உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
2 மாசி பிறந்து இரண்டொருநாள் தான் ஆகியிருந்தது. காலை வெயில் விஷம் போல் ஏறிக் கொண்டிருந்தது. நாலா பக்கமும் காடுகள் வரண்டு கிடந்தன. அங்கங்கே திக்காலுக்கு ஒன்றாக இருக்கும் தோட்டங்களில் மட்டும் பருத்திச்செடி பசுமையாக காட்சியளித்தது. தை மத்தியிலேயே வெடிக்கு வந்துவிட்ட பருத்திச் செடிகள் சற்று சோர்ந்து தெரிந்தன. இன்னும் வெடித்தும் வெடியாமலும் இருக்கின்ற செடிகள் தளதளப்பாக இருந்தன. தோட்டங்களிலே தை போகத்துத் தட்டு பிடுங்கி குத்தாரியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கங்கே சில புதிய போர்களும் போட்டுக் கொண்டிருந்தார்கள். கொரையில் மேவு தீர்ந்து விட்டாலும் பரவாயில்லை. புதிய சோளத்தட்டு வந்துவிட்டது. ஆனால் சோளம் பயிரிடாமல் பருத்தி புகையிலை போட்டவர்களுக்குக் கால்நடைகளுக்குத் தீனிக்குத் திண்டாட்டம் தான். பெரிய பண்ணயங்கலில் சில சமயம் பணத்தாசையால் புகையிலை, பருத்தி போட்டு விட்டு பிறகு ஏராளமான பணத்திற்கு வண்டி வண்டியாக கால்நடைகளுக்குத் தீனி வாங்குவார்கள். கடைசியாக கணக்குப் பார்க்கும் போது புகையிலை, பருத்தியில் வந்த பணமெல்லாம் மாடுகளுக்குத் தீனி வாங்குவதற்குத்தான் சரியாயிருக்கும். மணியகாரர் அப்படி ஒன்றும் தவறு செய்பவரல்ல. தம்முடைய நிலத்தில் தண்ணிப் பாய்ச்சலில் பாதிக்குச் சோளமும் மற்ற பாதிகளில் புகையிலை, பருத்தியும் போட்டிருந்தார். சோளக்கதிர் வெட்டி விட்டார்கள். தட்டுகளையும் பிடுங்கி புதிய போராகப் போட்டிருந்தார்கள். போன வருஷத் தட்டே இன்னும் இரண்டு மூன்று மாதத்திற்கு வரும் போலிருந்தது. சோளக் காட்டிற்குள் கட்டையைக் கடித்துக் கொண்டு பண்டங்கள் நின்று கொண்டிருந்தன. பல்லுக் குச்சி போட்டு பல் விளக்கிக் கொண்டே அந்தப் பக்கம் ராமசாமி கவுண்டரும், மணியகாரரும் வந்தார்கள். அங்கே மேய்ந்து கொண்டிருந்த இளங் காளைகளில் ஒன்றைக் காட்டி மணியகாரர், “இந்த வருசம் கன்னபுரம் தேருக்கு இதைப் புடிக்கலாமுன்னு இருக்கிறனுங்க” என்றார். ராமசாமிக் கவுண்டர் அந்தக் காளையை ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு, “ஏனுங்க, கண்ணு நல்ல வாட்ட சாட்டமா இருக்குது? இருந்தா இருந்துட்டுப் போவுதுங்க” என்றார். “அந்தக் கெரகம் இருக்கறதைப் பத்தி ஒண்ணுமில்லைங்க. ஆனா, சுழி கொஞ்சம் மோசமா இருக்குதுங்க. ஐயெ வேறு வெச்சிருக்கப்படாதுன்னு ஒரு காலு மேலே நிக்கறாங்க.” “இது எதும்பட கண்ணுங்க?” என்று கூறிக் கொண்டு மேய்ந்து கொண்டிருந்த காளையருகில் போனார். “அதுங்களா? நம்ம பெரிய மாட்டுக் கண்ணுத்தானுங்க.” காளை அருகில் சென்று அதை மெள்ளத் தடவிக் கொடுத்து பிடித்துப் பார்த்தார். பிறகு, “ஆமாங்க எழவு, இந்தச் சுழி கூடாதுதானுங்க. அதுக்குப்பாருங்க, கொம்பு என்ன வாட்டமா வந்திருக்குதுன்னு! கண்ணும் நல்ல மைக் கண்ணு. இது வயசுக்கு நல்ல மயிலை ஆகிடுமிங்க. இப்படித்தானுங்க ஒவ்வொண்ணு குறுக்கே இருந்து கெடுத்துப் போடுதுங்க” என்று சொல்லிக் கொண்டே தோட்டத்து வரப்புக்கு வந்தார். மணியகாரர் அங்கிருந்த பண்டக்காரப் பையனிடம் “அடே, அந்தப் பெரிய மாட்டுக் கண்ணுக்கு தவிட்டுத் தண்ணி வைக்கச் சொன்னாங்கண்ணு சொல். நாளையோடு இதை பண்டத்தோடு அவுத்துவுட வேண்டாம்” என்றார். பிறகு ராமசாமிக் கவுண்டரிடம், “இந்தக் கெரகம் தவிட்டுத் தண்ணியே வாயிலே வைக்கமாட்டீங்கதுங்களா?” என்றார். “அதுக்கு ரண்டு நாளைக்குக் கொட்டத்தை எடுத்து வாத்தாச் செரியாப் போகுதுங்க” என்றார். இவர்களிருவரும் தோட்டத்தை விட்டு வீட்டுக்குப் புறப்படும் போது சூரியன் பாதி உச்சிக்கு வந்துவிட்டான். வாயிலிருந்த பல்லுக் குச்சியை ஊர்த் தலை வாசலிலேயே எறிந்து விட்டு நேராக வீட்டுக்கு வந்தார்கள். வீட்டில் செல்லாயா இருவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். பவளாக் கவுண்டர் திண்ணைமேல் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு தலையாரியிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். அவர் காலையில் வழக்கம் போல எழுந்ததும் பல்லை விளக்கிக் கொண்டு, “ஒரு போவணி உப்பு போட்டுத் தண்ணி கொண்டாயா” என்று செல்லாயாளிடம் பழய சோற்றுத் தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டுத்தான் மறுகாரியம் பார்ப்பார். அந்த நீர் உள்ளே போகாத அன்று முழுதும் ‘தலை சுற்றுது, கிறுகிறுப்பாக இருக்குது’ என்று சொல்லிக் கொண்டிருப்பார். அதனால் செல்லாயான் அதிகாலையில் பாத்திரங்கள் விளக்கினதும், முதல் வேலையாக ஒரு டம்ளர் பழய சோற்று தண்ணீரில் கொஞ்சம் உப்புப் போட்டு பவளாக் கவுண்டரிடம் அவர் கேட்டாலும் கேட்கா விட்டாலும் கொடுத்து விடுவான். இதை வேறு யாராவது கொடுத்தாலும் பவளாக் கவுண்டருக்கு மேவாது. “என்ன பச்சத் தண்ணியாட்ட இருக்குதா? ஏம் புளிக்கலை? உப்புப் பத்தலயே!” என்று ஏதாவது சொல்லாமல் இருக்க மாட்டார். செல்லாயாளுக்குக் கல்யாணம் ஆகி வருஷம் இரண்டானாலும், சேர்ந்தாற் போல புருசன் வீட்டில் ஒரு மாதம் கூட இருந்ததில்லை. அப்படியானால் அவள் புருஷனை விட்டு விலகி இருக்கிறாள் என்று அர்த்தமல்ல. புருஷனோ பெண்சாதி வீட்டில் தானிருக்கிறான். நம் ராமசாமிக் கவுண்டர் மகன் மாரியப்பன் தான் புருஷன். மாரியப்பனிடம் பவளாக் கவுண்டருக்கு அளவு கடந்த பிரியம். பேத்தியை பார்க்காமல் கூட இருந்து விடுவார். ஆனால் பேத்தி புருஷனைப் பார்க்காமல் போனால் அவருக்குச் சரியாகத் தூக்கம் பிடிக்காது. மருமகள் இறந்த பிறகு பேத்தியை இவர் தான் வளர்த்தியது. அதனால் இந்த வயது காலத்தில் யார் இருக்கிறார்கள் பார்த்துக் கொள்வதற்கு. அதோடு பண்ணயமும் பெரிய பண்ணயம். மணியகாரருக்கும் வேறு குழந்தைகள் கிடையாது. பின்னால் இதெல்லாம் மாரியப்பனுக்குத் தானே சேரப் போகிறது. பின் எங்கிருந்தால் தான் என்ன என்று ராமசாமிக் கவுண்டரும் கவனிப்பதில்லை. அன்று மணியகாரர் கள்ளுக்கடை ஏலத்திற்கு போவதாகச் சொல்லியிருந்தார். ஆகையால், செல்லாயா நேரத்திலேயே சமையல் காரியங்களை எல்லாம் முடித்திருந்தாள். சமையலுக்கு வீட்டில் பொன்ன பண்டாரம் மகன் தான். தண்ணீர் கொண்டு வருவது, பாத்திரம் தேய்ப்பது எல்லாம் ராமன் செய்து விடுவான். செல்லாயா அடுப்பு வேலையை முழுதும் கவனித்துக் கொள்வாள். ஆனால் இப்போது ஒன்பது மாத கர்ப்பமாயிருப்பதால் அவளால் முன் போல எல்லாக் காரியங்களையும் செய்ய முடிவதில்லை. அது தவிர செல்லாயா ஏதாவது வேலை செய்வதைப் பார்த்துவிட்டால் பவளாக் கவுண்டர் வேறு சத்தம் போடுவார். இருந்தாலும் இன்று அவளே தகப்பனுக்கும் மாமனாருக்கும் சமையல் செய்து போட விரும்பினான். ஊரிலிருந்து மாமனார் வந்திருக்கும் போது அவளால் கையைக் கட்டி உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? இலையைப் போட்டு பரிமாறி வைத்துவிட்டு வெண்ணெய் உருக்க அடுப்பில் கறண்டியை வைத்துவிட்டு வெளியில் வந்து, “ஐயா, எலை போட்டாச்சுங்க” என்றாள். இருவரும் சாப்பிட்டானதும் வெளித் திண்ணைக்கு வந்து உட்கார்ந்தார்கள். ராமன் ஒரு தட்டில் வெற்றிலை பாக்குக் கொண்டு வந்து வைத்தான். மணியகாரர் வெற்றிலையைப் பார்த்ததும் சிரித்தார். அதைப் பார்த்து ராமசாமிக் கவுண்டர், “ஏனுங்க, சிரிக்கிறீங்க” என்றார். “ஒண்ணுமில்லீங்க. இதைப் பாத்ததும் உங்க ஊரு கருப்பகவுண்டன் வெற்றிலைப் பொட்டி நெனப்பு வந்ததுங்க. அவெ, வெள்ளிச் சுண்ணாம்புக் காயிலிருந்து சுறண்டிப் போடறதையும், புகையிலையை கையில் பிடிச்சுகிட்டுக் கடிச்சதையும் நேத்துப் பாக்கப் பாக்க எனக்கு சிரிப்பு அடக்க முடியலீங்க” என்றார். “கள்ளுக்கடை கருப்பணனுங்களா? அத ஏங் கேக்கறீங்க. மீறுன வேலையிங்க. எங்களை எல்லாம் வரவு செலவிலேயே வைக்கறதில்லீங்க. அண்ணக்கி, நம்ம பெரிய ஊட்டு அப்பங்கிட்ட, “ராமசாமி கவுண்டன் பயனை மொத்தச் சோத்துக்கு உட்டிருக்கிறானே, அப்படியா, நா உடுவே, நானும் இல்லாதவனூட்டுலே போய்க் கட்டிப் போடுலே, இருந்தாலும் அப்படி மொண்ணத்தனமா நம்மாலே இருக்க முடியாதுன்னு” நம்ம மாரியப்பனை பத்தி ஏதோ பேச்சு வாக்கிலே சொன்னானாம். எப்படி இருக்குதுங்க மாப்புளே பேச்சு! எனக்கு அவனெ என்னதான் பண்ணக்கூடாதுன்னு ஆயிப்போச்சுங்க! அதுக்குளெ உங்க பொறந்தவ இருந்திட்டு ஆரோ சொன்னாச் சொல்லீட்டுப் போறாங்க. நம்ம மேலே காச்சா தொங்குதுன்னா. உங்க மருமவனும் கேட்டுட்டு சிரிச்சிக்கிட்டுப் போயிட்டான். நானும் போச்சாது போன்னு உட்டுட்டே. அவம் பண்ற கவுண்டிக் கையை ஏங் கேக்கறீங்க!” என்றார். கட்டில்மேல் உட்கார்ந்து கொண்டிருந்த பவளாக் கவுண்டர் இதை முழுதும் கேட்டுவிட்டு, “ராமணா, ஒரு செல்வாந்தரம் தெரியுமா? ‘அற்பனுக்கு வாவு வந்தா அர்த்த ராத்திரியிலே கொடை பிடிப்பானாம்! நாலு காசு கையிலே வந்துட்டதுல்ல. அதுதான் துள்ளறான்! இவெ கள்ளுக்குடம் சுமந்தது ஆருக்குத் தெரியாது?” என்றார். “அது செரியுங்க, பாயிலே கெடந்தவெ பாயிலாயா கெடக்கோணும்? மகராசனாப் பொழக்கட்டும், யாரு வேண்டாமுன்னா? இருந்தாலும் கொஞ்சம் பழயதை எல்லாம் நெனச்சுப் பாக்கோணுமில்லெ. சும்மா அண்ணாந்து நடந்தா எத்தென நாளைக்கு நடக்கும்?” “இந்த வருசம், நம்ம மேக்காலத் தோட்டத்தையும் வட்டிக் கடைக்காரெ இவெ பேருக்கே கெரயம் பண்ணிப் போட்டானுங்க. வட்டிக்கடைக்காரெ நம்மகிட்ட விரோதம் பண்ணிக்கிட்டதும், இனி வேறு ஆளு வேணுமின்னு இந்த வேலை பண்ணீருக்கிறானுங்க. அதுலே இன்னும் பெரிய எழவெல்லாம் இருக்குதுங்க. எண்ணக்கி கருப்பணெ தோட்டத்துக்குள நொழஞ்சாலும் அண்ணக்கே வேலயைத் தீக்கறதுன்னு நடு வளவுக் குப்பண்ணஞ் சொல்லிக்கிட் இருக்கிறானுங்க.” “அட கெரவத்தை! குப்பணணெ நம்பக் கூடாதா! கருப்பண பத்துப்பேருக்குக் கள்ளு ஊத்திக் காரியத்தைச் சாதிச்சுக்கலாமுன்னு பாக்கறான். எவனோ எக்கேடோ கெட்டுப் போறானுங்கோ. நீங்க ஒண்ணும் தலையிட்டுக்காதீங்க” என்றார் மணியகாரர். “நீங்க சொன்னாச் செரி! எந்த நாயோ எக்கேடு கெட்டுப் போனாத்தான் நமக்கென்னுங்க? நான் அந்தப் பரோபகார வேலையெல்லாம் உட்டுட்டனுங்களா? கடைசீலே முன்னுக்கு நிண்ண நாமதான் பொல்லாப்பு ஆகோணுமுங்க.” இதற்குள் வண்டிக்காரன் வந்து வண்டி பூட்டியாய் விட்டது என்று சொன்னான். மணியகாரர் தூக்கில் இருந்த சொக்காயை எடுத்து மாட்டிக் கொண்டு, “நீங்க இடுப்பு வேட்டியை மாத்திலீங்களா?” என்றார். அதற்குள் செல்லாயா ஒரு வெளுத்த வேஷ்டியைக் கொண்டு வந்து கொடுத்தாள். ராமசாமிக் கவுண்டர் அதை வாங்கிக் கட்டிக் கொண்டு, “கொஞ்சம் தண்ணி கொண்டாயா! வாயைக் கொப்புளிச்சுக்கிட்டு இன்னொருதரம் வாய்க்குப் போட்டுக்கலாம்” என்றார். “ஏ, ராமணா, எங்கே உன் வெத்திலப் பொட்டியைக் காணமா?” என்றார். “அந்தக் கதையை ஏன் கேக்கறீங்க? பல்லு முழுக்க ஆடுதுங்க. என்னமோ அந்தப் பழய அப்பேசத்துக்கு வாயிலே போட்டு ஒண்ணா ரெண்டா மெல்றதுங்க. நல்லாக் கூட மெல்ல முடியாதுங்க” என்றார் ராமசாமிக் கவுண்டர். “அடே, நீயல்லா நேத்தத்த பயெ, உனக்குப் பல்லுப் போயிட்டதுங்கறெ! ஊம் எனக்கு இந்த எளவு கண்ணு வெளிச்சம் தான் தெரிய மாட்டீங்குது. இப்ப உன்னெ எல்லாம் தூரத்திலிருந்தா ஆருன்னே தெரியாது. பேச்சிலே தான் கண்டுக்கறேன்” என்றார். அவர் கூறி முடிப்பதற்குள் வெளியிலே யாரோ மணியகாரரிடம் பேசுவது கேட்டதால் ராமசாமிக் கவுண்டர், “ஆனா இருங்கய்யா, நேரமாவுது, கள்ளுக்கடை ஏலத்துக்குப் போயிட்டு வாரம்” என்று விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தார். வெளியில் மணியகாரருடன் பேசிக் கொண்டிருந்த பொன்ன பண்டாரம் ராமசாமிக் கவுண்டரைப் பார்த்ததும் கும்பிட்டான். ராமசாமிக் கவுண்டர் வந்ததை மணியகாரர் கவனியாமல், “என்னடா, ஒண்ணும் சொல்லாமெ, ஊரை உட்டு ஓடிப் போறதுங்களான்னு கேக்கறே?” என்றார். “சாமி, என்னத்தைச் சொல்றதுங்க. இருக்கிறது ரண்டு பசங்க, ஒருத்தெ இங்கிருக்கிறதாப் போச்சுங்க. இது பரம்பரையா நடந்து வருதுங்க, இன்னொரு பயெ எலெ தழைக்குப் போகோணுமுங்க. பாளயத்துக்கு போக வேண்டாமுங்களா? அவளும் ஆறுமாசமா படுத்துக்கிட்டா நான் கொழந்தைகளுக்கு சோறு தண்ணி காச்சி ஊத்துட்டுமா? யாரோ உங்களப் போல மகராசெ கூப்பிட்ட சொல்லுக்கு ஏனுன்னு கேக்கட்டுமா? என்ன பண்ணட்டும் சொல்லுங்க?” என்று சொல்லி நிறுத்தினான். “அட, உன்னயே என்ன பண்ணச் சொல்றாங்க? சங்கதியைச் சொல்லு” என்று மணியகாரர் கொஞ்சம் அதட்டிக் கேட்டார். “ஐயோ, எசமான் நான் என்ன சொல்றனுங்க. எங் குறையைச் சொல்றனுங்க. காரத்தாலே சுள்ளி வலசு கருப்பணகவுண்டர் வந்தாருங்க. அவரு மகராசரா கலசம் வெச்சுப் பொழச்சுக்கிட்டுங்க. அதுக்கோசரம் இல்லாத புது வழக்கமா ஒண்ணு செய்யச் சொன்னா எப்படிச் செய்யறதுங்க? உம்பட பசங்களில் ஒருத்தனை நம்ம ஊட்டுலே வேலைக்கு உடோணுமடா என்னாருங்க அது எப்படியுங்க சாமி முடியும்? ரண்டு பேரிலே ஒருத்தன் மணியாரர் வளவிலே இருக்கிறானுங்க. இந்தப் பயலையும் உட்டுட்டா நா பாளயம்பட்டுப் பார்க்க வேண்டாமுங்களா? என்றேன். நான் இவ்வளவு தான் சொன்னனுங்க. அதுக்கு, ‘ஆச்சா போச்சா; நீ ஊரிலே குடியிருந்ததைப் பார்த்துக்கிறேன்!’ அப்படீன்னு அடிக்க வந்திட்டாருங்க. ஊரிலே இருக்கிற பத்து மகராசம் பாத்து போடான்னா போயிடறன்னனுங்க. ‘சரி பாத்துப் போடலாம். ஆறு உன்னை குடிவெச்சுப் போடுவாங்களோ, பாத்துப் போடறேன்’ என்று குதி குதின்னு குதிச்சுட்டுப் போயிட்டாருங்க. இதுக்குத் தான் வந்தனுங்க. நான் ஊரிலே குடி இருக்கிறதா எங்காச்சும் ஓடிப் போகட்டுமான்னு கேட்டுப் போவலாமுன்னு வந்தேனுங்க அப்படியே சுள்ளி வலசுக்கு நம்ம வளவுக்குப் போயிருந்தனுங்க. இங்கே போயிருக்கறாங்கண்ணு சொன்னாங்க. செரி இரண்டு பேருகிட்டயும் சொல்லீட்டுப் போலாமுன்னு வந்தனுங்க” என்றான். இதைக் கேட்கக் கேட்க ராமசாமிக் கவுண்டருக்கு அளவு கடந்த கோபம் வந்துவிட்டது. ‘ஓஹோ! கள்ளுக் குடம் தூக்கிப் பயலெ ஒரு கை பாத்தே உட்றது! இவெ எப்படி ஆண்டியைக் குடி எழுப்புவானொ பாக்கறேன்” என்றார். மணியகாரர் ஆதரித்து ஏதாவது சொல்லுவார் என்று ராமசாமிக் கவுண்டர் எதிர்பார்த்தார். ஆனால் மணியகாரர் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. பிறகு சிரித்துக் கொண்டு, “என்னுங்க மாப்பிளே, நீங்களும் அவெ ஒளறரானு பேசறீங்க! கள்ளுக் கடைக்காரன் என்ன பண்ணிப் போடுவானுங்க? காரத்தாலே வாயிலே வந்ததை ரண்டைச் சொல்லீட்டுப் போயிருப்பா. அவெ குடி எழுப்பற போது பாத்துக்கலாமுங்க; ‘அடே, பொன்னா போயி ஊட்டுலே எதாச்சும் வயத்துக்குப் பாத்துக்கிட்டு ஊடு போய்ச் சேர். நாங்க தாராபுரம் போயிட்டு வந்திட்டு எல்லாம் பாத்துக்கறோம்’” என்று கூறிவிட்டு ராமசாமிக் கவுண்டரிடம் “செரி, ஏறுங்க மாப்பிளே, நேரமாவுதுங்க” என்றார். இருவரும் வண்டியில் ஏறியதும் வண்டி வேகமாகச் செல்லாரம்பித்தது. பொன்ன பண்டாரம் மணியகாரர் வீட்டிற்குள் நுழைந்தான். |