உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
8 அந்தி நேரம். மிருதுவான காற்று வீசிக் கொண்டிருந்தது. மெல்லிய காற்றால் கலைக்கப்படும் மேகக் கூட்டங்கள் விதவித உருவங்களால் வானத்தை அலங்கரித்த வண்ணமிருந்தன. நொய்யல் நதியில் ‘குறு, குறு’வென ஓடிக் கொண்டிருந்த நீரைக் காலால் அடித்தவாறே வெண் மணலில் ஒரு மனிதன் நடந்து கொண்டிருந்தான். அவன் தலையில் ஒரு ஐந்து முழ நீளமுள்ள துப்பட்டியை உருமாலாகச் சுற்றிக் கொண்டிருந்தான். உருட்டிக் கட்டிய வேட்டியை கையால் தடவிக் கொண்டே கரையேறி ஒற்றையடிப் பாதையில் இறங்கி நடந்தான். கருப்புக் கோடுபோல கரையருகே இருண்டிருந்த மரங்கள் அசையும் போது, சில சில பழுப்பு இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. அவன் போய்க் கொண்டிருந்த காட்டின் இடக்கோடியில் ஒரு குடிசை, பனை ஓலைகளால் வேயப்பட்டிருந்தது. அக்குடிசையின் ஓரத்தில் இரண்டொரு ஓலைகள் தலை தூக்கிக் கொண்டிருந்தன. அதன் அருகே எப்போதோ கள்ளோ அல்லது தெளுவோ குடித்து விட்டு எறிந்த பனங்கோட்டையொன்றும், ரொம்ப நாளைக்கு முன் மாமிசம் வறுத்ததிற்கு அடையாளமாக உடைந்து போய்க் கிடந்த சட்டித் துண்டுகளும், அடுப்புக் கல்லும் தங்களை இந்த நிலைக்கு கொண்டு போய்விட்ட அன்பனின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது! நாம் முன்பு சொன்ன ஆள் நடுக்காட்டிற்கு வந்ததும் குனிந்து ஒரு கல்லை எடுத்தான். பின்பு என்ன நினைத்துக் கொண்டானோ, கல்லைத் தூர எறிந்து விட்டு, “யாரடா அது எருமையை வேலியோரம் கட்டினது” என்றான். அந்தக் குரல் வெண்கல மணியிலிருந்து எழுந்த நாதம் போல வெகு தூரத்திற்கு விசிறி அடித்தது. ஆற்றங்கரையோரம், இடிந்து போய்க் கிடந்த கோவிலில் அதன் பிரதித்வனி ‘கணக்’கென எழுந்தது. இந்த அமானுஷ்யமான குரலிலிருந்தே அந்த நபர் கெட்டியப்பன் தானென்று விளங்கியிருக்கும். திடீரென்று பிறந்த இந்த ‘அதிகாரம்’ வெகு பேருடைய வேலையைத் தடை செய்யும் என்று கெட்டியப்பனால் எண்ணியிருக்கவே முடியாது. பக்கத்துக் காட்டில் மரம் ஏறிக் கொண்டிருந்த சடைய மூப்பன் பாதி மரத்திலேயே ‘டக்’கென்று இடைக்கயிற்றை நிறுத்தி சுற்று முற்றும் பார்த்தான். அவன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த ஜீவன்களெல்லாம் தங்கள் பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால் இந்தத் த்வனிக்குச் சொந்தக்காரர் யார் என்பதை அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு சூன்யத்திலிருந்து வெடித்து வீசிய பேய்க் காற்றாக்கும் என்று எண்ணிக் கொண்டான் போலிருக்கிறது. அதனால் மூப்பன் ‘டப், டப்’ என்று முன்னோக்கி மேலேறி உச்சியின் அமிர்த கலசத்தை அடைய முயன்றான். பண்டபாடிகளை ஓட்டிக் கொண்டு போகிற சிறுவர் சிறுமியர்களும், அவசர அவசரமாகப் புல் பிடுங்கிக் கொண்டிருந்த கருப்பாயியும், சோளக்காட்டிற்குத் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த குப்பனும், இன்னும் மற்றவர்களும் ஏக காலத்தில் நாற்புறமும் திரும்பிப் பார்த்தார்கள் என்பதைச் சொல்வது அனாவசியம். ஆனால், இதற்குள் அந்த எருமைக்குச் சொந்தக்காரன், மந்திரவாதியைப் போல மாயமாகத் தோன்றி எருமையுடன் மறைந்து விட்டான். அவன் எங்கிருந்து வந்தான் என்ற ஆராய்ச்சியியெல்லாம் இறங்காமல் கெட்டியப்பனைப் பின் தொடர்வோம். குடிசைக்கு முன்னால் மூடியிருந்த தென்னந்தடுக்கை எடுத்து உசரத்தில் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தான். உட்புறம் ஒரே இருட்டாயிருந்தது. அதனால் அங்கே போட்டிருந்த கட்டிலில் நெற்றி ‘பட்’ என்று மோதி விட்டது. ‘உஸ், ஆ’ என்று கொண்டே, தீப்பெட்டியை எடுக்க ஓலைக்கிடையே கையை விட்டான். “ஓ, அடி பலமாகப் பட்டுட்டதோ?” என்று யாரோ கேட்கவும், கெட்டியப்பன், ‘சடக்’கென பின்னால் நகர்ந்தான். அகாலத்தில் வந்த இந்த அபூர்வக் குரல் மனிதக் குரல் தானா அல்லது பேயா பிசாசோவென அவன் மிரண்டு நிற்கையில், மெதுவாக ஒரு பெண்ணின் குரல் “நீ தான் கெட்டியப்பனாச்சே” என்றது. “அட! நீயா, மாரியாத்தா மாதிரி இந்நேரத்தில் இங்கு வந்து ஒளிஞ்சிருக்கிறே?” “ஆமாம் நான் ஒளிஞ்சுதான் போனேன்” என்றது அந்தப் பெண் குரல். எடுத்த எடுப்பிலேயே இப்படி சுடச்சுட பதில் கொடுப்பது நாகம்மாள் தான். அவள் மசமசவென்றிருக்கும் போதே வந்துவிட்டாள். வரம் கொடுக்கும் வரை பக்தன் காத்துக் கொண்டிருப்பதைப் போல தன் அன்பன் வரும் வரை பொறுமையுடன் இருந்தாள். அன்று சிக்கலான சில விஷயங்களை அவனுடைய அரிவாள் மூளையினால் தெரிந்து செல்ல வந்திருந்தாள். “விளக்கில்லையே?” என்றாள் நாகம்மா. “அதுக்குத்தான் தீப்பெட்டி எடுக்கப் போற போது நீ பயப்படுத்தி உட்டாயே” என்று சொல்லிக் கொண்டே ஓலைக்குள் கையைவிட்டுத் துளாவினான். அவன் கைபட்டு ஓலை சரசரத்தது. “இந்தா, சத்தம் செய்யாதே” என்று சொல்லிக் கொண்டே நாகம்மாள் தான் கொண்டு வந்திருந்த பலகாரங்களை மடியிலிருந்து எடுத்தாள். “இங்கே யாருமில்லை. காளியையும் நாய்ச்சோறு கொண்டு வர போகச் சொல்லீட்டேன். இந்தா வெளியே எட்டிப் பாரு, பட்டி சாத்தியிருக்குதா?” என்றான். “என்ன நானா போய்ப் பாக்கிறது. யாராச்சு இந்தப் பக்கம் வருவாங்க போவாங்க.” “அடடா” என்றான். அதிலே எத்தனையோ வார்த்தைகளில் பேசுவதைச் சொல்லிவிட்டான். நாகம்மாள் ரொம்ப தனிவாக, “அதுக்காகச் சொல்லலை, உனக்குக்கூட” என்றவள், கொஞ்சம் பலமாக, “அதென்ன அசங்கியம்” என்றாள். அவள் வார்த்தைகளிலே உண்மையான வருத்தம் கலந்திருந்தது. ஆமாம், இது சகஜம் தானே. தன் நடத்தையின் சாயை ஒரு தரம் மின்னி விழுந்தது. காரிருளில் கன்னம் வைக்கும் கொலைகாரன் கூட தன் செய்கையை எண்ணி உள்ளூர அதிகமாக ஒவ்வோர் சமயம் வருத்தப் படுவதில்லையா? கெட்டியப்பன் விளக்கைக் கொளுத்திக் கொண்டு, “இன்னைக்கு காட்டிலே ரொம்ப வேலையா? இப்படி வெய்யல்லே உழைச்சா உன்னுடம்பு என்னவாகும்?” என்றான். வாழைக் குருத்துபோலத் தளதளவென்றிருக்கும் அவளுடைய தேகம் கருப்பாகிவிடுமோ என்று அவன் சஞ்சலப் பட்டான் போலும்! நாகம்மாள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசலாமென்று வந்தாளோ அந்த விஷயம் ஆரம்பிக்கும் முன்பே எதிர்வந்து நிற்கிறது! இனியென்ன, மனதிலுள்ளதை வெளிப்படுத்த வேண்டியதுதானே! “உனக்கு எப்பவும் பச்சை மாவு தானே பிடிக்கும்” என்று இலையிலிருந்த பலகாரங்களை அவன் முன் நகர்த்தினாள். கெட்டியப்பன் ஒப்புக்கு அதைத் தொட்டு ஒரு வாய் போட்டுக் கொண்டு, “எனக்கு ராமாயி கொடுத்தா, பொழுதோடே தின்னது, இன்னம் பசியே இல்லை, நெஞ்சைக் கரிக்குது” என்றான். “என்ன, நிசம்மாவா. ராமாயி கொடுத்தாளா?” என்று ஆச்சரியத்தோடு கேட்டாள். “நீ எப்போ ஊட்டுக்குப் போனாய்?” “மத்தியானம், தூங்கீட்டு எழுந்ததும் அங்கேதான் வந்தேன். நீ காட்டிலே இருந்தாய். கொஞ்ச நேரம் உக்காந்திருந்தேன். என்ன இருந்தாலும், ராமாயி கொஞ்சம் விதரணை தெரிஞ்சவதான்.” நாகம்மாள் எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருந்தாள். காற்று கொஞ்சம் கனத்தடித்ததால் வாரி வெளியில் ‘தொப்’பென்று ஒரு தேங்காய் விழுந்து உருண்டு சென்றது. “எல்லாம் எப்படி இருக்குது? சும்மா கையைக் கட்டி உக்காந்திட்டயே” என்றான். அவள் ரொம்பத் தனிவாக “நான் அவர்களிடமிருந்து விலகீடப் பாக்கிறேன்” என்றாள். “நீ சொன்னதும் ஒத்துக்குவாங்களா?” என்றான். “அதுக்குத்தானே உம்பட ரோசனையைக் கேக்கிறேன்.” “இந்தத் தோட்டம் காடு எல்லாம் உம் புருஷன் சம்பாதிச்சது தானே?” “புது மனுஷனாட்டப் பேசறயே?” “சரி, இதுலே குடுக்கமாட்டேன்னு சின்னப்பன் தகராறு செஞ்சா என்ன பண்றது?” என்று கெட்டியப்பன் சந்தேகத்தோடு கேட்டான். “நீதான் என்னவாவது பண்ணவேணும்” என்றாள் அவள், அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு. கெட்டியப்பன் சிறிது நிதானித்து விட்டு, “எப்படியும் பார்த்தே தீருவது. அப்படி கன்னா பின்னான்னா, மணியக்காரனை நம்ம கைக்குள் போட்டுக் கொள்றது. கடைசியிலே நான் இருக்கிறதே இருக்கிறேன்” என்றான். நாகம்மாள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவள் கண்களிலே சற்று முன் காணாத ஒரு ஒளி வீசியது. “உம், நேரமாச்சு. நான் போறேன். இப்படி ஒரச்சு சொல்றதுக்கு ஒரு ஆள் இல்லையேன்னு தான் தவம் கெடந்தே” என்று சொல்லிக் கொண்டே தலையை வெளியில் நீட்டிப் பார்த்தாள். யாரோ வரப்பின் மீது வருவது தெரிந்தது. உடனே அவசரமாக, “நான் போறேன்” என்று அடி எடுத்து வைத்தாள். “அது யாருமிருக்காது” என்று கூறிக் கொண்டே அவள் பின்னால் வெளியே வந்தான் கெட்டியப்பன். துரிதமாக மறையும் பட்டுப் பூச்சியைப் போல அந்த இருளில் கண நேரத்தில் பறந்து சென்றாள் நாகம்மாள். |