உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
8 சகாக்களோடு அறைக்குள் வந்த சுயம்பு, கட்டிலில் ‘ஜம்ப்’ செய்து ஜன்னலில் முதுகைப் போட்டான். அவர்களைப் போலவே அவனுக்கும் ஆச்சரியம். நாமா இப்படிக் கத்தினோம். ஒரு மாத்திரையிலேயே சரியாயிட்டே. ஆனாலும் அவ்வப்போது முகம் சுளித்தான். அவர்கள் அவன் கையைப் பிடித்துக் குலுக்கும்போது ஒரு ஷாக். கத்த வேண்டும் என்ற எண்ணம். ஆனால் கத்தக் கூடாது என்று உள்ளுக்குள்ளேயே ஒரு கட்டளை. எல்லாவற்றையும் லேசாய் எடுக்கும் நிதானம். அந்த மாத்திரை அவன் மனத்தைக் கட்டிப் போட்டுவிட்டது. சிறிது நேரத்தில், அந்த அறைக்குள் ஏழெட்டுப் பேர் திமுதிமுவென உள்ளே வந்தார்கள். நாலு லுங்கிக்காரன்கள். இரண்டு பாண்ட்கள். ஒரு வேட்டிக்காரன். அவர்களே உசத்தியாகப் பார்க்கும் ஒரு சபாரிக்காரன். கலர்ப்பனியன்காரர்களோடு உள்ளே வந்த சபாரி, உயரத்திலும் அகலத்திலும் சராசரிக்கு மேலே. எடுத்த எடுப்பிலேயே கேட்டான். “தம்பி மூர்த்திக்கண்ணு, என் பேரு பொன்முகன். நீ நம்ம காலேஜ் யூனியன் தேர்தல்ல செகரட்டரி போஸ்ட்டுக்கு நாமினேஷன் போட்டிருக்கியாமே.” “ஆமாம். உட்காருங்க அண்ணே.” “நான் தலைவருக்கு போட்டி போடறது உனக்குத் தெரியுமில்லே...” “ஆமாண்ணே. ஒங்களுக்கு ஒத்தாசையா...” “அதுக்கு ஒரு சீனியர் இருக்கான். நீ உள்ளே வந்து மூணே மூணு மாசம்தான் ஆகுதுப்பா...” “இருக்கட்டுமேண்ணே. பஸ்ட் இயர் பசங்களுக்கு கட்டில் கிடையாது. ஃபேன் கிடையாது. மூட்டைப் பூச்சிகளோட சகவாசம். இந்தக் கட்டிடத்துக்கு மட்டும் ஒரு நாளைக்கு பூகம்பம் வரப்போகுது. அதுக்கு முன்னால, அதைத் தடுக்கணும். இதுக்குத்தாண்ணே போட்டி போடுறோம்.” “அதுக்கு சீனியருங்க இருக்கோம்பா. உனக்கு வேணும்னா ஆயிரமோ ரெண்டாயிரமோ வாங்கிக்கோ. வாபஸாயிடு.” “என்ண்ணே நீங்க... அரசியல் மாதிரி காலேஜ் யூனியன் தேர்தலையும் அசிங்கப்படுத்துறீங்க...” “அப்புறம் நீயும் அசிங்கப்பட வேண்டியிருக்கும் கண்ணா. நீ வந்து மூணு மாசம்தான் ஆகுது. கஷ்டப்பட்டு இடத்தைப் பிடிச்சுட்டு, இப்ப சட்டமா பேசுறே!” “இந்தப் பல்கலைக் கழகம் மட்டும் இல்லாட்டால், உங்களமாதிரி என்னமாதிரி பிற்படுத்தப்பட்டவங்களுக்கு எதுவுமே கிடைக்காதுன்னு எனக்குத் தெரியுமுண்ணே... ஆனாலும் ஒரு கட்டில் கேட்கிறதுல தப்புல்ல அண்ணே. வஞ்சகம் இல்லாமல் சோறு போடுறாங்க. எங்கேயும் இல்லாத சுதந்திரம் இங்கே இருக்குது... ஆனாலும்...” “என்னடா... வெளையாடுறியா... நான் யார் தெரியுமா?...” “நான் யார்னு தெரியுமாடா, பாக்ஸிங்ல சில்வர் மெடலிஸ்ட். சில்வர்னா வெள்ளி. கோல்டுன்னா தங்கம். உனக்கு அர்த்தம் தெரியுமாடா...” தரையில் சப்பாணிபோல உட்கார்ந்திருந்த, முத்து நெஞ்சை நிமிர்த்தி எழுந்தான். தூக்கலான தோள்களை லேசாய்த் தட்டிவிட்டான். அவன் போட்ட சத்தத்தில் அந்த இரண்டாவது மாடி மாணவர்கள் கூடிவிட்டார்கள். சுயம்பு ஜன்னலில் சாய்ந்தபடி, மோவாயை நீட்டி நீட்டி, கண்களைக் குலுக்கிக் குலுக்கி, தோளை ஆட்டி ஆட்டிப் பேசினான். “என்னாங்கடா இது. போட்டி போடறவனைத் தோற்கடிச்சு வீரத்தைக் காட்டணும். டிபாசிட்ட இழக்க வச்சு, ஜூனியர் ஜூனியர்தான்னு நிரூபிக்கணும். இதை விட்டுட்டு, விடுதி விட்டு விடுதி வந்து அடிக்க வாறீங்களே, நீங்க ஆம்பிளைங்களாடா...” விடுதி விட்டு விடுதி வந்தவர்கள், திகைத்துப் போனார்கள். அங்கே கூடிய ஜூனியர்களும் கொதித்து அவர்களை முற்றுகையிட்டார்கள். ரேக்கிங் என்ற பெயரில் இதுக்கு மேல, இவங்க நாரப்பாட்டுக்கு டான்ஸ் ஆட முடியாது. டான்ஸுக்கு பாட்டுப் பாட முடியாது. இவனுக கரும்புள்ளி செம்புள்ளி குத்துறதுக்கு முகத்தைக் கொடுக்க முடியாது. இவங்க சொன்னமாதிரி அந்த முகத்தோட பஸ் ஸ்டாண்டுக்குப் போக முடியாது. நடு ராத்திரியில இவங்க கதவைத் தட்டி நம்ம தூக்கத்தைக் கெடுக்க விடப்படாது. இதுக்குமேலயும் இவனுவளுக்கு ‘நோட்ஸ்’ எழுதிக் கொடுக்கக்கூடாது. அந்த ‘மூன்று மாதங்கள்’, அங்கேயே அறுபது மாதங்கள் இருந்ததுபோல் உருட்டுக் கட்டைகளை எடுத்துக் கொண்டன. துடைப்பக் கட்டைகளைத் தூக்கிக் கொண்டன. நிலைமையைப் புரிந்து கொண்ட மாணவத் தலைவர் வேட்பாளனும், பல ‘செமஸ்டர்’களில் பல பாடங்களில் ‘அரியர்ஸ்களை’ வைத்திருப்பவனுமான பொன்முகன், தனது சகாக்களோடு ஜகா வாங்கிவிட்டான். ஜூனியர்களால், சுயமரியாதைக்குச் சவால் வந்திருக்கிறதே என்ற கவலையல்ல. மாணவர்கள் பாட வாரியாகப் பிரியாமல், ஆண்டு வாரியாகப் பிரிந்தால், தான் ஜெயிக்க முடியாமல் போய்விடுமே என்ற பயம். பதவி கிடைக்க வில்லையானால் கட்சிக்குக் கோபம் வருமே என்ற உளைச்சல். அவர்கள் போனதும், எல்லா மாணவர்களும் சுயம்புவை சுகமாகப் பார்த்தார்கள். அவனை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போன அறைவாசிகளை வியப்போடு பார்த்தார்கள். எல்லாம் முடிந்து, எல்லோரும் தூங்கிவிட்டார்கள். சிறிது நேரம் சீனியர்கள் ஆயுதப்புரட்சி செய்ய வரலாமென்று, அதை எதிர்நோக்கி உருளைக் கட்டைகளோடும் ஜாமெட்ரி பாக்ஸ்களோடும் காத்திருந்த ஜூனியர்கள் அந்தக் களைப்பிலேயே உறங்கி விட்டார்கள். சுயம்பு குறட்டை போட்டுத் தூங்குவதில் அவன் அறைத் தோழர்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சி. ஆனாலும் காலையில் கண்விழித்த மூர்த்தியும், முத்துவும் கட்டிலைப் பார்த்தார்கள். ஒரு மணி நேரமாய் அங்கு மிங்குமாய்த் தேடிப் பார்த்தார்கள். சுயம்புவைக் காணவில்லை. சீனியர்களின் வேலையாக இருக்குமோ... வாடா மல்லி : என்னுரை
இரண்டாவது பதிப்பு முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
|