உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
18 பழைய காட்சிகளையும் சம்பவங்களையும் ஞாபகப்படுத்திக் கொள்வதிலே ஒரு தனி ஆனந்தம் நிறைந்திருக்கிறது. அந்த மனக்கனவிலே உல்லாசமும் ஒளியும் கலந்திருப்பதாகவே படுகிறது மனத்துக்கு. இன்பமாகட்டும் துன்பமாகட்டும் நீண்ட நாளைக்குப் பின் நடந்தவைகளை எண்ணிப் பார்க்கையிலே, அதிலும் ஒரு மதுரம் தோன்றாமல் இருப்பதில்லை. மணியக்காரர் தென்னமரத்துக்குக் கீழுள்ள வாய்க்கால் படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு ஐந்து வருஷத்துக்கு முந்தி செட்டியாரோடு பேசிக் கொண்டிருந்த செய்தியை எண்ணிப் பார்த்தார். நேற்றுத்தான் நடந்தது போல இருந்தது. அன்று தோட்டத்திலே எங்கே பார்த்தாலும் ஒரு தனிக் ‘களை’ வீசிக் கொண்டிருந்தது. இன்றோ? எங்குமே பொட்டல் காடு போல வறண்டு கிடக்கிறது. மனித மனம்தான் சிலசில சமயங்களில் வறண்டு விடுகிறது! ஆனால், இயற்கையின் உள்ளத்திலும் வறட்சி தோன்றலாமா? இயற்கை என்றைக்கும் போல ஒரே பசுமையாய்க் கண்களைக் கவர்ந்தால் என்ன? மாறி மாறி வரும் இளவேனிலும் முதுவேனிலும் மனித வாழ்விற்கு ஆறுதலளிக்கத்தானா? பயிர் பச்சைகள் ‘கும்’மென மணத்துடன் நிறைந்து நின்ற போது, செட்டியாரும், மணியக்காரரும் மௌனத்தில் ஆழ்ந்து அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது உண்டு. வெளியிலே பொங்கித் ததும்பும் அழகின் கவர்ச்சியிலே மூழ்கிப் போய் மெய்மறந்து விடுவார்களோ என்று எண்ண வேண்டும். இந்தத் தோட்டமும், இதே போல வளமான பூமிகளும் கைக்கு வரும் வழி என்ன என்ற சிந்தனையேதான். செட்டியார் அதில் வெற்றி பெற்றார் என்று தான் சொல்ல வேண்டும். அடக்கமாகக் கரையில் உட்கார்ந்து மீன் பிடிப்பவனைப் போல தம்முடைய காரியத்திலேயே கண்ணாயிருந்தார். துஷ்டப்பையன் மரத்திலிருந்து பழம் விழுந்ததும் கூட்டாளிகளைத் தனித்து விட்டுவிட்டு, பாகமும் கொடுக்காமல் ஓடிப் போய்விடுகிறான் அல்லவா? அந்த மாதிரி மணியக்காரரை ஒண்டியாக்கிவிட்டு, பின்னர் ஓட்டாண்டியாகவும் ஆக்கிவிட்டு, இப்போது கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. செட்டியார் ஒருநாள், “மணியக்காரரே, உங்க புத்திசாலித்தனம் யாருக்கு வரும்? போலீஸ் வருது, இன்ஸ்பெக்டரு வாராரு என்று சேதி பரப்பி மூணேமுக்கால் நாளிகைக்குள், நாலு பூமியையும் சுவாதீனம் பண்ணிக் குடுத்திட்டீங்களே! இல்லாட்டி அடிதடி கலகம் சண்டை சச்சரவெல்லாம் வந்திருக்குமே” என்றார். உண்மையில் அன்றையக் கலகம் மணியக்காரர் சமயோசித தந்திரத்தால் தான் தப்பியது. அதிலே செட்டியாருக்கு பார்க்கப் போனால் லாபம் கொஞ்சம் கம்மிதான். கலகம் நடந்து ஜெயிலுக்குப் போனால் இரண்டு பக்கத்துக்காரரும் தோட்டங்காட்டை அடகு வைக்க, செட்டியாரைத் தேடித்தான் வருவார்கள்! மணியக்காரர் ஒத்தாசை இருக்கும் போது எதுதான் நடக்காது. “நம்மளை நாலு பேரும் நாலு தினுசா, சொல்லுவாங்க. நீங்க அதொண்ணையும் காதிலே போட்டுக்கப்படாது” என்று அடிக்கடி ஊக்கமளித்துப் பேசிய செட்டியார், இப்போது தான் இருக்குமிடம் நோக்கியும் தலை வைத்துப் படுப்பதில்லை. உலகத்தின் விசித்திரத்தை நினைக்க நினைக்க அவருக்குச் சிரிப்பும் துக்கமும் வந்தது. தன்னுடைய மகள் கலியாணம் எவ்வளவோ விமரிசையாக நடைபெறும் என்று எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தார். எல்லோருக்கும் முன்னால் செட்டியார் விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பார் என்று கனாக்கண்ட காலமும் ஒன்று உண்டு. ஆனால் இன்றோ? வீட்டிற்கு வந்ததும் ஒரு பழைய காகிதத்தை எடுக்க மரப்பெட்டியைத் திறந்து தேடிக் கொண்டிருந்தார். அதை மூடி வைத்து பல மாதங்களுக்கு மேலிருக்கும். சிறு பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. கட்டுகளைத் தட்டி வைக்கையில் ஒரு சிறு துண்டுக் கடிதத்தில் ‘பத்துப்படி நெய்’ என்ற குறிப்பு மட்டும் தெரிந்தது. அதைப் பார்த்தவுடன் அவருக்கு எரிச்சல் அதிகமாகிவிட்டது. “இப்படி எத்தனை பத்துப்படி நெய் அவனுக்கு ‘தெண்டம்’ குடுத்ததோ? உம், நெனச்சுப் பார்த்தானா? அவன் எதுக்கு நெனைக்கிறான்? நாம் பண்ணினது ஏத்தம் அல்லவா?” என்று தம்மையே நொந்து கொண்டார். முன்பு மணியக்காரர் செய்த தாராள தடபுடல்களுக்கும் இப்போது அடங்கி ஒடுங்கி ஓய்ந்து போய்விட்டதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் காணப்பட்டது. ஆனால், இந்த மனத்தெளிவு ஏற்படுமா? இம்மாதிரி ‘பக்குவம்’ ஏற்பட எத்தனை லட்சத்தைக் கொடுப்பது? அந்த ஒரு நினைவு மட்டும் சலித்துப் போன மனசுக்கு சற்று ஆறுதல் தந்து கொண்டிருந்தது. செல்லாயா சாப்பிடக் கூப்பிட்டாள். வருவதாகச் சொல்லிக் கொண்டே இருப்பிடத்திலேயே கல்லுப்போல் உட்கார்ந்திருந்தார். காலையில் ஆற்றுப் பக்கம் மாரியப்பனைக் கண்டார். ஆனால், தூரத்திலேயே வேறு தடம் போட்டு, ஒதுங்கிப் போய்விட்டார். சின்னப் பையனாக இருக்கையில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம். படிச்சிருப்பதாக எல்லாரும் சொல்கிறார்கள். குணமும் தங்கமான குணம் என்று தான் ஊரில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், பக்கத்தில் போக முடியுமா? அவனுடைய தகப்பன் முகத்தில் தான் விழிக்க இயலுமா? ராமசாமிக் கவுண்டர் குடும்பம் கெட்டதற்கே இவர் தான் காரணமாக இருந்தார். செட்டியாரைக் கூட அடுத்தபடியாகத்தான் சொல்ல வேண்டும். கல்லை விட்டு எறியாமல் போனால் கிளையிலிருக்கும் குரங்கு ஏன் தாவிக் கொண்டு நம் மீது பாய வருகிறது? வசந்த காலத்தில் தான் பட்சிகள் பறந்தோடி வருகின்றன. அத்தனை எதற்கு? மணியக்காரரை சீந்துவதற்கு இன்றைக்கு ஒரு ஆள் கூடக் கிடையாதே! காலையில் மாரியப்பனையே கூர்ந்து பார்த்துக் கொண்டு அசையாமல் அப்படியே இட்டேறி ஓரம் நின்று விட்டார். திரும்பிப் பார்த்த மாரியப்பன் சாந்தமான முகத்துடன் தான் போனான். அவன் பார்த்த பார்வையிலே என்ன இருந்தது? மணியக்காரரால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னிடம் அளவற்ற வெறுப்பும் கோபமும் கொண்டிருப்பான் என நினைத்தார். அந்த நினைப்பு வெறும் மயக்கம் தான் என்பதை அவரே உணர ஆரம்பித்தார். இருந்த போதிலும் ஏதோ ஒரு வேலி இருவருக்கும் இடையே குறுக்கே நிற்பதாகவே தோன்றியது. கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாய வலை தங்களைச் சுற்றி விரிக்கப்பட்டிருப்பது போலவும், ஒரு அடி நகர்ந்தாலும் கால் தடுமாற வேண்டும் போலவும் காணப்பட்டது. தமக்கு வரப்போகிற மாப்பிள்ளை, பெண்ணுக்குத் தகுந்தவனாகவும், படித்தவனாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஊரிலுள்ள ‘நாய நடத்தை’க்கு முகாமைக்காரனாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டார். அந்த ஆசை... பொழுது கொஞ்சம் ‘மசமச’ப்பாகவே இருந்தது. கூப்பிட்டுக் கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தலையாரி வந்தான். தலையைச் சொரிந்து கொண்டு அவன் நிற்பதைப் பார்த்ததும் மணியக்காரர் சொல்ல வாயெடுத்த சங்கதியை மறந்து விட்டார். “கூப்பிட்டதும் வாடா” என்று சொல்லி, அவனைப் போகும்படி சொல்லிவிட்டார். |