உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
9 “பிரச்சினை!” என்று இந்தச் சமயத்தில் ஞாபகமூட்டினான் பழனிச்சாமி. “நீ நல்ல ஆளப்பா! இப்ப நமக்கு முன் இருக்கும் பிரச்சினை யெல்லாம் அந்த பழத் தட்டம் தான்” என்று பாலனும் ரங்கனும் தட்டத்தை நோக்கிப் பாய்ந்தார்கள். “இன்னும் இருக்குது” என்று சொல்லிக் கொண்டே, “அம்மா! அம்மா! ஓ!” என்று செல்லமாகக் குழைந்தபடி, “அந்தப் பப்பாளி பழம் எங்கே இருக்குது அம்மா” என்று ஓடினாள் குஞ்சாள். அவளுடைய ஓட்டத்தின் அழகை முற்றும் ரசித்தவன் அங்கண்ணன். அதில் சந்தேகமே கிடையாது. கிட்டப்பன் முக்கியமான சங்கதியைத் தொடங்கு முன் தொண்டையைத் தீட்டிக் கொள்வான். அவன் தொண்டையை ஒரு தரம் நன்றாகத் தீட்டிக் கொண்டு ஆரம்பித்தான். அதற்குள் பழனிச்சாமி, “சொந்தமாகத் தொழில் ஆரம்பிக்கறவனுக்குச் சிரமங்கள் அதிகமப்பா!” என்று விவாதத்தை நினைப்பூட்டினான். “எனக்கு எதுவுமே மறக்காது. நீ சும்மா இருப்பா! சிரமப்படாமே யார் தான் முன்னுக்கு வந்திருக்காங்க! நம்ம மில் முதலாளி கூட சொந்தமா ஆரம்பிக்கறப்போ அவர்கிட்டே என்ன இருந்தது? பணமா? படிப்பா? அனுபவம்தானப்பா அவருடைய சொத்து. சும்மா சாதாரணமான ஆள். ராமாத்தா மில்லிஏ ‘குடோன் கீப்பராக’ இருந்தவர். பருத்தி பஞ்சு வாங்கறதைப் பார்த்தாரு - எடை போடற இடத்திலே இவரு மனுஷர்களை எடை போட்டுப் பழகிட்டாரு. அப்பறம் எல்லாமே அவருக்குச் சிரமம் இல்லாமப் போச்சு! தண்ணி குளுருதின்னு பாத்துக்கிட்டே இருக்க முடியுமா? துணிஞ்சு நீருக்குள்ளே குதிக்க வேண்டியதுதான். அப்புறம் குளிரு, அது இது எல்லாம் ஓட்டமா ஓடியே போயிடும்...” ரங்கன் எண்ணத்தையோ சொல்லத் துடித்துக் கொண்டிருந்தான். அவன் ‘கிரீச்’சுக் குரலை கிட்டப்பன் எப்போதும் அமுக்க மாட்டான். “சொல்லிக்கப்பா! ரங்க சொல்லு” என்றான். ரங்கனுக்கு உற்சாகம் தலைக்கேறிவிட்டது. அவன் சொன்னான், “அப்போ நீ தொழிலாளியா இருக்கறப்பவே ‘பிளான்’ போட்டிட்டயா? இப்போ ஏஜண்ட ஆபீசைச் சேர்ந்தவன் நீ! என்ன நா சொல்றது சரிதானே? ஒரு குமாஸ்தா, என்னய்யா அப்படித்தானே? சங்கத்திலேயே சேந்து சிரமங்களைக் கண்டு அஞ்சாமே...” மேலே அவனை பாலன் பேச விடவில்லை. “இவன் ஆர்ரா கோமாளி? அவுங்க சங்கத்திலே சேந்து பாடுபடப் போனா - அது வேறே கதையடா! இந்தக் கதை வேறே. சொந்தமா தொழில ஆரம்பிக்கறதின்னா... பிரச்சினை என்னன்னு கேட்டா? ஏப்பா கிட்டு. நீ ஏதாச்சும் ஆரம்பிக்கப் போறயா? சிரமங்களை சமாளிக்கப் போறியா? சொல்லு?” என்றான். “சந்தேகமில்லாமே என்கிறதையும் அதுக்கூடவே சேத்துக்கோ” என்றான் உறுதியான குரலில் கிட்டப்பன். “செரி! எடம் எங்கே? என்ன தொழில்னு சொல்லப்பா?” பாலன் கோரிய விளக்கம் இது. “எடத்துக்கென்ன? இங்கேதான் ஒரு எடம் பார்க்க வேணுமா? உங்க ஊர் சேரிப் பக்கத்திலேயே ஒரு இடம் பாக்கறேன். அங்கே என்ன இல்லை? கரண்ட் கெடையாதா? ஆளுக இல்லையா? செஞ்ச பொருளை விக்க முடியாதா?” கிட்டப்பன் அடுக்கிக் கொண்டே போனான். “என்ன தொழிலின்னு சொல்லிப் போடப்பா” என்றான் அங்கண்ணன். அவனுக்கு இந்தப் பயல் சிங்கநல்லூரை விட்டுப் போய்விட்டால் போதும் என்ற ஆசை! பேராசை அது. கிட்டப்பன் என்னவோ யோசித்துக் கொண்டு, “ஒரு லேத்து மட்டும் இருந்திட்டாப் போதும். அசுவமேத யாகமே செஞ்சு காட்டீருவேன்” என்றான். குஞ்சாளுக்கு அந்தப் பேச்சு அமிர்தமாக இனித்தது. மாரக்காள் காதைத் தீட்டிக் கொண்டு தான் வெளியே கிட்டப்பன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். நாச்சப்பன் ‘வறத்தளை’யை வாயில் திணித்துக் கொண்டே, “இந்தப் போத்தாளை நா ஊரிலிருந்து கொண்டாந்தது தெரியுமில்லே மாரக்கா?” என்றான். மற்றொரு சமயமாயிருந்தால் அவளும் ஆர்வத்தோடு புகையிலை ஆராய்ச்சிலே இறங்கி இருப்பாள். ‘பொல்லாத கிழவன் செரியான ஆளு!’ என்று அவள் மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தது பாவம் நாச்சப்பனுக்குத் தெரியாது! ***** திருமூர்த்தி மலையின் உச்சியைத் தொட்டுவிட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள், கிட்டப்பனும் குஞ்சாளும் அடர்ந்த செடி கொடி பாறைகளுக்கிடையே பக்கத்திலேயே ‘திடும் திடும்’ என எழுந்து ஒலிக்கும் அருவியின் அழகைப் பருகிக் கொண்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்கள் மேலே மேலே மேலேயே எங்கோ சிறகு பெற்று பறந்த வண்ணமிருந்தன! சொர்க்கத்திற்கு அவர்கள் சென்றதில்லை. சென்று வந்தவர்களிடம் கேட்டதுமில்லை! ஆனால் சொர்க்கம் எங்கே இருக்கிறதென்று யாராவது அச்சமயம் அவர்களிடம் கேட்டிருந்தால், ‘அது இதோ இங்கேதான் எங்களிடம் இருக்கிறது!’ என்று சொல்லி இருப்பார்கள். அவர்கள் இருவரும் திருமூர்த்தி மலைக்கு எப்படி வந்து சேர்ந்தார்கள்? சிங்கநல்லூர் மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியவர்கள் இங்கே என்ன பார்க்க வந்திருக்கிறார்கள்? அவர்கள் மட்டும்தானா வந்தார்கள். இன்னும் எத்தனை எத்தனையோ! எவ்வளவோ பேர்கள் புறப்பட்டார்கள். அவரவர்க்குப் பிரியமான இடங்களுக்கு அவரவர்கள் போயிருப்பார்கள். காலவரையறையின்றி ஆலை மூடிக் கிடக்கிறதென்றால் பஞ்சாலையில் பணிபுரிவோர் ‘அந்தக் கால’த்தை கோலாகலக் காலமாக ஆக்கிக் கொள்வதும் உண்டு. மில் ஓடிக் கொண்டிருந்தால், ‘ஆறே முக்கால் மணி அடிச்சாச்சா? மூணே முக்கால் சங்கு ஊதியாச்சா? ஆளுக வந்தாச்சு! உள்ளே போயாச்சு!’ என்ற பேச்சுத்தான், என்னேரமும் பரபரப்பும். ஆனால் ஆலையைக் கட்டிய ஆலை அதிபருக்கே, தொழிற் தகராறுகென்றே இயங்கும் தொழிற்சங்கத்திற்கே ‘மத்தியஸ்தமா, தீர்த்து வைக்கவா நான் இருக்கிறேன்’ என்று அமர்ந்திருக்கும் அதிகாரிக்கே, ஏன் அரசுக்கே ‘மூடிய மில் எப்போது திறக்கும்?’ என்கின்ற விவரம் தெரியாமல் இருக்கிறதே. இந்த அவல நிலையை என்ன பெயர் கொண்டு அழைப்பதென்றே தெரியவில்லை! நம்முடைய திறமையிலெல்லாம் ‘தனித் திறமை’ அதுதான் என்று தோன்றுகிறது. போகட்டும். அப்பாவித் தொழிலாளி என்ன செய்வான். ‘இப்பத்திக்கு மில்லு ஓடாதப்பா’ என்ற கருத்து விவரம் கணத்தில் புரிந்து விடும். அது விஷயத்தில் அவர்கள் கெட்டிக்காரர்கள்தான்! பழனிக்குப் போவார்கள். மருதமலைக்குப் போவார்கள். கையில் ‘வீச்’சுள்ளவர்கள் திருப்பதி வரை செல்வார்கள். நெடுநாட்கள் ‘சொந்த சுகத்தை’ மறந்திருந்தவர்கள் உள்ளூர் உறவினர்கள் இல்லங்களுக்குப் போய் வருவார்கள். கிட்டப்பனும் குஞ்சாளும் முதலில் பழனிக்குச் செல்லும் கோஷ்டியுடன் தான் பிரயாணத்தைத் தொடங்கினார்கள். மலையாள மங்கை, அங்கண்ணன் குடும்பம் விசயமங்கலத்தான் அண்ணன்மார், கரும்புக்கடை பலசரக்கு மண்டிப் பாட்டனின் தம்பி மகன், அடுத்த வீட்டுக்காரியின் அக்காள் மகள் - இத்தனை பேரும் கிளம்பும் அணியிலே இவர்களும் சேர்ந்து கொண்டார்கள். மாரக்காள் இதற்கெல்லாம் பின்வாங்குபவள் அல்ல. அதோடு குஞ்சாளிடத்தில் நம்பிக்கை! மகள் ‘தனிச்சு’ப் போய் ‘சேற்றை வாரி’ப் பூசிக் கொள்ளமாட்டாள் என்ற நம்பிக்கைதான். ‘அட, கெட்டுப் போறவளை ஊட்டுக்குள்ளே பூட்டி வெச்சா மட்டும் கெடாமே இருந்திருவாளாக்கும்? பாக்க வேண்டிய வயசிலே போய்ப் பாக்கறதைப் பாக்கட்டுமே, எனக்கு யாரு துணை நின்னு, கோலு புடிச்சு வழி காட்டுனாங்க!’ என்று தன்னையே சமாதானம் செய்து கொள்கிறவள். இன்னொரு முக்கியக் காரணம். ‘இந்தப் பொல்லாத கெழவன் முணுக்கு முணுக்கின்னு இருந்துகிட்டே முன்னூறு ஊட்டுக்குத் தீ வெச்சுடுவான் போல இருக்குதே!’ என்று ஆத்திரம் ஆத்திரமாக நாச்சப்பன் மீது வந்தது அவளுக்கு. காரணம் வருகிற வெள்ளிக்கிழமை ‘மாப்பிள்ளை பாக்க’ வருகிற தகவலைக் காங்கயத்துச் சைக்கிள் கடைக்காரன் சொலிவிட்டான். என்னமோ சாமான் வாங்கக் கோவைக்கு வந்திருந்தான். இரவு தங்கலுக்குப் பழக்கமானவர்கள் மாரக்காள் வீட்டுக்கு - இல்லை, நாச்சப்பன் வீடு என்று தானே பெயர் ஆகிக் கிடக்கிறது - வந்து தங்கினான். தவிர, கிட்டப்பன் அல்லவா மாப்பிள்ளைப் பையன்! சைக்கிள் கடைக்காரனுக்குத் தனிச் சொந்தம்! பக்கத்து ஊர்க்காரன் ஆச்சே! கீரனூரில் நாச்சப்பன் தங்கி இருந்த போதே அந்தத் திருமணத் தகவல் மாரக்காளை எட்டிவிட்டது. ஆனால் ஒரு விதத்தில் அவள் அழுத்தக்காரி! கிட்டப்பனிடம் கூட அதைச் சொல்லவில்லை. இப்போது பழனி பிரயாணத்தில் கிட்டப்பனோடு தன் மகளை அனுப்பி வைத்திருப்பதாக மற்றவர்களுக்கெதிரிலே ‘நாடகம்’ நடந்ததென்றாலும் - உள் மனத்தில் அங்கு நடந்து கொண்டிருந்த நாடகம் - அங்கண்ணன் குடும்பத்தோடு தன் மகள் போயிருக்கிறாள் என்ற திருப்தி - எண்ணம், மகிழ்ச்சி, இதற்கு அப்பாலே அவளுக்குள் நடந்து கொண்டிருந்த இன்னொரு ஒத்திகை! ‘வரட்டும் வெள்ளிக்கிழமை மாப்பிள்ளை பார்க்க வருகிறார்களா? நான் ஒண்ணும் அந்த மாப்பிள்ளைக்காக ‘நத்தி’க் கொண்டிருக்கவில்லை! இத்தனை ரகசியமாக என்னிடம் கூட சொல்லாமல் இதை ஏன் செய்ய வேண்டும்? கிட்டப்பனை நான் தலையிலா தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்? என் மகள் தான் ஆகட்டும், அந்தப் பையன் இல்லாவிட்டால் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன் என்று ஆட்டம் காட்டுகிறாளா? என்னை அவமானப் படுத்த - என் வீட்டிலேயே இத்தனை வருஷமாக உட்கார்ந்து கொண்டு இருந்து விட்டு - எப்படி ஐயா தோணிச்சு இந்த நெனப்பு என்று இடித்துக் கேட்கிறாப்போல - பேரூருக்கு அங்கண்ணனையும் குஞ்சாளையும் கூட்டிக் கொண்டு போய் ஒரு மணி நேரத்துக்குள்ளாகத் தாலி கட்டச் செய்கிறேனா இல்லையா பார்! அங்கண்ணன் குதி போட்டுக் கொண்டு கட்டிக்கப் போறான்’ - இவ்விதம் மாரக்காள் நினைவுகளுக்குத் தூண்டுதல் ஊட்டிக் கொண்டிருந்தாள். நாச்சப்பன் வறப்புகையிலைத் தளையை மென்று கொண்டே என்ன யோசிக்கிறான்? ‘நாம் கொஞ்சம் அடக்கமாத்தான் காரியம் பண்ணவேணும். கிட்டானுக்கு இந்த புள்ளைமேல் ஒரு கண் தான்! அதிலே தப்பில்லை. ஆனா நமக்கு, நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராது. உள்ளூர்லே பண்ணி வெச்சாத்தான் நாமிளும் ஊர் போய்ச் சேரலாம். பாக்க்றவங்களுக்கும் பெருமையா இருக்கும். நாச்சப்பன் செரியான ஆசாமின்னு உள்ளூர்க்காரருங்க சொல்ல வாண்டாமா? மலைவளத்தை அனுபவித்துக் கொண்டே குஞ்சாள் கேட்கிறாள். “மாமா! உங்க திட்டத்தைச் சொல்லுங்க. உங்க பிரசங்க பாணியிலே சொல்லுங்க” என்று குதித்தபடி - அவளுக்குப் பாதம் பூமியில் பட மறுக்கிறது! இளநிலா வேறு! அவள் இளந்தலை வேறு! உள்ளே ‘பிளந்து’ கொண்டிருக்கிறது! என்ன உணர்ச்சி! என்ன உணர்ச்சி! ஓகோ! அதுதான் காதலோ! ரொம்பச் சரி! “முந்தியும் சொல்லியிருக்கேன்” என்று கிட்டான் சொல்லிச் சிரிக்கிறான். இருவரும் அருகருகே நின்று கொண்டிருக்கிறார்கள். “நீ மனசு மாறமாட்டியே! அம்மா பேச்சு! எங்கப்பன் பேச்சு! கருப்பண்ணன் மத்தியஸ்தம்! தகராரு - இப்படி கோர்ட் வரை கொண்டு வந்துவிட மாட்டியே.” “சபாஷ்டா சிங்கம்!” அவன் தோளைப் பிடித்துக் குலுக்குகிறாள். கைவளை ‘கலகல’வென சப்திக்கிறது! கை வளை ஏன் நழுவுகிறது! கண்ணான கட்டழகன் - வருங்காலத் தொழிலதிபன் கிட்டத்திலே தானே நிற்கிறான். கிட்டப்பன் சொல்வான். எங்க பக்கம் வறண்ட பிரதேசம். போரிங் மெஷின் - அதுதான் பாதாளத்திலும் இருக்கும் தண்ணீரை மேலே கொண்டு வரும் யந்திரங்கள் செய்யப் போகிறேன். பாதாள் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வருவேன். வறண்ட நிலத்தில் பசுமை படரும். நம் வாழ்க்கையும் வளம் கொழிக்கும். நான் கற்றுக் கொண்ட தொழில், எனக்குத் தெரிந்த தொழில், இதைச் செய்வதே இனி முதல் வேலை!” “அப்படியானால் எடுங்கள்!” என்றாள். அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள். முன்கூட்டியே அவர்கள் செய்திருந்த முடிவு - வீட்டில் எண்ணாத எண்ணங்களை எண்ணிக் கொண்டிருக்கிற இரு உயிர்களுக்குத் தெரியாது! எப்படித் தெரியும்? கருப்பண்ணனுக்குத் தெரியும்! அவன் தொழிலாளி. நல்ல மேஸ்திரி. தன் மனங்கிடக்கையைக் கூறி அவன் சம்மதம் பெற்ற பின்னரே - இந்த வாழ்க்கைப் பிரயாணத்தை - ‘வாழ்க்கை ஒப்பந்த’ப் பிரயாணத்தைத் தொடங்கி இருக்கிறான் கிட்டப்பன். மெதுவாக நிதானமாக, பத்திரமாகத் தன் மடியிலிருந்து ‘அதை’ எடுத்தான். அவளுக்கு நாணம்! என்ன இருந்தாலும் அவள் இளம் கன்னி அல்லவா? நாணத்தின் வடிவாய் நளினமுடன் தன் அருகே நிற்கும் குஞ்சாளின் கழுத்தில் அழகிய அந்தத் தாலியைக் கட்டினான் கிட்டப்பன்! மஞ்சள் கயிறோடுதான். மங்கல நாணின்றித் தாலி ஏது? அவர்களுடைய உறுதிக்கு, திருமணத்திற்கு சாட்சியாகத் தன் அலைக்கரம் கொட்டி இசைத்தது அருவி. (முற்றும்) |