அத்தியாயம் 22. வாழ்க்கையின் விசித்திரம்

     சூரியோதயம் ஆயிற்று. வள்ளியும் அலமேலுவும், சமையல் அறையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். வேலன் திரும்பிவந்த செய்தி, ஊரெங்கும் பரவிவிட்டது. கிராமத்தினர், கும்பல் கும்பலாக அவனைப் பார்க்க வந்து கொண்டே இருந்தார்கள். வந்தவர்களுக்கெல்லாம் பதில் கூறுவது, வேலனுக்குச் சற்று அலுப்பாய்த்தான் இருந்தது. ஆயினும், அவர்கள் அனைவரும் விசுவாசமுள்ளவர்களாகையால், அவர்கள் மனம் நோவாதபடி அவன் நடந்துகொண்டான்.

     அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ஓய்வு ஒழிவு இராது போல் தோன்றிற்று. பேச்சுக்கு இடம் கொடுத்தால் உடும்பு போல் பிடித்துக் கொள்ளுபவர்கள், கிராமத்தில் இரண்டொருவர் உண்டு. அவர்களும், திண்ணையில் முளையடித்து விட்டார்கள். வேலனுக்கு வேதனை பொறுக்க முடியவில்லை. அடிக்கடி உடம்பை ஒடித்துக்கொண்டான்; கொட்டாவி விட்டான். என்ன செய்தும், அவன் சிரமத்தை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இந்தச் சமயத்தில், நல்லவேளையாய் வள்ளி அவன் உதவிக்கு வந்தாள்.

     “கொஞ்சம் உள்ளே வாரையா? - மாமா, அது நல்ல தீனி கண்டு எத்தினி நாளாச்சோ! கொஞ்சம் சூடாப் பலவாரம் திங்கட்டும்,” என்று வள்ளி, ஓர் உடும்பைப் பார்த்துச் சொன்னாள்.

     “திங்கட்டும் அம்மா, திங்கட்டும்,” என்றான் அவன்.

     “அட, பேச்சு எங்கே ஓடிப்போவுது? அவன் செத்துச் சுண்ணாம்பாயி வந்திருக்கான். சாப்பிட்டுக் கீப்பிட்டு எளப்பாறட்டும். அப்பா வேலு, சாயங்காலம் சாவடிக்கு வந்திடு; ஆர அமரப் பேசிக்கலாம்,” என்றான் மற்றொருவன். அவன் உடும்பு இனமல்ல; எழுந்து சென்றான். அதன்மேல், நச்சுப் பேச்சுக்காரர்களும் அவ்விடத்தை விட்டு நகரவேண்டியிருந்தது.

     வேலன் உள்ளே நுழையும்பொழுது, மற்றும் சிலர் அவனைத் தேடி வந்ததாக அவனுக்குத் தெரிந்தது. ஆனால் வள்ளி, அவனைத் திரும்ப விடாமல் உள்ளே இழுத்துச் சென்று, பலகாரத்தை வைத்தாள்.

     “அப்பாவுக்கு இல்லியா - நம்ம அப்பாங்களுக்கு,” என்றான் வேலன், வள்ளியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு.

     “இதோ எடுத்துக்கிட்டுப் போறேனே! அவுங்க ரெண்டு பேரும் ஒண்ணாச் சாப்பிடுவாங்க,” என்று அலமேலு, சிரித்த முகத்தோடு பலகாரத்தை எடுத்துக்கொண்டு வெங்கடாசலத்தினிடம் சென்றாள்.

     ஒரு துண்டை மென்றுகொண்டே வேலன், வள்ளியைப் பார்த்த வண்ணம் இருந்தான். வள்ளி சிரித்துத் தலையைக் குலுக்கி, “நீ சாப்புடாட்டி நான் அப்பாலே போறேன்,” என்றாள்.

     “இவ்வளவா போடுவாங்க, நான் எப்படித் திங்கிறது? இரு, ஜம்புலிங்கம் குரலு கேக்குதே. என்ன ஓணுமோ தெரியில் லையே; பாத்திட்டு வரட்டா?” என்று வேலன் எழுந்திருக்க முயன்றான். ஆனால் வள்ளி, அவனைப் பலாத்காரமாய் உட்காரவைத்து, இலையில் வைத்த பலகாரம் முழுதையும் தின்று போகும்படி வற்புறுத்தினாள். அவள் பேச்சைத் தடுக்க மாட்டாமல் வேலன், மென்றும் மெல்லாமலும் விழுங்கிவிட்டு வெளியே போனாள்.

     ஜம்புலிங்கம், வெங்கடாசலத்தின் அறையில் இருந்தான். அவன், பொதுவாகக் கொலை வழக்குகளைப் பற்றி வீரப்பனை ஏதோ கேட்டுக்கொண்டிருந்தான்.

     “வழக்குப் பேச்சை இன்னும் உடமாட்டீங்க போலிருக்குதே,” என்றான் வேலன், அவர்கள் சம்பாஷணையில் கலந்துகொண்டு.

     “அது இல்லே, வேலு. ஜம்புலிங்கத்துக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்திடுச்சி. இப்போ, ஒருத்தனை ஒருதரம் விடுதலை ஆக்கிட்டா, மறுபடியும் பிடிச்சுப்பாங்களாங்குது.”

     “அதை யாரு கண்டாங்க? இந்தப் பேச்சு எதுக்காவ வந்திச்சு,” என்று வேலன் கேட்டான். வெங்கடாசலம் உற்றுக் கவனிப்பதைப் பார்த்து, ஜம்புலிங்கம் சற்றுத் தயங்கினான்.

     “என்ன யோசிக்கிறே, சங்கதியைச் சொல்லேன்,” என்றான் வேலன்.

     “ஒண்ணும் இல்லே, வேலு. அன்னிக்கு வந்த போலீசு இனிஸ் பெட்டர் ஐயாவும் ரெண்டு சேவுகன்களும், நம்மூருக்கு வந்திருக் காங்க,” என்று ஜம்புலிங்கம், இழுத்தாற்போல் சொன்னான்.

     வேலன் சிரித்தான்.

     “நீ ஒரு பயித்தியம். ஊருன்னா அவுங்களுக்கு வேலையிருக்காதா, எத்தினியோ சோலி. சேவகன் ஊருக்குள்ளே வந்தா, நீ அதை எனக்காவத்தானின்னு வச்சிட்டே. நல்ல ஆளுடா நீ” என்று வேலன், மறுபடியும் சிரித்தான்.

     “அது இல்லே, வேலு. அவங்க ஒன்னைப்பத்தி விசாரிச்சுக்கிட்டு இருந்தது என் காதுலே உளுந்திச்சு. அதுக்காவ இல்லே சொல்றேன்.”

     “என்னாது! அவங்க ஏன் விசாரிக்கணும்?” என்றான் வெங்கடாசலம் பதறிக்கொண்டு. அவன் கண்களில் தீப்பறந்தது. ஆத்திரத்தால் கை கால்கள் நடுங்கின.

     “ஒண்ணுக்கு ஒண்ணைக் கேட்டிட்டு, நீ ஒளர்றே. ஜம்பு, உன் பேச்சு நம்புறாப்போல இல்லியே,” என்றான் வேலன். ஆனால், அவன் குரலில் சற்றுக் பயம் தட்டிற்று.

     “நெசமாலும், எனக்கு ஒண்ணும் விளங்கல்லே, வேலு. இப்போ, பிச்சை வந்தால் சங்கதியெல்லாம் தெரிஞ்சுபோவுது; அவன் அவங்களையே சுத்திக்கிட்டு...”

     “இதோ! வந்திட்டானே, பிச்சை!” என்று வேலன், பிச்சை அலறிப் புடைத்துக்கொண்டு ஓடிவருவதைப் பார்த்துத் திடுக்கிட்டுச் சொன்னான்.

     “வேலு! வேறு எங்கேனாச்சும் ஓடி ஒளிஞ்சிக்கோ! அந்தப் போலீசுக்காரப் பயக, மறுபடியும் உன்னைத் தேடிக்கிட்டு வரானுக! ஓடு! இங்கே வந்திடுவானுக...”

     “மறுபடியுமா போலீசுக்காரங்க வந்துட்டாங்க! மறுபடியுமா! மறுபடியுமா!! மறுபடி..ஈ..ஈ..ஈ..ஈ...” என்று கூக்குரலிடும் போதே, வெங்கடாசலத்திற்கு வலிப்பு வந்துவிட்டது.

     “ஐயோ, அப்பா! அப்பா!” என்று கதறிக்கொண்டு, வேலன் வெங்கடாசலத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். “பிச்சே! அது மொவத்துலே கொஞ்சம் தண்ணியைத் தெளியேன். ஏ மாமா ஜம்பு, காலைப் பிடிச்சுக்கோ! ஒரு சாவி கொண்டா; சட்டுனு கொண்டா!” என்று கெஞ்சினான். வெங்கடாசலத்திற்கு வலிப்பு முற்றிவிட்டது. கால்களும் கைகளும், வெகு விரைவாக ‘விலுக்கு, விலுக்கு’ என்று உதைத்துக் கொண்டன. கண்விழிகள் மேல் இமைகளுக்குள் இழுபட்டு, அநேகமாய் மறைந்து போயின. மோவாய்க் கட்டை, கோரமாக ஒருபுறம் ஒதுக்கப்பட்டது. திடீரென்று, அவன் உடம்பு ஒரு துள்ளுத் துள்ளிற்று; மறு க்ஷணத்திலே, அவன் வலிப்பு நின்று விட்டது. தொண்டையில், சில விநாடிகளுக்குக் ‘கள கள’ வென்று சத்தம் கேட்டது. பிறகு, அவன் அசைவற்று விழுந்துவிட்டான். ஜம்புலிங்கம் ஓயாமல் விசிறினான்; பிச்சை, ஈரத் துணியால் அவன் முகத்தைத் துடைத்தான்; வீரப்பன், அவன் மார்பைத் தொட்டுப் பார்த்தான். அவன் முகத்தில் அதிருப்தி ஏற்பட்டது. பிறகு அவன், வெங்கடாசலத்தின் தாதுவைப் பிடித்துப் பார்த்துவிட்டு, வெகு துக்கத்தோடு தலையை ஆட்டினான்.

     “ஏ, மாமா! ஏன் தலையாட்டுறே?” என்று வேலன், மிகவும் பரிதாபமாகக் கெஞ்சிக் கேட்டான்.

     அலமேலு துக்கத்தை அடக்க முடியாதவளாய், வாயை இறுக மூடிக்கொண்டு குமுறினாள். அச்சமும் அமைதியும், அவ்வறையில் குடிகொண்டுவிட்டன. ஒவ்வொருவர் முகத்திலும் சோகம் தாண்டமாடிற்று. வேலுனுக்கு ஆவி குலைந்து போவதுபோல் இருந்தது. அனைவரும், அளவில்லா அன்போடும் பரிதாபத் தோடும் தன்னைப் பார்ப்பதை அவன் உணர்ந்தான். அவனுக்கு மாரடைப்பது போலிருந்தது. “ஏ, மாமா! சங்கதி என்ன?” என்று கெஞ்சினான். இன்னுங்கூட, உண்மையை அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

     வீரப்பனுக்கு நாவில் வார்த்தை எழும்பவில்லை; எச்சிலைக் கூட விழுங்கமுடியாமல் தொண்டை கட்டிக்கொண்டது. பிறகு, கஷ்டப்பட்டுக் கனைத்துக்கொண்டு, வேலனின் தலையைத் தடவிக்கொடுத்துச் சொன்னான்: “அப்பா! வேலு! அவன் பாடெல்லாம் தீந்துபோச்சுடா! இனிமே, யாரும் அவனை இமுசை செய்ய மாட்டாங்கடா! ஐயோ! வெங்கடாசலம். என்ன விதிடா! உனக்கு இப்பயுமாடா ஆவணும்! அடபாவி! இந்தக் கதி வரு மிண்ணு நான் கனவுலேயும் நெனைக்கில்லியேடா! ஐயோ, கடவுளே!” என்று பலவாறாக வீரப்பன், மெய்ம்மறந்து புலம்ப ஆரம்பித்துவிட்டான்.

     “ஐயோ! ஐயோ!” என்று தலையில் அடித்துக்கொண்டு, அல மேலு கதறிக் கதறி அழுதாள். கண்ணும் கண்ணீருமாய், வள்ளி அவளைச் சமாதானப்படுத்த எவ்வளவு முயன்றும், பயன்பட வில்லை. ஆனால் வேலன் மட்டும், குனிந்த தலை நிமிராமல் பல்லைக் கடித்துக்கொண்டு சிலைபோல் நின்றான். அவன் கண்களில் ஒரு சொட்டு ஜலமில்லை. பார்ப்போருக்கு, அவன் முகம் ஊதியிருந்ததுபோலக் காணப்பட்டது. அவன் படும் கஷ்டத்தின் கடுமையை, அவன் பிராண சிநேகிதர்களான ஜம்புலிங்கமும் பிச்சையுமே அறிந்தார்கள். அழுகைக் குரலைக் கேட்டு, அக்கம்பக்கத்தாரெல்லாம் ஓடிவந்தார்கள். அதில் ஒருத்தி, இன்னும் உயிர் இருந்தாலும் இருக்கலாமென்று சந்தேகித்துக் கிராம வைத்தியனான பரியாரி முத்தையனை அழைத்து வரும்படி, பிச்சையைக் கட்டாயப்படுத்தினாள். பிச்சையும் அதற்கு இணங்கினான். செத்தவன் பிழைத்து விடுவானென்ற நம்பிக்கை அவனுக்கு இல்லாவிடினும், அவன் வேறு எண்ணத்தை உத்தேசித்து வெளியே சென்றான். எப்படியாவது அந்தப் ‘போலீஸ் பாவி’களை, அந்தச் சமயத்தில் உள்ளே வரவொட்டாமல் செய்துவிட வேண்டு மென்பதுதான் அவன் கருத்து.

     நாலைந்து வீடுகள் தாண்டிப் போனதும், அவன் கண்ட அதிசயத்தால், அவன் தன் கண்களையே நம்ப முடியாமல் போனது. மதுரை மாமனும் அந்தப் போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டரும், அப்படிக் குலுங்கக் குலுங்கச் சிரித்துப் பேசுவதற்கு என்ன காரணம்? ஐயோ! மதுரை, இன்ஸ்பெக்டரைத் தட்டிக் கொடுத்துப் பேச ஆரம்பித்து விட்டானே! என்ன சுதந்திரம்! மதுரை மாமனுக்குப் பித்துபிடித்துப் போய்விட்டதோ? அப்படிச் சந்தேகிக்கவும் இடமில்லையே! இதென்ன வேடிக்கை! இவ்வாறு பிச்சை தவித்துக்கொண்டிருக்கையில், மதுரையே பிச்சையைக் கண்டதும், பேச ஆரம்பித்தான்:

     “பிச்சே! பிச்சே! வேலுவும் வெங்கடாசலும் ஒரு அடி அடிச்சாங்கடா! அவங்க லச்சாதிபதி ஆயிட்டாங்கடா! சோதிச்சுச் சோதிச்சுச் சாமி கடைசியிலே கண்ணைத் தொறந்து பாத்திச்சு அப்பா! இப்போ, எனக்கே லச்ச ரூவா வந்திட்டாப்போலே இருக் குது!” என்று மதுரை, பரமானந்தத்தோடு சொன்னான்.

     “நீ சொல்றது ஒண்ணும் விளங்கில்லியே மாமா!” என்று பிச்சை, திரு திருவென்று விழித்தான்.

     “உனக்கு மட்டுமா? யாருக்கும் விளங்காது. பிச்சே! கதை யாட்டமல்ல இருக்குது! ஆனா, அவ்வளவும் நெசம். அப்பாவு, அதுதான் வேலுவோடே அப்பன், பினாங்குக்கு ஓடிப்போனது நீ கேட்டிருக்காயில்லே? - அது வெகுநாளைச் சங்கதி. அதுங்கிட்டேருந்து பத்து வருசமா கடுதாசு ஒண்ணும் இல்லாத்துனாலே, அது பாவம், செத்துட்டுதாக்கு மின்னிட்டு நாங்க வச்சிக்கிட்டோம். ஆனா, அது சாவவும் இல்லே; ஒண்ணுமில்லே. ஒரு வெள்ளைக்கார யசமான் உயிரை அது காப்பாத்தின சங்கதி உனக்குத தெரியுமில்ல. (தெரியுமென்று பிச்சை தலையை ஆட்டினான்.) ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாலே, அந்த யசமான் செத்துப் போச்சாம். சாவுறப்போ, தன் சொத்துலே பாதியை அப்பாவுக்கு எளுதி வச்சிட்டுதாம். அது எவ்வளவின்னிட்டு நெனைக்கிறே? ஆறு லச்ச ரூவாயாம்! ஒண்ணு ரெண்டு இல்லே! யசமான் செத்த ரெண்டு மூணு வாரத்துக்கெல்லாம், இதுவும்...”

     “செத்துடிச்சா!” என்றான் பிச்சை, ஆத்திரம் பொறுக்கமாட்டாமல். “பின்னே, என்னாங்கிறே?” என்றான் மதுரை. “பாவம், நம்மூருக்குப் பொறப்பட்டு வந்துடணுமின்னிட்டு, ஏற்பாடுங்க செஞ்சிக்கிட்டு இருந்திச்சாம். இருந்தாற்போல் இருந்து, ரெண்டு நாள் காச்சல் அடித்ததாம். அவ்வளவுதான்; போயிட்டுது. ஆனா, அதுக்குமட்டும் தெரிஞ்சுபோச்சாம். அதனாலே, சட்டுப் புட்டுனு உயிலு எளுதி, அந்த ஆறு லச்சத்திலே மூணு லச்சத்தை, அந்த ஊருலே இருக்குற ஏளை பாளைங்களுக்குத் தருமத்துக்காவ வச்சிட்டுதாம். மீதி மூணு லச்சத்தை, வேலுவும் வெங்கடாசலமும் ஆளுக்குப் பாதியாய் பங்கிட்டுக்கிணுமின்னு எழுதிட்டுதாம். ஒவ்வொத்தருக்கும் பணத்தைச் சேக்க வேண்டிய பொறுப்பையும், அது அந்த ஊரு சர்க்காரான் தலையிலேயே போட்டிடுச்சாம் - அதுன் யோசனைப் பாத்தியா, பிச்சே?” என்று மதுரை, வியந்து சொன்னான்.

     பிச்சை பெருமூச்சு விட்டுத் திணறினான். “இதெல்லாம் உனக்கு யாரு சொன்னாங்க?” என்று சொல்லிப் பிச்சை மதுரையையும் போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டரையும் மாறி மாறிப் பார்த்தான்.

     “இதோ, ஐயா வந்திருக்காரே; இதைச் சொல்லத்தானே வந்திருக்காரு? அந்த ஊரு சர்க்காரான், கண்ணைமூடிக்கிட்டு யாருக்காச்சும் பணம் கொடுத்திடுவானா? இன்னான்தான் வேலு, வெங்கடாசலமின்னு ருசுப்பண்ண வாணாமா? இல்லாட்டி, நானும் வெங்டாசலமின்னு சொல்லிக்கிலாம் இல்லியா? அந்த ஊரு சர்க்காரு நம்ப சர்க்காருக்கு எளுதி, அதுன் பேருலே அவுங்க நம்ப ஐயாவை அனுப்பிச்சிருக்காங்க,” என்றான் மதுரை, ஸப் இன்ஸ்பெக்டரைச் சுட்டிக்காட்டி. “இந்தக் கிராமத்துலே இப்பேர்க் கொத்த ஆளுங்க இருக்காங்க; அப்பாவு உயிலுலே கண்டிருக்கறது நெசமாலும் அவுங்கதான் இன்னிட்டு, அவரும் எளுதணுமல்ல?” என்றான்.

     “அந்தச் சங்கதி, எனக்கு இங்கே வருவதற்கு முந்தியே தெரியாதா? வேலன் கேசுலேயே, எல்லாச் சங்கதியும் அடிபட்டு ரிகார்டு ஆயிருக்குதே, அப்பா. இருந்தாலும் என் கடமையைச் செய்யணும் பாரு; அதற்காக வந்தேன். அதோடு கூட, அப்போ அவனைத் துன்பத்துலே வைக்கிறதுக்கு நான் வரவேண்டியதாயிருந்தது. அதனாலே, இப்போ சுகத்துலே வைக்கறதுக்கும் நானே வந்துவிட்டேன்,” என்று ஸப் இன்ஸ்பெக்டர் சிரித்தார்.

     “ஐயையோ! எங்களுக்குத் தெரியாமே போச்சே!” என்று பிச்சை, கைகளால் முகத்தை மூடிக்கொண்டான்.

     “என்னாதுடா பிச்சை?” என்று மதுரை திடுக்கிட்டுக் கேட்டான்.

     “ஏ, மாமா! வெங்கடாசலம் மாமன் செத்திடுச்சு!”

     “என்னாது! என்னடா பேத்தறே? பித்துக் கித்துப் பிடுச்சுப் போச்சா?”

     “இல்லே மாமா, இல்லே! மெய்யாலும் அது போயிடுச்சே!” என்று வெகு துக்கத்தோடு கதறிக்கொண்டு, போலீஸ் அதிகாரி யைப் பார்த்துப் பிச்சை சொன்னான்.

     “எசமான், ஒங்களைப் பாத்ததும் எங்களுக்குத் திகிலாப்போச்சு. ஐயோ, சாமி! மறுபடியும் வேலுவைப் பிடிக்க வாரீங்கன்னிட்டு எண்ணிக்கிட்டோம். நடுக்கத்துலே, வெங்கடாசலம் மாமனுக்கு வலிப்பு வந்திடிச்சு. புளுவாத் தவிச்சுப் போச்சு. பொறவு, இருந்தாற்போல இருந்து, ஒரு நிமிசத்துக்கெல்லாம் உயிரு போயிடுச்சு. என்னா செய்யணுமின்னுகூட எங்களுக்குத் தெரியாமே போச்சே!” என்று பிச்சை துக்கித்தான்.

     “அவன் செத்துட்டானா! வெங்கடாசலம் செத்துட்டாôனா! நான் நம்புல்லேடா! அட பாவி மகனே! என்னாடா செஞ்சே! அப்பா வெங்கடாசலம்! வெங்கடாசலம்! ஐயோ! ஐயோ!” என்று மதுரை தவித்து, கனத்தால் சரிந்து விழக்கூடாதென்று பயப்படுவதுபோல், அடிவயிற்றை இரு கைகளாலும் இறுகப் பிடித்துக்கொண்டான். பிறகு அவன், ‘லொங்கு லொங்கு’ என்று வெங்கடாசலத்தின் வீட்டிற்கு ஓடினான்.

     “ஆஹா! என்ன அநியாயம்!” என்றார் போலீஸ் அதிகாரி: “அட, நீங்கள் யாராவது என்னைக் கேட்டிருக்கக்கூடாது? போலீஸாருக் குக் கைது செய்வதைத் தவிர வேறு வேலை இல்லையா? எனக்கல்ல கஷ்டமாயிருக்குது? நான் வந்திராவிட்டால், கிழவன் சாக மாட்டான் இல்லையா? - அதுவும், அவனுக்குப் பெரிய பாக்கியம் வந்தபோது! சே, சே, ரொம்ப மோசம்! அட, மூளை கெட்ட பயல்களா! அநியாயமாய் ஒருவனைக் கொன்னுட்டீங்களே! ஆனால், இதற்கு நானென்ன செய்வேன்? ஓ சரி, போனது போச்சு; நான் இன்னும் கொஞ்சநாள் கழித்து வருகிறேன். உன் சிநேகி தனுக்கு நான் கட்டாயம் ஆறுதல் சொல்ல வேண்டும். அப்பவும் யாரையாவது கொன்றுவிடாதேயுங்கள்,” என்று அவர் சலித்துக் கொண்டு, சேவகர்களுடன் போய்விட்டார்.

     பிச்சை, வேலனுடைய வீட்டிற்கு ஒடினான். அங்கே குழப்பம் அதிகரித்துவிட்டது. அநேகர் வந்து கூடிவிட்டனர். பெண்பிள்ளைகள், ஒப்பாரிவைத்து அழுதுகொண்டிருந்தார்கள். வேலன், தலை யில் கைகளை வைத்துக்கொண்டு, ஒதுக்கமாய் உட்கார்ந்து கொண் டிருந்தான். அவன் வாய்க்குப் பூட்டுப் போட்டாற்போல் இருந்தது.

     ஆனால் மதுரை, குழந்தைபோல் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான். மதுரை மாமன் இவ்வளவு கோழை மனமுடையவனென்று, பிச்சை நினைக்கவேயில்லை.

     “என்ன அக்குருமம்! என்ன அக்குருமம்! அட பாவி! சாவறத் துக்குத்தானா ஒனக்குச் சொத்து வந்திச்சு? வாய்க்கு எட்டினது கையிக்கு எட்டாமே போச்சே! உன் கனவுலேகூட இவ்வளவு பணம் வருமின்னுட்டு நெனைச்சிருக்கமாட்டயேடா! இன்னும் ஒருநாள் பொளச்சு இருக்கக்கூடாதா? அட! ஒரு மணிநாச்சும் இருக்கக்கூடாதா? இந்தச் சேதியைக் காதாலே கேட்டாவது சாவக் கூடாதா? ஐயோ! எவ்வளவு லச்சம் இருந்தா என்னடா? போன உசிரு வருமா?” என்று மதுரை புலம்பினான்.

     வீரப்பனுக்குத் துக்கம் ஒரு பக்கம். பிரமை ஒரு பக்கம். விஷயம் அறியாதவன்போல் அவன் நெற்றியைச் சுளுக்கினான். போலீஸ் அதிகாரி வந்த காரணம் வேலனுக்குத் தெரியுமோ தெரியாதோ என்ற சந்தேகம், பிச்சைக்குப் பிறந்தது. போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டர் திரும்பிப் போய்விட்டானென்று, அவன் வேலனுக்கு மெதுவாகச் சொன்னான்.

     “சப்பினிஸ்பெக்டரா! சப்பினிஸ்பெக்டரா!” என்று மயக்கத்திலிருந்து தெளிகிறவன் போல, வேலன் திருப்பித் திருப்பிச் சொன்னான். பிறகு, கோபாவேசத்துடன் குதித்து நின்று, “அக்ருமக்காரப் பயக! போனதரம், ஒண்ணுமில்லாததுக்கு என்னை இளுத்துக்கிட் டுப் போனானுக. இந்தத் தரம், ஒண்ணுக்கு மூணா உயிரை வாங்காட்டி ஏனின்னு கேளு!” என்று கூவினான்.

     “ஐயோ, வேலு! உன்னைப் பிடிச்சுக்கிட்டுப்போவ அவரு வருல்லே. உனக்கு வந்த நல்ல காலத்தைச் சொல்லணுமினு அல்ல, அவரு வந்தாரு?” என்று பிச்சை பிடித்துக் கொண்டான்.

     “எனக்கு நல்ல காலம் வந்திச்சா! எங்கப்பாரு மனசு நொந்து நொந்து செத்தா, எனக்கு நல்ல காலமா? டேய், உனக்குப் புத்தி கலங்கிப்போச்சா? இல்லாட்டி, எளக்காரமாயிருக்குதா?”

     மதுரைக்குத் திடீரென்று ஞாபகம் வந்தது.

     “அப்பா, வேலு! என் மூளை கெட்டுப்போச்சுடா - நான் சொல்ல மறந்திட்டேண்டா! அப்பாவுகூடப் போயிட்டானாமுடா! நாலஞ்சு மாசமாச்சுதாம். சாவுறப்போ உயில் எளுதி, உனக்கும் இந்தப் பாளாப்போனவனுக்கும் ஆறு லச்ச ரூவா வச்சிருக்கா னாம்,” என்றான் மதுரை, செத்தவனைக் காட்டி.

     “ஹ!” என்று எல்லோரும், ஒரே மூச்சில் ஆச்சரியப்பட்டார்கள்.

     “ஆஹா! என் தோப்பானாரு செத்தாரு; எங்க ‘அப்பா’ செத்தது; எனக்கும் ஆறு லச்சம் வந்திடுச்சு! இனிமே, எனக்கு என்னா கொறவு!” என்று வேலன், பரிகாசமாய்ச் சிரித்தான்.

     “நம்மூரெல்லாம் வாங்கிடலாமே!” என்று ஒருவன், அடக்க முடியாத ஆச்சரியத்தோடு சொன்னான்.

     “அட, ஒலகமெல்லாம் வாங்கிட்டாத்தான் என்ன?” என்றான் வேலன், மிகவும் வெறுப்புடன்: “எங்கப்பாருக்கு ஒதவாத சொத்து, யாருக்கு வேணும்? சாவுறவரையிலும் சொகமுண்டா? மனசுக்குச் சொகமுண்டா? நல்ல வைத்தியம் பண்ணக்கூடத் துட்டு இல்லாமே போச்சே! அது செத்தப்புறம், எனக்கு ஆறு லச்சம் வருதா? இதென்ன எளக்காரமா? அந்தச் சொத்தைக் கொண்டுபோய் ஒடப்புலே போடு! எல்லாம் ஒளிஞ்சுது, ஒளிஞ்சுது!” என்று அவன் கைகளை உதறிக்கொண்டு சொன்னான்.

     மதுரை, அவனை மெதுவாகத் தட்டிக்கொடுத்தான்: “அப்பா, வேலு! பொறுத்துக்கோ! அப்பா பொறுத்துக்கோ! கஷ்டந்தானடா, ரொம்பக் கஷ்டமடா! ஐயோ கடவுளே! நான் அறியேனா!” என்று வேலனுக்குச் சமாதானம் சொல்லப்போக, அவன் தன் துக்கத்தையே வெளியிட்டான்.

     “என்னாத்தை அறியறது! எனக்கு ஒண்ணும் விளங்கல்லியே! கண் காணாத சீமையிலே என்னைப் பெத்த தோப்பன் செத்துட்டது இன்னா, அது எனக்கு ஏற்கில்லையே. அது எனக்கு ஒரு வேத்து மனிசன்தானே! - ஆனா, எங்கப்பாவைப் பாத்தா, ஐயோ! என் வவுற எரியுதே! ஐயோ, அப்பா! அப்பா!” என்று, நாவில் வார்த்தை எழும்பாமல் குமுறினான் வேலன்.

     “எத்தினி பேருக்கு ஒவகாரம் பண்ணிச்சு! எத்தினி பேருக்குத் தலை கொடுத்தது! அதுக்கு இந்தக்... கதியா! அந்தச் சாமிக்குக் கண்ணு இருக்குதா!” என்று அழுதான். பிறகு கண்களைத் துடைத்துக்கொண்டு, “அது செத்தப்புறம், பணம் யாருக்குத் தேவை? எனக்குக் கால் துட்டு வாணாம். நான் எங்கேநாச்சும் ஓடிப் போறேன். இதென்ன பொளைப்பு! ஒலகத்துலே நல்லது பொல் லாதது இல்லையா? எல்லாம் தலைகீளாயிருக்குதே! நான் இந்தச் சங்கதியைக் கண்டுக்கிட்டுத்தான் ஆவணும். காடோ மலையோ, பெரியவங்களைத் தேடி, அவுங்க காலுலே உளுந்திடுறேன். கருமாதி ஆவட்டும்; ஓட்டம் பிடிச்சுடுறேன்,” என்றான் அவன், கையை ஆட்டிக்கொண்டு. அவனுடைய பாவனைகளைப் பார்த்தால், மதுரைக்குப் பயமாயிருந்தது.

     “வேலு, வாணாம் அப்பா! வாணாம், வாணாம்! சாவும் பொறப்பும் நம்ம கையிலேயா இருக்குது? ஆண்டவன் ஆணைக்கு மீறி யாராலே நடக்க முடியும்? பொறந்தவங்க சாவாமே இருக்க முடியுமா? துன்பப்படாத மனிசன் ஒலகத்துலே எவன் இருக்கான்? கஷ்டம் வந்தப்போ, பொறுத்துக்கணும். செத்தவங்களோடு எல்லாம் முடிஞ்சு போவுதா? பொளச்சிருக்கறவங்க சங்கதியைப் பாக்க வாணாமா? சொல்லு. அது நம்ம கடமை இல்லியா? அந்தப் பாவிக்கு ‘நத்தைக்காடு’ மேலேதான் உயிரெல்லாம். அதுலேயே அவனைப் பொதச்சு ஒரு மடம் கட்டிடலாம். அதைச் சுத்திப் பூச்செடிங்களை...”

     வேலன் பரிகாசமாகச் சிரித்தான்: “என்ன யோசனை! அதுலே என்ன சொகம் அதுக்கு? பாத்திக்கிட்டா இருக்குது? அப்படி யின்னா, செத்த பேருக்கெல்லாம் எவ்வளவோ செய்யலாமே. நான் நம்புல்லே, மாமா - எனக்கு ஒண்ணுமே விளங்கில்லியே! ஆடித் தேடிச் சம்பாதிச்சுத் தலையிலே கட்டிக்கிட்டுப்போறது என்ன? இதுக்காவ, ஓய்வு ஒளிவு இல்லாமே, இப்படித் திண்டாடுவானேன்? எங்கப்பாரு கடனை நான் எப்படித் தீத்துக்குவேன்? உசிருக்கு உசிரா என்னை வளத்து வந்துச்சே! என்னாலே அதுக்கு என்ன ஒவயோகம். அது எனக்குச் செஞ்சதுலே, நூத்துலே ஒரு பங்காவது அதுக்கு நான் செய்ய வாணாமா? எப்படிச் செய்வேன்? எனக்கு யாரு வளி காட்டுவாங்க? என் நெஞ்சுலே இருக்கிற பளுவை, நீ என்னத்தே கண்டே? என்னாலே தாங்க மாட்டுலே, மாமா! நாலும் தெரிஞ்சவங்க நம்மூருலே இல்லாமையா போயிட்டாங்க? அவுங்களைத் தேடிப் பிடிச்சு, இந்தப் பாரத்தை நீக்கிற வரையிலும், எனக்கு ஒரு வேலையும் ஒடாது. இந்த வேதனையைத் தீத்துக்க, நான் எங்கேநாச்சும் ஓடணும்! ஓடணும்!” என்று பரிதாபப்படும்படி, கையை இதயத்தின் மேல் வைத்துக் கொண்டான்.

     “வேலு! பதறாதே! பதறாதே! உன் அம்மா சங்கதி என்ன?”

     “எங்கம்மாவா!” என்றான் வேலன், வேறு நினைவுடன். அவ்வார்த்தை, என்ன என்னவோ நினைவுகளை மூட்டின. பிறகு, தன் ‘அம்மா’வை உற்றுப் பார்த்தான். அவள் ஒன்றையும் கவனியாது, இதயம் உடைந்து விடுவதுபோல் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். பிறகு, அப்படியே அவன் பார்வை வள்ளியின் மேல் விழுந்தது. வள்ளி கண்ணும் கண்ணீருமாய், உலகமனைத்தையும் மறந்து, வேலனைப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவள் துக்கம் இனிமேல் கட்டுக் கடங்கா தென்பதை, அவள் துடிக்கும் இதழ்கள் வெளிப்படுத்தின. பிறகு, அவ்விருவர் கண்களும் சந்தித்த க்ஷணத்திலே, அவள் பெருமூச்சு விட்டு மூர்ச்சையாய்க் கீழே விழுந்தாள்.

     வேலன் ஓடி அவளை வாரி எடுத்து, “வள்ளி! வள்ளி!” என்று அன்பு ததும்ப அழைத்தான். ஆனால், சில வினாடிகள் வரையில் அவளுக்குத் தெளிவு வரவில்லை; பெருமூச்சுவிட்ட வண்ணம் இருந்தாள். பிறகு மயக்கம் தெளிந்ததும், கண்களைத் திறந்து பார்த்துத் தேம்பினவாறே, “என்னை உட்டுட்டுப் போவாதே! உட்டுட்டுப் போவாதே! நீ போறப்போ என்னையும் அளச்சிக்கிட்டு போ!” என்று கெஞ்சினாள்.

     வேலன், அவள் வெளுத்த முகத்தைப் பார்த்தான்.

     அவள் விழிகளில் ததும்பும் உருக்கத்தின் வேகத்தைக் கண்டு, அவன் பிரமித்தான்.

     ஒருமுறை, அந்தத் தீனமான பார்வை அவன் மனத்தை உருக்கிற்று; மற்றொருமுறை, அதன் அளவற்ற சக்தி அவனை அடக்குவதுபோல் இருந்தது. அன்பும் ஆத்மத் தியாகமும் பொங்கி யோடும் அப்பார்வையில், அவன் இரண்டொரு நிமிஷம் ஈடுபட்டு, மதிமயங்கி நின்றான். அப்பொழுது, அது இல்வாழ்க்கையின் கருத்தை ஒருவாறு விளக்குவதுபோல் அவனுக்குப் புலப்பட்டது.

     பிறகு, தாழ்ந்த இனிமையான குரலில், “உன்னைவிட்டு, ஒருநாளும் பிரியமாட்டேன்,” என்று அவன், அவளுக்கு வாக்குத் தத்தம் செய்தான்.

முற்றிற்று


மண்ணாசை : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22