சுன்னாகம் குரு சி. மாணிக்கத்தியாகராஜ பண்டிதர்

இயற்றிய

வண்ணைச் சிலேடை வெண்பா

     இந்நூல் 41 வெண்பாக்களையுடையது. வண்ணை தையல்நாயகி சமேத வைத்தீஸ்வர நாதர் மேல் பாடப்பட்டது.

காப்பு

தும்பிமுகன் தம்பியுமை சோமேசன் வாணிகுரு
நம்பியுள முள்ளுருகி நாடுவேன் - அம்புவியில்
மன்னி விளங்கவுயர் வண்ணைச் சிலேடை வெண்பா
என்னிதயத் தேயிருத்தி யே.

நூல்

தேசுமட வார்பதத்தும் செவ்வீரர் தங்கரத்தும்
மாசிலம்பு சேருமெழில் வண்ணையே - பாசிலங்கு
தங்கமலைக் கையார் தகுமன்பி னார்தமனந்
தங்கமலைக் கையார் தலம். 1

வண்டூர் மரைக்கயத்தும் வாள்வேந்தர் போர்க்களத்தும்
மண்டூகஞ் சேருமெழில் வண்ணையே - தொண்டூரு
மஞ்சக் கரத்தா னனுதினமுந் தோத்திரிக்கு
மஞ்சக் கரத்தா னகம். 2

காசணிமின்னார்முகத்துங் கம்மாளர் தங்கரத்தும்
மாசுந் தரந்தோன்றும் வண்ணையே - நாசஞ்செய்
அக்கரவைப் பூண்டா ரறியாப் பெருமையினார்
அக்கரவைப் பூண்டா ரகம். 3

விண்டுவுறை பாற்கடலும் வேதனுறை தாமரையும்
வண்டரங்கங் காட்டுமெழில் வண்ணையே - கொண்டவிடைப்
பாமாலை யானார் பகர்பண் டிதர்பாடும்
பாமாலை யானார் பதி. 4

ஆடுங் கொடித்தெருவு மையனருண் மாதவனும்
மாடங் குலவுமெழில் வண்ணையே - தேடுந்தம்
பாதங்கைக் கொண்டார் பழிநீக்கி யேயரியம்
பாதங்கைக் கொண்டார் பதி. 5

சூதோரா நாயகர் தூயமணி வாயில்கள்
மாதோ ரணங்கூடு வண்ணையே - தீதார
அஞ்சந் தனத்தா ரணிமதுரை வேட்டணிந்த
அஞ்சந் தனத்தா ரகம். 6

நயக்கப் பெறுபாவும் நண்ணு மடவாரும்
மயக்கவணி கூடுமெழில் வண்ணை - வியக்கவரு
ளாறுதலை வைத்தா ரடைந்தார்க் கமுதுநிக
ராறுதலை வைத்தா ரகம். 7

ஒதரிய சிந்துரமும் ஒப்பிலரு ளீகையரும்
மாதருநற் கோடுகொளும் வண்ணயே - யாதரத்துக்
கஞ்சிதலை யுற்றா ரரும்பாவ நீக்குதற்கா
யஞ்சுதலை யுற்றா ரகம். 8

தேனார் பொழிலிடத்துந் தெள்ளறிவி லாரிடத்தும்
மானங் குறையுமெழில் வண்ணையே - வானங்கொள்
ஆலமருந் தண்ண லரிபுரத்தை வாட்டிவரும்
ஆலமருந் தண்ண லகம். 9

துய்யபெரி யோர்பதத்துந் தூயமத னார்கரத்தும்
வையம் பணியுமெழில் வண்ணையே - செய்யபங்க
சங்குவளை கொண்டார் தகுமுகங்கண்ணார்க்கணியச்
சங்குவளை கொண்டார் தலம். 10

காப்பணிந்த செய்யுங் கணிகையரை நட்டுவனும்
மாப்பணிலங் காட்டுமெழில் வண்ணயே - காப்பொலியும்
அம்மா வுரிய னழகுபெற வாமத்தெம்
அம்மா வுரியா னகம். 11

தோமிலணி யார்முத்துந் தூய மலர்க்கொத்தும்
மாமுலைமீ தோங்குமெழில் வண்ணையே - கோமனத்துச்
சங்கை யுடையார் தமக்கறிய வொண்ணாத
சங்கை யுடையார் தலம். 12

மாதவஞ்செய் மேலோரும் மன்னுமுயர் மான்மார்பும்
மாதுறக்கம் பூணுமெழில் வண்ணையே - சீதரஞ்சூழ்
பாரிலங்கை யுற்றான் பகர்பா தலஞ்செலுத்திப்
பாரிலங்கை யுற்றான் பதி. 13

மெச்சுமனை யுள்ளிடத்தும் மேவுபங்க யத்தடத்தும்
மச்சங் குலவுமெழில் வண்ணையே - இச்சைசெறி
அக்கூற்றார்க் கொன்றா ரடிமைமார்க் கண்டனுக்காய்
அக்கூற்றார்க் கொன்றா ரகம். 14

கட்டுரைசொல் தட்டானுங் காரோங்கு காவகமும்
மட்டப் பணிசெய்யும் வண்ணையே - முட்டுபயம்
போகத் திருந்தார் புரமெரித்தார் தேவியொடும்
போகத் திருந்தார் புரம். 15

ஓதுகங்கை மாநதியு மொள்ளொளிசேர் சாமரையும்
மாதரங்கங் காட்டுமெழில் வண்ணையே - ஆதரஞ்சேர்
போகமனம் வைத்தார் புலத்தினுறார் போதநெஞ்சம்
போகமனம் வைத்தார் புரி. 16

பேணிக்கொ ளாலைகளும் பேசுமன்னர் மாமுடியும்
மாணிக்கங் காட்டுமெழில் வண்ணையே - வாணிக்குத்
துண்டங் கெடுத்தார் துலங்குமொளி யோங்குபிறை
துண்டங் கெடுத்தார் துறை. 17

மின்னனையார் நாட்டியமும் மேதகைய மாமணியும்
மன்னரங்கஞ் சேருமெழில் வண்ணையே - பன்னரிய
மாதங்கங் கொண்டார் மலையரசன் பாலுதித்த
மாதங்கங் கொண்டார் மனை. 18

தண்டலையார் பூந்தாதுந் தக்கசெழிப் பார்நிலமும்
வண்டுவரை காட்டுமெழில் வண்ணையே - பண்டயனங்
கோலத் தலையார் குறிக்கறியார் செஞ்சடையில்
கோலத் தலையார் குடி. 19

ஓதரிய காவகத்து மோங்குபுல வோரகத்தும்
வாதங் குலவுமெழில் வண்ணையே - வேதனரி
பொன்னக ரத்தான் புரிதவத்துக் காரருள்செய்
பொன்னக ரத்தான் புரி. 20

சுந்தரஞ்சேர் வீதிகளுந் தூயபெரு வேள்விகளும்
மந்திரங்க ளோங்குமெழில் வண்ணையே - சந்திரனைத்
தங்கமுடி வைத்தார் தனிமதுரைப் பேரரசாய்த்
தங்கமுடி வைத்தார் தலம். 21

கட்டிலங்கு வாவிகளும் காவிலங்கு வண்டுகளும்
மட்டங் கடக்குமெழில் வண்ணையே - கெட்டவரைக்
கண்டங் கறுத்தார் கதித்துவரு மாலமுண்டு
கண்டங் கறுத்தார் கதி. 22

திடக்குணத்தி னார்மனமுஞ் செல்வத் தெருவும்
மடக்கம் பயிலுமெழில் வண்ணையே - நடக்கமலத்
தாளாரை யாளார் தலைவணங்கிப் போற்றிசெய்து
தாழாரை யாளார் தலம். 23

புண்ணியமார் மாமறுகும் போதுணவா ராவணமும்
பண்ணியங்க ளோங்கும் பணிவண்ணை - விண்ணவர்க்காய்
அங்குசத்தைக் கொண்டா ரரியதந்தை பன்னியர்பால்
அங்குசத்தைக் கொண்டா ரகம். 24

எண்ணரிய பாவினத்து மேத்தரிய சித்திரத்தும்
வண்ணம் பயிலுமெழில் வண்ணையே - கண்ணடங்கா
மின்னு முடித்தலையார் வேத முடித்தலையார்
மின்னு முடித்தலையார் வீடு. 25

பன்னரிய மாமடத்தும் பங்கயமா ருந்தடத்தும்
அன்னம் பயிலு மணிவண்ணை - துன்னுபவத்
தஞ்சு தரத்தார்க் கருளமுதம் பாலிக்கும்
அஞ்சு தரத்தா ரகம். 26

சீலமல்லர் திண்புயங்கள் செல்வருறை வாயில்கள்
வாலிபத்தைக் காட்டுமெழில் வண்ணையே - ஆலத்துக்
கோடுதலைக் கொண்டார்க் குணரவுறார் பிச்சைக்கா
யோடுதலைக் கொண்டார்வா ழூர். 27

முன்னரிய யாழிடத்தும் மொய்த்தவரி வில்லிடத்தும்
மன்னரம்பு பூட்டுமெழில் வண்ணையே - பன்னரிய
மானத்தங் கொண்டார் மலையரசன் பாலுதித்த
மானத்தங் கொண்டார் மனை. 28

மல்லிகைசேர் முல்லையிலும் மாமன்ன ரெல்லையிலும்
வல்லியங்க ளார்க்குமெழில் வண்ணையே - வெல்லரிய
மாலையணி கொண்டார் மனத்துடையார் செங்கழுநீர்
மாலையணி கொண்டார் மனை. 29

அண்டத் துறுபணியும் அன்பர் செயும்பணியும்
மண்டலங்கொண் டாடவளர் வண்ணையே - விண்டரிய
மாநாகம் பூண்டார் வளர்புவியெ லாமீன்ற
மானாகம் பூண்டார் மனை. 30

சிந்தைநிறை பூசையிலும் செங்கமலப் பூவினிலும்
வந்தனங்க ளேறுமெழில் வண்ணையே - முந்தமன
மாசினத்தார்க் கொன்னார் மருவுமெயில் மூன்றாரை
மாசினத்தாற் கொன்றார் மனை. 31

ஓதுபுவி கண்டோரும் ஒப்பில்பெண் கொண்டோரும்
மாதம் பரநாடும் வண்ணையே நாதமலி
வானத் தலைத்தலையார் வஞ்சமறுத் தார்தலையார்
வானத் தலைத்தலையார் வாழ்வு. 32

தாவில் நிறைகுடத்தும் தக்க பொருளிடத்தும்
மாவிலைமே லேறுமெழில் வண்ணையே ஆவலுறு
தாளத் தனத்தர் தனத்தினினம் காட்டுகின்ற
தாளத் தனத்தர் தலம். 33

பூவிலங்கு காவகமும் பொற்பார் கணிகையரும்
மாவிலங்கை காட்டுமெழில் வண்ணையே - பூவிலங்கு
வேதனரி கண்டறியார் மேய விலைப்பிரியா
வேதநரி கண்டறிவார் வீடு. 34

அடர்த்திகொண்ட நீடெருவு மாதரநல் லாரும்
மடத்தினழ கோங்க வளர்வண்ணை படத்திலுயர்
நாகங்கொண் டார்பெருமை நண்ணு மரியவெள்ளி
நாகங்கொண் டார்சேர் நகர். 35

வேளனைய வீரர்களும் வித்தகமார் பண்டிதரும்
வாளங்கை யாளுமெழில் வண்ணையே - நாளுந்தான்
நங்கைதலைக் கொண்டால் நயந்தருளைப் பாலிக்கும்
நங்கைதலைக் கொண்டான் நகர். 36

தாதுறுநந் தாவனமுந் தக்கதும்பி அங்குகையும்
மாதுளையைக் காட்டுமெழில் வண்ணையே - கோதுவளர்
ஆசையுடையா ரடையாப் பெருமையினார்
ஆசையுடையா ரகம். 37

மோகச்செந் தாமரையும் மொய்குறிஞ் சித்தரையும்
மாகமலை காட்டுமெழில் வண்ணையே - நாகமே
நாணாகக் கொண்டார் நவில்முனிவர் பன்னியர்பால்
நாணாகக் கொண்டார் நகர். 38

பானலார் கண்ணாரும் பாத்தேர் புலவோரும்
பானலங்கொண் டாடும் பணிவண்ணை - யேனற்
புனத்தணிவான் கொண்டாட் புணர்வேலை யீன்ற
புனத்தணிவான் கொண்டான் புகல். 39

கான்மீது பாய்நீருங் காரேறு மாமுகிலும்
வான்மீனைக் காட்டுமெழில் வண்ணையே - ஆன்மீதில்
ஏறுமருளாளர் எவரையுங்காப் பாற்றுதற்காய்
ஏறுமரு ளாள ரிடம். 40

கொண்டலள கத்தினரும் கோவரியும் பூமேவு
வண்டலையே மேவுமெழில் வண்ணையே - தண்டலையார்
பூவை முடியார் புகழ்முடியார் கைதைதரு
பூவை முடியார் புரி. 41

வண்ணைச் சிலேடை வெண்பா முற்றிற்று