உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
5 பகலும், இரவும், ஒன்றுடன் ஒன்று போர் தொடுத்த வேளை. கண்ணுக்குத் தெரிந்த பகலை, கண்ணுக்குத் தெரியாத இரவு கொரில்லா முறையில், தாக்கிச் சிறுகச் சிறுகத் தலையாட்டிக் கொண்டிருந்த நேரம். சுயம்பு, அந்தப் பல்கலைக் கழக வாசலுக்குள் கண்ணீரும் கம்பலையுமாக நுழைந்தான். அந்த வாசலைப் பார்த்த உடனேயே, உடம்பு முழுவதையும் ஏதோ ஒன்று தாக்குவது போல ஒரு வலி. அந்த வளாகத்திற்குள் வியாபித்த பொறியியல் கட்டிடத் தொகுப்புக்களையும், பட்ட மேற்படிப்பு அடுக்கு மாடிகளையும், கண்கொண்டு பார்க்காமல், கால் பார்த்து நடந்தான். ஆங்காங்கே மங்கிய பகலொளியில், மாணவ மாணவியர் தனித்தனியாகவும், குழுக் குழுவாகவும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சில மறைவான இடங்களில் “இரட்டை விளையாட்டு”, என்றாலும் கண்ணுக்குப் படும்படியான மைதானத்தில் ஒரு பக்கம் மாணவர்களின் வாலிபால் விளையாட்டு, மறுபக்கம் மாணவியரின் கூடைப்பந்து விளையாட்டு. கூடைப்பந்து வேண்டுமென்றே, வாலிபால் கிரவுண்டுக்குள்ளும், வாலிபால் பந்து, கூடைப்பந்து கிரவுண்டுக்குள்ளும் விழுந்து விழுந்து எம்பின. உடனே ஆண் சிரிப்பு - பெண் சிரிப்பு - அப்புறம் கலவைச் சிரிப்பு. சுயம்பு, கூடைப்பந்துக்காரிகளைப் பார்க்காமல், ‘வாலிபால்’காரன்களைப் பார்த்தான். குறிப்பாக, ‘கட் அடிக்கும்’ ஒரு மாணவனைக் கண்கொட்டாமல் பார்த்தான். அப்படிப் பார்க்கப் பார்க்கத் தானே ஒரு பந்தாகி அலைக்கழிவது போல், அந்த இடத்தை விட்டு அங்குமிங்குமாய்ச் சுற்றினான். தனக்குத்தானே முனங்கிக் கொண்டான் ‘எல்லாப் பிரச்னைகளுக்கும் முடிவு உண்டு. ஆனால் என் பிரச்னைக்கு என்ன உண்டு... நானே முடிவாகணும்... எம்மா... என்னை எதுக்கும்மா பெத்தே?... விழி இழந்தவர்கள், தாங்கள் நடமாடிய இடங்களின் சுவடுகளை வைத்து நடப்பது போல் நடந்து, மாணவர் விடுதிக்கு வந்தான். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், போன்ற பல்வேறு வளைவு போர்டுகள் கொண்ட கட்டிடக் குவியல் வழியாய், பாலைப் போல் தோன்றும் ஒரு கட்டிடத்தை நோக்கி நடந்தான். முதலாவது ஆண்டு மாணவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சேரிக் கட்டிடம் மாதிரி அது... அதில் இரண்டாவது மாடிக்கு வந்து, இடது பக்கம் உள்ள நாலாவது அறைக்குள் வந்தான். எல்லா அறைகளிலும் ஏதோ ஒரு பாட்டுச் சத்தம். “யாரு கொடுத்த சேலை இந்தப் பொண்ணு மேலே...” “ருக்குமணி வண்டி வருது... ஓரம்போ...” “கன்னி மேரி தாயே...” சுயம்பு ‘சேலையில்லாத’ அந்த அறைக்குள், ருக்குமணியும், கன்னி மேரியும், காதுக்குக் கேட்காத அந்த இடத்திற்குள் போனான். அங்கே எந்தப் பாட்டுச் சத்தத்தையும், காதில் வாங்காமல், எதையோ பேசிக் கொண்டிருந்த இருவரின் கவனம் கலையும்படி, பெட்டியைச் சத்தம் போட வைத்துக் கீழே போட்டான். ஆனாலும், அந்த இருவரும், அவன் வருகையை அங்கீகரிக்காதது போல் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டார்கள். ஒருவன் மெத்தை போட்ட கட்டிலில் காலை விரித்துப் போட்டு கம்பீரமின்றி உட்கார்ந்திருந்தான். என்றாலும் அந்தப் பூஞ்சை உடம்பில், பொறி கலங்க வைப்பது மாதிரியான கண்கள். இன்னொருத்தன், கோரைப் பாயில் சம்மணம் போட்டு இருந்தான். முழுக்கறுப்பு. கட்டிலில் உட்கார்ந்திருந்த மூர்த்தி, படிப்பில் ஏற்பட்ட மேடுபள்ளத்தைப் பணத்தால் நிரப்பியவன். ‘பல்லவன்’ என்ற பெயரோடு அந்தக் காலத்திலேயே கட்டப்பட்டது போன்ற அந்த விடுதிக்குக் கட்டில்கள் கிடையாது. காற்றடிக்கும் மின்விசிறியும் கிடையாது. வாட்டர்கூலருக்குப் பதில், மூடியில்லாத மண் கூஜா, ‘டிஸ்டம்பர்’ சுவருக்குப் பதிலாக, செதிள் செதிளாய்ச் சிதைந்து நிற்கும் சுவர்கள். ஆனாலும், காசு கொடுத்துக் கைமேல் சீட்டு வாங்கிய மூர்த்தி, ஒரு கட்டிலும் மெத்தையும் வாங்கிப் போட்டுக் கொண்டான். பயலுக்கு ‘சைனஸ்’ பிரச்னை. இல்லையென்றால், ஒரு மின்விசிறி கூட வாங்கியிருப்பான். இருவரும், இப்போது ஒரு நடிகையின் படத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டு ஏதோ விளக்கம் கேட்டுக் கொண்டும் பெற்றுக் கொண்டும் இருந்தார்கள். ஒருவருக்கொருவர் அப்படியே நின்ற சுயம்புவை, அவனுக்குத் தெரியாமலேயே கண்சிமிட்டிப் பார்த்துக் கொண்டார்கள். வகுப்பிற்குக் ‘கட்’ அடித்தால் கூடத் தேவலை. வாத்தியார்களுக்கு, ஓலை வெடி வைத்தால் கூடப் பரவாயில்லை. ஆனால், இந்த அழுமூஞ்சியோ, வகுப்புகள் துவங்குவதற்கு முன்பே அங்கே போகும். அவை நடந்து கொண்டிருக்கும் போதே எங்கேயோ மறையும். பிறகு இரவில் அழுது கொண்டே அறை திரும்பும். அவர்களோடு சேர்ந்து படுக்காமல், வெளியே வராண்டாவில் தூங்கும். இவர்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டார்கள். கேட்டால்தானே? நேற்றுக் கூட ஊருக்குப் புறப்பட்ட அவனை, வழி மறித்தார்கள். அவன் சூட்கேஸைக் கூடப் பறிமுதல் செய்தார்கள். ஆனால் அவனோ, தன்னை விடாவிட்டால், மாடியிலிருந்து கீழே குதிக்கப் போவதாக சவாலிட்டான். ஆகையால், அவனை இப்போது அவர்கள் சகித்துக் கொள்வதே ஒரு பெரிய காரியம் என்று நினைத்துக் கொண்டார்கள். சுயம்பு நின்றான். உட்கார்ந்தான். நின்றாலோ உட்காரத் தோன்றுகிறது. உட்கார்ந்தாலோ நிற்கத் தோன்றுகிறது. எங்கிருந்தெல்லாமோ, கேட்ட எக்காளக் குரல்களும், ஏக்கத்தைக் கொடுக்கும் பாடல்களும், அவனை எதுவும் செய்யவில்லை. சுயம்பு மூலையில் கிடந்த கோரைப் பாயைக் காலால் தட்டி வீழ்த்தினான். அதன் ஒரு முனையில் காலை மிதித்துக் கொண்டு, மறு காலால் அதைப் பிரித்து விட்டான். அப்படியே குப்புறச் சாய்ந்தான். கால்களைப் பின்பக்கமாக மடித்து வைத்துக் கொண்டான். தரையைத் தோண்டி முகத்தைப் புதைக்க நினைக்கும் ஆவேசம். தன்னையெ வெறுக்கும் கண்மூடல். பிறகு, கால்களை மேலே தூக்கியும், கீழே போட்டும் வெறுந் தரையில் நீச்சலடித்தான். அவன் பிடறியில் கட்டிய பூவை அமைதியான அழுத்தத்துடன் பார்த்த அந்த அறைத் தோழர்களான பணக்கார மூர்த்தியும், கடன்கார முத்துவும், சிறிய இடைவெளிக்குப் பிறகு, தங்களுக்கு இடையே நின்ற சினிமா நடிகையை அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் பேசத் துவங்கினார்கள். திடீரென்று மூர்த்திக்கு, பேராசிரியர் லிங்கையா வகுப்பை வாதை செய்த ‘ஓம்ஸ் விதி’ நினைவுக்கு வந்தது. விஞ்ஞான விதியாக அல்ல, தலைவிதியாக நாளைக்குக் கேள்வி கேட்பார். பதிலளிக்க முடியவில்லையானால், அவருக்குக் கோபம் வரும். அவர் கோபத்தைப் பற்றி எவன் கவலைப்பட்டான்? ஆனால், ‘பெண் கிளாஸ்மேட்கள்’ இளக்காரமாய்ச் சிரிப்பார்கள். தங்களுக்கு விடை தெரியும் என்பது போல், கைகளை மேலே தூக்கிக் காட்டுவார்கள். இவர்கள் வெளியே தேவதைகள். வகுப்புக்களில் ‘சேடிஸ்ட்’ ராட்சசிகள். மூர்த்தி குழைந்தபடியே முத்துவிடம் கேட்டான்: “பேராசிரியர் லிங்கையா அறுத்தாரே, ஓம்ஸ் லா... அப்படின்னா என்னடா?” “ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து சீட்டு வாங்கினே இல்ல... நமக்கும் கொஞ்சம் மால் வெட்டு... பதில் உடனே கிடைக்கும்.” “என் போதாத காலம் சுயம்புகிட்ட கேக்க முடியலை... சொல்லித் தொலைடா... நாளைக்கு அந்த நடிகை சினிமா தியேட்டர்ல தோன்றப் போறாளாம்; கூட்டிட்டுப் போறேன்...” “வகுப்புல பாடத்தைக் கவனிக்காம எவளடா கவனிச்சே?” “கமலாவை... அவள் என்னடான்னா உன்னை சைட் அடிக்காள்... இப்பவாவது உச்சி குளிர்ந்ததா?... இன்னும் நீ சொல்லலன்னா ஒனக்கும் தெரியலைன்னு அர்த்தம்.” முத்து, பேராசிரியர் லிங்கையா போலவே உதட்டைக் கடித்துக் கொண்டு, வயிற்றைக் குலுக்கினான். வாயே இல்லாமல் அந்த இடத்தில் ஏதோ ஒரு முடிச்சு இருப்பது போலவும், அதை அவிழ்க்கப் போகிறவன் போலவும், ‘மிமிக்கிரியோடு’ பேசினான். “ஒரு கண்டக்டரில் - அதுதான், மின் கடத்தியில் ஏற்படும் மின் அழுத்தம், அந்த கடத்தியில் ஓடும் மின்னோட்ட அளவையும், அதன் மின் தடை அளவையும் பெருக்கினால் எவ்வளவோ, அவ்வளவு. இதுக்குப் பேருதான் ஓம்ஸ் லா... அதாவது ஓமின் விதி... இதுதான் நம்ம சப்ஜெக்டுக்கே பிள்ளையார் சுழி. ஓம்ஸ் என்பவர் இதைக் கண்டுபிடித்ததால் இதற்கு ஓம்ஸ் லா என்று பெயர்...” மூர்த்தி முத்துவை வியந்து பார்த்த போது, தரையே பேசுவது போல் ஒரு சத்தம் கேட்டது. “அட் கான்ஸ்டன்ட் டெம்பரேச்சர்... அதாவது ஒரு நிலையான வெப்ப நிலையில் தான், ஓம்ஸ் லா பொருந்தும். வெப்ப நிலை மாறினால், அது லா இல்ல... கலாட்டா... இந்த லாவுக்கு கான்ஸ்டன்ட் டெம்பரேச்சர் என்கிற பிரிகண்டிஷன் ரொம்ப முக்கியம். இதுகூடத் தெரியாத நீங்கள்லாம் ஆம்புளைங்களாடா?” மூர்த்தியும், முத்துவும் அதிர்ந்து போனார்கள். ஆனந்தமான அதிர்ச்சி, பிளஷன்ட் ஷாக். பழைய சுயம்பு, வந்து விட்டான். இனிமேல் அவனிடமே பாடத்தைக் கேட்டு, கேர்ல்ஸ்ஸுக்கு சொல்லிக் கொடுக்கலாம்... மூர்த்தியும், முத்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். உடனே முத்து தரையில் தவழ்ந்தான். மூர்த்தியின் காலை விலக்கும்படி கண் ஜாடை காட்டிவிட்டு, பதில் சொல்வதற்காகத் தூக்கிய தலையை மீண்டும் தரையில் போட்டுக் கொண்டு குப்புறக் கிடந்தவனின் அருகே போய் உட்கார்ந்தான். அவன் கழுத்துக்குக் கீழே, தனது கையைக் கொண்டு போய் அவன் முகத்தை நிமிர்த்தினான். பிறகு அந்தக் கையை மெள்ள மெள்ள நகர்த்தி, சுயம்புவின் மார்புக்குக் கொண்டு போய், அவனை ஒரு கையால் தூக்கி, தன் பக்கமாக கொண்டு வந்தான். சுயம்பு அவன் மடியில் மல்லாந்து விழுந்தான். அவன் கண்களோடு தன் கண்களை நெருடவிட்டான். அவனது உருண்டு திரண்ட தோள்களில் கண்களை அலைய விட்டான். பிறகு தலையைச் சற்று நகர்த்தி, அதை அவன் வயிற்றில் போட்டுக் கொண்டு அண்ணாந்து பார்த்தான். முத்து, அவன் கழுத்தை நீவி விட்டபடியே, “எழுந்திருடா, எழுந்திருடா” என்றான். உடனே கட்டிலில் கிடந்த மூர்த்தி “எதுக்குடா பயப்படுறே... நாங்க இருக்கோம்டா... போடா... போய் முகத்தைக் கழுவிட்டு வாடா” என்று ஆறுதல் குரலில் பேசினான். ஆனால், மூர்த்தி சொன்னது கேட்காதது போல், முத்துவின் மடியில் கிடந்த சுயம்பு, திடீரென்று துள்ளி எழுந்தான். கால்களைத் தரையில் போட்டுத் தாண்டவமாடியபடி, கைகளை அங்குமிங்குமாய் அபிநயம் காட்டியபடி, இருவேறு நிலைகளில் கத்தினான். “டேய் முத்து... எப்படிடா என்னைத் தொடலாம்?... நீ பெரிய ஆணழகனாவே இருந்துட்டுப் போ... அதுக்காக இப்படி என்னைப் பாடாப் படுத்தணுமா?... கேட்கிறதுக்கு ஆள் இல்லன்னு நெனப்பாடா... இனிமே இப்படி தொடுற வேலை வச்சே... அப்புறம் மரியாதி போயிடும்...” சுயம்பு, இரு கரங்களாலும் கண்களை மூடியபடியே அசையாது நின்றான். பிறகு வெறுமையும் வெறியும் கொண்ட பார்வையோடு, அந்த அறைக்கு வெளியே வந்தான். மீண்டும் உள்ளே வந்து செருப்புக்களைக் கழற்றி எறிந்துவிட்டு, வெறுங்காலோடு வாசல்படியைத் தாண்டினான். முத்துவும், மூர்த்தியும் ஓடிப்போய் அவனை இரு பக்கமும் சூழ்ந்தபடி மாறி மாறிக் கெஞ்சினார்கள். “இப்போ என்னடா நடந்துட்டுது... வாடா ரூமுக்குள்ள...” “உன் புத்தி எனக்குத் தெரியும்... போடா...” “டேய் அந்த தடியனுக்காக வராட்டாலும், என் முகத்துக்காவது வாடா...” சுயம்பு சலித்து நின்றான். அவர்களை உஷ்ணமாகப் பார்த்தான். குளிர்காயும் உஷ்ணம். எரிக்கும் உஷ்ணமல்ல... பிட்டத்தை ஆட்டிக் கொண்டு கைகால்களைக் குழைய விட்டு, சிணுங்கியபடி சிரிப்பது போல் பேசி, அழுவது போல் முடித்தான். “தனியாப் போற என்கிட்ட ஏண்டா வம்பு செய்யுறீங்க... என்ன விடுங்கடா... விட்டுத் தொலைங்கடா... இந்த பாரு... கையப் பிடிச்சே அப்புறம் நடக்கிறது வேற...” வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|