12

     கோவில் ஐயர் பஞ்சாங்கத்தை புரட்டிக் கொண்டிருந்தார். ஏதோ நாள் நட்சத்திரம், நோம்பு நொடி என்றால் தான் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்ப்பது வழக்கம். மற்றபடி பஞ்சாங்கத்திற்கும் அவருக்கும் வெகுதூரம். தானுண்டு, கோயில் பூசையுண்டு, பொடிமட்டையுண்டு என்று ‘அக்கடா’ என இருப்பவர். அந்த ‘அப்பாவி’ மனிதரைப் பிடித்துக் கொண்டு “சோசியம் பாருங்க” என்றால் என்னத்தைச் செய்வார்! “தெரியாது” என்றால் நம்பினால் தானே ஆகும்? அல்லது சும்மாவிட்டால்தானே? மற்றவர்களுக்குச் சொன்னால் பிடிபடும். ஆனால் பவளாக் கவுண்டர் இலேசில் போகிறவர் அல்ல. தவிர, “நம்ம ஐயருக்குத் தெரியாதது என்ன இருக்குதுங்க? மகன் கெரகம் எப்படி யிருக்குதுங்க? சோசியம் பாருங்க” என்று சொல்லும் போது ஐயர் சும்மா இருக்க முடியுமா?

     கையில் கொண்டு வந்திருந்த தேங்காய், காய்கறிகள், எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைக்கும்படி சொல்லிவிட்டு, திண்ணையில் கவுண்டர் உட்கார்ந்து விட்டார்.

     ஐயருக்கு ஒரு விதத்தில் சந்தோஷம் தான். வீடு தேடி எத்தனையோ ‘பெரியதனக்காரர்கள்’ வந்தாலும் பவளாக் கவுண்டர் வருகையால் தனிப் பெருமையை அடைந்தார்.

     பஞ்சாங்கத்தைப் புரட்டிக் கொண்டே, “சனி தெசை தீருதுங்க. மேற்கொண்டு நல்ல யோகம். கொஞ்ச நாளைக்கு எதிலும் ஒதுங்கியே இருக்க வேண்டும். வக்கிர புத்தி... (யாருக்கு) அப்புறம் சுக்கிரதெசை இருக்குதுங்க” என்றார்.

     எல்லாவற்றையும் அதிலே கண்டு கொண்டது போல பவளாக் கவுண்டர் மகிழ்ந்தார். ஐயருக்கும் ‘காத்திலே கசம்பிலே’ ஊருக்குள் நடக்கிறது காதில் விழாமலா இருக்கும்? இதை வைத்துக் கொண்டு சோசியத்தைத் தீர்த்துக் கட்டி விட்டார். இந்த மாதிரி இக்கட்டான சந்தர்ப்பத்திலே ஐயர் ஒரு வழியைக் கையாள்வது வழக்கம். தம் பாட்டனார் சம்பவத்தை ஞாபகப்படுத்தாமல் இருக்கமாட்டார்.

     கோவில் ஐயரின் பாட்டனார் நடேசய்யர், கெட்டிக்காரர். வெளியூர் போயிருந்தால் ராவுக்குரா வீட்டுக்கு வந்துவிடும் ஐயருக்கு, மாந்திரீகம் தெரியும் என்றும் கதை. ஒருநாள் கூட இரண்டு பண்டாரப் பசங்களோடு கலியாண வீட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். வீட்டுக்கு இன்னும் கால் மைல்தான் இருக்கும். வண்டித் தடத்திலே ஒருத்தனும் பின்னால் மற்றவனும் நடுவில் ஐயரும் வந்து கொண்டிருந்தார்கள். என்னவோ காலில் சுரீர் என்றது. “என்னடாப்பா” என்றார். அவ்வளவுதான். வீட்டிற்கு வருவதற்குள் விஷம் தலைக்கேறி விட்டது. விடிவதற்குள் அவர் காரியம் முடிந்துவிட்டது.

     “விதி யாரை விட்டுதுங்க?” என்று கோவில் ஐயர் தம் பாட்டனார் இறப்பைச் சொல்லும் போது, கேட்பவர்களுக்கு “எல்லாம் சரிதான்” என்று தோன்றும்.

     “நம்ம நெனப்பிலே என்ன நடக்குதுங்க?” என்று சொல்லி, ஆலமரம் காற்றில் முறிந்து விழுந்த போது கீழே நின்ற பத்துப் பேருக்கு அடி பட்டும், தான் மட்டும் தப்பிப் பிழைத்ததையும் சொல்லுவார்.

     “பாருங்க, அதது தலெ எளுத்துப்படி நடக்குமுங்க. நம்ம செயல்லே என்ன இருக்குங்க” என்று ஐயர் சொல்லும் போது, ‘ஜோசியத்’துக்கே, ஏன் அவர் சொல்லுக்கே ஒரு சக்தி இருப்பது போல் தோன்றும். “சரிங்க சாமி, பேத்தி யோவம் எப்படீங்க?” என்றார் கவுண்டர்.

     கண்ணை மூடிக் கொண்டு, “அதையேங் கேக்கறீங்க? நல்ல யோகக்காரி, பெரிய எடமா கெடைக்கப் போகுது. செல்லாயா லச்சுமீல்ல!” என்று ஒரேயடியாக மானுடப் பிறவியை தெய்வப் பிறவி யாக்கியதும் பவளாக் கவுண்டருக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை.

     “சாமி உங்களுக்கு பாலு கீலு, காய்கசம்பு என்ன வேணும்னாலும் தோட்டத்துப் பக்கம் வாங்க. ஆண்டிப் பயங் கிட்டச் சொல்லி யுட்டாலும் போதுமுங்க. எதுக்கும் ராஞ்சிக்கப் படாதீங்க. நம்ம ஊடு உங்க ஊடுங்க” என்றார்.

     ஐயர் எல்லாருடைய வீட்டையும் சொந்த வீடு போலத் தான் பாவித்து வருகிறார். சிரித்துக் கொண்டே, “அதுக் கென்னுங்க” என்று கவுண்டரைத் தாட்டி விட்டார்.

     கவுண்டர் வெகு வேகமாக வீட்டுக்கு வந்தார். வாசலில் தடிச் சத்தம் கேட்கவும் செல்லாயா ஓடி வந்தாள். “எங்கீங்க ஐயா, உங்களைத் தேடறது? சிக்க மாட்டீங்கறீங்களே?” என்றாள் செல்லக் கோபமாக.

     “ஏதுக்கு ஆத்தா?” என்று பரிவுடன் கேட்டார். செல்லாயா அன்று காங்கயம் காரில் போய்விட்டு வந்திருந்தாள். சொந்தக் காரில் போவது அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அடேயப்பா, குண்டு குழியில் ‘கிணுக்’ கென்று இறங்கும் போதும் துளி கஷ்டம் கூடக் கிடையாது. மாட்டு வண்டியில் போகும் போது, குதிரை வண்டிப் பிரயாணம் சுகமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். செட்டியாருடைய குதிரை வண்டியில் நாலைந்து தரம் போனது சுகமாகவே இருந்தது. ஆனால் காருக்கு இணை காரே தான்! தாத்தாவுக்கு வாசனைப் புகையிலை வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். எப்போது காங்கயம் போனாலும் வாசனைப் புகையிலை வாங்கிவர மட்டும் தவற மாட்டாள். தாத்தையனுக்கு அந்தப் புகையிலையில் அவ்வளவு மோகம். இன்னும் என்னென்னவோ அன்று சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஆனால், நூல் குட்டையைக் கையில் எடுத்ததும் அவள் மனம் எங்கெங்கோ பறக்க ஆரம்பித்தது.

     மத்தியானம் செல்லாயாளுக்கும் காப்பி பலகாரங்கள் செட்டியார் கடையில் விருந்து போல் தடபுடலாக நடந்தது. ஆனால், அதை சுவைத்துச் சாப்பிடக் கூட அவளுக்குத் தோன்றவில்லை. தன் தகப்பனாரும் செட்டியாரும் ரகசியமாக ‘மொண மொண’ வென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதிலே, “காரிலேதானே போகவர இருக்கிறீர்கள்? கையிலே கத்தித்தடி இருக்கிறது? தோட்டாவைப் போட்டு நிறைத்தே வைத்திருங்கள். காரைக் குறுக்காட்ட கட்டை கிட்டை வைத்தால் ஒரு வெத்தி வேட்டு எழுப்புங்கள்” என்ற கதம்பப் பேச்சு அவள் மனசைக் கிளறி விட்டு விட்டது.

     ராமசாமிக் கவுண்டர் வீட்டுக்கு வந்ததும் தன் தந்தை விட்டுக் கொடுக்காமல் கடூரமாகப் பேசியதும் அவளுக்கு வருத்தமாக இருந்தது. மாரியப்பன் வந்து கேட்டால் என்ன நினைப்பான்? இருக்கிற நடவடிக்கைகளைப் பார்த்தால் இது வெகு தூரத்துக்குப் போகும் போல் இருக்கிறதே என்று அஞ்சினாள். அவள் பயப்பட்டதற்குக் கணக்காக இப்போது இன்னும் தாறுமாறாக எல்லாம் நடக்க ஆரம்பித்து விட்டதே! தன்னுடைய தகப்பனார் மோட்டார் வாங்கியதால் அளவற்ற ஆனந்தம் அடைந்தாள். இன்பகரமான பிரயாணம் அதில் செய்யலாம். உல்லாசமாக காரில் சவாரி செய்வதைப் பார்த்து, அத்தையும் மற்றவர்களும் புளகாங்கித மடைவார்கள் என்று எண்ணியிருந்தாள். ஆனால், இப்போது காரில் உட்காருவதே ஆபத்தாக அல்லவா இருக்கிறது? எப்படியோ தகப்பனுக்கு ஒரு ஆபத்தும் நேரக்கூடாது. ஆனால் மாரியாத்தாள் கோவிலில் ஒரு கிழவி என்ன சொல்லிக் கும்பிட்டாள்? அதை நினைக்கவும் அவள் உடம்பே நடுங்கியது.

     இரவு பூராவும் சரியாகத் தூக்கம் வரவில்லை. யாரோ பத்து இருபது பேர் வருவது போலவும் ‘திடுபுடு’வென்று கல்லை வீட்டின் மேல் போடுவது போலவும் மணியக்காரர் கோபாவேசமாக எழுந்து செல்வது போலவும் கனாக் கண்டாள். திடுக்கிட்டு எழுந்து கண்ணைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் படுத்தாள். மீண்டும் பயங்கரக் கனவுகள் தான்.

     கார் எங்கேயோ வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. திடீரென சேற்றிலே சக்கரங்கள் சிக்கிக் கொள்கின்றன. இந்தச் சமயத்தில் மழையும் கொட்ட ஆரம்பிக்கிறது. அந்த மழையில் ஏழெட்டுத் திருடர்கள் ஓடிவந்து தகப்பனாரை வளைத்துக் கொள்கிறார்கள். கூர்ந்து பார்க்கும் போது திருடர் தலைவன் மாரியப்பன்! என்ன, என்ன? மாரியப்பனா கொள்ளைக்காரன்.

     செல்லாயா பதறிப் போய் எழுந்திருந்தாள். கனவு தான் என்று தெரிந்தும் அவள் பதட்டம் நிற்கவில்லை. என்ன, மாரியப்பன் கொள்ளைக்காரனா? அவன் கொள்ளைக்காரன் ஆவானா? என்று அவள் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.