உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பாகம் மூன்று 5. தண்ணீர்மலையான் கோயில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரம், செட்டித் தெரு அயர்ந்து கிடந்தது. தண்ணீர்மலையான் கோயிலுக்குப் போவதற்காகச் செல்லையா தெருவில் இறங்கினான். உடலில் தூய வெள்ளை உடுப்பு. நெற்றியில் திருநீறு பளிச்சென்று மின்னியது. குட்டி ஆஸ்டின் கார் கடைக்கு முன்னே வந்து நின்றது. “டேய், என்னடா இது, ஆண்டிப் பண்டாரம் போல?” காரிலிருந்து இறங்கியவன், செல்லையாவின் தோள் மீது கையை வைத்தான். “நான் ஆண்டிப் பண்டாரந்தானே, மாணிக்கம்?” முகத்தில் சோர்வுப் புன்னகை அரும்பியது. “ஓ, அப்படியா! எனக்கு இவ்வளவு நாளாகத் தெரியாதே!” கலகலவென்று சிரித்தான். வெள்ளைச் சராய், சிமிந்தி நிறச் சட்டை, கரும்பச்சைத் தொப்பி அணிந்திருந்தான். வாயின் வலக்கோடியில் சிகரெட் புகைந்தது. “சரி, ஏறு, அண்டிமன் கிஸ்திச் சீட்டு ஒண்ணுக்கு வட்டி கூட ரிங்க் அஅஆஅஅஆ...” “சரியிங்க, தொரைகளே!” காரில் ஏறினான். வாசல்களில் பல் துலக்கியும் காறித் துப்பியும் நின்ற அடுத்தாட்கள் பார்த்தும் பார்க்காதது போல் பார்த்திருந்தனர். மாணிக்கம், வாயில் புகைத்த சிகரெட்டை எடுத்து எறிந்து விட்டுப் புதுச் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு காரினுள் ஏறி உட்கார்ந்தான். ஆஸ்டின் கடகடத்துக் கிளம்பியது. “எப்போது வந்தாய்?” “நேற்றிரவு. நெற்றியில் ஒரு வாளி சுண்ணாம்பு பூசி இருக்கிறதே, தைப்பூசம் நெருங்கி விட்டதா? காலை நேரத்தில் எங்கே புறப்பட்டாய்?” “தண்ணீர்மலையான் கோயிலுக்கு.” “என்ன, கோயிலுக்கா! அங்கென்ன வேலை? கல்யாணக் கிறுக்குப் பிடித்தவர்களல்லவா அந்தப் பக்கம் போவார்கள்?” “ஆமாம், அப்படித்தான் கேள்வி. ராத்திரி ஏன் கடைக்கு வரவில்லை? எங்கே போயிருந்தாய்?” சூலியா தெருவில் வடக்கு முகமாகத் திரும்பியது கார். “ஹல்லோ!” எதிரே ரிக்ஷாவில் வந்த சீன நண்பனைப் பார்த்து மாணிக்கம் கையை அசைத்தான். பிட் தெருச் சந்தியில் ஆயிரம் ஆயிரமான கருங்குருவிகள் தந்திக் கம்பிகள் மீது தொத்தி நின்றும், மேலுங்கீழுமாகப் பறந்தும் கூச்சலிட்டன. கப்பித்தான் மசூதியிலிருந்து புறாப் பட்டாளத்தின் குமுகுமுப்பு இழுமென வந்தது. “நானும் காதரும் ஊர் சுற்றினோம். உனக்கு என்னவோ மோகினிப் பிசாசு பிடித்திருக்கிறதென்றான். அதனால்தான் உன்னைக் கூப்பிடவில்லை. சோறு - படுக்கை அவன் கடையில்!” “நீ பினாங்குக்கு வந்தால் எங்கள் கடையில் தான் சாப்பிட வேண்டும்; படுக்க வேண்டும் என்று முதலாளி சொல்லியிருக்கிறார்.” “சிறு பிள்ளையை வெளியே திரியவிட்டால் காலிகளோடு சேர்ந்து அநியாயமாய்க் கெட்டுப் போகும் பார், அதற்காக.” “இது யாருடைய கார்? போன தடவை வந்தது வேறு கார் அல்லவா.” “இது எஸ்டேட் டாக்டர் நாயர் - அந்தக் கஞ்சி வெள்ளம் பயல் கார். அவன் ஒரு பெட்டி ‘ஸ்டவுட்’ வாங்கி வைத்துக் கொண்டு அங்கேயே யாகம் செய்கிறான்.” ஆஸ்டின் இடதுபுறம் திரும்பி பினாங்கு ரோடில் செல்லலாயிற்று. “சலாம் வருது, தம்பி!” பூ மார்க் கைலிக் கடைக்கு முன்னால் வேப்பங் குச்சிப் பிளவையால் நாக்கு வழித்துக் கொண்டிருந்த இபுராகிம் ராவுத்தர் தலையை நிமிர்த்தினார். “சலாம், நானா!” செல்லையா பதில் வணக்கம் கூறினான். “நீ பசியாறி விட்டாயா?” காருக்குள் பொருத்தியிருந்த கண்ணாடியில் செல்லையாவின் முகத்தைப் பார்த்தவாறு கேட்டான். “கோயிலுக்குப் போய் வந்த பிறகு தான், உனக்கு வேறு வேலை ஏதாவது...” “இல்லை. இப்பொழுது நேரே சொர்க்கம் - கோயில். பிறகு நரகம் - சோற்றுக்கடை.” குவின்ஸ் தியேட்டர், போலீஸ் தலையகம், சிம்சாங் கியூரியோஸ், சாம் அண்ட் நாம், விங் லொக் ரெஸ்டாரன்ட்... பின்னோடி மறைந்தன. “உங்கள் மானேஜர் ஜாக்சன் எப்படி இருக்கிறான்? பழைய சங்கதிகள் காதில் விழுந்திருக்குமே?” “அவ்வளவும் தெரியும்; நானே சொன்னேன். ‘டஸ்ஸின்ட் மேட்டர்’ என்று கூறிவிட்டான்.” வடக்கே திரும்பி கார் பர்மா ரோடில் பாய்ந்தோடியது. ரெக்ஸ் கூத்து மேடை, கடைகள், மெட்ராஸ் தெரு, ரங்கூன் தெரு, நியூ ஓர்ல்ட் களியரங்கம், கவாத்தோ தெரு, மாதா கோயில், முட்டுச் சந்துகள். சாலையின் இரு விளிம்பிலும் ஒரே சீராய் அடர்ந்து செழித்துயர்ந்து பொன்னிறப் பூங்கொத்துகள் குலுங்க நிற்கும் அங்சானா மரங்கள். மரத்தைச் சுற்றின வட்டப் பரப்பில் மஞ்சள் வெல்வெட் மெத்தைபோல், உதிர்ந்து அப்பிக் கிடந்த மலர்கள் காலைக் கதிரவனொளியில் தங்கச் சருகுகளாய் மின்னின. அப்பால், சீன வணிக வேந்தர்களின் மாட மாளிகைகள், வளவுச் சுவர்களுக்குள் தளதளவென்று தழைத்து நின்ற செம்பகா மரங்களின் பசுங் கொண்டையில் வெள்ளை வெள்ளையாய் அழகழகாய்ப் பூக்கள் முளைத்திருந்தன. ரம்புத்தான் மரங்களின் பிசிர் அப்பிய செங்குருதிப் பழக்குலைகள். பேரையூர் சந்தன உருண்டைபோல் பழம் பழுக்கும் லங்சா மரங்கள். விதவிதமாக இலை வேய்ந்த செடிகொடிகளில் குவளை, அரளி, கனகாம்பர நிற மலர்கள் நகைத்தன. சிமிந்தித் தளமிட்ட டென்னிஸ் திடல்களில் ஒத்த வயதினரான ஆடவரும் பெண்டிரும் ஐரோப்பிய உடையில் பந்தாடினர்... குறுக்கோடிய ஆன்சன் ரோடைக் கடந்து சென்றது ஆஸ்டின். இடதுபக்கம், சீனர் விளையாட்டு மைதானம், பச்சைப்புல் விரிப்பு தட்டைப் பரப்பாய் விரிந்து கிடந்தது. பூலு திக்குங் கடை வீதி பின்னோடிற்று. இப்பொழுது, பிறைவட்டப் பச்சை நீலப் பவளவண்ண மலை உயர்து விரிந்து சரிந்து காட்சியளிக்கிறது. சரிவில் இங்கும் அங்கும் மங்கல் வெள்ளையாய்ப் பெரும்பெரும் வீடுகள் சிறுசிறு உருவாய்த் தோன்றி மறைகின்றன. கார் இடது பக்கம் திரும்பிற்று. கோத்லீப் சாலை. இருபுறமும் ரம்புத்தான் தோட்டங்கள். இடையிடையே நீர்ப்பிடிப்புடன் வழுவழுவெனத் திரண்டுருண்டு நிற்கும் தென்னை மரங்கள். எட்டி இளநீர் பறிக்கலாம். அருவிச் சாலையில் திரும்பிய வண்டி மலையடிவாரத்தை நோக்கி ஏறியது. வலப்புறம் அடர்ந்து பரந்த தென்னந்தோப்பு விளிம்பில் தனவைசியர் தண்டாயுதபாணி கோயில். ருத்திராட்ச மாலைக் கழுத்தும் நீறணிந்த நெற்றி - கை - மார்புமாய்க் ‘கோயில் பூனை’ கானாரூனா வாசலில் நின்றார். இடதுபுறம் கள்ளுக்கடை. எப்போதும் போல் தமிழ்த் தொழிலாளர் கூட்டம் மொய்த்து நின்றது. அப்பால், போத்தல் கடைச் செட்டியார்கள் மண்டபம். கீழே சலசலத்த ஓடைப் பாலத்தைக் கடந்து, விலக்குப் பாதையில் திரும்பிப் பிள்ளையார் சந்நிதியில் போய் நின்றது ஆஸ்டின். மேல்புறம் படிக்கட்டுடைய குன்றின் உச்சியில் சிற்றுடலும் பெரும் புகழும் கொண்ட தண்ணீர்மலையான் கோயில் வீற்றிருந்தது. அடிவாரத்தில் டொரியான், ஆல், ரம்புத்தான் மரங்கள் நெருங்கி நிற்கும் சோலை. தேங்காய் பழ நன்கொடை பெற்றுப் பழகிய குரல்கள். ஆட்களின் தராதரத்தை நோட்டமிட்டவாறு உலாவுகின்றன. தென்கோடியில் ஊதா நிற ஓப்பல் கார் நிற்கிறது. அதையடுத்துப் படுத்தும் உட்கார்ந்தும் உரையாடும் தமிழர் கூட்டம். படிக்கட்டில் இறங்கி வந்த ஐந்தாறு தோட்டக் காட்டுத் தமிழர்களும் பெரும் செல்வந்தர்களாய்த் தெரிந்த இரண்டு சீனர்களும்* முனியாண்டி கோயிலை நோக்கி நடந்தனர்.
* தண்ணீர் மலையானுக்குக் காவடி எடுத்து வரும் சீனர்களை பினாங்கில் தைப்பூசத்தன்று பார்க்கலாம். தண்ணீர் மலையானின் பெயருடைய சீனர்களும் உண்டு. “மாணிக்கம், நீயும் வாவேன்.” - செல்லையா இறங்கினான். “உன் துருத்தியை ஊது போ. அங்கிருப்பது முருகன் சிலை; மரகதம் அல்ல. நீ பாட்டில் கண் மூடி நெடி திருந்து விடாதே, விரைவாய் வந்து தொலை.” செல்லையா பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டுப் படியேறினான். மாணிக்கம் காலை நீட்டிச் சாய்ந்து ஒன்றன்பின் ஒன்றாய், ஒன்றிலிருந்து பற்றின மற்றொன்றாய்ச் சிகரெட்டுகளை உதட்டில் கவ்வி எரித்து நீறாக்கிக் கொண்டிருந்தான். அருவிக் கரைக்குப் பிக்னிக் போய்த் திரும்புவோரில் சிலர் நடந்தும் சைக்கிளில் ஆண்டவன் சோலைக்குள் வந்து சுற்றிச் சென்றனர். சாலையில் கார்களும் ஜீப்புகளும் விரையும் இரைச்சல் நசுங்கலாகக் காதில் விழுந்தது. சைக்கிளில் வந்த மூன்று யுரேஷியப் பெண்டிர் - நடனசாலை வாடகை நாட்டியக்காரிகள் - மாணிக்கத்தை பார்த்துத் தோளைக் குலுக்கிப் புன்னகை பூத்துக் குறிப்புச் சைகையாய்ச் சீட்டி அடித்துச் சென்றார்கள். கடிகாரத்தைப் பார்த்தான். நாற்பது நிமிஷம் ஆகிவிட்டது. ஹாரனை அலற விட்டான். கோயில் நிலைப்படியில் யாரோ ஒருவரின் தலை எட்டிப் பார்த்து விலகியது. சதைத்திரளில் புதைந்த கண்களும் கோவைக்கனி அதரங்களும் நகைபடு தீஞ்சொல்லும் தளர் நடையுமாகத் தத்தித் தொத்தி வந்த இரண்டு குழந்தைகளைக் கையில் பிடித்துக் கொண்டு சீனத்தாய் படிக்கட்டில் இறங்கித் தரையில் நடந்து வந்தாள். பின்னால், கோயில் பிரசாதத்தைத் தாங்கிய மரவையுடன் வந்தான் தந்தை. அனைவர் நெற்றியிலும் பளிச்சென்று இலங்கியது திருநீறு. தாயினிடம் இடையறாது மழலை மொழிந்து நடந்த குழந்தைகளை அகம் குளிர, முக மலர ஒரே பார்வையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான் மாணிக்கம். ஓப்பல் கார் புறப்பட்டுச் சென்று திரும்பி மறைந்தது, தண்ணீர்மலைக் கோவணாண்டியின் சீன அடியார்களுடன். “போகலாமா?” செல்லையா கதவைத் திறந்து, ஏறி உட்கார்ந்தான். “அப்படியே ஆவதாக.” கார் திரும்பிக் கிளம்பியது. “என்ன, ஏதாவது பயன் தெரிகிறதா?” மாணிக்கம் தலையைத் திருப்பினான். “உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் வாயை மூடிக் கொண்டு பேசாமலிரு.” “ஆறுவது சினம், ஆகவே சீறுவது பிழை, உணர்க.” “உணர்ந்தனம்.” இருவரும் சிரித்தார்கள். பர்மா ரோடில் தான்செங் ரெஸ்டாரன்ட் முன்னே போய் ஆஸ்டின் நின்றது. “நான் கிட்டங்கிக்குப் போய்ச் சாப்பிடுகிறேன். காலையில் இந்த இழவுச் சாப்பாடு எனக்குப் பிடிக்காது.” “இந்தச் சாப்பாடு, அந்தச் சாப்பாடு! எல்லாம் சாப்பாடுதான். வா, அயல் நாடுகளில் தமிழன் முன்னேறாததற்கு உணவும் ஒரு காரணம். தெரியுமா?” செல்லையாவின் கையைப் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றான். தோட்டத்தை அடுத்த தாழ்வாரத்தில் வரிசையாய் மேசைகளும் அவற்றைச் சுற்றி பிரம்பு நாற்காலிகளும் கிடந்தன. தென்கோடிக்குப் போய் உட்கார்ந்தார்கள். தரைக்கும் தாழ்வாரக் கூரைக்கும் இடையே வலைப்பின்னலெனப் பூக்கொடிகள் படர்ந்திருந்தன. அப்பால், பாத்தி பாத்தியாய் மலர்ச் செடிகள், ஆள்மட்ட மரங்கள், மகிழம்பூ வகையான ஏதோ ஒரு மலரின் இனிய மணம் வந்தது. உள்ளே, வானொலிப் பெட்டியிலிருந்து, அடக்கிய குரலில் ஜாஸ் பாடல் கிளம்பி ஒலித்தது. வியாபார - மெலிவுக் காலை நேரமாதலின் தட்டு - கோப்பை - கரண்டிகளின் கலகல்ப்பு அதிகமாகக் காதில் விழவில்லை. வேண்டிய தின்பண்டங்களுக்குக் கட்டளை பிறப்பித்து விட்டு ‘555’ டின்னை எடுத்து மேசை மேல் வைத்தான் மாணிக்கம். “செல்லையா, சிலப்பதிகாரம் படித்திருக்கிறாயா?” “சிலப்பதிகாரமாவது கிலப்பதிகாரமாவது! குறிப்புப் பேரேட்டைத்தான் நான் தவறாமல் படிக்கிறேன்.” “இதற்காக, நீ தமிழன் அல்லவென்று சொல்ல முடியாது. பொதுப்படையாகக் கதை தெரியுமல்லவா?” “ம். வசனக் கதையைப் படித்திருக்கிறேன். வேங்கடசாமி நாட்டாரோ கார்மேகக் கோனாரோ எழுதியது. ஊரில் பல முறை கோவலன் நாடகம் பார்த்திருக்கிறேன்.” “அது போதும்” செருமினான். “கண்ணகியை மறந்து திருக்கடையூருக்குப் போய், ‘மாதவி வீடென்பது இதுதானா?’ என்று கோவலன் தேட நேர்ந்தது ஏன்? கண்ணகிக்கு என்ன குறை?” “கண்ணகிக்கு என்ன குறை? எல்லா வகைகளிலும் உயர்ந்தவள் அல்லவா! அழகு, அறிவு, குணம், ஒழுக்கம், கற்பு, விருந்தோம்பல்...” “போதும் போதும், நிறுத்து. கண்ணகி ஒரு குறையும் இல்லாத பத்தரை மாற்றுப் பசும்பொன், தெய்வப் பெண்.” “ஆமாம்” தலையைப் பின்னால் சாய்த்து நாடியில் விரலை வைத்தான். இப்போது எதற்காக சிலப்பதிகார ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறான்? “கோவலன், கண்ணகியைக் கைவிட்டு, மாதவி வீட்டுக்கு ஓடியது ஏன், தெரியுமா?” “தெரியாது, சொல்கிறேன்.” “பெண்டாட்டி வேண்டுமென்று அவன் கண்ணகியைக் கைப்பிடித்தான். நெருங்கிப் பார்த்த பொழுது, அவள் பெண்டாட்டி அல்ல. தெய்வப் பெண் என்று தெரிந்தது.” டின்னிலிருந்து ஒரு சிகரெட்டை உருவிப் பற்ற வைத்தான். பலகாரத் தட்டுகளுடன் காபிக் கூஜாவும் கோப்பைகளும் மேசைக்கு வந்தன. மாணிக்கம் காபியை ஊற்றிக் குடித்தான். மீகோரெங் தட்டை இழுத்து உண்ணத் தொடங்கினான் செல்லையா. “சனியன், ஒரே எண்ணெய்! எண்ணெயோ, கொழுப்போ, ம்... காலை வேளையில் கோவலன் செட்டியை இழுத்து வைத்து மாரடிக்கிறாயே, ஏன்?” “அதை அப்புறம் சொல்கிறேன்... கோவலனுக்குப் பெண்டாட்டி தேவை. அவனுக்குக் கிடைத்ததோ தெய்வம். தெய்வத்தை என்ன செய்வது? கும்பிடலாம், துதிக்கலாம், போற்றலாம், கோவிலில் வைக்கலாம்... பெண்டாள முடியாது. ஏய்!” மேசையில் தட்டினான். ஓடி வந்த பையனிடம் பழங்களுக்குச் சொல்லிவிட்டு, முர்த்தாபா தட்டைக் கரண்டியால் இழுத்தான். “மாணிக்கம், எனக்கு மனது சரியில்லை. தொணதொணவென்று உயிரை வாங்காதே. கோவலனுக்கு நானாடா கண்ணகியைக் கட்டி வைத்தேன்?” “இல்லை, மாசாத்துவான் செட்டி.” “போ, துறைமுகத்தில் போய்ப் பார். யவன நாட்டுக் கப்பல்களை எதிர்நோக்கி நிற்பான்; அவனிடம் சொல்.” “ஆஅஅ! யவன நாட்டு மரக்கலங்களை எதிர்நோக்கி நிற்கும் பூம்புகார் வணிகன்! செல்லையா, உனக்கு வரலாற்றுப் பான்மை இருக்கிறது. யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல்! கலந்தரு திருவறி புலம்பெயர் மாக்கள் கலந்திருந்துறையும் இலங்குநீர் வரைப்பு! நளி இரு முன்னீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட சோழர்!... புகார், கொற்கை, முசிறி! அது பண்டைத் தமிழகம். நாம் மறந்து விட்ட பொற்காலம். வரலாற்றுப் பார்வை அத்துடன் நிற்க, பூம்புகார்ப் பெருவணிகன் மாசாத்துவான் செட்டிக்கு நான் சொல்வது புரியாது. எந்த ஊரில் எதைக் கொள்முதல் செய்து எங்கு அனுப்பி விற்றால் கூடுதலாக ஆதாயம் கிடைக்கும் என்ற ஒன்றே ஒன்றுதான் அவனுக்குத் தெரியும். அதனால் தான் உன்னிடம் சொல்கிறேன். இளங்கோவடிகளும் உன்னைப் போன்றோருக்குத்தான் எழுதினார். டேய், சியாங்!” மாணிக்கம் முகத்தைத் திருப்பி, கேக் மீது சுற்றியிருந்த கண்ணாடிக் காகிதம் கிழித்து, தூசு படிந்திருக்கிறதென இரைந்தான். நடுங்கி வந்து நின்ற பையன் மன்னிப்புக் கேட்டுவிட்டு, வேறு கேக் எடுத்து வர ஓடினான். “ஏன்டா இப்படிக் கத்துகிறாய்? மெதுவாய்ச் சொன்னால் என்ன?” “முதலில் கோவலன் - கண்ணகி உறவு. இடையில் புது விவகாரத்தைக் கிளப்பாதே. தெய்வப் பெண்! ‘தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை.’ ஊரில் மழை பெய்யக் கூடும். அவனுக்கு? மழை - மழை பொழியும் பெண்டாட்டி வேண்டுமே, என்ன செய்வது? ஓ திருக்கடையூருக்கு. ‘திருக்கடையூர் தனிலே சித்திரைத் தேரோடும் வீதியிலே மாதவி வீடென்பது இதுதானா?...’ பெண்டாட்டி வேண்டியவனுக்குத் தெய்வப் பெண்ணைக் காட்டிலும் கூத்தாடிப் பெண் எவ்வளவோ மேல்.” செல்லையா அடக்கிய முறுவலுடன் ரம்புத்தான் பழத்தை உரித்துக் கொண்டிருந்தான். சிக்கலான விஷயங்களைப் பற்றிப் பேசுமுன் எகத்தாளமாக இலக்கிய ஆராய்ச்சி நடத்துவது மாணிக்கத்தின் வழக்கம் என்பதை அறிவான். “இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலிருந்து தெரியும் உண்மை என்ன? கோவலர்களுக்கு - அதாவது உனக்கும் எனக்கும் - கண்ணகிகள் சரிப்பட மாட்டார்கள். மாதவிதான் சரி. கோவலனைப் போல் அறிவு மழுங்கி, இரண்டாவது முறை கண்ணகியிடம் சென்றால் உயிரையே இழக்க நேரும் - மதுரைத் தெற்காவணி மூல வீதியில் போய்ச் சாக வேண்டியதுதான்.” “ஏன் தெற்காவணி மூல வீதி, வடக்காவணி மூல வீதி ஒத்து வராதோ?” “மடையா! அதுதான்டா நகை வணிகர் தெரு. கண்ணகிகளின் சிலம்புகளும் பொட்டுத் தாலிகளும் முடிவில் அங்குதான் போய்ச் சேர வேண்டும்.” “ஓ! சரி சரி, அது கிடக்கட்டும், மாதவியும் கற்பரசி என்பதை மறந்து விட்டாயே, அவள்...” “கற்பரசி! எந்தக் கழுதையும் கற்பரசியாக இருக்க முடியும். காலைக் கட்டிக் கொண்டு சும்மாயிருந்தால் போதும். தட்டுவாணியாவதற்குத்தான் கவர்ச்சியும் முயற்சியும் தேவை... மாதவிக்குச் சதிர் ஆடத் தெரியும். கானல் வரி பாடத் தெரியும். அந்தமட்டில் கண்ணகியை விட உயர்ந்தவள் தான் - அதாவது கோவலர்களைப் பொறுத்த வரையில்.” “உன் சிலப்பதிகாரக் குதர்க்க ஆராய்ச்சி போதும். முடிவு என்ன, சொல்லித் தொலை.” “மரகதத்துக்கு மாலை போடும் ஆசையை விட்டு விடு. தங்கச்சி ஒரு கண்ணகி, நீ கோவலன்.” “மாணிக்கம், மரகதத்தைப் பற்றி வேடிக்கைப் பேச்சு வேண்டாம். மரகதத்தை சையாம் ரோடுக் கனகவல்லி என்று நினைத்தாயா?” “இல்லவே இல்லை. கண்ணகி என்று நினைக்கிறேன். கனகவல்லி, மாதவி வர்க்கம். ஆனால் அவளைக் காட்டிலும் நயம் சரக்கு. திருக்கடையூர்க்காரிக்கு ஆடவும் பாடவுந்தான் தெரியும். சையாம் சாலைப் பெண்ணரசிக்கோ சூது, குடி, தெருச் சண்டை எல்லாம் தலைகீழ்ப் பாடம்.” பையனைக் கூப்பிட்டு மேற்கொண்டு தின்பண்டங்களுக்குக் கட்டளை பிறப்பித்து விட்டுத் திரும்பினான். “டேய், வயிறு நிறையத் தின்பதற்கென்ன கொள்ளை? முதலில் திருநீறு; பிறகு ‘காயிலை உதிர்ந்த கனி சருகு புனல்’ கடைசியில் கோவணம். ம்? இந்தா, இதைக் காலி செய்” முர்த்தாபா தட்டைத் தள்ளி விட்டான். “போதும், போதும். உன்னைப் போல் தின்ன என்னால் முடியாது.” கூஜாவைத் தூக்கிக் கோப்பையில் காபியை ஊற்றினான். “இந்தச் சமயத்தில் கண்ணகிகள் என்ன சொல்வர்? ஐயோ! இப்படிக் குருவியாட்டம் தின்றால் உடம்பு என்னத்துக்காகும்? இப்பவே துரும்பாய் இளைச்சுப் போயிருக்கு... இந்தக் கத்தரிக்காய்ப் பொரியலைச் சாப்பிடுங்க, உங்களுக்காக வாங்கியாந்து சமைச்சேன், கொஞ்சோண்டு தின்னு பாருங்களேன்... தலைதெறிக்க ஒரே ஓட்டமாய் மாதவி வீட்டுக்கு அல்லது சையாம் சாலைக்கு ஓடும் வரை கழுத்தில் ரம்பத்தை வைத்து அறுத்துக் கொண்டிருப்பார்கள். யார்? கற்பரசிகள், கண்ணகிகள், மரகதங்கள்.” “சரி, அப்புறம்?” வாயை இறுக்கி மூடிக் கொண்டு கண்களால் சிரித்தான். மாணிக்கம் வாழைப்பழத்தை உரித்து வாயில் போட்டுக் கொண்டு, சிகரெட் புகையை இழுத்து ஊதினான், “அது மட்டும் அல்ல; நம்மைப் போன்ற நடப்பு மனிதர்கள் கண்ணகிகளின் கையில் சிக்கினால், சுடுகாட்டுக்குப் போகும் வரையில் நிம்மதி இராது.” இடது கை தலைமுடியைக் கோதிற்று. பாதி மூடிய கண்களில் குறும்பு ஒளிர்ந்தது. வாயிலிருந்து புகை வளையங்கள் கிளம்பி வந்தன. “ஐயோ! இப்படிச் சிகரெட்டுக் குடிக்கிறிங்யளே, உடம்பு என்னத்துக்காகும்?... காபி பித்தமுனு சொல்வாகளே, இனிம விட்ருங்க. பசும்பால காய்ச்சித் தரேன்... சனிக்கிழமையும் இதுமாய் எண்ணெய் தேய்ச்சிக் குளிக்யாமல் அடம் பண்றிங்களே!... உச்சிப் பொழுதாகியும் இப்படி உறங்கலாமா...! விரிக்கிற் பெருகுமென்றஞ்சி இத்துடன் விடுத்தனம், உணர்க.” பப்பாளிப் பழத்துண்டுகளை கரண்டியால் எடுத்துத் தின்ன ஆரம்பித்தான். “மாணிக்கம்! இதெல்லாம் எங்கே கேட்டாய்?” “தயவு செய்து குறுக்கிடாதே. கோர்வை கலைந்து விடும். இதனால்தான் கல்யாணம் செய்து கொள்வோரை மடையர்கள் என்று சொல்கிறேன். கல்யாணம் எதற்காக? அதன் அடிப்படை என்ன? அதற்காக, குடும்பம் என்ற வீண் சுமையைத் தாங்கித்தான் ஆக வேண்டுமா? அதைத் தவிர்க்க முடியாதா...? தேவை என்றே வைத்துக் கொள்வோம். தேவையென்றால் எவளாவது ஒருத்தி கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்து வர வேண்டியது தானே? சோறாக்கவும், பிள்ளை பெறவும் எவளுக்குத் தெரியாது! கண்ணகியோ, மாதவியோ, கனகவல்லியோ, யாராக இருந்தால் என்ன? இன்ன பெண் தான் வேண்டும், அவள் கிடைக்காவிடின் வாழ்க்கையே இல்லை என்பது எவ்வளவு மடத்தனம்! சீச்சீச்சீ!” “உன் பேச்சைக் கேட்டால் சமூகம் அடியோடு அழிந்து போகும். மனைவி, பிள்ளை எல்லாம் ரப்பர் மரங்கள் என்று நினைத்தாயா?” “டேய், நீ அசல் பூர்ஷ்வாப் பயல் - செக்குமாடு... காதல், கல்யாணம், கற்பு, பிள்ளை, சொத்து, பரம்பரை! டாமிட் ஆல்.” மேசையில் ஓங்கிக் குத்தினான். பீங்கான் தட்டுகளும் கோப்பைகளும் அலறிக் குதித்தன. “எல்லாம் யோசிக்கும் வேளையில் ‘பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்’ இது யார் வாக்கு தெரியுமா? தாயுமானவர்! ‘தீயினிடை வைகியும் தோயமதில் மூழ்கியும், தேகங்கள் என்பெலும்பாய்த் தெரிய நின்றும், சென்னிமயிர்கள் கூடாக் குருவி தெற்ற வெயிலூடிருந்தும், வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும்’ உண்மை தெரிய முயன்ற அறிஞர்களில் ஒருவர்.” “ஓஹோ! நீரிலும் நெருப்பிலும் புகுந்து பார்த்தவர் உண்மையை அறிந்தாரோ?” “யான் அறியேன். எனக்குத் தெரிந்த வரையில், மனிதன் அறிய விழைவது - ஆனால் அறிய இயலாதது உண்மை. அறியப்படுவது அழிவுறுமாதலின் அழிவற்றது அறிவிற்கு அப்பாற்பட்டதாயிற்று.” “அறிவிற்கு அப்பாற்பட்டதை அது அவ்வாறானதென்று எவ்வாறு அறிவது?” “அறிந்தது எது, அறியாதது எது என்பதை அறிவதே அறிவின் இலக்கணம்.” “சரி சரி. உனக்கு முற்றிவிட்டது. இனிக் கோவணத்தைக் கட்டிக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.” “உடை குறித்து எனக்கும் பண்டைய முனிவர்களுக்கும் கருத்து வேற்றுமை கிடையாது. மனிதனை மடமையில் பிணைக்கும் தளைகளில் ஆடைக்கு முதலிடம் உண்டு. அது நிற்க, திருச்சிராப்பள்ளி முனிவர் என்ன சொன்னார்?” “ஒரு போது சொல்லார் - சொல்லியிரார். அவர் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகிய முனிவரன்றோ! தாயுமானவர் சொன்னார்: ‘எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும். உள்ளதே போதும் நான் நானெனக் குழறியே ஒன்றை விட்டொன்று பற்றிப் பாசக் கடற்குளே விழாமல்...’” “போதும் போதும், நிறுத்து, தாயுமானவர்! அந்தக் காவி வேட்டிச் சாமியாருக்கு இல்லறம் பற்றி என்ன தெரியும்? மரகதம் போன்ற ஒரு பெண்ணைப் பார்த்திருக்கக் கூட மாட்டாரே?” “சேச்சேச்சே! உனக்குத் தமிழ்ப் பயிற்சி போதாது. தாயுமானவர் நாயுடு ராஜ்யத்தில் *ஆடிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்தவர். ‘மதி அகடு தோய் மாடகூடச் சிகர மொய்த்த சந்திரகாந்த மணிமேடை உச்சி மீது, முத்தமிழ் முழக்கமொடு முத்த நகையார்களோடு முத்து முத்தாய்க் குலவி’ வாழ்ந்திருக்கிறார். தாயுமானவரின் அறிவிலும் அழகிலும் மயங்கிய அரசி, அவர் வேட்டியைப் பிடித்து இழுத்தாளென்று வரலாறு கூறாநிற்கும். மரகதம் போன்ற ஒரு பெண்மணியைக் கண்டதோடன்றியும், மணந்து இல்லறம் நடத்தினார், அந்த அம்மையார் மட்டுவார்குழலி, என்ன இனிமையான பெயர்!”
* திருச்சியைத் தலைநகராக வைத்து அரசாண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கரிடம் தாயுமானவர் (1705 - 1742) ஆடிட்டராக (பெரிய சம்பிரதி) இருந்தார். அவருக்கு முன் அவர் தந்தை கேடிலியப்ப பிள்ளையும் அதே பதவியை வகித்திருந்தார். “போதும் போதும். சாமியார் உபதேசம் எனக்கு வேண்டாம்.” “சரி, சாமியார்கள் உபதேசம் ஒழிக!... அது எப்படியாயினும், எல்லோருக்குமே மிக முக்கியமானதொரு கடமை உண்டு - உடம்பைப் பேணி ஒழுகும் மாபெரும் கடமை! ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவார், திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார், உடம்பை வளர்க்கும் உபாயமறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பது திருமந்திரம்.” “நீ பச்சை நாஸ்திகன்; சாமி, பூதம், கோயில், குளம் என்று எதுவுமே இல்லை...! உனக்கு ஏன் திருமந்திரமும் தாயுமானவர் பாடலும்...?” “நான் நாஸ்திகனோ அல்லனோ, நானே அறிந்திலேன்; ஆயினும் தமிழைப் புரிந்து நுகரும் திறனுடைய பிறவித் தமிழன், அவ்வாறு இருக்கையில், ‘ஒன்றை விட்டொன்று பற்றிப் பாசக் கடற்குளே வீழாமல்’ வாழுமாறு எச்சரித்த தாயுமானவனையும், ‘தானே தனக்குப் பகைவனும் நட்டானும்’ என்று எழுதிய திருமூலனையும் எவ்வாறு புறக்கணிப்பது?” “தானே தனக்கு பகைவனும் நட்டானும்?” “ஆம், நட்டானும் என்றால் நண்பனும் என்று பொருள். எல்லாமறிந்த முனிவன் பாடுகிறான், கேள்:
தானே தனக்குப் பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையும் தானேதான் செய்த பினைப்பயன் துய்ப்பானும் தானே தனக்குத் தலைவனுமாமே! என்ன அற்புதமான பாட்டு! என்ன உயரிய கருத்து! நல்லது கெட்டதும், இன்ப துன்பமும், வாழ்வு தாழ்வும் நம் கையிலேயே இருக்கின்றன; எல்லாம் நம் மனதைப் பொறுத்தவை” என்கிறான். “எப்படியும் பாடலாம், பாட்டு மனத் துயரைப் போக்கிவிடுமா?” “பாட்டு, மனத் துயரைப் போக்குவது. பாட்டின் தன்மையையும், கேட்போனின் மனப் பக்குவத்தையும் பொறுத்தது. அது போகட்டும், நீ சரியாக உண்பதில்லை, உறங்குவதில்லை என்று முகம் சொல்கிறது.” - நாடக பாணியை நீக்கி, நடப்பு முறையில் பேசலானான். “என்ன செய்வது? உணவு செல்லவில்லை; சரியான உறக்கமும் இல்லை.” மனம் கரைந்து சொன்னான். “கிட்டாதாயின் வெட்டென மற’ என்ற பழமொழி தெரியுமல்லவா?” “தெரியுந் தெரியும். அதற்கும் புது விளக்கம் சொல்லப் போகிறாயா?” “நான் சொல்வதைக் கேள். இடையில் தடையிட வேண்டாம்... சிகரெட்டைப் பற்ற வை.” நெருப்புக் குச்சியை கிழித்து நீட்டினான். “தங்கச்சி விஷயம் முழுவதும் எனக்குத் தெரியும். சீனி முகமது ராவுத்தரையும், லாயரையும், ராமச்சந்திர ஐயரையும் வானாயீனாவிடம் போய்ச் சொல்லச் சொன்னது நான் தான். அவர் மனதை மாற்றவே முடியாது. வானாயீனாவைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகமாகத் தெரியும். அண்டிமன் சீட்டுகளைச் சிதையாக அடுக்கி அதில் அவரைக் கிடத்தி தீ வைத்து எரித்தாலும் அவர் மனம் இளகாது.” “சரி, வேறு வழியே இல்லையா? நானும் மரகதமும் அவர் பிடிவாதத்துக்கு பலியாக வேண்டியதுதானா?” குரல் கலங்கி ஒலித்தது. “இரண்டு வழிகள் உண்டு. ஒன்று: நீங்கள் இருவரும் வெளியேறிப் பதிவுத் திருமணம் செய்து கொள்வது. அதற்குத் தங்கச்சி உடன்படாது. மற்றொன்று, மரகதத்தை வலுக்கட்டாயமாய்த் தூக்கி வந்து தாலி கட்டுவது. இந்த யோசனையை நீ ஏற்க மாட்டாய்.” “ரெஜிஸ்டர் கல்யாணத்துக்கு, கடைசி நேரத்தில் மரகதம் ஒப்புக் கொள்ளும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.” “மரகதம் ஒப்புக் கொள்ளாது.” மாணிக்கம் தீர்மானமாய்ச் சொன்னான்: “அது கண்ணகி வகைப் பெண். அப்படிப்பட்ட பெண்கள் இருப்பதனால்தான் தமிழ்நாட்டில் இன்று கூட, சங்க காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் மரபுச் சரடைக் காண முடிகிறது. அவர்கள் மரபு, பண்பாடு, பழக்க வழக்கங்களின் அடிமைகள் - காவலர்கள்.” “எனக்கு இன்னும் நம்பிக்கை போய்விடவில்லை. மரகதத்தின் தாயார் என் கட்சி.” “சின்னாத்தாளா!* மரகதத்தைப் பெற்றெடுத்த பெரிய மரகதம். அதற்கிது நீளம், புளிப்பிலோ அப்பன்! கடைசிக் கட்டத்தில் நெருக்கத்தைப் பொறுத்து உறவு முறை வைத்துக் கொண்டு அதற்கேற்பப் பழகுவார்கள். கணவனார் கீறும் கோட்டைத் தாண்ட மாட்டார். எதிர்ப்புப் போராட்டமெல்லாம் வெறும் புலம்பலோடு சரி.”
* சின்னாத்தாள் - சித்தி ரத்த உறவில்லாத வெவ்வேறு ஜாதியினரும் கூட “கடைசி வரை பார்க்கலாம். அப்புறம் ஆனபடி ஆகட்டும்.” “இது ஒன்றும் தலைபோகிற காரியம் அல்ல. எந்தக் கவலையையும் இருபத்து நான்கு மணி நேரத்தில் மறக்கடிக்க முடியும். அதற்கு வேண்டியது மனத்திடம் ஒன்றே.” “நம்முடைய கல்யாண முறையின் அடிப்படை தவறு. நானும் மரகதமும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம். மூன்றாவது ஆள் ஒருவரின் தடங்கலால்...” “இந்த ‘மூன்றாவது ஆள்’ மரகதத்தைப் பெற்று வளர்த்த தந்தை...?” “யாரோ... அவர் தடங்கலால் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.” “எந்த முறையாக இருந்தாலும் இங்கும் அங்கும் குறைகள் இல்லாமல் இராது. இதுவரையிலும், குறையே முறை எதுவும் வகுக்கப்பட்டதில்லை. மொத்தமாய்ப் பார்க்கும் போது, தமிழர்களின் திருமண முறை, அப்படியொன்றும் மோசமானதல்ல... ஏய்! கோப்பி.” “அது எப்படியோ போகட்டும். முடிவாக என்ன சொல்கிறாய்?” “முடிந்தால் மரகதத்தை மணந்து கொள் - முடிந்தால்! கிட்டாதாயின் வெட்டென மறந்து விட்டு, மரகதத்துக்கு பதிலாக வேறொன்றில் - வேலை, விளையாட்டு, இலக்கியம் எதிலாவது கவனம் செலுத்து. கொஞ்ச நாளில் மரகதத்தின் நினைவு மறைந்து விடும்.” “நீ சொல்வது போல் மரகதத்தை அவ்வளவு சுளுவாக மறந்து விட முடியுமா?” “முடியும், முடியும், முடியும்!” நாலாவது மங்கு காபியை எடுத்துக் குடித்தான். “அதைக் குடி.” “வேண்டாம்... நடக்கிறபடி நடக்கட்டும், பார்ப்போம்.” - செல்லையா எழுந்தான். “காபி வேண்டாமா, ஏன், ஓ பித்தமோ! சரி, நானே குடிக்கிறேன்.” ஐந்தாவது மங்கு காபியையும் குடித்துவிட்டு எழுந்தான். “நீ எங்காவது போக வேண்டுமா?” “காலையில் எஸ்டேட்டுக்குப் போய்ச் சேர வேண்டும். அவ்வளவுதான்.” “தீவை ஒரு சுற்றுச் சுற்றி வரலாம், வா.” “அப்படியே ஆகுக. பகல் உணவு ஆயர் ஈத்தாம் ரெஸ்டாரன்டில், ‘புல்லு தின்னி’ மணிக்குக் கல்யாணம். இப்பொழுதுதான் நினைவு வந்தது. சீனப் பெண். பள்ளி ஆசிரியையாம். சிங்கப்பூர் ஹார்பர் போர்டில் வேலை பார்க்கிறான்; தெரியும் அல்லவா?” “அது தெரியும், கல்யாண விஷயம் நீ சொல்லித்தான் தெரிகிறது. போன மாதம் ஈப்போவில் பார்த்தேன். ஆள் பாதியாக இருக்கிறான்.” காரில் ஏறினான். “சிங்கப்பூர் வசதிக் குறைவான ஊர். ஒரே காங்கை” மாணிக்கம் ஸ்டீரிங்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். கார் கிளம்பியது. கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|