உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பாகம் இரண்டு 7. இன்ஸ்பெக்டர் குப்புசாமி “குட்மார்னிங் ஜெண்டில்மென்... ஹல்லோ மாணிக்காம்!” இன்ஸ்பெக்டரின் கரிய முகத்தில் தங்கப்பற்கள் மின்னின. விஸ்கி மணம் குப்பென்று கிளம்பி வந்தது. “குட்மார்னிங், இன்ஸ்பெக்டர்!” ஒருமித்து வரவேற்றார்கள். மாணிக்கத்துக்கு எதிரே காலியாய்க் கிடந்த நாற்காலியில் இன்ஸ்பெக்டரின் வளர்ந்து தடித்த உருவம் அமர்தது. “இந்தாங்கப்பா, எனக்கு டாமில் நல்லா வாராது. நீங்க, தமிலப்பய இங்கிலீஷ் டாக் பன்ரான்னிட்டு வையாதீங்க என்ன?” “இதோ பேசுகிறீர்களே, இன்ஸ்பெக்டர். எல்லாம் பழக்கந்தான்.” “இந்தாங்கப்பா, ஒங்களயெலாம் பிளாக் லிஸ்ட்ல வச்சி நோட் பண்ணனுமின்னிட்டு பார்க்ளே ஆர்டர் போட்ருக்கான். ஆய்தம் ஏதாச்சும் இருந்தாக்கா எறிஞ்சிருங்க. சின்பெங் கம்பெனிகளோட கனெக்ஷன் வேணாம். வெரி டேஞ்ஜரஸ்.” “அதெல்லாம் ஒன்றுமில்லை இன்ஸ்பெக்டர். வயிற்றுப் பிழைப்புக்கே தாளம் போடுகிறது. ஆயுதமாவது கீயுதமாவது” மாணிக்கம் இழுத்தான். “இந்தா, ரெட்டேக்கை! வெட்டி டாக் நோ யூஸ், உன்னயப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும். சொல்லிப்டேன். என்னத்தெயும் இளவு கூட்டாதீங்க.” “ஐ.என்.ஏ. ஆட்களால் ஒரு தொந்தரவும் ஏற்படாது.” பழனியப்பன் குறிப்பிட்டான். “அசெ, பல்னியப்பன்! எனக்கு எல்லாந் தெர்யும். எங்கட்ட கதை வேணாம். நீங்க பண்ர கூத்தெல்லாம் தெரியும்ப்பா. அன்னைக்கு ஜித்ரா பயன்க என்ன செஞ்சான்க?” “என்ன இன்ஸ்பெக்டர், என்ன நடந்தது?” “ஜித்ரா பையன்க என்ன செஞ்சான் தெரியாதா? பப்ளிக் ஸ்கூல் பில்டிங் இருக்கல்யா, எக்ஸ் ஐ.என்.ஏ. காம்ப், அங்கெ அரிசி, டீ எல்லாம் இருந்திருக்கு. சுத்தி ஆஸ்ட்ரேலியன் டாமி கன்னர்ஸ் சென்ட்ரி. நம்ம பையன்க கூரையப் பிரிச்சி எறங்கி அம்ப்ட்டையும் தூக்கீட்டான்க. டீ மூட்டைய மட்டும் நூறு அம்பது டாலருக்கு வித்ருக்கு. எல்லாத்தையும் ட்ரேஸ் பண்ணிட்டேன். நம்ம பிள்ளைங்க. தம்லப் பயனுங்க பாவம்னிட்டு, அஞ்சாறு சீனனுகளைப் பிடிச்சி மாட்டீருக்கேன். சொல்றது தெர்யிதா?” “ஜித்ரா ஆட்கள் மேல் குற்றம் இல்லை. அது ஐ.என்.ஏ. ஸ்டோர்தான்.” இன்ஸ்பெக்டரை ஏறிட்டுப் பார்த்து மாணிக்கம் சொன்னான். “ஓஹோ! பப்ளிக் ஸ்கூல் ரெய்டுக்கு பிளான் பண்ணின. *ஜூக்காவ் யாரு, ஙெம்?” இன்ஸ்பெக்டரின் கண்கள் சுருங்கின. “எஸ்.எஸ். லெப்டினன்ட் ரெட்டேக்கை மாணிக்காம் ஆவ் த இண்டியன் நேஷனல் ஆர்மி” கரகரப்பான குரல் நாடக பாணியில் கூறியது. வலக்கை ஆளைச் சுட்டிக் காட்டிற்று.
* மார்ஷல் ஜியார்ஜ் ஜூக்காவ் - ரஷிய சேனாதிபதிகளில் தலை சிறந்தவர். “அநியாயமாய்ச் சொல்லாதீர்கள், இன்ஸ்பெக்டர். அன்று எனக்குக் காய்ச்சல், நீங்கள் தான் வந்து பார்த்தீர்களே.” “காச்சேல், காச்சேல்! ஹஹ்ஹஹ்ஹா! ஜித்ரா ரெய்டர்ஸ் அனுப்பிவிட்டு ஜுக்காவ் என்ன செஞ்சாரு, ஙெம்? கம்ளி பிளாங்க்கெட்ட எடுத்து போத்திப் படுத்திட்டாரு. அப்ரம், காப்டன் பர்லிங்டன் பல்லு - டூத் கீள விள்ந்திருச்சே, தெரியுமா...? சுந்தரம் மார்டாப்பு - ஹார்ட் ஃபெய்லியர்ல செத்திட்டான்... எல்லாம் தெரியும்ப்பா. ஹஹ்ஹஹ்ஹா.” மாணிக்கத்தின் வாய் இறுகி மூடி இருந்தது. இடது கை தலைமுடியைக் கோதிற்று. மற்றவர்கள், இன்ஸ்பெக்டர் சொன்னது என்னவென்று புரியாதவர்கள் போல் விழித்தார்கள். “அவரு சப் ஆபிசர் நட்டராஜன் எங்கப்பா போய்ட்டாரு? மாணிக்காம்!” “சிங்கப்பூருக்கோ எங்கோ போவதாகச் சொன்னான். தெரியவில்லை.” “சரி, அங்ட்டே இர்க்கட்டும். பினாங் பக்கம் வர வேணாம்.” இன்ஸ்பெக்டர் கண்ணை மூடிச் சிகரெட் புகையை இழுத்து ஊதிக் கொண்டிருந்தார். பையன் காபி கூஜாவையும் மங்குகளையும் கொண்டு வந்து வைத்தான். “காபி வந்திருக்கிறது, இன்ஸ்பெக்டர்” பழனியப்பன் சொன்னான். காபிக் கூஜாவைப் பார்த்ததும் இன்ஸ்பெக்டரின் முகம் கோணியது. “டாமிட்” முனகிக் கொண்டே சிகரெட் பற்ற வைத்தார். “விஸ்கி கொண்டு வரச் சொல்லவா?” “நோ நோ, தாங்க்யூ, நோ லிக்கர் பிஃபோர் சன்செட்... இந்த சன்யனக் கொஞ்சம் குடிச்சித் தொலையிறேன்.” உற்றிக் குடித்தார். “இந்தாங்ப்பா, எனக்கு நம்ம ஊர் பாக்கணுமின்னிட்டு ரெம்ப ஆசை. வார் வந்தத்லயிருந்து அதே நெனவு.” இமைகள் மூடி மூடித் திறந்தன; இடதுகை பிடரியைத் தடவியது. “என் சம்சாரம் மதுரெ மீனாச்சியப் பாத்து கும்புடணுமின்னிட்டு டெய்லி ஒர்ரி பண்ரா. நீங்க யாராவது போறப்ப நாங்களும் வாரம்ப்பா.” “கப்பல் விட்டதும் நான் கிளம்புகிறேன். நீங்களும் வாருங்கள். போவோம்.” பழனியப்பன் சொன்னான். “மதுரெ சின்னத் தகரக் கொட்டகாயில கிட்டப்பா - சுந்தரம்மா கூத்து நடக்குமாமே, நீ பாத்ருக்கியா?” “சிறு வயதில் பார்த்திருக்கிறேன். அங்கல்ல, பொன்னமராவதியி.” “எங்க பாட்டி என்னத் திட்ரப்பல்லாம், ‘ஆத்தக் கண்டியா, அலகர சேவிச்சியா’ன்னிட்டு கேப்பாங்க. அந்த ஆத்து எங்கருக்கு, பல்னியப்பன்?” “அது மதுரை அருகே ஓடும் வைகை ஆறு. அழகர்கோயிலும் பக்கத்தில்தான்.” “அந்த ஆத்து ரெம்ப நல்லாருக்குமா?” “புலவர் தாவிற் பொருந்திய பூங்கொடி, வையை என்னும் பொய்யாக் குலக்கொடி.” மாணிக்கம் முனங்கினான். “ஹேய், மாணிக்கம்! என்னா, கிண்டல் பண்ரியா?” “அது, வைகை ஆற்றைப் பற்றி ஒரு புலவர் பாடியது, இன்ஸ்பெக்டர்.” “ஓ, பொயட்ரி... எனக்கு பொயட்ரி ரெம்பப் பிர்யம், எஸ்பெஷலி சைனிஸ் கிளாசிகல் பொயட்ரி.” “உங்களுக்குச் சீனம் எழுதப் படிக்கத் தெரியுமா, இன்ஸ்பெக்டர்?” “நோ, தெர்யாது, ஒன்லி டிரான்ஸ்லேஷன்ஸ். மாணிக்காம், உனக்கு டாமில் நல்லாத் தெர்யுமாமே, இப்டி எளவு கூட்ரதுக்கு பதிலா, டாமில் போயம்ஸ்களெ ட்ரான்ஸ்லேட் பண்ரதுக்க்கு என்னா, ஙெம்?” “நான் ஒரு வம்புக்கும் போவதில்லை, இன்ஸ்பெக்டர். யாரோ உங்களிடம் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி வைத்திருக்கிறார்கள். நான் என்ன விளக்கம் சொன்னாலும் நீங்க நம்பப் போவதில்லை. என்ன செய்வது!... ஐந்தாறு தமிழ்ப் பாட்டுகளை மொழிபெயர்த்துத் தருகிறேன்; படித்துப் பாருங்கள். அப்புறம் நீங்களாகவே முயன்று தமிழ் கற்றுக் கொள்வீர்கள்.” “ஓக்கே, தாங்க்யூ.” “ஒரு மாதம் லீவ் எடுங்கள், இன்ஸ்பெக்டர். ஊரில் போய் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்கலாம்” பழனியப்பன் சொன்னான். “எஸ் எஸ்” முக்கி முனங்கிக் கொண்டே எழுந்து, சில விநாடிகள் எதிர்புறச் சுவரை நோக்கியபடி நின்றார். உடல் லேசாக ஆடியது. நெற்றியில் வேர்வைத் துளிகள் தென்பட்டன. மேசையைச் சுற்றி இருந்தவர்களை ஒரு முறை பார்வையிட்டார். வாயிலிருந்து கரகரப்பான குரல் கிளம்பியது. “இந்தாங்ப்பா, நான் டாமில் படிக்கலே, ஊர் பாக்கலே, ஆனாலும் நன் தம்லன்!” உடல் முன்னும் பின்னுமாக அசைந்தது. கண்கள் மேலேறிச் சொருகின. “சொல்றது தெரியுமா? நான் தம்லன், அசல் பத்தரெ மாத்து பாண்டி நாட்டுத் தம்லன்!” வலது கை மார்பின் மீது அடித்தது. அறைகூவல் விடுபவர்போல் முகங்களை மாறிமாறிப் பார்த்தார். “அதில் என்ன சந்தேகம், இன்ஸ்பெக்டர்” மாணிக்கம் எழுந்தான். “நீங்கள் அசல் தமிழன், சிறந்த தமிழன்.” மற்றவர்கள், மெய்மறந்து அசையாமல் உட்கார்ந்திருந்தனர். “சாரி, வெரி சாரி, வாரேங்கப்பா... சியரியோ!” வேகமாக நடந்து வாசலைத் தாண்டினார். மறுவிநாடி உருவம் மறைந்து விட்டது. சற்று நேரத்தில் அவருடைய மோட்டார் சைக்கிளில் அலறல் கிளம்பிற்று. கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|