பாகம் இரண்டு

10. செட்டித் தெரு

     செட்டித் தெரு! - பினாங் ஸ்ட்ரீட்டின் புகழ் பெற்ற மறுபெயர். மேற்கே சூலியா தெருவில் ஆரம்பமாகி, கிழக்கே கடற்கரையோடு முடியும் சிறிய வீதி.

     பனையோலையில் எழுத்தாணி கொண்டு வட்டிச்சிட்டை போட்ட காலம் முதல் இன்று வரை, தமிழர்களின் எத்தனை தலைமுறையினர் இதில் நடமாடியிருக்கிறார்கள்! திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற முதுமொழியை மனதிற் கொண்டு, இந்த மொழி பெயர் தேயத்திற்கு வந்து தொழில் நடத்தித் திரவியம் தேடிய தமிழர்கள் எத்தனை எத்தனை பேர்!

     இந்தத் தெரு வருமானம் காரணமாய்த் தமிழகத்தில் புதிதாகத் தோன்றிய சாலைகள், பள்ளிகள், புதுப்பிக்கப்பட்ட கோயில்கள், மடங்கள், கழனிகளான பொட்டல்கள், மாளிகைகளான குடிசைகள் எத்தனை எத்தனை!

     இரண்டாவது உலகப் போர் காரணமாகச் செட்டித் தெருவின் மகிமை குன்றிவிட்டது. குண்டு வீச்சில் நொறுங்கிய கட்டிடங்கள் இன்னும் புத்துயிர் பெறவில்லை. அவற்றின் இடிவுகளுக்கிடையே செடி கொடிகள் மண்டிக் கிடக்கின்றன. நியூலேனுக்கும் டத்தோ கிராமட் சாலைக்கும் குடிபெயர்ந்த லேவாதேவிக் கடைகளில் பல இன்னும் திரும்பவில்லை. இங்கே யுத்தத்துக்கு முன் காணப்பட்ட கலகலப்பு இனிமேல் எப்பொழுதாவது மீளுமா? ‘ஊர்க் கப்பல்’ நாளன்று தோன்றும் பரபரப்பை மீண்டும் காண முடியுமா? முடியாது, முடியாது. பழைய மலேயாவும், அதோடு பழைய செட்டித் தெருவும் மறைந்து விட்டன.

     முன்பெல்லாம் இங்கு சாம்பிராணி, மல்லிகை, அத்தர் ஆகியவற்றின் கதம்ப மணம் எப்பொழுதும் வீசி மூக்கைத் துளைக்குமே. இப்பொழுது அந்த இனிய வாடை மிகமிக மெலிந்து தேய்ந்து விட்டது.

     “பத்து மாதம் தவணைக் கிஸ்தி அண்டிமன் சீட்டு ஒண்ணுக்கு வட்டி கூட ரிங்கி...” என்ற படிப்போசை, இங்கே கணக்கு ஒத்துக் கொள்ளும் அடுத்தாட்களின் வாயிலிருந்து நசுங்கலாகக் கிளம்பி எதிரொலித்துக் கொண்டிருக்குமே, அதுவும் வெகுவாகக் குறைந்து சுருங்கி விட்டது.

     ஆ, செட்டித் தெரு! - வட்டிச்சிட்டையும் ஐந்தொகை ஏடும் இனத்துப் பேரேடும், ஆதாய வரவு கணக்கும் செட்டித் தெருவின் வேதாகமங்கள்; அன்றாடச் சலவை ஆடையும் பரக்கப் பூசிய திருநீறும் நாகரீகச் சின்னங்கள்; நாவடக்கமும் நெளிவு சுளிவும் முன்னேறுவதற்கான வழிதுறைகள்.

     கீழ்ப்பாண்டி நாட்டை வளப்படுத்தும் வற்றாத ஆறுகளில் ஒன்றாய், வடக்கு மலேயா கடை வீதிகளுக்கு ஆக்கமளிக்கும் பணக் கிணறுகளில் ஆந்ததாய் விளங்கிய செட்டித் தெரு - பினாங் ஸ்ட்ரீட் - இதோ!

     சூலியா தெருவிலிருந்து புகுந்ததும் இருபுறமும் குட்டிச் சுவர்கள் - குண்டு வீச்சில் இடிந்த கடைகளின் நினைவுச் சின்னங்கள். அப்புறம், தண்டாயுதபாணி கோயில் தேர் வீடு; அரைகுறையாக இடிந்திருக்கிறது. அடுத்தாற்போல், உருக்குலையாமல் நிற்கும் சில லேவாதேவிக் கிட்டங்கிகள். மறுபடியும் குட்டிச்சுவர்கள், மார்க்கெட் தெரு குறுக்கிடுகிறது. வலது முக்கில் பாலக்காட்டு ஐயர் காப்பிக் கடை. கிழக்கே, இடது புறம், மேலும் சில லேவாதேவிக் கிட்டங்கிகள், புடவைக் கடைகள், அப்பால் ‘கக்கூஸ் வீடு’, இலங்கை ஹோட்டல்,. தமிழ்த் தொழிலாளர்கள் குவிந்து வசிக்கும் தாழ்ந்த வீடுகள். சீன வியாபாரிகளின் பெரிய மாளிகைகள். வலப்புறத்தில் பலசரக்குக் கடைகள், அச்சகம். பெரீரா ஆஸ்பத்திரி. குண்டுக் காயத்துடன் கூரையின்றி நிற்கும் மலேயா ஹோட்டல். இவற்றிற்கிடையே சர்ச் தெருவும், பிஷப் தெருவும் ஊடறுத்துச் செல்கின்றன.

     பெட்டியடிகளில் அடுத்தாட்களும் பையன்களும் அன்றாட வேலைகளைத் தொடங்கி விட்டனர். தகப்பனாரிடமிருந்து வந்த கடிதத்தை ஐந்தாவது முறையாகச் செல்லையா படித்துக் கொண்டிருந்தான்.

உ சிவமயம்
கு.சி.குரு                     குரு.செ
செவல்பட்டி                    பினாங்கு

     சிரஞ்சீவி மகன் செல்லையாவுக்குத் தண்டாயுதபாணி கிருபையால் சகலவித பாக்கியங்களும் மேன்மேலும் உண்டாவதாகுக.

     இவடம் யாபேர்களும் சேமம். இதுபோல் அவடம் சேமத்துக்குக் கடதாசி எழுத வேண்டியது.

     இப்பவும் உன் தாயாரும் உன் தங்கச்சியும் சதா உன் நினைவாகவே இருக்கிறார்கள். ஆகச்சே வானாயீனா விருப்பத்தை அறிந்து அதன்படி காரியக் கோளாறு இல்லாதபடிக்கி ஊருக்கு வந்து போக வேண்டியது. தங்கச்சிக்கித் தோதான இடமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீ வந்த பிறகு கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாமென்று உன் தாயார் சொல்கிறாள். சுப்பையா முதலைப்பட்டி வங்காளச் செட்டியார் வீட்டில் கணக்கு வேலை பார்த்தான். அவனுக்கும் அங்கே தோதான இடமாய் அமைந்தால் எழுதவும். சாந்தலிங்கம் நம்ம கடையில் இருக்கிறான்.

     வானாயீனா விவரமாகக் கடதாசி எழுதியிருந்தார். புத்திசாலியான உனக்கு நான் அதிகப்படியாக எழுத வேண்டியதில்லை. ஏதோ வயசுக் கோளாறினால் நடந்து போனது போகட்டும். இனிமேலாவது தொழிலில் ஊக்கமாக இருந்து முன்னுக்கு வரப்பார். உன்னை வைத்துத்தான் நம் குடும்பம் பேரெடுக்க வேண்டும். வானாயீனா மனங்கோணாமல் நடந்து நல்ல பெயர் எடுப்பாயென்று நம்பியிருந்தேன். அவர் சொல்லையும் மீறி நீ பட்டாளத்துக்குப் போய் ரெம்பத் தாறுமாறாக நடந்து கொண்டதாக வருத்தப்பட்டு எழுதியிருந்தார். உரிமையோடு நினைத்திருந்தவர் மனம் கோணும்படி நடந்துவிட்டது. போனது போகட்டும். இனிமேலாவது அவருக்கு நல்லபடியாய் நடந்து கொள்ளவும். மற்றபடி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

வேணும் தண்டாயுதபாணி துணை

     மீண்டும் ஒரு முறை கடிதத்தை முதலிலிருந்து படிக்கத் தொடங்கினான்.

     “ஏன் செல்லையா, ஊர்ல எல்லாம் நல்ல சேதிதானே. அப்பு நல்லாயிருக்காரா?” எதிரே, பெஞ்சு மீது உட்கார்ந்திருந்த மேலாஸ் சின்னையா பிள்ளை கேட்டார்.

     “ஆமா, எல்லாரும் நல்லாயிருக்காக.” பார்வையை மீண்டும் கடிதத்தில் செலுத்தினான்.

     “லம்சியான் வட்டிச்சிட்டை போட்டுட்டிங்களா?”

     “போட்டாச்சு. இன்னும் சரி பார்க்கலை.”

     “சரி, விரசு பண்ணி வேலைய முடிங்ய. அம்புட்டு வட்டிச் சிட்டையும் நாளதுவரை போட்டு ரெடியாயிருக்கணுமுணு முதலாளி சொல்லீருக்காரு... டேய், சுப்பா!”

     “ஏன், இந்தா வந்திட்டென்.” ஓடி வந்து முன்னால் நின்றான்.

     “என்ன, வர வர மாமியா கழுதை போல் ஆனாளாமுனு இருக்கு. ஏத்தம் போடுதோ, ம்ம்... சமையச் சிட்டை தினசரி ஏறிக்கினே இருக்கு. என்ன சங்கதி, ம்ம்?”

     “காகறி விலை... நேத்து முட்டைக்கோசு, காரட்டு...”

     “ச்சீ! மொசரையப் பாரு மொசரைய. இவரு ஓவியமா முட்டைக்கோசு வாங்கிப்பிட்டாருங்கிறேன்...” மேலாள் உறுமினார். சமையல்காரர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காது. அவருடைய தகப்பனார் காளையப்பன் அம்பலம் அடுத்த கிட்டங்கியில் இருபத்தாறு வருட காலம் சமையல் வேலை பார்த்தவர்.

     செல்லையாவுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. சமையல் சிட்டை விசாரணை புதிதல்ல. என்ன காரணத்தாலோ, அன்று அதைக் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. வீட்டுச் சமையலுக்குக் கருப்பையா தேவைப்பட்டதால், அரும்பாடுபட்டு ஈப்போவிலிருந்து சுப்பையாவை வரவழைத்து இருந்தார்கள். சமையலாள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்த காலம் அது. சுப்பையா மறுபடி கச்சாங் கோரங் (வறுத்த கடலை) வியாபாரத்துக்குக் கிளம்பிவிட்டால் மேலாளை அடுப்பு மூட்டச் சொல்ல வேண்டியதுதான்.

     கடிதத்தை மடித்துச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, வெளியே போக எழுந்தான்.

     “என்ன, சரி பார்த்தாச்சா?” செல்லையா பக்கம் மேலாள் திரும்பினார்.

     “வெளியே வேலை இருக்குது, வந்து பாக்கிறேன்.”

     “எப்பப் பாக்கிறது? பாத்துப்பிட்டுப் போ.”

     “அப்புறம் பாக்கலாம். என்ன அவசரம்.”

     செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டான். அடுத்த பெட்டியடிகளில் இருந்தோர், பேச்சை நிறுத்தாமலே முதல் பெட்டியடிப் பக்கம் பார்வையைத் திருப்பினார்கள். கடைசிப் பெட்டியடி மேலாள் ‘டிப்டாப்’ ஆவன்னா ரூனா புருவத்தை நெரித்து உதட்டைத் துருத்தியபடி சின்னையா பிள்ளையைக் குறிப்பாக நோக்கினார்.

     செல்லையா மார்க்கெட் தெருவைத் தாண்டி நடந்த பொழுது, வலப்புறத்தில் அப்துல்காதரின் குரல் கேட்டது.

     “இங்க வாம்பிளா, என்ன திரும்பிப் பாக்காமப் போயிற?” சீனிமுகமது ராவுத்தர் பலசரக்குக் கடையில், மேசைக்குப் பின்னே, மகன் அப்துல்காதர் அட்டணைக்கால் போட்டு உட்கார்ந்திருந்தான். கடைக்குள் சென்று மேசையை ஒட்டியிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

     “உன்னைப் பார்க்க வர எண்ணியிருந்தேன்... ஏய், காசிம் தண்ணி கொண்டா.”

     காசிம் இரண்டு கோப்பை தேநீரை ஒரு தட்டில் கொண்டு வந்து வைத்தான். ‘பிளேயர்ஸ்’ டின்னை செல்லையா முன் மேஜையில் வைத்துவிட்டு, தேநீர்க் கோப்பையை எடுத்துக் குடித்தான்.

     “கடையில் ஒன்றும் தொந்தரவு இல்லையே. பிடிக்கா விட்டால் சொல். சிங்கப்பூரில் மாமா கடைக்கு ஆள் தேவை. நல்ல சம்பளம்.”

     “அப்படியொன்றுமில்லை.”

     “அங்கேயே இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பதுதான் நல்லது. சித்தப்பா முணுமுணுத்தாலும் தங்கச்சி முகத்துக்காக பொறுத்துக் கொள். வாப்பாவுக்கு நேற்று டத்தோ கிராமட் ரோடில் விருந்து. சித்தப்பா என்னமோ சலித்துக் கொண்டாராம், உன்னைப் பற்றி... கொஞ்ச நாளைக்குக் கோலாமூடா கொண்டு வேலையை மறந்துவிட்டு, அவர் விருப்பத்தை அனுசரித்து நடந்து கொள்.”

     செல்லையா பேசாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.

     “எல்லாம் நல்லபடியாக முடியும். இங்கேயே சோறுண்ணேன். இன்று வான்கோழி.”

     “வேண்டாமப்பா, வான்கோழி எனக்குப் பிடிக்காது. பிஷப் ஸ்ட்ரீட்டில் கொஞ்சம் வேலையிருக்கிறது. மாணிக்கம் நேற்று வந்தானாமே, பார்த்தாயா?” எழுந்தான்.

     “நல்லாப் போனானே! அவனுக்குப் பினாங்குக்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டும். ஜாக்சனை எப்படியும் சரிக்கட்டி விடுவான்... நேற்றுக் கடைக்கு வந்தானாம். நான் அக்கரைக்குப் போயிருந்தேன்.”

     “சரி, ஆறு மணிக்குக் கடைப் பக்கம் வருகிறேன். நியூ பீச்சுக்குப் போகலாம்... ராஜதுரை சங்கதி தெரியுமா?”

     “என்ன சங்கதி, கோலாலம்பூரில்தானே இருக்கிறான்?”

     “போன வாரம் சைகோனுக்குப் புறப்பட்டுப் போய்விட்டானாம்.”

     “அவன் ஏன் இப்படி மாறிவிட்டான்? கடிதங்கூட எழுதுவதில்லை. ஒரு ஒழுங்குமுறை கிடையாது.”

     “அவனுக்கெல்லாம் சண்டை, சச்சரவு இருந்தால்தான் கலகலப்பு. ஒரேயடியாகக் குடித்துத் தொலைக்கிறானாம்.”

     “நானும் கேள்விப்பட்டேன். என்ன செய்வது? சரி, வருகிறேன்.”

     “ஆறு மணிக்கு வருகிறேன்.”

     செல்லையா தெருவில் இறங்கிக் கிழக்கே நடந்தான். பிஷப் தெரு குறுக்கிட்டது. வலது முக்கில் கெடே கோப்பி, உள்ளே நுழைந்தவன் ஜன்னலோரம் போய் உட்கார்ந்து காபிக்கு உத்தரவிட்டான்.

     “சேயிந்த் சாப்!” அடுத்த மேசையில் காபி குடித்துக் கொண்டிருந்த கட்டுருட்டான ஆள் - முன்பு செல்லையாவின் அணியிலிருந்த துறைமுகத் தொழிலாளி பிச்சை - எழுந்து வணங்கினான்.

     “பிச்சை! நல்லாயிருக்கியில, ஒண்ணும் கொறையில்லையே? உக்காரு.”

     “உங்க புண்ணியத்தில ஒண்ணும் கொறைச்சல் இல்லை. வேலை பாத்து முடியலை. காசுக்கும் பஞ்சமில்லை.”

     “பணத்தை மிச்சம் பண்ணு. தண்ணிக் கடையிலே எறிஞ்சிராதே.”

     “அதெல்லாம் மட்டாய் வைச்சிக்கிடுவனுங்க.” முகத்தில் சிரிப்புப் படர்ந்தது. “நீங்க ஊருக்கு எப்ப, கலியாணம் காச்சி பண்ணணுமுல?”

     “கப்பல் விடட்டும், பாக்கலாம். உக்காரு.”

     “நேரமாகுதுங்க, போகணும்.”

     “துறைமுகத்தில் இப்ப ஒண்ணும் கசகல் இல்லையே?”

     “ஒண்ணுமில்லை. நேத்தாசி புண்ணியத்தில எங்ககிட்ட ஒரு பயலும் வாலாட்ட மாட்டான். எலும்பை எண்ணி வைச்சிருவான் தமிழப் பயன்னி எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு... நான் வாரனுங்க. ஒண்ணு ஆனாப் போனா சொல்லி விடுங்க. துறைமுகத்தில் ஐயன்னே ஆளுக ரெம்பப் பேர் இருக்கம். எந்த கொம்பனாயிருந்தாலும் சரி, ஒரு கை பார்த்துக்கிடலாம்... வாரனுங்க, சேயிந்த்!”

     “சரி, போய்ட்டு வா.”

     எதிர்ப்புறத்தில் இருந்த சம்சு சாராயக் கடையில் சுப்பையா பாகவதரின் ‘வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்’ இசைத் தட்டின் கீறல்களை மீறிக் கிளம்பி ஒலித்தது. சீனர்களும் தமிழர்களும் உள்ளும் புறமும் நடந்தனர்.

     செல்லையா காபி மங்கை எடுத்து ஒரு மடக்குக் குடித்தான். இப்படியே எவ்வளவு காலம் தள்ளுவது? வேலையில் மனம் செல்லவில்லையே! முதலாளி வரவர நம்மிடம் பேசுவதைக் கூடச் சுருக்கி விட்டார். மரகதத்தை நாகலிங்கத்துக்குக் கட்டப் போவதாகக் கூடச் சொன்னாராம். நாகலிங்கம் கொதக்குப் பயல். அவனா மரகதத்துக்கு மாப்பிள்ளை...

     இன்னொரு மடக்குக் காபி குடித்து விட்டுச் சிகரெட் பற்ற வைத்துப் புகைத்தான். எனக்கும் லேவாதேவித் தொழிலுக்கும் ஒத்து வராதென்று வீட்டில் சொன்னாராம்... இதில்லாவிட்டால் இன்னொரு வேலை. மரகதத்துக்கு வட்டிக்கடை மாப்பிள்ளைதான் வேண்டுமென்று சட்டமா...

     கடிகாரத்தைப் பார்த்தான். கால் மணி நேரம் ஆகியிருந்தது. காசை மேசையில் போட்டு விட்டு வெளியேறி நடந்தான்.