உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
7 கருப்பண கவுண்டர் காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு ராசி பாளையத்திற்குப் புறப்பட்டார். சூரியன் அப்போது ஒரு பனை உயரத்திற்கு மேலிருந்தது. வண்டி கிழக்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்ததால் வண்டிக்குள்ளும் சூரிய வெளிச்சம் பட்டது. வண்டிக்காரப் பையனிடம் முன்னால் படுதாவை எடுத்துவிடச் சொல்லிவிட்டு வெற்றிலைப் பெட்டியை எடுத்து முன்னால் வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். வெற்றிலைப் பெட்டி நிறைய வெற்றிலை இருந்தாலும் அவர் எப்போதும் ஒரு வெற்றிலைக்கு மேல் போடமாட்டார். அவர் வாய் என்னவோ வெற்றிலையை மென்று கொண்டிருந்தது. மனமோ எங்கெங்கோ சென்று கொண்டிருந்தது. மணியகாரரிடம் போய் என்னவெல்லாம் பேசுவது என்று மனதிற்குள்ளாகவே யோசித்துக் கொண்டார். மாரியப்பன் ஊரில்தான் இருக்கிறான் என்று தெரியவே மனதிற்குச் சற்று ஆறுதலாக இருந்தது. வண்டி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. மணியகாரர் வீட்டின் முன் வண்டி போய் நின்ற பிறகுதான் கருப்பண கவுண்டருக்கு ராசிபாளையம் வந்து விட்டது தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கியதும் நேராக கருப்பண கவுண்டர் உள் ஆசாரத்திற்குள் சென்றார். மணியகாரரும் எதிரில் தான் பாயை விரித்து உட்கார்ந்து கொண்டிருந்தார். மணியகாரர் இவரைக் கண்டதும் “வாங்க, வாங்க?” என்று கூறி வரவேற்றார். பிறகு உடனே, “அடே, தண்ணியும் வெத்திலே பாக்குத் தட்டத்தையும் கொண்டாடா!” என்று உரக்கச் சொன்னார். “விசயம், ஒண்ணு மில்லீங்கோ! சும்மா உங்க கிட்டத்தா ஒரு சோலியா வந்தனுங்க.” இதற்குள் மாரியப்பனும் பவளாக் கவுண்டரும் வெளியிலிருந்து பேசிக் கொண்டு உள்ளே வந்தார்கள். அவர்கள் பின்னாலேயே ராமசாமிக் கவுண்டரும் வந்தார். ராமசாமி கவுண்டரைப் பார்த்ததும் கருப்பண கவுண்டருக்குக் ‘கரு’க்கென்றது. “இந்த நாசமாப் போனவெ இங்கெ இருக்கறான்னா நா வந்திருக்க மாட்டனே” என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டார். இருந்தாலும் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் “நீங்க எப்ப வந்தீங்க? ஆரோ நீங்க வளவிலெ இருக்கறாங்கன்னு சொன்னாங்களா!” என்றார் கருப்பண கவுண்டர். ராமசாமிக் கவுண்டர் கேட்ட கேள்விக்கு மட்டும் “நேத்து வந்தே” என்று கூறிவிட்டு, மௌனமாக இருந்து கொண்டார். பவளாக் கவுண்டருக்கு இன்று ஏதோ அளவு கடந்த உற்சாகம் ஏற்பட்டிருந்தது. “வா கருப்பணா” என்று கேட்டுவிட்டு அருகில் உட்கார்ந்தார். பவளாக் கவுண்டர் வீட்டிற்குள் போய் விடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தார் மணியகாரர்; ஆனால் அவரும் பாயில் உட்காரவே மணியகாரர் எழுந்து சிறிது அப்பால் போய் நின்று கொண்டார். மாரியப்பனும் மாமனார் இருக்கிறார் என்று மரியாதைக்காகவோ அல்லது செல்லாயாளிடம் பேசவேண்டியோ வீட்டிற்குள் சென்றுவிட்டான். கருப்பண கவுண்டர் ஒன்றும் பேசவில்லை. மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்தார். இதைக் காணப் பவளாக் கவுண்டருக்குப் பிடிக்கவில்லை. ஆகையால், அவரே பேச்சை ஆரம்பித்தார். “ஏங் கருப்பணா! உம்பட பருத்தியெப் போட்டுட்டயா? எப்படீன்னு போட்டே?” என்றார். கருப்பண கவுண்டர் பதில் சொல்வதற்கு வாயைத் திறந்தார். ஆனால் நாவு எழவில்லை. பிறகு தொண்டையைத் தீட்டிக் கொண்டு, “அதெங்கயோ இந்த வருஷம் ஏமாந்த பொளப்பாத்தா போச்சுங்களா? வெலெ இன்னும் எறங்கு எறங்குன்னு ஆரோ சொன்ன பேச்செக் கேட்டுக் கிட்டுப் போட்டுட்டதுங்களா!” என்றார். “அது போகுட்டு, இந்த வருச நீ பொயிலெ வெக்கிலயா?” “அந்த எளவு, அதுக்கு ஆறு அத்தென வேலெ செய்யறதுன்னு உட்டுட்டமுங்க. உங்களுக்கு இந்த வருச பொயிலெ தேவிலீனாங்களா? எமுட்டாச்சுங்க? போட்டுட்டீங்களா?” என்றார். பவளாக் கவுண்டர் பதில் சொல்லுமுன் தலையாரி வெளிவாசலிலிருந்து கொண்டே “சாமி” என்று கும்பிட்டான். தலையாரியைப் பார்த்ததும் பவளாக் கவுண்டருக்கு குப்பண கவுண்டன் பூமி சுவாதீனம் நினைவிற்கு வந்தது. ஆகையால் உடனே அவர், “அட, என்னப்பா இண்ணக்கி நீ குப்பண பூமி சுவாதீனத்துக்குப் போறாங்கனாங்க. நீ இங்கெ உட்காந்துக்கிட்டு இருக்கறாயா?” என்றார். கருப்பண கவுண்டர் இம்மாதிரி கேள்வியை எதிர் பார்க்கவில்லை. என்ன சொல்வதென்று யோசிக்கவும் நேரமில்லை. உடனே என்னமோ பதில் சொல்லியாக வேண்டும். ஆகையால் அவர், “அது பண்ணுனாப் போவுதுங்க? பண்ணப் பண்ண பண்ணமாட்டீங்குதுங்களா?” என்றார். இந்தப் பேச்சைக் கேட்டதும் மணியகாரரும் சற்று முன்னுக்கு வந்தார். ஆனால், அவர் ஒன்றும் பேசாமல் மௌனமாகத்தான் உட்கார்ந்து கொண்டிருந்தார். திடீரென இந்தப் பேச்சு எழவே, கருப்பண கவுண்டர் சற்று திகைத்துத்தான் விட்டார். பவளாக் கவுண்டர் இதொன்றையும் கவனிக்கவில்லை. அவருக்கு இவ்விசயத்தைப் பற்றி மேலும் கருப்பண கவுண்டர் வாய் மூலம் தெரிய அவா ஏற்பட்டிருந்தது. ஆகையால், “அது செரி; மொத்த ஏலத் தொகை எமுட்டு? அசலு வாங்கினது எமுட்டு” என்றார். “அதேங் கேக்கறீங்க? ஆயிரம் ரூபா வாங்கினதுங்க, அந்த எளவெக் கவனிக்காமெ அப்படியே உட்டுட்டானாட்ட இருக்குதுங்க. அது இப்பொ வட்டிக்கு வட்டி போட்டு நாலாயிரத்துக்கு மேலாயிட்டதுங்க!” “நீ எத்தனக்கி எடுத்தே?” “நா பணத்தெப் பூராக் கட்டீட்டனுங்க. ஆனா, அதுலே ஒரு ஆயிரத்தைத் தள்ளீடரன்னு செட்டியார் சொல்லீருக்கறாருங்க.” பவளாக் கவுண்டர் இதற்கு மேல் ஒன்றும் கேட்க வில்லை. கருப்பண கவுண்டரும் வேறு ஒன்றும் பேசவில்லை. மணியகாரர் சிறிது நேரம் சும்மா இருந்து பார்த்தார். கடைசியாக, “ஏனுங்க மாப்பிளெ, குப்பணனுக்கு வேறெ எதாச்சும் வழி இருக்குதுங்களா?” என்றார். ராமசாமிக் கவுண்டர், “இந்தக் காட்டத்தா சுரண்டுக்கிட்டு இருந்தானுங்க. வேறெ ஒண்ணும் காணமுங்களா?” என்றார். கருப்பண கவுண்டர் சிறிது நேரம் என்னமோ யோசித்துக் கொண்டிருந்தார். ராமசாமிக் கவுண்டர் அப்புறம் எழுந்து போவார். பிறகு மணியகாரரிடம் வந்து சங்கதியைப் பற்றிப் பேசலாம் என்று காத்துப் பார்த்தார். ஆனால், ராமசாமிக் கவுண்டர் எழுந்து போவதாகக் காணோம். நேரமும் ஆகிக் கொண்டிருந்தது. கடைசியாக கருப்பண கவுண்டர், “உங்க கிட்டத்தா இந்தப் பூமி சுவாதீனமா யோசனை கேக்கலாமுன்னு வந்தனுங்க. நல்ல சமயந்தானுங்க, மாமனும் இங்கயே இருக்கறாங்க. இதெ ஏதாச்சு ஒரு வழி பண்ணி உடுங்க” என்றார். இதைக் கேட்ட ராமசாமிக் கவுண்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘இந்தக் கருப்பண கவுண்டனா இப்படிக் கேட்பது’ என்று அவரால் நம்ப முடியவில்லை. மணியகாரர் சிரித்துக் கொண்டு, “அதுக்கென்னுங்க, நம்மளெ எல்லா மூறிப்போட்டு குப்பணெ எனத்தைப் பண்ணிப் போடுவானுங்க? ஏனுங்க மாப்பிளெ!” என்றார். ராமசாமிக் கவுண்டர் வாய் திறந்து பேசுவதற்கு ரொம்பக் கஷ்டப்பட்டார். அதற்குள் மணியகாரர், “ஏனுங்க, உங்க நோக்க எப்படியுங்க? பூமியே வேணுமுங்களா?” என்றார். “பூமியே என்ன பண்றனுங்க? பணம் கொடுத்தா கசக்குதுங்களா? என்ன எழவோ இதுலே போயி மாட்டிக்கிட்டனுங்க” என்றார் சலிப்பாக. “இந்தத் தங்கத்துக்கு என்ன வந்துட்டதுங்க. மாப்பிளெ, குப்பணுக்குச் சொன்னாக் கேப்பானுங்க. ஏனுங்க மாப்பிளெ, கம்மிணே உக்காந்துக்கிட்டு இருக்கறீங்களா?” ராமசாமிக் கவுண்டர் சிரித்துக் கொண்டு, “இதென்னுங்க, வெளெயாட்டாப் பேசறீங்க. இண்ணக்கிப் போயி நாம ஆருக்குன்னு சொல்லறதுங்க” என்றார். இந்நேர வரையிலும் இவைகளை எல்லாம் வீட்டிற்குள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த மாரியப்பன் வெளியே வந்து, “நாம ஒருத்தருக்குன்னு சொல்ல வாண்டா? அப்படிச் சொல்றாப்பல இருந்தா நம்மளெ ஏ தேடி வாராங்க?” என்றான். மாரியப்பன் கூறியது ராமசாமிக் கவுண்டருக்கு நன்கு பட்டது. இன்னும் கருப்பண கவுண்டன் நம்மைப் பொது மனிதன் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று கருதினார். இல்லாவிட்டால் நம்மிடமே பஞ்சாயத்துக்கு வருவானா? இந்த எண்ணம் மனதில் எழவே அவர் முகம் சிறிது உற்சாகத்துடன் விளங்கியது. என்ன இருந்தாலும் நாம் தான் ஊருக்குள் இன்னும் பெரிய மனிதர் என்று நினைத்துக் கொண்டார். உடனே அவர், “எங்கெ, கருப்பணா! உம்பட வெத்தலப் பொட்டியெக் கொடு” என்று கேட்டார். கருப்பண கவுண்டர் அவசர அவசரமாக மடியிலிருந்து வெற்றிலைப் பெட்டியை எடுத்து ராமசாமிக் கவுண்டரிடம் கொடுத்தார். மணியகாரர் இதைப் பார்த்து மனத்திற்குள்ளாகவே சிரித்துக் கொண்டார். வேறு ஒரு சமயமாயிருந்தால் ராமசாமிக் கவுண்டர் ‘வெற்றிலை’ என்றவுடன், இவர் உடனே வெற்றிலைத் தட்டைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டிருப்பார். இன்று கருப்பண கவுண்டரிடம் வெற்றிலை பாக்குக் கேட்கவே, அவரிடம் வெற்றிலை வாங்கி ராமசாமிக் கவுண்டர் போடட்டும் என்று பேசாமலிருந்து விட்டார். “ஏனுங்க மாமா! ஆருக்குன்னு, சொல்றதின்னீங்களே! எனக்குன்னுதா சொல்லுங்களெ! அப்படிச் சொல்லப்படாதுங்களா?” என்றார் கருப்பண கவுண்டர். உடனே ராமசாமிக் கவுண்டர், “அட, நா அதுக்குச் சொல்லலெ! செரி போ, அந்த ஆயிரத்தயும் தள்ளி உனக்கே எழுதிக் கொடுத்திடச் சொல்லீடரே. ஆனா, குத்தகைச் சீட்டெ நீ அவனுக்கே கொடுத்திடு. தோட்டத்தை உட்டு தொரத்தீடாதே. அதுதா நா கேட்டுக்கறது” என்றார். விசயம் இவ்வளவு சுலபத்தில் முடியும் என்று கருப்பண கவுண்டர் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் “அதுக்கென்னுங்க. நீங்க எல்லா எப்படிச் சொல்றீங்களோ அப்படி நடந்தாப் போகுதுங்க” என்றார். மணியகாரர் எதிர்பார்த்தபடியே விசயம் முடிந்தது. ராமசாமிக் கவுண்டர் பேசி முடிந்ததும் மணியக்காரர் சிரித்துக் கொண்டு, “ஊருக்குளெ பேசறதைப் பாத்தா ஒரு பத்துக் கொலையாவது ஆகுமின்னு எதிர்பாத்தே! ஆனா என்னடான்னா இப்படி சுலபத்திலே முடிச்சுக்கிட்டீங்களெ!” என்றார். “கொலையாவறதுன்னா என்னமோ ரம்பப் பெரிசாப் போச்சுங்களா? அதுக்கென்னுங்க? நாலு பேருத்துக்கு ஒரு படியுங்கறதுக்கு இரண்டு படியாக் கள்ளெ வாங்கி ஊத்துனா எவனோ போயி போட்டுக்கறானுங்க. அப்புறம் போயிக் கையைக் கட்டிக்கிட்டு நிக்கற போதுதானுங்க, ஏண்டா இந்த முண்டக் கெரகத்துக்கு வந்தமினு நெனப்பானுங்க” என்றார் ராமசாமிக் கவுண்டர். இது வரையிலும் பேசாமலிருந்த பவளாக் கவுண்டர், “எப்பா ராமு, இப்பவாச்சு நா சொன்னதெ ஒப்புக்கறயா? இந்தக் கள்ளுத் தண்ணியெ குடிக்காதுட்டா ஒண்ணுமில்லெ; ஊருக்குளெ சண்டை சச்சரவு வராதுன்னு நா சொன்னதுக்கு அண்ணக்கி எல்லா கேலி பண்ணினீங்களெ?” என்றார். எல்லோரும் சிரித்தார்கள். மாரியப்பன், “அண்ணக்கி நா இல்லாது போச்சுங்க, இல்லாட்டி சாமிக்குக் கள்ளுக்கடைப் பணம் போட்டு கோயில் கட்டறதுங்கறதுக்கு உட்டுருக்க மாட்டனுங்க” என்றார். உடனே மணியகாரர், “நாய் வித்த காசு குலைக்குமா? அதனாலெ என்ன வந்துட்டது? எப்படியோ காரியம் ஆக வேண்டியதுதா” என்றார். ராமசாமிக் கவுண்டரும், இதுதான் நல்ல சமயமென்று, “ஏங் கருப்பணா! அப்பறம் அந்தக் கோயிலுப் பணமெல்லாம் என்னாச்சப்பா?” என்றார். “அதுக்கென்னுங்க மாமா, நாளக்கே நீங்க முன்னாலெ நிண்ணு பாத்துக்கறதுன்னு சொல்லுங்க, பணம் எத்தென வேணுமுன்னாலும் நா கொடுக்கறனுங்க. நாச்சப்பங்கிட்டச் சொல்லி, கணக்கு வழக்கு எல்லா பாத்து, உங்ககிட்ட ஒப்புச்சுடறனுங்க” என்றார். ராமசாமிக் கவுண்டருக்கு, நாச்சப்பன் பெயரைக் கேட்டதும் ஏனோ நெஞ்சுக்குள் எப்படியோ இருந்தது. அதோடு முத்தாயாள் நினைவும் வந்தது. அவர் முகம் கறுத்துவிட்டது. முத்தாயாளிடம் குழந்தையிலிருந்து ராமசாமிக் கவுண்டருக்கு நல்ல பழக்கமுண்டு. அவள் புருசன் இறந்ததிற்கு எல்லாரும் போயிருந்தார்கள். அப்போது அவளுக்குப் பதினைந்து பதினாறு வயதிருக்கும். நடு நெற்றியில் நேர் எடுத்துக் கொண்டை போட்டுக் கொண்டு ஒரு சிவப்புச் சேலையைக் கட்டிக் கொண்டிருந்தாள். தலை வாரி இரண்டு மூன்று நாளாகியிருந்தாலும் அப்போதுதான் எண்ணெய் தடவி வாரியது போலிருந்தது. சாசுவதமான சுமங்கலியத்திற்கு அடையாளமாக நின்ற அவளுடைய நெற்றிப் பச்சை இன்னும் சுடருடன் தான் பிரகாசித்தது. ஆனால் அந்த நெற்றிப் பச்சைக்குப் பக்கத்திலிருக்கும் குங்குமத்தைக் காணவில்லை. இவர் அவள் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்று, “முத்தாயா!” என்று கூப்பிட்டார். அவளும் தலை நிமிர்ந்து தனது அகன்ற இருவிழிகளையும் நன்கு திறந்து பார்த்தாள். அவளால் துக்கத்தை அடக்க முடியவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதை பார்க்கப் பார்க்க ராமசாமிக் கவுண்டரும் அழுது விட்டார். பிறகு “ஆயா, நீ ஒண்ணும் வெசனப் படாதே. நாங்க இருக்கறம் எல்லாம் பாத்துக்கரம்” என்றார். ஆனால் அதைக் கூறி முடிப்பதற்குள் அவர் பட்டபாடு இன்னும் நினைவு இருக்கிறது. இவைகள் எல்லாம் நினைவிற்கு வரவே ராமசாமிக் கவுண்டரால் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்க முடியவில்லை. அங்கிருந்து போய்விட விரும்பினார். ஆகையால் அவர், “அப்பொ கருப்பணா, நீ இங்கயே இரு. நா போயி குப்பணனெச் சரி பண்ணீட்டு கையோடவெ கூட்டிக்கிட்டு வந்திடரே. ஏனுங்க நா சொல்றது எப்படியுங்க?” என்றார். “செரியுங்க. உங்க இயிட்டம் போலச் செய்யுங்க” என்றார் கருப்பண கவுண்டர். ராமசாமிக் கவுண்டர் எழுந்து வெளியில் வந்தார். மணியகாரரும் கூடவே வெளியில் வந்து தலையாரியைக் கூப்பிட்டு வண்டியைப் பூட்டச் சொன்னார். |