அத்தியாயம் 18. நிரூபிக்கும் பொறுப்பு

     குசப்பட்டியில் வீரப்பனுக்குப் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. ஏனெனில், அன்று காலையில்தான் அந்தக் கங்காணி, தன்னுடைய தேயிலைத் தோட்டங்களைப் பார்வையிட்டு வருவதன் பொருட்டுக் கண்டிக்குப் புறப்பட்டுப் போய்விட்டதாகத் தெரியவந்தது. மேலும் விசாரித்ததில், கங்காணி திரும்பிவர ஒரு மாதமாகு மென்று அவனைச் சேர்ந்தவர்கள் சொன்னார்கள். வீரப்பனுக்கு இது ஓர் அபசகுனம்போலத் தோன்றிற்று. கங்காணியிடமிருந்து உதவி எதிர்பார்க்கலாமென்று அவன் நிச்சயமாக நம்பியிருந்தான். இப்பொழுது, வேறு யாருடைய உதவியை நாடுகிறதென்று அவ னுக்குத் தெரியவில்லை. வெங்கடாசலத்தைவிட வேலன் மேலே அவனுக்கு இரக்கம் அதிகமாக இருந்தது.

     வெங்கடாசலத்தினிடம் அவனுக்கு அன்பு இல்லாமல் போகவில்லை. ஆனால், இந்தத் துர்ப்பாக்கியப் பையனுடைய வாழ்க்கை, எல்லாவிதத்திலும் பரிதாபப்படத் தக்கதாயிருந்தது. ஈசனருளால் வேலன் தப்பித்துக் கொண்டு வந்துவிட்டால், அவனுக்கும் தன் பெண்ணுக்கும் குறுக்கே தான் நிற்கக்கூடாதென்று அவன் நிச்சயித்துக் கொண்டான்.

     ஆமாம், தன் மனைவி எவ்வளவு வாயடி கையடி அடித்தாலும், அதைச் சட்டை செய்யக்கூடாது! மூளை கெட்டவள்! அவள் தன் மகளுக்குச் சொத்துச் சேருவதைக் கவனித்தாளே யொழிய, அக்குழந்தை சுகமாக வாழ வேண்டுமென்பதை அவள் நினைக்கவே இல்லை. வேலனைத் தவிர வேறு யாரையும் மணம்புரிய வள்ளிக்கு இஷ்டமில்லையென்று அவன் நன்றாய் அறிவான். தன் அருமைப் புதல்வியின் சுகத்தைத் தான் பாழாக்குவதா? தன் மனைவி நினைத்தாற்போல், காசு பணம் அவ்வளவு நிரந்தரமானதா? வெங்கடாசலம் இக்கதிக்கு வருவானென்று யாராவது நினைத்தார்களா? சந்தேகமே வேண்டியதில்லை. வள்ளியை வேலனுக்குத்தான் கட்டிக் கொடுக்கவேண்டும். வேலன் மீது மட்டும் அவனுக்குப் பிரியம் இல்லையா? தங்கக் கம்பியாயிற்றே!

     அவனைப்போல மகனைப் படைக்கக் கொடுத்து வைத்திருக்க வேணுமே! சரி, அவனை இப்பொழுது புகழ்ந்து என்ன லாபம்? அவனைக் காப்பாற்ற வேண்டிய வழியையல்லவா தேடவேண்டும்? அதற்குப் பிரதானமாக வேண்டியது பணமொன்றுதான் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். நல்ல வக்கீல்களை அமர்த்தா விட்டால் வழக்கு ஜயிக்காது. பெருந்தொகை கொடுக்காவிட்டால் நல்ல வக்கீல்கள் அகப்படமாட்டார்கள். எங்கிருந்து பணத்தைச் சேகரிப்பதென்று அவனுக்குத் தெரியவில்லை. மீனாக்ஷியைக் கேட்பது, திருடன் தலையாரி வீட்டில் நுழைந்தாற்போல் இருக்கும்.

     அவனுக்கு மூளை கலங்கிப் போயிற்று. வெறுங்கையோடு ஊருக்குத் திரும்ப அவனுக்கு இஷ்டமில்லை. வெயில் கடுமையாய் அடித்துக் கொண்டிருந்ததனால், அவனுக்கு மிகவும் களைப்பாயிருந்தது. அவ்வூரைச் சுற்றித் தோட்டந்துரவுகள் அநேகம் இருந்தன. அவைகளில் ஒன்றில் அமிழ்ந்து ஸ்நானம் செய்ய வேண்டுமென்ற யோசனை அவனுக்கு உண்டாயிற்று. உடனே, அவன் ஒரு பெருங் கிணற்றை நோக்கிச் சென்றான். அக்கிணற்றின் மேட்டில் இருந்த இரண்டு பலா மரங்களால், அங்கே நல்ல நிழல் இருந்தது. காற்றும் ‘ஜிலுஜிலு’வென்று அடித்தது. ஆனந்தமாய் அவன் அந்நிழலில் சற்றுநேரம் உட்கார்ந்தான். பிறகு அவன் அக்கிணற்றில், இறங்கிக் குளிர்ந்த ஜலத்தில் ‘தபால்’ என்று விழுந்தான். அவன் மனத்திற்கும் தேகத்திற்கும் உண்டான சாந்தியை, இவ்வளவென்று சொல்ல முடியாது. குளிர்ந்த நீர் அவன் உடம்பில் பட்ட மாத்திரத்தில், அவனுடைய கவலைகளெல்லாம் காற்றாய்ப் பறந்தோடின. அவன் தேகத்திற்கு உண்டான சுகத்தால், தவளைபோல் முழுகி முழுகி எழுந்தான்; ஆமைபோல் மிதந்தான். அப்புறம், சிறு குழந்தைபோல் ஜலத்தை இரு கைகளாலும் தட்டினான். பிறகு, சிறிது அசைவற்றுக் கிடந்தான்.

     அப்பொழுது, அவன் மனம் மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தது. அவனுக்குப் பற்பல சூழ்ச்சிகள் தோன்றின; மறு க்ஷணத்திலேயே அவை உபயோகமற்றவையென்று தள்ளப்பட்டன. பிறகு திடீரென்று, தெய்வானுக்கிரஹம் போல் அவனுக்கு ஓர் எண்ணம் வந்தது; ஏன் மாரிக்கவுண்டனோடு கலந்து பேசக் கூடாது? பணத்திற்காக அல்ல. ஐயோ பாவம்! அவனே சாப்பாட்டிற்குத் தன் பேரப் பிள்ளையின் கையைப் பார்ப்பவனாக இருந்தான். ஆனால், கொலைக் கேசு விசாரணைகளைப் பற்றி அவனுக்குத் தெரியாதது யாருக்குத் தெரியும்? அவனே குற்றவாளியாக இருந்ததும் தவிர, எவ்வளவோ சச்சரவுகளில் அவன் உள்மறைவாக வேலை செய்தான் என்பது, ஊரெல்லாம் அறிந்த விஷயம்.

     ஏராளமாய்த் திரவியத்தைச் செலவழித்து அவன் தப்பி விட்டாலும், அவன் வினையே அவனைச் சுட ஆரம்பித்தது. சாகிற காலத்தில், அவன் தனியாய் ஊருக்கு ஒரு மைலுக்கு அப்பால், மனித சஞ்சாரம் இல்லாத இடத்தில் ஓர் ஆலமரத்தின் கீழ்க் குடிசையைக் கட்டிக்கொண்டு, அதில் காலத்தைக் கழித்து வந்தான். அவ்விடத்தை விட்டு அவன் எங்கும் போவதே இல்லை. அவனைத் தேடி யாராவது போவதும் இல்லை. ஒரு நாளைக்கு ஒருதரம், அவன் பேத்தி மத்தியான்ன சமயத்தில், ஒருவாய்ச் சோறு கொண்டு வந்து கொடுப்பாள்; அதோடு சரி. நெற்றியில் சதா விபூதியைப் தடவிக் கொள்வதும், கடவுளைத் துதித்து முணுமுணுப்பதும் தவிர, அவனுக்கு வேறெரு வேலையும் இல்லை. கடவுளைத் துதிக்காத சமயத்தில், தன்னைச் சுற்றிலும் உதிர்ந்து கிடந்த காய்ந்த ஆலிலைகள் காற்றில் அலைவதை நோக்கியபடியே குடித்துக் கொண்டிருப்பான். அவனுக்கு அபூர்வமான சக்திகள்கூட ஏற்பட்டுவிட்டதாக, ஒரு வதந்தி பரவி யிருந்தது.

     புத்திமதி கேட்பதற்கு அவன்தான் சரியான ஆள் என்று வீரப்பன் நிச்சயித்துக்கொண்டான். உடனே மடமடவென்று உடம்பைத் துடைத்துக்கொண்டு, வெகு உற்சாகத்துடன் அவன் மாரிக்கவுண்டனுடைய குடிசைக்குக் கிளம்பினான்.

     அக்கிழவன், வீரப்பன் சொன்னது அனைத்தையும் சாந்தமாகக் கேட்டான். மாயாண்டியின் கொலையைப் பற்றி, முன்னதாகவே அவனுக்கு அவனுடைய பேத்தி மூலமாய்த் தகவல் வந்திருந்தது. ஆனால், அவ்வளவு விவரங்கள் தெரியவில்லை. தன் நரைத்த தாடியைத் தடவிக்கொண்டு, அவன் நிதானமாகச் சொல்லலானான்: “வேலுவை நிச்சியமாக உட்டுடுவாங்க. அது எனக்குக் கண்ணாடியிலே பாக்கறதுபோலே தெரியுது. ஆனா, வெங்கடாசலத்துக்கு ரொம்பத் திண்டாட்டம் இருக்குது; தப்பாது.”

     ஆனால், இந்த ஆரூடத்திற்காக வீரப்பன் அவனிடம் வரவில்லை.

     “நீ எதோ கம்பத்தையனாட்டம் சொல்லுறே, மாமா! உன் வாய்ப் பேச்சு பலிக்கட்டுமே. ஆனா, எனக்கு ஒரு சந்தேகம் வருது. இப்போ, வெங்கடாசலத்துக் கிட்டே கால் துட்டுக் கிடையாது. அது உனக்கு நல்லாத் தெரியும். வக்கீலை வைக்கிறது நடவாத காரியம்! அப்படி இருக்கறப்போ, கோர்ட்டுலே வாக்கு மூலம் கேக்கும்போது, அவன் எப்படி ஜவாப்பு சொல்லணு மின்னு நாமே வேலுவுக்குச் சொல்லித்தர வாணாமா? இவன் ஒண்ணிருக்க ஒண்ணு சொல்லி, தலையிலே மண்ணைப் போட்டுக்கிட்டா என்னா பண்றது? அதுக்கும் நீ கொஞ்சம் யோசனை சொல்லணும். ஜெயிலிலே, அவனைப் பாக்க விடுவாங்களா?”

     மாரிக்கவுண்டன் முகத்தில் ஒரு புன்சிரிப்புப் படர்ந்தது. “அதைப் பற்றி நீ ஒண்ணும் கவலைப்படாதே. ஒரு கொலைக் கேசுலே குத்தவாளி பாப்பராயிருந்தான்னா, சர்க்காருலேயே அவனுக்காக ஒரு நல்ல வக்கீலை நெயமிக்கறாங்க. அவனை ஒரு நாளும் அனாதியா உட்டுட மாட்டாங்க. நெசமாலும் கொலை செஞ்சவன் தப்பிச்சுக்கிட்டாலும் தப்பிச்சுக்கலாம்; ஒரு பாவமும் அறியாதவன் மட்டும் எப்பவும் ஆப்பிட்டுக்கக்கூடாது. அதுதான் அவுங்க நோக்கம். அதனாலே நீ கவலைப்படாதே, அப்பா. எல்லாம் வக்கீலே வேலுவைத் தயார் பண்ணிடுவாரு. அவுகளுக்குத் தெரியாததா? அங்கே என்னா இருக்கு? அடியிலிருந்து நுனி வரையிலும், ‘இல்லே, இல்லே’ன்னிட்டு அடிச்சுக்க வேண்டியது தான். ஆனால், அந்தப் பித்தலாட்டமெல்லாம் அவன்கிட்ட முடியாது டோய்! - எவன்? நிதம் இப்படி எரிஞ்சு அப்படிப் போறானே, அவன்கிட்ட உன் பாச்சா பலிக்காதுடா, தம்பி!” என்று மாரிக் கவுண்டன், ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். அவன் குரலே மாறிவிட்டது.

     “முடியாதுன்னா முடியாதுதான். அந்த ஜர்ஜி இல்லே, அவன் பாட்டனாலேகூட உன்னைக் காப்பாத்த முடியா துடா! உன்னைக் காப்பாத்தக் கூடியவன் அவன் ஒருவன்தாண்டா! உளுடா அவன் காலிலே; உளுடா!” என்று மாரிக்கவுண்டன் பெருங்கூச்சலிட ஆரம்பித்துவிட்டான். பழங்கதைகள் அவன் நினைவுக்கு வந்துவிட்டன. வீரப்பன் மிகவும் வருத்தப்பட்டான். இனி அங்கே தாமதிப்பது உசிதமில்லையென்று, அவன் கிழவனுக்குச் சில நல்ல வார்த்தைகளைச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு, கிராமத்தை நோக்கி விரைவாகச் சென்றான்.

     ஆனால், வெகுதூரம் வரையிலும் மாரிக்கவுண்டன் சொன்ன சொற்களும் அவைகளின் பாவமும், அவன் மனத்தைக் குடைந்து கொண்டே வந்தன.

     இருந்தபோதிலும், எல்லாம் வெகு அநுகூலமாய் முடியும் போல் இருக்குதே! வேலுக்கு உதவியாகப் பேச ஒரு வக்கீல் கிடைத்துவிட்டால், அவன் விடுதலையைப் பற்றி ஏன் சந்தேகப் படவேண்டும்? பணத்திற்காகவும் அவன் இனிமேல் அலைய வேண்டாம். நிலங்களை விற்பதென்றால் அது சுலபமான காரியமா? அதற்கு எத்தனையோ சடங்குகள் செய்யவேண்டும். நல்ல வேளையாய் அந்தப் பிடுங்கலெல்லாம் அவனுக்கு இல்லாமல் போயிற்று. அதுவும் தவிர, நிலங்களை விற்ற கெட்ட பெயர் அவனுக்கு வருவானேன்? என்றைக்காவது ஒருநாள் வெங்கடாசலம், அவன் அநியாயமாய் விற்றுவிட்டதாக அவதூறு சொல்லலாம். இந்த வம்புகளிலிருந்து அவன் தப்பியதும் ஒரு நல்லகாலமே.

     இவ்வாறு பற்பல விஷயங்களைக் குறித்து யோசித்துக் கொண்டே, அவன் வழிநடந்ததுகூடத் தெரியாமல் ஊருக்கு அருகில் வந்துவிட்டான். அப்பொழுது, “வீரப்பா, அந்தக் களுதைத் தாதனையுங்கூடச் சரிப்படுத்திட்டேன்,” என்று ஆறுமுகம் வெகு சந்தோக்ஷத்தோடு சொன்னான். ஆறுமுகம் எந்த விஷயத்தைக் குறிப்பிட்டான் என்பதே அவனுக்குப் புரியவில்லை.

     “நீ சொல்லுறது எனக்கு ஒண்ணும் விளங்கலையே,” என்று சொல்லி, அவன் விழித்தான்.

     “உனக்கு ஏன் விளங்கும்? - இப்போ, தாதனை உட்டா போலீஸ்காரங்களுக்கு வேறே சாச்சி ஏது? அவனும் அவங்களுக்கு விரோதமாகச் சொல்லிட்டா, அவங்க கேசு தொலைஞ்சாப் போலத்தானே?”

     “ஆமாண்டா, ஆமாண்டா! சரியான வேலை செஞ்சே நீ. நான் என்னத்தையோ நெனைச்சுக்கிட்டு வந்தேன். அது சட்டுனு என் புத்திக்குப் படல்லே. ஏன், இனிமேல் வேலு கேசு ஜெயிச்சாப் போலத்தான்! உனக்குத் தெரியுமல்ல? - வேலுக்குச் சர்க்காருலேயே நல்ல வக்கீலை வப்பாங்களாம்; வச்சுத் தீரணுமாம். குத்தவாளி ஏளைப்பட்டவனாயிருந்தா, அப்படிச் செய்யவேண்டியது அவுங்க கடமையாம். இப்போ, நான் மாரிக்கவுண்டன் கிட்டேயிருந்து அல்ல வாறேன்? கொலைச் கேசைப் பத்தி, அவனுக்குத் தெரியாதது எதுநாச்சும் இருக்குதா? அவனுக்கு விரோதமா சாச்சி சொல்ல ஆளும் இல்லாதே, அவன் பக்கம் பேசறதுக்கு ஒரு வக்கீலும் இருந்துட்டா, அப்புறம் அவனுக்கு என்ன பயம்?” என்று வீரப்பன் வெகு சந்தோஷத்துடன் சொன்னான்.

     “போவட்டும், அப்பா. அந்தப் பையனுக்கு எவ்வளவு ஒவகாரம் பண்ணாலும் தகும். ஒண்ணு, ரெண்டு களுதெங்களைத் தவிர, ஊரெல்லாம் அவன் நல்லதனமாத் திரும்பி வரணுமேன்னிட்டுச் சாமிக்கு வேண்டிக்கிட்டு இருக்காங்க. அந்தத் தாதன் பயலை வளிக்குக் கொண்டு வறதுக்குள்ளே, போதும் போதுமின்னு ஆயிடுச்சுப்பா. சொன்னபடி கேக்காட்டி மண்டையைப் பொளந்துடுவோம் இன்னுட்டானுங்க பயங்க. ஜம்புலிங்கம், ‘உனக்கும் மாயாண்டி கதிதான்’னு சொல்லிட்டான். அப்பத்தான் கொஞ்சம் பயந்திட்டான். நெசமாலும், அவனைச் சரியானபடி தீட்டறதுக்கேயிருந்தாங்க. அதை அவனும் கண்டுக்கிட்டான்.”

     “எப்படியாவது நம்ம காரியம் அனுகூலமானால் சரி. குருடன் கண்ணைத்தானே கேக்கறான்?” என்று சொல்லிவிட்டு வீரப்பன், வெங்கடாசலத்தின் வீட்டிற்குச் சென்றான்.

     வீரப்பன் சொன்ன வார்த்தைகளில், வெங்கடாசலத்துக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. சஞ்சலப்படும் அவன் மனத்திற்குக் கங்காணி ஊரில் இல்லாததே ஒரு பெரிய அபசகுனமாகத் தோன்றிற்று. ஆனால், தன் உற்சாகத்தினாலும் இருதயபூர்வமான அன்பினாலும், வீரப்பன் உண்மையான நிலைமையை மெல்ல மேல்ல வெங்கடாசலத்திற்கு விளக்கிக் காட்டினான். அப்போது, வெங்கடாசலத்திற்குக் கொஞ்சம் தைரியம் ஏற்பட்டது. ஆனால், வீரப்பனிடமிருந்து அவன் ஒரு வாக்குத் தத்தம் வாங்கிக் கொண்டான். அதாவது, வீரப்பனும் மதுரையோடு கூடச் சென்று, ஜில்லாக் கோர்ட்டில் கேசு முடிவாகும் வரையில், சகாயமாக இருக்க வேண்டுமென்பதுதான்.

     ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு விதமான தீர்மானத்திற்கு வந்து விட்டால், அதை உடனே செய்து முடித்துவிட வேண்டு மென்பது வெங்கடாசலத்தின் கருத்து. ஆதலால், வீரப்பன் அன்றைத் தினமே பிரயாணம் புறப்பட வேண்டுமென்று, அவன் கட்டாயப்படுத்தினான். ஆனால், அவ்வளவு அவசரப்படத் தேவையில்லையென்றும், வேலுவை ஜில்லா கோர்ட்டுக்கு அனுப்புவதற்கு முன், பள்ளி சப் மாஜிஸ்திரேட் ஒரு சிறு விசாரணை செய்ய வேண்டுமென்றும், அவ்விசாரணை இரண்டொரு தினங்கள் பிடிக்குமென்றும், இக்காலத்தைத் தான் மாரிக்கவுண்டனோடு கழித்து, இன்னும் அநேக விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றும், பலவாறாக அவனுக்குப் போதனை செய்து, வீரப்பன் அவனை நம்பச்செய்தான். அதுவுந் தவிர, நகரத்தில் மாரிக்கவுண்டனுக்கு ஒரு நண்பன் இருந்தான். வக்கீல்களுக்குக் கேசு பிடித்துக் கொடுப்பதே அவன் தொழில். அவனுக்கு அநேக தடவைகளில் மாரிக் கவுண்டன் வெகுமதிகள் அனுப்பினது வீரப்பனுக்குத் தெரியும். மாரிக்கவுண்டன் கையொப்பம் வைத்த ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு போனால், அவன் வேண்டிய உதவி செய்வானென்பதில் சந்தேகமில்லை. முக்கியமான விசாரணை என்னவோ, ஜில்லாக் கோர்ட்டில்தான் நடக்கும். அதுவரையில் வேலுவுக்குத் தைரியம் சொல்ல மதுரை பக்கத்திலேயே இருந்தான். இன்னும் ஏன் கவலைப்பட வேண்டும்?

     இவ்விதமாக வெங்கடாசலத்திற்குச் சமாதானப்படுத்தி வீரப்பன், தான் இரண்டு மூன்று தினங்கள் கழித்து ஊருக்குப் புறப்படுவதாகச் சொல்லிவிட்டான். அவன் திரும்பிவரும் வரையிலும், வள்ளி வெங்கடாசலத்திற்கும் அவன் மனைவிக்கும் உதவியாக, அவர்களுடைய வீட்டிலேயே இருக்க வேண்டு மென்றும் அவன் தீர்மானித்துவிட்டான்.

     ஆனால், அவன் மனைவி லக்ஷ்மிக்கு இது சம்மதமில்லை. அப்படிச் செய்வதனால், அவர்களுக்கும் மீனாக்ஷிக்கும் பெரும் மனஸ்தாபம் வருமென்று அவள் சொன்னாள். அப்பொழுது வீரப்பன், அவளை ஒருதடவை விழித்துப் பார்த்தான். தன்னை எப்பொழுதும் மறுத்துப் பேசாத புருஷன் இவ்வாறு நடந்து கொண்டதைக் கண்டு, லக்ஷ்மிக்கு ஆச்சரியம் ஒரு புறமும் அச்சம் ஒருபுறமும் உண்டாயின. இனித் தன் இஷ்டம்போல் எதுவும் நடவாதென்பதையும் அவள் நன்றாய் அறிந்துகொண்டாள். அவள் பெண் சங்கதியோ, அவள் எப்பொழுதுமே அடங்காப்பிடாரி. இப்பொழுது ஒளிமறைவில்லாமல் அவள், தான் மல்லனை ஒரு நாளும் கட்டிக் கொள்ள மாட்டேனென்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

     “அடி பயித்திக்காரி! இந்த அவகேடு நேந்துடாட்டி உனக்கு அப்பவே தாலி கட்டியிருப்பானே,” என்றாள் லக்ஷ்மி.

     “நானில்லே அம்மா பயித்தக்காரி,” என்று வள்ளி புன்சிரிப்புடன் சொன்னாள்: “இப்போ சொல்றேன் உன்கிட்டே. தாலி கட்டற சமயத்திலே, நான் பயித்திக்காரியாட்டம் பாசாங்கு செஞ்சு, உங்களையெல்லாம் கடிச்சுக் கிள்ளி எறிஞ்சுடறதூன்னு ஏற்பாடு பண்ணிக்கிட்டேன். யாருநாச்சும் எங்கிட்ட வந்திருப்பீங்களா அப்போ? - இதோ பாரு, இப்பவும் சொல்றேன் உனக்கு; சாமி புண்ணியத் துலே வேலு திரும்பி வந்துட்டாப் போச்சு; இல்லாட்டி, மல்லனுக்குக் கட்டிக் கொடுக்க என் பொணத்தைக்கூடக் கண்ணாலே பாக்கமாட்டே!”

     “ஐயோ! வள்ளி! என்ன பேச்சு இது! கொளந்தையா லச்சண மாயில்லையே. நான் எதுக்காவ அவனைக் கட்டிக்கச் சொல்றே னுன்னு உனக்குத் தெரியல்லையே? என் கொளந்தை மேலே எனக்குப் பிரியமில்லையா?” என்று லக்ஷ்மி வெகு துக்கத்தோடு சொன்னாள். “யாரு இல்லேங்கறாங்க; ஆனா, நீ மல்லன் சொத்துக்கல்ல செத்துப்போறே?ýü என்று அவள் சொல்லிவிட்டு, தன் தகப்பன் பிராயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யப் போய்விட்டாள்.

     மாயாண்டி இறந்த நாலாம் நாள், வீரப்பன் மாரிக்கவுண்டனிமிருந்து அவன் சிநேகிதனுக்கு ஒரு கடிதம் வாங்கிக்கொண்டு, ஊருக்குப் புறப்பட்டான். போகுமுன், வெங்கடாசலத்திற்கு வாரம் இருமுறை கடிதம் எழுதுவதாகவும், அவன் வீணாய்க் கவலைப் படவேண்டாமென்றும், அவனுக்குத் தைரியம் சொல்லி அவனிடம் விடைபெற்றுக் கொண்டான்.

     பதினாறு மைல்கள் நடந்து, மத்தியான்னம் சுமார் பன்னிரண்டு மணி நேரத்திற்கு அவன் பொன்மலைக்கு வந்து சேர்ந்தான். அக்குன்றின் அடிவாரத்திலிருந்த மரங்களின் நிழலில், அநேக இரட்டை மாட்டுவண்டிகள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. எல்லாம் பாரவண்டிகளாய் இருந்தன. அப்பொழுதுதான் அவனுக்குப் புத்தூர்ச் சந்தை ஞாபகத்திற்கு வந்தது. அவ்வண்டிகள், சந்தையில் பாரத்தை ஏற்றிக்கொண்டு நகரத்திற்குப் போய்க்கொண்டிருந்தன. அவைகள் பல சேர்ந்து, ஒன்றுக்கொன்று துணையாக இரவெல்லாம் வழி நடந்து, விடிந்ததும் சௌகரியமான இடங்களில் பகல் வெயிலுக்குத் தங்குவது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. பாரவண்டியா இருந்த போதிலும், வண்டிக்கு இரண்டொரு சவாரிகளையும் எடுத்துக் கொள்வது வண்டிக்காரர்களுக்கு வழக்கம். இப்படிச் சவாரி செய்யும் பிரயாணிகள், கால் கைகளை முடக்கிக்கொண்டு தானிய மூட்டைகளின் மீதுதான் விழுந்து கிடக்க வேண்டும். கரடு முரடான ரஸ்தாக்களில் இவ்வண்டிகள் போகும் பொழுது, அதிர்ச்சிக்குக் கேட்கவேண்டுமா? நகரவாசிகள் அவ்வண்டிகளில் ஏறுவதற்கே பயப்படுவார்கள். ஏறினாலும், அவர்களுக்கு உடம்பு வலிதீர ஒரு மாதமாகும். ஆனால் சுகம் அறியாக் கிராமவாசிகளோ, இக்கஷ்டங்களைக் கஷ்டங்களாகவே கருதமாட்டார்கள்; இப்படிப்பட்ட பிரயாணங்களில் அவர்கள் ஆனந்தமாகத் தூங்கவும் தூங்குவார்கள்.

     வீரப்பன் அதிக பாரமில்லாத வண்டி ஒன்றைத் தேடிப் பிடித்து, அவ்வண்டிக்காரனிடம் வாடகையைப் பேசி முடித்து, அவனுக்கு அச்சாரத்தையும் கொடுத்தான். பிறகு, தான் கொண்டு வந்த சாப்பாட்டைப் புசித்துவிட்டுக் களைப்பாற ஒரு மரத்து நிழலில் படுத்துக்கொண்டான்.

     இரவு சுமார் எட்டுமணிக்கெல்லாம் வண்டிகள் கட்டப்பட் டன; பிறகு, மணிக்கு இரண்டு மைல்கள் வேகத்திற்கு மேற் படாமல், எறும்பு ஊர்வதுபோல் ஊரத் தொடங்கின. அரிசி மூட்டைகளின் மீது சிறிது வைக்கோலைப் பரப்பி, அதன்மேல் ஒரு கோணியைப் போட்டு, வீரப்பன் படுத்துக்கொண்டான். வெகு நேரம் தூக்கம் வரவில்லை. நினைத்த காரியம் கைகூடுவதற்கு என்ன என்ன உபாயங்கள் செய்ய வேண்டுமென்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால், உடம்பு மிகவும் சோர்ந்திருந்தபடியால், அவன் ஒரு யோசனையில் இருக்கும் பொழுதே, தன்னை அறியாமல் தூங்கிவிட்டான்.

     அவன் விழித்துக்கொள்ளும்போது, சூரியோதயம் ஆகும் சமயம். கிழக்கு வானமெல்லாம், நெருப்பைப்போல் ஒரே சிவப்பாய்க் காணப்பட்டது. திமிர்பிடித்துப்போன கால்களைத் தடவிக் கொண்டு, அவன் மெதுவாக வண்டியை விட்டுக் கீழே இறங்கினான். நகரத்திற்கு இன்னும் ஒரு மைல் தூரம்தான் இருக்கும். இனிக் காலாற நடப்பதே உத்தமமென்று அவனுக்குத் தோன்றிற்று. கிராமவாசனை இன்னும் மாறவில்லை. ரஸ்தாவுக்கு இருபுறங்களிலும் கழனிகள் இருந்தன. சமீபத்தில் ஒரு சிறு வாய்க்காலும் ஓடிக்கொண்டிருந்து. பட்டணம் சேருமுன்னமே காலைச் சடங்குகளை முடித்துக் கொள்ளவேண்டுமென்று அவன் உத்தேசித்தான். நகரவாசம் என்றால் வீரப்பனுக்கு எப்பொழுதும் வெறுப்பு. அங்கே செய்திருக்கும் ஏற்பாடுகளெல்லாம், இயற்கைக்கு விரோதமானவை யென்பதே அவன் நம்பிக்கை.

     அவன் பட்டணத்துக்கு வந்தவுடன், நேராகப் பெருமாள் கோவிலுக்கருகில் இருக்கும் ராஜா சத்திரத்திற்குச் சென்றான். அவன் ஊரினர் நகரத்திற்கு வரும்பொழுதெல்லாம், இதுதான் அவர்களுக்குத் தங்குமிடம். சொல்லிவைத்தாற்போல் சத்திரத்தின் கிணற்றோரமாய் மதுரை, பல் விளக்கிக்கொண்டு இருந்தான். வீரப்பனைக் கண்ட மாத்திரத்தில், அவன் திடுக்கிட்டுப் போய் விட்டான். ஆனால், வீரப்பன் அவன் பயத்தை உடனே போக்கி, நடந்த விஷயங்களை யெல்லாம் சொன்னான். கோர்ட்டு நடவடிக்கைகளை அறிந்த நம்பிக்கையான ஒரு சிநேகிதர் கிடைத்ததற்கு, மதுரை மிகச் சந்தோஷப்பட்டான். ஏனெனில், பள்ளி வரையிலும் தான், அவனால் வேலுவோடு கலந்து பேச முடிந்தது. ஆனால், ஜில்லா ஜெயில் அதிகாரிகள், வேலுவை ஒரு முறைகூடப் பார்க்க விடமாட்டோமென்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் இரக்கமற்ற பாவிகள் என்று, மதுரை முறையிட்டான்.

     பிறகு, இருவருமாய் மாரிக்கவுண்டனுடைய சிநேகிதன் வீட்டைத் தேட ஆரம்பித்தார்கள். வெகுநேரம் அலைந்து திரிந்து, கடைசியாக அவர்கள் அவன் வீட்டைக் கண்டுபிடித்தார்கள்.

     சுப்பையா பிள்ளை, மிகவும் நல்லவனாகக் காணப்பட்டான். அவன், மாரிக்கவுண்டனுடைய யோகக்ஷேமங்களைப்பற்றி விசாரித்தான். தான் மாரிக்கவுண்டன் மூலமாய் எவ்வளவோ சம்பாதித்ததாகவும், அவன் சொல்லிக்கொண்டான். தன்னால் இயன்ற மட்டும், அவன் உதவி செய்யத் தயாராயிருந்தான்.

     அவன் அபிப்பிராயத்தில், வேலுவின் கேசை எடுத்துக் கொள்ளக் குறைந்தது ஒருமாதம் செல்லும் போலிருந்தது. பழங்கதைகளைப் பேசப் பேச, அவனுக்கு உற்சாகம் அதிகரித்து - எதற்கும் முதலில் தன் மனைவியின் உத்தரவு வேண்டு மென்பதைக்கூட மறந்து - கேசு முடியும் வரையில் அவர்கள் தன் வீட்டிலேயே தங்கலாமென்று அவன் சொன்னான். அதே க்ஷணத்தில், அவன் மனைவி அவனை விழுங்கிவிடுவதுபோல் விழித்துப் பார்த்தாள். அப்பொழுதுதான் சுப்பையா பிள்ளைக்குத் தான் செய்த தப்புத் தெரிந்தது. அவன் முகம் அசடு தட்டிற்று. அவன் கண்கள் சரணாகதியைத் தெரிவித்து, மன்னிப்பைக் கோரிக் கொண்டன. மதுரை எமகாதகன். இந்த நாடகத்தின் உள்மர்மத்தை அறிந்துகொண்டு, சுப்பையா பிள்ளைக்குத் தலைகொடுத்தான்.

     “இவ்வளவு பிரியமா எங்களுக்கு யாரு சொல்லுவாங்க! ஆனா நீங்க, கோவிச்சுக்காதீங்க. ராசா சத்திரத்துலே இருந்தாத்தான், எங்களுக்கு வரப்போகச் சௌகரியமாயிருக்கும். அது ஊருக்கு நடு மையத்திலே இருக்குது. அப்புறம் மேலே, எங்கூருலேயிருந்து யாரு வந்தாலும், அங்கேதான் எறங்குவாங்க. அப்பப்போ ஊரு சங்கதியைக் கண்டுக்கிறதுக்கும் எங்களுக்குச் சுளுவாயிருக்கும் - நீங்க எங்கமேலே வருத்தப்படக்கூடாது,” என்று மதுரை மிகப் பணிவாகச் சொன்னான். ஆனால், சில நிமிஷங்களுக்குப் பிறகு நடந்த ஒரு சம்பவத்தால், சுப்பையா பிள்ளையின் ஸம்ஸாரம் தாயம்மாளுடைய மனம் மாறிவிட்டது.

     அவர்கள் பேசிக்கொண்டிருந்தபொழுது, சுப்பையா பிள்ளை வீட்டில் வேலைசெய்யும் ஒரு சிறுவன், ஒரு பசுவைக் கொல்லைப்புறத்திலிருந்து வாசலுக்கு இழுத்துக்கொண்டு வந்தான். அதன் உடம்பில் எலும்பும் தோலுந்தான் இருந்தன. அப்பசுவைப் பார்த்ததும் மதுரை எழுந்திருந்து, “ஐயோ பாவம்! இந்தப் பசுவுக்கு என்ன நோவு?” என்று சொல்லிக்கொண்டே, அதைப் பரிசோதித்துப் பார்த்தான். “அடடே! இதுக்குப் பெரிய வியாதி பிடிச்சிட்டுதுங்க. சட்டுப்புட்டுனு வைத்தியம் பண்ணாட்டி செத்துடுங்க! இதன் பாலைக் குடிக்கிறீர்களா, என்ன?” என்றான்.

     “ஆமாம்; குடிச்சதுனாலே என்ன தப்பு?” என்றாள் தாயம்மாள். இதுவரையில் அவள் வாயைத் திறக்கவில்லை.

     “எங்கூருங்களுலே, நாங்க குடிக்கமாட்டம், அம்மா; அது உடம்புக்கு நல்லதல்ல; புளுப்பிடிச்சு, ரெத்தமெல்லாம் கெட்டுப் போயிருக்குதே.”

     “புழுவா! புழு எங்கிருந்து வந்தது?” என்றாள் தாயம்மாள், வெகு ஆச்சரியத்தோடு.

     “புளுதானம்மா, அதன் குளம்பு ஒவ்வொண்ணுலேயும் அஞ்சு, பத்துக்கு கொறையாமே இருக்கும். ஆனா, இன்னும் நோவு முத்தலே, லகுவாக்கிடலாம்,” என்றான் மதுரை, மாட்டைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டு.

     “பின்னே எங்க பால்காரக் கிழவன், புழுவைப்பத்தி ஒண்ணும் சொல்லல்லையே. அவன் வயதானவன்; நாலும் தெரிஞ்சவன்,” என்று அவனை மறுப்பது போலத் தாயம்மாள் சொன்னாள்.

     “நான் சொல்றேனின்னு நீங்க கோவிச்சுக்காதேங்க அம்மா. பட்டணத்துலே இருக்கிறவங்களுக்கு மாட்டைப் பத்தி என்ன தெரியும் - பட்டிக்காட்டான்களுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சின்னுட்டு நான் சொல்லிக்கிடுலே. இருந்தாலும், இவுகளைக் காட்டிலும் எங்களுக்குக் கொஞ்சம் கூடவே தெரியும் - பா, பா, சும்மாரு, சும்மாரு,” என்று சொல்லிக்கொண்டு, அப்பசுவின் காலை அவன் பரிசோதிக்க முயன்றான். ஆனால், அது அவனை நெருங்கவிடவில்லை. பிறகு வீரப்பன், சுப்பையா பிள்ளையின் சகாயத்தோடு, அதன் ஒரு குளம்பிலிருந்து தீக்குச்சியால் ஒரு புழுவை எடுத்தான். தாயம்மாள் பிரமித்துப் போய்விட்டாள்.

     “ஒண்ணு இல்லே, அம்மா; இன்னும் கொறஞ்சது நாலு, அஞ்சு அதிலே இருக்கும்,” என்றான் மதுரை.

     “இதுக்கு ஏதாவது மருந்து உனக்கு... உங்களுக்குத் தெரியுமா?” என்று தாயம்மாள், அசட்டுப் புன்சிரிப்போடு கேட்டாள்.

     “ஏன் தெரியாமே? அதை லகுவாக்காட்டி, ஏன்னு கேளுங்க. ஐயா செய்யற ஒவகாரத்துக்கு, நாங்க இதுகூடச் செய்யக்கூடாதா?”

     “லகுவாக ஒருமாதம் பிடிக்குமா?” என்று சந்தேகத்துடன் அவள் கேட்டான்.

     “என்னத்துக்குங்க? பத்து நாளுலே சரியாக்கிட மாட்டேன்! அப்புறம் ஒரு பத்து நாளைக்கு நல்ல ஊட்டம் கொடுத்தா, கோயிலு காளையாட்டம் ஆயிடாது?”

     “அப்படியானால், எங்க அம்மா வீட்டுக்கு ஒரு மாதம் பொறுத்துப் போறேனே,” என்றாள் தாயம்மாள், தன் புருஷனைப் பார்த்து. “நான் போவுறதுக்குள்ளே அதுக்குச் சுகமாயிட்டால், எனக்குக் கவலையில்லாமல் இருக்கும். ஊம், நீங்க ரெண்டு பேரும் எங்கள் வீட்டுலேயே இருந்திடுங்களேன். அதுலே உங்களுக்கென்ன கஷ்டம்?”

     “கஷ்டம் ஒண்ணும் இல்லீங்க. ஆனா, உங்களுக்கு என்னாத்துக்குங்க தொந்தரவு? நாங்க ஒங்களுக்கு ஒண்ணும் செய்யாட்டியும், கஷ்டத்தை வேறே கொடுக்கறதா? அது நாயமல்ல அம்மா. ஒங்க மாட்டைப் பத்தி நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. அதைக் கவனிக்கிறதைவிட எங்களுக்கு என்னா வேலை இருக்குது? இங்கே என்ன, எரு அடிக்கணுமா? தண்ணி எறைக்கணுமா? நாத்து நடணுமா? எதோ கொஞ்சம் சோத்தைப் பொங்கித் தின்னுட்டு, ஒரு கால்நாளி ஒங்க மாட்டுக்கு மருந்து போட்டுட்டு, பொளுதினிக்கும் நாங்க கையைக் கட்டிக்கிட்டு ஒக்காந்திருக்கவேண்டியது தானே? ஐயா சொல்றாரு; கேசு எடுக்க இன்னும் ஒரு மாதம் ஆகுமின்னு, அதுவரையிலும் நாங்க எப்படி பொளுதைப் போக்குறது? செக்கு இளுக்குற மாடு எப்பவும் இளுத்துக்கிட்டுத்தான் இருக்கணும் அம்மா, நான் ஒரு நாளெல்லாம் பாடுபடறவன்; இப்படிச் சும்மாத் தின்னிட்டுத் தின்னிட்டு உக்காந்திருந்தா, உடம்புக்கல்ல வந்திடும்!” என்று நடித்தான் மதுரை. வீரப்பனுக்குச் சிரிப்புப் பொறுக்கமுடியவில்லை. வெகு கஷ்டத்துடன் உதட்டைக் கடித்துக்கொண்டு, சிரிக்காமல் சமாளித்துக் கொண்டான்.

     “இப்போ, அந்தப் பேச்செல்லாம் எதுக்கு? நீங்கள் எங்கள் வீட்டுலே தங்கினால், எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. தலை யிலேயா கட்டிக்கிட்டுப் போறோம்? அரைப்படி வேகுற இடத்துலே இன்னொரு அரைப்படி வேகப்போகுது. அவ்வளவுதானே? எங்க வீட்டுக்காரருக்கோ, வரவர மறதி சாஸ்தியாய்ப் போச்சு. அவர் இந்த வேலையெல்லாம் விட்டு நாலு அஞ்சு வருஷமாச்சு. ஏதோ, உங்க புண்ணியத்துலே சாப்பாட்டுக்கு இருக்குது. இன்னும் ஓடி ஓடிச் சம்பாதிச்சு எங்களுக்கு என்ன ஆவணும்? குழந்தையா குட்டியா? பழகினவங்களாச்சேன்னிட்டு, உங்க காரியத்துலே அவர் தலையிட்டுக்கறாரு. நீங்க பக்கத்துலே இருந்து அடிக்கடி தூண்டு கோல் போட்டாத்தான், உங்க காரியம் முடியும். நானும் ஞாபகப் படுத்திக் கொண்டுதான் இருப்பேன். இருந்தாலும், நீங்கள் இருக் கிறாப்போல ஆகுமா? அதுக்காவத்தான், நான் உங்களை இங்கேயே தங்கச் சொல்றேன்,” என்றாள் தாயம்மாள், வெகு அக்கறையுடன்.

     “ஓகோ! அப்படியா! கண்டுக்கிட்டேன், கண்டுக்கிட்டேன். தாயே, நீங்க எது சொன்னாலும் நாங்க கேக்கறோம். ஆண்டவன் புண்ணியத்துலே, வந்த காரியம் எங்களுக்குக் கைகூடினாப் போதும், தாயே. வீரப்பா, இவ்வளவு பிரியமா நமக்கு யாரு சொல்லப்போறாங்க!” என்று மதுரை சொல்லி, யாருக்கும் தெரியாமல் வீரப்பனுக்குக் கண்ணடித்தான்.


மண்ணாசை : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22