உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அத்தியாயம் 4. கல்யாணப்பேச்சு மாயாண்டி வாய் திறவாமல், சோழப் பிரம்மஹத்தி போல் வெங்கடாசலத்தின் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருக்க, அதே சமயத்தில் அவன் தமக்கை மீனாக்ஷி, தங்கம்மாளிடம் வேலனைத் தன் வாய் வலிக்கும் வரையில் சபித்துக் கொண்டிருந்தாள். வைது வைது ஒருவிதமாக மீனாக்ஷிக்கு ஆறுதல் ஏற்பட்டது. பிறகு, அவள் அந்தக் கிராமவாசிகளினுடைய ஆஸ்திபாஸ்திகளைக் குறித்துப் பேசத் தொடங்கினாள். இருட்டும் சமயம். மாடுகளெல்லாம் மழைக்கு எப்படியோ சமாளித்துவிட்டுத் திரும்பி வீடு வந்துகொண்டிருந்தன. மாடு மேய்க்கும் பிள்ளைகள் யாரும் காணப்படவில்லை. ஆனால், ஒவ்வொன்றும் வெகுவிரைவாகத் தன் வீட்டிற்குள் ஓட முயன்றது. அந்த மந்தையில் தன் எருமை எங்கு இருக்கிறதென்று தங்கம்மாள் கண்ணுற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். மீனாக்ஷி தன் லேவாதேவிப் பிரதாபங்களைப் பற்றிப் பேசிக் கொண்டது கூட, அவள் காதில் விழவில்லை. இருந்தாற் போலிருந்து தங்கம்மாள் சிரித்தாள். மீனாக்ஷி உடனே பேச்சை நிறுத்தினாள். தன்னைப் பரிகசிப்பதுபோல் அவளுக்குப்பட்டது. “ஏன் சிரிக்கிறே?” என்று சற்றுக் கோபத்துடன் கேட்டாள். “ஐயோ! உன் சமாசாரமில்லே. அதோ அந்தப் பய வேலன் - மெய்யாலும், அவனுக்குக் கொளுப்பு ரொம்பத்தான் இருக்குது. ரெண்டு கையிலேயும் என்னமோ வெச்சுக்கிட்டு குரங்காட்டம் ஒரு எருமை முதுகு மேலே தாவி ஒக்காந்துக்கிட்டுச் சவாரி பண்றான். அதைப் பாரேன்,” என்றாள் தங்கம்மாள், அடக்க முடியாத சந்தோஷத்துடன். “கொரங்கு குதிக்கிறது ஒரு வேடிக்கையா?” என்று வெறுப்புடன் சொல்லிக்கொண்டே, கையால் கண்களின் பார்வையைச் சற்று மறைத்துக்கொண்டு, சுட்டிக்காட்டின பக்கம் மீனாக்ஷி பார்த்தாள். வேலன் எருமையின் முதுகில் குதிரை ஸவாரி செய்வது போல் உட்கார்ந்துகொண்டு, மாடு அசைவதற்குத் தகுந்தபடி தன் உடம்பையும் ஆட்டிக்கொண்டிருந்தான். “பார்த்தா எமனாட்டந்தான் இருக்குது,” என்று கம்மிய குரலோடு, மீனாக்ஷி அழுத்தந் திருத்தமாய்ச் சொன்னாள். “அதென்னா அப்படிச் சொல்றே, அவன் அளகு நம்மூரிலே எந்தப் பிள்ளைக்கு இருக்குது?” என்றாள் தங்கம்மாள். “அடி பயித்தக்காரி! அவன் அளகெப்பத்தி யாரு பேசறாங்க -அதுவும் பார்க்கப் போனா, ஆம்பளைக்கு அளகென்னா வந்தது, அளகு? நான் சொன்னதை நீ கண்டுக்கில்லையே. எருமெக் கடா எமனுக்கு வாஹனம் இல்லியா? அவன் இப்படித்தானா சவாரி செய்யணும்?” “ஆமாம், குளந்தைகளுக்கு என்னா தெரியும்?” என்று பரிந்து கொண்டு தங்கம்மாள் சொன்னாள். “மெய்தான். ஆனால், அவுங்களுக்குச் சொல்லிக் கொடுக்கத் தேவில்லையா? எல்லாம் வளக்கிறதுலே இருக்குது. ஒரு பையனைப் போன வழியெல்லாம் விட்டுட்டு, அப்புறம் நல்ல கொணம் வரல்லேன்னா, எங்கிருந்து வரும்? ஒரு நாள் தவறினாலும் தவறும், அவன் யாரோடனாச்சும் சண்டைபோடறது தவறாது. என்னா அளகோ! அவனுக்கு மூளை கொஞ்சங்கூட இல்லை. என்னிக்காவது ஒருநாள் காலையோ கையையோ ஒடிச்சுக்கத்தான் போறான். ஏளு எட்டு நாளைக்கு முந்தி, ஆத்தங்கரையிலே வேப்பமரத்து மேலே ஏறிக் கீளே மடுவுலே குதிச்சானாம். ஆறு வத்தின காலம் இப்போ; கல்லோ கட்டையோ, மரமோ மட்டையோ, படாத இடத்திலே பட்டுதூன்னு வச்சக்கோ, அவன் கதி என்ன ஆயிருக்கும்? எங்க மல்லன் அந்த மாதிரி எப்பொவாவது செய்வானா?” என்று மாரைத் தொட்டுக்கொண்டு, மீனாக்ஷி பெருமையாகச் சொன்னாள். “ஒரு நாளும் செய்யமாட்டான்,” என்று தங்கம்மாள், வெகு விரைவாகப் பதில் உரைத்தாள். “இந்த மாதிரிப் பயலுக்குத்தான், ஒங்க லச்சுமி அவ மகளைக் கட்டிக் குடுக்கப் போறாளாம். அவனாலே அவளுக்கு ஒரு சொகமும் இருக்காது. நீ சந்தேகப்பட வேண்டாம்,” என்று மீனாக்ஷி நிச்சயமாகச் சொன்னாள். “அந்தக் கவலை நமக்கென்ன? இருந்தாலும் அவன் அவ்வளவுக்குக் கெட்டுப்போவானா?” “ஆ, அங்கேதான் நீ நெனைக்கிறது தப்பு. என் பேச்சைக் கேளு. உன்னைக் காட்டிலும் நான் வயசுலே ரொம்பப் பெரியவ. நம்ம பளமொளி ‘தொட்டிலிட்டது சுடுகாடு’ இங்கறது, எப்பவும் பொய்யாவாது. சொத்து கெடைக்கிதுன்னு ஆசையிருக்கலாம். அதுகூட...” என்று குரலைத் தாழ்த்தி ரகசியமாக, கம்மிய தொண்டை மேலும் கொஞ்சம் கம்மும்படி சொல்லத் தொடங்கினாள்: “...மூணு வருசத்துக்குள்ளே வெங்கடாசலம் வட்டிக்கடனைத் தீர்க்காட்டி, அந்த ரெட்டி அவன் சொத்தை யெல்லாம் ஏலத்துக்குக் கொண்டு வந்திடுவானாம். அந்த ரெட்டி ரொம்பப் பொல்லாதவனாம். அவன் கண்ணெல்லாம் வெங்கடாசலத்து நிலத்து மேலேதானாம். அதைத் தொட்டுத்தான், கேட்டபோதெல் லாம் கடன் கொடுக்கிறானாம். இந்த உளுமை ஒனக்கு இப்பொத் தெரியாது, ரெண்டு வருசம் போகணும்.” “நீ சொல்றது வேடிக்கையாயிருக்குது. மீனாச்சி, வேங்கடாசலத்துக்கு எவ்வளவு கடன் இருக்குதுன்னு நெனைக்கிறே?” “ஏன், அஞ்சாறு ஆயிரத்துக்கு இருக்காதா?” “சரி, அப்படியே இருக்கட்டும். ஆறாயிரம் கடனுக்காக முப்பதினாயிரம் ரூவா சொத்தையா கட்டிப்பாங்க. குருடன் கையிலே குடுத்தாக்கூட, அவன் தென்னந்தோப்புக்கே பத்தாயிரம் கெடைக்குமே.” “அவன் வித்தால்ல?” “சொத்தெல்லாம் போவுறபோது விக்காமே என்னா பண்ணுவான்?” “இவ்வளவு நாளாப் பளவி, இம்புட்டுத்தானா ஒனக்குத் தெரிஞ்சுது,” என்று மீனாக்ஷி, தன் மோவாய்க்கட்டையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள். “சொத்தை விடறதுக்கு யாருக்குத்தான் மனசு வரும்?” என்றாள் தங்கம்மாள். “அது சரி, ஆனால் எல்லாரையும்போல இல்லையே அவன் சமாசாரம். அவன் நெலத்தைப் பத்தி அவன் அடிச்சுக்கிற பெருமை...!” “ஏன் அடிச்சுக்கமாட்டான்? எத்தினி தலமுறையா, அதை அவுங்க ஆண்டு வர்றாங்க? ராசாக்குச் செஞ்ச ஒவகாரத்துக்காகக் கொடுத்ததாம். இன்னிக்கும் அதுக்கு வாய்தாப் பணம் கெடையாதே - தெரியுமா ஒனக்கு?” “அதெல்லாம் தெரியும். அதனாலேதான் விக்கமாட்டான். இப்போ முனிசாமியைப் பாரு, பாவம்! அவன் நஞ்சையெல்லாம் ஒத்திக்கு வச்சிருந்தான். கடன் ஏறிக்கிட்டே போச்சு. திருப்பிக் குடுக்க நிலத்தை வித்தாலொளிய வேறே வளியில்லை. பாத்துப் பாத்துக் கடைசியிலே, மைலவரம் கங்காணிக்கு நல்ல வெலைக்கு வித்தான். கடன்போக மிஞ்சினதிலே, காளிகோவிலண்டே பத்து ஏக்கரா புஞ்சை வாங்கினான். அங்கே மணிலாக் கொட்டை நல்லா விளையுதாம். இப்போ கஷ்டமில்லாதே சொகமாப் பொளச்சிக்கிட்டுத்தான் வாறான். அவன் என்ன, ஜாதி கெட்டா போயிட்டான்?” “இப்போ, யார் சொன்னாங்க!” என்றாள் தங்கம்மாள். “ஒங்க வெங்கடாசலந்தான் சொல்றான்,” என்றாள் மீனாக்ஷி கையை ஆட்டிக்கொண்டு, “அவனும் முனிசாமியும் பங்காளிங்களாச்சே. அவனாயிருந்தா, அந்த ஆள்பிடிக்கிற கங்காணிப்பயலுக்கு நெலத்தை விக்கிறதைக் காட்டிலும், ஆத்துலே குளத்திலே வுளுந்து உயிரை விட்டிருப்பானாம். இதுக்கு நீ என்னா சொல்றே?” “பைத்தியக்காரத்தனம்!” “பைத்தியக்காரத்தனமில்ல - அவ்வளவு ஆணுவம். அவுங்க குடும்பத்துக்குக் கவுரதே கொறஞ்சு போச்சேன்னிட்டு, அவ்வளவு வவுத்தெறிச்சல். மடையன்! லச்சுமி, ஒரு குடும்பத்திலே எப்பவும் இருப்பாளா? பணக்காரன் பிச்சைக்காரன் ஆவுறதுதான், பிச்சைக்காரன் பணக்காரன் ஆவுறதுதான். எப்பேர்ப்பட்ட ராசாவெல்லாம் பிச்சை எடுக்க வந்தபோது, நம்மைப்போலக் கையகலம் நெல பொலம் வச்சிருக்கிறவங்களுக்குக் கஷ்டம் வந்தா, அது ஆச்சரியமா? கஷ்டம் வந்தபோது பொறுத்துக்கணும். குதிச்சா நடக்குமா?” “நீ இப்பவே, வெங்கடாசலம் கையிலே ஓட்டை எடுத்துக் கிட்டாப்படி பேசறயே!” என்றாள் தங்கம்மாள், சற்று வெறுப்புடன். “எல்லாம் போறபோக்குத் தெரியல்லியா? அந்த ஆணுவமும் வீண் கவுரதையும் இல்லாட்டி, இப்பக்கூட அவன் தப்பிச்சுக்கலாம். நான் அவன் கடனெல்லாம் அடச்சிடுறேன். அவன் ‘நத்தைத் தோட்டத்தை’ப் பர்த்தியாக் குடுக்கச் சொல்லு.” “ஓ! ஊருக்கெல்லாம் மொதல்தரமான நஞ்சைமேலே ஒனக்கு ஆசை போச்சா!” என்று தங்கம்மாள், புன்சிரிப்புடன் சொன்னாள். “அதெல்லாம் ஒண்ணும் இல்லை. போனாப் போவுதே, அவன் பொளச்சுப் போகட்டுமேன்னுதான். எவ்வளவு நஞ்சையா இருந்தாலும் அரை வட்டிக்கு மேலே கட்டாது. நான் பணம் கொடுத்த இடத்துலே, எனக்கு முக்கா வட்டி வருது ஆதாரத்துக்கும் ஒண்ணும் கொறவில்லை.” “அப்படியிருக்கும்போது, அந்தப் பணத்தை ஏன் இதுலே போடுறேங்கிறே?” “ஊருக்கெல்லாம் பெரிய மனிசனாச்சே, அவனுக்கு ஒவகாரம் பண்ணா, எனக்கு மரியாதி இல்லியா?” என்று மீனாக்ஷி பல்லைக் காட்டினாள். “அத்தோடேகூட, ஊரு மொதல் நஞ்சைக்கும் பண்ணக்காரிச்சி ஆயிடலாம்,” என்று தங்கம்மாள், சேர்ந்து சொன்னாள். “ஆமாம். நான் அவ்வளவு பணத்தை வாரி எறைக்கிறப்போ, எனக்கு அதுகூட வாணாமா? நடக்காத சங்கதியைப் பேசி என்ன லாவம்? அவன் நெலமெல்லாம் அப்பவே ரெட்டியாரு வாயிலே போட்டாச்சு. அசலூருக்காரனாவது கட்டிக்கிட்டுப் போவலாம்; நம்ம ஒறைமொறையான் யாருக்கும் அது குடுக்கக்கூடாது! அது அல்ல அவன் எண்ணம். அவன் எக்கேடு கெட்டுப்போகட்டும். வீரப்பனைக்கூட எங்கே கெடுத்திடறானோன்னிட்டுத் தான் எனக்குப் பயம்.” “ஏது, நீ வீரப்பனுக்காவ ரொம்பக் கவலைப்படறாபடி இருக்குதே.” “ஏன்னா, அவன் நல்ல மனிசன்.” “அவனுக்குக்கூட நீ பணம் குடுத்திருக்கே இல்லை?” என்று தங்கம்மாள், குதர்க்கமாய்க் கேட்டாள். “அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எம் பணத்துக்கு எப்பவும் பயமில்லை. ஆதாரமில்லையா? - எனக்கு என்னான்னா, அவன் ஒரு கொளந்தையை வச்சிக்கிட்டிருக்கான். அவன் உயிரெல்லாம் அதுமேலேதான். அந்தக் கொளந்தைக்காகவாவது, அவன் வெங்கடாசலத்துச் சிக்குலே எல்லாம் மாட்டிக்காத இருக்கணுமே. வெங்கடாசலம் என்னமோ கையிலே ஓட்டை எடுத்துக்க வேண்டியதுதான். அது தப்பாது. அவனோடே சேந்து இவனும் பாளாப் போயிடக் கூடாதேன்னிட்டுத் தான் பாக்கறேன்,” என்று மீனாக்ஷி உருக்கத்துடன் சொன்னாள். “இந்த யோசனையெல்லாம் ஒனக்கு எங்கிருந்துதான் வருதோ? வெங்கடாசலம் அவ்வளவு அயோக்கியனா? தன் கடனுக்காக வீரப்பனையா கெடுத்திடுவான்? இந்த ஊரெல்லாம் தேடிப் பார்த்தாக்கூட அவனைப்போல நல்லவன் உனக்குக் கெடைக்க மாட்டானே. அவுங்க சிநேகிதம் - காசு துட்டுக்காக மாரடிக்கிற சமாசாரம் இல்லை. அதை நீ நல்லாத் தெரிஞ்சுக்கோ!” என்று தங்கம்மாள், சற்று ஆத்திரத்துடன் சொன்னாள். மீனாக்ஷி மிக ஆச்சரியத்துடன், தன் மோவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு சொல்லலானாள்: “அடி பயித்தியக்காரி! வெங்கடாசலம் அயோக்கியனின்னா நான் சொன்னேன்? நல்ல எண்ணந்தான். ஆனால் நல்ல எண்ணத்தோடே நாம் எவ்வளவு தீங்கு பண்ணிடறோம்? அதிலேயும் வெங்கடாசலத்தைப்போல் ஆத்தி ரக்காரன்களுக்குக் கேக்கவேண்டியதே இல்லை. அவசரத்துலே ஒரு தப்புப் பண்ணிட்டு, அப்பாலே ஐயோன்னா முடியுமா? அப்பான்னா முடியுமா? - நாம் ரொம்பத் தொலவு போகவேண்டாம், வெங்கடாசலம் வளத்து வாறானே, அந்தப் பய அப்பனைத் தெரியுமல்ல உனக்கு? - தும்பலம் அப்பாவு? (தங்கம்மாள் தலையை ஆட்டினாள்.) அவன் சங்கதியை எடுத்துக்கோ. நேத்துப்போல இருக்குது. முப்பது காணி நஞ்சே. பொன்னுப் போட்டால் பொன்னு விளையும். நாப்பது அம்பது சோடிமாடு, அரமனை போல ஒரு ஊடு - இம்பிட்டும் இருந்திச்சு. இன்னிக்கு...? இருக்கிற எடம் தெரியாதே ஊரைவிட்டே ஓடிட்டான். ரொம்ப நல்ல எண்ணத்தோடெதான் நெல்லு வியாபாரம் பண்ணினான். முதல்லே லாவம் வந்திச்சு. பொன்னம்பலத்தையும் அவன் பணத்தெயெல்லாம் போடச் சொன்னான். வியாபாரமினா சூது. இருந்தாப்போலே இருந்து ரெண்டுபேரும் கவுந்துட்டாங்க.” “அப்பாவு சமாசாரம் ரொம்ப அநியாயம்” என்ற தங்கம்மாள், வெகு இரக்கத்துடன் சொன்னாள்: “எனக்கு நல்லா ஞாபகம் இருக்குதே. அவன் பெண்சாதிக்காகவாவது, சாமி நல்ல வளி உடாமெ போச்சு. அந்த மவராசியைப்போல நான் யாரையும் பாத்ததில்லே. அவுங்க ஊருப்பக்கம் யாராவது போனால், அவுங்க ஊட்டிலே தங்கிச் சாப்பிடாதெ வரமுடியாதே.” “அவ்வளவு நல்லவளாயிருந்து கூட அவ கெதி என்ன ஆச்சு? அவ புருசன் செஞ்ச புத்திகெட்ட வேலைக்கு அவபட்ட கஷ்டம் இருக்குதே - அது எல்லாருக்கும் தெரியாது.” “ஏன் தெரியாது, எவ்வளவோ சொகமா வளந்திட்டு சொத்தெல்லாம் எளந்து, சாப்பாட்டுக்குக்கூட இல்லாத தவிச்சு, புருசனையும் உசிரோடு பறிகொடுத்திட்டு, பதினெட்டு வருசம் கொளந்தையில்லாமே இருந்திட்டு, இந்தத் திண்டாட்டத்திலே பிள்ளத் தாச்சியாயுமிருந்தால், இதைவிட என்ன கஷ்டம் வேணும்? மனசு திடமாயிருக்கிறவங்களாலே கூட இதைப் பொறுக்க முடியாதே - அவ பாவம், அப்பாவி; கோளை மனசு. அந்த இடியிலேயே, தலையெடுக்காதெ செத்தாள். ஆனால், அப்போ வெங்கடாசலமும் அலமேலுவும் அந்தக் கொளந்தையை வளக்கிறோமின்னு எடுத்துக்கிட்டு வந்தது பெரிய காரியந்தான். அவுங்க சத்தியம் பண்ற வரையிலும், அவ உயிர் போவாமெ துடிச்சிக்கிட்டு இருந்ததாம்.” “என்ன பிரமாதம்! வெங்கடாசலமும் அப்பாவும் அவ்வளவு சிநேகிதமாயிருந்ததுக்கு இதுகூடப் பண்ணக்கூடாதா? இவுங்களுக்குந்தான் குளந்தை குட்டி இல்லியே,” என்றாள் மீனாக்ஷி. “இதோ! அந்தப் பேச்சுத்தான் வேணாங்கிறேன். கொளந்தை குட்டியில்லாமெ எத்தனைபேர் இல்லை? எல்லாரும் அப்படி ஒத்துப்பாங்களா?” என்று தங்கம்மாள், சற்றுக் கடுமையாகச் சொன்னாள். “அது சரி. நான் அவனுக்கு நல்ல குணம் இல்லேன்னு சொல்லல்லியே. ஆனால்... என்னமோ, அவன் பேச்சும் ஜம்பமும் எனக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்கில்லே. என்னையே அறியாத கூட, அவன் மேலே எனக்கு ஒரு வெறுப்பு வந்திடுச்சு. தன் சிநேகிதன் பட்ட பாட்டிலேருந்துகூடத் தெரிஞ்சிக்காத மனிசனைப்பத்தி, நாம் என்ன சொல்றது?” “சில பேருங்களுக்கு எப்பவும் தெரியாது,” என்று வேறு ஏதோ நினைவாய்த் தங்கம்மாள் சொன்னாள். “நான் சொல்றதும் அதுதான்,” என்று தலையை ஆட்டிக் கொண்டு மீனாக்ஷி சொன்னாள்: “புத்தியில்லாதவங்க காரியத்திலே எல்லாம் நாம் தலையிட்டுக்கிட்டா, ஒரலுலே தலையைக் குடுத்திட்டு இடிக்குதே இடிக்குதேங்கராப் போலத்தான். இதுக்காவத்தான் நான், வீரப்பன் சாக்கிரதையா இருக்கணுமின்னு சொன்னேன்.” தங்கம்மாள், ஒரு நிமிஷம் வாயைத் திறவாமல் யோசித்துக் கொண்டிருந்தாள். பிறகு எதோ சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் மீனாக்ஷி மறுபடியும் ஆரம்பித்தாள். “எங்கிட்டே ரொக்கமா முப்பதினாயிரம் இருக்குது. நான் இதை இந்தக் கொளந்தைக்கு இல்லாமெ வேறே யாருக்குக் கொடுக்கப் போறேன்,” என்று பக்கத்தில் உட்கார்ந்திருந்த மல்லனைக் காட்டினான். மல்லன் மௌனமாய், தன் அத்தையையும் தங்கம்மாளையும் மாறி மாறிப் பேச்சுப்போக்குப்போல் விழித்து விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். தங்கம்மாள் கொஞ்சம் வம்புக்கு ஆசைப்பட்டவள். இன்னும் மேலே சமாசாரம் வரப்போகிறது என்ற உற்சாகத்தால், மீனாக்ஷியின் எண்ணத்தை அறிந்து மிகவும் குதூகலம் கொண்டாள். “இந்தக் கொளந்தையை நான் எப்படிக் கண்ணுக்குக் கண்ணாப் பாக்கிறேனோ, அப்படித்தான் வீரப்பனும் வள்ளியைப் பாத்துக்கிட்டு இருக்கான். இந்த ரெண்டு கொளந்தைங்களுக்கும் கலியாணத்தைப் பண்ணிட்டா, எங்க சம்பந்தம் எவ்வளவு நல்லாருக்கும், பாரு,” என்று அடக்க முடியாத ஆசையுடன் சொன்னாள் மீனாக்ஷி. தங்கம்மாள், அவள் ஆசையின் துணிவைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். ஆனால், அவள் வாயைக் கிளறி இதர விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தால், அவள் சொல்லை ஆமோதித்தாள். “தங்கமான யோசனை, ஒன்னுது. ஒங்கிட்டே பணம் இருக்கிறதுக்கும் அவன் ஊரிலே ஒரு பெரிய மனிசனா இருக்கிறதுக்கும், ரெண்டுபேரும் குடுத்துவாங்கிட்டா சரி. அப்புறம் ஊரே ஒங்களுது தான்.” “ஒனக்கு என்னமோ வெளையாட்டா இருக்குது, தங்கம். மெய்யாலுமே எனக்கு இந்த ஸம்பந்தத்தை முடிக்கணுமின்னு இருக்குது,” என்றாள் மீனாக்ஷி. “நான் மட்டும் பொய்யா சொல்றேன்!” என்று சிரிப்பை வெகு கஷ்டத்துடன் அடக்கிக்கொண்டு சொன்னாள் தங்கம்மாள். “இந்த ஸம்பந்தத்தில் ஒரு கோளாறும் எனக்குத் தெம்படல்லே. ஆனால், அந்தக் குட்டி வள்ளி, பொல்லாதவ. அவ ஒண்ணும் கலகம் பண்ணாமெ இருக்கணும்.” “அவ யாரு கலகம் பண்றதுக்கு? நல்லது கெட்டது அந்த நண்டுக்கா தெரியும்? புருசனைத் தேடுறது அவ வேலையா? என்னைக் கட்டிக் குடுத்தபோது, என்னைக் கேட்டாங்களா? என் புருசனைக் கல்யாணத்துக்கு முன்னாலே நான் பாத்ததே கிடையாது. அவுங்க என்னைக் காட்டிலும் முப்பது வருசம் பெரியவங்க!” என்று மெய்மறந்தது பெருமூச்சுவிட்டுச் சொன்னாள் மீனாக்ஷி. தங்கம்மாள், அவள் வாழ்நாளெல்லாம் வீணாளாய்ப் போனதைப்பற்றி மனம் இரங்கித் துக்கித்தாள். “ஆனால், இது வேறே மாதிரி,” என்று மீனாக்ஷி சொல்லத் தொடங்கினாள். “ரெண்டுபேருக்கும் ஈடு சரியாயிருக்குது. சொத்துக்கும் கொறவில்லை. சிலபேரு ‘அளகு, அளகு’ இன்னிட்டு அடிச்சிப்பாங்க. பெண்பிள்ளைக்கு அளகு வேண்டியதுதான். ஆண் பிள்ளைக்கு அளகு என்னா வந்தது? ஆண்பிள்ளை அளகின்னா, பொட்டச்சிதான்!” என்று நிச்சயமாய்ச் சொன்னாள். தங்கம்மாள் குறிப்பாகச் சிரித்தாள். “நீ மனம் வெச்சா இந்தக் காரியம் முடியாதா?” என்றாள் மீனாக்ஷி. “நானா! நல்ல போடு போட்டையே, என்னாலே என்ன முடியும்?” “சும்மா இரு, எல்லாம் எனக்குத் தெரியும். நீ ஒண்ணு சொன்னா, அந்தப் பேச்சை லச்சுமி தள்ளிடுவாளா? வீரப்பனைச் சொல்லு, ஒத்துக்கிறேன். அவனுக்கு வெங்கடாசலம் தூவம் போட்டாத்தான் ஏறும். லச்சுமி கெட்டிக்காரி, நாலும் தெரிஞ்சவ. நீ அவளுக்கு இந்தச் சங்கதியைக் காதிலே போட்டா, தானே நடக்குது. அவதான் யோசிச்சுப் பாக்கட்டுமே. அதோடுகூட...” என்றவுடன், அவள் குரலைத் தணித்துக் கரகரவென்ற தொண்டையுடன் ரகசியமாகக் கூறலானாள்: “லச்சுமி இனிமேலே பெறப் போறதில்லை. சொத்தெல்லாம் வள்ளிக்குத்தான். வள்ளியும் எங் களவளாயிட்டா, நான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேக்கிறதுலே யாருக்கு என்ன லாவம்?” “ஒண்ணுமேயில்லை, பெத்த தாயே தன் கொளந்தை சோத்தைப் பிடுங்கினாப்போலத்தான் இருக்கும்,” என்று தங்கம்மாள் தட்டிக் கொடுப்பதுபோல் சொன்னாள். “சரியான பேச்சு! ஆனா, நீ சும்மா தலையை ஆட்டினாப் போதாது. எப்படினாச்சும் காரியத்தை முடிச்சிடணும். ஏன், இன்னிக்கு ராவே மொள்ளப் பேச்சை எடேன்.” தங்கம்மாள் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டாள். ஆனால், மீனாக்ஷியின் ஆத்திரம் அவளுக்கு வியப்பை உண்டு பண்ணிற்று. இருட்டியபடியால் தங்கம்மாள் விளக்கேற்ற எழுந்தாள். மீனாக்ஷியும் விடை பெற்றுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினாள். |