உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பாகம் மூன்று 3. அக்கினி மைந்தன் “கருப்பையாண்ணே! கருப்பையாண்ணே!” கதவைத் தட்டினான் செல்லையா. தாழ் நீங்கிய கதவு மெதுவாய்த் திறந்தது. உள்ளே காலெடுத்து வைத்தான். சன்னல்களின் மஞ்சள் கண்ணாடி வெளிச்சத்தில் மரகதம் பொற்சிலையாய் நின்றாள். ஈரத் தலையில் தேங்காய்ப்பூத் துவாலை சுற்றியிருந்தது. தங்க நிறமேற்ற வெள்ளை ரவிக்கை. ஆலிவ் பச்சைப் பட்டுச் சேலை. பின்னிய விரல்களோடும் கைகள் நெஞ்சில் ஒட்டியிருந்தன. வட்ட நிலவு முகத்தில் மிதந்த மான் கண்கள் அள்ளி விழுங்கும் விருப்பத்துடன் பார்த்தன. “மர... க... தம்!” உரை தடுமாறிற்று. உடல் புல்லரித்து முகத்தில் அனலாடியது. “மரகதம்!” இடக்கை பின்னே நீண்டு கதவைச் சாத்திற்று. மரகதம் பேசவில்லை. இமைக்காமல் ஆடவன் முகத்தைப் பார்த்து நின்றாள். “மரகதம், தண்ணிமலையானைக் கும்பிட்டேன். இந்தா, பிரசாதம்.” மடியில் இருந்த பொட்டலத்தை எடுத்து நீட்டினான். மார்பிலிருந்த கைகளை இறக்கி நீட்டி வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். “மரகதம்!” தாயின் சேலையைப் பற்றிக் கொண்ட அரவணைப்புக்காக ஏங்கிக் கூப்பிடும் குழந்தையின் குரல் போல இருந்தது. அவள் கண்களில் நீர் படர்ந்தது. கைகளால் முகத்தை மூடினாள். உடல் குலுங்கிற்று. மெல்லிய விம்மல் பிறந்து வந்து செல்லையாவின் நெஞ்சில் பாய்ந்தது. “மரகதம்.” ஒரு அடி எடுத்து வைத்துக் கண்ணை மூடியிருந்த கைகளையும் கன்னங்களையும் சேர்த்துத் தன் இரு கரங்களாலும் தொட்டான். “தொடாதியக, உங்களைக் கும்பிடுறென். என்னால தாங்க முடியாது.” கண்களிலிருந்து அருவி போல நீர் இறங்கியது. “மரகதம் வீணாய்க் கவலைப்படாதே. எல்லாம் நல்லபடியாக முடியும். தண்ணீர்மலையான் நம்மைக் கைவிட மாட்டான்.” “ஹ்ம். நம்ம ரெண்டு பேருக்கும் தண்ணிமலையானை விட்டால், யார் துணையிருக்கு?” கண்களை மூடியிருந்த கைகள் இறங்கி, மீண்டும் விரல்களைப் பின்னிக் கொண்டு நெஞ்சோடு சேர்ந்தன. “உடம்பைப் பத்திரமாய்ப் பார்த்துக்கங்க. ஐயோ! முகமெல்லாம் வாடிப் போயிருக்கே.” செல்லையாவின் மனம் உருகிக் கலங்கியது. இடக்கையால் முகத்தை மூடிக் கொண்டு தலையைக் குனிந்தான். இனம் தெரியாத ஏதோ ஒன்று மென்னியை இறுக்கிப் புலன்களை அடைத்தது. “எனக்காகவா மனசைச் சோர விடுறியக...? நான் உங்க கால் தூசி விலை பெறுவனா?” அவன் முகத்தை மூடியிருந்த கையைத் தன் இரு கரங்களாலும் விலக்கிவிட்டு, நெற்றியில் வளைந்து தொங்கிய கேசத்தைத் திருத்தினாள். ஒளியிழந்து குறுகிய கண்கள் மரகதத்தின் முகத்தை நோக்கி ஏங்கின. வலக்கை, சட்டைப் பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து, அவள் கண்களைத் துடைத்தது. “உங்களைக் கும்பிடுறென், தொடாதியக. என்னால தாங்க முடியலை.” “மரகதம், கடவுள் நம்மைச் சோதிக்கிறார். பினாங்குக்கு ஏன் வந்தேன்...? ஊரில் ஏதாவது வேலை கிடைத்திருக்கக் கூடாதா?” குரல் குன்றியது. கைக்குட்டையைப் பையில் வைத்தான். “உங்களுக்கென்ன ராஜாவுக்கு? உங்க கழுத்தைக் கட்ட எந்தப் புண்ணியவதி தவம் பண்ணியிருக்காளோ!... எங்கப்பா தொழிலும் நானும் உங்க கால் சுண்டு விரலுக்குச் சமானமாவமா...” தடாலென்று கீழே சாய்ந்து அவன் கால்களைப் பற்றி அவற்றில் முகத்தைப் புதைத்தாள். செல்லையாவின் உடல் போதையுற்றுச் செயலழிந்து புளகித்துத் தகித்தது. விழித்து நிலைத்த கண்கள் பார்வையிழந்து பரிதவித்தன. நெஞ்சிலே அலையலையாய் அணியணியாய்த் தெளிவுருவற்ற எண்ணக் காட்சிகள் உதித்து ஊராய்ந்து உழப்பியோடி மறைந்தன. செவல்பட்டி ஊருணி - திண்ணைப் பள்ளி - கோயில் - இலுப்பை மரம் - மரகதம் மரகதம் மரகதம் - பம்பரம் - வேடிக்கை - சிரிப்பு - சண்டை - சிணுங்கல் - சமரசம் - கப்பல் - பினாங் கொண்டு வேலை - கோலா மூடா - சிம்பாங் தீகா - ஜாத்தி மரம் - தொழில் - முதலாளி - மரகதம் மரகதம் மரகதம்... “மரகதம்! மரகதம்!” குனிந்து பூப்போலத் தூக்கினான். அவள் உடல் துவண்டது. பொருந்தியிருந்த இமைகள் திறந்தன. பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு விலகினாள். “மரகதம், நாம் வெளியேறிக் கல்யாணம் செய்து கொள்ளலாம். யாரும் தடுக்க முடியாது.” “அதில என்ன இருக்கு. தாய் பிள்ளை இல்லாமக் கலியாணமா?... அது எதுல சேத்தி?” “நீ விரும்பினால்தான் மரகதம்... நீ கண் கலங்காமல் இருந்தால் போதும்.” “நான் பொட்டச்சி, எப்படியும் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போறென். நீங்ய உடம்பைப் பத்திரமாய்ப் பார்த்துக்கங்க.” - குரல் மாறி அமைதியாய் ஒலித்தது. “முகமெல்லாம் ஏன் இப்படி இருக்கு. கண் முழிச்சியகளாக்கும். நேத்து எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சியகளா, இல்லையா?” அவன் நெற்றி, வாய், கன்னங்களில் இரு கைகளையும் வைத்து வருடினாள். “மரகதம்!” கைகளை நீட்டி அவள் தோளைத் தொட்டான். தோளில் பட்ட கைகளை நீக்கி விட்டாள். “நான் மட்டும் தொடக்கூடாதா. மரகதம்?” “உங்க கை படுறதை என்னால தாங்க முடியலையே... அப்படியே ஆகாசத்துல பறக்கிறாப்புல இருக்கு... ஒரு நிமிஷம் பிசகினால்... பாவி என்னத்துக்குப் பிறந்தேன்...?” “மரகதம்! நீ பிறந்தது வளர்ந்ததில் என்ன குற்றம்? என் மேல் தான் குற்றம். உன் அப்பா மனதை மாற்றும் திறமையில்லாத மூடன் தான்.” “நான் பூர்வ ஜெனமத்தில என்ன பாவம் பண்ணினனோ, அதுக்கு நீங்ய என்ன பண்ணுவியக... என் தலையெழுத்துப்படி நடக்கட்டும்.” கன்னங்களில் முத்து முத்தாய்க் கண்ணீர் வழிந்தது. “மரகதம், அழாதே, ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை.” இடக்கையை அவள் நெற்றியில் பாதியும் கூந்தலில் பாதியுமாய் வைத்துக் கொண்டு, வலது உள்ளங்கையால் கண்ணீரைத் துடைத்தான். “ஐயோ, என்னைத் தொடாதியக, தாங்க முடியலையே.” பின் சாய்ந்த முகத்தில் கண்கள் மூடியிருந்தன. கைகள் விழுது போல் தொங்கின. அவன் கைகள் இருப்பிடத்துக்குத் திரும்பின. “ஒரே ஒருக்க, உன் கழுத்தையும் முகத்தையும் இரண்டு கைகளாலும் தொடுகிறேன், மரகதம்.” செல்லையாவின் குரல், தாயிடம் ‘ஒரே ஒரு மிட்டாய்’ கேட்கும் சிறுவனின் கெஞ்சல் போன்று குழந்து கொஞ்சிற்று. கண் மூடியிருந்த பெண் பதில் சொல்லவில்லை. அவன் கைகள் முன்னே நீண்டு அவள் தோள்களைத் தொட்டுக் கழுத்தின் வழியாக ஊர்ந்து போய்க் கன்னங்களைத் தடவி மேலேறி, நெற்றியை ஒற்றி, மூடியிருந்த இமைகளை வருடி, மூக்கு வழியாக இறங்கி, உதடுகளைத் தடவி நின்றன. பார்வை மங்கியது. மனம் நிலைகுலைந்து குழம்பி மயங்கித் தனக்குள்ளே தன்னோடு தானாய் இசைத்தது. ‘கண்ணே, கருமணியே, கனிரசமே, கற்கண்டே! பெண்ணாய் மலர்ந்த எந்தன் உயிர் விதையே! உன் மலர்க் கரங்களால் என் கையைப் பற்றி மெல்ல நடந்து வா. அதோ அந்தப் பச்சை மாமலைக் குளிர் பூஞ்சோலையில் இளைப்பாறி இன்புறுவோம். உன் தாய் தந்தையர் அளிக்க இயன்றதையெல்லாம் உனக்கு அளித்து விட்டார்கள். இப்பொழுது நீ வேண்டுவதை அளிக்க அவர்களால் இயலாது. உன் நெஞ்சைக் கவர்ந்த நாயகனாக என்னிடமே அது இருக்கிறது. பெண் மயிலே, வா போகலாம், வா... வா... எதிரிலிருந்து வந்த பெண்மைச் சுடுமூச்சு, நனவுக் கனவு மனவோட்டத்தைக் குலைத்துப் புலன்களை வசப்படுத்திற்று. அவள் தலை பின்சாய்ந்து கழுத்தோடு ஒட்டியிருந்தது. மலர்ந்த அதரங்களுக்கிடையே முத்துப் பற்கள் மின்னின. பாதி மூடியிருந்த கண்களில் சுடர் தெறித்தது. தென்றலில் அசையும் பூங்கொடி போல் உடல் ஆடிற்று. “மரகதம்... மரகதம்...” அவள் முகத்தின் மீதிருந்த அவன் கைகள் மீண்டும் இருப்பிடம் திரும்பின. அவள் உடல் திடுக்கிட்டு நிமிர்ந்தது. மான் கண்கள் மருண்டு விழித்தன. “மரகதம், ரெஜிஸ்டர் கல்யாணம் செய்து கொள்வோம்; யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை.” “அந்தப் பேச்சை விட்ருங்க. வேண்டாம். உங்களுக்கு என்னையத் தருறதுன்னால் முழுசாய்த்தான் தருவேன்.” “மரகதம், இங்கே பார் மரகதம், சரியென்று சொல், ரெஜிஸ்டர் கல்யாணம் செய்து கொள்ளலாம். உன் காலில் விழுந்து கும்பிடவா, மரகதம்.” “ஐயோ, ஏன் என்னைய உயிரோட கொல்றியக?... கும்பிடுறேன் கிம்புடுறேன்னி யெல்லாம் பேசாதியக... உங்க அருமை தெரிஞ்ச வீடாய்ப் பார்த்து என்ன ஜாதியிலாவது கல்யாணம் பண்ணிக்கங்க.” “சரி, இனிமேல் நான் என்னத்தைச் சொல்லுவது?” “உங்களுக்கு ஒரு குறையும் வராது. உங்க அருமை தெரிஞ்ச இடமாய் வேற எங்கெயாவது வேலையும் பார்த்துக்கங்க.” “பார்த்திருக்கேன், மரகதம்.” “எங்கே?” “அக்கரையில், தோட்டத்துக் கிராணி வேலை. இங்கேயும் பேங்கில் வேலை கிடைக்கும்.” “அக்கரையில் ஈயத் தண்ணி, உடம்புக்கு ஒத்துக் கிடாதுன்னி சொல்வாகளே, சாப்பாடும் இங்கெ மாதரி வசதியாயிராது.” “ஈயத் தண்ணியெல்லாம் கதை... இங்கேயே வேலை கிடைக்கும்.” “இங்கேயே நல்ல வேலையாய்ப் பார்த்துக்கங்க. தோட்டத்து வேலைக்கெல்லாம் போனால் கொசுவிலயும் ஈரத்திலயும் உடல் கெட்டுப் போகும். எதுக்கும் மாணிக்கண்ணனையும் ஒரு வார்த்தை கேட்டுக்கங்க.” “ஆகட்டும், மரகதம். அவன் தான் வேலை இருக்குமிடங்களைச் சொன்னான்.” “ம்ம்... நான் ஒண்ணு சொல்றேன், கேட்பியகளா?” “சரி சொல்லு, மரகதம்.” “நீங்க கல்யாணம் பண்ணிப் பொட்டச்சி பெறந்தான்னா, அவளுக்கு மரகதமுனு பேர் வையிங்க, ம்ம்ம்...” செல்லையாவின் கண்கள் குவிந்தன. அவள் மான் விழிகள் மேலேறிச் செருகின. குவிந்த இமைகளை நோக்கியவாறு தாபப் பரவசமாய்ப் பேசினாள். “அவளை நாள் முச்சூடும் உங்க மடியிலயே வச்சுக்கிடணும். ம்ம்ம், அவள் தோளில், கழுத்தில், அப்புறம் வாயில் மாறி மாறி முத்தம் கொடுப்பியகளாம், ம்ம்ம். அவள் கன்னத்தையும் வாயையும் நல்லாக் கடிச்சு வச்சிருவியகளாம், ம்ம்ம். பிறகு...” செவிமடுத்தும் செவியுறாது கண் மூடிச் சிலை போல் நின்றவனின் மனக் குகையில் அடங்கி ஒடுங்கிக் கிடந்த அகங்கார விரக மேகங்கள் திடுமெனத் துள்ளிக் குதித்துக் குழம்பி இடி முழக்கத்துடன் கூடியலறி ஆரவாரிக்கலாயின. மரகதத்தை நான் ஏனெதற்காக இழப்பது? என் மார்பிற்குரிய இந்த நாயகி மீது நாயகனைக் காட்டிலும் தந்தைக்கு எவ்வகையில் உரிமைப் பொறுப்பு மிகுதி? மரகதம், நான், வயிரமுத்துப் பிள்ளை - மரகதமும் நானும் ஈருடல் - ஓருயிர். அவர் எங்கள் வைரி - எதிரியின் கருத்தை நாங்கள் எதற்காக ஏற்பது? வழக்க முறையில் தந்தையின் கருத்தை மரகதம் பெரியதாக மதிக்கலாம். அது வெறும் வழக்கமுறை - புகட்டப்பட்ட பாடம். என் உயிருக்கு உயிரான நாயகியை நான் இழக்க வேண்டுமென்பது தவிர்க்க முடியாத விதியின் முடிவா? யார் முடிவித்த விதி, அதை நிறைவேற்றி முற்றுவிப்பவர் யார்? யாராலும் முடியாது. யாரார் கூடி நிறைவேற்ற முயன்றாலும் எதிர்ப்பேன் - எதிர்த்து முறியடிப்பேன். நான் மரகதத்தை இழக்க மாட்டேன்; அடைந்தே தீருவேன். இப்பொழுது என் நாயகியை, என் நெஞ்சைக் கவர்ந்த காதலியை வாரியணைத்துத் தூக்கி முத்தி முத்தி முத்தி முத்தாடி அவளுடன் இரண்டறக் கலந்து மகிழ்வேன். என்னைத் தடுப்பவர் யார்? யார்? யார்?... முறுக்கேறிக் கொண்டிருந்த உடல் உருக்குக் கம்பியாய் விறைத்தது. மூடிய கண்களில் எரிந்த தீ சிதறிக் கிளம்பி எதிரே புளகாங்கிதப் பரவசமாய்ப் பேசி நின்றவளின் உணர்வைச் சுட்டு எச்சரித்தது. அவன் உடல் - மன மாற்றத்தை உள்ளுணர்வால் அறிந்த பெண் அரண்டு மிரண்டு அஞ்சிப் பதறினாள். பசுவின் மீது பாயும் காளையின் விலங்கொளி மின்னுகிறதே, ஐயோ! என் செய்வேன், என் செய்வேன், ஐயோஒஒ, ஆத்தா அழகு நாச்சியா! தாயே ஈசுவரிஇஇ...! அகங்கார வடிவனாய் அக்கினி மைந்தனாய் மாறி ஆடவன் தனது மார்பிற்குரிய நாயகியை வளைத்திழுத்து வாரியணைத்துத் தூக்கி உடைமையாக்கிக் கொள்ள கைகளை நீட்டிக் கண்களை விழித்தான். அவளைக் காணவில்லை... மறைந்து விட்டாள். காங்கை தாங்காமல் உடல் நடுங்கி வெலவெலத்தது. கண்களில் தெரிந்த எல்லாம் விதறி ஆடின. “மரகதம்...! என்னம்மா?” எங்கிருந்தோ குரல்கள் வந்தன. வலக்கையால் முகத்தைத் தடவினான். இசையுணர்வு திரும்பி மனக்குகையில் அமைதி மீண்டது. ‘ஆஅஅ! என்ன மடமை, என்ன மடமை?... என்ன செய்யத் துணிந்தேன். என்ன செய்யத் துணிந்தேன்? ஒரு கணம் முந்தியிருந்தால்... என் அகங்கார வெறியால், மாசற்ற ஒரு நற்பெண்ணின் உடலையும் மனதையும் களங்கப்படுத்தி, அவளையும் என்னையும் மீளா நரகத்தில் வீழ்த்தப் பார்த்தேனே... என் விருப்பத்துக்கு எல்லோரும் அடிபணிய வேண்டுமென்று எதிர்பார்க்க எனக்கு என்ன உர்மை இருக்கிறது? மரகதம் என் விருப்பப்படி நடக்காமல், தந்தை விருப்பப்படி நடப்பதே நலமென்று கருதுவதில் என்ன தவறு? அதுவும் அவள் விருப்பமன்றோ? உண்மையிலேயே என் விருப்பத்தைக் காட்டிலும் தந்தை விருப்பம் நலமாயிருக்கலாம். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை... “செல்லையா, வாப்பா! மொகம் ஏன் இப்படி இருக்கு. உடம்புக்கு என்ன? உக்காரப்பா.” குளித்து முழுகிய தலையுடன் காமாட்சியம்மாள் வந்தார். “ம், ஒண்ணுமில்லை.” - பெஞ்சு மீது உட்கார்ந்தான். “உடம்புக்கு முடியலையா, முகமெல்லாம் வெடிச்சித் தெரியிதே.” “அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஆயர் ஈத்தாம் போய்ட்டு வந்தேன். இங்கெ அடுத்தாப்புல கொஞ்சம் வேலையிருக்கு... வெயில்ல பித்தம் மாதிரியா... சோடா வாங்கிக் குடிச்சேன், இப்பச் சரியாப் போச்சு.” “நல்ல பிள்ளை, போ. எண்ணெய் தேய்ச்சி முழுகினாதானே. பெத்தவ இருந்தாப் பிள்ளை முகம் இப்பிடி இருக்கிறதைப் பார்த்து என்ன பாடுபடுவாள்... இரு, காபி கொண்டாறேன்.” “காபி வேண்டாம், ம், சோடா குடிச்சதோட காபி குடிக்யக் கூடாது.” “சரி, டாக்கட்டர்ட்டச் சொல்லி மருந்து வாங்கிச் சாப்பிடு.” “ம், கல்யாண விஷயம்... முடிவாய்ச் சொல்லிவிட்டாரா? நீங்கள் கொஞ்சம் சொல்லிப் பாருங்களேன்.” “சொல்றென், சொல்லிக்கினேதான் இருக்கேன். உன்னையக் கும்பிடுறேன். அவர் மனசு போல விட்டுக் கொடுத்து நடந்துக்கப்பா. என்னமோ, தண்ணிமலையான் இருக்கான், பார்ப்பம்... ஹ்ம்ங், நானும் பொம்பளையினு பிறந்தனே... மகனைப் புதைச்சாச்சு, இனிம மக இருக்காள், அப்புறம் நான்...” “நேரமாகுது, நான் வர்றென்,” எழுந்து நின்றான். “போயிட்டு வாப்பா. நீ ஒண்ணும் மனசை விட்ராதே. எல்லாத்துக்கும் தண்ணிமலையான் இருக்கான்... வெயிலாயிருக்கு, வண்டி பிடிச்சிக்கிணு போ.” தெருவில் இறங்கி நடந்தான். காமாட்சியம்மாள் கதவுக்குத் தாழ் போட்டுவிட்டு உள்ளே சென்றார். கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|