உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் 13. மர்மம் வெளிப்பட்டது வள்ளி சென்று வெகுநேரம் வரையில், வேலன் அசைவற்று உட்கார்ந்திருந்தான். ஆனால், அவன் முகம் மட்டும் புன்சிரிப்பால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவ்வாழ்க்கையிலும் ஆனந்தம் உண்டென்பதை அவன் அறிந்தான். அவனும் வள்ளியும் சுகமாகக் கழிக்கப்போகும் காலத்தைப் பற்றி, நினைத்து நினைத்துச் சந்தோஷப்பட்டான். வரவர, எதிர்கால நினைப்பால் பல சந்தேகங்களும், அவை மூலம் மனத்திற்கு வருத்தமும் ஏற்பட்டன. யோசிக்க யோசிக்க, வள்ளி சந்தேகப்படுவது சரியென்று அவனுக்குப் புலப்பட்டது. வீரப்பனும் மதுரையும், நிலங்களையெல்லாம் குசப்பட்டி கங்காணிக்கு விற்கும்படி தன் ‘அப்பா’வுக்குப் போதித்ததிலிருந்து, மர்மம் சற்று அதிகரித்ததே யொழியக் குறைய வில்லை. எக்காரணத்தினால் அவர்கள் இவ்வாறு தூண்டினர்கள் என்பதை, அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் பிரயத்தனங்கள் மீனாக்ஷிக்கு அநுகூலமானவையா? அல்லது பிரதி கூலமானவையா? மீனாக்ஷிக்கு விரோதமாக மதுரை நடப்பானா? அவளிடமிருந்து எவ்வளவோ லாபங்களடைய அவனுக்கு அவகாசம் இருந்ததே. ஆனால், அவர்கள் நிலங்களைப் பற்றிய மட்டில் மீனாக்ஷிக்கு என்ன குறைவு? அவள்தான் எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு வந்தாளே. இதையெல்லாம் யோசித்துப் பார்க்குமளவில், மீனாக்ஷியின் சூழ்ச்சிகள் வள்ளியின் கலியாணத்திற்குச் சம்பந்தப்பட்டவை யென்று தோன்றின. ஒருகால், அக் கலியாணத்திற்குத் தன்னால் இடையூறு நேரிடுமென்று நினைத்தாளோ என்னவோ... எவ்வளவு மூடத்தனம்... பிறகு, வள்ளியே உண்டாக்கப்போகும் விக்கினங்களை நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக்கொண்டான். நேரில், மதுரையையே கேட்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமா வென்று அவன் யோசித்தான். அவன் சொல்லாமல் மறைத்து வைத்தால்? வீரப்பனைக் கேட்பது நடவாத காரியம். ஒருவிதமான கௌரவமும் நாணமும் தடை செய்தன. ‘சரி, இருக்கட்டும். எல்லாம் ஒரு வாரத்திற்குள் தெரிந்து விடும். அதற்குள் நடவடிக்கைகளைச் சரியாகக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கலாம்,’ என்று அவன், ஒருவாறு தீர்மானித்துக் கொண்டான். மறுதினம் வருஷப் பிறப்பு. எல்லோரும் ஆனந்தமாய் இருக்க வேண்டிய நாள். அன்றைய தினம் மனத்திற்குக் கஷ்டமோ, சுகமோ எது ஏற்படுகிறதோ, அது வருஷம் முழுவதும் நேரிடப் போகும் சம்பவங்களுக்கு ஓர் அறிகுறியல்லவா? ஆகையால், இந்நாளை வெகு சந்தோஷமாகக் கழிக்கவேண்டுமென்று வேலன் நிச்சயத்துக்கொண்டான். ஆனால், மாங்காயும் வேப்பம்பூவும் இல்லாமல் எங்காவது வருஷப் பிறப்பு உண்டா? கிராமத்தில் ஒரு வேப்பமரம், மாமரம் பாக்கியில்லாமல், சிறுவர்கள் ஏறிப் பாழாக்கினார்கள். ஆனால், இக்காலையில் அதிகக் கும்பல் கூடின இடம், கழிவு வாய்க்கால் கரைதான். இவ்விடத்தில், வளைந்து வளைந்து போகும் வாய்க்கால் மேட்டில், ஏறக்குறைய முப்பது மாமரங்கள் இருந்தன. இம்மரங்களெல்லாம், வாய்க்காலை ஒட்டியிருந்த நிலக்காரர்களுக்குப் பொதுச் சொத்து. ஆனால், மரங்களை வெட்டும் பொழுது தவிர, மற்றச் சமயங்களில் இவ்வுரிமையை ஒருவரும் கவனிப்பதில்லை. இம்மரங்களிலெல்லாம், வாலிபர்கள் குரங்குகளைப்போல் கிளைகளில் தொத்திக் கொண்டு, போட்டிபோட்டுக் காய்களைப் பறித்துக் கொண்டிருந்தனர். வயோதிகர் சிலர், கீழே விழுந்தவைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தனர். எங்கும் ஒரே கூச்சலும் விளையாட்டுமாக இருந்தது. வேலனும் அவன் சிநேகிதர்களில் இருவரும், ‘தேங்காய்க்காச்சி’ என்ற மரத்தின்மேல் இருந்தார்கள். அம்மரத்தின் காய்கள் பெரியனவாகவும் இனிப்பாகவும் இருக்குமாகையால், ஆதிமுதல் வேலனுக்கு அம்மரத்தையே சுற்றித் திரிவது வழக்கம். அதுவும் தவிர, இது அவர்களுடைய ‘நத்தைத்தோட்ட’த்தையும் ஒட்டியிருந்தது. காய்களைப் பறித்துக் கொண்டு மரத்திலிருந்து இறங்கும்பொழுது, மல்லன், அவனுடைய தகப்பனார், அவர்கள் வேலையாட்களில் ஒருவன், இம் மூவரும் அம்மரத்தண்டை வருவதை வேலன் பார்த்தான். அம் மரத்துக் காயை எல்லோரும் விரும்புவது சகஜம்தான். மல்லன் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு, வெகு தோரணையுடன் வேலன் இறங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்தான். வேலன் கீழே வந்தவுடன், மல்லன் அவனை ஏற இறங்கப் பார்த்து, “உனக்கு வெக்கமில்லே?” என்று கேட்டான். வேலன் திகைத்துப்போய்விட்டான். ஆயினும், முன்னே நடக் கப்போகும் காரியங்களை உத்தேசித்து, அவன் சண்டையில்லாமல் ஒதுங்கிக்கொள்வது நலமென்று நினைத்து, “நீ சொல்றது எனக்கு ஒண்ணும் தெரியில்லையே,” என்றான். “இந்த மரத்துலே, காய் பறிக்க ஒனக்கு என்ன அதிகாரம் இருக்குது?” என்று மல்லன் சீறினான். “ஓ, அதுவா? தெரிஞ்சிச்சு, தெரிஞ்சிச்சு. இவர்களுக்கெல்லாம் என்ன அதிகாரம் இருக்கு?” என்று அவன் அங்கிருந்தவர்களை யெல்லாம் சுட்டிக் காட்டினான். “அவுங்களுக்கெல்லாம் இங்கே நெலம் இருக்குது,” என்றான் மல்லன்; நிலமில்லாதவர்கள் சிலர் அங்கிருந்தபோதிலும் அவன் இவ்வாறு கொன்னான். “எங்களுக்கும் இருக்குது. ‘நத்தைத்தோட்டம்’ எங்கிளுது இல்லையா? ஒத்திக்கி வச்சா, எளந்திட்டாப்பலேதானா?” “அப்போ, வெள்ளாமை இடுறதுதானே?” என்று மல்லன் வெகு இகழ்ச்சியாகச் சொன்னான். அவன் அற்பத்தனமாகச் சொன்னது யாருக்கும் பிடிக்கவில்லை. வேலன் வாய்திறந்து பதில் சொல்வதற்குமுன், அவன் சிநேகிதன் ஒருவன் குறும்புத்தனமாக, “கண்ணாலம் கிட்ட நெருங்க நெருங்க, மல்லன் ஆம்பிளை ஆரான்டா,” என்றான். இப்படிக் குறிப்பாகத் தன்னை அவமதிப்பதைக் கேட்டவுடன், மல்லனுக்கு அளவில்லாத கோபம் வந்தது; சரியான பதில் சொல்வதற்குத் தத்தளித்தளித்துக் கொண்டிருந்தான். அச்சமயம் வேலன், “அவனுக்குக் கலியாணந்தான் நெருங்குதோ இல்லை வேறே எதினாச்சும் நெருங்குதோ, நீயே பாப்பே, இரு” என்றான். சொன்ன பின், வேலன் உதட்டைக் கடித்துக் கொண்டான். இதுவரையில் மல்லனுடைய தகப்பனார் வாயைத் திறக்கவில்லை. ஆனால் இம்மாதிரி வேலன் சொன்னவுடன், இவன் வெறிபிடித்தவனைப்போல் எல்லோரையும் தள்ளிக்கொண்டு வேலனிடம் வந்து, கைகளும் கால்களும் பதறப் பதறச் சொல்லலானான்: “என்ன, என்ன சொல்றே? நீ என்னடா பண்ணிடுவே? அந்த மெரட்டலுக்கு வெவரத்தைச் சொல்லு நீ - ஊரான் சொத்தை வெக்கமில்லாத வறண்டிவிட்டு, மெரட்டல் வேறேயா? இதோ, நீங்க இத்தனைபேரும் கேட்டுக்கிட்டு இருந்தீங்க - அவன் எங்களை என்ன செய்யணுமின்னு எண்ணிக்கிட்டு இருக்கானோ, அதைச் சொல்லாட்டி நான் அவனை உட மாட்டேன்,” என்று சொல்லிக்கொண்டு, வேலன் கையைப் பிடித்துக் கொண்டான். “எடு கையை!” என்று வேலன் கர்ஜித்து, அவன் கையை உதறிவிட்டான். “நீயோ, ஒன் சொத்தோ! இந்தா, இதெல்லாம் ஒன் தலையிலேயே போட்டுக்கோ,” என்று சொல்லி, வேலன் மாங்காய்களை அவன் முகத்தில் எறிந்தான். மாயாண்டி நடுநடுங்கிச் சரேலென்று பின்வாங்கினான். “பிச்சைக்காரப் பயலே! ஒனக்கு இவ்வளவு துணிச்சலா? கன்னியப்பா, அந்தப் பயலைச் செருப்பாலே அடி. இதாலே ஆயிரஞ் செலவானாலும் சரி,” என்று மல்லன், தன் பண்ணை ஆட்களுக்குக்கு கட்டளையிட்டான். “மானங்கெட்டப் பயலே! இதோ, இங்கேயே இப்பவே ஒன் முளிபுதுங்குறாப்போலே அடிக்காட்டிக் கேளு,” என்று கூவிக் கொண்டு, வேலன் மல்லன்மேல் புலிபோல் பாய்ந்தான். சமீபத்தில் இருந்தவர்கள் வேலனைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். ஆனால் இதற்கு முன்னரே, மல்லன் வெகு முன் ஜாக்கிரதையுடன் பின்வாங்கிவிட்டான். “பிச்சையெடுத்துத் திங்கிறதுலே கொறவில்லை; ஒனக்கு இவ்வளவு ஆணுவமா? ஒனக்குத் தகுந்த மருவாதி நாளைக்குப் பண்றேன். டேய்! நாளைக்குத் தப்பாது. அப்போ என்னை நெனைச்சுக்கோ,” என்று மல்லன் இரைந்தான். வேலனுக்கு ஆத்திரம் பொறுக்க முடியவில்லை. “சாதி கெட்ட பயலே! ஒனக்கு மருவாதி இப்பவே பண்றேன்டா,” என்று கூச்சல்போட்டு, தன் சிநேகிதர்களைத் திமிறிக்கொண்டு மல்லன் மேல் விழுந்து, அவன் குடுமியைப் பிடித்து இழுத்து, ‘தபால்’ என்று கீழே தள்ளினான். உடனே, அங்கிருந்தவர்கள் வேலனைக் கட்டிப்பிடித்துத் தள்ளிக்கொண்டு போனார்கள். சண்டை முற்றி விபரீதமாக முடியுமென்று பயந்து, வேலனுடைய சிநேகிதர்கள் அவனைப் பலாத்காரமாக வீட்டுக்கு இழுத்துக்கொண்டு சென்றனர். வீட்டண்டை வந்தவுடன், அவர்களில் ஒருவன் அவனுக்குச் சில மாங்காய்களையும் கொடுத்தான். வேலனுக்கு அழாத துக்கம். ஆயினும், தன் சிநேகிதனுடைய அன்பிற் கும் அநுதாபத்திற்கும் வந்தனம் அளிப்பது போல் சிரிக்க முயன்றான். இச்சண்டையைப் பற்றித் தன் தாய் தந்தையரிடம் சொல்ல வேலனுக்கு இஷ்டமில்லை. அவன் ஏகாந்தமாக இருக்க விரும்பினான். ஆகையினால், ஓசை செய்யாமல் மாங்காய்களைச் சமையலறையண்டை போட்டுவிட்டு, காலியாய்ப் பாழடைந்து கிடக்கும் தானிய அறைக்குள் சென்றான். துண்டு வேஷ்டியால் தூசியைத் தட்டிவிட்டு, அத்துண்டையே கீழே பரப்பி, அதன்மேல் அவன் மல்லாந்து படுத்துக்கொண்டான். புது வருஷம் தனக்கு இவ்வாறுதானா பிறக்க வேண்டுமென்று, அவன் வருத்தப்பட்டான். சண்டை எப்படி ஆரம்பித்ததென்று அவன் நிதானமாக யோசித்துப் பார்த்தான். தான் ஒரு குற்றமும் செய்ததாக அவனுக்குப் புலப்படவில்லை. அவன் உரிமை ஒரு பக்கம் இருக்கட்டும்; வருஷப் பிறப்பன்று மாங்காய் பறிப்பதை எங்கேயாவது தடுப்பதுண்டா? யார் மரமாக இருந்தாலென்ன? யார் பறித்தாலென்ன? இப்புதுமையை அவன் கண்டதும் இல்லை கேட்டதும் இல்லையே; மல்லனும் அவன் தகப்பனும் காரணம் ஒன்றுமில்லாமல் தன்னுடன் வம்புச் சண்டைக்கு வந்ததாக அல்லவா தோன்றிற்று? ஆனால், அவன் ஒரு காரியம் செய்திருக்கலாம். கலியாணத்தின்போது சம்பவிக்கப்போகும் இடையூற்றைப் பற்றி ஜாடை யாகக்கூடச் சொல்லாமல் இருந்திருக்கலாம். அனாவசியமாக, அவன் அவர்களுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்ததுபோல் ஆயிற்று. ஒருவிதத்தில் வள்ளியையும் காட்டிக்கொடுத்தாற்போல் இருந்தது அவன் செயல். இதனால், அவள் யோசித்திருக்கும் ஏற்பாட்டிற்கு ஒரு வேளை தடங்கல் நேரிடுமோ என்னமோ! நடந்துபோனதைப் பற்றிச் சிந்திப்பதில் என்ன லாபம்! இனி நடக்கப்போகும் விஷயங்களைப்பற்றி அல்லவா கவனிக்க வேண்டும்? மறுநாள் தனக்கு எதோ‘மரியாதை’ பண்ணுவதாக மல்லன் பிதற்றினானே; அது என்னவாயிருக்கும்? நிச்சயம் அது ஒரு பெரிய ஆபத்தாகத்தான் இருக்கவேண்டும். இல்லாவிடில், மல்லன் அவ்வளவு தைரியமாகப் பேசியிருக்கமாட்டான். இருக்கட்டும்; ஓர் இரவு கழிந்தால் எல்லாம் தெரிந்துவிடுகிறது. ஆனால், அதுவரையிலும் ஏன் காத்திருக்க வேண்டும்? அவ்விஷயம் மதுரைக்கும் வீரப்பனுக்கும் தெரியாமல் இராதே. வள்ளியின் வீட்டுக்குப் போவது நடவாத காரியம். ஆகையினால், தனக்குத் தெரிந்ததை யெல்லாம் கக்கும்படி மதுரையை வற்புறுத்த வேண்டியதுதான். அவன் முடியாதென்று சொல்லிவிடுவானா? அதையுந்தான் பார்க்கலாமென்று நினைத்ததுதான் தாமதம். அடுத்த க்ஷணமே வேலன் மதுரையின் வீட்டிற்கு ஓடினான். அவன் மல்லனோடு சண்டைபோட்ட செய்தி ஊரெல்லாம் பரவிவிட்டது. எல்லாரும் தன்னையே ஆதரிப்பார்களென்பது வேலனுக்குத் தெரியும். இருந்தபோதிலும், சண்டை நடக்கும் சமயத்தில் சமீபத்தில் இல்லாதவர்களெல்லாம், அவனைப் பற் பல கேள்விகள் கேட்கும்பொழுது, அவனுக்குக் கஷ்டமாயிருந்தது. ஆகையால், தான் அவசரமாக மதுரை வீட்டிற்குப் போக வேண்டுமென்று, அங்கொரு வார்த்தை இங்கொரு வார்த்தை சொல்லிவிட்டு, விரைவாக மதுரையின் வீட்டையடைந்தான். மதுரை அவனை வெகு ஆவலுடன் வரவேற்றான். மதுரையினுடைய மனப்பூர்வமான அன்பைப் பார்த்து வேலன், தான் அவனைச் சந்தேகிப்பது தப்பென்று நினைத்தான். மதுரை, “வேலு, சங்கதியெல்லாம் என் காதிலே உளுந்திச் சப்பா. என் மனசு எவ்வளவு வருத்தப்படுதென்பது ஒனக்குத் தெரியாது. என்ன கொடுமை; நான் சொன்னாலும் நம்பமாட்டாங்க. கொஞ்சம் பேரு, நான் மீனாட்சியோடு சேர்ந்து கிட்டு ஒங்களைக் கெடுக்கிறேனின்னு கூடச் சொல்றாங்க. அதுவும் எனக்குத் தெரியும். நான் மறுத்துப் பேசினா, பாசாங்குன்னுகூடச் சொல்லுவாங்க - ஆனால், உளுமை கடவுளுக்குத்தான் தெரியும்,” என்று கை கூப்பி வானத்தை நோக்கிச் சொன்னான். “மெய்யாலும் மாமா, நான்கூட அப்படித்தான் நெனைச்சேன். ஆனா, இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். நீ ஒண்ணும் மனசுலே வச்சுக்காதே. நான் இப்போ என்னாத்துக்கு வந்தேன்னா... சங்கதி ஒண்ணு தெரிஞ்சுக் கொள்ளணும், ஒன்னைக் கேக்க வாண்டாமுனு பாத்தேன். ஆனா, வேதனை பொறுக்க மாட்டலே. சோறு தண்ணிகூட எறங்கமாட்டேங்குது,” என்றான் வேலன். “வேலு, எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒனக்குச் சொல்லாட்டி, ஆருக்குச் சொல்லப்போறேன்? ஒனக்கு என்ன வேணும்? சொல்லப்பா,” என்று சொல்லிக்கொண்டே நாலு பக்கங்களிலும் சுற்றிப் பார்த்து, அவன் வேலனிடம் நெருங்கினான். “அன்னிக்கு, நீயும் வீரப்பனும் மாமனும் எங்கப்பாருகிட்டே என்னாத்துக்கு வந்தீங்க?” “ஓ! அதா? வேலு, நீயும் கொஞ்சம் சாமர்த்தியக்காரன்தான்! நான் என்னமோண்ணு நெனைச்சேன். என்னத்துக்கு வந்தமா? - அந்தப் பாவியோடு கலந்து பேசி, அவனுக்கு எங்களாலே ஆன நம்மையைப் பண்ணலாமுன்னு வந்தோம். நெலத்தை எல்லாம், ஒரு பாடா கொசப்பட்டிக் கங்காணிக்கு வித்திட்டு, மிஞ்சினதை வச்சுக்கிட்டுக் கஷ்டப்படாமே காலத்தைக் களிக்கலாமின்னு அவன்கிட்டே சொல்லிப் பாத்தோம். ஆனா, அவன் நாங்க சொல்லறதைக் கடசீவரையிலும் கேக்கமாட்டானே. பயித்தியம் பிடிச்சவன்போலே இல்ல கத்த ஆரம்பிச்சுட்டான்? என்ன திட்டு, என்ன பேச்சு! இன்னும் கொஞ்ச நாளி அங்கே இருந்திருந்தா, அண்டை ஊட்டுக்காரங்களெல்லாம் வந்து, கும்பல் கூடிப்போயிருக்குமே. எங்க பாடு திண்டாட்டமாவ அல்ல போயிருக்கும்? அந்த எளவுக்காகத்தான் வாயை முடிக்கிட்டுத் திரும்பிட்டோம்.” “எங்கப்பாரு சங்கதியெல்லாம் நல்லாத் தெரிஞ்சுகூட, நெலத்தை விக்கற பேச்சு ஏன் மாமா அவருகிட்ட எடுக்கறீங்க? அதை உட்டுட்டு, வேறே எதுனாச்சும் பேசக்கூடாதா?” என்று கெஞ்சினாற்போல் வேலன் உரைத்தான். “வேலு, அவன் நெலத்தை விக்க ஒப்பமாட்டான் என்கிறது எனக்குத் தெரியாதா? ஆனா எல்லாத்தையும் அடியோட எளந்துடருதைவிட, கொஞ்சம் சாட்பாட்டுக்குநாச்சியும் நிப்பாட்டிக்கிறது நல்லதில்லையா? நீயே சொல்லு.” “அப்படி தலை போற ஆபத்து, இப்போ என்ன வந்திடிச்சு, மாமா? இன்னும் அறுவது வருசத்துக்கு, நெலத்துக்கிட்டே எவன் போவ முடியும்? அதுக்குள்ளே, என்ன என்ன ஆவுதோ, ஆரு கண்டாங்க?” என்றான் வேலன். “அந்தப் பாவியும் அப்படித் தாண்டாப்பா எண்ணிக்கிட்டு இருக்கான். ஆனா, விசயம் ரொம்பதூரம் போயிடுச்சு. அந்தப் பயல் மாயாண்டி பெரிய சூது செஞ்சிட்டானே! இன்னும் ஒரு மாசத்துக்கெல்லாம், ஒங்க சொத்தெல்லாம் அடியோடு ஏலத்துக்குக் கொண்ணாந்து, வாயிலே போட்டுக்கப் போறாண்டாப்பா? ஊட்டைக்கூடப் பிடுங்கிக்கிட்டு, ஒங்களைத் தெருவுலே தொரத்தப் போறானாம். சரிதானா?” என்று மதுரை வயிறெரிந்து சொன்னான். வேலனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. “நீ சொல்றது ஒண்ணுமே புரியில்லையே, மாமா. கொஞ்சம் வெவரமாச் சொல்லக் கூடாதா?” என்று வேலன் கெஞ்சினான். மதுரை, மறுபடியும் தன் சுபாவம்போல் நாலுபுறத்திலும் சுற்றிப் பார்த்துச் சொல்லத் தொடங்கினான்: “வேலு, இந்தப் பேச்சை வெளியிலே மட்டும் விட்டுவிடாதே. நெலத்தை ஒத்திக்கி வச்ச ரெண்டு வருசத்துக்கெல்லாம், வெங்கடாசலம், வண்ணாரப்பேட்டைப் பளனியாண்டி பிள்ளைகிட்ட அன்னூறு ரூவா கடன் வாங்கினான். அதுக்காவ இதுவரையிலும் ஒரு காசுகூடக் கொடுக்கலை. இதுக்கு வெங்கடாசலத்து மேலே நான் குத்தம் சொல்லல்லே - அவன் என்ன பண்ணுவான் பாவி? பளனியாண்டி பிள்ளைக்கு இப்போ பணமொடையாம். இதை எப்படியோ மாயாண்டி தெரிஞ்சுக்கிட்டு, அவனுக்கு வட்டியும் மொதலும் கொடுத்திட்டுப் ‘பாண்டை’ தன்மேலே மேடோவரும் பண்ணிக்கிட்டான் - அதாவது மாத்திக்கிட்டான். தம்பேருலே மாத்திக்கணுமிங்கற ஆத்துரத்துலே, இன்னுங்கூடக் கொஞ்சம் பணம் கொடுத் தான்னிட்டு செல பேரு சொல்றாங்க. அது கடவுளுக்குத்தான் தெரியும். மொட்டச்சி பணத்தைத் தின்னிட்டு, திமிரு பிடிச்சு திரியறானே, அந்தப் பாவி. அவன் எவ்வளவு பொல்லாதவன் தெரியுமா? மீனாச்சிகூட அவ்வளவுக்கு போகவாணாமின்னா. அந்தப் பய கேக்கமாட்டேன்னிட்டு, ஒரு கால்லே நின்னில்லே, காரியத்தை முடிச்சுட்டான்! ஐயோ வேலு! அவன் ஒன்னை இந்த ஊரைவிட்டே தொரத்திடல்ல பாக்கறான் - என்னாத்துக்குத் தெரியுமா? நீ அவன் மகனுக்குப் போட்டிக்காரனாம். நீ இந்த ஊரிலே இருக்கறமட்டும், வள்ளி அவன் மகனைச் சட்டை செய்ய மாட்டாளாம். அவனை உட்டுட்டு, ஒன்னோட ஓடிடுவாளாம். எவ்வளவு வெக்கங் கெட்டவனோ, பாரு.” “மானங்கெட்ட பய! சரி, அவன் சங்கதியை நான் பாத்துக்கறேன். ஆனா, திடும்முனு இப்போ என்ன தலைபோறது வந்திடிச்சு? அதைச் சொல்ல மாட்டேங்கறையே, மாமா?” “சொல்றேண்டாப்பா, சொல்றேன். மொதலும் வட்டியும் சேத்து, ஆயிரம் ரூவாயிக்கு ஒங்கமேலே மாயாண்டி பிராது பண்ணிட்டான். சம்மனு, இன்னிக்கு வருதோ நாளைக்கு வருதோ. தாவா பண்ணின பணத்தைக் குடுக்காட்டி, சொத்து மேலேதான் போவாங்க. இந்தக் காலத்துலேதான், நன்மைக்கும் சரி தீமைக்கும் சரி, வளி தேடிக் குடுக்க வக்கீலுங்க இருக்காங்க. அவங்களை வச்சிக்கிட்டு, ஒங்களுக்குக் கால்துட்டுக்கூட மிஞ்சாமெ, நெலம் புலம், ஊடு வாசல் எல்லாத்தையும் கட்டிப்பாங்க. அப்பவும் கடன் தீராட்டி, ஆளையும் பிடிச்சி ஜெயில்லே வச்சாலும் வெப்பாங்க. அந்தச் சண்டாளப்பயல் என்னதான் செய்யமாட்டான்!” “எங்கப்பாருக்கு, இந்த வெவரமெல்லாம் தெரியுமா?” என்று வேலன் கேட்டான். “அவனுக்கு எப்படித் தெரியும்? அன்னிக்குத்தான் எங்களை வாயைத் தெறக்கவே உடலையே. வெறிபிடிச்சவனாட்டம் கத்த ஆரம்பிச்சுட்டானே. என்னைக் கண்டபடி திட்டினான். அவன் நொந்தவன். அவன் வெசவை நான் சட்டையே பண்ணல்லை. ஆனா, நான் நெனைச்ச காரியம் முடியல்லையே. மாயாண்டி, தூங்கிறவன் தலெலே கல்லைப் போடறவனாச்சே! என்ன என்ன கூத்து நடக்கப் போவுதோ, ஆண்டவனுக்குத்தான் தெரியும்! இனிமே ஒன்னைவிட்டா, யாரும் இந்த விசயத்தைப்பத்தி, அவன் கிட்டே பேச முடியாது. நான் சொல்றபடி செய். சம்மனு வர்ற வரையிலும் சும்மாயிரு. சம்மனு வந்தப்பறம் அதைக் கையிலே வச்சிக்கிட்டு, எவ்வளவு ஆபத்து என்கிறதை எடுத்துக்காட்டி, நீ அவனை வளிக்கிக் கொண்டாந்துட்டியானா, நீ ஒரு கோயிலைக் கட்டி வச்சாப்பலே இருக்கும். ஒன்மேலே அவனுக்கு உசிரு. அதனாலே, நீ சொன்னால் கேட்டாலும் கேட்பான். கெஞ்சிக் கூத்தாடி எப்படியாச்சும் அவன் மனசைத் திருப்பிடுடா, அப்பா!” என்று மதுரை கேட்டுக்கொண்டான். “இவ்வளவுதானா? இன்னும் எதுநாச்சும் இருக்குதா?” என்றான் வேலன், வெகு விசனத்துடன். “இது போதாதாப்பா! ஊம், இருக்கட்டும். நீ எதுக்கும் பயப்படாதே. சாமி ஒண்ணு இருக்குது. ஒரு வளி விடாத போவாது.” “சாமியாவது! மல்லனையும் மாயாண்டியையும் படச்ச சாமி ஒரு சாமியா?” என்று வேலன் அசட்டுச் சிரிப்பு சிரித்தான். “அப்பிடியெல்லாஞ் சொல்லாதே! நாம போன பொறவியிலே என்ன பாவம் பண்ணினமோ, அதெல்லாம் தீத்துக்கத்தானே வேணும்?” “அந்த எளவு எப்படியோ போவட்டும், மாமா. சரி, நான் போய் வர்றேன்,” என்று சொல்லி, வீட்டுக்குத் திரும்பினான். |