3

     இனிப்புப் பழமாகப் பழுக்கிற மாமரத்திலே ஒரு பழம் கூடப் புளிக்காது. எல்லாப் பழமும் இனிப்பாகத் தான் இருக்கும்! ஆனால் மனித மனத்தை எடுத்துக் கொண்டு இவ்விதம் தீர்மானிப்பது கஷ்டம். நல்ல குணங்களோடு உதிக்கும் ஒரு மனதிலே சில கெட்ட குணங்களும் உதிப்பதுண்டு. ‘ஐயோ, அவர் கூட அப்படி நினைத்து விட்டாரே’ என்று பரிதாபப் படுவதைத் தவிர, பண்ணும் வழி வேறு ஒன்றும் கிடையாது. ஏன் இப்படி நிகழ வேண்டும்? இது யாரால் கூற முடியும்? அன்பு, தூய்மை எல்லாம் குடி கொண்டிருக்கலாம். ஆனால் அங்கும் சில அநாசாரங்கள் தலைவிரித்துத்தான் ஆடுகின்றன. இதற்கெல்லாம் ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்று பதம்’ பார்த்தால் சரிபட்டு வராது. இன்று நல்லவன் என்று நாமே தலைமேல் வைத்துக் கூத்தாடுகிறோம். மறுநாளே நமது ஜன்ம சத்துருவாகப் பாவிக்க வேண்டி ஏற்படுகிறது. நீர் நெருப்பாகிறது; அன்பு வெறுப்பாகிறது. எந்த ஆசாபாசமும் நிலைத்து நிற்பதில்லை. மனிதன் சந்தர்ப்பத்தை அநுசரித்து மாறுகிறான். அப்படி மாறாவிட்டால் அவன் முட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் ராமசாமிக் கவுண்டரை ஒரே அடியாக முட்டாள் என்றும் கூற மனம் துணிய மாட்டேனென்கிறதே!

     ராமசாமிக் கவுண்டர் மிகுந்த பரோபகாரி என்று கிராமத்திலே பெயர் எடுத்தவர். இதுவரையிலும் யாரும் அவர் முன்னால் நின்று ஒரு வார்த்தை சொன்னது கிடையாது. யாரும் அவருடைய வார்த்தையை மீறியதும் கிடையாது. ஆனால் கொஞ்ச காலமாக என்னவோ அவர் மனதிலே யாரும் தன்னை முன்போலப் பாராட்டுவதில்லை என்ற எண்ணம் குடி கொண்டு விட்டது. இந்த எண்ணம் எப்படி அவர் மனதில் இடம் பெற்றது என்று சொல்வது கடினம். இதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். முக்கியமாக இவருடைய ஊரடித் தோட்டத்தை விற்றதுதான்.

     ஊரடித் தோட்டமும், அதன் சாளையும் அங்கு ராமசாமிக் கவுண்டர் திம்பு தலையணையுடன் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு நாலு பேருடன் வார்த்தையாடியது எல்லாம் இப்போது கனவு போலாகி விட்டது. இதற்கு என்ன காரணம் என்று ராமசாமிக் கவுண்டர் யோசிக்கும் போதெல்லாம் தற்சமயம் தோட்டம் கருப்பண கவுண்டர் வசம் இருப்பதுதான் மனதை உறுத்தும்!

     ராமசாமிக் கவுண்டர் வீட்டிற்குள் நுழைந்து தூக்கில் போட்டிருந்த மேல் வேஷ்டியை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டார். அதைப் பார்த்ததும் அவருடைய மனைவி செல்லக்காள். “நீங்களும் ராசிபாளையமா போறீங்க?” என்றாள்.

     ராமசாமிக் கவுண்டர் எதையோ யோசித்துக் கொண்டு “ஏ போவப் படாதா?” என்றார்.

     “இல்லை, நா எனத்துக்குப் போவப் படாதுங்கறே? எங்கயோ போறீங்களே, மாரியப்பந்தா காபியைக் குடிக்காமப் போயிட்டா; நீங்காச்சு குடிச்சுட்டுப் போங்களெ” என்றாள்.

     “ஆனாச்செரி, கொண்டா” என்று கூறிவிட்டு, மேல் வேஷ்டியை எடுத்து திண்ணைமேல் போட்டு அதன் மேல் உட்கார்ந்தார்.

     செல்லக்காள் காபியை டம்ளரில் ஊற்றிக் கொண்டு வந்து எதிரில் வைத்தாள். பிறகு, “நா போயி கொளந்தையைப் பாத்துட்டு வரவேண்டாமா?” என்றாள்.

     “அதுக்கென்ன அவசரம்? ஊடு கூட்ற போது போனாப் போவுது.”

     “நானும் அப்படித்தா நினைச்சிக்கிட்டு இருக்கறே. ஏ நீங்க அதுக்கு முந்திப் போவுலயா?”

     “போனாப் போவுது...”

     அவர் வார்த்தையை முடிப்பதற்குள் “எங்கே போனாப் போவுது?” என்று கேட்டுக் கொண்டே குப்பண கவுண்டன் வந்தான். வந்ததும் கையிலிருந்த கூடையையும், மண் வெட்டியையும் வாசலில் வைத்து விட்டு திண்ணையில் காலைக் கீழே தொங்கப் போட்டு உட்கார்ந்தான்.

     “வாப்பா, நா உம் வளவுப் பக்கம் தான் வரலாமுன்னு இருந்தே. அதுக்குளே நீயே வந்திட்டே. அது செரி. அப்புறம் அது என்னாச்சப்பா? ஏலமுங் கீலமின்னாங்களெ?” என்றார்.

     “நானும் அதுக்குத்தா வந்ததுங்க. இந்தக் கள்ளுக்கடைக்காரன் பாருங்க. குறுக்கே பூந்துக்கிட்டு விளா உடறான். அப்படித்தான் இவெ நம்மளக் கெடுத்து என்ன ஆயிரம் வருசத்துக்கா பொளச்சுப் போவானுங்க? எல்லா நாளு வந்தா ஒரு நாளைக்குச் சாக வேண்டியதுதானுங்க. அதுக்கு எப்ப செத்தாத்தான் என்னுங்க? இண்ணைக்குச் செத்தா நாளைக்கு ரெண்டு நாளுங்க. நாங்களும் இவனெ ஒரு கை பாத்து உடறது தானுங்க” என்றான்.

     “அட, அமுட்டுத்தா. நாம செத்தா நாடெல்லா எலும்பாவா போயிருது? என்ன பண்ணரான்? இவெ கெரயத்துக்கு வாங்கீட்டான்னு பேச்சு காதுக்கு எட்டுச்சு. அது நெசந்தானா?”

     “ஆமாங்க, நாளக்கிப் பூமியை சுவாதீனப் படுத்த வாராங்க. கள்ளுக்கடைக்காரன் ஆளுக எல்லாம் தயார் பண்ணி வைச்சிருக்கானாம்.”

     “ஓஹோ! அப்படியா சங்கதி?”

     “ஆமாங்க, நீங்க என்னன்னு இருக்கறீங்க? நாங்களும் ஒண்ணும் சும்மா இருக்கலீங்க. இங்கயும் ஒரு இருபது ஆளுக்குப் பக்கமா தயாரா இருக்குதுங்க. எவெ தோட்டத்துக்குளெ நொழஞ்சாலும் போட்டுத் தள்ளீடறது தானுங்க. நீங்க நாளக்கு எங்கயும் போகமாட்டீங்களே? எதுக்கும் நீங்களும் ஒரு எட்டு தோட்டத்துப் பக்கம் வாங்க நா உங்களுக்குச் சொல்லி உடறேன்.”

     “செரி, நீ தடுத்துக்கிட்டு, எனக்குச் சொல்லி உடு. அப்பறம் நா பாத்துக்கிறேன்” என்றார் ராமசாமிக் கவுண்டர். இதைக் கூறும் போது மணியகாரர் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. இவ் விஷயத்தில் தலையிடக் கூடாது என்று மணியகாரர் சொல்லியிருந்தார். ஆனால் ராமசாமிக் கவுண்டர் மனம் கேட்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் குப்பணனுக்கு உதவி செய்ய வேண்டுமென்பதா அல்லது கருப்பண கவுண்டருக்கு துன்பத்தைக் கொடுக்க வேண்டுமென்பதா என்பது தெரியவில்லை. எது எப்படியானாலும் அவர் ராசிபாளையம் புறப்பட்ட பயணத்தை நிறுத்தி விட்டார். அதோடு செல்லக்காளைக் கூப்பிட்டு தாம் போகவில்லை என்பதையும் தெரிவித்து விட்டார்.

     ராமசாமிக் கவுண்டர் ஆசாரத்தில் போட்டிருந்த கட்டிலில் சென்று படுத்துக் கொண்டு என்னமோ யோசித்துக் கொண்டிருந்தார். பொன்ன பண்டாரம் அருகில் வந்து கும்பிட்டதைக் கூட அவர் கவனிக்கவில்லை. அவன் சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு, “என்னமோ, ரொம்ப யோசிக்கறாப்பலெ இருக்குதுங்களா?” என்றான்.

     அவர் திடுக்கிட்டு பொன்ன பண்டாரத்தைப் பார்த்து, “அடப் பொன்னனா? வா வா, எங்கடா ரொம்ப நாளாக் கண்ணிலயே காணாமா? எங்காவது குடி ஓடிப் போயிட்டயோ என்னமோடா?” என்றார்.

     பொன்ன பண்டாரம் கையிலிருந்த இலைக் கட்டை கீழே வைத்துவிட்டு கட்டில் ஓரத்தில் நின்றபடியே, “சாமி அந்தச் செட்டு இங்க நடக்காதுங்க. கருப்பண கவுண்டனப் போல பத்துக் கவுண்ட வந்தாலும் முடியாதுங்க. எசமா எல்லா குடி இருக்கற போது நானும் குடி இருப்பனுங்க” என்று கூறிச் சிரித்தான்.

     “ஏண்டா, அதுக்கப்பறம் என்னாச்சு பேச்சு வந்ததா?” என்று ரொம்ப ஆவலுடன் ராமசாமி கவுண்டர் கேட்டார்.

     “அதுக்கப்பறம் மூச்சு உடோணுங்களெ! நம்ம கிட்ட வந்துட்டுப் போனதெல்லாம் தெரிஞ்சிருக்குமிங்க. அப்பறமும் மூச்சு உடப் பைத்தியமா புடிச்சிருக்குதுங்க? அது இருக்கட்டுமுங்க. இண்ணக்கி ஒண்ணு கண்ணாலே பாத்தனுங்க. அதைச் சொல்றதுக்கும் முடியலீங்க. அதெ உங்ககிட்ட சொல்லாதிருக்கவு முடியலீங்க” என்றான்.

     “அட என்னடா அது? அதிசயத்தைக் கண்டிட்டு வந்திட்டா?” என்று கூறிக்கொண்டே செல்லக்காள் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தாள்.

     “ஐயோ! ஆத்தா வேறெ வந்திட்டாங்களா? நா சொல்லலெப் போங்க” என்று கூறிவிட்டு, எலைக்கட்டை எடுக்கப் போனான்.

     இதைக் கண்டதும் ராமசாமிக் கவுண்டர், “என்னடா திருவாத்தானா இருக்கரே? அவ இருந்தா உன்னை என்னுங்கறா சொல்லு” என்றார்.

     உடனே செல்லக்காளும், “நா இருக்கலியப்பா, இதோ போயிடறேன்” என்று கூறிக் கொண்டே சமையல் வீட்டிற்குள் நுழைந்தாள்.

     செல்லக்காள் போய் சிறிது நேரமுமாகிவிட்டது. ஆனால் பொன்ன பண்டாரம் வாய் திறக்கவேயில்லை. இங்கேயும், அங்கேயும் பார்த்துக் கொண்டு, கையையும், காலையும் சொறிந்து கொண்டே நின்று கொண்டிருந்தான். ராமசாமிக் கவுண்டர் பொறுத்துப் பார்த்தார். கடைசியாக “ஏண்டா, சொல்ல மாட்டாயா?” என்றார்.

     பொன்ன பண்டாரம் இனித் தாமதிக்கலாகாது என்று தெரிந்து கொண்டான். கடைசித் தடவையாக சுற்றிலும் பார்த்துவிட்டு, “ஒண்ணுமில்லீங்க. கள்ளுக்கடைக்காரர் மவ முத்தாயாளுக்கும் நாச்சப்பனுக்கும் கொஞ்சம் எடவாடு உண்டு போலிருக்குதுங்க” என்றான்.

     படுத்துக் கொண்டிருந்த ராமசாமிக் கவுண்டர் எழுந்து உட்கார்ந்தார். பிறகு, “என்ன, நீ சொல்றது? உனக்கு எப்படித் தெரியும்!” என்றார்.

     “தெரியறது என்னுங்க! இதெல்லாம் பளிச்சின்னு தெரியக்கூடிய சங்கதிகளா? அப்படியே சாடை மாடையிலே கண்டுக்க வேண்டியதுதானுங்க.”

     “ஆமா, அது வாஸ்தவம்தா. இல்லாட்டிப் போனா அந்தப் பயனுக்கு அங்கென்ன வேலை? ஊட்டுலே அவனும் அவளும் வெச்சதுதா சட்டமாமுல்ல? உனக்கு எப்படித் தெரிஞ்சது?”

     “எனக்கு இப்பத்தா ஒரு சந்தேகம் உண்டாச்சுங்க. நா நடவை தொறந்து இருக்கம்படி மளமளன்னு உள்ளெ போனனுங்க. முன்னாலே ஒருத்தரையும் காணமுங்க. சும்மா தன்னப்போல எலெயைப் போட்டுட்டு வந்திட்டா நாளைக்கு எலெயே போடிலினு கூடச்சொல்லுவாங்கினு ஊட்டுக்குளே போனனுங்க. முன்னாலே ஊட்டுக்குளயும் ஒருத்தரையும் காணமுங்க. சரி, அந்தப் பக்கம் தண்ணிக் கொட்டத்துக்கிட்டெ முத்தாயா எதாச்சும் வேலையா இருக்குமுணு சொல்லி அடி எடுத்து வெச்சனுங்க. அந்தப் பக்கத்திலிருந்து முத்தாயா சிரிப்புச் சத்தம் கேட்டதுங்க. அதோடு ஆரோ தண்ணி ஊத்திக்குவாங்க போலிருந்தது. நா அந்தப் பக்கம் போயி எட்டுப் பாத்தனுங்க. நாச்சப்பெ தண்ணி வாத்துக்கிட்டு இருந்தாங்க. முத்தாயா அப்பத்தா முதுகு தேச்சு உட்டுக்கிட்டு இருந்ததுங்க. என்னைக் கண்டதும் முதுகு தேக்கறதை உட்டுட்டு ஒண்ணும் தெரியாத தாட்ட ‘எங்க வந்தெ?’ யினு கேட்டுதுங்க. நா ஒண்ணும் தெரியாதவனாட்ட வந்திட்டனுங்க” என்று கூறி முடித்தான்.

     ராமசாமிக் கவுண்டர் அவன் கூறிய அனைத்தும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அவன் பேசி முடித்த வெகு நேரத்திற்குப் பிறகு, “பாத்துக்கடா? இவனல்லா ‘நானும் கவுண்டன்னு’ மீசையை முறுக்கீட்டு வெளியிலே, வந்திடராங்க. ஒரு கொங்க கொமரி, அதும் ஒரு முண்டச்சி ஒரு தண்டுவனுக்கு ஊட்டுலே ஒரு குஞ்சு கூட இல்லாத போது முதுகு தேச்சுடப் போனான்னா, அதுலே என்னமோ வேற விசயம் இல்லாமலா இருக்கும்? சரி, இதை உம் மனசுக்குள்ளேயே போட்டுக்க” என்றார்.

     “அவெ மனசுக்குளயும் போட வேண்டாம். உங்க மனசுக்குளயும் போடவேண்டாம். ஏ உங்களுக்கெல்லாம் புத்தி இப்படிப் போகுது? ஒரு ஊட்டுக்குளெ பெத்தாப் பொறப்பா இருந்தா முதுகு தேச்சு உடறதில்லையா? என்னமோ சீமையிலிருந்து வந்தவங்க போலப் பேசறீங்களே? ஏண்டா! ஆண்டி, உனக்கு வேற வேலெ இல்லயா? காரத்தாலெ பேச்சப்பாரு பேச்செ?” என்று கோபமாக செல்லக்காள் கூறினாள்.

     இவர்களிருவரும் இதுவரையிலும் பேசிக் கொண்டிருந்ததை சமையல் வீட்டில் இருந்து கொண்டே செல்லக்காள் கேட்டுக் கொண்டிருந்தாள். பேச்சு சுவாரஸ்யத்தில் இவர்களிருவரும் இதைக் கவனிக்கவில்லை. எதிர்பாராத இத்தாக்குதலால் பொன்ன பண்டாரம் சிறிது அசந்து போய் விட்டான். இருந்தாலும் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “பாத்தீங்களா? நா அப்பவே சொல்லலே ஆத்தா சண்டைக்கு வருவாங்குன்னு?” என்று கூறிச் சிரித்தான்.

     “அட, அவ கெடக்கறா பித்து முண்டெ! அவளுக்கு என்ன தெரியும்? அவளுக்குத் தெரியறாப்பலெ இருந்தா பொளப்பு ஏ இப்படி இருக்குது?” என்று கூறினார் ராமசாமிக் கவுண்டர்.

     செல்லக்காளுக்கு மேலும் அவர்களுடன் பேசுவதற்குப் பிரியமில்லை. “நல்ல புத்தி இருக்கிறவங்க நல்ல பொளப்பா பொளக்கறது! ஆரு வேண்டாமின்னாங்க!” என்று முணுமுணுத்துக் கொண்டே அப்புறம் சென்று விட்டாள்.



பனித்துளி : 1 2 3 4 5 6 7 8 9 10