச்சாரத்தில் காட்டிக் கொடுக்கவில்லையோ, அப்படி இந்த கடித விஷயத்திலும் காட்டிக் கொடுக்க மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

     “என் வாழ்வு நீங்கள் போட்ட பிச்சை. இந்தப் பிச்சைக்காரியை எங்கிருந்தாலும் வாழ்க என்று அங்கு இருந்தபடியே வாழ்த்தியருளும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்களின் உயிருக்கு உயிரான சகோதரி
மோகனா.”

     மேகலை, அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு தடவை படித்துவிட்டு, தலையை அங்குமிங்கும் ஆட்டினாள். லட்சுமி அதைப் படித்துவிட்டு, மற்றவர்களுக்கு அதன் விபரத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது மேகலை, அக்காவின் படத்தையே பார்த்தாள். பார்க்கப் பார்க்க அழுகை கொட்டக் கொட்டக் கண்ணீர்! நீர்வார் முகத்தோடு, தனக்குள்ளே சிறிது முனங்கிக் கொண்டாள். பிறகு கண்ணீரைச் சுண்டிவிட்டு, சர்வ சாதாரணமாய்ப் பேச முயற்சித்தாள்.

     “நீலிமா அதே கார்ல போய். நம்ம டிக்கெட்ட கான்ஸல் செய்துட்டு வந்துடு... இன்னும் வெயிட்டிங் லிஸ்ட்ல பெயர் இருக்கிறதால முழுப்பணமும் கிடைக்கலாம். ஜல்தி. குயிக்...”

     மேகலை, தன்னைத் தவித்துப் பார்த்தவர்களுக்கு பட்டும் படாமலும் பதிலளித்தாள். ‘மகளே மகளே... நானிருக்கேன் மகளே... நாங்க இருக்கோம் மகளே’ என்று புலம்பிய பச்சையம்மாவின் முதுகைத் தட்டிவிட்டு கோபத்தில் கால்களைப் போட்டுத் தரையில் மிதிக்க விட்ட நீலிமாவை இழுத்துப் பிடித்துக்கொண்டு, மேகலை அழுகைச் சிரிப்போடு சொன்னாள்.

     “என் செல்லத் தங்கச்சி, என்னை நான் காட்டிக் கொடுத்து விடுவேன்னு தன்னைத்தானே காட்டிக் கொடுத்துட்டாள். அவள் பயமும் நியாயமானதுதான். பெரும்பாலானவங்க தங்கள மையமா வச்சுத்தான் மத்தவங்களை நினைக்காங்க. நல்லவேளை. அவள் ஒருத்தி மட்டும் எனக்கு சகோதரி இல்லே. நீங்கெல்லாம் யாராம்! நீலிமா... ஜல்திம்மா...”

     நீலிமா புறப்படப் போனாள். இதற்குள் ‘கூரியரில்’ ஒரு கடிதம். குருவக்கா கடிதம். நீலிமாவை லேசாய் கையமர்த்திவிட்டு அந்தக் கடிதத்தின் மீது ஒட்டு மொத்தமான பார்வையைப் போட்ட மேகலை, இப்போது ஒவ்வொரு வரியாகப் படித்தாள்.

     “என் கூடப் பிறக்காத பிறப்பே!

     “சொகமா இருக்கியா? பச்சையம்மா செளக்கியமா... ஒன் தோழிகள் சுகமா...

     “நீ நம்ம சனங்கள, கூப்பிட்டு வச்சு பேசுனதில் எல்லோருக்கும் சந்தோஷம். நாம், ரெண்டுபேரும் பேட்டை பேட்டையாய் போய் பேசிவிட்டு, அப்புறம் ஒரே இடத்துல கூடி, சில முடிவு எடுத்தோமே, அது சீரா நடந்துக்கிட்டிருக்கு. நாதியில்லாமப் போன, நமக்கு நீ ஜோதியாய் வந்திருக்கேன்னு எல்லாப் பேட்டையிலயும், நம்ம ஆட்கள் பேசறாங்க. நம்ம சங்கத்துக்கு நிலமும் பார்த்துட்டோம். இப்போதைக்கு அதுல ஒரு நல்ல குடிசையா போட்டுக்கலாம். அதோட சங்கத்தை நீதான் திறந்து வைக்கணும் என்கிறது நம்ம ஜமாவோட தீர்ப்பு. நமக்கும், சர்க்கார்ல வேலைக்கு இடம் ஒதுக்கணும்... குடியிருப்பு தரணும்... உதவித் தொகை வழங்கணும்... எல்லாவற்றுக்கும் மேல போலீஸ் பொய்க்கேசு முடிவுக்கு வரணும்னு நீ பேசுனது நம்ம ஆட்கள் எல்லோருடைய காதிலயும் இன்னும் கேட்டுக்கிட்டே இருக்கு...

     “ஆனாலும்... நம்ம ஜனங்ககிட்ட கொஞ்சம் தடுமாற்றம். அலித்தன்மை மாதிரி - அது உடம்போட ஒட்டுனது. இந்தப் பயம் அனுபவத்தோட ஒட்டுனது. போலீஸ் கமிஷனரே, நேர்ல வந்து விசாரிச்சுட்டுப் போனார். பயப்பட வேண்டாம்னு எல்லாப் போலீஸ் அதிகாரிகளையும் பக்கத்துல வச்சுக்கிட்டே சொன்னார். ஆனாலும், ஒரு வாரத்துலேயே போலீஸ் ‘புத்தியக்’ காட்டிட்டு... சப்-இன்ஸ்பெக்டர் மாறிட்டார். ஆனா, சவடால்தனம் போகலை. ஒன்கிட்ட பயந்து பயந்து பேசினாள் பாரு, லுங்கிக்காரி, அவள நேற்று போலீஸ் வந்து அடிஅடின்னு அடிச்சு இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. கஞ்சா கடத்துனாள்னு திட்டு. அவளுக்குக் கஞ்சியைத் தவிர கஞ்சா தெரியாது. இப்போ எங்க வச்சிருக் காங்கன்னும் தெரியலை. நான் போனாலும், பழைய பகையில என்னையும் ஏதாவது செய்யலாம். இப்படி போலீஸ் பொய் வழக்கு ஒரு பக்கம். கோர்ட்லகூட எடுத்த எடுப்புலேயே இவ்வளவு ரூபா அபராதம்னு சொல்றாங்களே தவிர தீர விசாரிக்கிறதில்ல. நமக்கு ரெண்டு பக்கமும் அடி...

     “நீ சொன்னது மாதிரி இது தனியாச் செய்யுற காரியம் இல்ல. ஒரு சங்கம் செய்யவேண்டிய காரியம். அதனால, நீ உடனே வரணும். இல்லாட்டால், நாங்க கூண்டோட கைலாசம்தான். கால் விலங்கோட கை விலங்கும் சேர்ந்துடும்...”

     “ராசாத்தி மாதிரி வாழ்கிற ஒன்னை, இந்த மாதிரி சிக்கலுல சிக்க வைக்கிறதுக்கு மனசுக்கே கஷ்டமாக இருக்குது. அதே சமயம் ஒன் மனசும் எனக்குத் தெரியும்.”

     சுயம்பு, மேகலையானாள்.

     வேட்டியையும் சட்டையையும் வீசிப் போட்டு விட்டு பெண்ணாடைகளைக் கட்டிக்கொண்டாள். உடம்பைச் சுற்றிய புடவை வெளிர் மஞ்சளா அல்லது துளிர் பச்சையா என்பதைக் கண்டுபிடிப்பதில், அவளுக்கு அக்கறையில்லை. குருவக்காவின் கடிதத்தை ஜாக்கெட்டுக்குள் திணிக்கிறாள். அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாள்.

     “டிக்கட்ட கான்ஸல் செய்ய வேண்டிய அவசியமில்ல நீலிமா... கார்ல சூட்கேஸ்களையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் எடுத்து வை. மெட்ராஸ்ல நிறைய வேலை இருக்கு. ஜல்தி நீலிமா... ஜல்தி...”

     எல்லோரும் திகைத்துப் பார்க்கிறார்கள். மூடு மந்திரமாய் பேசிய மேகலை ஆத்திரம் கொடி கட்டிப் பறக்க, ஆவேசம், கனல் கட்டிக் கொதிக்கக் கொதிக்கச் சொல்கிறாள்.

     “நாங்க திரும்பிவர ஒருவாரம் ஆகலாம். ஒரு வருஷம் கூட ஆகலாம். எங்கே இருக்கப் போறோம்னு எங்களுக்கே தெரியாது. சீக்கிரமாய் திரும்பி வந்தாலும் அடிக்கடி மெட்ராஸ் போக வேண்டியிருக்கும். நஸிமா... பராக்குப் பார்க்காதே! மார்கரெட் ஜாக்கிரதை. லட்சுமிக்கா, குஞ்சம்மா கவலைப்படாதீங்க. எம்மா. இவளுங்க ஒனக்கு என்னைமாதிரி மகளுக... பிதாஜிகிட்ட விவரத்தை சொல்லுங்க. நான் சந்திக்கப்போற பிரச்னைக்கு, அவர் மூலம் மத்திய அரசாங்கத்தோட உதவியும் தேவைப்படலாம்... நீலிமா குயிக்...”

     “டிரைவர் சாப்... தில்லியில ரயில பிடிக்க முடியாட்டாலும் பரிதாபாத்லயாவது பிடிக்கணும். எப்படியும் பிடிச்சாகணும்... விடப்படாது...”

     டிரைவர், அந்த அழகான காரை உறும விடுகிறார். சிங்கம்போல் கர்ஜிக்க விடுகிறார்.

முற்றும்