உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
10 மரத்தின் உச்சாணிக் கிளைகளில் மின்னிக் கொண்டிருந்த பொன் கிரணங்களும் மறைந்து விட்டன. இட்டேறித் தடங்களில் கால் நடைகள் சென்றதால் உண்டான புழுதி நிரம்பி இருந்தது. பட்டிகளில் ஆடு அடைப்பவர்கள் போடும் சப்தமும், ஒன்றிரண்டு குட்டிகள் இருளில் பட்டுக்குள் நுழையாமல் ‘மே, மே’ எனக் கத்திக் கொண்டு இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கும் சப்தத்தையும் தவிர வேறு சப்தமே கிடையாது. மணியகாரர் தோட்டத்திலிருந்து ராமசாமிக் கவுண்டர், கருப்பண கவுண்டர் முதலியவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். காலையிலிருந்து இன்று கருப்பணன் மணியகாரர் வீட்டிலேயே இருந்து கொண்டார். அவர் சும்மா இருக்கவில்லை. வேலையுமிருந்தது. ராமசாமிக் கவுண்டர் சுள்ளிவலசு சென்று குப்பணனை கூட்டி வருவதற்குள் பொழுது அடிச் சாய்ந்து விட்டது. வந்ததும் பஞ்சாயத்துப் பேசி முடித்துவிட்டார்கள். இதில்தான் தாமதத்துக்குத் துளியும் வழியே கிடையாதே. போயும் போயும் நாச்சப்பன் ஒருவன் தான் ஏதாவது ‘எடக்கு’ப் பண்ணுபவன். அவனையும் ராமசாமிக் கவுண்டர் ராசிபாளையம் வருவதற்குள் சரி செய்து விட்டார். வண்டிக்குள் இவர்களிருவரும் குப்பணனும் தானிருந்தார்கள். நேர்முகமாக நாச்சப்பன், குப்பணனைச் சந்திக்கவே விஷயம் வெகு சுலபமாக முடிந்துவிட்டது. குப்பணனுக்கும் அதற்குள் போதை கலைந்திருந்தது. காலையிலிருந்து தான் செய்த காரியங்கள் அனைத்தையும் ஞாபகப்படுத்திப் பார்த்தான். பிறகு தான் செய்தது தப்புத்தான் என்பது தெரிந்தது. ஒரு மனிதனுக்குத் தான் செய்த காரியம் தப்பு என்று படும்போது அவன் நடத்தையிலும் மாறுதல் ஏற்படுவது சகஜம்தானே! இவர்கள் மூவரும் பேசிக் கொண்டே ஊர்த் தலைவாசலுக்கு வந்து விட்டார்கள். மணியகாரருக்கு மனத்திற்குள்ளாகவே வெகு சந்தோசம். கோவில் திருப்பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது போலத் திருப்தி அடைந்தார். கருப்பண கவுண்டனைக் கைக்குள் போட்டுக் கொள்வதற்கு இல்லாமல் தமது சம்மந்தி ராமசாமிக் கவுண்டர் குறுக்கே ஒவ்வொரு விசயத்திலும் இடைஞ்சல் பண்ணுகிறாரே என்ற கவலையும் தீர்ந்தது. கருப்பண கவுண்டனும் தமது சம்பந்தியும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். இனி யாரும் ‘என்னய்யா மணியாரரே! உங்க கிராமத்தில் இடிஞ்ச கோவிலைக் கட்டுவதற்குக் கூட இல்லையா? நீங்கள் எல்லாம் என்ன மணியாரரையா?’ என்று கேட்க மாட்டார்கள். ராமசாமிக் கவுண்டருக்கும் ஏதோ ஒரு பெரிய பாரம் தலையிலிருந்து இறங்கியது மாதிரி இருந்தது. இன்னது என்று தெரியாத ஏதோ ஒன்று அவர் மனதையும் சதா வாட்டிக் கொண்டுதானிருந்தது. ஏதோ ஒரு பெரிய தீங்கைக் கருப்பண கவுண்டன் குடும்பத்திற்குச் செய்தது போன்ற உணர்ச்சி உள்ளத்தில் குடி கொண்டிருந்தது. அவ்வுணர்ச்சியை எவ்வளவோ கஷ்டப்பட்டு தலை எடுக்காமல் அமுக்கப் பார்த்தார். ஆனால் அதோ ஒன்றுக்குப் பத்து வேகத்தில் மீண்டும் மீண்டும் தலை தூக்கிக் கொண்டிருந்தது. ஆனால் இன்றோ நிலைமை வேறு விதமாக மாறிவிட்டது. கருப்பண கவுண்டன் மேலிருந்த வெறுப்பு மாறியதும், அவ் வுணர்ச்சியும் எங்கோ போன இடம் தெரியாமல் போய்விட்டது. இந்த வெறுப்புத்தான் பயமாக மாறி கருப்பண கவுண்டனையே அடியோடு அழித்து விட வேண்டுமெனக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது. இனிக் கருப்பண கவுண்டனிடம் பயப்பட வேண்டியதில்லை. அவனே வலியப் பணிந்து வரும் போது பயம் எதற்கு? தாம் இனிப் பழையபடி ஊர்த் தலைமை வகிக்கலாம். இதற்குப் போட்டி கிடையாது. இந்த வகையில் ராமசாமிக் கவுண்டர் நிம்மதி அடைந்தாலும் அவர் முகம் ஏனோ சந்தோஷத்தைக் காட்டவில்லை. உள்ளத்தில் தான் என்ன குறை என்பதையும் கண்டு கொள்ளவில்லை. மூவரும் ஊர்த்தலைவாசலில் நின்று கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். கருப்பண கவுண்டருக்கு ஊர் ஞாபகம் வரவே, “ஏனுங்க மாமா, நீங்க இப்பவே வாரீங்களா?” என்றார். ராமசாமிக் கவுண்டர் வாய் திறப்பதற்கு முன் மணியகாரர், “அவுங்க எங்கே இண்ணக்கி வாராங்க? நீங்களும்தா நாளக்கிப் போனாப் போவுதுங்க” என்றார். இதைக் கேட்டுக் கருப்பண கவுண்டர் சிரித்துக் கொண்டு, “அதுக் கென்னுங்க! எப்பப் போனாத்தா என்னுங்க! நாளக்கி வெவுரியோட நாச்சப்பனெ ஒரு எடத்துக்குப் போவச் சொல்லோணுமிங்க. அப்பழயா அவெ போனபோது சொல்லிஉட மறந்திட்டனுங்க. இல்லாட்டி என்னுங்க நிக்கறதுக்கு” என்றார். “சரி, ஆனா வளவுக்குப் போயி சாப்பிட்டுட்டுப் போயிடலாம்” என்று கூறி மணியகாரர் ஒரு அடி எடுத்து வைத்தார். அதற்குள் கருப்பண கவுண்டர் தோட்டத்து ஆள் சென்னியப்பன் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்து முன்னால் நின்றான். இதைக் காண மூவரும் திடுக்கிட்டார்கள். தமது தோட்டத்து ஆளை அந் நிலையில் பார்த்ததும் கருப்பண கவுண்டருக்கு பேச நா எழவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த ராமசாமிக் கவுண்டரும் அவனைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார். மணியகாரர் உடனே, “ஏப்பா இப்படி ஓடி வந்தே!” என்றார். வந்த ஆள் உடனே சமாச்சாரத்தைச் சொல்லவும் முடியவில்லை. சுள்ளிவலசில் பிடித்த ஓட்டம் இங்கு வந்து தான் நின்றிருக்கிறான். அவன் தொண்டை வறண்டு போயிருந்தது. கை கால்கள் எல்லாம் கிடு கிடென நடுங்கின. ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு, “முத்தக்கா எனத்தையோ குடிச்சிட்டாளாட்ட இருக்குதுங்க! பேச்சு மூச்சில்லாமெ சாளையிலே கெடந்தவளெ ஊட்டுக்கு தூக்கீட்டு வந்து போட்டிருக்குதுங்க” என்றான். இந்த வார்த்தைகளைக் கூறி முடித்து விட்டான். ஆனால் கருப்பண கவுண்டர் மட்டும் அவன் வாயையே பார்த்துக் கொண்டு அசையாது நின்று கொண்டிருந்தார். அவருக்கு ஒன்றும் ஓடவில்லை. அருகிலிருந்த மணியாரர் அவசரமாக, “வீட்டிற்கு ஓடி வண்டியைப் பூட்டியாடா!” என்று வந்த ஆளிடம் சொல்லவும் தான் கருப்பண கவுண்டருக்கு சுயப்பிரக்னை வந்தது. அவர் யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. விழித்த கண் விழித்த படியே நின்று கொண்டிருந்தார். இதற்குள் வண்டி பூட்டி வந்து நின்றது. “ஏறுங்க மாப்புளெ” என்று மணியாரர் கூறிக்கொண்டு வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தார். கருப்பண கவுண்டரும், ராமசாமிக் கவுண்டரும் சொப்பனத்தில் நடப்பது போல வண்டி ஏறினார்கள். வண்டிக்குள் மூவரும் உட்கார்ந்ததும் வண்டி வேகமாகச் செல்லத் தொடங்கியது. முத்தாயாள் ஏன் மயக்கமடைந்து கிடக்கிறாள். என்னத்தைக் குடித்து விட்டாள். ஏன் குடிக்க வேண்டும் என்ற சந்தேகம் மணியாரர் மனதில் பல தடவை எழுந்து விட்டது. ஆனாலும் அவருக்கு இந்நேர வரையிலும் கேட்பதற்குத் துணிவு உண்டாகவில்லை. இப்போதும் அந்த எண்ணம் மனதில் தோன்றவே அவர் சென்னியப்பனிடம், “சென்னீப்பா! என்னத்தைக் குடிச்சிட்டா?” என்றார். “அரளி வேரும் நல்லெண்ணெயும்.” “அடெ! நல்லாத் தெரியுமா?” “அம்மியிலே வேரு அரைச்சது இன்னம் ஈரம் கூட ஒணராமெ அப்படியே இருக்குதுங்களா?” என்றான். மணியாரால் இதை நம்பவே முடியவில்லை. முத்தாயாள் எதற்காக இப்படிச் செய்கிறாள்? அவளுக்கு என்ன வந்துவிட்டது இப்படிச் செய்வதற்கு? ஒரு சமயம் வீட்டில் பெண்களுக்குள் ஏதாவது மனஸ்தாபமோ, என்னமோ என்று நினைத்துக் கொண்டு, “ஏனுங்க மாப்புளெ! முத்தாயாளுக்கு அப்படி என்ன இக்கட்டு வந்ததுங்க இப்படிச் செய்ய?” என்றார். ராமசாமிக் கவுண்டருக்கு மணியாரர் கூறிய வார்த்தைகள் காதில் விழுந்தன. ஆனாலும் அவரால் வாய் திறந்து பதிலளிக்க முடியவில்லை. மணியாரர் பதிலுக்காகச் சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தார். மீண்டும் மெதுவாக, “ஏனுங்க மாப்புளெ பேசமாட்டீங்கிறீங்க? நடக்கறபடி நடந்துதானுங்க தீரும். தலெயிலே எழுதியிருக்கிறபடி நடக்காது உட்டுப்போகுமுங்களா?” என்று கூறிச் சமாதானப் படுத்த முயன்றார். இதற்குள் வண்டி சுள்ளி வலசை அடைந்து விட்டது. வண்டி நிற்பதற்கு முன்பாகவே வண்டியிலிருந்த கருப்பண கவுண்டர் வெளியே எட்டிக் குதித்து வேகமாக வீட்டிற்குச் சென்றார். இவர்களிருவரும் வேகமாகப் பின்னால் சென்றார்கள். வீட்டிற்குல் நுழைய முடியாதபடி கூட்டம் கூடியிருந்தது. இவர்கள் மூவரும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். வெளி ஆசாரத்தில் கட்டில் மேல் முத்தாயாளைப் படுக்க வைத்திருந்தார்கள். நாச்சப்பனும், கருப்பண கவுண்டர் மருமகளும் விசிறி வீசிக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். கட்டிலைச் சுற்றிப் பெண்கள் கூட்டம் நிறைந்திருந்தது. கட்டில் அருகில் சென்றதும் தமது அருமை மகள் பிரக்ஞை அற்றுக் கிடப்பதைக் கண்டதும் கருப்பண கவுண்டரால் துக்கத்தை அடக்க முடியவில்லை. சிறு குழந்தை போலத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். அருகிலிருந்த பெண்களும் இதைக் கண்டு கண்ணீர் விடத் தொடங்கினார்கள். இவைகளைக் கண்டு மணியாரர் மனம் படாதபாடு பட்டது. நாச்சப்பனிடம் கூட்டத்தை அப்புறப்படுத்தச் சொன்னார். மூக்கில் விரலை வைத்துப் பார்த்தார். சுவாசம் வந்து கொண்டிருந்தது. பிறகு தமது சம்மந்தியைப் பார்த்து, “இதுக்கு என்னமோ முறிவாடு உண்டும்பாங்களே, அது என்னுங்க?” என்றார். ராமசாமிக் கவுண்டர் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவர் போல “என்னுங்க?” என்றார். இதற்குள் ஒரு கிழவி மணியாரரிடம் வந்து, “கட்டலெ உட்டு எறக்கிப் போடச் சொல்லப்பா; கட்டல் மேலே உசுரு போகப்படாது” என்றாள். மணியாரருக்கு அவள் கூறியது ஒன்றும் காதில் ஏறவில்லை. மறுபடியும் ராமசாமிக் கவுண்டர் தோளைப் பிடித்துக் கொண்டு, “இதுக்கு முறிவாடு என்னுங்க?” என்றார். இந்தத் தடவை ராமசாமிக் கவுண்டருக்கு விஷயம் விளங்கியது. அவர் ஒன்றும் பேசாமல், “எங்காவது நாவிட்டை இருந்தா எடுத்தா! ஓடு ஓடு” என்றார். கண் மூடிக் கண் விழிப்பதற்குள் அந்த இருளிலே எங்கேயோ தேடி நாய் விட்டை (மலம்) யைக் கொண்டு வந்தார்கள். ராமசாமிக் கவுண்டர் அவற்றை வாங்கி ஒரு டம்பளர் தண்ணீரில் கரைத்து கறண்டிக் காம்பால் பல்லை நெம்பி வாயில் ஊற்றினார். இதற்குள் கூட்டம் பழையபடி கட்டிலை நெருங்கி விட்டது. மணியாரருக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. அங்கிருந்தவர்களை எல்லாம் கோபித்துக் கொண்டு வெளியில் தள்ளி தாளைப் போட்டு வரச் சொன்னார். சிறிது நேரத்திற்குள் முத்தாயாள் ஒரு தரம் வாந்தி எடுத்தாள். இப்போதுதான் மணியாரர் முகம் மலர்ந்தது. அருகிலிருப்பவர்களை நன்கு விசிறி வீசச் சொன்னார். அதற்குள் முத்தாயாள் இரண்டு மூன்று தரம் வாந்தி எடுத்தாள். மணியாரர் முத்தாயாள் முகத்தில் தண்ணீர் தெளித்து மேல் வேஷ்டியால் முகத்தை நன்கு துடைத்தார். முத்தாயாள் சிறிது கண் விழித்து அருகில் இருப்பவர்களை ஒரு முறை பார்த்தாள். பிறகு கண்ணை மூடிக் கொண்டாள். எல்லோருக்கும் பிழைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. முத்தாயாள் மல்லாந்து படுத்து கொண்டிருந்தாள். கட்டியிருந்த சேலையில் மண்ணும் மருந்தும் ஆகியிருந்தது. கூந்தல் முடியாமல் கட்டிலுக்குக் கீழே ஆலம் விழுது போலத் தொங்கிக் கிடந்தது. கண்கள் குழி விழுந்து போயிருந்தன. கன்னங்கள் சிவந்து இருந்தது. சிறிதே திறந்திருந்த உதடுகளின் வழியாக வெற்றிலைக் காவி ஏறிய பற்கள் பவளம் போலக் காட்சி அளித்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் அருவிபோல வழிந்தோடியது. என்னை ஏன் பிழைக்க வைத்தீர்கள்? என்று கேட்பது போலிருந்தது அக் கண்ணீர் மாலை. இதுவரையிலும் தலையில் கையை வைத்து உட்கார்ந்து கொண்டிருந்த கருப்பண கவுண்டர் கட்டில் அருகில் சென்று அவள் தலை மீது கையை வைத்துக் கொண்டு, “ஆத்தா! இப்படி ஏ எந்தலயிலே கல்லெப் போடலாமுணு நெனச்சே!” என்றார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. தொண்டையை அடைத்துக் கொண்டது. இதற்கு என்ன பதில் கிடைத்தது? பதில் சொல்ல வேண்டுமென்று தெரிந்திருந்தால் அவள் ஏதாவது நினைத்து வைத்திருப்பாள். அதற்கே அவசியம் நேரிடாது என்று தானே அவள் இருந்தாள். ராமசாமிக் கவுண்டருக்கு இப்போதுதான் மனச்சாந்தி ஏற்பட்டது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, ”ஆத்தா, முத்தாயா! கண்ணெ முழியாத்தா!” என்று கூறிக் கொண்டு அருகில் சென்றார். முத்தாயாளும் நன்கு கண்ணைத் திறந்து பார்த்தாள். ராமசாமிக் கவுண்டரும் முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, “எல்லாம் நல்லாப் போச்சு. இனிப் பயமில்லெ...” என்று கூறினார். “தண்ணி!” என்று முத்தாயாள் ஈனஸ்வரத்தில் கேட்டாள். உடனே ராமசாமிக் கவுண்டர் “நாச்சப்பா, தண்ணி கொண்டா!” என்றார். ஒரு ஆள் தண்ணீர் கொண்டு வந்தான். ராமசாமிக் கவுண்டர் தமது கையால் வாங்கி மெதுவாக அவள் வாயில் விட்டார். அப்புறம் எதற்கோ “நாச்சப்பா!” என்று கூப்பிட்டார். “நாச்சப்பெ இப்பத்தா எங்கயோ வெளியே போறானுங்க” என்றது ஒரு குரல். “எதிலே போறான்?” என்று கூறிக் கொண்டே ராமசாமி கவுண்டர் வெளியில் வந்து இருளில் எட்டிப் பார்த்தார். ஆனால், நாச்சப்பன் இந்த வீடு, கிராமம் அனைத்தையும் விட்டு, ஒரே அடியாகப் போய்விட்டான் என்பது அப்போது யாருக்குமே தெரியாது. (முற்றும்) |