அத்தியாயம் 17. கண்கெட்ட பின்

     வெங்கடாசலத்தின் மயக்கம் தெளியக் கால்மணி நேரமாயிற்று. அவன் மெதுவாகக் கண்களைத் திறந்து, அன்புடன் தன்னைச் சுற்றி நிற்போர் முகங்களைப் பார்த்தான். அவனுக்கு ஞாபகம், மின்னல்போல் திடீரென்று வந்துவிட்டது; உடனே பரிதாபகரமாய்ப் புலம்ப ஆரம்பித்தான்.

     “வேலு எங்கேயப்பா! ஐயோ! என் குளந்தையை எங்கே இளுத்துக்கிட்டுப் போயிட்டாங்க! அவனை என்ன செய்யப் போறாங்க? ஏ, வீரப்பா, அவன் எங்கே சொல்லேன்; அவனைத் தப்ப வைக்க வளியில்லையா? அதுக்கு என்ன செலவானாலும் சரி, கொடுத்துடறேன். மதுரை சாமார்த்தியக்காரனாச்சே. அவனாலேகூடவா முடியாமே போயிடும், அவன் எங்கேப்பா - மதுரை? பாத்தியா பாத்தியா, வீரப்பா! இந்தச் சமயத்திலே மதுரை என்னை உட்டுட்டுப் போகலாமா?”

     “வெங்கடாசலம், ஒருநாளும் மதுரை உன்னைக் கைவிட மாட்டான். அவன், வேலுவோடேயல்ல ஓடியிருக்கான், அவனை உட்டுப் பிரியாதே, எப்படிநாச்சும் சட்டுப் புட்டுனு அவனை ஊருக்குத் திருப்பி அளச்சுக்கிட்டு வர, வளியல்ல தேடிக்கிட்டு இருக்கான்? அதுவரையிலும் உன்னைப் பாத்துக்க நான் இங்கே இருக்கேன். நீ ஒண்ணும் கவலைப்படாதே. வேலு கட்டாயம் தப்பிச்சுப்பான். சட்டமின்னா சும்மாத்தானா? எவன் பேச்சைக் கேட்டாவது ஒத்தனைத் தண்டிச்சிடறதுதானா! கொலை பண்ணினப்போ, எவன் பாத்தான்? என்ன சாச்சி இதுக்குது? கூலிக்கு மாரடிக்கிய பயக பேச்சக் கேட்டு, ஜர்ஜி தண்டிச்சிடுவாரா? மாரிக் கவுண்டன் சங்கதி நமக்குத் தெரியாதா? நீ என் பேச்சை நம்பு; சாச்சி சம்பந்தமில்லாமே கேசு ஒண்ணும் பலிக்காது. செத்தவன் திரும்பி வந்து சாச்சி சொன்னாத்தான் உண்டு. அது நடக்கிற சங்கதியா?”

     “நீ சொல்வது ரொம்பச் சரி, வீரப்பா! எதுக்கும் பயந்திடக் கூடாது. கெட்டுப் போவதெல்லாம் பயத்தாலேதான். நீ எப்பவும் யோசனைக்காரன்தான். நீயும் மதுரையும் இல்லாட்டி, என் கதி என்னாகுமோ!” என்று சொல்லிக் குழந்தைபோல் அவன் வீரப்ப னுடைய கைகளைப் பிடித்துக் கொண்டான். மறுபடியும் அவன் சுற்றிப் பார்த்தான். தன் மனைவியும் வீரப்பனையும் தவிர, அங்கே ஜம்புலிங்கமும் பிச்சையுந்தான் இருந்தார்கள். அவர்கள் வேலனுடைய பிராண சிநேகிதர்கள். பிறகு, பயப்படவேண்டிய காரணமில்லையென்று தெரிந்துகொண்டு, அவன் தாழ்ந்த குரலில் ரகசியமாகக் கேட்டான்: “அவன் அந்த வேலை செஞ்சிருப்பானா?”

     “கடவுளுக்குத்தான் தெரியும்,” என்று வீரப்பன், கைகளை விரித்துச் சொன்னான்.

     “அவன் எவ்வளவு நல்ல பையன்! எப்பவும் நாலு பேரு நலுமையே தேடறவனாச்சே; அவன் அந்த வேலை செய்ய எப்படித் துணிஞ்சானோ!” என்று வெங்கடாசலம், தனக்குள்ளே பேசிக்கொள்வதுபோலச் சொன்னான். “ஆனா, ரொம்ப ரோசக் காரன். என் வாயிலே சனி இருந்திச்சு. என் கோபத்தாலே, அவனுக்கு வெறிபிடிச்சுப் போச்சு. ஆமாம், நான்தான் அவனுக்குத் தூவம் போட்டுட்டேன். என்னாலேதான் அவன் மாயாண்டியைக் கொன்னான். அந்தக் கொலைக் குத்தம் என்னுது. நான்தான் கொலையாளி! கொலையாளி மட்டுமா? துரோகக்காரப் பயகூட. ஐயோ! கடவுளே! நான் என்ன பண்ணிட்டேன்! இதிலிருந்து நான் எப்படித் தப்பிச்சுக்கறது? வீரப்பா! என்ன அப்பாவு நம்பினதுக்கு, நான் இதுமாதிரியா செய்யறது? பாலு குடிக்கற கொளந்தையைக் கொண்டாந்து, ராசாவாட்டம் வளத்து, அப்புறம் தூக்குலே போடக் குடுக்கிறதா! - வீரப்பா, வேலுவை எப்படிநாச்சும் காப்பாத்த வேணும். சந்தேகத்துக்கே எடம் குடுக்கக் கூடாது. நான், என் நெலன், பலன், ஊடு, வாசல் எல்லாத்தையும் குடுத்திடறேன். என் உயிரையும், பளிக்குப் பளியா எடுத்துக்கட்டும். வேலுவை மட்டும் உட்டுடவேணும். அப்பாவு செத்து சொர்க்கத்துலே இருக்கான். அவன், ‘அட, துரோகக்காரப் பாவி!’ இன்னிட்டு என்னை இடிச்சுக்காட்றாப்போலே இருக்குதே! - ஆனா, எம்மேலே குத்தம் கண்டுபிடிக்க அவனுக்கு என்ன அதிகாரம் இருக்குது? என்னைவிட அவனுக்கு வேலுமேலே பிரியமா? என் வயிறு எரியறாப்போல, அவன் வயிறு எறியுதா? - நான் படுகிற கஷ்டம் யாருக்குத் தெரியும்? - அப்பா, வேலு! வேலு! நான் இப்படித் தவிப்பேனின்னு உனக்குத் தெரியாமே போச்சா!” என்று அவன், தன் கைகளைப் பிசைந்துகொண்டு கதறினான்.

     “பயப்படாதே, வெங்கடாசலம். வேலுவைக் கட்டாயம் விடுதலை செஞ்சிடுவாங்க. வீணாய்க் கவலைப்படாதே. அத்தினி பேரு விரோதமா சாச்சி சொல்லிக்கூட, மாரிக்கவுண்டன் தப்பிச் சுக்கிட்டானே. சாச்சிக்கே ஆளில்லாமே இருக்கிறப்போ, வேலு தப்பிச்சுக்க மாட்டானா?”

     “நெசந்தானப்பா, நெசந்தான். ஆனா, நாமும் துட்டுச் செலவளிக்க மட்டும் யோசிக்கக்கூடாது. இருக்கிறதுக்குள்ளே ரொம்பக் கெட்டிக்கார வக்கீலைப் பார்த்து பிடிக்கணும். மாரிக்கவுண்டன் எவ்வளவு பணத்தை வாரி எறச்சான்? நீ மறந்திட்டாயா?”

     “அவன் சங்கதியே வேறே. அவன் கொல்றப்போ, கண்ணாலே பாத்தவங்க எத்தினியோ பேரு இருந்தாங்க. அவங்களுக்கெல்லாம் வாய் மூட்டம் போட்டான். நம்ம சங்கதியிலே என்ன நடந்திச்சோ, யாருக்குத் தெரியும்?”

     “இருந்தாலுங்கூட, கேசு நம்ம பக்கமின்னு நிச்சயம் ஆக்கிடனுமப்பா. வக்கீலைத்தான் நாம் பிடிக்கணும் - வீரப்பா, எனக்கு ஒரு ஒவகாரம் செய்யறயா?” என்று வெங்கடாசலம் கெஞ்சினான்.

     “என்ன பேச்சு? வெங்கடாசலம்! நான் மாட்டேனிம்பேனா?”

     “வேலு, கொசப்பட்டி கங்காணிகிட்டே கடன் வாங்கலாமின்னு போனது உனக்குத் தெரியுமில்லே?” வீரப்பன் தெரியுமென்று தலையை அசைத்தான். “என்மேலே அந்த ஆளு கொஞ்சம் மருவாதி வச்சிருக்கானின்னு நான் கண்டுக்கிட்டேன். நெலங்களை வெலைக்கு விக்கிறதுன்னா, நல்ல தொகையாய் கொடுக்கிறேன்னு சொன்னானாம். நீ இப்போ, அவன் கிட்ட போ. நான் என் சொத்தையெல்லாம் - நத்தைக்காடு உள்பட - வித்துடத் தயாரின்னு சொல்லு. எனக்கு வந்திருக்கிற துன்பத்தை யெல்லாம் சொல்லு. வேலு அவனை ரொம்ப மெச்சிப் பேசினான். அவன் எரக்கமுள்ளவனின்னுதான் எனக்கும் படுது. அவன் நமக்குக் கட்டாயம் ஒவகாரம் செய்வான். அவன் குடுக்கிறதெல்லாம் வேலு கேசுக்குத்தான்னு சொல்லு. காத்துட்டுகூட எனக்கு வாணாம் - இல்லாட்டி, இன்னொரு வேலை செய்யலாமா, வீரப்பா? அவன் என் சொத்துப் பூராவும் எடுத்துக்க வேண்டியது; அவன் எப்படியாவது வேலுவைத் தப்பிச்சு உட்டுடணும். இந்தக் காலத்துலே, பணம் இருந்தா எதுதான் நடக்காது? நாம் கண்ணாலே பாக்கல்லே? சாமர்த்தியக்கார வக்கீலுங்க, நியாயத்துக்கும் பேசறாங்க, அநியாயத்துக்கும் பேசறாங்க. மாரிக்கவுண்டன் கேசுலே, நாயம் இருக்கிற எடம் தெரியாமே போச்சே. சட்டமல்ல ஜெயிச்சிது! அதனாலே, நான் சொல்றேன்; நீ அந்தப் பாரத்தைக் கங்காணி தலையிலே போட்டுடு. அவன் பாத்துப்பான். அவன் வேலுகிட்ட ரொம்பப் பிரியமா இருந்தானாம். ஒண்ணு, ரெண்டு கூடச் செலவானாலும் யோசிக்கமாட்டான். நீ, இப்பவே போயி அவனைக் கண்டு பேசேன்,” என்று வெங்கடாசலம் கெஞ்சுவதுபோல் சொன்னான்.

     “இப்பவா? நாளைக்குப் பாத்துக்கலாம், வெங்கடாசலம். உனக்கு இன்னும் களைப்புத் தீரல்லையே. நான் உன்னை ஒண்டியாய் விட்டுட்டு எப்படிப் போவுறது?”

     “எனக்கு ஒடம்பு ஒண்ணுமில்லையப்பா. நீ கொசப்பட்டிக்குப் பொறப்பட்டியின்னா, எனக்கு இன்னும் கொஞ்சம் தெம்பா யிருக்கும். சாப்பாடு பண்ணிக்கிட்டுப் பொறப்படுறயா?”

     “நீ வருகிற வரையிலும் நான் இங்கேயே இருக்கேன், அப்பா. சோறு ஆக்கறதுக்கு ஒரு ஆளு வாணாமா? பாவம்! அத்தையாலே இப்போ என்ன முடியும்?” என்றாள் வள்ளி. ஒருவர் கண்ணிலும் படாமல் அவள் எப்படியோ உள்ளே நுழைந்துவிட்டாள்.

     “நீயாம்மா! எப்ப வந்தே? இப்படி வா. என்கிட்ட உக்காரு. இன்னும் கிட்ட வாம்மா. என் அம்மாடி!” என்று சொல்லிக் கொண்டே, அவளுடைய இருகைகளையும் கெட்டியாக வெங்கடாசலம் பிடித்துக்கொண்டான்.

     சில சமயங்களில், பேசுவதைவிடப் பேசாமையால், மனோபாவங்கள் வெகு தெளிவாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைக் கப்படுகின்றன. வள்ளி மௌனமாய் உட்கார்ந்திருந்தாள். ஆனால், வெங்கடாசலம் அவள் முகத்திலிருந்து பல விஷயங்களை ஊகித்தான். வெங்கடாசலம், எப்பொழுதுமே திடமான மனமுடையவனல்ல. இப்பொழுது, கேட்க வேண்டியதேயில்லை. பழைய ஞாபகங்கள் அவன் புண்பட்ட மனத்தைக் குத்திக் கிளறின. அவன் மனம் படும் கஷ்டத்தை, அவன் துடிக்கும் உதடுகள் காட்டிக் கொடுத்தன. தன் துக்கத்தை அடக்க, ஆன வரையிலும் முயன்றான். கண்களை இறுக மூடிக் கொண்டான். ஆயினும், தாரை தாரையாய் வடியும் கண்ணீரை அவனால் நிறுத்த முடியவில்லை. வீரப்பனும் மூக்கைச் சிந்திக்கொண்டு வெளியே சென்றான்.


மண்ணாசை : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22