உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பாகம் இரண்டு 1. யூனியன் ஜாக் செப்டம்பர் முதல் தேதி காலையில் பிரிட்டிஷார் பினாங் நகருக்குத் திரும்பினார்கள். சீனர், தமிழர், மலாயர், யுரேஷியர் அடங்கிய கூட்டம் துறைமுகத்தில் குழுமி நின்று வரவேற்றது. அட்மிரல் வாக்கர் தலைமையில் வந்த டாங்க் அணியின் போர்க்கப்பல்கள் பீரங்கி முழக்கத்துக்குச் சித்தமாய் நின்றன; சண்டை விமானங்கள் வட்டமிட்டுப் பறந்தன. கடற்படைத் துருப்புகள் கரையிறங்கி, ஈ அண்ட் ஓ ஹோட்டலை நோக்கி நடந்தார்கள். ஈ அண்டு ஓ பினாங் வட்டகை ஜப்பானியப் படைகளின் அடிபணிவைப் பெறுவதற்கு முன்னால், பினாங் நகராட்சி மன்றத்தாரின் இசை வாத்தியக் குழு, இசை பரப்பிச் சென்றது. ஜீப் வண்டிகளிலும் லாரிகளிலும் பிரிட்டிஷ் ராணுவத்தினர் ஊர்வலம் சென்றார்கள். இருபுறமும், ஏந்திய துப்பாக்கிகளுடன் ஜப்பானியச் சிப்பாய்கள் காவல் நின்றனர். நேர்ப் பார்வை மாறாத சிலைகளைப் போல், வெற்றிக் காலத்தில் எக்காளம் ஊதின. இந்த வீரர்கள் தோல்வி நாளில் ஒப்பாரி வைக்கவில்லை. வேடிக்கை பார்த்தோர் சிலர் ஜப்பானியச் ‘சிலை’களைப் பார்த்து எள்ளி நகையாடி ஏசினார்கள். பிரிட்டிஷ் துருப்புகள் அவ்வாறு செய்யவில்லை. அதுமட்டுமல்ல; ஜப்பானியரின் முகத்தில் விழிக்க அவர்கள் வெட்கப்படுவது போலவும் தெரிந்தது. ஜப்பானியத் தளபதி பிரிட்டிஷ் படையிடம் முறைப்படி அடி பணிந்தார். உதய சூரியன் கொடி இறக்கப்பட்டு, யூனியன் ஜாக் மீண்டும் பறக்கலாயிற்று. “கடவுள் மன்னரைக் காப்பாராக...” பாடல் அலறியது. வெற்றி வீரர்களுக்கு, முன் வழக்கம் போல், பினாங் மக்கள் சார்பில் வரவேற்பு இதழ்கள் படித்துக் கொடுக்கப்பட்டன. பிரிட்டிஷ் மன்னருக்கும் அவருடைய கோடாத ஆட்சிக்கும், அசையாத - அசைக்க முடியாத விசுவாசம் தெரிவித்துக் கொள்ளப்பட்டது. 1941 டிசம்பரில் வாகை மாலையுடன் வந்த ஜப்பானியருக்கும் ஏறக்குறைய இதே போன்ற வரவேற்புதான். அன்று கைதட்டி ‘பன்சாய்’ ஆரவாரம் செய்தவர்களில் பெரும்பாலோர் இந்தக் கூட்டத்திலும் இருந்தார்கள். அதே முக மலர்ச்சி, அதே ஆர்வம், அதே விசுவாச அறிவிப்பு! அன்று தென்னோ ஹெய்க்கா; இன்று ஜியார்ஜ் மன்னர்! அன்று யாமஷித்தா; இன்று மவுண்ட்பேட்டன்! நெடுங்காலமாக மறைந்து போன சீமைச் சாராயப் புட்டிகளும் சிகரெட் பெட்டிகளும் பிரிட்டிஷாருடன் வந்தன. அவற்றை வாங்கி விற்கச் சீனச் சிறுவர் படையொன்று திரண்டது. வர்ணம் பூசிய வேசைகள் பின் தொடர்ந்தனர். ‘பழி வாங்கும் படலம்’ பிற்பகல் நான்கு மணிக்கு மேல் தொடங்கியது. ஜெலுத்தொங் பகுதியைச் சேர்ந்த படகுத் தொழிலாளர்கள் - சீனர்கள் - முதன்முதலாகப் பிள்ளையார் சுழி போட்டார்கள். ‘ஜப்பானியருடன் ஒத்துழைத்தவர்கள்’ என்று கூறப்பட்ட சீனர்கள் ஆங்காங்கே தாக்கப்பட்டனர். ஆண்களும் பெண்களுமாகச் சிலர் உயிர் இழந்தார்கள். மதுபோதையில் மயங்கிய ஆஸ்திரேலியர், மதவெறிக்கு இரையான சில பஞ்சாபிச் சிப்பாய்கள் ஆகியோரின் உதவியோடு தமிழர் கடைகள் சில சூறையாடப்பட்டன; சில தமிழர்கள் அடிபட்டனர். பினாங் மக்களின் மனம் பிரிட்டிஷ் கப்பல்களின் வருகையால் மலர்ந்தது. பவ்டர், ஸ்நோ, லிப்ஸ்டிக் பஞ்சமெல்லாம் இனிப் பஞ்சாய்ப் பறந்து விடும். கலிபோர்னியா ஆரஞ்சும், ஆஸ்திரேலியா ஆப்பிளும் தவறாமல் கிடைக்கும். பழைய உடைகளை விலைக்கு வாங்கி அணிய வேண்டிய தேவை இராது. ஜப்பானியரின் கட்டாய உடற்பயிற்சி வகுப்புகள் தொலைந்து போயின. பழைய மலேயா திரும்பி விட்டது - விஸ்கி, நடனம், குதிரைப் பந்தயம்...! பிரிட்டிஷ் அதிகாரிகள் பினாங் ஐ.என்.ஏ. முகாமுக்குப் போய், பழையவர்களையும் புதியவர்களையும் தனித்தனியாகப் பிரித்தார்கள். பிறகு, பழையவர்கள் கைதிகளாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். புதியவர்கள் ஆயுதத் தளவாடங்களை ஒப்படைத்து விட்டு வெளியேறலாமென்று அறிவிக்கப்பட்டது. தமிழர்கள் வெளியே நடந்தார்கள். கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|