23

     காலைக் காற்று இளந் தளிர்களைக் கோதிக் கொண்டு சில்லென வீசிச் சென்றது. மலர்க் கொடிகள் மேலும் கீழும் சாய்கையில் பூ மழை பொழிந்தன. தூரா தூரத்திலிருந்து கேட்கும் ஏற்று இறைக்கும் சத்தத்தோடு, அரையும் குறையுமாகக் கேட்கும் தெம்மாங்கு முழக்கமும் ஏதோ ஒரு புது உலகையே ஞாபக மூட்டிக் கொண்டிருந்தது. ஆரவாரத்திற்கு முன் படியும் அந்த அருணோதய அமைதியிலே வாயில்லாச் சீவன்களும் கட்டுண்டது போல் மயங்கிக் காடு கரைகளுக்குச் சென்று கொண்டிருந்தன. பண்டம் பாடிகள் கால்பட்டு இலேசாக மேலெழும் மண்ணின் மணத்தோடு, வேப்பம், புன்னைப் பூக்களின் வாசனையும் கலந்து வழியெங்கும் வீசிக் கொண்டிருந்தது. தாழம்பூ, மனோரஞ்சிதத்தின் இனிய மணமும் அதனோடு கலந்து கொண்டால் கேட்கவா வேண்டும்?

     இத்தனை அழகு, அமைதி சுற்றிலும் நிறைந்திருந்தும் மணியக்காரர், வாசலில் கையைக் கட்டி உட்கார்ந்து கொண்டிருந்தார். கண்ணையும் ஏனோ மூடிக் கொண்டிருந்தார். அந்தப் பரிதாபகரமான காட்சியையும், வெளியே நிகழ்ந்து கொண்டிருக்கும் பரிபூரணமான காட்சியையும், எந்தக் கலைஞனாவது ஒரே சமயத்தில் பார்த்தால், அந்தக் கலையுள்ளம் ஆனந்தத்தால் விம்மி வழியுமா? அல்லது சோகத்தால் வெந்து நீராகுமா என்பது கற்பனைக்கு எட்டாத கதை!

     கடந்த நாலு நாளாக மணியக்காரர் படும்பாடு அவருக்கும் அவரைப் படைத்த ஆண்டவனுக்கும் தான் தெரியும்! சுற்றாத இடமில்லை. பார்க்காத பெரிய கை கிடையாது. ஆனால் எல்லாம் வெறுங்கை! அவரைப் பொறுத்த மட்டில் எல்லாமே சின்ன இடந்தான்!

     எதிரே பல்லுக்குச்சி இரண்டு மூன்று ஒடித்துப் போட்டது அப்படியே அவரைப் போல் வாடிப் போய் கிடந்தது. ஆலங்குச்சி அவருக்குப் பிடித்தமானதுதான். நல்ல நண்பர்கள் பக்கத்திலிருந்தால், வேப்பங்குச்சி, கருவேலங்குச்சி முதலிய பல்லுக்குச்சி ஆராய்ச்சியில் இறங்கி விடுவார். புதிதாகப் பார்க்கும் நண்பர், இவர் ஒரு நாட்டு வைத்தியரோ என்று சந்தேகப்படும்படி அவ்வளவு அழகாக மரத்து ஆராய்ச்சி செய்வார். ஆனால் இப்போது அவருக்கு யார் நண்பர்கள்? யாரிடம் போய் தம் முடிவுகளைச் சொல்லப் போகிறார்?

     எப்போதோ ஒரு காலத்தில் படித்த ஞாபகம். ‘அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்’ என்ற அடிகள் அவர் ஞாபகத்திற்கு வந்தன. நீர் வற்றியவுடன் குளத்தை விட்டுப் பறவைகள் பறந்தோடி விட்டனவாம்.

     நாலு புறமும் திரும்பிப் பார்த்தார். ஒரு பக்கத்தில் எதற்கும் “ஆம்” எனச் சொல்வது போல் தினைப் பயிர்கள் அசைந்து கொடுத்துக் கொண்டிருந்தன. மற்றொரு பக்கத்தில் ஆற்றின் விளிம்பு வரை ராகிப் பயிர் நன்றாக வளர்ந்து பச்சென்றிருந்தது. அந்தப் பக்கத்திலேயே இப்படி விளையும் பூமி கிடையாது என்று பெயர் வேறு. இந்தப் பூமி, இன்னும் நாலு நாளில்... உம்... யாருக்குச் சொந்தமோ? ஆனால்... மற்றவர்களுக்கு இந்தக் கதி நேர்ந்த போது அவர்களுடைய மனசும் இந்த மாதிரிதானே படாத பாடு பட்டிருக்கும்?

     அந்த விசித்திரத்தையும் அவர் மறந்துவிடவில்லை. நல்ல அந்தஸ்திலே, யோசிப்பதற்கு எவ்வளவோ சாவகாசமும் சமயமும் இருந்த போது கூட, ஏன் துளியாவது பிறரைப் பற்றி நினைக்க முடியவில்லை என்பதை எண்ண எண்ண அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இப்போது கஷ்ட நஷ்டம் எவ்வளவோ, மனக்கவலை குடும்பக்கவலை சுமக்க முடியாமல் இருந்தும் மற்றவர்களுடைய துக்கத்தைச் சிந்திக்க முடிகிறதே, இந்த விசித்திரம் ஏன்?

     காற்றில் சிக்கிக் கொண்ட சருகு நாலாபுறமும் பறக்குமல்லவா? அந்த மாதிரி அவருடைய நினைவு சுளித்தோடிக் கொண்டிருந்தது.

     முன் தினம் சாயங்காலம் மாரியப்பனை வழியில் சந்தித்தார். அவருக்குப் பேசுவதா வேண்டாமா என்ற சங்கடமான நிலைமை. ஆனால் மாரியப்பனோ சிரித்த முகத்துடன், அவருக்குச் சிரமமில்லாமல் செய்து விட்டான். பிறகு அவனை எத்தனையோ தரம் பார்த்திருந்தும் முதல் தடவைதான் சந்திப்பவரைப் போல், “ஏனப்பா, எப்ப வந்தே?” என்று கேட்டார். அதைக் கொஞ்சமும் வேறு விதமாக எடுத்துக் கொள்ளாமல் அடக்கமாக அவன் பதில் சொல்லியது அவர் மனசிற்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. அவருடைய குறிப்பறிந்து, கூடவே பேச்சுக் கொடுத்துக் கொண்டு வந்தான். எதிரே வந்தவர்கள் அதிசயத்தோடு ஏன் பார்த்தார்கள் என்பது அனுபவஸ்தரான மணியக்காரருக்கு தெரியாதா என்ன? சண்டை சச்சரவு, வசவு, வம்பு, என்பதெல்லாம் வேறு; கூடிக் கலந்து பேசிப் பழகுவது என்பது வேறு என்பதை அப்போது உணர்ந்தார். கொஞ்ச நேரந்தான் மாரியப்பனோடு பேசிக் கொண்டிருந்தார். பார்க்கப் போனால் சாதாரணப் பேச்சுத்தான். ஆனால், அதை ஞாபகப்படுத்திப் பார்க்கையில், “ஆகா! அவன் எவ்வளவு புத்திசாலி” என்ற நினைவே மேலோங்கி நின்றது. அவனிடம் எதையும் சொல்லலாம், எதற்கும் அவனை நம்பலாம் என்ற உறுதியும் அவர் உள்ளத்தில் பலப்பட்டது. இருந்த போதிலும், இந்தக் கணத்தில் யார் அவருடைய ‘சுமை’யை வாங்கிக் கொள்ளப் போகிறார்கள்?

     அதற்கு முடிவும் அவரே தீர்மானித்து வைத்திருந்தார். “இது சாதாரணச் சுமை அல்ல. பெருத்த சுமை. மற்றவர் தூக்கமாட்டாத சுமை. என் தலையில் ஏறியது என்னோடேயே தான் கடைசி வரை வந்து தீரும்” என்று நினைத்தார். உலகை மறந்து எவ்வளவு நேரமானாலும் உட்கார்ந்து விடலாம். ஆனால், உலகம் நம்மை மறந்தால் தானே? மறக்க விட்டால் தானே?

     செல்லாயா, காலை நேரத்தில் தோட்டத்திற்கு ஒரு முறை வருவாள். ஏதாவது காய்கறி வேண்டுமானால் பறித்துக் கொண்டு சீக்கிரமாகப் போய்விடுவாள். ஆனால், இன்றைக்கு தேங்காய் வேண்டி இருந்ததால், மரமேறி வரட்டும் என அங்குமிங்கும் வரப்பிலே பட்டி நாய்க்குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தாள். மரமேறி வந்து தேங்காய் போட்டான பிறகு, வீட்டிற்குப் போனவள், காலையில் வாசலில் கல்லுப்போல் தகப்பனார் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் இந்தப்புறமாக வந்தாள்.

     மகளைப் பார்த்ததும், மீண்டும் குனிந்தபடி உட்கார்ந்து கொண்டிருக்க அவரால் முடியவில்லை. ஏதாவது பேச வேண்டுமென, “தேங்காய் வரக்காய்தானா?” என்றார்.

     அது வரக்காயோ, பச்சைக்காயோ அவளுக்குக் கவலையில்லை. ‘ஏனுங்க ஐயா, காலம்பரம் இப்படி குக்கிக்கிட்டீங்க?” என்றாள். அவளுடைய கண்ணும், முகமும் இன்னும் பலவிதக் கேள்விகளைக் கேட்பது போலிருந்தது. சின்ன வயதிலிருந்தே அருமையுடன் வளர்த்துவந்த பெண், அவள் கண் கலங்கி நிற்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை அவருக்கு.

     சிரித்துக் கொண்டே, எழுந்து போகப் பார்த்தார்.

     செல்லாயாளுக்கு அரையும் குறையுமாக எல்லா விவரமும் தெரிந்துதான் இருந்தது.

     “ஏனுங்க ஐயா, இதுக்குங்களா இத்தனை விசனமுங்க?” என்றாள். சுலபத்தில் அவள் சொல்லிவிட்டாள். அவருக்கும் முடிவாகப் பார்க்கும் போது எல்லாம் ரொம்ப சுலபமாகத்தான் இருந்தது.

     “இல்லை, அம்மா, படவேண்டியவன் படறான். ஆனாக் குறுக்கெ நிக்கறவங்க அதிலெ ஏஞ்சேரவேணும்? நாஞ் செஞ்சது என்னோடெ. நீயும் தாத்தையனும், மத்தவங்களும் நடுவிலே சிக்கிக்கிட்டு...” என்று அவர் முடிக்குமுன்னே, “நல்ல வேடிக்கையுங்க. மரமே சாயையிலே கொம்பும் செடியும் தப்பிக்கோணுமிண்ணா முடியுமிங்களா? போகுது. அப்படி என்ன மலையெ முழுங்காதெ போகுதுங்க. நீங்க தூக்கற பாரம் நாங்க தூக்கமாட்டமா? நல்லா இருக்குது. எந்திருச்சு வாங்க” என்றாள்.

     மகளுடைய பேச்சு உண்மையிலே பிரமிப்பை உண்டாக்கி விட்டது. “அம்மா, வெடிய வெடிய நெனச்சாலும் ஒவ்வொருக்கால் ஒண்ணுமே தெரியமாட்டீங்குது. இப்பொ என்னுமோ வெகுதூரம் எங்கண்ணுக்கு வெளிச்சமா இருக்குது” என்றார்.

     செல்லாயா வேறு ஒன்றும் பேசவில்லை. மெதுவாக அங்கிருந்து வீட்டை நோக்கிப் புறப்பட்டாள். திரும்பி ஒருதரம் பார்த்தாள். மணியக்காரரும் புறப்பட்டுவிட்டார்.

     ஆனால் கால்கள் ஏனோ நடை ஓடாமல் தள்ளாடின. மெத்தென இருக்கும் பசும்புல் தரையும் கரடு முரடாகவே கால்களுக்குப் பட்டது. ஆனாலும் அதை விட்டு அப்புறம் போக அவரால் முடியவில்லை!

     காலைச் சூரிய கிரணங்கள் பாய்ந்து வந்து கொண்டிருந்தன. வெயில் ‘சுரீர்’ என்று உறைக்கவும் ஆரம்பித்து விட்டது. அவருக்கு மட்டும் கொஞ்சங் கூட பசிக்கவில்லை. பல்லுக்குச்சி மாத்திரம் கையிலிருந்தது.

     அப்போது மாதாரி பொங்கியான் வேலியைத் தாண்டி வந்து கொண்டிருந்தான். பறி தைப்பதற்காக பத்து நாளாக அவனை வரச் சொல்லி இருந்தார். ஒவ்வொரு தரமும் ஏதோ ஒரு சாக்குச் சொல்லி ‘குளமாத்து’ம் பண்ணிக் கொண்டிருந்தான். இப்போது அவனைக் கண்டதும், “ஏண்டா பொங்கியா, இது நல்லா இருக்குதா பாரு?” என்றார்.

     அவன் ‘தடதட’வென்று ஒரே மூச்சில் தன் குறையைச் சொல்லித் தீர்த்தான். “என்ன பண்றது போங்க சாமி, பொளப்புத் தளப்பு தெரியாதயா கெடக்குதுங்க. குடிசையிலெ கட்டிக்கக் கந்தை யில்லீங்க. எம் மண்டையை எங்கெ உடப்பம் போங்க. நானென்னுமோ ‘சுக்குளி’க்கறணிண்ணு எம் வாயைக் கெளறாதீங்க. தோலு சிக்குதுங்களா? பறி எப்படித் தெச்சு ஈடேறது போங்க. என்னமோ நாளெயும் பொளுதையும் ஓட்டறனுங்க. இப்பொப் பாருங்க. நடுவளவுப் பண்ணாடி தோட்டத்துக்கு போயிருந்தனுங்க. சட்டிணு உட்டாத் தானுங்க வரலாம். அவுங்க கூட்டமா உடறதுக்குள்ளே பொளுது வேலிக்கு மேலெ வந்திட்டதுங்க” என்றான்.

     மூச்சு வாங்குவதற்காக பேச்சைச் சற்று நிறுத்தினான். அவன் சொல்லியதில், நடுவளவு தோட்டத்துக் கூட்டம் மட்டும் அவர் மனத்தில் படிந்தது. மீதி ஒன்றுமே அவருக்குக் கேட்கவில்லை. “ஏண்டா, கூட்டமா என்ன பண்றாங்க?” என்றார்.

     “சாமி, எனக்கென்னுங்க தெரியுதுங்க?” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டான். ஆனால், என்னதான் நடந்து கொண்டிருக்கும் என்பது மணியக்காரருக்கே தெரியாதா?

     இன்னும் மூன்று நாள் தான் இருக்கிறது தோட்டம் ஏலத்திற்கு வர. மூன்றே மூன்று நாள். பிறகு? இந்த பூமியை யார் எடுப்பார்களோ? யார் வருவார்களோ? யார் கைக்குப் போகப் போகிறதோ? தன் நிலைமை? அதை எப்படிச் சொல்ல முடியும்? அதற்கு முன் மற்றவர்களுக்கு என்ன நேர்ந்ததோ அதே தான் தனக்கும்!

     எத்தனையோ காட்சிகள் மணியக்காரர் சிந்தையில் ஓட ஆரம்பித்தது. ஒரு நாள் பொழுது விடியுமுன், பரிதாபமாக மாரியம்மன் கோவில் முன் ஒருத்தி எப்படி வேண்டிக் கொண்டிருந்தாள்? “அம்மா தாயே, மாரியாத்தா, நீ இருக்கறது நெசமானா எம் வயிறு எரியறதைப் போல இந்த மணியக்காரன் வயிறும் பத்தி எரியோணும்!” என்றாள். அவள் சொன்னது பலித்ததா? அது மாத்திரமா? சித்தையன் வீடு வாசலை யெல்லாம் விற்று விட்டுப் பெண்டாட்டி பிள்ளையோடு திருப்பூருக்குப் பிழைக்கப் போனபோது வீட்டிற்கு எதிரே என்ன செய்தான். ஒரு கை மண்ணை அள்ளி விசிறி விட்டுப் போனான். அந்தச் சாபம் சும்மா விடவில்லையே?

     ஆனால், இதற்கெல்லாம் ‘நான் தானா பொறுப்பாளி’ என்று ஒரு கணம் நினைத்தார். அந்தப் பாவி செட்டியாரும் கூட இருந்து கெடுத்தானே, அவனுக்கு ஒன்றுமே இல்லையா? நான் மாத்திரம் தான் இதெல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டுமா என்று மயங்கினார்.

     அவர் என்ன தான் மயங்கித் தயங்கினாலும் தானே விழுந்து எழுந்திருக்க வேண்டியதுதான். கூப்பிட்ட போதெல்லாம் வீரப்ப செட்டியாரால் வந்து கொண்டிருக்க முடியுமா?

     வீட்டை நோக்கி மெதுவாக நடந்தார். சோளப் பயிர்களுக்கிடையே ‘சொக்குப்பூடு’ ஒரு கொத்து முளைத்திருப்பது கண்ணுக்குத் தெரிந்தது. ‘சொக்குப்பூடு’ம் பயிரோடு கலந்துவிட்டால் தின்ற மாட்டுக்கு உடனே பிணி தட்டி விடும் என்பது மணியக்காரருக்குத் தெரியாததல்ல. இருந்த போதிலும் அதைப் பிடுங்கி எறியாமல் மேலே நடந்தார். மறுபடியும் என்னவோ நினைத்துக் கொண்டு திரும்பி வந்து அந்தப் ‘பூடு’ முழுக்கப் பிடுங்கி விசிறி விட்டு, சுற்றியும் ஒரு முறை பார்த்துவிட்டே சென்றார். “இனி இப்படிப் பாங்காக யார் பார்த்துக் கொள்வார்கள்? சரி, நடப்பது நடக்கட்டும்” என்று ஒரு கணம் எண்ணுவார். மறு கணமே மனசு கேட்காது. அலைந்து திரிந்து ஒரு முடிவுக்கு வராமல் சோர்ந்து போய் தள்ளாடிக் கொண்டே நடப்பார். புதிதாக யாராவது பார்த்தால், “ஏது, கார்த்தாலே மணியக்காரர் ‘எளம் போதை’யோடு வாராப்பலே இருக்குதே!” என்று தான் நினைக்கத் தோன்றும். அவருக்கும் ஒருவிதப் போதைதான், அந்தப் போதை கள்ளை விட ஆயிர மடங்கு கொடூரமானது!

     ஒரு நாள் செல்லாயா சொன்னாள்: “இந்தச் சொத்துச் சொகம் போனா என்னுங்க, ஐயா? நாம நல்லா இருந்தாப் போதாதா? கையகல நெலம் கிடைக்காதா? காய்ச்சிக் குடிக்க ஒரு குடிசை இல்லாதயா போகும்?”

     என்ன? ஒரு சிறு குடிசையா? வேண்டியதுதான். எனக்குக் குடிசை கூட சமயத்துக்குக் கிடைக்க வேணுமே!

     அவர் தேகம் ஏனோ நடுங்கியது. பயத்தால் அல்ல. என்னவோ தொண்டைக் குழியிலே உக்கிரமாக முனகிக் கொண்டார். கோபத்தால் அவர் சதைகளெல்லாம் துடித்துக் கொண்டிருந்தது. “எல்லாம் போயி உசிரோடே இருக்கறது வேறயா? ஒரு சாண் கயித்துக்கும் பஞ்சம் வந்திராதே” என்று சொல்லிக் கொண்டார். ஆனால் அதே சமயம் ஒரு இளமுகம் சோகந் தேங்கிய கண்களோடு, கண்ணெதிரே தெரிந்தது. அன்பும் அழகும் அதில் நிறைந்திருந்தது. அந்த ‘முகம்’ மனசை எவ்வளவோ கட்டிப் பிடித்துக் கிளர்ச்சிக்கு உள்ளாக்கியது. மகளை நினைக்க நினைக்க தான் ‘தற்கொலை’ செய்து கொள்வதென்பது சாத்தியமற்ற காரியம் என்பதில் அவருக்கு துளியும் சந்தேகம் உண்டாகவில்லை.