அத்தியாயம் 11. ஓர் ஒப்பந்தம்

     தன் தாய் வீட்டை விட்டு வெளியே சென்றவுடனே, வேலன் தெருக் கதவைத் தாழ்ப்பாளிட்டு, வள்ளியிடம் வந்தான். வள்ளி சுவர்மேல் சௌகரியமாகச் சாய்ந்துகொண்டு உட்கார்ந்திருந்தாள். கொஞ்ச நேரம், வேலன் அவளை இமை கொட்டாமல் பார்த்தான். பிறகு ஒரு பெருமூச்சுவிட்டு, அவள் சமீபத்தில் உட்கார்ந்து, அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு மன்னிப்புக்கேட்டுக் கொண்டான். வள்ளிக்கு மிகவும் சங்கோசமாய்விட்டது. அவர்கள் இருவரும் நெருங்கிப் பேசி வெகுகாலமாயிற்று. வேலன் தன் கைகளைத் தொட்டதும், அவள் அறியாத ஒரு பேரானந்த உணர்ச்சி அவளுடைய தேகமெல்லாம் மின்சார சக்திபோல் தாக்கிற்று. மன்னிப்பதற்கு ஒன்றுமில்லையென்று சொல்ல அவள் யத்தனித்தாள். ஆனால் வாய் எழாமல், புரிந்தும் புரியாமலும் ஏதோ முணுமுணுத்தாள். வேலனுக்கோ, அவள் கையைத் தொட்ட மாத்திரத்தில், தான் எங்கோ ஆகாசத்தில் பறப்பதுபோலத் தோன்றிற்று. தன் உயிரெல்லாம் வள்ளிமேல் ஆதரவுபட்டிருப்பதை அவன் இதுவரையிலும் உணரவில்லை. திடீரென்று, கட்டிலிருந்து திமிறிக் கொள்வதுபோல எழுந்து, மௌனமாய் உலாவினான். அவன் முகத்தில் துயரம் குடிகொண்டுவிட்டது. மிகக் கவலையுடன் வள்ளி, அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந் தாள். அவன் மனச்சங்கடத்தை அவள் அறிந்தாள். சரேலென்று வேலன் அவள்முன் நின்றான்.

     “அந்தப் பயல் பேச்சைக் கேட்டுவிட்டு நான் குதிச்சேன். நீ ஒண்ணும் மனசிலே வச்சுக்காதே. நீ எப்பவும்போலத்தான் இருக்கிறேங்கறது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குது, தெரியுமா? இன்னும் ஒரே ஒரு சங்கதி. வள்ளி என் உயிரெல்லாம் ஒம்மேலே இருக்குதூன்னு ஒனக்குத் தெரியும் - என் பேச்சை செத்தே கேப் பையா?”

     வள்ளி குறிப்பாகத் தலையை ஆட்டினாள்.

     “நீ மல்லனைக் கட்டிக்கோ.”

     திடீரென்று, யாரோ முதுகில் ஈட்டியாற் குத்தினதுபோல் வள்ளிக்குத் தூக்கிவாரிப்போட்டது. அந்தத் தருணம், அவள் முகக் குறியை இன்னதென்று விவரிக்கவே முடியாது. கோபம் ஒரு புறம், பயம் ஒருபுறம், துணையற்ற நிலை மற்றொரு புறம், கலந்து புரண்டன.

     “என்ன சொன்னேஙு நான் ஆருன்னு நெனைச்சே? நீ என்னை வெலக்கி வாங்கிட்டயா, அதிகாரம் பண்ண?” என்று வள்ளி சீறினாள்.

     “வள்ளி! பொறுத்துக்கோ. நான் வெலக்கி வாங்கலை; நீதான் என்னை வாங்கிட்ட. நீ என்னை தெரிஞ்சுக்கல்லையே. நீ கஷ்டப்படக் கூடாதின்னிட்டுத்தான்... ஒன்மேலே எனக்குப் பிரியமில்லையா? ஒனக்காவ உயிரை வேணுமின்னாலும் குடுப்பேனே... அது கடவுளுக்கல்ல தெரியும்,” என்று வேலன் படபடப்புடன் சொன்னான்.

     “என்ன பிரியம்! - அந்தச் சோனிப்பயலுக்கு என்னைத் தள்ளி வுடறதா? இதோ பாரு, ஒன்னையே கட்டிக்கணுமின்னு நான் அளறேன்னு நீ நெனச்சுக்காதே! பொம்பளையா பொறந்தா, யாரை யாச்சும் கட்டிக்கிணுமின்னு அடிச்சுக்கறாங்களே, அதுக்காவ - போனாப்போவுது. நீ இனிமே எனக்குப் புத்திசொல்லத் தேவில்லை. எனக்கு என்ன பண்ணிக்கணுமோ தெரியும்.”

     “என்ன பண்ணப் போறே?” என்று வேலன் கேட்டான்.

     வள்ளிக்கு அடங்காத கோபம் வந்தது. “நீ யாரு கேக்கறதுக்கு? நீ இவ்வளவு பயங்காளின்னு இப்பொத்தானே தெரிஞ்சுச்சு. மல்லனும் அவன் சிநேகிதக்காரங்களுமாச் சேந்து ஒன்னைப் பொடச் சுடுவாங்கோன்னு பயமா? - ஐயோ ஆம்பளையே!” என்று அவள் ஏளனமாகச் சொன்னாள்.

     வேலனுக்குச் சுருக்கென்று பட்டது. “ஒளறாதே! மல்லனைப் போல் ஆயிரம் பேரைப் பார்த்துக்க எனக்குத் தெறமை உண்டு. சமயம் வந்தா, நான் எப்படியிருப்பேன்னு உனக்கே தெரியும்.”

     “அப்போ, ஏன் பயப்படறே? நான் ஒரு களுத்தறுப்பூன்னுட்டு நெனைக்கறயா?”

     வேலன் தன் உதட்டைக் கடித்தான். அவள் சொன்னதில் கொஞ்சம் உண்மை இருந்தது; தன் பயத்தை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அவன் தன் கஷ்ட சுகங்களுக்காகப் பயப்படவில்லை; எல்லாம் அவளை உத்தேசித்தே. வள்ளியினால் அதைக் கண்டுகொள்ள முடியவில்லை. அவளுக்கு விளங்கும்படி சொல்வது அவனுடைய கடமை. ஆகையால், கோபத்தை அடக்கிக்கொண்டு மறுபடியும் சொல்லத் தொடங்கினான். “வள்ளி, நீ விசயத்தை அறிஞ்சுக்க மாட்டேங்கறயே. தெரியுமின்னா, மாரைப் பொளந்து காட்டுவேனே! இதைப்பத்தி நான் ராவும் பகலுமா யோசிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். எனக்கு எந்த வளி போறதுன்னு தெரியல்லையே. நான் சொல்றதைச் செத்தே காது குடுத்துக் கேளு. எங்கப்பாரு, நாலு அஞ்சு மாசத்துக்குமேலே பொளைக்கமாட்டாரு. அதுவரையிலும், அவருக்கு மனசு நோவாதே என் உயிரைக் குடுத்துக் காப்பாத்தணும். எங்கம்மா ஏதோ ரகசியமாய் பணம் சேத்து வச்சிருந் தாங்கோன்னிட்டு எண்ணிக்கிட்டு இருந்தேன். அந்தக் குட்டும் வெளிப்பட்டுப் போச்சு. இப்போ நான் மண்வெட்டியாவது சம்பாதிக்கணும். அவர் செத்த பொறவு, எங்கம்மாவை அவுங்க அண்ணாரு ஊட் டுக்கு நல்ல பேச்சுச் சொல்லி அனுப்பிச்சுடணும். அப்புறம் அந்தம்மாளுக்குச் சோத்துக்கும் துணிக்கும் கொறவில்லை. அதுக் கப்பாலே துணியை ஒதறிக்கிட்டு இந்தப் பாவிப்பய, ஊரைவிட்டுக் கண்காணாத சீமை ஓடிடறேன். என் வவுறு என்னமா எரியுதோ, உனக்கென்ன தெரியும். இவுங்கதான் தாய் தோப்பன்னு நம்பும்படி அப்படி வளத்தாங்களே... இப்போ அவுங்க தவிக்கும் போது, நான் ஒண்ணும் செய்யமாட்டலயே... நான் இருந்தா என்ன, செத்தா என்ன? ஆனா ஒண்ணு, நானா அவுங்களுக்கு ஒரு துன்பத்தையும் கொண்ணாந்துவிடல்லே. இப்போ ஒன் சங்கதியிலே, ஒன் துன்பத்துக்கெல்லாம் காரணம் நான்தான். சொகமாக் காசு பணத்தோடே வாழ்ந்துக்கிட்டிருக்கிறவளைக் கண்காணாத சீமைக்கு இளுத்துக்கிட்டுப் போயி, தேயிலைத் தோட்டத்திலியோ கருப்பந் தோட்டத்திலேயோ சாவ அடிச்சா, அந்தப் பாவம் ஆருக்கு? அங்கே போன பொறவு, ஐயான்னா முடியுமா, அப்பான்னா முடியுமா? எங்கப்பாருக்குச் செய்யாத கொறை ஒண்ணு போதாதா எனக்கு? ஒன்னையும் கூடவா கொல்லணும்! ஐயோ! வள்ளி! நீ யோசிக்கமாட்டேங்கிறயே! நான் ஒன்னைக் கெஞ்சிக் கேக்கிறேன்; எம் பேச்சைக்கேளு,” என்று வேலன் வெகு உருக்கத்துடன் கேட்டுக்கொண்டான்.

     வள்ளி, சற்றுநேரம் வாய்திறவாமல் உட்கார்ந்திருந்தாள். அவள் மனம் விசனத்தில் மூழ்கியிருந்தது. “சாமி ஒரு வளிவுட மாட்டாரா?” என்று எங்கோ கவனமாகச் சொன்னாள்.

     அவ்வார்த்தை வேலனைச் சவுக்கால் அடிப்பதுபோல் இருந்தது: “சாமியாவது பூதமாவது! சாமி ஒண்ணு இருக்குதா? இருந்தா, எங்கப்பாரு இப்படித் தவிப்பாரா? அவரு ஆருக்கு என்ன தீங்கு பண்ணினாரு? எல்லாருக்கும் ஒவகாரந்தானே செஞ்சாரு? ஒரு சாமி இருந்தா, இவ்வளவு அக்குருமம் நடக்கவுடுமா? அறுப்புக்கு மொதநா, பெருமாளையும் சின்னப்பனையும் சண்டைபோட உட்டுருக்குமா? தோட்டக் காடெல்லாம் தீயிலே எரிஞ்சிருக்குமா, நாங்கதான் இந்தக் கதிக்கு வந்திருப்பமா? சாமியேது, பூதமேது! நான் நம்பல்லே.”

     “அதென்னா பேச்சு! நம்பத்தான் வேணும். பாட்டி பெரியாயியும் அத்தெயும் சொல்றாங்களே. அவுங்களுக்குத் தெரியாதா? நாம் பொம்மையாட்டம் பாத்தமே, அதுலே அந்த அரிச்சந்திர ராசா எவ்வளவு கஷ்ப்பட்டாரு! அந்த ராசாத்தி பட்ட பாட்டைப் பாத்தா, நான் அளுது அளுது எம் முந்தானியெல்லாம் நனைஞ்சுபோச்சே. கடசியா, சாமி அவங்களுக்கு நல்ல வளி உடலையா?”

     “ஆமாம், அதெல்லாம் வெறுங் கதே. நான் கேக்றதுக்குப் பதில் சொல்லு. ஒங்கப்பா அம்மாவை உட்டுட்டு, கண்டியோ பினாங்கோ, எங்கயோ கண்காணாத சீமையிலே என்னோட கூலி வேலை செஞ்சு பொளைக்க நீ தயாராயிருக்கிறயா?” என்று வேலன் கேட்டான்.

     “ராமரு காட்டுக்குப் போறப்போ, சீதையும் கூடப் போவலியா?” என்றாள் வள்ளி.

     “ஐயோ வள்ளி! ஒனக்கு ஒண்ணும் புத்தி சரியா இல்லையே. போனாப்பாலே திரும்பிவர முடியுமா? அங்கேயே தானே சாவணும்! அப்படி சாவடிக்கிறதுக்கு ஒன்னை இங்கேயே கொன்னிடலாமே. நான் ஒங்கிட்டச் சொல்லாத ஓடிட்டா என்ன பண்ணுவே?”

     வள்ளிக்கு ஒரு நிமிஷம் சோகத்தில் ஆழ்ந்திருந்தாள். பிறகு மெள்ளச் சொன்னாள்:

     “காவேரியம்மா எங்கே போயிட்டா? அவகிட்டே எனக்குத் தானா எடம் இல்லாத போச்சு?”

     வேலன் அவளை ஏற இறங்க பார்த்தான். அவள் சொன்னபடி நிறைவேற்றுவாளென்று நிச்சயித்துக் கொண்டான். பிறகு, அவளுடைய இரு கைகளைப் பிடித்துக் கொண்டு, அவன் மறுபடியும் கேட்டான்:

     “செத்தாலும் பொளச்சாலும் ஒண்ணாத்தான்னு சொல்லு?”

     வள்ளி பதில் கூறாமல், தன் தலையை அவன் கைகளில் மறைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்திருக்க முடியாதென்று அவர்கள் நன்கு உணர்ந்தார்கள். எக்காலத்திலிருந்து, அவர்களுக்குப் பரஸ்பரம் அவ்வளவு பிரியம் ஏற்பட்டதென்பது அவர்களுக்கே தெரியாது. அது வருஷக் கணக்காக வளர்ந்த அன்பு. அது சிறு பிராயத்திலிருந்து ஆரம்பித்து, நாளடைவில் விருத்தியாகி, இப்பொழுது அவர்கள் அறியாமலே பரிபக்குவம் அடைந்தது.

     “இந்தச் சங்கதி ஆருகிட்டேயும் சொல்லாதே - ஊம்! அம்மா கிட்டக்கூட வேணாம். பொறுக்கலாம். என்ன ஆவுதோ பாக்கலாமே. ஆனால், சாமான் மட்டும் கொண்டாராதே. நான் எப்படியாவது சம்பாதிச்சுக்கிறேன். அதுக்காவ, இந்தப் பக்கம் வாராத இருந்துடாதே?” என்று சிரித்தான்.

     “நீ எப்படிச் சம்பாதிக்கப் போறே?”

     “மஞ்சத்திடலுலே, வாய்க்கா வெட்றாங்களாம். ரொம்ப ஆளுங்க வேலை செய்யுதாம். நானும் சேந்துக்குறேன்.”

     “அது என்னா வேலை, உன்னாலே முடியுமா? நீதான் தென்ன மரம் ஏர்றதுலே கெட்டிக்காரனாச்சே; மரமேறிச் சம்பாதிக்கக் கூடாதா?”

     “பாளை தட்டச் சொல்றியா?” என்று அவன் சிரித்தான். வள்ளிக்கும் சிரிப்புப் பொறுக்கமுடியவில்லை.

     “நீ ஒரு பயித்தியம். தேங்காதான் பறிக்கச் சொல்றேன். நம் மூருலேருந்து மேலநத்தம் வரையிலும், வாய்க்கா மோட்டுத் தென்னமரத்தையெல்லாம் ஆரோ சிறூருக்காரன் குத்தகை எடுத்திருக்கிறானாமே? அவன் அங்கம்மா கோயிலண்டே கூட்டம் போட்டுக்கிட்டு, மரமேர்றதுக்கு ஆள் பிடிச்சுக்கிட்டு இருக்கான். நேத்துப் பொளுதோடே அந்தட்டம் நான் வந்துக்கிட்டு இருந்தேன். அப்போ எல்லாத்தையும் பாத்தேன். எத்தனையோ கோடி மரம் இருக்குதாம். ஆனால், அன்னன்னிக்குக் கூலி கிடையாதாம். ஆயிரத்துக்கு இவ்வளவூன்னிட்டுக் கொடுக்கிறானாம். இது இன்னும் நல்லதாப் போச்சு. ஒரு நாளைக்கு ஒரு ரூவா நீ சம்பாதிக்கலாமே. நீ ஏன் அவங்கிட்ட போகக்கூடாது? சங்கரனும் குப்பனுங் கூட அவங்கிட்ட பேசிக்கிட்டு இருந்தாங்க.”

     வேலனுக்கு மிகவும் சந்தோஷமாய்விட்டது. “வெளையாட்டுப்போலத் துட்டு அடிச்சிடலாமே,” என்றான்.

     “நீ இப்போதுகூடப் போவலாம். எனக்கு ஒடம்பு சரியாப் போச்சு. எனக்காவ நீ இங்கே இருக்காதே. எங்கம்மா வந்தாலும் வருவா. நம்ப ரெண்டு பேரையும் பாத்தா, அவளுக்குப் பொல்லாத கோவம் வரும்,” என்று வள்ளி, புன்சிரிப்புடன் சொன்னாள். வேலன், அவள் முன் ஜாக்கிரதையை மெச்சினான். பிறகு, அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல் தயங்கித் தயங்கி கடைசியாகத் தெருக்கதவைத் திறந்துகொண்டு வெளியே போனான்.


மண்ணாசை : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22