உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பாகம் மூன்று 8. எது கடமை செவ்வாய்க்கிழமை முற்பகலில் பினாங் துறைமுகத்திலிருந்து கிளம்பும் கப்பலில் வானாயீனா குடும்பத்தார் தாயகம் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் முற்றுப் பெற்றன. கடைவீதியில் உள்ளவர்களிடமும் மற்றும் வேண்டியவர்களிடமும் பிள்ளையவர்கள் பயணம் சொல்லிக் கொண்டுவிட்டார். திங்கட்கிழமை முழுவதும் கடையில் ஒரே அமர்க்களமாக இருந்தது. காலையிலிருந்து பற்றுவரவுப் புள்ளிகள் பெருங்கூட்டமாகக் கூடிக் கிடந்தார்கள். ஊருக்குக் கொண்டு போவதற்காக வாங்கிய சாமான்கள் சிப்பம் போட்டு அடுக்கப்பட்டிருந்தன. பெட்டியடிப் பையன் வீட்டுக்கும் கடைக்குமாக ஓடிக் கொண்டிருந்தான். மாலை 7 மணி இருக்கும். பெட்டியடியில் பேரேட்டைப் புரட்டிக் கொண்டிருந்தான் செல்லையா. கிட்டங்கி முழுவதும் ‘ஊர்க் கப்பல்’ பேச்சாக இருந்தது. “டஞ்சனா அஞ்ச நாள்ள கரையப் பிடிச்சிருவான்” கடைசிப் பெட்டியடி அடுத்தாள் ராமலிங்கம் பிள்ளை சொன்னார். “இதெல்லாம் என்ன கப்பல், இம்புட்டுக்காணு! பெரும் பண்டங்களையெல்லாம் செர்மன்காரப் பய விழத்தாட்டிப்பிட்டான்ல.” இரண்டாவது பெட்டியடியிலிருந்து நல்லகண்ணுப் பிள்ளையின் கருத்து வெளியாகியது. “போங்கண்ணே போங்க. வெள்ளைக்காரன் என்னமோ புண்ணியத்துக்கு கப்பல் விட்ருக்கான். இதுவுமில்லாட்டியில தெரியும். இங்கினையே உட்கார்ந்துக்கிணு சிங்கி அடிக்யணும், சிங்கி” - கடைசிப் பெட்டியடிக்காரர் படபடப்பாகக் குறிப்பிட்டார். “அட, அதுக்குச் சொல்ல வரலையண்ணே, ஒரு இதுக்காச் சொல்றேன். கப்பல்னா எல்லாம் கப்பல்தானா? பெருசு சிறுசு, நல்லது கெட்டதின்னி இல்லையா?” “ஆமாமா... கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமான்னு தெரியாமலா கேட்டு வைச்சிருக்கான்.” - வெளியிலிருந்து வந்து உட்கார்ந்த மூன்றாவது பெட்டியடிப் பெரிய அடுத்தாள் அங்கப்ப பிள்ளை குறிப்பிட்டார். “நான் பாருங்க, தொள்ளாயிரத்து இருபத்தி எட்டுல ஊர் திரும்பச்சே, ஒரு கப்பல்ல கொழும்பு மார்க்கமாப் போனென். கப்பல்னாக் கப்பல், இப்படி அப்படியின்னிச் சொல்ல முடியாது...” செல்லையாவுக்கு கப்பல் பேச்சு கசந்தது. ஆயினும், வழக்கம் போல் கோபம் வரவில்லை. என்ன காரணத்தாலோ காலையிலிருந்து மனம் அமைதியாக இருந்தது. ஒன்பது மணிக்கு மேல் நியூ ஒர்ல்ட் பார்க் பக்கம் போய் வரலாமென்று எண்ணிச் சிட்டையில் பற்றெழுதி விட்டுப் பத்து டாலரை எடுத்துப் பையில் போட்டான். “அண்ணே!” சேது முன்னால் நின்றான். “மொதலாளி... ம்... மொதலாளி சம்சாரம் உங்களைச் சாப்பிட வரச் சொன்னாக, இப்பவே வருவிங்யளாம்.” “முதலாளி, முதலாளி சம்சாரம்... யார் சொன்னது?” “ம், மொதலாளிதான் சொன்னாரு, அப்புறம் அவுக வந்து ‘நான் சொன்னேன்னி சொல்லு’ன்னாக. முதலாளியும் ‘அப்படித்தான் சொல்லு’ன்னாரு. அண்ணே ‘அவசியம் வரச் சொல்லு’ன்னு முதலாளி சம்சாரம் சொன்னாக.” “சரி சரி, போ” - பெட்டியடியிலிருந்து இறங்கினான். என்னவோ விஷயம் முடிந்து விட்டது. யாரை நொந்து என்ன செய்ய? முறைக்குத் தலையைக் காட்டிவிட்டு வர வேண்டியதுதான்... சூலியா தெருவில் திரும்பி, கிங் தெரு சந்திப்பைக் கடந்து கொண்டிருந்தான். “செல்லையா!” வலப்புறமிருந்து வந்த பழனியப்பன் இரண்டு கைகளையும் நீட்டித் தோளைப் பற்றினான். “பழனி!” “வரும்போது, அக்கரையில் மாணிக்கத்தைப் பார்த்தேன். எல்லா விவரமும் சொன்னான். கோலாலம்பூருக்கு வாவேன். ஒரு மாதம் இருந்துவிட்டு வரலாம். அங்கேயே ஒரு வேலை...” “இங்கேயே பேங்க் வேலையில் உட்கார்ந்து விடலாமென்று நினைக்கிறேன். எதற்கும் உனக்கு எழுதுகிறேன்.” பழனியப்பனை ஏற இறங்கப் பார்த்தான். தன்னையறியாமலே முகம் முறுவலித்தது. பழைய செகண்ட் லெப்டினன்டுக்கும், இப்போது முன்னால் நிற்பவனுக்கும் எவ்வளவு வேற்றுமை! மடிப்புக் கலையாத தூய வெள்ளை வேட்டி, சட்டை, தோளில் தொங்கிய துண்டு இருபுறமும் முழங்காலைத் தொட்டது. நெற்றியில் சந்தனப் பொட்டு, கோலாலம்பூர் அம்பாங் தெருவில் பத்து லட்சம் டாலர் கொடுக்கல் வாங்கல் உள்ள சூனா பானா நாவன்னா மார்க்கா பங்காளிகளான இரண்டு சகோதரர்களின் இளையவன் பழனியப்பன். “மாணிக்கம் வந்தானா, இல்லையா? ஆறு மணிக்குள் பினாங் வருவதாகச் சொன்னானே.” “காணோம், எங்காவது சுற்றிவிட்டு வருவான்.” “அடுத்த மாதம் ஊருக்குப் போகலாமென்று இருக்கிறேன், நீயும் வாவேன்.” “அடுத்த மாதமா? இன்னும் ஒரு வருஷம் போகட்டும், பார்க்கலாம்.” “சரி, பேசிக் கொள்வோம். பட்டாவர்த் வரை போய் வர வேண்டியிருக்கிறது. காலையில் பார்க்கிறேன். என்னால் என்ன ஆக வேண்டுமென்றாலும் கடிதம் எழுது. செல்லையா ராணுவத்தில் ஒரு கவலையுமில்லாமல் எவ்வளவு ஆனந்தமாக இருந்தோம்... அந்தக் காலம் திரும்பாதா?” குரலில் ஏக்கம் தொனித்தது. “அதுவா? போனது போனதுதான். இனிமேல் மறுபடியும் குழந்தையாகித் தாய் மடியில் குதித்து விளையாட வேண்டுமென்றால் முடியுமா?” “ஆமாம், போனது போனதுதான்... ம், நீ மனதை உளப்பிக் கொள்ளாதே. வர்றென்.” “காலையில் கட்டாயம் வா.” செல்லையா வடமுகமாய் நடந்தான். மேகமற்ற வானில் நிலவு காய்ந்தது. தாரகைகள் கண் சிமிட்டின. கிழக்கிலிருந்து மெல்லிய கடற்காற்று வீசியது. இருபுறமும் குட்டிச் சுவர்கள். பிறகு புடவைக் கடைகள். மீரா முகமது கடை மானேஜர் மைதீன் பிச்சை - “என்ன, சாயந்தர நேரத்தில சின்னாங்கா கிளம்பீட்டிங்களாக்கும்?” “டத்தோ கிராமட் ரோடில் கொஞ்சம் வேலை இருக்கிறது.” இடது கையை மேற்கே சுட்டிச் சொன்னவன் தொடர்ந்து நடந்தான். நடுமேடையுடன் அகன்ற பிட் தெரு குறுக்கிட்டது. கடந்தான். ராமநாதபுரம் வட்டகை ராவுத்தர்களின் நகைக்கடை வரிசை. கண்ணாடிப் பெட்டிகளில் ஆபரணங்கள் மின்னின. சல்லாப் பட்டு ஸ்லெண்டாங் அணிந்து தலையை மூடிய பொன்னிற மலாய் நாரீமணிகள், சராய் அணிந்த சீனப் பெண்கள். நடைபாதையில் சிகரெட், பழம், சாக்லெட் விற்கும் காவடிக் கடைகள். வடகிழக்கு மூலையில் புகழ்பெற்ற சீன மருந்துக்கடை இருளடைந்து கிடக்கிறது. எதிரே ஹோட்டல் மாடி ஜன்னலில் சியூலானின் பொம்மை முகம் போதைப் புன்முறுவலுடன் தெரிகிறது. பின்னிருந்த வந்த சைக்கிள் ரிக்ஷாவை நிறுத்தி ஏறினான். “டத்தோ கிராமட்.” “பாய்க், தவ்க்கே.” வண்டி விரைந்தது. செல்லையாவின் மனதில் அமைதி தேங்கியிருந்தது. “இன்று காலை வரை இருந்த கொந்தளிப்பு, குழப்பம் மறைந்து விட்டதே! மனதின் மர்மம் என்ன?” இரு பக்கமும் மிகுந்திருந்த செருப்பு, தகரக் கடைகளில் சுத்த்யல்கள் மோதி முழங்கின. தையல் கடைகளில் சக்கரங்களின் உருளொலி - ஹோட்டல்களிலிருந்து பரிந்த மாஜோங் விளையாட்டோசை பின் தொடர்ந்தது. பினாங் ரோட்டில் முக்கி ஏறிற்று ரிக்ஷா. எதிரே ஓடியோன் தியேட்டர், ஒரே ஒலிமயம். புதுப்படம் போலிருக்கிறது. வண்டி மேற்கே திரும்பியது. இரு திசைகளிலும் போக்குவரத்து பெருகிற்று. ரிக்ஷா மணி ஓயாமல் அலறியது. வண்டிகள் உரசி விரைந்தன. சட்டைப் பைக்குள் கையை விட்டுப் பார்த்தான். சிகரெட் பெட்டி இல்லை. ‘வண்டியை நிறுத்தி வாங்கலாமா? பிறகு பார்த்துக் கொள்ளலாம்!’ நடைபாதை மேடையில் எள் விழ இடமில்லாத கூட்டம். விளக்குக் கம்பங்களின் கீழ், ரொட்டிப் பெட்டி முதல் கிடைத்தற்கரிய பெனிசிலின் மருந்துக் குப்பி வரையில் பரப்பிப் போட்டுக் கொண்டு விலை கூவினார்கள். “ரொக்கோ! ரொக்கோ! பூத்தோ பூஞா ரொக்கோ!” இன்னும் கடைவீதிக்கு வராத பிரிட்டிஷ் சிகரெட் டப்பிகளைச் சீனச் சிறுவர்கள் ஓடி விற்றனர். பல மொழிகளின் கூட்டோசை கலகலத்தது... குவின்ஸ் சினிமாக் கொட்டகைக்கு முன் தந்தச் சிலையொத்த இரு சீனப் பெண்கள் ஆளுக்கு ஒரு ராணுவ வெள்ளையனின் கையைக் கோர்த்து நடந்தனர். அலி சுல்தான் எம்போரியம். ஜூவால்மூரா மார்க்கெட் சாம் அண்டு நாம் கடையில் மீண்டும் நீலமணி விளக்கு மின்னுகிறது. வெளிச்சமிடும் ஜன்னல்களை வரிசை வரிசையாகக் கொண்ட போலீஸ் தலைமையகம் - நகரிலேயே பெரிய காங்க்ரீட் கட்டிடம். விங்லொக் ரெஸ்டாரன்ட், வின்சர் கூத்து மேடையின் சிமிந்தி நிற உருவம் பின்னோடியது. காபிக் கடைகள், புடவைக் கடைகள், மருந்து கடைகள், ஆறு முச்சந்தி - வண்டிகள் பாய்ந்து உரசி விரைந்தன. ரிக்ஷா மணி கணகணத்தது. ஹாரன்கள் அலறின. மானிடர் நழுவித் தப்பினர். குறுக்கிட்ட மானிடரையும் விலகாத வண்டிகளையும் சரமாரியாக ஏசியவாறு ரிக்ஷாவைக் கடுவிரைவாய்ச் செலுத்தின சாரதி, தனது பரபரப்பின் அளவை வண்டியிலிருந்து ‘செட்டி’யும் தெரிந்து கொள்வதற்குத் தோதாக, சீன வசவுகளோடு கலந்து, இரண்டொரு தமிழ்ச் சதை வார்த்தைகளையும் வீசி எறிந்து கொண்டிருந்தான். டத்தோ கிராமட் சாலையில் வண்டி புகுந்தது. சிவன்கோயில் - ஈயாலை - இந்து சபை - பந்து விளையாட்டுத் திடல். வானாயீனா வீட்டை ஒட்டிப் போய் நின்றது ரிக்ஷா. இறங்கிச் சில்லறை கொடுத்துவிட்டுப் படிக்கட்டில் ஏறினான். “வா, செல்லையா, உள்ளே போயிச் சாப்பிடு” - தாழ்வாரத்தில் பிரம்பு நாற்காலி மீதிருந்த வானாயீனாவின் குரல் வந்தது. செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு உள்ளே சென்றான். “செல்லையா, வாப்பா, இப்படி உக்காரு” - காமாட்சியம்மாளின் குரல் காதைக் குளிர வைத்தது. பெஞ்சு மீது உட்கார்ந்தான். சமையல் கட்டிலிருந்து தடுக்கையும் இலையையும் கொண்டு வந்து, தரையில் இட்டார் கருப்பையா. திரும்பிப் போய், உண்டிப் பாத்திரங்களை எடுத்து வந்து வைத்தார். “செல்லையா, வாப்பா, சாப்பிடு வா.” “நல்ல வயிறு நிறையச் சாப்பிடப்பா. ம்ம். கிட்டத்திலிருந்து சோறு போடப் பெத்தவ இருக்காளா? வெண்டிக்காயி உடம்புக்கு நல்லது; தொடக்கூட இல்லை.” கை கழுவுவதற்காகப் பின்கட்டுக்குப் போனான். பட்டுச் சேலையின் சரசரப்பு விரைந்து தேய்வது போல் கேட்டது. கருப்பையா செம்பில் தண்ணீர் கொண்டு கொடுத்தார். திரும்பி வந்து பெஞ்சில் உட்கார்ந்தான். “செல்லையா, நான் ஒன்னையப் பெத்தவளாட்டம் ஒரு வார்த்தை சொல்றென், கேக்கிறியா?” மெய்மறந்திருந்தவன் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான். எதிரே, காமாட்சியம்மாள் நின்றார். “ம், சொல்லுங்க.” “கேக்கிறேன்னிச் சொல்லப்பா.” “சரி, கேட்கிறேன்.” “மனச அலட்டிக்கிட மாட்டேன்னிச் சொல்லு.” “ஆகட்டும், மனதை அலட்டிக் கொள்ள மாட்டேன்.” “ஒனக்கு ஒரு கொறையும் வராது செல்லையா. மகராசனாயிருப்பா. நா பெத்த தாயாட்டம் சொல்றென். என் வாக்கு வீணாப் போகாது.” தலை பின்பக்கம் திரும்பியது. “அம்மா! செல்லையாட்ட வந்து சொல்லிக்யம்மா, நேரமாகுது.” மரகதம் தலைகுனிந்தபடி நடந்து வந்தாள். காலில் கொலுசு ஒலித்தது. உடலைச் சுற்றி முன்றானை இறுக்கி மூடியிருந்தது. செல்லையாவின் தலை திரும்பிற்று. கனவுக் கண்களோடு நோக்கினான். போன தடவை பார்த்த போது கட்டியிருந்த அதே ஆலிவ் - பச்சைச் சேலை... எழுந்து நின்றான். முன்னால் வந்து நின்று கும்பிட்டாள். செல்லையாவின் உடல் நடுங்கிற்று. பார்வை மங்கியது. மரகதமும் காமாட்சியம்மாளும் கலங்கலாய்த் தென்பட்டனர். ‘என்ன நடக்கிறது, ஏன் இந்த முடிவு, இதற்குக் காரணம் என்ன, ஒவ்வொருவரும் இறுதி வரையும் கடமைக் கடனை நடித்தே தீர வேண்டுமா, ஏன் கடமை, எது கடமை...’ “அம்மா, சொல்லிக்யம்மா, நேரமாகுது.” மரகத உருவம் ஏதோ முனங்கியது. செல்லையாவின் கைகள் உயர்ந்து கூப்பின. மரகத உருவம் கனவில் நடப்பது போல் திரும்பி நடந்து போய் மறைந்தது. “உக்காரப்பா, நானும் சொல்லிக்கிறென். காலையில கப்பல் போகுது.” காமாட்சியம்மாள் கைகூப்பினார். செல்லையா எட்டிச் சென்று காமாட்சியம்மாளுக்கு முன்னே தடாலென்று தரையில் விழுந்து கும்பிட்டான். “எந்திரியப்பா, செல்லையா! செல்லையா எந்திரி. சண்டாளி, நானும் பொம்பளையின்னி பிறந்தனே, குடுத்து வைக்காத பாவி... என் காலில்யா நீ விழுறது? நான்ல உன் கால்ல விழணும்... எந்திரியப்பா... சின்னப் பிள்ளையா இருந்தியினா கையப் பிடிச்சுத் தூக்கி விடலாம்... தெய்வமே, இது ஒரு சோதனையா... செல்லையா!” எழுந்து நின்றான். காமாட்சியம்மாள் இன்னும் கைகூப்பிய படியே நின்றார். “நான் வர்றென்” கைகூப்பினான். “போயித்து வாப்பா, மகராசனாயிரு. மனச அலட்டிக்கிடாதே. உடம்பைப் பத்திரமாய்ப் பாத்துக்க. நாங்க போய்த்து வர்றம்!” முகப்புக்குப் போய்ச் செருப்பை மாட்டினான். நாற்காலியில் இருந்த வானாயீனா எழுந்து வந்து அவனருகே நின்றார். “செல்லையா, நாங்க போயித்து வர்றொம். ஒனக்கு நான் ஒண்ணும் அதிகமாச் சொல்ல வேண்டியதில்லை... நீ நல்லபடியா இருக்கணும்.” “நான் வர்றென்.” முகத்தைப் பார்க்காமலே கும்பிட்டான். “சரி, போயித்து வா.” தெருவில் இறங்கி ரிக்ஷா ஒன்றை நிறுத்தி ஏறிக் கிழக்கே கையைக் காட்டினான். கடலுக்கு அப்பால் : அட்டவணை |
முன்னுரை 1-1
1-2
1-3
1-4
1-5
1-6
1-7
1-8
1-9
1-10
1-11
1-12
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
2-7
2-8
2-9
2-10
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
3-7
3-8
3-9
|