உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அரும்பு 12. சின்னமங்கலம் ஆழாழியில் பினாங் துறைமுகத்தை நாடிச் சென்று கொண்டிருக்கிறது தொங்கான். பிலவானில் திங்களன்று தொடங்கிய பயணம் செவ்வாயையும் புதனையும் விழுங்கி, வியாழனையும் மென்று தின்று கொண்டிருந்தது. ஒளியனான சூரியன் உச்சியைத் தாண்டி இறங்கிச் சாயலானான். பாண்டியன் மேல் தட்டுக் கயிற்றுக் கிராதியைப் பிடித்தவாறு மேற்கே பார்த்து நின்றான். ஆற்று வாயில் சகதிக் கலங்கலாயிருந்த பவ்வநீர் பச்சையாகி ஊதாவாகி நீலமாகி, நீல்மைக்கும் கருமைக்கும் நடுமையான கருநீலமாக்கி நின்றது; நிற்காமல் அலைந்தது; அலைந்தோடியது. மீண்டும் உருண்டு திரண்டு திரும்பி வந்து உறுமி மோதி ஓலமிட்டது. ஆ, வியாழக்கிழமை. சின்னமங்கலம் சந்தை. வேப்பெண்ணெய் மணம் கம்மென்று கமழ அந்தி மயங்குகிறது. சந்தை வளவுத் தலைவாசல் அருகே ஆள் உயரக் கூடைக்குப் பின்னால் நின்று பொரி உருண்டை விற்கும் மேலூரான், தரை மீது விரித்த சாக்குத் துணியில் சில்லறையைக் கொட்டி எண்ணுகிறான். சாய்ப்புத் தட்டிக்குக் கீழே ‘பெட்ரோல்மாக்’ விளக்கு வெளிச்சத்தில் சந்தைக் குத்தகை திண்டுக்கள் ராவுத்தரின் கணக்குப் பிள்ளைகளும் அடியாட்களும் லிம்லட்டு* உடைத்து உயர்த்தி, அண்ணாந்து வாயில் ஊற்றிக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வலப்பக்கம் வடமுக வரிசையாய்த் தென்படும் கடைகளில் இலை, கிழங்கு வியாபாரிகள் பயணம் கட்டுகின்றனர். வாசலுக்கு நேரே செல்லும் பாதையின் இருமருங்கிலும் காரைத்தள மேடைமீது ஓடு வேய்ந்த, திறவையான கடை வரிசை. அவற்றில் பரபரப்பாக மூடை போடும் பலசரக்கு வியாபாரிகளின் வரவு செலவுக் குரல் ஒலிக்கிறது. அப்பால் உள்ள திறந்தவெளிக் கடைகளிலிருந்து நெல் மூட்டைகளும் காய்கறிப் பொதிகளும் வண்டியேறுகின்றன மறுநாள் தெக்கூர் சந்தைக்கு. * லெமனேட் “ஓடியா ராசா, ஓடியா! போனா வராது, பொழுது விழுந்தா சிக்காது, ஓடியா ராசா ஓடியா அஅ!” வலப்புறக் கெட்டிக் கட்டட வரிசைக்கு எதிரே, சிமிழ் விளக்குகள் எரியும் மண் பொத்துக் கூரைக் கடைகளுக்கு அப்பால், மருது காலத்துப் புளியமர வரிசையின் கீழிருந்து இடையறாத அழைப்புக் கூக்குரல் கிளம்பி வருகிறது. தரையில் தனித்தனியே விரித்த சாக்குத்துணி மீது, கூறு கூறாய்க் கைப்பிடி அளவாய்க் குவித்த கழிவுப் புகையிலைக்குக் கட்டியம் கூறப்படுகிறது - அழுக்குப் படிந்த துண்டுகளை உடுத்திப் புழுதியில் சம்மணம் கூட்டி உட்கார்ந்திருக்கும் சிறுவர்களால். “ஓடியா ராசா, ஓடியா! போனா வராது, பொழுது விழுந்தா சிக்காது. அசல் தாராவரம் போயிலை! கூறு முக்காத் துட்டு! கூறு முக்காத்துட்டு! ஓடியா ராசா ஓடியா அஅ!” சின்னமங்கலம் கடைவீதி வணிகர்களின் பிள்ளைகள் வியாபாரம் பழகுகிறார்கள். சொந்தமாய்க் காசு சேர்க்க முயலுகிறார்கள். தந்தை கடையிலோ, உற்றார் உறவினர் கடையிலோ அள்ளி வந்த கழிவுப் புகையிலையைக் கூறுகட்டி வைத்துக் கட்டியம் கூடி. “ஓடியா ராசா ஓடியா! போனா வராது, பொழுது விழுந்தா சிக்காது. ஓடியா ராசா ஓடியா அஅ!” “இங்கெ பார்ராப்பா, சிவலிங்க நாடார் மகன் கடை போட்ருக்கிற அமுசத்தை!” கிறுங்காக் கோட்டை சின்ன அடைக்கலக் கோனார் நெருங்கி வந்தார். “இந்தாங்க, மூணு கூறையும் எடுத்துக்கங்க, கூறு முக்காத் துட்டுத்தான்.” இடுப்பில் அருப்புக்கோட்டைப் பழுக்காக் கம்பித் துண்டும் தலையில் வட்டக் குடுமியுமாயிருந்த பாண்டியன் எழுந்து கெஞ்சினான். “இந்தாந்தா, அம்புட்டுத் தொலைக்கி ஏறாதே, இறங்கி வா.” குனிந்து, புகையிலையை எடுத்து மோந்து பார்த்த கோனார் தலையைத் தூக்கினார். “சரி, நேரமாச்சு, நீங்யளும் தெரிஞ்சவரு. மூணு கூறும் ஒண்ரத்துட்டுன்னி வச்சுக்கங்க.” “அம்புட்டு விலை பெறாதப்பா. நீ பாட்டுக்கு ஆட்டு விலை மாட்டு விலை சொல்றியே.” மீண்டும் குனிந்து புகையிலைக் கூறுகளைக் கிளறினார். “சரி, போயிட்டுப் போகுது போ, நம்ம பிள்ளையாயிருக்காய்.” மேல் பக்கம் பட்டாபி செட்டியார் தன் மகன் தம்மணாவும் ஆறுமுக நாடார் மகன் பழனிச்சாமியும், கீழ்ப்பக்கம் காராயி ராவுத்தர் மகன் முத்தலீபும், சொக்கன் செட்டியார் மகன் நல்லமுத்தனும், ‘ஓடியா ராசா’ கூவியவாறே பாண்டியப் பயல் யோகத்தை எண்ணிக் கறுவிக் கொண்டிருந்தார்கள். கோனார் சாவதானமாய் மடியை அவிழ்த்துத் துழாவி, முதலில் ஒரு காலணாவையும், பிறகு இரண்டு சல்லிக் காசுகளையும் எடுத்து நீட்டினார். “இம்புட்டுதாப்பா இருக்கு.” “இருக்கும், பாருங்க... ஒரு சல்லியப் பாராதிங்ய, நயம் சரக்கு.” “இருந்தாவுல கொடுக்கலாம். இல்லையே. இந்தா வாங்கிக்ய. நாளைப் பின்னே ஆளு மனுசன் வேண்டாமா? இந்தா.” “சரி, ஒரு சல்லியில என்ன வந்திருச்சு. இந்தாங்க” கூறுகளை அள்ளிச் சேர்த்துக் கிறுங்காக் கோட்டையார் குவித்து நீட்டிய துண்டில் போட்டான். “அடுத்த சந்தைக்கி நயஞ் சரக்கு - மீனம்பாளையம் போயிலை வருது, வாங்க.” “அடுத்த சந்தைக்கிப் பிழைச்சுக் கிடந்தால் பார்த்துக்கிடுவம்.” புகையிலையைத் துண்டில் பொட்டலமாக முடிந்து கொண்டே வாசலை நோக்கி நடந்தார். “ஐயா பிள்ளை அம்புட்டையும் வித்திட்டாரு, அஅஅஆ!” வெற்றி முழக்கமும் செருக்குச் சிரிப்பும் கிளம்பின. சாக்கை உதறி விரித்து அதன் மேல் உட்கார்ந்தான். “போடா தெரியும். போன சந்தையில் யார் முதல்ல வித்தது?” தம்மணா சீறினான். பிறகு உரத்த குரலில் கூவலானான். “ஓடியா ராசா, ஓடியா அஅ! அசல் தாராவரம் போயிலை! கூறு அரைத் துட்டு! போனா வராது, பொழுது விழுந்தா சிக்காது. ஓடியா ராசா ஓடியா அஅ!” மற்றக் குரல்களும் விலை குறைவதைத் தெரிவித்துச் சந்தை அரசர்களைக் கூவி அழைத்தன. சந்தை அடங்குகிறது. அத்தர்க் கடை சாமித்துரை, பித்தளைப் பூக்கள் மலர்ந்த கருமரப் பெட்டியை இடக்கையில் பிடித்துக் கொண்டு புறப்படுகிறார். வடமேற்கு மூலையில் கசாப்புக் கடை போடும் உதினிப்பட்டி ராவுத்தர்கள். மிச்சச் சரக்கை வாழை இலையில் வைத்துக் கித்தான் துணியில் சுருட்டி இடத் தோளிலும், தராசை வல அக்குளிலும் அணைத்தவாறு நாடாக்கமார் தெரு ‘உப்புக்கண்டக் கறி’ வியாபாரத்தைக் கருதிக் கிளம்புகிறார்கள். ரசக் குண்டுகளும், பாசி பவளச் சரங்களும் தொங்கும் சைக்கிளை உருட்டிச் செல்லும் பப்பரமூட்டு* வியாபாரி மம்மது வலக்கையிலிருக்கும் பெரிய பாட்ரி லயிட்டை இப்பக்கமும் அப்பக்கமும் திருப்பிக் கண் கூசும்படி வெளிச்சம் வீடுகிறார்; மேட்டுப் பட்டிப் பெண்கள் அரண்டு தாவி ஓடுகிறார்கள். வடக்கேயிருந்து வண்டிகள் கடகடத்து வருகின்றன. தொலைவில் முத்துக்குட்டிப் புலவரின் தெம்மாங்கு முழங்குகிறது. * பெப்பர்மின்ட்
வெள்ளிப்பிடி அறுவா வெள்ளையத்தேவன் வீச்சறுவா சங்குப்பிடி அறுவா - தங்கமே சந்தனத்தேவன் சாய்ப்பறுவா அ அ எ - எ - எ - எ - ஏஎஎஎய் தேருமேல் தேரு வச்சு தேருலயும் தீய வச்சு தேரு வெளிச்சத்திலே - தங்கமே தெக்கித் தெருவில் கொள்ளை வச்சி ஹ்ஹ் எ - எ - எ - எ - ஏஎஎஎய் வீடு வீடாய் நொறுக்குதடி வெள்ளையத்தேவன் ஊருப்படை சாக்கு சாக்காய் வாருதடி - தங்கமே சந்தனத்தேவன் பள்ளுப்படை எ - எ - எ- எ ஏஎஎஎய்! “டேய் வாங்கடா போவம், நேரமாச்சு.” பாண்டியன் எழுந்து சாக்கை உதறி மடித்தான். மற்றவர்கள் அசையவில்லை. சற்று நேரம் இருந்து பார்க்க எண்ணினார்கள். “நான் போறன்டாப்பா” சாக்கை இட அக்குளில் அணைத்துக் கொண்டு தலையை ஒருக்கணித்து வலக்கையைச் சுழற்றியவாறு ஓடலானான். “பூம்! பூம்! பூம்!” சந்தை வாயிலைத் தாண்டியதும் பாட்டுக் கிளம்பியது.
ஆத்துப் பாலத்திலே அப்துல்காதர் மோட்டார் காத்துப்போல பறக்குதே - கண்ணே காத்துப் போல பறக்குதே. கிழக்கே திரும்பினான். இடப்பக்கம், சந்தைக் கெட்டிக் கட்டடத்தின் சாலையோரப் புடைவைக் கடைகள்; அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் வியாபாரம் நடக்கிறது. நெருஞ்சிப்பூச் சேலை, அமுசு பப்பாளிச் சேலை, ஊசி வர்ணச் சேலை, சேலம் குண்டஞ்சு வேட்டி, அருப்புக்கோட்டை துண்டு, பரமக்குடி சிற்றாடை. கடைகளுக்கு முன்னே அரசணன்பட்டிப் பெண்களின் புல்லுக்கட்டு வரிசை. வலப்பக்கம் சங்கரமூர்த்தியா பிள்ளையின் கோமதி விலாஸ் - ‘அசல் திருநெல்வேலி சைவாள் மண்பானைச் சமையல்’ கிளப்புக்கடை, அபுபக்கர் தகரக் கடை, கண்டர மாணிக்கம் செட்டியார் லேவாதேவிக் கடை, பாலக்காட்டு ஐயர் காப்பி கிளப்பு, வாழவந்தான் பொரி கடலைக் கடை, கருங்காலக் குடியார் நவதானியக் கடை - கல்லாவில் ‘கரடி’ சூனாப் பானா, தாடியை இரண்டாகப் பிரித்துக் கோதியவாறு சாய்ந்திருந்தார்.
அரிசி விலை படி என்ன மாணான்* - அட அழகப்பன் படியால் அஞ்சேகால் போடா உளுந்து விலை படி என்ன மாணான் - அட உலகப்பன் படியால ஒம்பதரை போடா பச்சை# விலை படி என்ன மாணான் - அட பழனியப்பன் படியால பதினொண்ணு போடா!
* மாணான் - சிற்றப்பன் # பச்சை - பச்சைப் பயறு செல்லையா ‘சாப்பு’க் கடையைத் தாண்டியதும் ‘திர்னவேலி சைவச்சியம்மா’ இட்லிக் கடை. அக்காளும் தங்கையும் வெள்ளைச் சேலை - விபூதிப் பட்டை - துளிசி மாலையராய்ச் சந்தைக் கூட்டத்துக்கு இட்லி, மல்லிக் காப்பி விற்கிறார்கள். கடைகளுக்கு முன்னே, சீனிக்குச்சி வியாபாரிகளின் முழங்காலுயர மேசைகள். ஒவ்வொன்றிலும் சிமிழி விளக்கு எரிகிறது. தரையில் வாழை இலை விரித்துப் பரத்திய பூக்கடைகள். கொடுக்கன்பட்டிப் பெண்கள் கூவுகின்றனர். “பூவு! பூவு! மருவு மருக்கொழுந்து மல்லியப் பூவு! மனோ ரஞ்சிதப் பூவு!” வேகத்தைக் குறைத்துத் தலையைத் திருப்பிப் பூக்கடை - சீனிக்குச்சி மேடைகளைப் பார்த்தவாறே நடந்தான். “டேய்! என்னடா பிராக்குப் பார்வை?” எண்ணெய்க் கடை நாகமையா செட்டியார் அதட்டினார். “இல்லை, சும்மா.” “வண்டிவாசி வருது. பார்த்துப் போடா.” திரும்பிப் பார்க்காமல் வேகுவேகென்று நடந்தான். சந்தைச் சுவர் மூலையில் மேடா கோபால் செட்டியாரின் ‘பட்டணம் பொடிக்கடை’. இடப்புறம் பிரியும் செல்வ விநாயகர் கோயில் தெருவிலும், வலப்பக்கம் ஊருக்குள் செல்லும் சாலையிலும் கடைக்குக் கடை கூட்டம். கோயில் தெருவின் இருபுறமும் வரிசையாகக் கடைகள். வடமுகமாகச் சென்றால் நல்லான் குளத்தங்கரை, கோமுட்டிக் கிணறு, லாடசாமியார் மடம், வலையர் தெரு, கடலைக் காடுகள், கள்ளுக் கடை, புதையல் எடுத்தான் பிள்ளை களத்து வீடு. கூந்தல்பனை, இரண்டாறு கூடும் சோலை அப்பால் ஆவாரங்காடு. கரடி மேய்ந்த தோப்பு, எல்லையம்மன் கோயில் - அதுவே சின்னமங்கலத்தின் புராதனமான வட எல்லை. கிழக்கே செல்லும் சாலையில் வட முகமாயிருக்கிறது. கார் ஏசண்டு நாவன்னாப் பானா கடை. முன்னால் காதுச் சட்டையும் சேக்குத்* தலையுமான டிரைவர்கள். ‘டாலர்’ ராஜாமணி ஐயர், ‘சடன் பிரேக்’ கொண்டல் சாமி நாயுடு ‘குழாய்’ பவானி சிங் - வெற்றிலை - சிகரெட் வாயராய் நிற்கிறார்கள். குரங்கு மார்க் மண்ணெண்ணெய் வியாபாரம் மளமளப்பாய் நடக்கிறது. அடுக்கிக் கிடக்கும் தகர டின்களுக்குப் பின்னே நின்று, கடைப் பையன்கள் அளந்து ஊற்றுகின்றனர். பெரிய கியாஸ் லைட் வெளிச்சத்தில் கடை மின்னுகிறது.
* சேக்கு - கிராப் எதிரே, செல்வ விநாயகர் கோயிலை அடுத்த அப்பாயி செட்டியார் பலகாரக்கடை. அந்த வட்டகை எங்கிலும் புகழ் பெற்ற மசால் மொச்சையும், காரா உருண்டையும் எனக்கு உனக்கென்று விற்பனையாகிறது. “எனக்கு முக்காத் துட்டுக்கு மொச்சை கொடுங்க” கூட்டத்துக்குள் புகுந்து முண்டி, முன் சென்ற பாண்டியன் காசை நீட்டுகிறான். தைத்த புரசு இலையில் மொச்சையை வைத்து வாழை நாரினால் கட்டிச் செட்டியார் கொடுக்கிறார். பாண்டியன் கூட்டத்திலிருந்து வெளியேறிப் பொட்டலத்தை அவிழ்த்து மொச்சையை எடுத்துத் தின்றவாறே தெற்கு முகமாய் நடக்கிறான். ***** நடுக்கடலில் தொங்கான் மீதிருந்த பாண்டியனின் இடக்கை நெற்றியைத் தடவியது. அந்தக் காலம் திரும்புமா... கையைச் சுழற்றிப் பாடிக்கொண்டே தெருவில் ஓடலாம். அப்பாயி செட்டியார் கடை மசால் மொச்சை! ராஜாளிப் பாட்டி விற்கும் புளி வடை! தெருப்புழுதியில் உட்கார்ந்து சந்தைப்பேட்டைப் பெரியாயிடம் பிட்டும் அவைக்கார வீட்டம்மாளிடம் ஆப்பமும், செட்டி குளத்தங்கரை வள்ளியக்காளிடம் பணியாரமும் வாங்கித் தின்னலாம்! அந்தக் காலம் போனது போனதுதான். அது ‘மறை எனல் அறியா மாயமில்’ வயது. ***** கடல் அலைகள் ஓய்வு ஒழிச்சலின்றி விடாப்பிடியாய் வந்து மரக்கலத்தில் மொத்து மொத்தென்று மோதித் திவலைகளாய்ச் சிதறிக் கொண்டிருந்தன. சின்னமங்கலம் நாடார் தெரு மாரியம்மன் கோயிலுக்கு முன்னேயுள்ள திடலில் நிலவு காய்கிறது. எலிவால் ஜடையும், பாவாடையுமாய்ச் சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாடுகின்றனர். பொட்டல் விளிம்பில் நிற்கும் பெரிய ஆட்டுரல் மீது உட்கார்ந்திருக்கும் ரஞ்சிதம் கத்துகிறாள்.
கண்ணாமூச்சாரே காதைக் கடிச்சாரே எத்தனை பழம் இருக்கு? “ரெண்டு பழம்” உனக்கொண்ணு எனக்கொண்ணு ஓடுஓடுஓடு ஓஓஓடு தெற்கே குப்பைக்காட்டு வாசலுக்கு நேர் எதிரே சிறுவர்களின் சடுகுடு ஆட்டம் -
நான்டா ஙொப்பன்டா நல்ல தம்பி பேரன்டா வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வாறன்டா தங்கப் பிரம்பெடுத்து தாலிகட்ட வாறன்டா வாறன்டா வாறன்டா வாறன்டா கிழக்கே, சோளக் காட்டுக்கு அப்பால் உள்ள பள்ளர் தெருவில் முழங்கும் உறுமி மேளம் காற்றில் மிதந்து வருகிறது. வீடுகளிலிருந்து ஒருவர் இருவராய் வரும் தாய்மார்கள் அலறுகிறார்கள். “நேரமாச்சு, வா கழுதை... அடியே தங்கம் வாரியால்லியாடி... குதிச்சது போதும், வா சனியனே...” சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாட்டைப் பாதியில் நிறுத்திக்கொண்டு நடை கட்டுகிறார்கள்.
அவரவரு வீட்டுக்கு அவரக்காயும் சோத்துக்கு பிள்ளையப் பெத்த வீட்டுக்கு பிடலங்காயும் சோத்துக்கு சடுகுடு விளையாட்டு தொடர்ந்து நடக்கிறது. பெரியவர்கள் சிலர் சுற்றி நின்று ஊக்கக் குரல் கொடுக்கிறார்கள். விளையாட்டுக்காரர்களின் பாட்டு கலகலக்கிறது.
கிடுகிடு மலையில ரெண்டானை கிறங்கி விழுந்தது கிழட்டானை கிழட்டானை கிழட்டானை கிழட்டானை பையன்களை வீட்டுக்கு விரட்டிக் கொண்டு போய்ப் படுக்க வைக்கத் தாய்மார் பட்டாளம் திரண்டு வருகிறது. “டேய் பாண்டீ! வாரியா, உங்க ஐயாகிட்டச் சொல்லி நாலு பூசை போடணுமா?” “ஐயோ, இந்தா வந்திட்டென்மா” சிணுங்கிக் கொண்டே வீட்டை நோக்கி நடக்கிறான். கிழக்கே சேரியில் உறுமி மேளம் தொடர்ந்து முழங்குகிறது. மேற்கே, சாலையில் விடலைப் பையன்களின் கிட்டி விளையாட்டொலி தொடங்கி விட்டது. ***** கருநீலக் கடலடியில் ஏதோ புரள்வது போலிருந்தது. உற்றுப் பார்த்தான், ஏதோ பெரிய மீன், அல்லது வேறு வகை நீர்வாசியா யிருக்கலாம். ***** துப்புரவாய்ப் பெருக்கிச் சாணம் தெளித்த தெருக்களின் வழியே பெண்கள் போகிறார்கள். வருகிறார்கள். தலையிலும் இடுப்பிலும் நெல் கூடைகள், தண்ணீர்க் குடங்கள், மூக்கு வழியும் பிள்ளைகள், திண்ணைகளில் அழுக்குச் சேலையும் பரட்டைத் தலையுமாய்த் தவிடு சலிக்கிறார்கள்; அரிசி அளக்கிறார்கள். “மந்தை மாடு போயிருச்சா, அக்கா?” “அடியெ பாதகத்தி, எப்பவே போயிருச்சு! மதுரை வண்டி வந்திருச்சு. போ.” மந்தை மாடுகள் வருவதும் போவதுமே சின்னமங்கலம் பெண்களின் காலக்கோல். மாடுகள் என்றும் போல், அன்றும் இன்றும், குறிப்பிட்ட நேரத்தில், காலையில் ஆற்றுக்கு வடக்கே உள்ள மேய்ச்சல் புலத்தை நோக்கிச் செல்வதும், மாலையில் வீடு திரும்புவதும் தலைமுறை தலைமுறையாகக் கண்டறியப்பட்ட உண்மை. ஆனால் யூனியன் ஆபீஸ் பெரிய கடிகாரத்தை அவ்வளவு திண்ணமாய் நம்ப முடியாது. ஒரு நாள் உச்சிப் பொழுதில் அது ஆறு மணி அடித்தது. ஊரெல்லாம் அறிந்து சிரிப்பாய்ச் சிரித்த பெருங்கூத்து. சாவி கொடுக்க மறந்து போனதால் கடிகாரம் இடக்குப் பண்ணி விட்டதென்றார் பில் கலெக்டர் காடுவெட்டி சேர்வை. ‘ஓவராய்லிங்’ செய்யாததால் வந்த வினை என்றார் யூனியன் தலைவர் சேவுகமூர்த்தி அம்பலம்... இந்தச் சாக்குப் போக்குகளையெல்லாம் நம்புவதற்குச் சின்னமங்கலம் பெண்கள் சித்தமாயில்லை. அன்று தொட்டு காலை மாலையில், தலையில் ஒரு குடமும் இடுப்பில் ஒரு குடமுமாய் நல்ல தண்ணீர்க் கிணற்றுக்குப் போய் வரும் பெண்கள் தெற்கே யூனியன் ஆபீஸ் திசையில் - பார்வையைச் செலுத்திப் பகடி பேசுவது அன்றாட நிகழ்ச்சி. “இப்ப என்ன அதில, உச்சிப் பொழுது அடிக்யுமா, இல்லாட்டி நடுச் சாமமா?” “நல்லாச் சொன்னாருடி யாத்தா! சாவி கொடுக்கலையாமுல சாஅவி! சோறு போடலையினு சொல்லாம விட்டாரே, மனுசன்!” நாடார் பேட்டைத் தெருக்களிலும், பேட்டையை அடுத்து வடக்குத் தெற்காக ஊருக்குள் செல்லும் சாலை நெடுகிலும் வெயில் வேளையில் நீள் சதுரங்களாய்ப் பரப்பிய புழுங்கல் நெல் காய்ந்துகொண்டிருக்கும். நெற்களத்தில் நிற்கும் பெண்கள் இடது உள்ளங்கையில் ஐந்தாறு நெல்லை வைத்து வலது உள்ளங்கையால் அழுத்தித் திருகி அரைத்து வாயில் போட்டுப் பதம் பார்த்தவாறு, ஆடி அசையும் உடலுடன் நடமாடிக் காலால் கிண்டிக் கிளறி விட்டுக் கொண்டிருப்பார்கள். “ஏக்கா, மதுரையில இவிய தங்கச்சியப் பார்த்திங்யளா?” “நான் பார்க்கலை தாயே. போயி இம்புட்டு நேரங்கூட இருக்கலை... எங்க அண்ணாச்சி வீட்ல சோறுண்டதும் நேர கல்லூரணிக்கிக் கார்ல போய்ட்டோம்.” “அவ என்னமோ மேலுக்கு முடியாம இருக்காளாம். குளிச்சி ஆறு மாசம்... ஆமா, சிறுமணியன் அரிசி என்ன விலைக்கி போட்டிங்யக்கா?” குடிபெயர்ந்து வந்து மூன்று தலைமுறைகளாகியும் மாறாத ‘தெற்கத்தி’ நாடார் ராகம் தொடர்ந்து உரையாடுகிறது. காலைநேரம், அம்மன் கோயில் பொட்டலில் சந்தை வியாபாரிகள் வெங்காயம், மஞ்சள், மிளகாயைக் குவித்துப் பரப்பிக் காற்றாட்டி அள்ளிக் கொண்டிருப்பார்கள். ‘ரத்தக்கண் அருஞ்சுனை நாடார், கோயில் தூணில் சாய்ந்து ‘பெரிய எழுத்து’ தேசிங்கு ராஜன் கதைப் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு, மனப் பதிவான வரிகளைப் பாடுவார்.
குதிரைச் சேனைக்கச் சைகை ஊதினான் தாவுத்துக்காரனும் ஊதினவுடனே சூழ்ந்து கொண்டார் சிப்பாய்மார்களும் முப்பதினாயிரம் குதிரை வளைத்தது ராசாவையானாலும் கலகலவென்று சிரித்தானையா ராசா தேசிங்கு இரண்டு கையிலே பட்டா வாங்கினான் ராசா தேசிங்கு ராமு ராமுரே தேவுரா என்று போட்டான் ஒரு வெட்டு ரங்கு ரங்குரே தேவுரா என்று போட்டான் மறுவெட்டு துண்டு துண்டாய்த் தூக்கி வெட்டுறான் ராசா தேசிங்கு தலை தலையாய் உருட்டிப் போடுறான் ராசா தேசிங்கு... டாறு டாறாய்க் கிழித்துப் போடுறான் ராசா தேசிங்கு... பைக்கட்டைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் போகிறான் பாண்டியன். சொளசொளவென்று எண்ணெய் பூசிய தலை. நெற்றியிலும் கழுத்திலும் திருநீற்றுப் பரப்பு. வாயில் சீடை அரைபடுகிறது. மாணவர் படை சோளக் காட்டைக் கடந்து செல்லுகிறது. வட கிழக்கே, கணக்கன் குண்டு மூலையில் கற்றாழைப் புதர்கள். மூட்டை வட்டமான பாசி நிற முள் முளைத்த இதழ்கள். மஞ்சள் பூக்கள், வயலட் - சிவப்புப் பழங்கள், கொண்டை முள்ளை எடுத்து விட்டுப் பழத்தைத் தின்னலாம். வீட்டுக்குத் தெரியக்கூடாது, உதை விழும். எதிரே, ‘அந்தமான்’ கருப்பையா கடலைப் புஞ்சை, அடுத்து ஒத்தமேடு. கல்குழி. அப்பால் பேய்க்காடு - உச்சிப் பொழுதில் தலையில்லா முண்டம் கெக்கலித்துத் திரிவதும், நள்ளிரவில் கொள்ளிவாய்ப் பிசாசுகள் குதியாட்டம் போடுவதும் அங்கேதான்... பின்னால் வள்ளிமுத்து பாடுகிறான்!
கரட்டானைப் பிடித்து காதுக்கு ரெண்டு சோடி கடுக்கானை மாட்டி அடியிடாப்பா கோடாங்கி அடி அடியிடாப்பா கோடாங்கி அடி அவன் கையில் சின்னஞ்சிறு கரட்டான் குஞ்சு துள்ளுகிறது. கணக்கன் குண்டுக்கும் நாடார் உறவின் முறை நந்தவனத்துக்கும் இடையே உள்ள பாதையில் வேலியைத் தோண்டிக் கொண்டே போகிறார்கள். “ஐசரே! ஐயாபிள்ளை ரெண்டு தட்டான் பிடிச்சிட்டாரு!” தேரியப்பன் குதிக்கிறான். “டேய்! எனக்கு ஒண்ணு கொடுராப்பா.” பல கைகள் நீண்டு கெஞ்சி அசையாமல் நிற்கின்றன. தேரியப்பன் திரும்பவே இல்லை. ‘சிலேட்டுக்குக் குச்சி’ப் பெட்டியைத் திறந்து நூல் எடுத்துத் தட்டான் பூச்சிகளின் வாலில் கட்டிப் பட்டம்போல் பறக்க விடுகிறான். “ஐசரே! ஐசரே! ஐசரே!” சிறுவர்கள் மகிழ்ச்சி பொங்கக் கத்திக் குதிக்கிறார்கள். சூரிய வெளிச்சத்தில் நந்தவனத்து வேலி மின்னுகிறது. கரும்பச்சை ஆறுமுகக் கள்ளிச் செடிகள் தூண் தூணாய் நிற்கின்றன; துணியிலிருந்து கவர்த்த தூண் கிளைகளில் வெள்ளை வெள்ளையாய்க் குண்டு குண்டாய்ப் பெரிது பெரிதாய் மலர்கள் அரும்பியும் முகைத்தும் மலர்ந்தும் சிரிக்கின்றன. இடையிடையே காய்கனிகளை இழந்த பழுபாகல், கோவைக் கொடிகள், ஆதாளை, இண்டன், தும்பைச் செடிகள். உள்ளே கொழுமிச்சை, கொய்யா, மாதுளை மரங்களில் பழம் பழமாய்த் தெரிகிறது. காவல்கார மயிலேறி இல்லை என்றால், வேலி இடுக்கில் நுழைந்து போய் இரண்டு பழம் பறிக்கலாம். உள்ளேயிருந்து பாட்டு வருகிறது:
பட்டதுயர் மெத்த உண்டடி - நான் பட்டதுயர் மெத்த உண்டடி கொட்டி முழக்கோடு தாலி கட்டிய கணவனாலே பட்டதுயர் மெத்த உண்டடி - நான் பட்டதுயர் மெத்த உண்டடி “டேய்! அந்தா இருக்கார்ரோ” நடக்கிறாகள். நந்தவனத்துக்கு வடபுறம், கல் பாவிய சுற்றுத் தளத்துடன் கூடிய துலா - இறவைக் கிணறு - இருவர் தண்ணீல் இறைத்துக் கல் தொட்டிகளை நிரப்புகிறார்கள்; பலர் குளிக்கிறார்கள்; கட்டுமானக் கல்லில் வேட்டி துவைக்கிறார்கள்; சொர சொரப்பாய்ப் பொழிந்து பதித்து நிறுத்திய ஆளுயரத் தகட்டுக் கல்லில் - முதுகு தேய்க்கிறார்கள். கிணற்றுக்கு இப்பால், ஓங்கி வளர்ந்த குன்றிமுத்து மரம். கண்ணாடி முள்ளிவரப்புகளுக்குள் பொன்னரளி, வாடா மல்லிகை, நந்தியாவட்டைச் செடிகள், பின்னி நிற்கும் வேம்பரசு மரத்தடியில் பிள்ளையார் கோயில். ஈர வேட்டியும் விபூதிப் பூச்சுமாய் 3 பேர் தோப்புக்கரணம் போடுகிறார்கள்... பிள்ளையார் கோயிலுக்கு வடபுறத்தில் பள்ளிக்கூடம் - எல்லாம் கணக்கன் கண்டுக்கரை வேலி இடுக்குகளில் தெரிகிறது. வடகரை வழியாக, ஜடை போட்டு மல்லிகைப் பூச்சூடிய கோமுட்டி தெருப் பையன்கள் வந்து சேருகின்றனர். வலப்புறம் சாலையில் திரும்பினார்கள். தென்பக்கத்தில் வேதக்காரர் பள்ளிக்கூடம் - கட்சிப் பூசல் காரணமாய்க் கட்டிடத்தோடு கைமாறிய மாஜி ‘சின்ன மங்கலம் நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட’ பழனியாண்டவர் பாடசாலை. பெரிய வாத்தியார் அருமைநாயகம், மூக்கில் வெள்ளிக் கம்பிக் கண்ணாடியும் கையில் முரட்டுப் பிரம்புமாய் நிலைப்படியில் உட்கார்ந்திருக்கிறார். பையன்கள் தலை குனிந்தவாறு அரவமின்றிப் படியேறி உள்ளே போகிறார்கள். முதன்முதலில் வேதாகம வகுப்பு. பையன்கள் சுவரோரம் கைகட்டி நின்று மனப்பாடமான கிறிஸ்துவ மதப் பாடலைப் பாதிரி ராகத்தில் பாடுகிறார்கள்:
தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலனே ஆவலதாய் எனைப் பைம்புல்மேல் அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார். பாட்டு முடிந்ததும் பெரிய வாத்தியார் ஜெபம் நடத்துவார். எல்லாரும் உடன் சேர்ந்து கத்துவார்கள்: “பரமண்டங்களில் இருக்கிற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. அன்றன்றுள்ள அப்பத்தை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்கு விரோதமாய்க் குற்றம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாமல் தீமையிலிருந்து எங்களை ரட்சித்துக் கொள்ளும். ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.” மாதத்துக்கு ஒருமுறை மதுரையிலிருந்து வெள்ளைக்காரப் பாதிரியார் உயரமான ஊதாக் காரில் வருவார். சமயங்களில் மனைவி மக்களும் உடன் வருவார்கள். “டேய், சீமையில் சின்னப் பிள்ளைல்லாம் இங்கிலீசு பேசுமாம்டாப்பா, தொரை மகள் இம்புட்டுக்காணா இருக்கு. என்னமா இங்கிலீசு பேசுது பாத்தியா!” “போடா இங்கிலீசு பேசுதாம்ல, இங்கிலீசு! அது வேற என்னமோ பேசுது... பீயே படிச்சால்தான் இங்கிலீசு பேசலாம்னி எங்க மாமா சொன்னாரே!” பகல் சோற்றுக்கு ஓட்டமும் நடையுமாய்க் கடைவீதிப் பாதை வழியாக விரைகிறார்கள். சங்கரன் ஆசாரி கொல்லுப் பட்டறை. துருத்தி ஊதுகிறது. தீ எரிகிறது. ஆசாரியார் வண்டிப் பட்டா அடிக்கிறார். எருமைக்கார நாய்க்கரம்மா வீடு. மராட்டியன் மில்ட்டேரி கிளப்பு. குண்டு ராவுத்தர் லாடக் கொட்டகை. சாலையோரம் கயிற்றுக் கட்டுடன் விழுந்து கிடக்கும் மாட்டுக்கு ராவுத்தர் லாடம் கட்டுகிறார். நல்லதண்ணீர்க் கிணற்றுப் பாதை. முன்குடுமி மலையாளி வேலாயுதத்தின் ரம்பக் கிடங்கு. வீடுகள், யூனியன் ஆபீஸ். பில் கலெக்டர் காடுவெட்டி சேர்வை காக்கிச் சட்டையும் சந்தனப் பொட்டும் கட்கத்தில் காகிதக் கட்டுகளுமாய் நிற்கிறார். தெற்கே, ஊருக்குள் செல்லும் சாலையில் திரும்பியதும், ‘ஈப்போ’ முத்துராக்குபிள்ளை பலசரக்குக் கடை. தண்டாயுதம் செட்டியார் கமிஷன்கடை. ‘மைனர்’ கடற்கரை நாடார் சந்தனக் கடை... ‘கோனக் கிராம்’ வைத்திருக்கிறார். ஒரு ‘பிளேட்டு’ கேட்டு விட்டுப் போகலாம். ‘அமராவதி உந்தனுக்கு அழகான கல்யாணமாம்’ அப்போதுதான் முடிந்தது. பையன்கள் அடுத்த பாட்டை எதிர்பார்த்து ஆவலுடன் நிற்கின்றனர். பிளேட்டு வைத்துக் கொண்டிருந்த பெரியசாமி பிள்ளை அதை மறந்து, சட்டையை நீவி விசிறிக் காம்பினால் முதுகைச் சொறிகிறார். கடைக்காரருக்கு எதிரே உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த ‘சாப்புக் கடை’ செல்லையா பையன்களின் பக்கம் பார்வையைத் திருப்புகிறார். “ஏண்டா, படிக்கிற பயகளுக்குக் கடை வீதியில என்னடா வேடிக்கை, ஓடுங்கடா.” பையன்கள் வீடு நோக்கி ஓடுகிறார்கள். புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|