உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
6 சுயம்பு, வேகித்தும், விறுவிறுத்தும், படிகளில் குதித்துக் குதித்துக் கீழே இறங்கினான். அவன் வேகத்தைப் பார்த்துப் பயந்துபோன ஒரு நாய்கூட மல்லாக்கப் படுத்துக் கால்களை மேலாகத் தூக்கி சரண்டரானது. ஆனாலும், அவன் அதைக் கவனிக்காமல் ஏதோ ஒன்று யந்திரமோ அல்லது மந்திரமோ அவனை உள்ளிருந்து ஓட்டுவதுபோல் ஓடினான். ஓடி ஓடி அவன் அந்த விளையாட்டு மைதானத்திற்கு வந்தபோது அவன் உடல் உறுப்புக்கள் அனைத்தும் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்வதுபோல் இருந்தது. வாலிபால்காரன்களும், கூடைப்பந்துக்காரிகளும், நான்கு பக்கமும் பக்கத்துக்கு மூன்று மூன்று வரிசையாய் உள்ள மின்விளக்கு வெளிச்சத்தில் ஆடிக் கொண்டிருந் தார்கள். ஆண் கிரவுண்டில், ‘வாலிபால் நெட்’டின் முன் வரிசையில் வலது பக்கம் ஒருத்தன், பின் வரிசைக்காரன் எடுத்துக் கொடுத்த பந்தை பட்டும் படாமலும் இரு கைகளையும் தாமரைகளாகக் குவித்து ஒரு பந்தைப் பூவைத் தள்ளுவது போல் நெட்டிற்கு மேலே கொண்டு போகிறான். உடனே இடது பக்கம், சற்றுப் பின் தள்ளி நின்றவன் ஒரே ஓட்டமாய், ஓடி வருகிறான். நெட்டை நெருங்கி, ஒரே குதியாய்க் குதித்து அந்தப் பந்தை நெட்டில் உரச விடாமலே அதே சமயம் அதற்கு நேர் கீழாக விழும்படி ‘கட்’டடிக்கிறான். அந்தப் பந்து எதிர்த் தரப்பில் விழுவது தெரியாமல் விழுகிறது. பின்னால் நின்று, சர்வீஸ் போட்டவன்கூட ‘கட்’ அடித்தவனைக் கட்டிப் பிடித்துக் கொள்ளுகிறான். எதிர்த்தரப்பினர் கூட, நெட்டுக்குள் நுழைந்து அவனுக்குக் கை கொடுக்கிறார்கள். இப்படி, அவன் பல தடவை அடித்து அடித்து, எதிர்த் தரப்பே இல்லாமல் செய்து கொண்டிருந்தான். அந்தத் தரப்பிலிருந்து வந்த சாய்வு சர்வீஸ் பந்தைக்கூட, ‘கடம்’ போட்டுத் தூக்கிப் பின்னால் விட்டு, மீண்டும் முன்னால் வந்ததை ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து எதிர்த்தரப்பில் காலி இடத்தில் போடுகிறான். இரு தரப்பும் கராத்தே மாதிரியான சத்தத்துடன் அவனை வாழ்த்தின. சுயம்பு, அந்த ‘அதிசயனை’ அண்ணாந்து பார்த்தான். ஜட்டியாய் குட்டையாகாமலும், டவுசராய் நீண்டு போகாமலும் இருந்த இடுப்பு உடையுடன், மேலே மேலே எம்பியும், கீழே கீழே சாய்ந்தும் அங்குமிங்குமாய்ச் சுருண்ட அவனின் வேங்கைத்தனமான உடம்பை இவன் வேட்கைத் தனமாகப் பார்த்தான். அவன் தோள் குலுங்கியபோது, இவனுக்கு இதயம் குலுங்கியது. அவன் குதித்துக் குதித்துப் பந்தாடியபோது இவன் கண்களும் குதி போட்டன. அறையில் நடந்த ரகளையை மறந்தான். பேருந்தில் வாங்கிய உதையை மறந்தான். வீட்டில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் துறந்தான். அவனையே பார்த்தான். அவனையே கண்களால் பந்தாடி, மற்றவர்களிடமிருந்து தனிப்படுத்திப் பார்த்தான். அவனைப் பற்றி யாரிடமாவது சொல்லவில்லையானால், அவனுக்கு தலையே பந்தாகிவிடும் போல் தோன்றியது. அக்கம் பக்கம் பார்த்தான். ஆண் கிரவுண்டுக்கும், பெண் கிரவுண்டுக்கும் இடையில், ஒருத்தி இவனை மாதிரியே அவனைப் பார்த்தாள். விளையாட வராமல், வெறுமனே வந்தவள். அவளும், அந்த வாலிபால் வீரனின் கைக்குள் தானே பந்தானதுபோல் முகத்தை லாவகமாக ஆட்டினாள். ‘சபாஷ்’ என்றுகூடச் சொல்லிக் கொண்டாள். அவன், ஆடி முடித்து வெறும் ‘பாடியோடு’, திரும்பிப் போவது வரைக்கும் அங்கே தவம் செய்யப் போவதுபோல், ஒரு தந்திக் கம்பத்தின்மேல் சாய்ந்து கொண்டாள். இவளும், அந்த ‘வாலிபால்’, வீரனோடு எம்.பி.பி.எஸ் படிப்பவள் தான். முதலாவது ஆண்டிலேயே அவனே, இவளிடம் வலியப் பேசினான். ஆனால், கிராமத்துக்காரியான இவளின் ஆரம்பக் கூச்சத்தை, அலட்சியமாக எடுத்து, ஒதுங்கிக் கொண்டான். போதாக் குறைக்கு அவனது சீனியர்கள் “விட்டுத் தள்ளுடா. தானா வருவாள்; ஆரம்பத்துல எல்லா எம்.பி.பி.எஸ் பொண்ணுங்களும் எம்.எஸ்.எம்.டி. படித்தவனைத் தேடுவாளுங்க. மூணாவது வருடம்தான் கிளாஸ்மேட்கள் கண்ணுக்குத் தெரியும்” என்று பொதுப்படையாய்ச் சொன்னதை அந்த வாலிபால்காரன் தனக்குள் தக்க வைத்துக் கொண்டான். இது, இவளுக்கும் தெரியும். ஆகையால் இன்றாவது அவனை எப்படியாவது ‘கங்கிராட்ஸ்’ சொல்லிக் கவனத்தைக் கவர வேண்டும் என்று துடியாய்த் துடித்தாள். இந்தச் சமயத்தில், தனது தோளில், ஏதோ ஒன்று உரசுவதைப் பார்த்து கவனம் கலைக்கப்பட்ட கோபத்தில் திரும்பினாள். சுயம்புவோ, அவளிடமிருந்து ஒரு அங்குலம் கூடப் பிரியாமல் பேசினான். “அவரு ரொம்ப நல்லா ஆடுறார் இல்லியா?... எம்மாடி... இப்படி யாரும் ஆடி நான் பார்க்கலை... ஆமா, இவரு பேரு என்ன. எந்த கோர்ஸ் படிக்காரு...” “தள்ளி நில்லுடா ராஸ்கல்... டர்ட்டி ஃபெல்லோ... என்னடா நினைச்சுக்கிட்டே..." சுயம்பு, எதையும் நினைக்காமல், சும்மாவே நின்ற போது, அவள் கூச்சல் போட்டாள். அந்த ஒற்றைக் கூச்சல், வாலிபால்-கூடைப்பந்து கூட்டத்தில் எழுப்பிய கூச்சல்களை அமுக்கிவிட்டது. அவளோ, சுயம்புவைப் பார்க்காமல், அந்த வாலிபால்காரனைப் பார்த்தபடியே கத்தினாள். அவன் அங்கே வந்து, இவனை வயிற்றில் உதைத்து, கீழே வீழ்த்திவிட்டு, தன்னை வாரி அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற சினிமாத்தனமான ஆவேசம். அவன், முகம் திருப்பிப் பார்ப்பது வரைக்கும் உச்சமாய்க் கத்தினாள். அவன் பந்தை நெட்டிலேயே வீசி எறிந்து விட்டு, சகாக்களுடன் வேக வேகமாய் வந்தபோது, அவள் அழுதழுது கத்தினாள். இதற்குள் கூடைப்பந்துக்காரிகளும், முண்டியடித்து ஓடி வந்தார்கள். வாலிபால் பையன்களை முந்தி, அவள் பக்கம் போய்விட்டார்கள். அதே சமயம், அவன்கள் வருவது வரைக்கும் எதுவும் பேசாமலும், சுயம்புவைத் தப்பி விடாதபடியும் வியூகம் போட்டு நின்றாள்கள். இதற்குள், மாணவர்கள் அந்தப் பெண் பூக்களுக்கு இடையே, நார் நாராய் நின்றார்கள். அவள், அந்த வாலிபால் கதாநாயகனை மட்டும் பார்த்தபடியே விளக்கினாள். “சும்மா ஒரு சேஞ்சுக்காக வெளியில் வந்தேன். கூடைப்பந்து ஆட்டத்தைப் பார்த்துக்கிட்டு நின்னால், இந்த பாஸ்ட்டர்ட் என் தோளுல உரசுறான். கிசுகிசுப்பா பேசுறான். அய்யோ. நான் யாருமில்லாத பெண்ணாப் போயிட்டேனே... எவ்வளவு தைரியம் இருக்கணும் இவனுக்கு.” அவள் அழ அழ, ஒவ்வொரு மாணவனும், வீர புருஷனானான். இன்னும் அந்த வாலிபால்காரனையே விழுங்கி விடுவதுபோல் பார்த்த சுயம்புவை, ஒருத்தன் முடியைப் பிடித்து இழுத்தான். கூடைப்பந்துக்காரி ஒருத்தி ‘குத்து’ என்கிற மாதிரி வலது கையை முஷ்டியாக்கி, வாயைப் பாதியாக்கி, அந்தரத்தில் ஒரு குத்து விட்டாள். இதனால் அவளைக் குளிர்விக்க வேண்டும் என்பதற்காக, ஒரு செகனாண்ட் ஹீரோ, சுயம்புவின் மூக்கைப் பலமாக இழுத்து விட்டான். ஒருத்தி கால் செருப்பைக் கழட்டி எல்லோரையும் அடிக்கப் போவதுபோல் உயரே தூக்கினாள். இப்படி எல்லோரும் அவன் உடம்பை ஆளுக்கு ஆள், உறுப்பு உறுப்பாய்ப் பிடித்துக்கொண்டு, அவனை இம்சை செய்தார்கள். சுயம்புவும், வலி தாங்க முடியாமல் கத்தினான். உடனே, வாலிபால் கதாநாயகன் சுயம்புவை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு, அவன் முதுகில் கைகளைப் பரப்பிக்கொண்டு, அவன் தலையை தன் தலையால் மூடி பாதுகாப்புக் கொடுத்தான். “விடுங்கப்பா. விடுங்கப்பா. விசாரணை இல்லாமல் அடிக்கக் கூடாது” என்றான். சுயம்பு, அவன் மார்புக்குள் அடைக்கலமாகி, ‘குய்யோ முறையோ’ என்று கூப்பாடு போட்டான். அந்தப் பெண்ணைச் சுற்றி நின்ற ஒருத்தி, அவளிடம் விவரம் கேட்டாள். அவள் சொன்னபோது, அதையே கேட்டுக் கொண்டிருந்த இன்னொருத்தியும் ஒன்ஸ்மோர் கேட்டாள். இது போதாது என்று, இந்த டேவிட் அந்த ‘பாஸ்டர்டைக்’ கீழே தள்ளிவிட்டு அந்த இடத்தில் தன்னை வைத்துக் கொள்ளுவதற்குப் பதிலாக, அவனுக்கே சப்போர்ட் செய்வது மாதிரி பேசுகிறான்... அய்யோ... நான் அநாதையாயிட்டேனே... அந்தப் பெண்ணின் கூச்சலும், சுயம்புவின் கூச்சலும் வெளியே உள்ளவர்களை உள்ளே இழுத்துக் கொண்டு வந்தன. எப்படியோ விஷயத்தை யூகித்துக் கொண்டார்கள். சிலர், சுயம்புவைக் கதாநாயகத்தனமாகவும் பார்த்தார்கள். கூட்டத்தில் முண்டியடித்து முன்னால் வந்த மூர்த்தியும், முத்துவும் எம்.பி.பி.எஸ். மாணவர்களிடம் மாறி மாறிக் கெஞ்சினார்கள். “இவன் எங்க கிளாஸ்மேட்... அதோட ரூம்மேட். எலெக்ட்ரானிக் அண்ட் டெலிகம்யூனிகேஷன் கோர்ஸிலே பஸ்ட் இயர் படிக்கான். கொஞ்ச நாளாவே மனசு சரியில்ல. வேணுமுன்னு செய்திருக்க மாட்டான். இந்தத் தடவை விட்டுடுங்க...” ஒரு எம்.பி.பி.எஸ். முதலாண்டு எகிறியது. அப்படியாவது சீனியர்கள் தன்னை ரேக்கிங் செய்வதை நிறுத்துவார்கள் என்ற நப்பாசை. “எப்படியா விட முடியும்... ஆப்டர் ஆல் ஒரு என்ஜினியரிங் ஸ்டூடண்ட்... ஒரு எம்.பி.பி.எஸ். பொண்ணு கிட்ட வம்பு செய்யுறதா.” “யோவ் மாங்கா மடையா... என்னடா ஆப்டர் ஆல்... எம்.பி.பி.எஸ்னா பெரிய கொக்காடா?” வெடவெடப்பான மூர்த்தி எகிறினான். அங்கே பொறியியல் மருத்துவக் கல்லூரி மகாயுத்தம் வரப் போவது மாதிரியான நிலமை. மாணவர்கள், வியூகம் வைக்கப் போனார்கள். மாணவிகளில், வீராங்கனைகள் தவிர, மற்றவர்கள் அழப் போனார்கள். அந்த மாணவர்கள், ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளும் சின்னச் சின்ன வட்டங்களாக நின்றனர். அவர்களை அறியாமலே அவர்கள் அடிமனதில் ஏற்பட்ட குழுஉணர்வு அங்கே குறியீடுகளாகத் தெரிந்தன. பட்டப் படிப்பு மாணவர்களும், வேடிக்கை பார்ப்பதற்காக வந்து, இப்போது இந்தச் சண்டையில் கலந்து கொண்டார்கள். அத்தனைபேரும், வட்டத்திற்குள் வட்டமாய் காணப்பட்டார்கள். அந்த வட்டத்திற்குள்ளும் ஆண்டுவாரியான நெருக்கங்கள். கோர்ஸ்வாரியான நெருக்கங்கள். ஆண்கள் மேல் படரும் கொடிகளாக, டாக்டர்-மாணவிகள் ஒவ்வொரு ஆண் எம்.பி.பி.எஸ். கழுத்துக்கு மேலே புடவை படத் தலை சாய்த்து நின்றார்கள். இது வேறு, மற்ற மாணவர்களுக்கு வயிற்றெரிச்சலைக் கொடுத்தது. பொதுவாக மற்ற மாணவர்களை அலட்சியப்படுத்துவதாக வெள்ளைக் கோட்டுக்காரர்கள்மீது ஒரு குற்றம் சாட்டப் படுவதுண்டு. ஆகையால் அவர்களை ஒரு நாளைக்காவது கறுப்பு கோட்டு போட்டு துக்கிக்க வைக்க வேண்டுமென்று, மற்ற மாணவர்களுக்கு ஒரு வேகம். இந்தச் சமயத்தில் எல்லோராலும் இளக்காரமாய்க் கருதப்படும் இன்னொரு பையன், எம்.பி.பி.எஸ். சார்பில் ஒரு போடு போட்டான். “ஆமாங்கடா... எம்.பி.பி.எஸ்.னா கொக்குதான். ஒங்க ‘ஸைடு’ மாணவிகள் கிட்ட கேட்டுப் பாருங்க. அவள்களுக்குத் தெரியும். நீங்க முருங்கை மரம், நாங்க புளிய மரம்.” ஏற்கெனவே. இந்த சமாசாரத்தில் ‘நொந்து’ போயிருக்கும் இதர மாணவ அணிகள், கொதித்துப் போயின. ஆங்காங்கே லைட்டுகளைப் போட்டுக்கொண்டு வராண்டாவில் நின்ற பெண் விடுதிகளை, ஆண்மையோடு பார்த்தார்கள். ஒருசிலர் அங்கிருந்த பெண்களைத் தங்கள் பக்கம் வரச் சொல்லிக் கையாட்டினார்கள். உடனே எம்.பி.பி.எஸ். மாணவர்களும் சேர்ந்து கையாட்டினார்கள். அந்தத் தெரு ராமர்களுக்கு, அங்கேயே அந்த மாணவ சீதைகளுக்கு ஒரு அக்கினிப் பரீட்சை நடத்த வேண்டு மென்று துடிப்பு. இதற்குள் எம்.பி.பி.எஸ். கிடைப்பதற்காகப் படித்து, பிறகு பொறியலில் சேர்வதற்காக விண்ணப்பித்து, இறுதியில் பட்டப் படிப்பிலும் பாடாவதியான ஒரு பி.ஏ.க்காரன் பெருமிதமாகப் பேசினான். “பொல்லாத எம்.பி.பி.எஸ்... ஊசி போட்டுப் போட்டே ஊசிப் போறவங்க... நாங்க அப்படியில்ல. ஐ.ஏ.எஸ்ஸா வருவோம். ஐ.பி.எஸ்ஸா வருவோம். நீங்க ஊசியும் கையுமா நின்னாலும், எங்களுக்கு சல்யூட் அடித்தே ஆகணும். ஒரு கான்ஸ்டேபிள் அதட்டலுக்குப் பயந்தே, கஸ்டடி டெத்த, இயற்கையான மரணம்ன்னு செயற்கையாச் சொல்ற பசங்களுக்கு வாய் வேறயா?” பல மாணவர்கள் ‘ஹியர், ஹியர்’ என்றார்கள். பலமாகக் கை தட்டினார்கள். இதற்குள் மற்ற துறை மாணவிகளும் அங்கே வந்துவிட்டார்கள். அவர்களுக்கும், சுயம்புவின் விவகாரமும், அந்த விவகாரத்தில் ஏற்பட்ட உள் விவகாரங்களும் புரிந்தன. எம்.பி.பி.எஸ் மாணவர் களோடு எந்தத் தொடர்பும் இல்லையென்று நிரூபிக்க வேண்டியது ஒரு கடமையாகிவிட்டது. பழக்கப்பட்ட, பரிச்சயப்பட்ட டாக்டர் பையன்களைக்கூட, கண்ணால் விலக்கி வைத்துவிட்டு எம்.பி.பி.எஸ். மாணவிகளை எந்த சம்பந்தமும் இல்லாமல் திட்டினார்கள். “பார்க்கறதுக்கு அழகா... ஒரு அப்பாவி கிடச்சால் போதும் விடமாட்டிங்களாடீ..!” “ஆமாங்கடி... இந்த ஆணழகனை. நீங்களே வச்சுக்கங்க...!” “ஒங்களுக்கு மனிதாபிமானமுன்னு எதுவும் இருக்க முடியாது. ஏன்னா, பிணங்களைப் பார்த்துப் பார்த்து பிணங்களாப் போன ஜென்மங்கள் நீங்க...” ஆண் டாக்டர் மாணவர்களுக்கு, இது ஒரு வர்க்கப் பிரச்னையாகி விட்டது. ஆளுக்கு ஆள் எகிறினார்கள். சுயம்பு மேல் போடப்பட்ட பிடியை நெருக்கினார்கள். இதனால் மூர்த்தி பயங்கரமாய் கத்தினான். “ஏப்பா. நான்தான் சுயம்பு ஒருமாதிரி. கொஞ்ச நாளா மனநிலை சரியில்லாம இருக்கான்னு சொல்றேனே! அப்படியும் அவனைப் பிடிச்சு வைச்சிங்கன்னா என்ன அர்த்தம்! விடப்போறீங்களா. விட வைக்கணுமா...” சுயம்பு விவகாரத்தையே, மறந்துபோன மாணவர்களுக்கு, அப்போதுதான் அவன் நினைவும், நிலையும் மனதுக்கு வந்தன. அவனைத் தன் மார்போடு சேர்த்து அடைக்கலமாக வைத்திருந்த டேவிட், சுதாரித்தான். அப்போதும் கோழி, குஞ்சுகளை இறக்கைக்குள் வைப்பது மாதிரி சுயம்புவை மார்போடு போட்ட கைக்குள் வைத்துக் கொண்டே நடந்தான். முத்துவின் தோளைப் பிடித்துக்கொண்டு, குதியாய்க் குதித்துக் கொண்டிருந்த மூர்த்தியிடம், சுயம்புவை மென்மையாகப் பிடித்துத் தள்ளினான். பிறகு “இவர சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போங்க” என்று சொன்னபடியே, எதிர்ப்பந்தை எதிர்பார்த்து எப்படி பின்னால் நகர்வானோ, அப்படி நகர்ந்தான். அவன் அப்படி நகர, நகர, பொறியியல் மற்றும் பட்டப் படிப்புக்கள் முன்னால் நகர்ந்தன. ஒரே கசாமுசா சப்தம், அதற்கான காரணத்தை ஒருத்தன் கண்டு பிடிப்பாய்ச் சொன்னான். “அப்போ நாங்கல்லாம் மெண்டலா? இதுக்குத்தான் எம்.பி.பி.எஸ் திமுருன்னு பேரு... மெண்டல் என்ன செய்யுமுன்னு சுயம்புமாதிரி செய்து காட்டட்டுமா?” இப்படிச் சொன்னவன், அந்த டாக்டர்-மாணவிகளைப் பயமுறுத்துவது போல் அவர்களை ஓரம் சாய்த்துப் பார்த்தான். அந்த மாணிவிகள் பயந்துபோய் ஓடப்போன போது அவர்கள் தரப்பிலேயே சில மாணவர்கள் அவர் களைத் தடுத்தார்கள். இதற்குள் டேவிட் சிறிது ஆர்ப்பாட்டக் குரலோடு பேசினான். “உங்களுக்குப் புரியாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? அவருக்கு ஏதோ ஒரு மனநோய். மனநோயும், வயிற்றுவலி, தலைவலி மாதிரி யாருக்கும் எப்போ வேண்டுமானாலும், வரலாம். இதுல வெட்கப்படுறதுக்கு ஒண்ணு மில்லை. எங்க விசிட்டிங் புரபசர் பரமசிவம் மன இயலில் ஒரு அதாரிட்டி. கோவில் பக்கம் கிளினிக் என் பேரைச் சொல்லுங்க...” “நீங்க என்ன புரட்சித் தலைவரா இல்ல தமிழினத் தலைவரா, சொன்ன உடனே தெரிஞ்சுக்கிறதுக்கு! உன் பேரைச் சொல்லேன் மிஸ்டர்.” “பால் கொடுக்கிற மாட்டை பல்லைப் புடுங்கிப் பார்க்காதீங்க... ஆனாலும் அவரைப் பாக்கிறதுக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கறதாலதான் சொல்றேன். அவரு முகத்துக்காக உங்க முகத்தை அப்படியே விட்டு வைக்கோம். கிண்டல் யாருக்கும் பொதுச் சொத்து இல்ல. ஓ.கே. என் பேரு டேவிட்... டாக்டர் பரமசிவத்துக்கிட்ட, நான் அனுப்புனேன்னு சொல்லுங்க... வேணுமுன்னா நானும் வாறேன். இந்தாப்பா ஆட்டோ...” ஒரு மாணவனையும், ஒரு மாணவியையும் எல்லை வரைக்கும் ஒன்றுபட்டு கொண்டுவந்து விட்டு, பிறகு, அந்த மாணவியை மட்டும் ஒரு விடுதியில் சேர்ப்பித்து விட்டுத் திரும்பிய ஆட்டோ, அலறியபடியே நின்றது. மூர்த்தி, டேவிட்டையே பார்த்துக்கொண்டு நின்ற சுயம்புவைப் பிடித்து ஆட்டோவில் தள்ளினான். அப்படியும் அவனும் அந்த டேவிட்டை-அமைதி ஒளிரும் அந்த முகத்தையும், அழுத்தம் தழும்பும் அந்த மார்பையும் மாறிமாறிப் பார்த்தான். இதற்குள், மூர்த்தியும் முத்துவும் சுயம்புவுக்கு இருபுறமும் ஏறிக் கொண்டார்கள். மாணவர் கவனம் முழுவதும் சுயம்பு மேல் திரும்பியது. இதனால் போரடித்த பலர், கூட்டம் கூட்டமாய், கும்பல் கும்பலாய்ப் போய்க் கொண்டிருந்தார்கள். இரைச்சலோடு கூடிய மழை விட்ட அமைதி. அது சேற்றையோ, சேதாரத்தையோ ஏற்படுத்தாமல் மறைந்ததால் ஏற்பட்ட நிம்மதி. மூர்த்தியும், முத்துவும் கூட புரவோக் ஆகாமல் விளையாட்டு உணர்வு மனப்பாங்கில் விவகாரம், விகாரமாய்ப் போகாமல் நடந்து கொண்ட டேவிட்டை மனத்திற்குள் பாராட்டினார்கள். டேவிட்டும், அவர்கள் கூப்பிட்டால் போவது என்பது போல் ஒரு காலை அழுத்தி வைத்து நின்றான். இவன்களுக்கும் கூப்பிட ஆசை. ஆனாலும் பின்னாலே சொல்லிக் காட்டுவார்கள் என்ற சந்தேகம். ‘பிரிஸ்டிஜ்’ என்னாவது...? வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|