உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பாகம் ஒன்று 10. சிம்பாங் தீகா பாலம் நள்ளிரவு கழிந்து விட்டது. தமிழ்ப் படை வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சாலையில் பட்ட காலடி இருமருங்குமிருந்த இருண்ட காட்டில் எதிரொலித்தது. முன் அணியில் செல்லையாவும் ராஜதுரையும், பின் அணியில் அப்துல்காதரும் நாச்சியப்பனும் தலைமை தாங்கி நடந்தார்கள். முருகேசனின் வேவுக்காரர்கள் சுமார் ஒரு மைல் முன்னதாகப் போய்க் கொண்டிருந்தனர். முகத்தில் அரும்பிய வேர்வையைக் கைக்குட்டையால் துடைத்து விட்டு, சிகரெட் பற்ற வைக்க நெருப்புப் பெட்டியை எடுத்தான் செல்லையா. சுதாரித்துக் கொண்டு சிகரெட்டையும் நெருப்புப் பெட்டியையும் பைக்குள் திணித்தவாறு திரும்பிப் பார்த்தான். போர்வீரர் வரிசையில் கங்கு தென்படவில்லை. அணிஅணியாக ஒரே சீராய் வழி நடந்து கொண்டிருந்தது படை. பழையபடி பார்வையை முன்னே திருப்பினான். கால்கள் நடந்தன. மனத்திரையில் பழைய நிகழ்ச்சிகள் பறந்தோடின. செவல்பட்டி நல்ல தண்ணீர் ஊருணியில் பெண்கள் ஒருவர் இருவராய்த் தண்ணீர் மொண்டுகொண்டு, இடுப்பில் ஒரு குடமும் தலையில் ஒரு குடமுமாய், கழுத்தை ஒரு பக்கம் மடக்கிச் சாய்த்துப் பேசியவாறு ஆடி அசைந்து சென்றார்கள். வடகரைப் பிள்ளையார் கோயில் அரச மரத்தடியில் ‘சைகோன்’ செட்டியாரின் தேவார முழக்கம் கேட்கிறது. “அரியானை அந்தணர்தம் சிந்தையானை, அருமறையிசைத்தானை அணுவை...” பையன்கள் பம்பரம் விளையாடினர். “டேய்! பளிக்கொடத்துக்குப் போகாமல் பம்பரமா விளையாடுற? இருயிரு... உங்க அப்புகிட்டச் சொல்லி முதுகுத்தோலை உரிக்யச் சொறென்” - தாயார், கூரை வேய்ந்த வீட்டுக்கு முன்னே புராதனமான இலுப்பை மரம் தெரிகிறது. கொல்லையில் குப்பை மேட்டைக் கிளறும் கோழிகள். கொக்... கொக்... கொக்... “யம்மா! இங்கெ பாரம்மா, இந்தாயிது சடையப் பிடிச்சு இழுக்குது.” மரகதம் சிணுங்கினாள். வாய்விட்டுச் சிரித்தவன், திடுக்கிட்டுத் திரும்பினான். ராஜதுரை தன்பாட்டில் ஏதோ எண்ணத்துடன் நடந்து கொண்டிருந்தான். பார்வை மறுபடியும் முன்னே சென்றது. அந்தக்காலம் திரும்புமா, கவலையறியா மனதுடன் ஊருணிக் கரையில் பம்பரம் குத்தி விளையாட முடியுமா? மரகதத்தின் பின்னலைப் பிடித்து இழுக்க இயலுமா...? பாவாடையுடன் குதித்தாடின செவல்பட்டிச் சிறுமிக்கும், அன்று பினாங்கில் கண்ட மரகதத்துக்கும் எவ்வளவு வேற்றுமை... எதிரே ஆட்கள் விரைந்து வருவது புலனாகிற்று. ராஜதுரை எச்சரிக்கைக் குரல் கொடுத்தான். வடக்கிலிருந்து வந்தோர் நெருங்கினார்கள். முருகேசன் சொன்னான்: “சிம்பாங் தீகா பாலத்தில் ஜப்பானியர் கூட்டம். சுமார் 200 பேர். காவலே இல்லை. வண்டி, கூடாரம் எதையும் காணோம். இருபுறமும் அடர்ந்த காடு. பாலத்தில் விசைப் பீரங்கிகள் இருக்கலாம். சாலையை ஒட்டி உட்கார்ந்தும் படுத்தும் இருக்கிறார்கள். தாக்குதல் சுலபம்.” ‘ம்ம், குள்ளப் பயல்களா! அங்கே என்ன செய்கிறார்கள்?’ முருகேசனின் தலைக்கு மேல் பார்த்தவாறு தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். அப்துல் காதரும் மற்ற அதிகாரிகளும் முன்னே வந்தனர். செல்லையா அவர்களுடன் கலந்து நிலைமையை ஆராய்ந்தான். ஆறு ஆழமாக இருப்பதால் பாலத்தைக் கடைசி வரை பாதுகாப்பதென்று ஜப்பானியர் முடிவு செய்திருக்கலாம்... ஒரு வேளை, எப்படியும் சண்டையில் செத்து மடிவதென்று உறுதி பூண்ட காமிகாசே அணியாக இருக்குமோ...? ஜப்பானிய விமானத்தில் சென்ற நேதாஜி இறந்தது முதல் செல்லையாவுக்கு ஜப்பானியர் மீது தீராத சினம் ஏற்பட்டிருந்தது. என்றாவது, எங்காவது, எப்படியாவது அவர்களுடன் மோதிப் பழி தீர்க்க வேண்டுமென உள்மனம் கூவிக் கொண்டிருந்தது. மாணிக்கமும் பிறரும் எவ்வாறு கருதினாலும், நேதாஜியை ஜப்பானியர் திட்டமிட்டுக் கொன்று விட்டார்கள் என்பதே அவன் முடிவு. “இரண்டிலொன்றுதான். வழிவிட்டால் வம்பில்லை. தடுத்தால் சண்டை.” பாலத்தின் சுற்றுப்புறம் பற்றி விவரமாகக் கேட்டறிந்த பின், போர்த் திட்டத்தைச் செல்லையா அறிவித்தான். பாலத்தை நெருங்கியதும், ஓரளவு ஜப்பான் மொழி தெரிந்த ராஜதுரையும் பொறுக்கி எடுத்த ஐந்து வீரர்களும் முன்னால் எட்டி நடந்தனர். அதற்கு சற்று முன்னரே, குறிப்பிட்ட அணிகளைச் சேர்ந்தோர் சாலையின் இருபுறமும் காட்டினுள் நுழைந்து சென்றிருந்தார்கள். மற்றவர்கள் சிதறி நின்றனர். கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|