18

     ஒரு வாரம் ரகளை இல்லாமலே ஓடியது.

     மல்லிகா, பெண்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது, வெளியே இருந்து வந்த அவள் தந்தை பெருமாள், வீட்டுக்குள் போனவுடனேயே, அம்மாவுடன் கோபமாகப் பேசுவது கேட்டது. மல்லிகா வீட்டுக்குள் போனாள். செல்லம்மா, புருஷனிடம் எதிர்க் கேள்விப் போட்டாள்.

     “எங்க அண்ணன் இப்படிச் செய்ய மாட்டார்... மாட்டார்.” செல்லம்மா திருப்பிக் கத்தினாள்.

     “உங்க அண்ணனேதாண்டி... சட்டாம்பட்டியில் லிங்கராஜாவோட தங்கச்சியாம். வயது பதினேழாம். இந்த சோம்பேறிப் பயல் கட்டிக்கப் போறான். நிச்சய தாம்பூலம் ஆயிட்டு. இந்த அநியாயத்தை முருகன் கோவிலுல வச்சு நடத்தப் போறாங்களாம்... பன்னாடப் பயலுக... கட்டுறதே கட்டுறாங்க... கோயிலுல வச்சா கட்டணும்?”

     “எங்கண்ணாவா... அட... கடவுளே...”

     “உன் அண்ணனே தாண்டி... நீ அடிக்கடி சொல்லுவியே... ‘எங்கண்ணா உங்களை மாதுரி குடிகாரன் இல்ல... குதிரைக்காரன் இல்லே’ன்னு. இப்போ சொல்றதக் கேளுடி. கெட்டப் பழக்கம் உள்ளவன் அயோக்கியனும் இல்ல... அது இல்லாதவன் யோக்கியனும் இல்ல... ஒரு பதினேழு வயசுப் பெண்ணை... பெற்ற மகள் மாதுரி நினைக்க வேண்டிய வெள்ளரிப் பிஞ்சை... இந்த கழுதப்பய திங்கப் போறானாம். பாவம்... அந்தப் பொண்ணு... சித்திக்காரியோட கொடுமை தாங்க முடியாம... எப்படியாவது... ஊர்ல இருந்து ஒழிஞ்சா சரின்னு பேசாம இருக்காம். புலிக்குப் பயந்து ஓநாய்கிட்ட போன கதை... இப்போ... சொல்லுடி... ‘பாயிண்ட்’ இருந்தும் சொத்துக்கு ஆசைப்பட்டு அவன் மேல வழக்குப் போடாத உன் குடிகாரப் புருஷன் யோக்கியனா? இல்ல... சொத்து நமக்கு வரக் கூடாதுன்னு... ஒரு சின்னஞ்சிறிச அழிக்கிற உன் அண்ணனா? ஏண்டி வாய் மூடிவிட்டாய்? இவன் கெட்ட கேட்டுக்கு... கல்யாண நோட்டீஸ் அடிச்சிருக்கான்... மல்லி... உன் அம்மாவுக்கு... இதை படித்துக் காட்டும்மா.”

     பைக்குள் ‘சஸ்பென்சாக’ வைத்திருந்த கல்யாண அழைப்பிதழை, பெருமாள் மகளிடம் நீட்டினார். அதை தனக்குள்ளேயே படித்த மல்லிகா, அந்த எழுத்தை நம்பாதவள் போல், எழுத்தில்லாத பின் பகுதியைப் புரட்டினாள். ஒரு இளம் பெண்ணும், இளைஞனும் கைகோர்த்து நிற்பது போன்ற படம். ‘இளைஞன்’ படத்திற்கருகே ஐம்பதைத் தாண்டும், ‘சொக்கலிங்கம்’ என்ற எழுத்துக்கள். அதற்குக் கீழே ‘பேச்சியம்மாள்’ என்ற வார்த்தை.

     மல்லிகா, அழைப்பிதழை வாயில் வைத்துக் கடித்துக் கொண்டே, யோசித்தாள். பெண் விடுதலை பேசும் இந்தக் காலத்திலா இப்படி? ஒருத்தி, ஏழையாகப் போய்விட்டால், அவளை யாரும் வாங்கலாம் என்பது இன்னும் நடக்குதே. மாமா சொத்தைக் காப்பாற்ற நினைத்தால், இந்த பேச்சியம்மாவையே தத்து எடுத்து மகளாய் வளர்க்கலாமே! அப்பாவா இப்படிச் செய்கிறார்? அப்பா அல்ல, அப்பாவோட பணம்... பணத்தை, வாலிபமாய் பெண்கள் நினைக்கிறார்கள் என்கிற அகங்காரம். இதைத் தடுத்தே ஆகணும்... தற்காப்பு என்று எண்ணி, தற்கொலைக்குச் சமமான ஒரு காரியத்திற்கு உடன்படும் பேச்சியம்மாவைக் காப்பாற்றியாகணும்...

     மல்லிகா, அமைதியாக, ஆணித்தனமாகப் பேசினாள்.

     “வாங்கப்பா... வக்கீலைப் பார்க்கலாம்.”

     “எதுக்கும்மா...”

     “சொக்கலிங்கத்தோட அரவை மில் என் பேர்ல இருக்கு... மளிகைக்கடை என் பேர்ல இருக்கு... அதோட நான் அவரோட வளர்ப்பு மகள். தத்து எடுக்கதுக்கும் சட்டம் இருக்கு. வாங்கப்பா... வக்கீலிடம் போகலாம்.”

     செல்லம்மா பதறினாள்.

     “மல்லிகா... என்னம்மா... இது?”

     “இது உங்களுக்குப் புரியாதும்மா... இது ஒரு இளம் பெண்ணோட விவகாரம். விற்பனைக்கு வந்திருக்கிற ஒருத்தியோட எதிர்காலப் பிரச்சினை... வாங்கப்பா போகலாம். பணம் இருக்கா?”

     “கோணி வாங்க ஐம்பது ரூபாய் இருக்கு.”

     “பரவாயில்ல... நாம பட்டினி கூட கிடக்கலாம். கேணியில் ஒரு பெண்ணை தள்ளப் போவதை... நாம் பார்த்துட்டு நிற்கப்படாது... வாங்கப்பா...”

     மல்லிகாவும், பெருமாளும் புறப்பட்டார்கள். செல்லம்மாவுக்கு, ஒன்றும் ஓடவில்லை. குடித்தனப் பெண்களுடன் இரண்டறக் கலந்து, ஒருவித சமூகப் பிரச்சினையில் தன்னைப் பிணைத்துக் கொண்ட பெருமிதத்தில் மகளும், அந்த மகளைப் பெற்ற பெருமிதத்தில் தந்தையும் நடந்தார்கள்.

     பெருமாளுக்கு, வக்கீலைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இல்லை. குடித்துவிட்டு போலீசிற்குப் போய், கோர்ட்டில் நிறுத்தப்படும் போதெல்லாம், அவருக்கு வழக்கறிஞர் பரிச்சயங்கள் நிறைய ஏற்பட்டிருந்தன.

     இருவரும் ‘மண்ணடி’யில் இருந்த ஒரு வக்கீல் வீட்டுக்குப் போனார்கள். வக்கீல், பெருமாளைப் பார்த்து, “இன்னுமா... குடியை விடல” என்றார். மல்லிகா, “வணக்கம் சார்” என்றதும், பதிலுக்கு “வணக்கம்” என்றார். அறிமுகங்கள் முடிந்தபிறகு, மல்லிகா, ‘அப்பா’ வீட்டில் தான் வளர்ந்த விவரத்தையும், வாழ்க்கை முறையையும் சொல்லிவிட்டு, பேச்சியம்மாவின் கல்யாணத்தை நிறுத்துவதற்காகவே, இந்த நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகச் சொன்னாள்.

     “அது பாயிண்ட் ஆகாதும்மா” என்றார் வக்கீல்.

     “பாயிண்டா பண்ணிப் பாருங்களேன் சார்.”

     வக்கீல் யோசித்துவிட்டு, சொன்னார்: “ஆல்ரைட். சொக்கலிங்கத்திற்கு ஒரு நோட்டீஸ் விடுவோம். அந்த நோட்டீஸ்ல ஒரு நகலை, பேச்சியம்மாவுக்கு அனுப்பி வைக்கலாம். கல்யாணம் தானாய் நின்னுடும். பேச்சியோட சித்திக்காரி, மூச்சுப் பேச்சில்லாமப் போயிடுவாள்.”

     வக்கீல், மல்லிகாவிடம் வக்காலத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார். குமாஸ்தாவைக் கூப்பிட்டு பாயிண்டுகளைக் கொடுத்தார். அனுபவப்பட்ட குமாஸ்தா. “இந்த வழக்குல நிச்சயம் ஜெயிச்சிடுவோம் சார். எவ்வளவு பெரிய ‘வீக்’ கான வக்கீலாலும் இந்த கேஸ்ல ஜெயிச்சுடலாம்” என்ற போது, அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்புக் கிட்டாத வக்கீலும் ‘வீக்’காகச் சிரித்துக் கொண்டார்.

     அப்போது, “கூப்பிட்டிங்களாமே அப்பா” என்று பழக்கப்பட்ட குரல் ஒன்று கேட்டு, தலை நிமிர்ந்த மல்லிகா, “நீங்களா” என்றாள். சரவணனும் “நீங்களா” என்றான்.

     சரவணனும் மல்லிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போது, பெருமாளும் வக்கீலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

     “காலேஜ்ல... இவங்க... சாரி... நான் படிக்கிற காலேஜ்ல இவங்களும் படித்தாங்க. ஆமாம். எதுக்காக காலேஜ் வரவில்லை? படிப்பை அரைகுறையாவா விடுவது?” என்று சரவணன் இழுத்த போது, மல்லிகா சிறிது நிலை தடுமாறினாள். உதட்டைக் கடித்துக் கொண்டு அவனை சாய்வாகப் பார்த்தாள். பிறகு, “காலேஜ் தான் கண்ணுக்குள்ளேயே நிற்குது” என்றாள். “அவ்வளவு பெரிய கட்டிடத்தை எப்படியம்மா தாங்கிக்கிறே” என்று வக்கீல் ‘விட்’ அடித்த போது, அவளை விடாமல் பார்த்த சரவணன் அவர் சொன்னதைப் புரிந்து கொண்டவன் போல், தலையை ஆட்டினான். அவளுக்கு அது அழகாகத் தோன்றியது.

     பெருமாளும், மல்லிகாவும் எழுந்தார்கள். சரவணன் பஸ் நிலையம் வரை வந்து, அவர்களை வழியனுப்பினான். பெருமாள், அவனிடம் குழந்தை மாதிரி நடந்த விஷயங்களை, ஏற்ற இறக்கத்தோடு சொன்னார்.

     பஸ் புறப்பட்டது. பெருமாள் அவனைப் பார்த்து, “நம்ம வீட்டுக்கு ஒரு தடவ வா தம்பி” என்றார்.

     மல்லிகா, “எங்க வீடு... சின்ன வீடு” என்று சொல்லிச் சிரித்தாள்.

     “எனக்கு வீடு முக்கியமில்ல... வீட்டில் இருக்கிற ஆட்கள் தான் முக்கியம்” என்று சரவணன் விடை பெற்றான்.

     பஸ் இருக்கையில் இருந்தபடி, திரும்பித் திரும்பிப் பார்த்த மல்லிகா, அப்பா தன்னையே கவனிப்பது போல் தெரிந்ததால், லேசாக நாணப்பட்டுக் கொண்டாள்.