17

     மணியக்காரர் வயிற்றெரிச்சலில், “பார்க்கலாம்” என்று சொன்னாரே தவிர, மனப்பூர்வமாகச் சொல்லவில்லை. வீட்டிற்குள்ளிருந்த செல்லாயா இதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். மகளுடைய கலியாணத்தை வெகு விமரிசையாக நடத்தி விடுவது என்று தான் இன்னும் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் காங்கயம் போய் வீரப்ப செட்டியாரிடம் இரண்டாயிரம் கேட்கவும், “எதை நம்பிக் குடுக்கறதுங்க? கொஞ்சம் செட்டா இருங்கோ, மழை துளி இல்லெ. பஞ்ச காலம்...” என்று பஞ்சப் பாட்டுப் பாடவும் தான் இந்த உலகின் உண்மையான போக்கு மணியக்காரருக்குத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.

     மறுவார்த்தை பேசாமல் ஊரை நோக்கிப் புறப்பட்டு விட்டார். முழங்கால் வரை புழுதியோடு கோயிலுக்கு வந்து சேரவும் பாலதுளுவு செல்லணக் கவுண்டர் வண்டி கோவிலை விட்டுப் புறப்படவும் சரியா யிருந்தது. ஐயர் சிரித்துக் கொண்டே, “பூ வெச்சுக் கேக்க வந்திருந்தாங்க” என்றார்.

     “எதுக்கு?”

     “நம்ம வளவு கலியாணத்துக்குத் தானுங்க...”

     மணியக்காரரை யாரோ ஒரு அசப்பு அசைத்து விட்ட மாதிரி இருந்தது.

     “செரியில்லீங்க. பூவும், சகுனமும் நல்லா இல்லீண்ணு வண்டியைத் திருப்பீட்டாங்க” என்றார்.

     என்ன சொல்வதென்றே அவருக்குத் தோன்றவில்லை. ஆத்திரமும் அவமானமும் பொத்துக் கொண்டு வந்தது. தலை குனிந்து கொண்டே வீடு போய்ச் சேர்ந்தார். வழியில் ராமசாமிக் கவுண்டரும் மாரியப்பனும் பேசிக் கொண்டே ஆற்றுக்கு வந்து கொண்டிருந்தார்கள். மாரியப்பன், தலையைத் தூக்குவாரா என்று பார்த்தான். மணியக்காரர் குனிந்த தலை நிமிரவே இல்லை!

     இரவு சாப்பிடும்போது மாரியப்பன் தாயார், “எப்படியும் இந்தத் தைக்குள் முடிச்சரோணும். தள்ளிப் போட்டுக் கிட்டே போவப்படாது” என்றாள் தன் கணவரிடம்.

     “நானும் பாக்கறன். நல்லெடமாக் கெடைச்சா அடுத்த மாசமே வெச்சிட்டாப் போவுது” என்றார்.

     இந்த வருஷம் கொஞ்சம் ‘தன் மட்டும் தான்’ என்று ராமசாமிக் கவுண்டர் குடும்பம் தலை தூக்கியது. பெற்றோர் தன்னுடைய விவாகத்தைச் சீக்கிரம் முடித்துவிட விரும்புகிறார்கள் என்பதை நினைத்துத் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். முதலில் வாழ்க்கை சீரடைய வேண்டும். குடும்பம் ஊர் - எல்லாமே கெட்டுப் போய்க் கிடக்கையில் திருமணத்திற்கு என்ன அவசரம் என்று எண்ணவும் சிரிப்பை அவனால் அடக்க முடியவில்லை. எப்போதுமே சமூகத்தின் அசட்டுத் தனத்தைக் கண்டால் அவனுக்குச் சிரிப்புத்தான். குடியானவர்கள் நிலை நாளுக்குநாள் மிக மோசமாகிக் கொண்டு வந்தது. இன்னும் நூறு இருநூறு வருஷங்கள் போனாலும் இவர்கள் மாற மாட்டார்கள் என்று பரிபூரணமாக நம்பினான். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வர, யாராவது கை கொடுத்து அழைத்து வந்தாலும் அவர்களுக்கு எல்லாமே ஒரே ‘அமாவாசை’யாகவே இருந்தது. சிறு குழந்தைகளுக்குக் கூட நல்லது கெட்டது தெரியும் போலிருந்தது. ஆனால் அந்த அப்பாவி சனங்கள் புழுதியை விட்டு மேலுக்கு வர ஒரேயடியாக மறுத்தார்கள்.

     மாரியப்பன் ஒரு மாதமாகச் செல்லாயாளைச் சந்திக்கவில்லை. அவளுடைய கலியாணப் பேச்சைக் கேட்கும் போதெல்லாம் மனம் ‘திக்திக்’ என அடித்துக் கொண்டது. ஆனால், உள்ளத்திலே ஒரு குரல், ‘ஆகாது, ஆகாது’ என இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

     மத்தியானம் மணியக்காரர் தோட்டத்திற்குப் போயிருந்தான். பவளாக் கவுண்டர் இருமிக் கொண்டு குடிசையில் படுத்திருந்தார். சில நாளாக அவர் படுக்கையை விட்டுப் பிரிவதே இல்லை. பேத்தியின் கலியாணத்தைப் பார்த்து விட்டுத்தான், தாம் ‘கண்ணை மூடுவதாக’ தினம் பத்துப் பேரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

     செல்லாயா மத்தியான நேரத்தில் தோட்டத்தில் தான் இருப்பாள். ‘கூடமாட’ தோட்ட வேலைகளையும் அவள் செய்ய வேண்டி இருந்தது. மாரியப்பனைக் கண்டதும், “இப்பத்தான் நெனச்சேன்” என்றாள்.

     இருவரும் பேசிக் கொண்டே அங்கிருந்த தென்னந் தோப்புப் பக்கம் சென்றார்கள். அங்கே பலநிறப் பூஞ்செடிகளை வளர்த்தியிருந்தாள். இத்தனை நாளும் அவள் அதைப் பார்க்கவில்லை. வித விதமான மலர்கள் மஞ்சளும் வெள்ளையுமாக மலர்ந்து கிடந்தன. சிலந்திப் பூக்கள் பாத்திகளின் ஓரங்களில், வானக் கோடியை அலங்கரிக்கும் நட்சத்திர மலர்கள் மாதிரி கண்ணைப் பறிக்கும் தேஜோமயமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.

     கை நிறையப் பூக்களைப் பறித்துக் கொண்டு வந்தான். ஆனால், அவளைப் பார்த்துக் கொண்டே சிரித்தபடி கீழே உட்கார்ந்தான்.

     செல்லாயா அவைகளை வாங்கிக் கொண்டையிலே செருகிக் கொண்டாள்.

     “பூ வெச்சு வெகு நாளாச்சு” என்றாள்.

     “இப்பத்தான் வெச்சிட்டு வெகு நாளாச்சிண்ணு சொல்லறயே?” என்றான்.

     ஒருவரை ஒருவர் பார்த்து இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

     “எங் கலியாணத்துக்கு நீங்க வருவீங்கல்ல?” என்றாள் செல்லாயா சாந்தமாக.

     அவனும் அமைதியாக, “நீயும் கட்டாயம் எங் கலியாணத்துக்கு வரவேணும்” என்றான்.

     இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.

     “இந்த ஒரு வருசமா எப்படித்தான் இந்த ஊரு உங்களைக் கட்டிப் புடிச்சிட்டுதோ? ஒரு மாசமா இங்கே வரதில்லையே?”

     “வேலை என்ன?” என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்தான். சற்றுப் பொறுத்து, “ஒரு மாயக்காரி இருக்கறா. அவ என்னயை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் உடறதில்லெ” என்றான்.

     செல்லாயா முகம் சட்டெனக் கருத்தது.

     “அவ எங்கியும் இல்லெ. இங்கே தான் இருக்கறா” என்றவுடன் அவள் மலர்முகம் இன்னும் பதின் மடங்கு பிரகாசித்தது.

     வெப்பமற்ற மத்தியானச் சூரியனின் மங்கலான வெளிச்சம் தோப்புக்குள் பாய முடியாமல் நிழற்கோடு பரப்பிக் கொண்டிருந்தது. ஆடும் தென்னை நிழல்களைப் பார்த்தபடி, “நாஞ் சொன்ன சோசியம் பலிச்சுது பாத்தியா? இப்ப ‘நாலோடு ஒண்ணா, உங்க அய்யனும் வந்திட்டாங்களே? செட்டியார் கல்லைத் தூக்கிப் போட்டிட்டாரில்ல?” என்றான்.

     அவளுக்குச் ‘சுரீர்’ என்றது. “இப்ப உங்க மனசு குளுந்துதா?” என்றாள். மறுகணமே உதட்டைக் கடித்துக் கொண்டு பேச்சை மாற்ற, “நீங்க எல்லா இப்படி இருக்கீங்களே, நாங்க மாத்திரம் நல்லா இருக்கச் சாமி உடுமா?” என்றாள்.

     இதைக் கேட்டு அவன் சிரித்துக் கொண்டான். சுள்ளி வலசு சனங்கள் மேல் உள்ள வெறுப்பை விட ஊருக்கு எல்லைக்காவலாக அமைந்துள்ள தெய்வங்களிடம் அவனுக்கு அதிக வெறுப்பு ஏற்பட்டிருந்தது! “இந்தச் சாமி பூதங்கள் பேச்செல்லாம் எங்கிட்டை எடுக்காதே. நாட்டராயங் கோயிலுக்குப் போனது உனக்கு நெனப்பு இருக்குதா?” என்றான்.

     இன்றைக்கும் அதைக் கேட்க அவளுக்குத் தலை சுற்றியது.

     “செல்லாயா? இந்தச் சனங்களைக் கடைத்தேத்த ஒரு வழி கண்டு பிடிச்சிட்டேன். இந்த ஒரு வருசமா ராத்திரி பகலா யோசித்து யோசித்து இதைத் தீர்க்க ஒரு வழி முடிவு பண்ணி வெச்சிருக்கறேன்” என்றான்.

     அவள் கண்கள் அகல விரிந்தன. “அதுக்குத்தானெ தவமிருக்கறேன். சொல்லுங்க?” என்றாள்.

     “இன்னும் நாலுநாள் பொறுத்துக்கோ. அப்புறம் சொல்றேன்” என்றான்.

     “அதுக்குள்ளே பின்னென்ன அவசரமாம்?” என்றாள்.

     நீண்ட நேரத்திற்குப் பிறகு, “கண்ணிலே காணாத போனா மனசு அடிச்சுக்குது. கண்டா பேசறத்துக்கு ஒண்ணுமில்லே...”

     அவன் ஆச்சரியத்தோடு, “பேச ஒண்ணுமில்லையா?” என்று கேட்டுவிட்டு அவள் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

     தன்னை அப்படிப் பார்ப்பது வெட்கமாக இருந்தது. கூந்தலைச் சரி செய்து கொண்டு, “ஒண்ணு சொல்லறதுக்கு முந்தி ஒம்பது எடுக்கறீங்களே?” என்றாள்.

     “செரி, நீ கண்ணாலம் பண்ணிக்கப் போறே?” என்றான்.

     அவன் கேள்வியில் உள்ள பரிகாசத்தைக் கேட்கும் போதே கண்டு கொண்டாள். அடக்கமாக, “சித்தோட்டுக் காரருக்கு இரண்டாங் குடியாக் கேக்கறாங்க. செல்லண்ணனுக்கு மூணாங் குடியாக் கேக்கறாங்க. எங்க அய்யன் யோசனை பண்ணிட்டு இருக்காங்க. உண்ணி ஆரு கையிலே புடிச்சுக் குடுப்பாங்களோ தெரியிலே!” என்றாள்.

     விளையாட்டுக்குச் சொல்லிய போதிலும் அந்த வார்த்தைகளில் உண்மை இல்லாமல் இல்லை. மணியக்காரர் முன்பு செய்துள்ள ‘பரோபகார’ங்களுக்கு அவர் வீட்டில் இப்போது சம்பந்தம் கொள்வதே அரிதாகத்தான் இருந்தது. பெண்ணின் அழகு, இனிமை, குணம் இவைகளெல்லாம் முதலில் யாரையும் கவருவதில்லை. குடும்ப கௌரவமும், ஒற்றுமையுந்தான் அவர்கள் கண்ணைக் கரிக்கும். அதிலே ‘எசகேடு’ இருப்பதாகத் தெரிந்தால் அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டார்கள்.

     “செல்லாயா, உங்க அய்யன் வேறு எடத்துக்கு நெசமாகவே உன்னைக் குடுத்திட்டா என்ன பண்றது?” என்றான்.

     “இப்ப நடக்கற பேச்சு வார்த்தை அப்பப் பொய்யா? இதிலெ நெசம் பொய் பாக்கறதுக்கு என்ன இருக்குது? நீங்களே சொல்லுங்க. ஊரெல்லாம் நெறவேத்தறதாச் சொல்றீங்களே! என்னைப் பத்தி நெனைக்கறதுக்குப் பாவம், உங்களுக்கு நேரம் எங்கே?” என்று சொல்லி அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். “எல்லாத்துக்கும் முதல்லே இதைப் பத்தீல்ல யோசிக்கோணும்” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

     மறுநாள் தைப்பொங்கல் கழித்துப் பூ நோம்பு. ஊர்ப் பெண்கள் எல்லோரும் ஆற்றங்கரைக்குப் போய், செடி கொடிகளிலிருந்த பூக்களை யெல்லாம் பறித்துத் தண்ணீரில் விட்டுக் கொண்டு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டு மிருந்தார்கள். கரையோரம் தன் தோட்டத்தில் உட்கார்ந்து இந்த வேடிக்கையை மாரியப்பன் கவனித்துக் கொண்டிருந்தான். சில குறும்புக்கார இளம்பெண்கள் வம்பு பேசிக் கொண்டிருந்தார்கள். செல்லாயாளைச் சற்று நேரம் சும்மா இருக்க விடவில்லை. கலியாணமாகாத பெண்கள் பாடு அந்தக் கூட்டத்தில் திண்டாட்டம்தான்! வம்புப் பேச்செல்லாம் சகித்துக் கொண்டு தான் ஆகவேண்டும். ஒருத்தி தூரத்தில் உட்கார்ந்திருந்த மாரியப்பனைப் பார்த்தாள். பார்த்ததும் அவனுக்கும் செல்லாயாளுக்கும் ‘முடிச்சு’ப் போட வேண்டும் என்று எப்படியோ தோன்றிவிட்டது அவளுக்கு. உடனே அங்கிருந்த அத்தனை பேரும் இதில் கலந்து கொண்டார்கள். செல்லாயா அங்கிருந்து ஓடியே வந்துவிட்டாள். ஆனால், அப்போது தான் இரண்டு இரட்டை மாட்டு வண்டியில் வந்து இறங்கிய மாப்பிள்ளை வீட்டார் உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள். மணியக்காரரும் அத்தையும் அவர்களை உபசரித்துக் கொண்டிருந்தார்கள். இதைக் காணவும் அவள் நெஞ்சம் துணுக்குற்றது.