உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பாகம் ஒன்று 1. லெப்டினன்ட் செல்லையா அக்கரையிலிருந்து வந்த நீராவிப் படகு பினாங் துறைமுகத்தை அடைந்த போது, மணி 3:36. கதிரவனின் ஒளிபட்டு கடல் தகதகவென்று மின்னிக் கொண்டிருந்தது. படகிலிருந்து பாலத்தில் ஏறிய பிரயாணிகள் ஒருவர் பின் ஒருவராய், வரிசையாகச் சாலையை நோக்கி நகர்ந்தார்கள். இருபுறமும் கம்பிக் கிராதியை ஒட்டி நின்ற கெம்பித்தாய் சிப்பாய்களின் கண்கள் பிரயாணிகளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. லெப்டினன்ட் செல்லையா பாலத்தில் ஏறி, பிரயாணிகள் வரிசையில் மெதுவாக நடந்தான். இடது கையில் தோல் பை; வலது கையில் சிகரெட் புகைந்தது. பச்சை பைஜாமாவும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்த சீனப் பெண்ணின் ஒரு கையில் பிரம்புக் கூடையும், மறு கையில் துணிப்பையும் இருந்தன. அவளுக்குப் பின்னே சென்ற மலாய்க்காரி, குதிங்கால் செருப்புகளின் மீது அன்னநடை நடந்தாள். அடுத்துத் தமிழர், சீனர், மலாய்க்காரர்களும், இரண்டொரு சீக்கியரும் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். வலப்புறம் நின்ற கெம்பித்தாய் லெப்டினன்ட் சில விநாடிகள் மலாய்க்காரி மீது பார்வையைச் செலுத்தினான். மஞ்சள் முகத்தில் மின்னிய சிறு கண்கள் மலர்ந்தன. துருத்தியிலிருந்து வரும் காற்றோசையுடன் வாய் விரிந்தது. அன்னநடைக்காரியின் வர்ணம் பூசிய உதடுகள் கோணி வளைந்தன; தோள்கள் நெளிந்து அசைந்தன. கால்களை இடம் பெயர்ந்த ஜப்பானியன், கைகளைப் பிசைந்து கொண்டிருந்தான். பொம்மை முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது. பார்வை இமைப்பொழுதில் மாறி, கூடைக்காரியின் மீது விழுந்தது. “உரேஎஎ!” லெப்டினன்டின் உறுமல் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த பிரயாணிகளைக் குலுக்கிற்று. வலக்கை, பிரம்புக்கூடை வைத்திருந்த சீனப் பெண்ணைச் சுட்டி நின்றது. செல்லையா, வரிசையிலிருந்து கொஞ்சம் விலகி, கூடைக்காரியை உற்றுப் பார்த்தான். 20, 25 வயதிருக்கும். கட்டுருட்டான உடல். நல்ல அழகி... குள்ளப்பயலுக்கு உண்மையிலேயே சந்தேகமா, அல்லது... ம்ம். இருபுறமும் நின்ற சிப்பாய்கள் பாய்ந்தோடிப் போய் அந்த சீனப் பெண்ணை இழுத்து வந்தார்கள். லெப்டினன்ட் ஜப்பானிய மொழியில் ஏதோ சொன்னான். அவளை வடகோடியில் இடப்புறம் இருந்து அறைக்கு இழுத்துச் சென்றனர். அவள் முகத்தில் அச்சமோ, கவலையோ தென்படவில்லை. இப்படி நேரலாமென்று ஒவ்வொரு விநாடியும் எதிர்பார்த்தவள் போல் தோன்றியது. ஜப்பானிய லெப்டினன்ட் கனைத்துக் கொண்டு பிரயாணிகள் பக்கம் திரும்பினான். மற்றவர்கள் வடக்கு நோக்கி நடக்கலாமென்று அவனுடைய வலக்கை சைகை காட்டியது. பிரயாணிகள் வரிசையாக நடக்கலானார்கள். ஐ.என்.ஏ. லெப்டினன்ட் செல்லையாவின் வளர்ந்து நிமிர்ந்த உருவம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. முன்னால் சென்றோர் கெம்பித்தாய் அதிகாரியை நெருங்கியதும், பல வகைகளில் வணக்கம் தெரிவித்தார்கள். சீனர்கள் இடுப்புவரை குனிந்தனர். மலாய்க்காரர்கள் கையைத் தூக்கி வந்தனை செய்தார்கள். தமிழர்கள் பட்டும் படாமல் வணக்கம் தெரிவித்தனர். செல்லையா நெருங்கினான். ஜப்பானிய லெப்டினன்டின் உடல் நிமிர்ந்தது. இருவர் கண்களும் சந்தித்தன. “இந்தோ?” “ஹை, இந்தோ கொக்கு மின் குன் தெசு.” ஜப்பானியன் செல்லையாவின் தோளைப் பார்த்தான். லெப்டினன்டின் தலை லேசாகக் குனிந்தது. தமிழ் லெப்டினன்ட் தலையை அசைத்துவிட்டு நகர்ந்தான். பின்னால் வந்த தமிழர்கள் பெருமிதத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பாலத்தின் வாசலில் தமிழ் முஸ்லிம் ஒருவருடைய காப்பிக் கடை இருந்தது. முன்னால், ஜப்பானிய மாலுமிகள் சிலர் நின்றார்கள். அவர்களை ஒட்டிக் கொண்டு, வழக்கமாகத் துறைமுகத்தைச் சுற்றித் திரியும் உதிரிகள் கூட்டம் நடமாடியது. இடது பக்கம் சைக்கிள்ரிக்ஷா வண்டிகள் வரிசையாக நின்றன. படகில் வந்த பிரயாணிகள் கால் நடையாகவும் ரிக்ஷாக்களிலும் நகருக்குள் செல்லலானார்கள். செட்டித் தெருப் பக்கம் போய்ப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் செல்லையா மனதில் எழுந்தது. மணியைப் பார்த்தான். 4:10 நேரமில்லை. ரிக்ஷாவில் ஏறி, ‘ஆறு முச்சந்தி’க்குக் கிளம்பினான். வெறிச்சென்று கிடந்த தெருக்களின் வழியாக வண்டி விரைந்தது. இரண்டொரு லாரிகளைத் தவிர வேறு மோட்டார் வண்டிகளே காணப்படவில்லை. ரிக்ஷாக்கள் மட்டும் எப்போதும் போல் எங்கும் பரவித் தென்பட்டன. டிராம் நின்றுவிட்டதை முன்பே கேள்விப்பட்டிருந்தான். செட்டித் தெரு ஆ.சி. வயி. வயிரமுத்துப்பிள்ளை லேவாதேவிக் கடை அடுத்தாள் செல்லையா, முதலாளியின் சொல்லை மீறி நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதற்குள் எவ்வளவு மாற்றம்! தென்கடலில் அமெரிக்கக் கப்பல் - விமானப் படைகளின் பலம் மேலோங்கிவிட்டது. ஜெனரல் தெராவுச்சியின் மின்னல் பாய்ச்சல்களும் அட்மிரல் யாமமோத்தாவின் சம்மட்டி அடிகளும் இப்போது பழங் கதைகள். ஜெனரல் மெக்கார்தரின் போரணிகள் மார்ஷல் - கரோலின் தீவுக் கூட்டங்களினூடே தாவிக் கடந்து ஜப்பானை அணுகிக் கொண்டிருக்கின்றன. பர்மா முகப்பிலோ, மவுண்ட்பேட்டனின் சேனை மெதுவாய் ஆனால் உறுதியாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. வண்டி பினாங் ரோடில் திரும்பியது. செல்லையா இருபுறமும் மாறி மாறிப் பார்த்தவாறு சாய்ந்திருந்தான். ஊர் சுற்றுவதில் நாட்டம் கொண்ட பினாங் மக்கள் வழக்கம் போல் ஆடி அசைந்து ஊர்ந்து கொண்டிருந்தார்கள். யாரும் பட்டினியால் வாடியதாகத் தெரியவில்லை. ஆனால், நெடுகிலும் கிழிந்த சட்டைகள் தென்பட்டன. போருக்கு முந்திய பினாங் நகரில் காண முடியாத காட்சிகளில் இதுவும் ஒன்று. எதிரே வரும் ஆட்கள், வாகனங்கள் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்படாமல், ரிக்ஷாவைக் கடுவிரைவாய்ச் செலுத்திக் கொண்டிருந்தான் சீனச் சாரதி. இடப்புறத்தில் வின்சர் கூத்து மேடையின் சிமிந்தி நிற உருவம் தோன்றி மறைந்தது. செல்லையா திரும்பிப் பார்த்தான். நாள் தவறினாலும் வின்சர் கொட்டகைக்குப் போகத் தவறியதுண்டா... சுப்புலட்சுமியின் ‘சகுந்தலை’ திரையிடப்பட்ட முதல்நாள் என்ன கூட்டம், என்ன பரபரப்பு...! எதிரே வந்த ரிக்ஷாவில் ராணுவ உடையில் இருந்தவர் வந்தனை செய்தார். “ஜே ஹிந்த்!” ‘யாரது, நினைவில்லையே, மாரியப்பனாக இருக்குமோ?’ மெய்ஜி ரெஸ்டாரன்ட் ரேடியோ ஜப்பானியப் பாடல் ஒன்றை முழங்கிக் கொண்டிருந்தது. ‘இஷினாயோ... இஷினாயோ... இயியியி இஷினாயோ...’ குடிபோதையில் தள்ளாடிய ராணுவ அதிகாரிகள் படிக்கட்டில் நின்று இரைந்து கொண்டிருந்தனர். நடைபாதையில் சிலர் தடுமாறி நடந்தார்கள். சிங்கப்பூர் எம்போரியத்தின் அருகே மேனன் கிளினிக் நர்ஸ் சுந்தரி சென்றாள். தகுந்த வளைவு நெளிவுகளுடன் கூடிய வாட்டசாட்டமான பின்புறம் தெரிந்தது. பிறகு வலது பக்கமும் முன்புறமும் தெரிந்தன. வயதாக ஆக இவளுக்கு மட்டும் அழகு கூடிக்கொண்டே போகும் போல் இருக்கிறது. இரண்டு வருஷத்துக்கு முன்னரே ஐந்து பிள்ளைகள்... மரகதம்... மரகதத்தின் நினைவு தோன்றிச் செல்லையாவின் மனதை அழுத்திற்று. பார்த்து வெகு காலமாகி விட்டதே. இப்போது பார்த்தால் எப்படி இருக்கும்... உடல் புல்லரித்தது. சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான். விலகாமல் முன்னே சென்ற வண்டிக்காரர்களையும் குறுக்கிட்ட ஆட்களையும் சரமாரியாக ஏசியபடி, ரிக்ஷாக்காரன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். ஆறு தெருக்கள் கூடும் ‘ஆறு முச்சந்தி’யில் பல்லாண்டுகளாகப் புகழ்பெற்று விளங்கும் சிக்கந்தர் காப்பிக் கடைக்கு முன்னே போய் ரிக்ஷா நின்றது. சீனர், தமிழர், மலாய்க்காரர்கள் மொய்த்திருந்த மேசைகளினிடையே, இருபுறமும் நோட்டமிட்டபடி நடந்த செல்லையா, பின் அறைக்குள் நுழைந்து அமர்ந்தாள். அருகே வந்து குனிந்த பணியாளிடம், தேவையான பலகாரங்களின் பட்டியல் தெரிவிக்கப்பட்டது. இடியாப்பத்தையும், முர்த்தாபா ரொட்டிகளையும் வயிறு நிறைய அடைத்த பின், காப்பி குடித்து விட்டுக் கிளம்பினான். வாசலருகே, வலப்புறத்தில் மீகோரெங் தின்று கொண்டிருந்த இரண்டு மலாய்க்காரிகள், ஒரே சமயத்தில் தோளைக் குலுக்கிக் கண்ணைச் சுழற்றினார்கள். “ஆ, யாரோ இந்த அழகன்!” பச்சை கெமேஜோ அணிந்தவளின் இனிய மலாய் நாதம் குமுகுமுத்தது. திரும்பிப் பார்க்காமல் நடந்தவன், மீண்டும் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டு, லெப்டினன்ட் ‘இரட்டைக் கை’ மாணிக்கம் அமர்த்தியிருந்த வீட்டை நோக்கிப் புறப்பட்டான். கதவைத் திறந்த முனியாண்டி, முகத்தில் மகிழ்ச்சி பொங்க வரவேற்றான். “வாங்கண்ணே, இப்பத்தான் வாரிங்யளா, நல்லாயிருக்கியகள்ள? அவுக ரெண்டு பேரும் காலையில் போனவுக; எப்படியும் ராத்திரிக்குள்ள வந்திருவாக! இருங்கண்ணே, கோப்பி போட்டுத் தாரேன்.” இடக்கையை இடுப்பில் வைத்தபடி தாழ்வாரத்தில் நின்ற செல்லையா, வலக்கையால் நெற்றியைத் தடவினான். முதலாளி வீட்டுக்குப் போய்த் தலையைக் காட்டிவிட்டு வருவது நல்லது. இவ்வளவு தூரம் வந்துவிட்டுப் போகாமல் இருப்பது முறையல்ல. எது எப்படி இருந்தாலும், மரகதத்தின் முகத்தையாவது பார்த்து விட்டு வரலாம். கொஞ்சம் மன அமைதியாவது ஏற்படும். காமாட்சியம்மாளும் பெற்ற தாய் போல... “கோப்பி வேண்டாம். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். அவர்கள் வந்ததும் டத்தோ கிராமட் ரோடுக்குப் போயிருக்கிறேன் என்று சொல். ராத்திரி இங்கேதான் சாப்பாடு! போ, வண்டி கொண்டு வா.” “ஆகட்டுமண்ணே!” முனியாண்டி வெளியே ஓடினான். கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|