9

     சித்திரை மாத வெயிலின் கொடூரத்தைத் தணிப்பதற்காக இயற்கை ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. சற்று நேரத்திற்க் கொருதரம் சூரியன் மேகத்தில் மறைவதும் வெளி வருவதுமாயிருந்தது. காற்றின் ஓசையே உலகத்திலிருந்து மறைந்து விட்டது போலிருந்தது. பறவைகள் கூட அஞ்சிக் கூண்டோடு பதுங்கிக் கிடந்தன.

     முத்தாயாள் வாசலில் காயப் போட்டிருந்த மிளகாய் வற்றலை ஒரு கூடையில் வழித்து வீட்டிற்குள் கொண்டு போய் வைத்தாள். இன்று அவளால் யாரிடமும் பேச முடியவில்லை. யாரைக் கண்டாலும் பயமும், வெட்கமும் பிடிங்கித் தின்றது. நாச்சப்பனைக் கண்டு இன்று ஏனோ நடுங்கினாள். இன்று காலையில் நடந்த சம்பவம் அவள் மனதில் பதிந்திருந்தது. குப்பண கவுண்டன் கூறிய வார்த்தைகள் அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவளுக்குத் துளிக்கூட வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. ஆனால் வெளியில் தான் எந்த முகத்தைக் கொண்டு போவது! எப்படியோ வீட்டை விட்டுத் தப்பித்துக் கொண்டு தோட்டத்துக்குள் ஓடிப் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.

     ஆகாயத்தில் மேகங்கள் நன்கு சூழ்ந்து கொண்டது. மழைக் காற்றும் செந்தூள், கருந்தூள் எழும்ப வீசியது. முத்தாயாள் ஒரு கூடையை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு தோட்டத்துக்குப் புறப்பட்டாள். ஊர் தாண்டும் வரையிலும் நல்ல வேளையாக யாரும் எதிர்ப்படவில்லை. மந்தை வெளியில் ஆள் உயரத்திற்கு எருக்கலைப் பூக்கள் மலர்ந்திருந்தன. யாரும் அவைகளை பறிப்பாரைக் காணோம். வாடி வதங்கிய பூக்கள் காற்றில் இங்குமங்கும் பறந்தன.

     சிறு பிராயத்தில் இந்தப் பூக்களை எடுத்து மாலை தொடுத்து புருஷன், மனைவி விளையாட்டு விளையாடியது முத்தாயாளுக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. இன்று அந்த விளையாட்டுப் புருஷன் எங்கே? அதற்கப்புறம் பெரியோர்களால் தேடிக் கொடுத்த நிஜப் புருஷன் தான் எங்கே? இதுவும் விளையாட்டா? உலகமே விளையாட்டுத்தானா? சே சே! காலையில் குப்பண கவுண்டன் கூறியது விளையாட்டல்ல! அதைக் கேட்டு ஊரில் உள்ளவர்கள் அனைவரும் கை தட்டிச் சிரிப்பது விளையாட்டல்ல. இவளும் மனமுடைந்து நிற்பது விளையாட்டல்ல! நிஜமே நிஜம். கருவளை அணிந்த கரங்களின் ஸ்பரிச சுகத்தை அறியாமலேயே இப்பூக்கள் மண்ணோடு மண்ணாய் விடலாம். ஆனால் அப் பூக்களின் கோமளத் தன்மையை உயிர் போமளவும் அச்செடி தாங்கித்தானே நிற்கும்? அது போல இந்த உலக முழுதும் அவளை ஏசினாலும், ஏளனம் செய்தாலும் கடைசி வரையிலும் ஒருவர் மட்டும் - கருப்பண கவுண்டர் மட்டும் - அவளை கைவிட மாட்டார்.

     நடந்து போய்க் கொண்டே இருந்தவள் திடீரென என்ன நினைத்தாளோ என்னவோ ‘கோ’வென அழுதாள். ஏற்கெனவே அழுது அழுது கண்கள் ரத்தச் சிவப்பேறியிருந்தது. இரு கன்னங்களும் வீங்கிப் போயிருந்தன.

     பெண்; ஆம், ஒரு பெண்ணைத்தான், களங்கமுள்ளவளாகச் சந்தேகித்தால் அவள் மனம் என்ன பாடு படும் என்பதை முத்தாயாளைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். தோட்டத்துக் கடவைத் தாண்டி உள்ளே நுழைந்தாள். இன்று இந்தத் தோட்டம் அவள் கண்ணிற்கு இன்பமளிக்கவில்லை. வரப்பின் மீது நடக்கும் போது இரண்டொரு தடவை சறுக்கிச் சறுக்கி விழப் போனாள்.

     தோட்டத்து சாளையில் கூடையைக் கொண்டு போய் வைத்துவிட்டுத் தானும் உட்கார்ந்தாள்.

     மனித குலத்தின் மாளாத்துயர் அனைத்தும் தன் தலையிலே தாங்கியவளைப் போல் சோர்ந்து நிற்கிறாள் அச் சுந்தரி. பிரகிருதியும் பெண் இனந்தானே? அம்மா, இயற்கைத் தாயே! அதோ துவண்டு துடிக்கும் அம் மெல்லியலாளை உனது மடியிலே இரண்டற ஆர்வத்தோடு அணைத்துக் கொள் அம்மா! இந்த மனித வர்க்கத்தின் முகத்திலே விழிப்பதில்லை என்ற வைராக்கியத்துடன் உன் மடியில் தலை சாய்த்துக் கொள்ள விரும்புகிறாள்... அம்மா, தேவி, ஆளை அனாதரவாக விட்டு விடாதே தாயே!

     ஒரு தரம் முத்தாயா கண்ணெடுத்துப் பார்த்தாள். எங்கும் ஒரே அந்தகார மயமாகத் தோன்றியது. அந்த இருண்ட வழியில் தான் அவள் ஒளியைத் தேடி அலைய வேண்டும். அந்த அலைச்சல் வீண் முயற்சிதானா? யார் கண்டார்கள்?

     அதோ தூரத்திலே தெரிகிறதே, அந்தச் சிறு கோவில் - மாகாளி கோவில், அங்கே முதன்முதலில் புது மணக் கோலத்துடன், பூமணத்துடன் பர்த்தாவின் கரம் பிடித்து இதயம் பொங்கி நின்றாளே, அன்று அவளுக்கு மாகாளி எந்த விதம் காட்சி அளித்தாள்? காளி கோவில் மட்டுமா? காடும், கழனியும், சுற்றுப்புறம் எங்குமே ஒரு இன்ப சுகம் சூழ்ந்திருந்ததாகத் தோன்றியதே. இன்று அதெல்லாம் பனியைப் போல் மறைந்து விட்டதா? தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கையா? அல்லது அதுவே தான் ஒரு விளங்காத விடுகதையோ?

     தன் தாய் - தாய்க்குத் தாய் - அவர்களெல்லாரும் தத்தம் கணவன்மாரோடு ஆனந்தமாக பவனி வந்த அதே நேர் பாட்டைதான். அந்த விசாலமான கோவில் வழிதான். இன்று அவளுடைய துயரக்காட்டுக்கு இட்டுச் செல்லும் துக்க வழியாகக் காண்கிறது. அவளுக்கு ஏன் இக்கதியோ? அப்படி அவள் பண்ணிய பாவம் தான் என்னவாக இருக்கலாம். ஒரு தரம் அவனை நினைத்தாள். அவன் எண்ணம் எழவும் சொல்ல முடியாத ஆத்திரம் பொங்கியது. கையால் தலையைப் பிய்த்துக் கொள்ள வேணும் போல் வெறுப்புத் தலை தூக்கியது. அவனால் தானே இத்தனை மானக்கேடு? மானக்கேடா? இனியும் இந்த உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டுமா? சே, சே...

     ஆனால், பிராணனை மாய்த்துக் கொள்வது அவ்வளவு சுலபமாக இல்லை! அது என்னவோ வாஸ்தவம் தான். பாவம், தந்தை என்ன ஆவார்? தான் ஒருத்தியே சகலமும் என்று நம்பி இருக்கும் ஆருயிர்த் தந்தையின் நிலைமை என்ன?

     தனக்குப் பிறகு தகப்பனைப் பாங்காகப், பணிக்கையாகக் கவனித்துக் கொள்ள யார் இருக்கிறார்கள்? ஆனால், ஆனால்... தன்னைப் பெற்றெடுத்த பயனைப் பூரணமாக அவர் அனுபவித்து விட்டார் போலும்! போதும்... இதை விட மகளால் வேறு என்ன கீர்த்தி அப்பனுக்கு வேண்டும்? கேட்க வேண்டியதெல்லாம் - அடைய வேண்டியதெல்லாம் - இந்த அருமை மகளால் அடைந்தாகி விட்டது...

     தோட்டங் காடுகளை கண்கொண்ட மட்டும் பார்த்தாள். நெடுமூச்சு வாங்கியது. பாழும் இந்தப் பூமியால் தான் இத்தனையும் வந்தது என்பதை நினைக்கவும் அவள் முகமெங்கும் ரத்தம் பரவியது. கேவலம் மனிதனுடைய ஆசாபாசங்களையும், கீழ்த்தர உணர்ச்சிகளையும் நேருக்கு நேராக அறிய வேண்டுமானால் அதற்கு ஒரு கையகலம் பூமியே போதும் போல் இருக்கிறதே! கேவலம்... இதைப் போன்ற கேவலம் உலகில் வேறு எதுவுமே இருக்க முடியாது.

     இரண்டு நாளைக்கு முன்பு தான் வேலியோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் சக்கிலிப் பெண் ஒரு வள்ளம் தவசம் கேட்டாள். கம்போ, ராகியோ அப்போது அவளுக்குக் கொடுக்க முத்தாயாளுக்கு நேரம் இல்லை. இப்போதுதான் அவள் பரிபூரண நேரத்தில் பேரமைதியில் ஆழ்ந்து விட முடிவு பண்ணி விட்டாளே! என்ன நினைத்தாளோ என்னவோ, கூப்பிட்டாள். கூப்பிடுமுன் அந்தப் பெண் ஓடி வந்துவிட்டாள். ஒரு வேளை அந்தப் பெண்ணும் ஒரு ‘குரலை’ எதிர்பார்த்துத்தான் இருந்தாளோ?

     “உனக்கு நல்லா இருக்குதா? இது?” என்ன எதையோ நினைத்துக் கொண்டு அவளிடம் கேட்டாள். அந்தப் பெண் மிரள மிரள விழித்தாள். ஒன்றும் அவளுக்கு அர்த்தமாகவில்லை! பிறகு, முத்தாயா குடிசைக்குள் போய் நாலு வள்ளம் கம்பைக் கொண்டு வந்து, அவள் மாராப்புச் சேலையை விரிக்கச் சொல்லி, அதில் கொட்டிய போதும் அந்தப் பெண்ணுக்கு அர்த்தமாகவில்லை! முந்திய நாள் முத்தாயா இரண்டொருபடி போடவேண்டித்தான் இன்னும் ரண்டு நாள் பொறுத்துக் கொள் என்று சொல்கிறாளாக்கும் என அந்தப் பெண் நினைத்தாள். ஒன்றுக்கு நாலாக இன்று கிடைத்தால் என்ன நினைப்பாள்?

     காற்று ‘பிசு பிசு’ வென்று அடித்துக் கொண்டிருந்தது. தென்னம்பாளை தூரத்தில் சீவிக் கொண்டிருப்பதன் மணம் மனோகரமாக புலன்களில் வந்து மோதியது. அந்தி வேளையின் ஆனந்தம் முழுவதுமே அதில் நிறைந்திருப்பது போல் இருந்தது. எதிர் பக்கத்தில் ‘கரு கரு’வென்று அரளிச் செடி இரண்டாள் உயரத்திற்கு வளர்ந்திருந்தது. செக்கச் செவேல் என்று இடையிடையே பூத்து நிற்கும் பூக்கள் சற்றைக்கொரு தரம் இளங்காற்றில் அசைந்தாடும் போது, அவள் உள்ளத்தைப் படம் பிடிக்க முயற்சி செய்வது போல் பட்டது அவள் மனசுக்கு. அது மட்டுமா? அரளிச் செடி, “வா, வா” என்று தன்னை வருத்தி அழைப்பது மாதிரி நினைத்துக் கொண்டாள். எதற்காக? கிராமத்திலே எத்தனையோ பேர் - தங்கள் தாங்கொணாத் துயரத்தை அந்தச் செடியைத் தஞ்சம் என்று அடைந்ததின் மூலம் தீர்த்துக் கொண்டிருக்கிறார்களே! அரளி வேருடன் கொஞ்சம் நல்லெண்ணையைக் கலந்து கொள்ள வேண்டியது தான். இரண்டும் இரண்டறக் கலந்துவிட்டால் பிறகு உடலுக்கும் உயிருக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை! அந்த நிமிஷமே ஆவி பறந்தோடிவிடும்! அதற்குப் பக்கத்திலே தாழ மடலும் ‘கருகும்’ என்றிருந்தது. அழகிகளை விட தாழம்பூக்களிடம் சர்ப்பங்களுக்கு அதிகப் பிரியமாம! தாழமடலோடு மடலாக தலைவைத்துப் படுத்திருக்குமாமே. ஏன், தாழம் பூ எடுப்பவள் போல் அங்கு போனால் என்ன? பூவோடு பூவாக ஒரு... தன் துக்கத்திற்கு ஒரு மருந்து கிடைத்து விடாதா?

     இந்தப் பொல்லாத மனசு இருக்கிறதே இன்னும் என்னவெல்லாமோ படாத பாடு அவளைப் படுத்திற்று. அவளும் சற்றும் சளைக்காமல் ஆயிரம் ஆயிரம் யோசனைகள் செய்தபடியே சோர்ந்து போய்ப் படுத்துக் கொண்டிருந்தாள்.

     இந்த வேளை யாராகிலும் பார்த்தால் என்ன சொல்லுவார்கள்? துளிக்கூட அலுப்புச் சலிப்பில்லாமல் ஓடியாடி வேலை செய்யும் முத்தாயாளா இப்படி மூர்ச்சித்து விட்டாள் என்று தான் நினைப்பார்கள். ஆனால், அவளுடைய மூர்ச்சைக்குத் தூபம் போடுவது சாமான்யப் பொருள்களா? திக்குத் திகந்தமே அக்காரியத்தில் மும்முரமாக முனைந்திருக்கும் போது பாவம், அந்த பேதைப் பெண்ணால் அதை எவ்வாறு தாங்க முடியும்?

     மீண்டும் மீண்டும் தந்தையின் நினைவேதான் வந்து வந்து அலைமோதியது. அவர் வாழ்வின் வெற்றி தோல்விகள் என்ன? வழுக்கு மரம் ஏறுவது போல் ஒரு அடி ஏறினால் இரண்டு அடி சறுக்கும். இருந்த போதிலும் அவர் சலித்தாரா? என்ன கல் நெஞ்சராக இருந்திருக்க வேண்டும். அப்படியே தானும் வைராக்கியத்துடன் வாழ்ந்தால் என்ன? என்னவோ யாரோ எப்படியோ சொல்லிக் கொண்டு போகட்டும். அதற்காக இப்படி முடிவுக்கு வந்து விடுவதா?

     “முத்து” என்று யாரோ கூப்பிடுவது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தாள். யாரையும் காணோம். எதிரில் ‘கமகம’வென அலையும் கொம்பும் கிளையுமான அரளிச் செடிதான் காட்சி தந்தது. எழுந்தாள். ஒரு அடி நகர்ந்தாள். ஐயோ கால் ஏன் வரமாட்டேன் என்கிறது? ஏன் இப்படி நடை தள்ளாடுகிறது? ராப் பட்டினிபோல் ஏன் தொண்டை அடைத்துக் கொள்ளுகிறது? மனம் முன்னுக்குப் போக வேணுமென விரும்பியது. இல்லை, இல்லை. கால்கள் நடக்க இச்சை கொண்டன. ஆனால், மெய் தள்ளாடியது.

     அதே சமயம் கும்பலாக இட்டேறியில் இரண்டு மூன்று பெண்கள் சிரித்துப் பேசிக் கொண்டு போனார்கள். அவர்களில் ஒருத்தி, இந்தப் பக்கம் திரும்பி “யாரு, நம்ம முத்தக்காளாட்ட இருக்குகா?” என்றாள். கூடவே, “ஐயோ பாவம், இந்த அறியா வயசிலே இவளுக்கு இப்படியா நேரோணும்” என்று ஒருத்தி சொல்வது நன்றாகக் கேட்டது. முத்தாயா இவைகளைக் கேட்டாள். கேட்டு, கண்ணில் வழியும் கண்ணீரையும் துடைத்துக் கொள்ளாமல், உள்ளுக்குள்ளாகவே அவர்களைச் சபித்துக் கொண்டாள். குரல் அவளுக்குப் பழக்கமானதுதான். சொந்த ஊர்க்காரிதான். இரண்டு வருஷத்துக்கு முன்புதான் அந்தப் பெண்ணுக்குக் கலியாணம் ஆயிற்று. அப்போது அவள் சொன்னது இன்னம் நெஞ்சில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. “நாம ரண்டு பேரும் சேமலைக்கு ஒண்ணாப் போவோணும்” என்று அந்தப் பெண் சொல்லி இருந்தாள். இன்று அவள் வாயிலிருந்தே “ஐயோ” என்னும் அனுதாபம் மட்டும் தொடர்ந்து வருகிறது. மற்றப்படி ஒன்றுமில்லை; ஒன்றுமில்லை.

     இந்த உலகம் இருக்கிறதே உலகம், எடுத்த எடுப்பிலே ‘அனுதாபத்தை’ முன்னால் வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதனுக்கு கஷ்டம் வந்துவிட்டால், ஒருவனுக்கு இன்னல் விளைந்து விட்டால், அதைக்கண்டு “ஐயோ” என்று சும்மா அனுதாபப்படச் சொல்கிறதே தவிர, அதைத் தவிர்க்க, அதைப் போக்க யாராவது முந்துகிறார்களா? அந்த இக்கட்டிலிருந்து தீர்த்துவிட யாருமே வருவதில்லை. இருந்த போதிலும், முத்தாயா மீண்டும் இரண்டு எட்டு வைத்தாள். நடக்க முடியா விட்டாலும் தொண்டை ஏன் இப்படி வரண்டு போகிறது? ‘துக், துக்’ என்று நெஞ்சு ஏன் தான் இப்படி அடித்துக் கொள்கிறதோ? மெள்ள மெள்ள அரளிச் செடியருகே வந்தாள். தூரத்திலே மங்கலாக ஊர் தெரிந்தது. மாலையும் கதிர்களைக் கொஞ்சங் கொஞ்சமாக அடக்கியதால், இருளும் கவிந்தது. செடியின் பக்கத்திற்குப் போனதும், இனியும் அங்கு நீண்ட நேரம் இருக்கக் கூடாதென்று விரைவில் ஒரு பெரிய வேரை பறித்து எடுத்தாள். மடிக்குள் மறைத்துக் கொண்டு குடிசைக்கு வந்தாள். தயாராக வைத்திருந்த நல்லெண்ணெய்க் கிண்ணம் ‘பளிச்’சென மின்னிக் கொண்டிருந்தது. இனி... இனி... அந்த வேருடன் எண்ணெயைக் கலக்க வேண்டியதுதான்.

     சற்று நேரத்தில், இன்னும் சற்று நேரத்தில் என்ன நடக்கும் என்பதை எண்ணவும் முத்தாயாளுடைய மனம் கூசியது! ஊம்... அப்போது தெரியும் அல்லவா? எல்லோருக்குமே தெரியுமல்லவா? உண்மை ஒரு ஆயிரம் வருஷம் பொறுத்துத் தெரிந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், என்றைக்கோ ஒரு நாளைக்கு உண்மை துலாம்பரமாக வேண்டும். அவ்வளவுதான்.

     தனக்குத் தெரிந்த எல்லோரையும் ஒரு தரம் முத்தாயா ஞாபகப் படுத்திக் கொண்டாள். சின்னஞ்சிறு வயசிலிருந்து இன்று வரை, அறிமுகமான எல்லோரையுமே ஞாபகமூட்டிக் கொண்டாள். ...மெள்ள மெள்ள ஒவ்வொரு உருவமாக மறைந்து தன் தந்தையின் தோற்றம் கண் எதிரே வந்து நின்றது. ‘ஐயா’ என்று மார்போடு கட்டிக் கொண்டு அழ வேண்டும் போலிருந்தது. வெள்ளப் பெருக்குப் போல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது... உம்...

     கடைசியாக அந்தக் கிண்ணத்தை முத்தாயா கையில் எடுத்து விட்டாள். முகத்திற்கு எதிரில் வைத்துக் கொண்டும் ஒரு நிமிஷம் யோசனை; நல்ல யோசனை! இப்போதுதான் யோசித்துக் கொண்டிருப்பதாக்கும்.

     கடைசியாக முத்தாயா குடித்தே தீர்த்து விட்டாள். ஆம், எண்ணந்தான் வென்றது... உணர்ச்சி தான் வெற்றி பெற்றது... அறிவு, மங்கிவிட்டது.



பனித்துளி : 1 2 3 4 5 6 7 8 9 10