9

     வாழ்ந்து கெட்டவர்கள் என்பதுபோல், அவர்கள் ‘கெட்டு வாழ்கிறவர்கள்’ என்ற புதுமொழியாய் சொல்லும் படியாய் இருந்தது அந்த வீடு.

     சமையலறை மட்டும் பாடாவதிச் சுவரோடு நிற்க, அதற்கு எதிர்த் திசையில் புதிய கான்கிரீட் சுவர்களாலான வீடு. சுற்றிலும் அடைக்கப்பட்ட பனை ஓலை காம்பவுண்ட் அகற்றப்பட்டுக் கருங்கல் சுவர் கம்பீரமாய் நின்றது. மும்மூன்று அறைகளைக் கொண்ட இரண்டு பத்திக் கட்டிடம். அந்த இரண்டும் நீண்ட வராண்டாவில் அல்லது திண்ணையில் முகங்களைக் காட்டிக் கொண்டிருந்தன.

     சுயம்புவை, யாரோ உள்ளே கொண்டு வந்து விட்டு விட்டு, வந்த சுவடு தெரியாமல் போய்விட்டார்கள். அவன் மூன்றடி உயரத்திற்கு மேலுள்ள தார்சாவில் பெஞ்சுமேல் உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்தான். ஒருவர் பிறக்கும் போதே முடி முளைக்காத மொட்டை. அறுபது வயதிருக்கும். அவரருகே ஒரு கம்பீரமான ‘ப’ வடிவ மீசைக்கார இளைஞன். அவன் பக்கத்தில் மஞ்சள் முகத்தோடு கூடிய ஒருத்தி, வயிறு துருத்த சுவரில் சாய்ந்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். எதிர்ப்புற நாற்காலியில் அதே வயது இளைஞன். ஆனாலும் மீசை தெரியாத கருப்பு.

     சுயம்பு, முற்றத்தில் நிறுத்தப்பட்ட மோட்டார் பைக்கின் முன்பக்க முகப்பில் ஒரு கராத்தேக்காரனின் உருவப்படத்தை ரசித்துப் பார்த்தான். ஆம்புளன்னா இப்படித்தான் இருக்கணும். இல்லாட்டா அந்த டேவிட் மாதிரி இருக்கணும். அதோ இருக்கானே, கரிமூஞ்சி.

     சுயம்பு, கராத்தே உருவத்தைக் கண்ணிலிருந்தும், டேவிட் உருவத்தை மனத்திலிருந்தும் விடுவித்துக் கொண்டே, தன்னை ஆச்சரியமாகப் பார்ப்பவர்களை அகலக் கண் போட்டுக் கேட்டான்.

     “இது ‘பூக்கட்டி’ அருணாசலம் வீடுதானே.”

     “ஒரு காலத்தில் ‘பூக்கட்டி, பூக்கட்டி’ என்று தன்னை இளக்காரமாகப் பேசிய ஊரே, இப்போது அதை மறந்து, ‘வாத்தியார் வீடு’ என்றும் ‘டிராக்டர்காரர் வீடு’ என்றும் பல கெளரவப் பட்டங்களை வழங்கும் போது, சுயம்பு, அழுகிப்போன பூக்களைக் கிளறுவது கண்டு அந்த மொட்டைத் தலைவர் கோபப்படப் போனபோது, ‘பிள்ளைத்தாய்ச்சி’ கேட்டாள்.

     “யாரு நீங்க... என்ன வேணும்.”

     “என் பேரு சுயம்பு. எங்க அக்கா பேரு மரகதம். நல்லாம்பட்டி பிள்ளையாரு எங்கப்பா.”

     வாயும் வயிறுமான அந்தப் பெண் ‘வாங்க, உள்ள வாங்க’ என்று கூவியபடியே எழுந்தாள். வீட்டுக்குள் எட்டிப் பார்த்து “எம்மா, எம்மா” என்றாள். பிறகு அவளே உள்ளே போய் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு, அதை ஒரு முந்தானையால் துடைத்து விட்டாள். உடனே அவன், மூன்று படிகளில் முதல் படி வழியாய் ஏறாமல் எகிறிக் குதித்து, அவள் போட்ட நாற்காலியில் உட்கார்ந்தான். இதற்குள் ஒரு வயதான அம்மாள், உள்ளறையிலிருந்து வெளிப்பட்டாள். ஒரு காலத்தில் போடப்பட்ட பாம்படக் காதை அறுத்து, கம்மலைப் போட்டிருக்கலாம் என்பதை அவள் காதுகளின் சிதைந்துபோன அடிவாரங்கள் காட்டின. எல்லோருக்கும் திருப்தி. தம்பிக்காரனே இவ்வளவு அழகு என்றால், அக்காவைப் பற்றிக் கேட்க வேண்டாம். ஆனால் இவனுக்கே ஒரு தடிமாடு வயசு இருக்கும். பொண்ணுக்கு எவ்வளவோ. கிழவிக்கா தாலி போடறது. மொட்டைத் தலைவர் சந்தேகம் கேட்டார்.

     “தம்பிக்கு என்ன வயசு?”

     “எங்க அக்காவுக்கு நாலு வயசு கீழ.”

     “சரிப்பா... குத்து மதிப்பா எவ்வளவு தேறும்.”

     “இருபத்தொன்னு முடிஞ்சு இருபத்திரண்டு பிறக்கப் போவுது... நெக்ஸ்ட் மன்ந்த் செவன்த் சிஸ்டர் பெர்த்டே...”

     “மாமாவுக்கு நீ கடைசியில சொல்ற எந்த எழவும் புரியல. ஆனாலும் பரவாயில்லை. ஆனால், பேசும்போது உடம்பை இப்படி ஏன் வளைக்கே...”

     “நான் வளைக்கலை மாமா. அது தானா வளையுது.”

     “என்ன புள்ள அப்படிப் பாக்கே. உன் மருமகனுக்கு மொதல்ல மோர் கொண்டுவா.”

     அந்தம்மா, உள்ளே போய்விட்டாள். சுயம்பு தன் பக்கம் உள்ள நாற்காலியில் இருக்கும் ‘கரி மூஞ்சியையும்’ எதிர்பக்கத்து ‘சிடு மூஞ்சியையும்’ சகிப்புத்தன்மையோடு பார்த்துக் கொண்டு அதே சமயம் எரிச்சலாய்க் கேட்டான்.

     “இவங்களுல எவரு மாப்பிள்ளை...”

     பிள்ளைத்தாய்ச்சி, அப்போதே அவன் மைத்துனனாய் ஆகிவிட்டதாய் நினைத்துக் கிண்டலும் கேலியுமாய்க் கேட்டாள்.

     “நீங்களே கண்டுபிடிங்க...”

     சுயம்பு, எதிரும் புதிருமாய் உட்கார்ந்திருந்த இரண்டு இளைஞர்களையும் பார்த்தான். எவரும் பிடிக்கவில்லை. ஒருத்தன் கூட ‘ஆம்புளையாய்’த் தெரியவில்லை. ‘எக்கா எக்கா இந்தக் கல்யாணம் நடக்காதுக்கா. நடந்தால் கிளி வளர்த்து பூனை கிட்ட கொடுக்கதுக்கு சமானம். ஆலம்பழத்தை அண்டங்காக்கா கொத்திட்டுப் போறது மாதிரி... பூனையாயிருந்தா கல்லடிப்பேன். காக்காவா இருந்தால் கையை ஓங்குவேன். ரெண்டுல எதையுமே ஒன்கிட்ட அண்ட விடமாட்டேன்.’

     சுயம்பு, தன்னிடமே பேசுவதுபோல் முனங்கியதை பிள்ளைத்தாய்ச்சி ரசித்தாள். அவளும் அப்படித்தான். மாப்பிள்ளை பிடிக்கவில்லையென்று தனக்குள்ளேயே முன்பெல்லாம் முணுமுணுத்தவள். இதற்குள் அந்த இளைஞர்கள் இருவரும் அழகுப் பரிட்சைக்கு அவனிடம் மார்க் வாங்க ஆசைப் பட்டவர்களாய் லேசாய்ச் சிரித்தார்கள். வாயும் வயிறும் புதிரவிழ்த்தாள்.

     “ஓங்க பக்கத்தில இருக்கவன் என் சின்ன அண்ணன். இவரு எங்க வீட்டுக்காரரு. அவரு...”

     “ஒங்க அப்பாவா இருக்கணும். இல்ல மாமனாரா இருக்கணும். அப்போ மாப்பிள்ளை யாரு...”

     “பெரியண்ணன்.”

     “அய்யய்யோ. வயசானவரோ...”

     “வரத்தானே போறான்... நீங்களே பார்த்துச் சொல்லுங்க. ஒங்க வயசப் பார்த்தால், ஒங்க அக்காவுக்கும் வயசாயிருக்கும் போலத் தெரியுதே. எப்பா, அண்ணனைக் கூட்டிட்டு வாங்களேன்...”

     மணப்பெண் போல் நாணப்பட்ட தாய்க்காரியிடமிருந்து, மகள்காரி மோர் டம்ளரை வாங்கி, சுயம்புவிடம் நீட்டினாள். அவன், அதைக் குடித்துக் கொண்டிருக்கும் போதே அப்பாக்காரர் வெளியே புறப்பட்டார். தம்பிக்காரனும் கூடவே போனான். பிள்ளைத்தாய்ச்சி புருஷன் காதில் கிசுகிசுக்க, அவன் இட்லி தோசை வகையறாக்களை வாங்கிவர எழுந்தான். அவனும் போனபிறகு, பிள்ளைத் தாய்ச்சிக்குச் சுயம்பு பக்கத்தில் நிற்க கூச்சமாக இருந்தது. உள்ளே போய்விட்டாள்.

     சுயம்புவுக்கு, அப்பவே மாப்பிள்ளையைப் பார்க்கும் ஆவல். தம்பிக்காரனுக்கு வயசாவது தேறும். அண்ணன்காரனுக்கு அதுகூடத் தேறாதே என்பதுபோல் குறுக்கும் நெடுக்குமாக லாந்தினான். வாசலில் போய் நின்றான். ‘யாரு அது. இந்தப் பக்கமா வாராள். பஸ்ல... சும்மா பக்கத்துல இருந்ததுக்கு பவுசு பண்ணினாளே, அவளா, அவள்தான். அதே ரெட்டைப் பின்னல்... அதே அழுமூஞ்சி. அவனைப் பார்த்தபடியே வீட்டுக்குள் நுழையப் போன அந்தப் பெண்ணை, தப்பிக்க முடியாதபடி கையைக் குறுக்காக நீட்டிக்கொண்டு, சுயம்பு ஒரு கேள்வி கேட்கப் போனான். அவள், கோபப்படுவதற்குப் பதிலாக சப்த நாடிகளும் அடங்கி, சகல நாடிகளும் ஒடுங்கி, அவனைப் பயத்தோடு பார்த்தாள்.

     “ஓங்களுக்கு இந்த வீடா...”

     “ஆமா... இங்கே எப்படி...”

     “எங்க அக்காவைத்தான், ஒங்க வீட்டு வாத்தியார் மலைச்சாமி பாண்டியனுக்கு முடிவு செய்திருக்கு... ஆனாலும் நான் ஓ.கே. சொன்னாத்தான் கல்யாணம் நடக்கும். ஒங்களுக்கு அவரு என்ன வேணும்?”

     “கூடப்பிறந்த அண்ணன்...”

     “என்னப் பஸ்ல போட்டு பாடாப்படுத்துனாரே... அவரா... அப்படி என்னமா நான் பெரிய தப்புப் பண்ணிட்டேன்... என்னையே இப்படிப் போட்டு அடிச்சவரு, எங்க அக்காவை எப்படிப் போட்டு அடிப்பாரோ... ஒங்க வாடையே வேண்டாம்மா... நேருக்கு நேரா சொல்லிட்டே போயிடப் போறேன்...”

     அவள், கண்களைத் தாழ்த்தினாள். பின்னாலும் முன்னாலும் பார்த்தாள். மெள்ள விசும்பினாள். ரகசியம் பேசுவதுபோல் சொன்னாள்.

     “அவரு என் அண்ணன் இல்ல. என்னோட ‘உட்பி’”

     “அப்படின்னா...”

     “இப்போ காதலிச்சுட்டு அப்புறமா கட்டிக்கப் போறவரு.”

     “அடிப்பாவி கெடுத்தியேடி... ஒங் கழுத்துல, அவன் கை போடு முன்னால உதட்டுல வாய் படலாமா. ஆமா, அந்தப் பாவிப் பய அப்படி ரகளை பண்ணுனானே. நீயும் ‘எண்ணா. எண்ணா’ன்னு வேசம் போட்டியே. பஸ்ல ஒங்க ஊருக்காரங்க யாராவது பார்த்திருந்தால்...”

     “பஸ்ல யாரும் இல்லன்னு உறுதி செய்த பிறகுதான் நான் கத்துனேன். அவரும் ஹீரோவானாரு...”

     “நல்ல மனுஷி நீ. கட்டிக்கப் போறவனை, கூசாம தங்கச்சின்னு சொல்றவன் ஒரு நாளைக்கு உன்னைத் தங்கச்சியா நெனச்சேன்னு சொல்லிடப் போறாண்டி. இனிமேலாவது அந்தக் கழுதைப் பயல ‘கஸின்-சிஸ்டர்’னு சொல்லச் சொல்லு. ஸிஸ்டர் என்கிற வார்த்தை ரொம்பப் புனிதமான வார்த்தை... எங்க அம்மாவ எனக்குப் பிடிக்கிறதுக்கே காரணம், அவள் எங்க அக்காவை பெத்தாள் என்கிறதுக்காக்த்தான்...”

     “நீங்க சொல்றபடியே கேக்குறேன்... ஆமாம் - நீங்க எதுக்காக என் பக்கத்துல வந்து உட்கார்ந்தீங்க...”

     “அதுவா... அது ஒரு பெரிய கதை. சொன்னாலும் தீராது. சொல்லியும் மாளாது.”

     “தயவுசெய்து என்னைப்பற்றி யார் கிட்டவும் சொல்லப்படாது. அண்ணன்கள் அடிச்சே கொல்வாங்க. அதுக்கு முன்னால நான் தூக்குப் போட்டுச் சாக வேண்டியது வரும். இதுனால ஒங்க அக்கா கலியாணமும் நின்னுடும்...”

     “கவலப்படாதே. கவலப்படாதேம்மா. நான் மூச்சு விடமாட்டேன். பொண்ணுக்குப் பொண்ணு இந்த ஒத்தாசை செய்யாட்டாக் கூட எப்படி?... ஆனாலும், ஒன்னோட அவன் நல்ல ஆம்புளையாத் தெரியலை...”

     “அப்புறம் பேசிக்கலாம். அதோ வாரானே. அவன் தான் எங்கண்ணன்... ஒங்க மச்சான்...”

     சுயம்பு, மைத்துனனோடும், தம்பியோடும் மத்தியில் வந்தவனைப் பார்த்தான். பயந்தது போல் இல்லை. சரியான உயரம். இரும்பால் செதுக்கப்பட்டது போன்ற உடம்பு, வயிறே தெரியாத வாளிப்பு. எல்லா அவயங்களும் தனித்துவ அழகோடும், ஒட்டு மொத்தமான அழகோடும் ‘இருவேறு’ விதமாய்த் தோன்றினான். கருஞ்சிவப்பு. மூக்குதான் கருடன் மாதிரி. பரவாயில்லை. திருஷ்டி மாதிரி இருந்துட்டுப் போகட்டும். சுயம்புவின் வருங்கால மைத்துனன் அவனைப் பார்த்துச் சிரித்தான். அவன் தோளில் கை போட்டபடியே உள்ளே கூட்டிப் போனான். அம்மா விரித்துப் போட்ட பாயில் உட்கார்ந்தார்கள். கல்லூரிக்காரி, அவனுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் கேட்டாள்.

     “நீங்க எந்த காலேஜ்?” அவன் பெயரைச் சொன்னான்.

     “நானும் அங்கேதான் படிக்கேன். மெக்கானிக்கல் இஞ்சினியரிங்கில் இரண்டாவது வருஷம்.”

     “நான் எலெக்ட்ரானிக் முதல் வருஷம். உங்களைப் பார்க்கவே இல்லையே?”

     அம்மாக்காரி, பிள்ளைத்தாய்ச்சி மகளின் தலையை வருடிக் கொடுத்தபடி, சின்ன மகளின் பெருமையை, பெருமை பிடிபடாமல் சொன்னாள்.

     “எங்க இந்திரா இருக்கிற எடமே தெரியாது... அவ்வளவு அடக்கம். நீங்க நெனெச்சிக் கூடப் பார்க்க முடியாது.”

     “ஆமா. ஆமா. நீங்க சொல்றபடி நெனச்சு பார்க்க முடியாதுதான்...!”

     இந்திரா நகத்தைக் கடித்தபோது, ‘பிள்ளைத்தாய்ச்சி’ சுயம்புவுடன் பேச்சுக் கொடுத்தாள்.

     “மாப்பிள்ளை பிடிச்சிருக்குதா.”

     “என்ன கேள்வி கேட்டுட்டீங்க... எனக்கே மச்சானைக் கட்டிக்கலாம் போலத் தோணுது.”

     எல்லோரும், வயிறு குலுங்கச் சிரித்தார்கள். அதனால் அடிவயிற்றில் வலி எடுத்த பிள்ளைத்தாய்ச்சி, சிரிப்பை அடக்கிக்கொள்ளப் பல்லை மூட வேண்டியதாயிற்று. சுயம்பு பொதுப்படையாய்க் கேட்டான்.

     “ஆமா. கல்யாணத்தை எதுக்காக மூணு மாசம் தள்ளிப் போடுறீங்க...”

     பிள்ளைத்தாய்ச்சி, புருஷனை குறும்புத்தனமாய்ப் பார்த்து, ‘பதில் சொல்லுங்க’ என்பது மாதிரி எவருக்கும் தெரியாமல் பொய்க் கோபத்தோடு அழகு காட்டியபோது, வாத்தி மச்சான் விளக்கமளித்தான்.

     “லிஸ்டருக்கு இது மாசம்... அவளால கலியாணத்துக்கு வர முடியாது. அதனால குழந்தை பிறந்த ரெண்டாவது மாசத்துல கலியாணத்தை நடத்தலாமுன்னுட்டு பெரியவங்க நிச்சயம் செய்திருக்காங்க. வேற காரணம் எதுவும் கிடையாது...”

     வாத்தியார் சொல்லிவிட்டு திடுக்கிட்டுச் சிரித்தான். எல்லோரும் வினாவாக முகத்தைக் குவித்தபோது, அவன், “குழந்தை பிறந்த பிறகு கல்யாணம்னு சொல்றேன் பாருங்க” என்று சிரித்தான்.

     சுயம்பு, தனக்கு முன்னால் வைத்த, பக்கடா மசால் வடைப் பொட்டலங்களை மற்றவர்களுக்குப் பரிமாறப் போனான். இதற்குள், பிள்ளைத்தாய்ச்சி, அதைப் பிடுங்கிக் கொண்டு, எல்லோருக்கும் பாகப் பிரிவினை செய்தாள். சுயம்பு அவற்றைத் தின்றுவிட்டு அவசர அவசரமாய் எழுந்தான். அவன் ஒயிலாக நின்ற தோரணையும், கண்களைச் சிமிட்டிய விதமும், குரலின் இதமும் அந்தக் குடும்பத்தினருக்கு ஒரு மாதிரியாகப் பட்டது. ஆனாலும் அவனைச் சூதுவாதற்ற ‘சுபாவி’யாக எடுத்துக் கொண்டார்கள். தாய்க்காரிதான் இந்திராவுக்கு இவன் பொருத்தமாய் இருக்க மாட்டானோ என்று அப்போது ஆசைப்பட்டதை இப்போது மறு பரிசீலனை செய்தாள்.

     சுயம்புவை, எதிர்கால மச்சான்காரனே பேருந்து நிலையம் வரை வந்து வழியனுப்பினான். அவன் பஸ்ஸில் ஏறிய விதம், மாப்பிள்ளைக்காரனுக்கு என்னவோ போலிருந்தது. யோசித்தான்.