பாகம் இரண்டு

6. அழகி மின்லிங்

     ‘கெக் செங் கெடே கோப்பி’ மாடியில் உள்ள தென்மேற்கு அறையில் தமிழ் உரையாடல் கேட்டது. செல்லையாவும் பழனியப்பனும் தூய வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தார்கள். புஷ் சட்டை- சராய் கோலத்தில் இருந்தனர் மாணிக்கமும் சாமியும். இருவரின் தொப்பிகளும் மேஜை மீது கிடந்தன. அப்துல்காதர் நீலச் சவுக்கப் பச்சைக் கைலி கட்டி, வெள்ளைச் சட்டையும் சந்தனநிறக் கோட்டுமாக இருந்தான். தலைமீது குஞ்சத்துடன் கூடிய துருக்கிக் குல்லாய்.

     வடபுறச் சுவரில் சீனக் குடியரசின் தந்தை ‘சன்யாட் சென்’னின் பெரிய படம் தொங்கியது. அதன் கீழே தரை மீது, தங்க கோலங்கள் கொண்ட மூன்று கால் கருங்காலி மேசையின் மேல், சாம்பிராணி புகைந்த பளிங்குக் கும்பா. பக்கத்து அறையிலிருந்து, சீன மொழியின் ஓய்வில்லா ‘ங்’ ஓசை வந்து கொண்டிருந்தது.

     “அரளிப்பாறை மஞ்சு விரட்டுப் பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது. அடேயப்பா!” பழனியப்பன் குறிப்பிட்டான். மனக்கண்ணில் அரளிப் பாறை தெரிந்தது. அதன் முடியில் முருகப் பெருமானின் சின்னஞ்சிறு கோயில், பாறைக்குக் கிழக்கேயுள்ள பொட்டலில் இங்கும் அங்கும் கூட்டம் கூட்டமாக வண்டிகள், அவற்றின் அணைப்பில் திரள் திரளாக மக்கள் குழுமி நின்றார்கள். வண்டிக் கூடுகளின் மேல் அவல், கடலை தின்னும் சிறுவர் படை. பாறை மீது இளநீர் மட்டைகளைப் பரப்பி, அவற்றின் மீது உட்கார்ந்திருப்பவர்கள் கூட்டம். உச்சி வெயில் கொளுத்துகிறது. தெற்கே, கருவேப்பிலான்பட்டி, ‘நின்று குத்திக் காளை’ சீறுகிறது. வல்லாளப்பட்டி ஐயன் கூட்டத்தாரும், நெற்குப்பை சின்னச்சாமியின் ஆட்களும் பாய்ச்சல் காட்டுகிறார்கள்...

     “மாணிக்கம்! கருவேப்பிலான்பட்டிக் காளை பிடிபட்டிருக்குமா?” பழனியப்பன் பரபரப்பாகக் கேட்டான்.

     “அதைப் பிடிப்பதாயிருந்தால், வல்லாளப்பட்டி ஐயன் ஒருவன் தான். சண்டை ஆரம்பமாகும் வரை பிடிபடவில்லை.”

     “மஞ்சு விரட்டென்றால் சின்னமங்கலம் மஞ்சு விரட்டுத்தான். அரளிப் பாறை எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது. வேகாத வெயிலில் நின்று சாக வேண்டும்” - செல்லையா சொன்னான்.

     “வெயிலுக்குப் பயந்தவன் மஞ்சு விரட்டுக்கு ஏன் போகிறாய்?” பழனியப்பன் கேட்டான்.

     “எப்படியாவது ஒரு முறை மஞ்சு விரட்டுப் பார்த்து விட வேண்டும். நேரில் பார்த்தால்தான் எதுவும் சரியாக விளங்கும்.” தமிழ்நாட்டை அறியாத சாமி ஆர்வத்தோடு கூறினான்.

     “கட்டாயம் பார்க்க வேண்டும். கப்பல் விட்டதும் போய்ப் பார்த்தால் போகிறது.” - பழனியப்பன் சொன்னான்.

     காபி வந்தது; ஊற்றிக் குடித்தார்கள்.

     “முருகன் அருளால் எல்லாம் ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல் முடிந்து விட்டது.” பழனியப்பன் காலை நீட்டி நாற்காலியில் சாய்ந்தான்.

     “ஒரே அல்லோல கல்லோலமாயிருக்கும் என்று எதிர்பார்த்தேன்... செல்லையாதான் அவசரப்பட்டு விட்டான். வீண் சேதம் - தவிர்த்திருக்கக் கூடிய சேதம்.” மாணிக்கத்தின் இடது கை தலைமுடியைக் கோதியது.

     “அவசரப்பட்டானென்றால் எதற்கு? என் தங்கச்சியைப் பார்க்கத்தான்.” - அப்துல்காதர் காபி மங்கைப் பார்த்துச் சொன்னான்.

     “டேய், அத்தா! உன்னிடம் யார் கேட்டது? பேசாமல் உன் துருத்தியை ஊது.” - செல்லையா சீறினான்.

     “பெண்ணாசை பொல்லாதது என்று சொல்லாத அறிஞர்களே இல்லை. பாரேன், இவன் மீசையைச் சிரைத்து விட்டான். ஏன்? மீசை இருக்கும் வரை சித்தப்பா அண்ட விட மாட்டார். அப்புறம் தங்கச்சி?” - மாணிக்கத்தை நோக்கி அப்துல்காதர் சொன்னான்.

     “மீசையாவது மண்ணாங்கட்டியாவது! அவனுக்கு வேண்டியது ஒன்றே ஒன்று. மரகதம்! வயிரம் கோமேதகம், புஷ்பராகம் - அதெல்லாம் குப்பை...”

     “மாணிக்கம், வாயை மூடுகிறாயா, இல்லையா?” - செல்லையா கத்தினான்.

     “எங்க தங்கச்சியைப் பத்தி நாங்க பேசுவம். அதுக்கு நீ என்னாம்பிளா அண்ணாவி?” - அப்துல்காதர் சாவதானமாகக் கேட்டான்.

     “சரி சரி போதும்.” - பழனியப்பன் தலையிட்டான்.

     “சரி, வாயை மூடிக் கொள்கிறேன்.” மாணிக்கம் இடக்கையை மார்பில் அணைத்துக் கொண்டு, வலக்கையால் வாயைப் பொத்தினான். மறுவிநாடி வாய் மீதிருந்த கையை அகற்றி, முறுவல் பூத்தான். “ஆனால் ஒரு விஷயம். எனக்கு என்னவோ, கல்யாணக் கிறுக்குப் பிடித்த பயல்களைக் கண்டாலே பிடிக்காது. மனிதன் முதன்முதலாகச் செய்யும் தவறு என்ன? தாய் வயிற்றிலிருந்து வெளிவருவது. கடைசித் தவறு என்ன? சாவது. இந்த இரண்டுக்கும் இடையே ஒரு மாபெரும் தவறு செய்கிறான். அதென்ன?”

     “மேரையெஜ்...!” - சாமி மேசையில் ஓங்கிக் குத்தினான்.

     “அஅஆ... நிக்காஹ்!” - அப்துல்காதர் கெக்கலித்தான்.

     “பிறப்பையும் இறப்பையும் மன்னித்து விடலாம். ஆனால், கல்யாணம்! அந்த மாபாதகச் செயலை மன்னிக்க முடியுமா? இருக்கட்டும். அதைப் பற்றி இன்னொரு நாள் விரிவாகப் பேசலாம்.” வாசல் பக்கம் திரும்பினான். “ஏய்! சிங்லியோங்! உன் தலையில் அணுகுண்டு விழ. ஓடியாடா!”

     “இஇஇஈ... குன்ட்டூ... இஇஇஈ... என்வேனிம்? இஇஇஈ” ஓடி வந்தவன் முகமெல்லாம் பல்லாக இளித்தான்.

     மாணிக்கம், ‘மீ கோரெங்’கில் தொடங்கி பல பண்டங்களுக்கு ஆர்டர் கொடுத்து முடித்தான். பையன் கீழே ஓடினான்.

     “டேய், வெள்ளி வைத்திருக்கிறாயா? என்னிடம் ஒரு காசு கூட இல்லை.” - அப்துல்காதர் சொன்னான்.

     “அந்தக் கவலை வேண்டாம். என்னிடம் நிறைய இருக்கிறது. இல்லாவிடினும், ஆலிம் என் கணக்கில் எழுதிக் கொள்வான். அவசரத்துக்கு கைமாற்றும் வாங்கலாம்.”

     “அதென்ன உன் விஷயத்தில் அவ்வளவு தாராளம்?... என்றாவது ஒரு நாள் கடன் சொன்னால் கூட, தலையைக் குனிந்து கொண்டு கையைப் பிசைவானே, பிசுனாறிப் பயல்!”

     “ஆலிம் மகளை மாணிக்கம் தான் எமன் வாயிலிருந்து மீட்டு வந்தான்” - பழனியப்பன் தெரிவித்தான்.

     “அட, எனக்கு இவ்வளவு நாளாய்த் தெரியாதே. இந்தப் பயல் எங்கே கால்விட்டாலும் அங்கே பெண்வாடை வீசுதப்பா...! மாணிக்கம், ஆதியோடந்தமாய், குறைக்காமல் விவரமாய்ச் சொல். இல்லை என்றால் என்னால் ஒன்றும் தின்ன முடியாது!”

     “செல்லையா, சாமி உங்களுக்கும் கதை கேட்க விருப்பம் தானா?”

     “ஆமாமாம்.”

     “மெய்யன்பர்களே, கேளுங்கள் சொல்கிறேன். ஆலிம் மகள் மின்லிங் நல்ல அழகி...”

     “அதில் என்ன சந்தேகம்?” - அப்துல்காதர் தலையை ஆட்டினான்.

     “தம்பி இலக்குமணா, கொஞ்சம் பொறப்பா... கெம்பித்தாய் மேஜர் கெனியோச்சி இச்சியாமா அவளை அமுக்கத் திட்டம் போட்டு, முதலில் அவள் கணவனையும், பிறகு அவளையும் பிடித்து அடைத்து விட்டான். வழக்கம் போல் இரண்டு பிஸ்டல்களும், பாசிச எதிர்ப்புப் படையினரிடமிருந்து வந்தவை எனக் கூறப்பட்ட சில கடிதங்களும் கைப்பற்றப் பட்டன... நான் எப்பொழுதாவது, நயம் மீகோரெங் தின்ன வேண்டுமென்ற ஆசை எழும்போது இங்கு வருவேன். ஆலிம் எப்படியோ, என்னைப் பற்றி - அதாவது ஆபத்பாந்தவன் என்று - கேள்விப்பட்டிருக்கிறான். மகள் பறிபோன நாள் மாலையில் என் காலைப் பிடித்துக் கொண்டு அழுதான். அன்றோ மீகோரெங் பிரமாதம். என் மனம் இளகிவிட்டது.”

     “நிறையக் கொழுப்புச் சேர்த்திருப்பான்.” - செல்லையா விளக்கம் கூறினான்.

     “இருக்கலாம். நியூபீச் அசோகவனத்துக்குப் போனவள் - அதிலும் சீனத்தி - உருப்படியாக வீடு திரும்புவாள் என்று நான் நம்பவில்லை. இருந்தாலும் முயன்று பார்க்கலாம் என்று போனேன்.”

     “கோதண்டத்தை தோளில் மாட்டிக் கொண்டு?”

     “இல்லை. இரண்டு ‘வெண் புரவி’ பாட்டில்களைக் கையுறையாக எடுத்துக் கொண்டு - போலியல்ல, அசல் சரக்கு - விசேஷ கால உபயோகத்துக்காக ஆலிம் பதுக்கி வைத்திருந்தது. ராவணன் என்றும் போல் சாக்கே பருகிக் கொண்டிருந்தான். ‘ஆலிம் எனக்குச் சிறு வயது முதலே பழக்கம். மின்லிங் எனக்குச் சொந்த தங்கச்சி மாதிரி’ என்று விவரித்தேன். அந்தப் பன்றிப் பயல் என்ன சொன்னான் தெரியுமா? ‘இந்தக் கதையெல்லாம் தேவையில்லை. உன் சரக்கென்று எனக்குத் தெரியாது. தெரிந்தால் கொண்டு வந்திருக்க மாட்டேன்’ என்று. அதொடு கணவன், மனைவி இருவரையும் விரட்டி விட்டான். இச்சியாமா கையில் சிக்கியும் கண்ணகியாகத் திரும்பினவள் மின்லிங் ஒருத்திதான்; ஐயம் இல்லை.”

     “அப்புறம் நீ கையை நீட்டினாயாக்கும்?” - அப்துல்காதர் கண்ணைச் சிமிட்டினான்.

     “சீ, மடையா!”

     “சரி சரி, விடு. நீ பெரிய சற்புத்திரன்ல!”

     சிங்லியோங் பலகாரத் தட்டுகலைக் கொண்டு வந்து வைத்தான்.

     கொஞ்ச நேரம் பேசாமல், உண்பதில் கவனம் செலுத்தினார்கள்.

     பையன் தட்டுகளை எடுத்துச் சென்றான். திடுமென மாணிக்கத்தின் குரல் கிளம்பியது...

     “நாணமு மடனு நல்லோ ரேத்தும்
     பேணிய கற்பும் பெருந்துணையாக
     என்னொடு போந்திங் கென் துயர் களைந்த
     பொன்னே கொடியே புனைபூங் கோதாய்!
     நாணின் பாவாய் நீணில விளக்கே!
     கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி!”

     “டேய் டேய், மாணிக்கம்! மறை கழன்று விட்டதா, என்ன? நீ பாட்டுக்குச் சாமி அழைக்க ஆரம்பித்து விட்டாயே!” - அப்துல்காதர் கத்தினான்.

     “மனனமாகி இருக்கிறதா என்று சொல்லிப் பார்க்கிறேன்.”

     “இதென்ன, ‘கூளப்பநாயக்கன் காதல்’ காப்பியமா?” செல்லையா வினவினான்.

     “கோவலன் செட்டி காதல் நாடகம். அவன் தகப்பனுக்குக் காவிரிப் பூம்பட்டினத்தில் பெரிய மார்க்கா...”

     மாணிக்கத்தின் பார்வை வாசல் பக்கம் மாறியது. ஆலிம் குடுகுடுவென ஓடி வந்து, அவன் காதில் ஏதோ சொல்லிவிட்டுத் திரும்பி விரைந்தான்.

     “இன்ஸ்பெக்டர் குப்புசாமி!” மாணிக்கம் அறிவித்தான்.