உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பாகம் மூன்று 6. மனமெனும் புதிர் வெளியிலிருந்து வந்த செல்லையா பெட்டியடியில் போய் உட்கார்ந்தான். “அண்ணே, மொதலாளி உங்களை மேல வரச் சொன்னார்” பெட்டியடிப் பையன் சேது சொன்னான். “வேறு யாரும் இருக்கிறார்களா?” “இல்லையண்ணே.” “கணக்குப் பாத்துக் கொண்டிருக்கிறாரா?” “இல்லை. மெத்தைக்குப் போறதுக்கு முன்னால், பேரேட்டை வாங்கி ஒங்க கணக்கைப் பாத்தாரு.” “எதாவது சொன்னாரா?” “ஒண்ணும் சொல்லலை. வந்ததும் மேல வரச் சொல்லுன்னு சொல்லிப்பிட்டுப் போனாரு.” செல்லையா படியிலேறி மேல் வீட்டுக்குச் சென்றான். தென்புற அறையின் கதவு திறந்திருந்தது. ஜன்னலோரம் கிடந்த நாற்காலியில் கண்ணை மூடி அமர்ந்திருந்தார் முதலாளி. காலடி ஓசை கேட்டுக் கண்கள் திறந்தன. செருமிக் கொண்டே நாற்காலியில் இடம் பெயர்ந்தார். “அப்படி உட்காரு.” - பிள்ளையவர்களின் இடக்கை, எதிர்ப்புறத்தில் இருந்த நாற்காலியைச் சுட்டி விட்டுத் தொடைக்குத் திரும்பியது. “ஒங்க அப்பு கடதாசி எழுதினாரா?” “ஆமா, எழுதியிருக்காக.” “ம்ம்... சரி உக்காரு.” இடது உள்ளங்கை மாறி மாறி இரு புருவங்களையும் தடவியது. கண்கள் மூடின. இடது தொடை மீது அட்டணை போட்டிருந்த வலது கால் கடுவிரைவாய்த் துடித்துக் கொண்டிருந்தது. கீழ்ப்புறச் சுவரோரம் கிடந்த நாற்காலியில் செல்லையா உட்கார்ந்தான். கீழே தெருவில், எதிர்த்த கடை மேலாள், ரிக்ஷாக்காரனுடன் வாய்ச்சண்டை நடத்திக் கொண்டிருந்தார். “பீக்கிடா... லீமாப் பூலு சென்! கழுத களவாணிப் பய. சப்பான் வெள்ளியினு பீக்கிர்? முப்பது காசி கசி...” “செல்லையா, ம்ம்... ஒன்னையப் பத்தி ஒங்க அப்புவுக்கு எழுதியிருந்தேன்.” பார்வை செல்லையாவின் தலைக்கு மேல் தொங்கிய புகைப்படத்தில் லயித்திருந்தது. - வடிவேல் சிரித்தான்... “ஒனக்கு என்ன வயசு?” “இருபத்து நாலு.” “அப்ப வடிவேலு ஒனக்கு ரெண்டு வயது எளையவன்.” குரல் கனிவாய், ஆதரவாய் ஒலித்தது. “ம்ம்ம். நம்ம மரகதத்தை நாகலிங்கத்துக்கு கட்டிக் கொடுக்கிறதுனு முடிவாகியிருச்சு. ஒனக்குத் தெரியுமில?” “முடிவானது தெரியாது.” “முடிவாயிருச்சி, ஊர்ல போயி நடத்துறதினு திட்டம். நான் மூணு மாதத்தில திரும்பீருவென்... ம்ம்... நீ பட்டாளத்துக்குப் போன நாளையும் சேர்த்துச் சம்பளம் போட்ருக்கு. சாமானுக்கும் நல்லாச் செய்யணுமுனு நினைச்சிருக்கென்.” மகனிடம் பாசத்துடன் பேசும் தந்தையின் அன்பு பிள்ளையவர்களின் பேச்சில் கலந்து வந்தது. செல்லையா, பாய் விருத்திருந்த தரையைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். என்ன சொல்வதென்று தெரியவில்லை. மரகதத்தை எனக்குத்தான் கட்டித்தர வேண்டுமென்று கேட்கலாமா... “ஐ.என்.ஏ.யில் இருந்த காலத்துக்குச் சம்பளம் வேண்டாம்.” சூடாகச் சொன்னான். “கிறுக்குப் பிள்ளை!” வானாயீனாவின் வலக்கை செல்லையாவைச் சுட்டியது. “வீம்புதானே கூடாது. அதுனால என்ன லாபம்? நீ கேட்டா நான் குடுக்கிறேன்? என்னை நம்பி ஒங்கப்பு பிள்ளைய அனுப்பிச்சாரே, எதுக்காக, ம்?... அது கிடக்குது. ஒன் விசயத்தை யோசிச்சேன். ஊருக்குப் போயி வந்த பிறகு, சூலியா தெருவில உனக்கு ஒரு புடவைக் கடை வைக்கலாமுனு நினைச்சிருக்கென். நான் பணம் தாறென். ஆதாயத்தில் எனக்கு ஒரு காசு வேண்டாம்.” கீழ் உதட்டைத் துருத்தி வலக்கையை ஆட்டினார். “உன் போக்குக்கு இந்தத் தொழில் சரிப்படாது.” கண்கள் வடிவேலின் படத்தையும், தரையைப் பார்த்தபடி இருந்த அடுத்தாளையும் மாறி மாறி நோக்கின. பிள்ளையவர்களின் பேச்சில் நடிப்போ, காரியம் சாதிப்பதற்கான நெளிவு சுளிவோ தென்படவில்லை. செல்லையா குழம்பினான். ‘என் வாழ்வைக் குட்டிச் சுவராக்கும் இந்த மனிதர் மீது கொஞ்சங் கூடக் கோபம் வரவில்லையே. ஏன்? மரகதத்தின் திருமணம் பற்றி முடிவு செய்யும் உரிமைப் பொறுப்பு முற்றிலும் இவருடையதுதானா? இவர் செய்திருக்கும் முடிவு சரியா? புடவைக் கடை வைத்துக் கொடுப்பதாகச் சொல்லும் தாராளத்துக்குக் காரணம் என்ன? கழிப்புக் கழிக்கப் பார்க்கிறாரோ...?’ “நான் சொன்னதென்ன, சரிதானா?” வானாயீனா செருமினார். “என் எதிர்காலத்துக்கு நீங்கள் ஒன்றும் திட்டம் வகுக்க வேண்டாம்.” தலை நிமிர்ந்து உறுமினான். இதற்கு முன் அவன் ஒரு நாளும் இப்படி முதலாளியை எடுத்தெறிந்து பேசியதில்லை. முதலாளி திடுக்கிட்டார். காலின் துள்ளல் நின்றுவிட்டது. அவரிடம் கொண்டுவிற்ற ஆள் யாரும் இப்படி முகத்துக்கு முகம் துடுக்காகப் பேசியதில்லை. “ம்ம்... ம்ம்... நீயாச்சிலும் திட்டம் போட்ருக்கியா?” “இரண்டொரு இடத்தில் வேலைக்குச் சொல்லி வைத்திருக்கிறேன்.” “என்ன வேலை?” “பேங்க் வேலை, தோட்ட வேலை.” “அதிலயெல்லாம் போனால் மனசு மாறியிரும். சொந்தஞ் சுருத்துங்கிற நெனைவு அத்துப் போகும். ஊருத் தொடர்பு உள்ள வேலையாயிருக்கணும். மாணிக்கம் பயலைப் பார்த்தியில?” “ஊர்த் தொடர்பு இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? மரகதம் போன பிறகு எல்லாம் ஒன்றுதான்...” இப்படித் தன்னை மறந்து, திடுமென வெளிப்படையாய்ப் பேசிவிட்டது அவனுக்கே வியப்பாக இருந்தது. “இந்தா செல்லையா, நான் ஒனக்குத் தகப்பன் மாதிரி சொல்றேன் கேளு. பொம்பளையகளைப் பெருசா நினைச்சால் மேல வர முடியாது. சின்ன வயசில அப்படித்தான் இருக்கும். என்னமோ, தெய்வ சங்கற்பம் இல்லாமப் போச்சு. அதோட விட்ரு. உன் மனசும் மரகதம் மனசும் எனக்குத் தெரியாமலில்லை.” செல்லையாவுக்கு ஆத்திரம் பொங்கியது. இருவர் மனமும் தெரியுமாமே... “மரகதத்தை ஆடு மாடு என்று நினைத்தீர்களா, யாரிடமாவது பிடித்துக் கொடுத்துவிட? அது விருப்பத்தைக் கேட்க வேண்டாமா?” குரல் காட்டமாக வந்தது. “பையப் பேசு. ஒரு சங்கதியப் பேசினா காதும்காதும் வச்சாப்பில இருக்கணும்; எதிரிகாதில விழுந்திராமல் சாக்கிரதையாப் பேசணும். ம்ம்ம்... பொம்பளைக்கி - அதிலயும் அது சின்னஞ்சிறுசு - என்ன தெரியும்? பொம்பளையகளைக் கேட்டுக்கிணு காரியம் நடத்துறதின்னா ஒண்ணும் நடக்காது... என்னையவும் காமாச்சியவும் கேட்டுக்கிணா எங்களுக்குக் கலியாணம் நடந்துச்சு, ம்? சரி, அப்படி நடந்ததுல என்ன கோளாறாய்ப் போச்சு?” “மரகதம் கண்ணீரும் கம்பலையுமாய்க் கிடந்தும் உங்கள் மனம்...” “இந்தா, எல்லாம் அதது தலையெழுத்துப்படி நடக்குது. நீங்ய சின்னப் பிள்ளையகதான், என்னமோ எல்லாம் ஒங்க கைக்குள்ள இருக்குதுங்கிறியக... சரி, முடிஞ்சு போன சங்கதியப் பத்திப் பேசி என்ன செய்ய? சொல்லு.” செல்லையா சிலை போல் உட்கார்ந்திருந்தான். ‘இவரை எந்தக் கணக்கில் சேர்ப்பது? என் மேல் வெறுப்பில்லை. மகளின் மீது அளவு கடந்த அன்பு. அப்புறம் ஏன்? தொழிலின் வருங்காலம். அன்பை விடத் தொழில் பெரிதா? இதில் எது மறையும், எது நிலைக்கும், எது முதன்மையானது?’ “அப்புறம் ஒன் யோசனை என்ன? சொல்லு.” அடுத்தாளின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார். ‘கிறுக்குப் பய. மொகத்துல பழைய களையக் காணமே. இத இப்பிடி கோட்டையப் பிடிக்கிற சங்கதியின்னி நெனைக்கிறானே!’ “நான் விலகிக் கொள்கிறேன்.” “என்ன! வெலகிக்கிறியா, ஏன்? நான் திரும்பினப்புறம், வேணுமுன்னா ரெண்டு மாசம் ஊர்ல போயி இருந்துபிட்டு வா. சொன்னபடி சூலியா தெருவில் கடை வைப்பம். இல்லை, வேற தொழிலு ஏதாவது செய்யி, பணம் தாறென். நீ ஒண்ணும் அந்நியமாய் நெனைக்காதே.” “விலகிக் கொள்கிறேன்.” “திருப்பித் திருப்பி அதையே சொல்லாதெ. நீ நடுவில் விலக்கினால் நம்ம மார்க்காவுக்கு என்ன மதிப்பிருக்கு? நாலு பேர் என்ன சொல்வாக? நம்பி வந்த பிள்ளைய விரட்டிப்பிட்டான்னியில பேச்சு வரும்.” “எந்தக் கப்பலில் போகப் போகிறீர்கள்?” “அடுத்த கப்பல்ல, இன்னும் பத்து நாள்ல போகுமுங்கிறாக.” “கணக்கை முடித்து வைத்து விடுங்கள். நீங்கள் கப்பலேறின பிறகு விலகிக் கொள்கிறேன்.” “நான் வயசில மூத்தவன் சொல்றதைக் கேளு. இன்னம் மூணு மாசம் பொறுத்துக்க. வந்து, ஒனக்குச் சாதகமா ஒன் மனசு கோணாம வேண்டியதச் செய்யிறென். நீ ஊர்ல போயி ஒரு நாளாச்சும் இருந்துபிட்டு வரணும். உங்கப்புக்கு நான்ல சவாப் சொல்றவன்.” “ஊருக்குப் போக நாளாகும்.” “இதுதானெ கூடாது, எடுத்தெறிஞ்சி பேசுறது. ஒனக்கு நல்ல பெண்ணாப் பேசி முடிச்சிக்கிணு வாறென். அரிமளத்தில் சிங்கப்பூர் கடை ஆள் இருக்கான். அவுக வீட்ல கிளியாட்டமாய் ஒரு பிள்ளையிருக்கு. நம்ம மரகதத்தைக் காட்டியும் செவப்பு, நல்ல லெச்சணம்...” “லெச்சணமான பொண்ணு, மண்ணாங்கட்டி!... இனிமேல் மரகதம் பேச்சை எடுக்க வேண்டாம்.” விழுத்துப் பார்த்துக் கத்தினான். அடுத்தாளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் வானாயீனா; சில விநாடிகள் பார்த்துக் கொண்டேயிருந்தார். ‘கிறுக்குப் பய. இங்கிலீசுப் படிப்பும் சினிமாவும் சேந்து செய்யிற வேலை.’ “சிங்கப்பூர்ல பெண்ணுடைய அண்ணன் மூத்தவன் இருக்கான். லேவாதேவித் தொழிலோடு புடவைக் கடையும் நடக்குது. ஒன்னைய எங்கெயோ பார்த்திருக்கான் போல இருக்கு. தங்கச்சியை உனக்குத்தான் கட்டிக் கொடுக்கணுமுனு ஒத்தைக் கால்ல நிக்கிறான். மரகதம் காரியத்தை முடிச்சிக்கிணு ஒன் வெசயத்தைக் கவனிக்கலாமுனு இருந்தேன்... அரிமளத்தான் நம்ம எனத்திலேயே பெரிய புள்ளி. பதினைஞ்சு லகரத்துக்கு மேல தேறும். நல்ல குடும்பம்...” “நம்ம இனம்! அவனும் உங்களைப் போலத்தான் இருப்பான். உங்களுக்குப் பிடிக்காதவனை அரிமளத்தான் தலையில் கட்டி விடத் திட்டம் போடுகிறீர்களாக்கும்!” எழுந்து நின்றான். கண்கள் கோவைப் பழம் போல் சிவந்து விட்டன. “செல்லையா! உக்காரு. நான் சொல்றதைக் கேளு. உக்காரு.” பிள்ளையவர்களின் குரல் பரிதாபமாக ஒலித்தது. அவர் முகத்தைப் பார்த்தான். மனம் இளகியது. உட்கார்ந்தான். முதலாளியின் உடல் லேசாக நடுங்கிற்று. மடியில் விரிந்து கிடந்த வலது உள்ளங்கை மீது பார்வை பதிந்திருந்தது. “ஒன் மேல என்னமோ கெட்ட எண்ணமாயிருக்கேன்னு நெனைக்காதே. வடிவேலு போல நீயும் எனக்குப் பிள்ளைதான். சேதுப் பய, கருப்பையா எல்லாரும் எனக்குப் பிள்ளையக மாதிரியதான்.” உள்ளங்கையை நோட்டமிட்ட கண்கள் மூடின. “நீ இங்கிலீசு பள்ளிக்கூடத்தில படிச்சவன்... மனுச மக்களோட பழகி நாலு சங்கதியத் தெரிஞ்சிருப்பாய்... என்னயிருந்தாலும் ஒனக்குச் சிறுவயசு. போகப் போகத்தான் உலக நடப்புத் தெரியும்... ஒங்கப்பாவும் நானும் பர்மா டாப்புல இருக்கச்சே, தொழில் என்னமாயிருந்துச்சு, நாங்க என்ன பாடுபட்டோமுங்கிறதெல்லாம் ஒனக்குத் தெரியாது. அத வினாக, எடுத்த எடுப்புலயே அடுத்தாளுக்கு வந்திட்டாய்... உலகத்தில எத்தினி எத்தினியோ காரியம் நடக்குது. அததுக்கு இன்னதுதான் முறைதுறையினு இருக்கு. ஒரு ஒழுங்குமுறை இல்லாட்டி உருப்படியா ஒண்ணும் செய்ய முடியாது... ம்... உங்க அப்பு கடதாசி... ம்ம்.. எங்க அப்பு நம்ம ஊர்க் கோயில்ல பூக்கட்டிக் கொடுத்துச் சேவகம் செஞ்சாக. வீட்ல தரித்திரியம் பிடுங்கித் திங்யும். மூணு வேளையும் கஞ்சி - மிளகாய் வத்தல்தான். செட்டிப் பிள்ளைக் காலைக் கையப் பிடிச்சு அப்பு என்னைய பர்மா டாப்புக்கு அனுப்பி வச்சாக. நான் சின்னப் பிள்ளை. விதரணை தெரியாத வயசு. கருக்கல்ல எந்திரிச்சுப் படுத்துக்கிற வரையிலயும் பம்பரமாய்ச் சுத்தணும். மேலு வலிக்கிது காது வலிக்கிதுன்னி உக்கார முடியாது. எச்சிப் பணிக்கத்தைக் கழுவி எடுத்து, பெட்டியடியத் தொடைச்சிக் கிளியன் பண்ணணும். குளிச்சி முழுகிப் பாட்டுப் புடிச்சிப் பூசை பண்ணணும். மேலாளுக்கு வேட்டி தொவைச்சுப் போடணும்; சமையல்காரன் இல்லாட்டி காலமுக்கி விடணும், மேல இருக்கிறவுகள்ளாம் ஆளுக்கு ஆள் அதிகாரம் பண்ணுவாக. பெரிய அடுத்தாளுக்கு இருந்தவர் ‘அத்தறுதி’ முத்துக்கருப்ப பிள்ளை, கண்ணு மூக்குத் தெரியாமக் கோபம் வரும். கணக்குப் போடுறதுல இம்மி பிசகினாலும், ரூல் கம்பை எடுத்து அடி அடியினு அடிச்செறிஞ்சுருவாரு. ராவும் பகலும் மாடாய் உழைச்சுக் கருக்கிடையான பயன்னிப் பேரெடுத்தேன்... ஊருக்குப் போய்ட்டு அடுத்தாளுக்குச் சம்பளச் சீட்டு எழுதிக்கிணு வந்தேன். அடுத்தாளுக்கு இருக்கச்சே வசூலுக்குப் போன எடத்தில எத்தினி பர்மாக்காரன் கை நீட்டி அடிச்சிருக்கான்! வாயைத் தொறக்க மாட்டேன். கடையில இதுகளையெல்லாம் சொல்ல முடியாது. என்னமாச்சும் சொன்னமுனாக்கா மறுக்கோளிப் பயன்னு சொல்லி மறு கப்பல்ல விரட்டி விட்ருவாக. அப்புறம் அம்புட்டுத்தான். வேற செட்டிய வீடுகள்ள வச்சிக்கிட மாட்டாக...” - இடது கை நெஞ்சில் மீதிருக்க, வலது கை நெற்றியைத் தடவியது. “அப்பறம் மலாய் டாப்புக்கு அந்த மார்க்காவுக்கே வந்தென். கலியாணமாச்சு... வீட்டை எடுத்துக் கட்டிக் காணி கரைய வாங்கினென். பிள்ளை குட்டியாகி நாலு பேரொட மனுசன்னி ஆச்சு. பெனாங்குக் கடைக் கொண்டுவேலை மொதலாளிக்குப் பிடிச்சுப் போச்சுது. மறு கணக்கு, மூவார் கடையில மேலாளுக்கு வந்தேன். பெரிய மார்க்கா ஆளுகல்லாம் சீறி விழுந்தாக, இந்த விசுக்குப் பய இம்புட்டுப் பெரிய மார்க்காவில மேலாளுக்குக் கொண்டு விக்கிறதான்னி. அந்தக் கணக்கில நல்ல மிச்சம், நல்ல பேரு... அப்புறம், தண்டாயுதபாணி கிருபையில மொதலாளி கைகொடுத்தாக. இந்தத் தொழிலை நெலை நாட்னென்.” உடலை நிமிர்த்தி இமைகளைத் திறந்து விழித்துப் பார்த்தார். இருவர் கண்களும் சந்தித்தன. ஒருவரை ஒருவர், இமையாத கண்களுடன் பார்த்திருந்தார்கள். சில விநாடிகள் கழிந்தன. முதலாளி கண்களை மூடினார். “எங்க மொதலாளி கோட்டையூர் சாவன்னா மூனா ரூனாப் பானாழானா மூனா ரூனா, பரம்பரையாய்ப் பெரிய மார்க்கா. அவுகளைக் ‘கோடையிடியன்’ செட்டியிம்பாக. வாயைத் தொறந்து ஒண்ணு சொன்னா சொன்னதுதான். சூரியன் திசை மாறினாலும் அவுக பேச்சு மாறாது... இந்தத் தொழிலை நிலைநாட்ட என்ன பாடுபட்டென்! ஊரை நெனைக்கலை, பெண்டாட்டி பிள்ளைய நெனைக்கலை. நல்லது பொல்லதுல மனச விடலை... மொதல்ல, பெரிய மார்க்கா ஆளுகளுக்கெல்லாம் எளப்பமாய்த்தான் இருந்துச்சு... கேக்கக் கேக்க நடப்புலயும் தவணையிலயும் கொடுக்கச் சொல்லி, தண்டாயுதபாணி கிருபயில மொதலாளி உத்தரவு பண்ணுவாக. எல்லாம் நல்லபடியாய் வந்திருச்சு. பெனாங்கில் நம்ம மார்க்காவும் ஒண்ணுன்னு ஆச்சுது. இன்னைக்கி இங்கெ எனத்தில நிக்கிற பணமெல்லாம் இல்லையின்னிப் போனாலும் - தண்டாயுதபாணி கிருபையில அப்படியொண்ணும் நடக்காது - ஒரு பேச்சுக்குச் சொல்றென் - பசியாமல் சாப்பிடுறதுக்கு ஊர்ல சொத்துச் சொதந்திரம் இருக்கு... இந்தத் தொழிலை நெலைநாட்றதுக்கு நான் பட்ட பாடு கொஞ்சமா! வடிவேலுக்கும் ஒனக்கும் இதல்லாம் தெரியாது. இன்னைக்கி மனசு பொறுக்காம ஒன்கிட்டச் சொல்றேன். நம்ம சாதிசனத்தில நீ ஒருத்தன் தான் நாலு பேர் கண்டு மதிக்கிறாப்பில இருக்கிறது, மனுசாதி மனுசனெல்லாம் ஒன்னையத் தூக்கி வச்சுப் பேசறது எனக்குப் பெருமையில்லியா? இது பொட்டச்சி தொழிலு. ஒனக்கு இது ஒத்து வராது. அரும்பாடுபட்டு உண்டாக்கின தொழில் நிலைக்யணுமுல, நீயே சொல்லு. அதுனாலதான் உனக்கு வேற தொழில் ஏற்பாடு செய்வமுனு சொன்னென்.” - கண்களைத் திறந்து பார்த்தார். “நீ புரியாம என்னமும் நினைச்சுக்கிடாதே. சப்பான்காரன் குண்டு போட்டு ஊரைக் கொளுத்துறப்ப, எம் மகனத் தோளில போட்டுக்கிணு ரெண்டு மைல் ஓடியாந்த, அதை நான் மறப்பனா? அன்னைக்கி எத்தினி ஒடலு வீடு சேந்துச்சு...? நீயும் எனக்குப் பிள்ளை மாதிரிதான்.” செல்லையாவின் மனம் உருகியது. ‘இவரை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. பாவம், மனம் வெதும்பிப் பேசுகிறார்.’ “நான் வர்றென்.” எழுந்தான். “சரி, போயி யோசிச்சுச் சொல்லு.” “யோசிக்க வேண்டியது ஒன்றுமில்லை. நீங்கள் கப்பலேறுகிற வரை வேலை பார்க்கிறேன்.” செல்லையாவின் முதுகு மறையும் வரையில் வானாயீனா பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, முகத்தைத் திருப்பி ஜன்னல் வழியாகத் தெருவைப் பார்த்தபடி லயித்துப் போனார். கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|