உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் 10. காதலின் துன்பம் அன்றிரவு வேலன், சாப்பிடாமல் சற்று முன்னதாகவே படுத்துக்கொண்டான். தனக்கு உடம்பு சுகமில்லையென்று, அவன் தன் தாய்க்குச் சமாதானம் சொல்லிவிட்டான். ஆனால், உண்மையில் அவன் மனதுக்குத்தான் சுகமில்லை. தூக்கம் வராமல் ஒரு பழைய கயிற்றுக் கட்டிலில், அவன் புரண்டு கொண்டேயிருந்தான். எண்ணாத எண்ணங்களெல்லாம் எண்ணினான். எது எவ்வாறு முடியுமென்று அவனுக்குத் தெரியவில்லை. நினைக்க நினைக்கச் சந்தேகமும் அவநம்பிக்கையும் அதிகரித்தன. ஆனால், ஒரு விஷயம் மட்டும் அவனுக்கு நன்றாகப் புலப்பட்டது. தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்சம் சுயமரியாதையைக் காப்பாற்றவேண்டுமானால், அவன் எவ்வேலையையாவது செய்து, தன்னையும் தன் தாய் தந்தையரையும் போக்ஷித்துக் கொள்ள வேண்டுமென்பதுதான் அது. ஆனால், தனக்குச் சுயமரியாதை என்று ஏதாவது இருந்ததா? அந்த அக்கிரமக்காரிகள், ஒருவன் தூங்கும்போது தலையில் கல் போடுவது போலன்றோ செய்துவிட்டார்கள்... அவர்களைச் சும்மா விட்டுவிடுவதா? அவன் இரத்தம் கொதித்தது. தன் மனோ பாவத்தில், தன் அரிவாளால் அவர்கள் கழுத்துக்களைச் சீவுவதாக நினைத்தான். பிறகு தன் ‘அப்பா’வுடையது, அப்புறம் தன் ‘அம்மா’ வுடையது, கடைசியாகத் ‘தன்’னுடையது... - அவன் எண்ணம் நிறைவேறிற்று... அவன் தலையணை வேர்வையால் நனைந்து விட்டது. படுக்கை விட்டு எழுந்து, வேர்வையைத் துடைத்துக் கொண்டான். நடு இரவு இருக்கும். எங்கும் இருட்டாயிருந்தது. அமைதியில்லாமல், அவன் முற்றத்தில் உலாவினான். தெருக் கோடியில் ஒரு நாய் குரைக்கத் தொடங்கிற்று. அது அவன் புண் பட்ட மனத்திற்கு வேதனையைக் கொடுத்தது. பிறகு, சுடுகாட்டுப் பக்கத்திலிருந்து ஒரு நரியின் ஊளை கேட்டது. உடனே மற்றொன்று ஆரம்பித்தது. பிறகு, பின்னும் ஒன்று சேர்ந்து கொண்டது. இரண்டு நிமிஷங்களுக்குள், உலகத்திலுள்ள நரிகளெல்லாம் ஒன்றுகூடி ஊளையிடுவதுபோல் காணப்பட்டது. அது வேலனுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், இப்பொழுது அது சுடுகாட்டுப் பக்கத்திலிருந்து வந்ததால், பற்பல எண்ணங்களை உண்டுபண்ணிற்று. வேலன் படித்தவனல்ல. ஆனால், சென்ற நான்கு ஐந்து வருஷங்களுக்குள் அவனுக்கு நேர்ந்த சம்பவங்களிலிருந்து, அவன் இவ்வாழ்க்கையைக் குறித்து அடிக்கடி சிந்திக்கலானான். நூதன உணர்ச்சிகள் எற்பட்டன. சில, வெகு ஆச்சரியத்தை உண்டு பண்ணித் தன் சக்திகளைத் தானே அறியாததுபோல் ரூபித்தன. மற்றும் சில, அவன் மனத்தைக் குத்திக் கிளறி, அவன் இருதயத்தைச் சித்தரவதை செய்தன. சுடுகாட்டு நினைவு வரவே, அங்கே மண்ணுக்கு இரையானவர்களின் ஞாபகங்களும் வந்தன. ஐயாக் கண்ணுவைப் போலத் தைரியசாலியை அவன் எங்குமே பார்த்ததில்லை. பயமென்பதே அவனுக்குத் தெரியாது. அப்படிப்பட்டவனைக் காலரா, இரண்டு மணிநேரத்தில் அடித்துப் போட்டு விட்டதே... அப்புறம் நாச்சியப்பன் மட்டும் என்ன? அவனுக்கு விசனமென்பதே தெரியாதே. அவன்கூட இருந்தாலே போதுமே; நாளெல்லாம் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கலாமே. நாலு நாள் காய்ச்சலில், இருந்த இடம் தெரியாமல் போனானே... ஓ, இன்னும் எவ்வளவோ பேர்கள்... அவர்களுடைய கதி என்னவாயிற்று? மானிடர் ஓய்வில்லாமல் மனக்கோட்டை கட்டுவதைப் பார்த்துச் சுடுகாடு பரிகாசம் செய்வதுபோல் தோன்றிற்று. ஆயினும், வாழ்க்கையில் என்ன வேடிக்கை... என்ன ஆனந்தம்... தனக்குமட்டும் ஒரு புதையல் அகப்பட்டால், என்ன என்ன செய்யமாட்டான்? ‘அப்பா’வின் கஷ்டமெல்லாம் காற்றாய்ப் பறந்துவிடுமே. கண்ட இடங்களில் புதையல்கள் இருப்பதாகச் சொல்லுகிறார்களே; தனக்கு ஒன்று கிடைக்கக்கூடாதா? அவைகளைப் பேய்கள் காப்பதாயும் பலிகொடுத்தால் விடுவிக்கும் என்றும், அவன் கேள்விப்பட்டிருக்கிறான். தன்னைப் பலிவாங்கிக்கொண்டு, தனக்கு ஒரு பேய் உபகாரம் செய்யக்கூடாதா? ஒரு பேயை எப்படி நாடுவதோ தெரியவில்லையே. இவ்வாறு நினைத்துக்கொண்டே, சரலேன்று தன் மனப்போக்கை அடக்கினான். தனக்குப் பைத்தியம் பிடிக்க ஆரம்பித்துவிட்டதா என்ன? அவன் பெருமூச்சு விட்டான்; தலையைக் கழுத்து வலிக்கக் குலுக்கினான்; மூளையை யதா ஸ்தானத்தில் வைப்பதற்குப் போலும்... என்ன பண்ணியும், அவனுடைய ‘அப்பா அம்மா’வினுடைய கஷ்ட தசை, அவன் மூளையை மேன்மேலும் தாக்கிக்கொண்டே இருந்தது - ஒன்றன்பின் ஒன்றாக. தன் சொந்தத் தகப்பனாகிய அப்பாவுவின் நினைவு வந்தது. அவன் பரதேசத்தில் இருந்தானோ இறந்தானோ, அவனுக்குத் தெரியாது. பினாங்கு, சிங்கப்பூர் சென்றவர்களில் எவ்வளவு பேர் பணத்தோடு திரும்பி வரவில்லை... தன் தகப்பனும் அப்படி வந்திருக்கக்கூடாதா? அப்படி வந்திருந்தால், எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்? தன் ‘அப்பா’, ‘அம்மா’, தகப்பனார், தான் எல்லாரும் ஒன்றுகூடித் தங்களுடைய நிலங்களையெல்லாம் மறுபடியும் கை வசப்படுத்திக்கொண்டு, எவ்வளவு சுகமாக வாழலாம்... அப்பொழுது அவன் வள்ளியை மணப்பதற்கு யார் தடை சொல்லமுடியும்? மறுபடியும் தலையைப் பலமாகக் குலுக்கினான். புத்தி பிசகுவது போல் பட்டது. அவனா வள்ளியை மணப்பது... அந்த மானங் கெட்ட கழுதையையா? தன் கஷ்டத்தைப் பார்த்துப் பரிகசித்து அவமதிக்கும் அந்த நீதியற்ற பேயையா தான் கட்டிக்கொள்வது... ஒருவேளை, அவள்மேல் தப்பு ஒன்றம் இராது; எல்லாம் அவள் தாயின் தூண்டுகோலா யிருக்கலாமென்று சந்தேகம் பிறந்தது. இருந்தால்மட்டும் என்ன? அவள் சிறு குழந்தையா? வயது பதினாறு ஆயிற்றே. அவள் தோழிகளில் சிலர் அப்பொழுதே தாய்மார் ஆயினரே... முடியவே முடியாது. அவளை உதறி எறிய வேண்டியதுதான். நல்லவேளை, இந்தச் சந்தர்ப்பங்களால் அவளுடைய நிஜ ஸ்வபாவம் வெளிவந்தது. நல்லவேளையா? எது நல்லவேளை? தனக்கு நிஜமாகவே புத்தி பிசகிவிட்டதா? அந்தக் கேடுகெட்ட கழுதையின் குணத்தைத் தான் தெரிந்து கொள்வதற்காகவா, தன் அப்பாவும் அம்மாவும் இந்தக் கதிக்கு வரவேண்டும்? என்ன மடத்தனம்... அவளைச் சிக்ஷிக்கத்தான் வேண்டும்; ஆனால் அவசரப்படக்கூடாது. பொறுத்து, நன்றாய் ஆலோசித்துச் செய்யவேண்டிய வேலை அது. அவள் சாகும் வரையில் மறவாதிருக்கும்படியான தண்டனையை அவளுக்கு அளிக்க வேண்டும். அதுவரையில், அவளோடு சிநேகமாயிருப்பது போலவே நடிக்கவேண்டும். சரி, அதெல்லாம் இருக்கட்டும். இப்பொழுது அவன் செய்ய வேண்டிய வேலை என்ன? இனித் தன் குடும்பத்தின் காலக்ஷேபத்திற்கு அவன் சம்பாதிக்காவிட்டால், நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவதே நலமென்று தோன்றிற்று! உடனே, ஐந்து மைல் தூரத்திலுள்ள மஞ்சத்திடல் கிராமத்தில், வாய்க்கால் வெட்டு வேலை நடப்பது ஞாபகத்திற்கு வந்தது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான மனிதர்கள் வேலை செய்துவந்தார்கள். தனக்கும் வேலை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஆரம்பத்தில் நான் கூலி வேலைசெய்வது யாருக்கும் தெரியக்கூடாது. தன் ‘அம்மா’விடம் சொல்லித்தான் தீரவேண்டும். அவள் தடுத்தால், அப்பொழுது அவளால் ‘அப்பா’வுக்கு ஏற்பட்ட அபகாரத்தை எடுத்துக் காட்டவேண்டும். ஆனால், ‘அப்பா’வுக்கு மட்டும் அவன் கூலிவேலை செய்வது தெரியவேகூடாது. அம்மாவைச் சொல்லவேண்டாமென்று எச்சரிக்கை செய்யவேண்டும். மற்றபடி, ‘அப்பா’விடம் வந்து சொல்வார் யாரும் இல்லை. இருந்தாலும், அவன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இம்மாதிரி மனக் குழப்பத்தில் வேலன் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கோழி கூவிற்று. வேலன் மிகவும் அயர்ந் திருந்தான். பொழுது விடிய இன்னும் ஒருமணி நேரம்தான் இருக்கும். மறுபடியும் படுத்துக்கொள்ளலாமா வேண்டாமா வென்று சஞ்சலப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது, படபட வென்று மழைத் துளிகள் விழுந்தன. உடனே அவன், தாழ்வாரத்தில் சற்று வெளிப்பக்கமாயிருந்த கட்டிலை, நனையாதபடி சுவரோரமாய்த் தள்ளி, அதன்மேல் உட்கார்ந்தான். சில நிமிஷங்களுக்கெல்லாம் மழை நின்றது. பிறகு, சுகமான குளிர்ந்த காற்று அவனைத் தூங்கச் செய்வதுபோல் வீசிற்று. வேலன் படுத்துக் கொண்டான்; மறு நிமிஷத்தில் உறங்கிவிட்டான். விடிந்து வெகு நேரமாய்விட்டது. மணி எட்டிருக்கும். இன்னும் வேலன் தூங்கிக் கொண்டேயிருந்தான். தெருவில் தயிர்க்காரி கூவுவதும் தன் தாய் வீட்டில் நடமாடுவதும், அவனுக்கு லேசாக, ஏதோ தூக்கத்தில் கிள்ளினாற்போல் இருந்தன. ‘திடும்’ என்று ஒரு பெரிய செப்புப் பாத்திரத்தைக் கீழேபோட்டு உடைப்பது போல ஓர் உரத்த சத்தம் கேட்காமல் இருந்தால், அவன் இன்னும் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பான். ஆனால், இந்த அதிர்ச்சியைக் கேட்டு அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்து, இடுப்பைவிட்டு நழுவும் வேஷ்டியை ஒருவாறு சரிப்படுத்திக்கொண்டு, விழித்துப்பார்த்தான். தனக்கு முன் ஏழு எட்டடி தூரத்தில், வள்ளி குப்புற விழுந்து கிடந்தாள். அவள் பக்கத்தில் சாயந்து கிடந்த ஒரு பித்தளைக் குடத்திலிருந்து, அரிசி சிந்தினவாறு இருந்தது. உடனே, வேலனுக்கு முந்தின நாள் சாயங்காலத்துச் சம்பவங்கள் அனைத்தும் மனத்தில் மின்னல் போல் பறந்தன. விஷயத்தைக் கிரஹித்துக் கொண்டான். விதி, வள்ளியின் அயோக்கியத்தனத்தை ரூபிப்பதுபோல இருந்தது. அவனுக்கு ஆத்திரம் கிளம்பிற்று. அங்கேயே அவளை நையப் புடைக்கலாமென்று பார்த்தான். அவள் எழுந்திருப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள். நல்ல அடி விழுந்திருக்கும்போல் தோன்றிற்று. கோபத்தைக் கஷ்டத்துடன் அடக்கிக்கொண்டு, அவளிடம் சென்று, “அடி பட்டதா என்ன?” என்று துடுக்குடனும் அடங்கா வெறுப்புடனும் கேட்டான். அவன் குரல் தயா தாக்ஷண்யமற்று இருந்தது. வள்ளிக்கு உடம்பெல்லாம் பதறிக் கொண்டிருந்தது. வாய்திறவாமலும், இப்படியோ அப்படியோ வென்றும் தெரியாமலும் தலையை ஆட்டிவிட்டுக் கை நடுநடுங்கச் சிந்தின அரிசியை வாரிக் குடத்தில் போட்டாள். அப்பொழுது வேலன், “உன்னோட சில சங்கதி பேசணும். ஊட்டுக்குப் போறப்ப, மாட்டுக் கொட்டாயிக்கு வந்து போ,” என்று அதட்டிச் சொன்னான். அதற்கும் வள்ளி தலையை அசைத்தாள். அவள் வலியால் உபாதைப்படுவது நன்கு புலப்பட்டது. கண்களில் கண்ணீர் தெரிந்தது. உதடுகள் சுவாதீனமற்றுத் துடித்துக்கொண்டிருந்தன. இரண்டு நிமிஷங்களுக்கெல்லாம், வள்ளி வெறுங்கையுடன் திரும்பி வந்தாள். அவள் பதற்றம் சற்றுத் தணிந்திருந்தது. ஆனால், தண்ணீர் விட்டுக் கண்களை நன்றாய்த் துடைத்திருக்க வேண்டும்; அதில் சந்தேமில்லை. “அத்தே ஊட்டுலே இல்லே. வாய்க்காங்கரைக்குப் போயிருக்காப்போலே இருக்குது. நீ என்னமோ பேசணுமின்னியே,” என்றாள் வள்ளி. வேலன் அவளுக்குப் பதில் கூறாமல், தெருக்கதவைத் தாழ்ப் பாளிட்டுத் தன்னுடன் வரும்படி ஜாடை காட்டி, புழங்காதிருந்த ஓர் அறைக்குச் சென்றான். வெகுகாலம் உபயோமற்றுக் கிடந்ததால், அதன் கதவைத் திறப்பது கூடக் கஷ்டமாயிருந்தது. இது ஒரு காலத்தில் தானியம் சேகரிக்கும் இடமாயிருந்தது. ஆனால் இப்பொழுது, குப்பையும் பூஞ்சானமுமே நிறைந்திருந்தன. இருவரும் அறைக்குள் புகுந்தனர். இனி அவர்கள் பேசுவது ஒருவருக்கும் கேட்காதென்ற தைரியத்துடன், வேலன் வினவினான்: “இந்த வேலை எத்தினி நாளாச் செஞ்சுக்கிட்டிருக்கே?” “எந்த வேலை?” என்றாள் வள்ளி, தலையைச் சாய்த்துக் கொண்டு அலட்சியமாய். “இதுதான் - எங்களுக்குப் படியளக்கிற வேல. இல்லாட்டி, எங்களுக்கு எங்க கை கீளே உளுந்து போச்சின்னிட்டு எப்படித் தெரியும்? அப்பொத்தானே, உங்க கிட்டக் கொடுத்துவாங்க முடியாதூன்னு தெரிஞ்சுப்போம்... இப்போ, என் கண்ணாலத்துக்குதான் நான் அளுதுக்கிட்டு இருக்கேன்... இல்லே? ஒன்னை விட்டா, இந்த ஒலகத்துலே பொண்ணே அம்புடாதா?” என்று வேலன் இழிவாகச் சொன்னான். “அப்படி யாரு சொன்னாங்க?” என்று வள்ளி எரிந்து விழுந்தாள். “ஒன் மூஞ்சியும் மோரையும்... எங்கம்மா, என்னை ஆத்துலே தள்ளிவிட்டாலும் தள்ளுவா, ஒனக்குக் கட்டிக்கொடுக்க மாட் டாளே, அது தெரியுமா ஒனக்கு?” என்றாள். “நல்லாத் தெரியும். அப்படி இருக்கப்போ, இப்படி எங்க மானத்தைக் கெடுப்பானேன்? ஒன்னை மல்லனுக்குக் கட்டிக் கொடுத்தா, நாங்க சண்டைக்கா வரப்போறோம்? எங்கப்பா சாவக் கிடக்கிறாரு; எங்கம்மா ஒரு புத்திகெட்டவ. நானோ, ஒங்க கண்ணாலத்துக்குப் பக்கம் எட்டிக்கூடப் பாக்கமாட்டேன். அப்படியிருக்கிறபோது, நீங்க எங்க உயிரை எடுப்பானேன்? நாங்களும் வாழ்ந்தவங்கதான். இன்னிக்கி இந்தக் கதிக்கி வந்திட்டா, என்னா வேணும்னா பண்ணலாமா? நீகூடச் சேந்துகிட்டயே... நான் உனக்கு என்ன தீங்கு பண்ணினேன்?” என்று வேலன் மனம் நொந்து சொன்னான். அவன் கோபம் துக்கமாக மாறிற்று. வள்ளி மௌனமாய்ச் சற்றுநேரம் நின்றாள். அவளால் பேச முடியவில்லை. நெஞ்சில் ஏதோ குறுக்கிட்டதுபோல் இருந்தது. பிறகு மெள்ள, “இதெல்லாம் உனக்கு யார் சொன்னாங்க?” என்று விசனத்துடன் கேட்டாள். “மல்லன் வாயாலேயே கேட்டேன். கேக்கும்படி வாச்சுது. நடந்த சங்கதியையும் சொல்லிடறேன். நேத்துச் சாயங்காலம், படுவைக் காட்டுக்குப் பூளப்பூக் கொண்டுவரலாமின்னு போனேன். அங்கே ஒரு பொதருகிட்டே மல்லன், முனியன், மாரி இவுங்க மூணு பேரும் குடிச்சுக்கிட்டும் பேசிக்கிட்டும் இருந்தது தெரிஞ்சிச்சு. அவுங்க என்னைப் பாக்கல்லே. ஆனால், அவங்க பேச்சைக் கேக்கும்போது...” திடீரென்று வேலனுக்குக் கோபம் பொங்கிப் பெருகிற்று: “எங்கப்பா, அம்மா இல்லாட்டி, அந்த முளிக்கண்ணுப் பயலே, அங்கேயே களுத்தை ஒடிச்சுப் போட்டிருப்பேன்... ஒங்கம்மா, அந்தக் குதுரு இருக்குதே - அவன் அத்தைக்காரி - அவள், நீ எல்லாரும் சேந்து ஒபாயம் பண்ணினீங்களாமே, எங்க கை கீளே உளுந்து போச்சீன்னு எடுத்துக் காட்டுறதுக்கு. திருட்டுக் களுதே... ஒண்ணும் தெரியாதுபோலப் பாசாங்கா பண்றே? இதோ பாரு... போனது போச்சு. நீ அவனைக் கட்டிக்கிட்டா எனக்கென்ன? இந்த மட்டுலே தப்பிச்சுக்கிட்டேனேன்னு நான் கடவுளைக் கும்பிடறேன் - ஆனா ஒண்ணு, இனிமே இந்த ஊட்டுலே காலை வச்சியொ, உன் கருமாதிக்கி எலும்புகூட ஆப்புடாது... மறந்திடாதே...” என்று வேலன் கர்ஜித்தான். வள்ளியினால் அழுகையை அடக்க முடியவில்லை. கைகளால் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். “சரி, இந்த நாடவம் இங்கே வாணாம். உம் புருசன்கிட்டே வச்சுக்கோ,” என்றான் வேலன். “சீ! வாயை மூடு. யாரு என் புருசன்?” என்று தேம்பியவாறு அவன்மேல் சீறிவிழுந்தாள். அவள் அடுத்த நிமிஷம் கீழே சாய்ந்து விம்மி விம்மி அழுதாள். “நான் இனிமே வரவேமாட்டேன். நீ இப்போ செத்தே அந்தட்டம் போ. செத்தே அந்தட்டம் போயேன்,” என்று தலையில் அடித்துக்கொண்டாள். வேலன் அசையாமல் அவளை உற்றுப் பார்த்துக்கொண்டே நின்றான். அவள் எழுந்திருக்க முயன்றாள்; ஆனால் முடிய வில்லை. முன்னமே அடிபட்ட கணுக்கால், பூட்டுப் பிசகிவிட்டது போல் இருந்தது. “நான் ஏந்திருக்கமாட்டிலேன்னிட்டுத் தெரியில்லையா? அந் தட்டம் போயேன். ஆராவது பாத்தா என்ன நெனச்சுப்பாங்க...” என்று அவள் கெஞ்சினாள். “சும்மா ஒளறாதே. மொதல்லே உன்னைத் தாவாரத்துலே கொண்டுபோய் வெச்சிடுறேன். அப்பாலே உன் கால் சங்கதியைப் பாக்கறேன்.” “எங்கால் சங்கதியை நீ பாக்கத்தேவில்லே. தாவாரத்துலே உட்டாப் போதும்,” என்றாள் வள்ளி. வேலன், அவள் தோள்களைப் பிடித்து மெதுவாகத் தூக்கினான். அவளுடைய வலது கணுக்கால் பூட்டுப் பிசகிப் போனதைக் கண்டுகொண்டான். அவளால் வலி சகிக்க முடியவில்லை என்பதும் நன்றாகத் தெரிந்தது. அவள், கண்களை மூடிக்கொண்டு பல்லைக் கடித்துக்கொண்டு, முகத்தை ஆயிரம் கோணலாகச் சுளித்துக்கொண்டாள். வேலன், அவளை நடத்திச் செல்லமுடியாமல் சுமந்துகொண்டு போய்த் தாழ்வாரத்தில் உட்கார வைத்தான். பிறகு அவன், அவளுடைய கணுக்காலைப் பரிசோதிக்க முயன்றான். ஆனால், அவள் அதைத் தடுத்தாள், அதே சமயத்தில், வேலனுடைய தாய் புழைக்கடைக் கதவைத் தடார் என்று மூடிக் கொண்டு யார்மேலோ குறை கூறிக்கொண்டே உள்ளே வந்தாள். அழுத முகத்தோடு வள்ளி காலைப் பிடித்துக்கொண்டிருப்பதையும் அவள் பக்கத்தில் வேலன் நிற்பதையும் கண்டாள். “அம்மா, வள்ளிக்குக் காலிலே நல்ல அடி பட்டிருக்குது. வளிக்கி விழுந்துட்டா. விளுந்த சத்தத்திலே நான்கூட எந்திருச் சிட்டேன்,” என்றான் வேலன். “போனாபோவுது, அப்பொவாவது எந்திருச்சியே, அம்மாடீ... நல்ல அடிபட்டிருக்குதுடீயம்மா, ஐயையோ... எலும்பு கிலும்பு ஒடிஞ்சு போச்சா? வேலு, கொஞ்சம் வெளக்கெண்ணெய் கொண்டா.. ஓடு, ஒடு,” என்று சொல்லிக்கொண்டே, வள்ளியிள் கணுக்காலை மெதுவாகத் தடவிப் பார்த்தாள். வள்ளி, கூக்குரலிட்டு அவளைத் தொடவிடவில்லை. “அடி எங் கண்ணே... நான் என்னாடி பண்றேன்? தொட்டுப் பாக்காட்டி, எப்படியம்மா தெரியும்? என் தங்கம்... இப்பொத்தான் அந்த பாவி முண்டை உன்னைத் திட்டிக்கிட்டு இருந்தா. அப்பவே கீளே விளுந்து காலே ஒடிச்சுக்கிட்டேயே,” என்று அலமேலு ஆரம்பித்தாள். “யாரைச் சொல்றீங்க, அத்தே?” என்று வள்ளி, வலியோடு வலியாய்க் கேட்டாள். “யாரைச் சொல்லுவேன் - நம் ஊருக்கெல்லாந்தான் இருக்குதே ஒரு பேய் - அந்த மீனாச்சிக் களுதைதான். அவ மருமகன் மல்லனை நீ கட்டிக்கக் கூடாதின்னிட்டு, ஒனக்குச் சொல்லிக் கொடுத்திட்டேனாம். எப்பனாச்சும் அந்த பேச்சு நான் எடுத்தேனா? தெரியாதவங்களுக்குச் சொல்லியல்ல குடுக்குறா. கிளியாட்டம் வளத்து உன்னை அந்தக் கொரங்குத்துத்தானா தள்ளனும்?” வேலன், கையில் விளக்கெண்ணெய்ச் சீசாவோடு வரும் போதே, “உனக்கென்ன சொன்னாலும் தெரியாது, அம்மா. ஊரு வம்புலேயெல்லாம் நீ என்னாத்துக்குத் தலையிட்டுக்கிறே? போனாப் போவுது. அவ காலைப் பாரு,” என்று கடுகடுப்பாய்ச் சொன்னான். “பாக்கறேண்டாப்பா பாக்கறேன். அதுமட்டும் என் கொளந் தையல்லவா? அது சொகப்படணுமின்னு எனக்கு இருக்காதா?” என்று சொல்லிக்கொண்டே, அலமேலு விளககெண்ணெயை வள்ளியின் காலில் தடவினாள். வள்ளி வாயைத் திறக்கவில்லை. அவள் மெய்ம்மறந்திருந்தாள். “கண்டவங்க கிட்டேயெல்லாம் நீ ஒண்ணும் சொல்லக்கூடாதம்மா. தங்கம்மாதான் கோள் சொன்னாப்பலே இருக்குது. ‘நான் தூக்குப்போட்டாலும் போட்டுப்பேன், மல்லனைக் கட்டிக்க மாட் டேன்’னிட்டு, நீ அவகிட்ட சொன்னாயா?” என்று கேட்டாள் அலமேலு. வள்ளி பதில் கூறாமல், தன் முகத்தை வேலனுக்குக் காணாதபடி, வெகு கஷ்டத்துடன் சாய்த்துக்கொண்டாள். வேலன் மறுபடியும் தன் தாயைக் கோபித்துக் கொண்டான். “இந்தப் பேச்செல்லாம் இப்பொத்தானா? உனக்கு எப்பொத் தான் தெரியுமோ? அவ காலைப் பாரு,” என்று அவன் சிடுசிடுத் துச் சொன்னான். அலமேலு, வள்ளி காலைத் தொட்டுத் தடவினாள். வள்ளி வலி பொறுக்கமுடியாமல் கூவினாள். “சட்டுனு திருப்பினா, அது கூடிக்கும்,” என்றாள் அலமேலு, அசட்டு மூஞ்சியோடு. “பின்னே திருப்பேன்,” என்றான் வேலன். “மொள்ளத் தொடறப்பவே, இந்த கத்துக் கத்தறாளே...” வேலன், மௌனமாய்ச் சற்று நகரும்படி தன் தாய்க்கு ஜாடை காட்டினான். வள்ளியின் முகம் அப்புறமாய்த் திரும்பியிருந்தது. பிறகு வேலன் ஒரு க்ஷணத்தில், காலைத் தொட்டுப் பார்த்து, வளைந்த பாதத்தை நிமிர்த்திப் பிசகைச் சரிப்படுத்தினான். “ஐயோ! பாவி என் உசிரு போச்சே!” என்று வள்ளி கதறினாள். “ஒண்ணுமில்லேம்மா, எல்லாம் சரியாப் போச்சு. நல்ல வேலை செஞ்சே, வேலா - இனிமே கொஞ்சம் ஒத்தடம் குடுத்தா, வலி, வீக்கம் எல்லாம் போயிடும் - பொறு, ஒன் கூச்சல் ஒங்க மாமாருக்குக் கூடக் கேட்டுடிச்சே. வேலு, நீ இங்கேயே இரு - அவளுக்கு எப்படி வேக்குது பாரு! கொஞ்சம் விசுறேன். நான் அப்பாருக்கு என்ன வேணுமோ கண்டுக்கிட்டு வாரேன்,” என்று சொல்லிக்கொண்டு, வெங்கடாசலத்திடம் சென்றாள். இறை வானத்தில் செருகியிருந்த ஒரு பனையோலை விசிறியை எடுத்து வேலன் விசிற ஆரம்பித்தான். “நீ விசிறத் தேவில்லை. என்னை விட்டு அப்பாலே போனாப் போதும். அத்தே வந்து எல்லாம் பாத்துப்பாங்க,” என்றாள் வள்ளி. மௌனமாய் வேலன் அவளை இரண்டு நிமிஷ நேரம் உற்றுப் பார்த்தான். அவளும் சளைக்கவில்லை. இமைகொட்டாமல் அவன் உள்ளத்தைப் பரிசோதிப்பதுபோல் அவனை விழித்துப் பார்த்தாள். பிறகு வேலன், “நீ நெனைக்கறாப்போல நான் அவ்வளவு கெட்டவன் இல்லே,” என்று மெதுவாகச் சொன்னான். “நீ நல்லவனாயிருந்தா என்ன, கெட்டவனா இருந்தா என்ன - எனக்கு என்ன வந்திடிச்சு?” என்றாள் வள்ளி. “நீ அப்படி இருக்கணுமின்னுதான் நானும் சாமியை வேண்டிக் கொள்கிறேன். நான் ஒன்னை ஏதோ பேசிட்டேன்னு கோவிச்சுக் காதே. நீ கூடச் சேர்ந்துகிட்டு, எங்களை அவுமானபடுத்தறை யாக்குமின்னு நெனைச்சிக்கிட்டேன். ஒன் மேலே எனக்கு என்ன பகை? மெய்யாலும் சொல்றேன்; உன்னைத் திட்டணுமின்னே எனக்கு இல்லை. ஆனால், மல்லன் சொன்னதைக் கேட்டப்போ இருந்து, என் ஒடம்பு எரிஞ்சுபோவுது. என்ன அக்குருமம்... என்ன அநியாயம்... அவன் கண்ணாலத்தை நான் தடுக்கவா போறேன்? ஒங்க ரெண்டு பேருக்கும் கண்ணலமாவப் போவதுதான், ஊரெல்லாம் தெரியுமே. நான் சொன்னா நீ நம்பமாட்டே; மாருலே கையை வச்சுச் சொல்றேன்; நீ சொகமா இருந்தா அதே எனக்குப் போதும். அப்படியிருக்கச்சொல்ல, எங்களை இமிசை பண்ணலாமா? இப்பக்கூட எனக்குத் தெரியல்லையே, நீ ஏன் ஒங்க ஊட்டுலிருந்து சாமான் கொண்டாறே? இது ஒங்க அம்மாளுக்குத் தெரியுமா?” “ஒரு போது தெரியும்; இன்னொரு போது தெரியாது. ஆனா, இன்னிக்கித் தெரிஞ்சுதான் கொண்டாந்தேன்.” “ஐயோ வள்ளி, நீ செய்யற வேலையைப் பாத்தா எனக்கு வெறி பிடிச்சுடும்போல இருக்குதே. ஏன் இப்படியெல்லாம் செய்றே?” “ஏனா?” “ஏன் சொல்லேன்?” என்று வேலன் கெஞ்சினான். “நான்...நான்... அத்தை தவிக்கிறது எனக்குத் தெரியும். நான் என்னமோ நெனைச்சேன்...” பிறகு அவளால் பேச முடிய வில்லை. கண்ணீர் தாரைத் தாரையாய்ப் பெருகியது. வேலன், பிரமித்துச் சிலைபோல் அவளைப் பார்த்தவண்ணம் நின்றான். அப் பார்வை, தன் பிழையை மன்னிக்கும்படி, கேவலம் சொற்களைவிட நூறுமடங்கு அதிகமாகக் கெஞ்சுவதுபோல் தோன்றிற்று. இத்தருணத்தில் அலமேலு, ஆவிபறக்கும் சுடுநீருடன் ஒற்றடம் கொடுக்க வந்தாள். உடனே, அவர்களுடைய சம்பாஷணையை நிறுத்திக்கொண்டார்கள். அரைமணி ஒற்றடம் கொடுத்தற்கப்பால், வள்ளிக்குச் சிறிது வலி குறைந்தது. ஆனால், அந்த நிலைமையில் அவள் வீட்டிக்குப் போக முடியாததால், தொப்பையின் வண்டியை உபயோகப்படுத்திக் கொள்ளலாமென்று அவர்கள் ஏற்பாடு செய்துகொண்டார்கள். வேலனுக்கு வள்ளியிடம் தனிமையாக அநேக விஷயங்களைப் பற்றிப் பேச ஆவலாயிருந்தது. ஆதலால், வள்ளியின் தாய் குடிப்பதற்கு ஆற்று ஜலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளென்றும், உடனே தன் தாய் ஆற்றுக்குப்போய் ஒரு குடம் நீரை வள்ளி வீட் டிற்குக் கொண்டுபோக வேண்டுமென்றும் சொல்லி, வேலன் தன் அம்மாவைத் துரத்திவிட்டான். |