7

     அந்த ஆட்டோ பறந்தது. இருவருக்கும் இடையே சிக்கிய சுயம்பு, டிரைவரே திரும்பிப் பார்க்கும் விதத்தில் கத்தினான்.

     “ஏண்டா என்னை இப்படி இடிச்சிட்டு உட்காருறீங்க... டேய் மூர்த்தி, கைய எடுடா... டேவிட்டையும் கூட்டி வந்தால் என்னடா...”

     அந்த ஆட்டோ, டாக்டர் பரமசிவம் ‘கிளினிக்’ முன்னால் வந்து நின்றது. ஆனால், அதன் வாசல், இடையிடையே சிலிர்த்த இரும்புக் கதவால் மூடப்பட்டிருந்தது. பக்கத்து ‘இங்கிலீஷ்’ மருந்துக் கடையில் விசாரித்தபோது, அந்த டாக்டர் ஏதோ ஒரு செமினாருக்காக பம்பாய் போயிருப்பதாகவும், நேற்றே போய் விடடார் என்றும் செய்தி கிடைத்தது. முத்து, கோபம் கோபமாகக் கத்தினான்.

     “அந்த டேவிட் பயல் வேணுமுன்னே நம்மளை அலைய வச்சுட்டான் பாருடா... நம்மை மெண்டலா ஆக்கிட்டான்...”

     சுயம்பு முத்துவை முறைத்தபடியே பேசினான்.

     “அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். அவரப் பார்த்தா, நல்லவராத் தோணுது... ஒங்கள மாதிரி தெரியலே...”

     “எப்படிடா!... இப்படிப்பட்ட ஒரிஜனல் ஜோக்கைக் கேட்டு ரொம்ப நாளாகுது. மூர்த்தி இப்ப என்னடா செய்யலாம்...”

     “சைக்யாட்ரிஸ்ட் இல்லாமப் போனதும், ஒரு வகையில் நல்லதுக்குத்தான். இல்லாட்டால், இவன மட்டுமல்ல, இவன் அப்பா, அம்மா, இவனோட ஒழவு மாடு எல்லோரையும், எல்லாத்தையும் பார்க்கணுமுன்னு சைக்யாட்ரிஸ்ட் அடம் பிடிப்பார். ‘பேக்கிரவுண்டு' என்ற பெயரிலே, நோயாளிகளை ‘அண்டர்கிரவுண்டு’க்குள்ள அனுப்புறவங்களுக்குப் பேர்தான் ‘சைக்யாட்ரிஸ்ட்’. அடுத்த தெருவுக்குப் போகலாம். எனக்குத் தெரிந்த டாக்டர், தூரத்து உறவு... நல்ல கைராசி. எல்லாருக்கும் ஒரே மாதிரி ஊசிதான் போடுவாரு. அப்புறம் திரும்ப மாட்டாங்க... சிரிக்காதடா. நோய் போயிடும்னு சொல்ல வந்தேன். டிரைவர் நீங்களும் சிரிச்சா எப்படி... ஆட்டோவ அலற விடாமல், சிரிக்க விடுங்க பார்க்கலாம்.”

     அந்த ஆட்டோ, அடுத்த தெருவுக்குள் போனது. அது நின்ற இடத்தின் மேல் பொறிக்கப்பட்ட பலகையில், அந்த டாக்டரின் பெயர் முத்துராஜோ... மோகனராஜோ... அந்தப் பெயருக்கு முன்னால், ஆங்கில எழுத்துக்கள் இருபத்து ஆறும் இடம் பெற்றிருந்தன. அத்தனையும் இறக்குமதிப் பட்டங்கள். ஒரே கூட்டம். அதில் காத்திருந்தாலே, பாதிப் பைத்தியம் பிடிக்கும். ஆனாலும் அவர்கள் காத்திருந்தனர். இவ்வளவுக்கும், மூர்த்தி, தான் வந்திருப்பதாகச் சொல்லும்படி கிளினிக் பையனிடம் சொல்லி அனுப்பினான். அந்தப் பையனும் உள்ளே போனான். சொன்னானோ, சொல்லலியோ... வெளியே வந்தவன், அவர்களைப் பார்த்து, தானே ஒரு டாக்டர் என்பது மாதிரி நெஞ்சை நிமிர்த்தினான்.

     இதற்குள், ஆங்காங்கே உட்கார்ந்திருந்த பெண்களின் தலைப்பூக்களையும் கால் கொலுசுகளையும் ரசித்துப் பார்த்தான் சுயம்பு, சிலர் கால்களை இழுத்து வைத்துக் கொண்டார்கள். சிலர், பூக்களைக் கைகளால் மூடிக் கொண்டார்கள். நல்லவேளையாக ஒரு மணி நேரத்திற்குள், டாக்டர் கூப்பிட்டுவிட்டார். அப்போது, “நிலத்துக்கு உச்சவரம்பு வைக்கிறது மாதிரி டாக்டருக்கு வருகிற நோயாளிகளுக்கும் உச்ச வரம்பு வைக்கணும்” என்று முத்து கத்திக் கொண்டே உள்ளே போனான்.

     அந்த மூவரையும், டாக்டர் எமதூதர்களாகப் பார்ப்பது போலிருந்தது. மூர்த்தியும் முத்துவும் உட்கார்ந்து விட்டு சுயம்புவை நிற்க வைத்தார்கள். டாக்டர் அவர்களைப் பார்க்காமல், கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “இன்னும் எவ்வளவு பேருப்பா இருக்காங்க” என்று கத்திவிட்டு, பதிலுக்காகக் காதுகளைக் குலுக்கலாய் வைத்தபோது, கம்பவுண்டர் மாதிரியான ஒருத்தர் உள்ளே வந்து, “இன்னும் பதினாறு பேர்” என்றார். அப்படிச் சொல்லிவிட்டுப் போகாமல், அங்கேயே நின்றார். தேதி பதினைந்து. இன்னும் போன மாதச் சம்பளம் கைக்கு எட்டாக் கனியாகவே இருக்குது...!

     டாக்டர், அங்குமிங்குமாய்த் தலையாட்டியபடியே ‘உம்’ என்றார். மூர்த்தி சொன்னான்.

     “இவன் பேரு சுயம்பு.”

     “ஒங்க பேரு.”

     “என் பேரு ஒங்களுக்குத் தெரியாதா. உங்க சித்தப்பா மகளோட.”

     “இப்ப நான் கொஞ்சம் பிஸி. விஷயத்தைச் சொல்றீங்களா...”

     “இதோ நிக்கானே சுயம்பு, ரொம்ப பிரிலியண்ட் சார். ஆனால் இப்போ ஒரு மாதிரி ஆயிட்டான். நைட்ல எங்ககூட படுக்காம வராண்டாவுல படுக்கான். பொண்ணுங்ககிட்ட ஒவரா பேசுறான். திடீர் திடீர்னு அழுவறான். கோபப்படறான். துண்டை எடுத்து மாறாப்பு மாதிரி போட்டுக்கிறான்...”

     சுயம்பு டாக்டரிடம் எதையோ சொல்லத் துடித்தான். சகாக்களைத் துரத்திவிட்டு, அவரிடம் எல்லாவற்றையும் சொல்லப் போவதுபோல் அவர்கள்மீது போங்கடா பார்வையை வீசினான். டாக்டர் அவனிடம் சில கேள்விகளைக் கேட்க ஆயத்தமானார். இதற்குள் ‘கிளினிக் பாய்’ உள்ளே வந்து, “சார் எம்.எல்.ஏ. வெளியே இருக்கார். ஏதோ ஜலதோஷம் வந்தது மாதிரி சந்தேகமாம்” எனறான்.

     டாக்டர், பரபரத்தார். இருக்கையிலிருந்து எழுந்து மூர்த்தியைப் பிடித்துத் தள்ளிவிட்டு, கதவைத் திறந்து, “ஒன் மினிட்ல கூப்பிடுறேன். ஜலதோஷம் தும்மலா வரலியே... அப்படியா சந்தோஷம்” என்று சொல்லிவிட்டு, கதவை மூடினார். பிறகு இருக்கையில் வந்து உட்கார்ந்தார். ஆனாலும், அவர் பார்வை எக்ஸ்ரே போல் அந்தக் கதவைக் கிழித்துக்கொண்டே போனது. அவரிடம் ஏதோ சொல்வதற்காக உதடு துடிக்க நின்ற சுயம்புவைப் பார்க்காமலே பிரிஸ்கிரிப்ஷன் எழுதினார். எழுதியபடியே, நாடி பார்த்தார். லோ பிளட் பிரஷர் இருந்தால் இப்படி ஒரு நிலமை வரும் என்று அவருக்குத் தெரியும். ஆனாலும் அதைப் பார்க்க இப்போது நேரமில்லை. எம்.எல்.ஏ.வைப் பிடித்து, ஒரு எம்.எஸ் சீட் வாங்க வேண்டும். சுயம்புவைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் ஒரு தாளில் கிறுக்கியபடியே, “இந்த மாத்திரைகளை ஒரு வாரத்துக்குக் கொடுங்க... நைட்ல ஒரு மாத்திரை போதும். நெக்ஸ்ட் வீக்ல வாங்க” என்றார். பிறகு அவர்களை, அங்கே இல்லாதது போலவே அனுமானித்து அவர் பையையே பார்த்துக் கொண்டு நின்ற கம்பவுண்டர் மாதிரியானவரிடம், “எம்.எல்.ஏ.வைக் கூப்பிடுங்க” என்றார். ஆனாலும் அவரோ ஒரு அங்குலம் கூட நகராமல், சிறிது துக்கத்தோடு சொன்னார்.

     “சார். இந்தப் பையனப் பத்தி சொல்றதைப் பார்த் தால் இவன் பார்க்குற பார்வையைக் கணக்கெடுத்தால் அநேகமாக ஹெர்மா புராடக்டா, இருக்கலாமோன்னு எனக்கு ஒரு சந்தேகம்.”

     “ஒன் சந்தேகத்தைத் தூக்கிக் குப்பையில போடுய்யா. நாட்டுல யார் யார் எதைப்பத்தி பேசணும்னே விவஸ்தை இல்லாமப் போச்சு. எம்.எல்.ஏ.யைக் கூட்டிட்டு வான்னா கூட்டிட்டு வாயேன். சரி பிரதர்ஸ். சரியாயிடும்... ஒகே.”

     வெளியே வந்தவர்கள், எதிரில் உள்ள மருந்துக் கடைக்குப் போனார்கள். கடைக்காரர் பிரிஸ்கிரிப்ஷனைப் பார்த்துவிட்டு, “இந்த மாத்திரை மார்க்கெட்ல இருந்து ரெண்டு வருஷத்துக்கு முன்னாலேயே அவுட்டாயிட்டே. ஆல்டர்னேடிவ் மாத்திரை எழுதித் தரச் சொல்லுங்க. இவனுவலெல்லாம் டாக்டர்” என்றார். உடனே மூர்த்தி மீண்டும் டாக்டரிடம் போனான். அரை மணி நேரம் கழித்து மருந்துக் கடையில் தாளை நீட்டினான். ஏழு மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. அங்கேயே, ஒரு டம்ளரில் தண்ணிர் வாங்கி, சுயம்புவின் வாயில் ஒரு மாத்திரையைப் போட்டு, விதைக்குத் தண்ணிர் ஊற்றுவது போல் ஊற்றினான்.