உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
6 கருப்பண கவுண்டர் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டார். நன்கு விடிந்து விட்டது என்று தான் முதலில் நினைத்தார். ஆனால், கதவைத் திறந்து கொண்டு ஒரு தடவை வெளியில் சென்று பார்த்த பிறகு விடியாதது தெரிந்தது. விடியற் கால இருள் கருகும்மென எங்கும் பரவி இருந்தது. அறைக்குள் குத்து விளக்கு மினுக் மினுக் என எரிந்து கொண்டிருந்தது. குத்து விளக்கடியில் முத்தாயா ஒரு பழய பாயை விரித்து தலைக்குக் கையைக் கொடுத்துப் படுத்துக் கொண்டிருந்தாள். தகப்பனார் எழுந்த தொன்றும் அவளுக்குத் தெரியாது. கணவன் இறந்து தகப்பன் வீட்டிற்கு வந்ததிலிருந்து முத்தாயா தந்தையின் கட்டிலடியில் தான் படுத்து வருகிறாள். கருப்பண கவுண்டருக்கு கொஞ்சம் மறதி அதிகம். வைத்த சாமான்களை அடிக்கடி மறந்து விடுவார். முக்கியமாக வெற்றிலைப் பெட்டியை வைத்த இடத்தில் மறந்து விட்டு வீடு பூராவும் தேடுவதைப் பார்த்தால் பரிதாபமாயிருக்கும். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் முத்தாயாள் தானே வேண்டிய சாமான்களைத் தேடிக் கொண்டு வந்து கொடுப்பாள். கருப்பண கவுண்டர் வெற்றிலைப் பெட்டியை எடுத்து மடிமீது வைத்துக் கொண்டு ஒரு கொட்டாவி விட்டார். இன்னும் அவருக்குத் தூக்கக் கலக்கம் தீரவில்லை. சுற்றிலும் அமைதி நிலவியது. ஆனால், தூரத்தில் யாரோ வாசலுக்குச் சாணி தெளிக்கும் சத்தம் ‘சளக் சளக்’ எனக் கேட்டுக் கொண்டிருந்தது. ஒண்டிக் குடித்தனக் காரியாயிருப்பாள். தோட்டத்திற்குக் காலையில் போகும் போதே வாசல் பெருக்கிச் சாணி போட்டுவிட்டுப் போய்விட்டால் மாலை வீடு திரும்பும் போது வீடு பார்ப்பதற்கு லட்சணமாயிருக்கும். இல்லாவிட்டால் குடி போன வீடு மாதிரி தானே இருக்கும்? எதிரில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த தம் மகளை ஒரு தரம் உற்றுப் பார்த்தார். என்ன நினைத்தாரோ என்னவோ; ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். அவள் கூந்தல் அவிழ்ந்து அலையோடிக் கிடந்தது. மாராப்புச் சேலை சற்றும் நெகிழாமல் இறுக்கிக் கட்டிக் கொண்டிருந்தாள். உதட்டில் வெற்றிலைச் சாரல் ஏறியிருந்தது. வெள்ளை வெளேரென அவள் அணிந்திருந்த புடவையும் அந்த மங்கிய வெளிச்சமும் கருப்பண கவுண்டர் திருஷ்டிக்கு வேறு விதமாகப்பட்டது. எங்கோ கண்காணாத இடத்திலே, ஆழமான ஒரு சுனையிலே, இந்த உலகத்தின் தொடர்புகளை எல்லாம் அறுத்து கொண்டு விடுதலை பெற விரும்பிய ஜீவன் ஒன்று நீரில் மிதப்பது போலிருந்தது. ஆம். இந்த உலகத்தில் அவள் கண்ட சுகம் என்ன? பிறந்தாள். பிறந்து கண்ட பயன்? எல்லோரையும் போலத் தான் இவளும் ஒரு புருசனைக் கட்டிக் கொண்டாள். ஆனால், புருஷன் இறந்து இன்று வருஷம் ஆறு ஆகிறது. அதாவது கலியாணமான ஆறாம் மாதம் கணவன் இறந்து கைம்பெண்ணாகத் தந்தையின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். வந்ததிலிருந்து இன்று வரையிலும் அவள் தான் குடும்பத்திற்கு எஜமானி. தன் மகள் இந்த இள வயதில் வாழ்க்கையைப் பலி கொடுத்து விட்டதை எண்ணி கருப்பண கவுண்டர் அடிக்கடி ஏங்குவார். ஆனாலும், அவளால் தான் தம் குடும்பம் விருத்தி அடைந்தது என்று சிறிது ஆறுதலடைவார். அதோடு தமது அந்திம காலத்தில் கவனித்துக் கொள்ள வேறு யாரிருக்கிறார்கள். எத்தனை பேர் இருந்தாலும் பெற்ற மகளுக்கு யார் தான் ஒப்பாவார்கள். காலையில் பூமி சுவாதீனம்! கருப்பண கவுண்டர் நெஞ்சு படபடத்தது. அவர் தான் முன்னால் போய் நிற்க வேண்டும். இல்லை இல்லை. கூட நாச்சப்பனும் இருப்பான். அவன் எங்கு போயிருக்கிறான்? இதற்காக என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதொன்றும் கருப்பண கவுண்டருக்குத் தெரியாது. அவனும் சும்மா யிருக்க மாட்டான். பத்து, இருபது ஆட்களுடன் தயாராகத்தானிருப்பான். குப்பண கவுண்டன் - பூமிக்குச் சொந்தக்காரன் - அவன் தான் கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பானா? சொத்து போகிறது; அதோடு அவன் சுகமும் சேர்ந்து போகப் போகிறது! யார் தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் அவன் சும்மாயிருந்தாலும் ஊரிலிருக்கிறவர்கள் பேசாமலிருக்கிறார்களா? ராமசாமிக் கவுண்டர் தான் நேர் எதிரியாக இருந்து வேலை செய்து கொண்டிருக்கிறாரே! இதை நினைக்கவும் கருப்பண கவுண்டருக்கு நடுக்க மெடுத்தது. ராமசாமிக் கவுண்டர் விரோதியானால் சம்மந்தி மணியகாரரும் விரோதிதான். அதோடு அவர்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் விரோதிகள் தான். தாம் என்னதான் கட்சி சேர்த்தினாலும் சுவைக்காகாத பசங்கள் தான் தம் கட்சியில் இருப்பார்களே ஒழிய வேறு பொறுப்பான ஆசாமிகள் யாரிருக்கப் போகிறார்கள்! கருப்பண கவுண்டர் வாயிலிருந்த வெற்றிலை எச்சிலை ஒரு தடவை போய்த் துப்பிவிட்டு வந்து பழையபடி கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். முத்தாயாள் பழயபடியே தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் இவ்வளவு நேரம் அசந்து தூங்குவதைப் பார்க்க கவுண்டருக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் விடியற்காலம் வரையிலும் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தது இவருக்கு என்ன தெரியும்! கவுண்டருக்கு தமது வாழ்க்கையில் இதற்கு முன் நடந்த இரண்டொரு சம்பவங்களும் நினைவிற்கு வந்தன. ஒரு நாள், அப்போது மனைவி உயிருடன் இருக்கிறாள் - கலியாணமான புதிது. வழக்கம் போலக் கள்ளுக் குடத்தை தூக்கிக் கொண்டு பனந்தோப்புக்குப் போகப் புறப்பட்டார். ஆனால், அதற்குள் மனைவி வந்து ஏதோ சொன்னாள். அவளுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டார். அன்று பனந்தோப்புக்குப் போய் கள்ளுக் குடத்தைத் தூக்கிக் கொண்டு கடைக்கு வந்து சேர சற்று அதிக நேரம் தான் ஆகிவிட்டது. அதற்கு அப்போது கடைக்காரன் இவரைத் திட்டியது இன்னும் பசுமரத்தாணி போல இவர் நெஞ்சில் பதிந்திருந்தது. அன்று கடை முதலாளியிடம் சண்டையிட்டுக் கொண்டு இவர் வேறு போக்கில் போயிருந்தால் இன்று கருப்பண கவுண்டர் வாழ்க்கை இவ்வளவு தூரம் உயர்ந்திருக்கும் என்று யாரால் சொல்ல முடியும்? இம்மாதிரி எத்தனை சந்தர்ப்பங்களில் அந்நியர் முன் தலை குனிந்து நின்றிருக்க வேண்டும். இவைகள் எல்லாம் கருப்பண கவுண்டர் உள்ளத்தை ஒன்றும் பணிய வைத்ததில்லை; உடல் வயிற்றுக்காகக் குன்றியிருக்கும்; ஆனால் உள்ளம் குன்றியதில்லை. உள்ளம் குன்றியிருந்தால் இந் நிலைமை ஏற்பட்டிருக்குமா? கவுண்டர் பழய நினைவுகளில் எவ்வளவு நேரம் மூழ்கியிருந்தாரோ! ஆனால் திடீரென குப்பண கவுண்டன் கையில் வெட்டரிவாளுடன் நிற்பது போன்ற பிரமை ஏற்படவும் வாயைத் திறந்து கத்திவிட்டார். கீழே படுத்திருந்த முத்தாயா, “என்னுங்க ஐயா?” என்று அவசரமாக எழுந்து தகப்பனார் முகத்தைப் பார்த்தாள். பிறகு எழுந்து அவரருகில் வந்து தோளின் மேல் கையை வைத்துக் கொண்டு, “என்னுங்க ஐயா?” என்று இரண்டு மூன்று தரம் தோளைக் குலுக்கிக் கேட்டாள். கருப்பண கவுண்டர் முகம் பயத்தால் வெளுத்து விட்டது. கை கால்கள் நடுங்குவது போலிருந்தது. சுற்றிலும் பல தடவை பார்த்தார். பிறகு தாம் எங்கிருக்கிறார், அருகில் யார் இருக்கிறார்கள் என்ற பிரச்னை வந்ததும் தம்மை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “ஒண்ணுமில்லெ சாமி. இந்த எளவு பொயிலெச் சாத்தெக் கொஞ்ச முழுங்கீட்டனாக்கும். அது தொண்டக்குள போயி வாந்தி வராப்பலெ இருக்குது” என்றார். முத்தாயாளுக்கும் இதில் ஒன்றும், நம்பிக்கை உண்டாகவில்லை. ஆனால் அவளுக்கு ஏன் இவர் பயந்தார் என்று தெரியவில்லை. அவள் முயற்சித்துப் புன்னகையை வர வழைத்துக் கொண்டு, “அதுக்கு என்னத்துக்குங்கய்யா இப்படிச் சத்தம் போட்டீங்க? ஆனா, இருங்க நா தண்ணி கொண்டாரே” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியில் போனாள். உண்மையில் கருப்பண கவுண்டர் சத்தம் போடும் போது புகையிலைச் சாற்றையும் நன்கு விழுங்கியிருந்தார். ஆனால், இந்தப் புகையிலைச் சாறு ஒன்றும் பண்ணாது. அப்படியே வாயில் போட்டு அடக்கிக் கொண்டே சில சமயங்களில் அவர் தூங்கி விடுவதும் உண்டு. இவைகளெல்லாம் முத்தாயாளுக்கு நன்கு தெரியும். சில சமயங்களில் அவளே “புகையிலெயெத் துப்பீட்டு வந்து படுத்துக்குங்க. தலயாணி எல்லா எச்செ ஆயிரும்” என்று சொல்வதும் உண்டு. கருப்பண கவுண்டர் வாயை நன்கு கழுவி விட்டு வந்து பழயபடி கட்டிலில் உட்கார்ந்து கொண்டார். அவர் ஏதாவது பேசுவார் என்று முத்தாயாள் சிறிது நேரம் எதிர்பார்த்தாள். ஆனால், அவர் வாயைத் திறக்கவேயில்லை. முத்தாயாளுக்கு ஏதாவது பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவர் முகத்தைப் பார்க்க அவளுக்கு ஏனோ துக்கமாக இருந்தது. இருந்தாலும் துக்கத்தைச் சிறிதும் வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் புன்சிரிப்புடன், “நாச்சப்பெ எங்கீங்க ஐயா? இண்ணக்கி காரத்தாலெ இருந்து காணமுங்களா? நீங்க எங்காச்சும் போகச் சொல்லியிருக்கிறீங்களா?” என்றாள். கருப்பண கவுண்டர் மூடியிருந்த கண்களைத் திறந்து நன்கு உட்கார்ந்து கொண்டு, “ஆமா, காங்கயம் வரையிலும் ஒரு சோலியாப் போகச் சொல்லீருந்தே. ராத்திரியே வரோணும். ஏனோ காணோ! இத்தனக்கா வந்திருவா” என்றார். “என்ன சோலியிங்க?” “ஒண்ணுமில்லே. இண்ணக்கி நாம குப்பணெ பூமி சுவாதீனத்துக்குப் போவோணும். அதுக்குத்தா அங்கொரு மனுசரைப் போயிப் பாத்துட்டு வரச் சொன்னே.” முத்தாயாளுக்கு இப்போதுதான் ஒவ்வொன்றாக அர்த்தமாகியது. விடிந்தால் பூமி சுவாதீனத்திற்குப் போக வேண்டும். அதோடு நாச்சப்பனும் இரண்டொரு நாளாக அங்குமிங்கும் கருப்பண கவுண்டரிடம் ரகசியம் பேசுவதும் நினைவிற்கு வந்தது. ஏதோ இவைகளெல்லாம் ஒரு பெரிய கலகத்திற்குத்தான் கொண்டு போய்விடும் என்று தீர்மானித்தாள். இந்தக் கலகத்தோடு ராமசாமிக் கவுண்டருக்கும் சம்பந்தமுண்டு என்பது அவளுக்கு நன்கு தெரியும். ஊருக்குள் தன்னைப் பற்றியும், நாச்சப்பனைப் பற்றியும் கதை கட்டிப் பேசுவதும் ராமசாமிக் கவுண்டர் தூண்டுதலினால் தான் என்பதும் அவளுக்குத் தெரியும். இவைகளை எல்லாம் ஒரே தடவையில் நினைத்துப் பார்க்கவும் சற்றுப் பயமாகத்தானிருந்தது. எதிரில் ஆழ்ந்த யோசனையில் உட்கார்ந்து கொண்டிருந்த தகப்பனைப் பார்க்க பார்க்க அவளுக்கு துக்கம் அதிகரித்தது. இதைப் போக்குவதற்கு ஒரு வழியும் இல்லையா என்று மனம் துடித்தது. என்ன இருந்தாலும் பெண் தானே? இவளால் வேறு என்ன செய்ய முடியும்? அவளும் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. பிறகு மெதுவாக, “ஐயா, ஏனுங்க பேசலெ?” என்றாள். “ஏனாயா?” என்று கேட்டார் கருப்பண கவுண்டர். “நீங்க சுவாதீனத்துக்குப் போறது, மணியாரருக்கும் மாரீப்பனுக்கும் தெரியுமுங்களா?” என்றாள். “தெரியாமெ என்ன? தெரியாமலா இருக்கும்?” “அதக் கேக்கலீங்கோ! நீங்க அவுங்க கிட்ட நேரிலே சொல்லீருக்கீங்களா?” “அதெப்படி நாம சொல்றது? இந்தச் சுடு பறய ராமசாமிக் கவுண்டனெ தூண்டி உட்டு இத்தனெ கூத்தும் உட்டுக்கிட்டு இருக்கானா? அப்புறம் அவஞ் சமந்தியை மூறீட்டா நம்ம பேச்செ மணியாரெ கேப்பா?” “கேக்க மாட்டாங்குன்னு நீங்க எப்படியுங்கய்யா சொல்றது? மாரீப்பனுக்கு இதொண்ணும் புடிக்காதுங்க. அவங்கிட்ட ஒரு பேச்சுச் சொன்னீங்கண்ணா, அவெ ஒரு பைசல் பண்ணி உடாமெப் போகமாட்டானுங்க” என்று கூறிவிட்டு அவர் முகத்தையே உற்றுப் பார்த்தாள். கருப்பண கவுண்டருக்கும் இந்த வார்த்தைகள் பிடித்திருந்தன. அவர் முகத்திலும் சற்றுக் களை காணப்பட்டது. இம்மாதிரி நடந்தால் தான் என்ன கெட்டு விட்டது? எதற்காக இப்படி கட்சி சேர்த்துக் கொண்டு கலகத்திற்கு நிற்க வேண்டும்? கூட்டத்தில் வார்த்தை முற்றினால் அடிதடியில் தான் போய் முடியும். இதனால் யாருக்கு என்ன நேருமென்பதை எப்படிக் கூற முடியும்? இவ்வளவு நாளும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணமெல்லாம் வீணாக செலவு செய்வதற்குத்தானா? இவர் யோசித்து ஒரு முடிவு கட்டுவதற்கு முன் வெளிக் கதவை யாரோ தட்டினார்கள். முத்தாயாள் எழுந்து சென்று கதவைத் திறந்தாள். நாச்சப்பன் கையில் ஒரு பெரிய காகிதப் பொட்டலத்துடன் காட்சியளித்தான். முத்தாயாளைக் கண்டதும் அவன் சிரித்துக் கொண்டே கையிலிருந்த பொட்டலத்தை அவளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கிக் கொண்டாள். வேறு அவனிடம் ஒன்றும் பேசவில்லை. அது என்னவென்று கூடக் கேட்காமல் போகத் தொடங்கினாள். நாச்சப்பனுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. “ஏ முத்தாயா? ஏ பேசமாட்டிங்கறெ? ஐயெ எதாச்சும் சொன்னாங்களா?” என்றான். அவள் திரும்பி அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு “உனக்கே புத்தி இப்படிப் போவுது? ஐயெ எனத்துக்கு என்ன சொல்லுவாங்க?” என்றாள். “அடே அப்பா! உனக்கு அதுக்குளற இமுட்டுக் கோவம் வருது? ஏ இப்படிப் பேசமாட்டீங்கறெ?” “நா பேசாமெ என்ன?” என்று கூறிவிட்டு முத்தாயாள் வேகமாகச் சென்றுவிட்டாள். நாச்சப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. நேராக கருப்பண கவுண்டர் கட்டில் அருகில் சென்றான். அவர் இவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இவனைக் கண்டதும், “ஏப்பா, ராத்திரி அங்கயே இருந்துக்கிட்டயா?” என்றார். “ஆமாங்க, போன ஆளுக் கிடைக்கலீங்க.” “சரி, அந்தக் கெரகம் தொலயது. போலீசு வந்து நமக்கு ஒண்ணும் பண்ண வேண்டாம். முத்தாயா ஒரு யோசனை சொல்றா. அது எப்படீன்னு பாரு” என்று கூறிவிட்டு, “முத்தாயா!” என்று கூப்பிட்டார். முத்தாயாள் வந்ததும், “ஆயா, தோட்டத்து ஆள் எவனாச்சும் வந்தான்னா, சவாரி வண்டியெப் பூட்டி ஓட்டிக்கிட்டு வரச் சொல்லு” என்றார். “நானே போறனுங்க. வண்டி எனத்துக்குங்க? எதுவரையிலும் போகோணுமிங்க?” என்றான் நாச்சப்பன். “அடப்பாரு! உங்கிட்டச் சொல்லலியா? மணியாரங்கிட்டப் போயி ஒரு பேச்சுச் சொல்லிட்டு வரச் சொல்லி முத்தாயா சொல்றா. அது நல்லது தான்னு எனக்கும் படுது. உனக்கு எப்படித் தோணுது சொல்லு பாக்கலாம்?” என்றார். உடனே நாச்சப்பன், “மாரீப்பனும் காங்கயம் வந்துட்டு அப்படியே ராசிபாளையம் போகுது. நானும் அது வரையிலும் அவுங்க வண்டிலதா வந்தே. மாரீப்பெ சொல்றதும் முத்தாயா சொல்றதும் ஒண்ணாத்தா இருக்குது. மாமனெ நீ கூட்டிக்கிட்டு வந்து இங்கெ எங்கிட்ட உட்டுடு. அப்பறம் எல்லா நா பாத்துக்கறென்னு சொல்லுது. அவுங்க ஐயெ குப்பண கவுண்டர் பக்க இருக்கறதயும் சாடையாச் சொன்னே. அதுக்கு மாரீப்பனுக்கு ரொம்பக் கோவம் வந்துட்டது. மணியாரர் நீங்க ஒண்ணுக்கும் போகாதீங்கன்னு சொல்லியிருந்தாங்களாமுல்ல!” என்றான். கருப்பண கவுண்டருக்கு இது சற்று ஆறுதலளித்தது. “என்ன இருந்தாலும் மாரீப்பனுக்கு கட்டாது போ! ராமசாமிக் கவுண்டெ வயித்திலே தப்பிப் பொறந்திட்டா. நாமுளும் எவ்வளவு தாந்து போகோணுமோ அவ்வளவுக்குப் போயிப் பாக்கலா” என்று கூறிவிட்டு கட்டிலை விட்டு எழுந்தார். |