உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பாகம் இரண்டு 8. தொழில்துறை வயிரமுத்துப் பிள்ளையின் குளியல் முடிந்து விட்டது. காமாட்சியம்மாள் எடுத்து வைத்திருந்த பச்சைக் குண்டஞ்சுக்கரை வேட்டியைத் தார்மடி வைத்துக் கட்டி, பனியனுக்குள் உடலைச் செருகினார். “வேல் மயிலம்! முருகா!” தண்ணீர்மலையான் கோயில் திருநீறு பட்டை பட்டையாய் நெற்றியில் ஏறியது. கோவணாண்டியாய்க் காட்சியளித்த முருகப் பெருமான் படத்துக்குக் கீழே போய் உட்கார்ந்து, கைகூப்பிக் கண்ணை மூடினார். வாயிலிருந்து வழக்கமான திருப்புகழ்ப் பாட்டுக் கிளம்பியது.
“சீர் சிறக்கு மேனி பசேல் பசேலென நூபுரத்தின் ஓசை கலீர் கலீரென...” “மரகதம்! அந்தப் பய கருப்பன் வந்திட்டானா?” “அவர் இன்னம் வரலையப்பா.”
“நூபுரத்தின் ஓசை கலீர் கலீரென...” “மரகதம்! குழாயடியில சாவிய வெச்சிருக்கனான்னிப் பாரு...”
“கலீர் கலீரென, சேர விட்ட தாள்கள்...” “காமாட்சி! அந்தக் கிராணி சம்சாரத்துக்குக் கொடுத்த கைமாத்து வெள்ளி வந்திருச்சா?” “இன்னமில்லை. நாளைக்கித் தாரமுன்னிச்சு.”
“சேகரத்தின் வாலை சிலோர் சிலோர்களும்...” “மரகதம்! சாவி இருக்கா?” “இருக்குதப்பா, எடுத்து வச்சிருக்கேன்.” பிள்ளையவர்களின் பார்வை முருகப் பெருமானின் தலைக்குமேல் தொங்கிய கடிகாரத்தின் மேல் விழுந்தது. அடச்சே, மணி ஒன்பதரையாச்சுதா...
“சேகரத்தின் வாலை சிலோர் சிலோர்களும் சோலை வெற்பின் மேவு தெய்வா - தெய்வானை தோள் பூணி இச்சை ஆறு புயா புயாறுள பெருமாளே!” திருப்புகழைக் கடுவிரைவாய் முடித்துக் கொண்டு எழுந்தவர், மீண்டும் திருநீற்றைப் பூசியவாறே உள்கட்டுக்குப் போய்த் தடுக்கில் உட்கார்ந்தார். காமாட்சியம்மாள், கழுவிய இலையைப் போட்டு, இரண்டு தோசைகளை எடுத்து வைத்து, பருப்புக் குழம்பையும் தேங்காய்ச் சட்னியையும் ஊற்றினார். “காமாட்சி, இனிம விரசாய் ஊருக்குப் போயிரலாம். ஒரு மாசத்தில கப்பல் விட்ருவானாம்.” “இன்னம் ஒரு மாசமா!” கையை நாடியில் வைத்துக் கண்ணை உருட்டினார். “அப்புறம் என்ன, ரோட்ல மாட்டு வண்டி ஓட்ற மாதிரியினு நினைச்சியா? கடல்ல கிடக்கிற குண்டு கிண்டையெல்லாம் எடுத்துத் துப்புரவு பண்ணனுமுல.” “என்ன!... தண்ணிக்குள்ளயுமா குண்டு போடுறான். பாவிப் பயல்...! பதத்துப் போகாது?” “அதெல்லாம் அததுக்குத் தக்கனையா சூச்சியம் வைச்சிருக்கான்ல, சரி, காப்பி கொண்டா.” “ஏன், அதுக்குள்ள என்ன அவசரம்? இன்னம் ஒரு தோசை தின்னா என்னவாம்?” “போதும், காப்பி கொண்டா, சாட்டர் வங்க்ப் பெரியதொரை வந்திட்டாராம். அவரைக் கண்டுக்கிடணும்.” காபியைக் குடித்துவிட்டு முன்கட்டுக்குப் போய், அலமாரியில் தொங்கிய சட்டையை அணிந்து, மேல்துண்டை இடதுதோளில் தொங்கவிட்டு, மிதியடியை மாட்டி, வலது கையில் குடையுடன் புறப்பட்டார். “இந்தா, காமாட்சி, கதவை பூட்டிக்ய” - வாசலில் நின்றபடி, சாலையில் போன ரிக்ஷாவைக் கூப்பிட்டு ஏறினார். “வேல் மயிலம்! முருகா!” ரிக்ஷா வண்டி கிழக்கு முகமாய் விரைந்தது. பிள்ளையவர்கள் காலை நீட்டிச் சாய்ந்தார். டிராம், கார், சைக்கிள், ரிக்ஷா வண்டிகள் பறந்தன. இருபுறமும் மாறிமாறிப் பார்த்தார். ‘இன்னம் கொஞ்ச நாள்ல பழைய நிலைமை வந்திடும். *கிந்தா விலை மளமளன்னி ஏறுச்சினாப் போதும். ம்ம்... சண்டை வந்து பயகளைக் கழுதைப் புரட்டாக்கிப் பிடிச்சு. ஒவ்வொண்ணும் மட்டு மரியாதையில்லாம குழாயையும் தொப்பியையும் மாட்டிக்கிட்டு திரிஞ்ச திரிச்சல், பெட்டியடிக்கி இருந்ததுகள்ளாம் திடுதிப்புன்னிச் சொந்த முதலாளி, மொறையா தொறையா மேல வந்தாவுல நிலைச்சு நிக்யலாம். பத்தாததுக்குப் பட்டாளம். ஊரைப் பிடிக்யப் போறாங்யளாம் ஊரை...’
* கிந்தா - ரப்பர் ரிக்ஷா ஆறு முச்சந்தியைத் தாண்டி சென்றது. “தபே, தவ்க்கே புசார்!” இடப்புறம் நடைமேடையில் நின்ற ‘கத்திக் கடை’ லாம் சிங் லீ - பிள்ளையவர்களின் பற்று வரவுப் புள்ளி - வந்தனை செய்தான். “தவே, தவே!” புன்முறுவலுடன் தலையை ஆட்டினார். வின்சர் தியேட்டர் நெருங்கியது. “என்ன வானாயீனா, சாட்டர் வங்கிப் பெரிய தொரை வந்திட்டாரே, கண்டுக்கிட்டியகளா?” எதிரே வந்த ரிக்ஷா நின்றது; சாத்தப்ப செட்டியார் இறங்கினார். “தொரையக் கண்டுக்கிடத்தான் போறென்.” வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினார். “நம்ம காரியங்களைப் பத்தி என்ன சொன்னாரு தொரை?” “நம்ம காரியங்களுக்கு என்ன குதாவடையும் வராது. தொரைதான் நறுக்குத் தெறிச்சாப்புல சொல்லிப் பிட்டாரே, ஹிஹிஹி.” “எல்லாம் தண்ணிமலையான் செயல், நம்மால் ஆகுறது ஒண்ணுமில்லை.” வானாயீனா, கைகூப்பிக் கண்ணை மூடினார். கார்கள் அலறிச் சென்றன. ரிக்ஷாக்கள், சைக்கிள்களின் மணி கணகணத்தது. தலைக்குமேல் மூன்று விமானங்கள் இரைச்சல் கிளப்பிப் பறந்தன. “அதில வந்து பாருங்க வானாயீனா, பொறுத்தார் பூமியாள்வார்ன்னி சொன்னது வீண் போகாது. நாமளும் இந்தப் பயக ஆட்டத்தையெல்லாம் பார்த்துக்கிணுதான் இருந்தம். இன்னிக்கிப் பாத்தியகள்ள, அம்புட்டுப் பயலும் சிங்கி அடிக்கிறாங்ய; சிங்கி அடிச்சிங்ங்ங்சிங்.” சிங்கி அடிப்பது போல இரு கைகளையும் சேர்த்து அடித்தார் சாவன்னா. “அம்புட்டுப் பயலும் சிங்கி அடிக்கிறாங்ய வானாயீனா, சிங்கி, ஹிஹிஹ்ஹீஹிஹி!” “நல்லாஅச் சொன்னியக, நூத்துல ஒரு பேச்சு!” விழிகள் மேலேறி இறங்கின. “அம்புட்டும் தறிதலைக் கழுதையக. மொறதொற வேண்டாமா? எல்லாம் சகட்டு மேனிக்கி காலில குழாயி, வாயில கொள்ளி... ஆடுகாலிக் கழுதையக.” “அதில ஒரு சங்கதி பாருங்க வானாயீனா, வெள்ளக்காரனுக்கு இதெல்லாம் பிடிக்யாது. இந்தக் கழுதையகளை அண்ட விட மாட்டான். அவங்ககிட்டக் கணக்கின்னாக் கணக்குத்தான். கழுதையின்னாக் கழுதை, குதிரையின்னாக் குதிரை, ஹிஹிஹீஹிஹி... சரி வரட்டுமா?” “ஆமா, இன்னம் நியூ லயன்லயே இருக்குறியகளே, இங்கிட்டு பினாங் ஸ்திரீட்டுப் பக்கம் கிட்டங்கில வர்றாப்புல இல்லியோ?” “வரத்தான், வரத்தான். கிட்டங்கியக் கொஞ்சம் மராமத்துப் பண்ணிக்கிணு வரலாமின்னி இருக்கம். ஆச்சு, அடுத்த மாத வாக்குல அங்கிட்டு வர வேண்டியதுதான். அதில வந்து பாருங்க. வானாயினா, நம்ம தொழிலுக்கு எங்குன இருந்தா என்ன? ஹிஹிஹீஹிஹி! சரி, போயித்து வாறேன்.” “சரி, போயித்து வாங்க.” “சாத்தப்ப செட்டியார் வண்டியில் ஏறி மேற்கே கிளம்பினார். பிள்ளையவர்களின் வண்டி கிழக்கே புறப்பட்டது. வெயில் சுள்ளென்று முகத்தில் விழுந்தது. துண்டுத் தலைப்பினால் நெற்றியைத் துடைத்தவாறு வலப்புறம் திரும்பினார். பெரிய பெயர்ப் பலகை தென்பட்டது:
ஜப்பான் - மலேயா ட்ரேடிங் கம்பெனி இம்போர்ட்டர்ஸ் அண்டு எக்ஸ்போர்ட்டர்ஸ் மூடித் தூசு படிந்திருந்த கடை, பிள்ளையவர்களிடமிருந்து விலகிச் சென்ற அடுத்தாள் மகாலிங்கத்தினுடையது. கோணிய முகத்தை வேறு பக்கம் திருப்பினார். ‘கம்பேஎனி! கழுதைக்கிப் பேரு முத்துமாணிக்கம்! கப்பல் காசுக்கு நம்ம கால்லதான் வந்து விழுகப் போகுது கழுதை. வட்டிச் சிட்டை போடத் தெரியாத கொதக்குப் பயலெல்லாம் கம்பேனி முதலாளி. எவனைப் பார்த்தாலும் இம்போடு எசுப்போடு, தெரு நீளத்துக்கு அட்ரசுப் பலகாய். ஆனானப்பட்ட சாட்டர் வங்கியிலயே இம்புட்டுப் பெருசாய் அட்ரசு போடலை...’ சூலியா தெருவில் திரும்பிய வண்டி பள்ளத்தாவில் உருண்டோடியது. வலப்புறம், பகலுறக்கத்தில் ஆழ்ந்திருந்த டீன்ஸ்டின் ஹோட்டல் நீலநிற உருவமாய் எதிரோடி மறைந்தது. இடப்பக்கம், வெஸ்ட் மினிஸ்டர் சலூன் படிக்கட்டில் ஏறிய திருவேங்கடம் விரைந்து திரும்பிக் கும்பிட்டார். இருபுறமும் இடிந்து கிடந்த கட்டிடங்கள் - முன்பு சீரும் சிறப்புமாய் நின்ற கடைகளின் எலும்புத் துண்டுகள் தென்பட்டன. ‘சீமைச் சாமான் வியாபாரம்’ புவாக்கூய் செங்கின் கடை - வானாயீனா மார்க்கா தலையெடுத்த காலத்தில் தோன்றி, அதன் கடன் உதவியோடு வெகு விரைவாய் முன்னுக்கு வந்த ‘புக்கு சென்’ கடை - வலப்புறத்தில் தரைமட்டமாய், புதர் மண்டிக் கிடந்தது. மடியில் கிடந்த துண்டை எடுத்துக் கழுத்தைத் துடைத்தவாறு முகத்தைத் திருப்பி, பின்புறப் படுதா ஜன்னல் வழியாகப் பார்த்தார். ‘ம்ம், என்னமோ, புக்கு சென் பய தலையெழுத்து இப்படி இருந்திருக்கு. ஆளுன்னி இருந்தான்னா, எப்படியும் பணத்தைக் கறந்திரலாம். அவன் தான் கடையோட கடையா மண்ணாய்ப் போனானே... அம்புட்டுத்தான்; புக்கு சென் கணக்கைச் செலவெழுதிப்பிட வேண்டியதுதான். அவனையும் சும்மா சொல்லக் கூடாது... ஆதியிலயிருந்து பத்துவரவு பண்ணி நமக்கும் நல்லாக் கொடுத்தான்; அவனும் சம்பாரிச்சான். நாமளும் ராத்திரியின்னி பகலின்னிப் பார்க்காமல் கேக்கிறப்பல்லாம் அட்டியில்லாமக் கொடுத்தம். ம்... ம்... என்னமோ, போறது போயித்துப் போகுது...’ செருப்புக் கடைகள், தகரக் கடைகள், பட்டறைகளில் சுத்தியல்கள் மோதி ஒலித்தன. வானாயீனா தலையைத் தடவினார். ‘யுத்தம் வந்திட்டால் அவனவன் நினைச்சபடி நடந்துக்கிறது போலயிருக்கு. பெரிய மனுசன் சின்ன மனுசன்னி கிடையாதா... இந்தச் செல்லையாப் பயலை என்னமால்லாம் நினைச்சிருந்தோம். நம்ம சாதி சனம், தெளிவான பய, இங்கிலீசு படிச்சவனாயிருக்கான். ஆளாக்கி விடுவம்; மரகதத்தைக் கட்டி வச்சால் கைக்கு உதவியாயிருக்குமுனு நினைச்சம். அவன் என்னடான்னா, சொல்லை மீறிப் பட்டாளத்துக்குப் போயிட்டு வாறான். டுப்பாக்கி பிடிச்சவன் கைக்கும் இந்தத் தொழிலுக்கும் எம்புட்டுத் தூரம். அவன் நெஞ்சைத் தூக்கிக்கிணு வருறதைப் பார்த்தாலே பயமாயிருக்கு. கடைவீதியில மனுசாதி மனுசனெல்லாம் இவனைக் கண்டு ஒதுங்கி நடக்கிறாக. ஆள் சூட்டிகையான பயல், பாக்க லெச்சணமாய்த்தான் இருக்கு. இருந்து என்ன செய்ய? தொழிலுக்கு லாயக்கில்லையே...’ பிட் தெரு நெருங்கிற்று. தமிழோசை பெருகியது. பிள்ளையவர்கள் வலது உள்ளங்கையால் நெற்றியைத் தடவினார். ‘இவனை மரகதத்துக்குக் கட்டி வச்சால் வம்பை வெலைக்கி வாங்கினாப்புல ஆயிப் போகும். தொழில் அம்புட்டுத்தான். நாமள் கண்ணை மூடுறதோட கடையவும் மூடிப்பிடுவான். என்ன பாடுபட்டு நெலைநாட்ன தொழில்... நாகலிங்கம் பயல் சுத்த மண்ணாங்கட்டி, இருந்தாலும் சொல்றதைச் செய்துக்கிணு கிடப்பான்; வம்பு தும்பு ஒண்ணுக்கும் போக மாட்டான்... இந்த ரெண்டு பயகளையும் விட்டால் வேறு தோதான கழுதை ஒண்ணுமில்லையே... செல்லையாப் பயதான் இப்படி மோசம் பண்ணிப்பிட்டான். வடிவேலுக்குப் பிறகு இவன் தான் நமக்குப் பிள்ளையன்னி நெனச்சம்... அந்தப் பய இனிமேல் தொழிலுக்கு லாயக்குப்பட மாட்டான்...’ செட்டித் தெருவில் திரும்பிய ரிக்ஷா ஆ.சி.வயி... மார்க்கா கிட்டங்கிக்கு முன்னே போய் நின்றது. பெட்டியடிப் பையன் சேது ஓடி வந்து, வண்டிக்காரனுக்குச் சில்லறை கொடுத்தான். வயிரமுத்துப் பிள்ளை செருமிக் கொண்டே... வாசலைத் தாண்டி, முதல் பெட்டியடிக்கு முன்னே, சுவரோரம் நின்ற நாற்காலியில் போய் உட்கார்ந்தார். ‘வேல் மயிலம்! முருகா!’ வலக்காலை மிதியடியிலிருந்து பிரித்துத் தூக்கி, இடது துடை மீது அட்டணை போட்டார். பையன் எச்சில் பணிக்கத்தை கொண்டு வந்து பக்கத்தில் வைத்தான். ஆள் உயரம் இருந்த இரும்புப் பெட்டகத்துக்கு முன்னால் கைப்பெட்டி. இரண்டுக்கும் நடுவில் பெட்டியடிப் பையன் சம்மணம் கூட்டி, பொம்மைபோல் அமர்ந்திருந்தான். இடப்புறத்தில் பளிங்குக் கைப்பிடியுடை அலமாரி. அதையொட்டி அமர்ந்திருந்த நாகலிங்கம் கைமேசை மீது விரித்துக் கிடந்த ‘குறிப்பு’ப் புத்தகத்தில் கணக்குப் பதிந்து கொண்டிருந்தான். வரிசையாக இருந்த நான்கு பெட்டியடிகளிலும் ஏறக்குறைய இதே காட்சி. சுவர் நெடுகிலும் சாமி படங்கள், பெட்டகம், அலமாரி, படங்கள் யாவும் குங்கும் முத்திரையுடன் கூடிய சந்தனத் தெளிப்பும், மல்லிகை மாலைகளுமாயிருந்தன. பூவும், ஜவ்வாது வத்திப் புகையும் கலந்த இனிய மணம் கிட்டங்கி முழுவதும் பரவி நின்றது. “மேலாள் எங்கடா?” வானாயீனாவின் குரல் கிளம்பியது. “பட்டாணி ரோட்டு வரை போயிருக்காரு. ‘லியான் குங்’கைப் பார்க்கிறதுக்கு.” “செல்லையா?” “வங்கிக்கிப் போயிருக்காரு.” “பேரேடெல்லாம் பதிஞ்சாச்சா?... யார்ரா பதியிறது?” “ஆமா, பதிஞ்சாச்சு, செல்லையாண்ணன் தான் பதியிறாரு.” “எங்கே எடுத்தா.” பெட்டியடிப் பையன் பேரேட்டுப் புத்தகத்தை எடுத்து வந்து கொடுத்தான். சட்டைப் பையிலிருந்த கூட்டைத் தூக்கிப் பிடித்து, கண்ணாடியைக் காதில் மாட்டிக் கொண்டு ஏடுகளை புரட்டினார். “சிட்டைகளை எடுரா?” பையன் சிட்டைப் புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தான். பேரேட்டை மூடிக் கொடுத்துவிட்டு, தினசரிச் சிட்டை, ரொக்கச் சிட்டை, சமையல் சிட்டை, செலவுச் சிட்டைகளை ஒவ்வொன்றாகப் புரட்டினார். “பெரிய தொரை இருக்காரா?” ரொக்கச் சிட்டையைப் பார்த்தவாறு கேட்டார். “இருக்காரு, இப்பத்தான் வந்தார்.” “டேய், போயி ரோசாப்பூ மாலை, செண்டு, எலுமிச்சை, ஆரஞ்சி இதுகளை வாங்கிக்கிணு ஓடியா.” உள்கட்டுக்குப் போய்ச் சைக்கிளை உருட்டி வந்து வெளியே வைத்தான் சேது. பிறகு, பெட்டியைத் திறந்து பணம் எடுத்துக் கொண்டு, சிட்டையில் பற்றெழுதி விட்டுக் கிளம்பினான். “தொரையப் பாக்க நம்ம செட்டிய வீட்டு ஆளுக ரெம்ப நிக்கிதோ?” “அஞ்சாறு பேர் சின்னாக.” “ம்ம்... பானாழானா நிக்கிறாகளா?” “அவுகளைக் காணோம், சூனாப்பானா நின்னாக.” “பழைய ஆளுகதான் வேலை பாக்குதோ?” “ஆமா, பழைய ஆளுக எல்லாரையும் சேத்துக்கிட்டாகளாம்.” “ம்ம்... டேய், சுப்பா!” “ஏஎன், இந்தா வந்திட்டென்” உள்ளேயிருந்து கடைச் சமையலாள் சுப்பையா ஓடி வந்தார். “வென்னி கொண்டா.” “ஆகட்டும், இந்தா கொண்டாறென்” - உள்ளே ஓடினார். “ஏண்டா நாகலிங்கம், மாணிக்கம் பய வந்தானா? என்னமோ பழைய வேலைக்கிப் போப் போறமுன்னானே?” “முந்தாநாள் வந்தாரு. பழைய தோட்டத்தில்தான் வேலை பாக்கிறாராம்.” “ம்ம்... வேலை கிடைச்சிருச்சா... ம்ம்... அடுத்தவாட்டி வருறப்ப என்னையப் பார்த்துப்பிட்டுப் போகச் சொல்லும்.” “ஆகட்டும், சொல்றென்.” கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|