முகை

23. கலிக்குஸுமான்

     சிங்கப்பூர் கத்தே மாளிகையில் இந்திய செக்யூரிட்டி செர்விஸ் அலுவலகம். தெருப்புறச் சுவரோரம் பெரிய மேசைக்குப் பின்னே நேதாஜியின் இடப்பக்க முகம் தெரியும் வர்ணப் படம் தொங்குகிறது.

     பாண்டியன் உள்ளே நுழைந்து வந்தனை செய்தான்.

     மேசை மீதிருந்த காகிதக் கட்டுகளை ஆழ்ந்து பார்வையிடும் பாவனையில் சிறிது நேரத்தைக் கழித்தபின், கர்னல் தலையைத் தூக்கி ஒரே கூர்ம்பார்வையாய் நோக்கினார்.

     “எஸ்ஸ்?”

     “கமாண்டோ காப்டன் கே.கே. 282. மேலுத்தரவுக்காக வந்திருக்கிறேன்.”

     “கமாண்டோ காப்டன், ஙெம்? ஹஹ்ஹஹ்ஹா... கமாண்டோ காப்டன்! ஹிஹிஹிஹிஹி... இந்திய தேசிய ராணுவத்தில் கமாண்டோ அணிகளோ, காமிகாஸே பிரிவோ கிடையாது... உன்னை மீண்டும் மந்தையில் சேர்க்கவே இந்த உபாயம்... பெயர்?”

     “பிரமோத்சந்திர மஜும்தார்.”

     “மஜும்தார்... பெங்காலி... அரிசி தின்னி...” இடைக்கையை நீட்டினார்.

     வலக்கையில் பிடித்திருந்த உறையைக் கொடுத்தான்.

     கர்னல் உறையைப் பிரித்து, உள்ளேயிருந்த கடிதத்தை உருவி எடுத்துப் பார்த்து, அதில் ஏதோ எழுதி, இடப்புறச் செருகைத் திறந்து அதில் போட்டு விட்டுப் பார்வையை உயர்த்தினார்.

     “எனது மேலதிகாரி உரிமை ஒருபுறமிருக்க, இந்த அலுவலைப் பொறுத்தவரையில் உன்னைக் கீழாளாகக் கருதாமல், உடனாளியாக நடத்த விரும்புகிறேன்” சிகரெட் பற்ற வைத்தார். “நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமையை - அது என்னவென்பதைப் பிறகு சொல்வேன் - நிறைவேற்ற அம்மாதிரி உறவுமுறை உதவியாக இருக்கும் என்பது என் முடிவு. உட்கார்.”

     “நன்றி, கர்னல் சாப்.” உட்கார்ந்தான்.

     “உன் மனதில் படுவதை மறைவின்றி என்னிடம் சொல்லலாம், - அதாவது நண்பனிடம் பேசுவதுபோல்... நாம் கவனிக்க இருக்கும் விவகாரம் பற்றிய உனது கருத்துகள் எனக்குத் தெரிய வேண்டும்... சிகரெட்?”

     கர்னலின் வலக்கை பெட்டியைத் தள்ளிவிட்டது.

     “நன்றி, கர்னல் சாப்” ஒன்றை உருவிப் பற்ற வைத்தான்.

     “உன் தனிப் பொறுப்பில் மிக முக்கியமான - ஆபத்தான பணியொன்று ஒப்படைக்கப்படும்... படையில் சேருவதற்கு முன் எங்கே வாசம்?”

     “சுமத்ராவில் - மெடான் நகர்.”

     “என்ன செய்து கொண்டிருந்தாய்?”

     “வட்டிக் கடை அடுத்தாள். பிறகு...”

     “வாட்! செட்டி?... செக்யூரிட்டி செர்விஸ் பற்றி என்ன நினைத்திருக்கிறீர்கள்? லாலா, பனியா, செட்டிகளுக்கெல்லாம் இதுதான் புகலிடமா.”

     பாண்டியன் முறுவலித்தான்.

     “பரவாயில்லை... கிடைக்கிற ஆள்களை வைத்துதானே நான் வேலை பார்க்க வேண்டும். சிறைப்பட்டது உனக்கு நல்லதாய்ப் போயிற்று. இன்றேல் பர்மா சென்றிருப்பாய். அங்கே செயல்வீரர்களுக்குச் சாவு திண்ணம்... மலேயாவுக்கு வருமுன்னர், தமிழர்களை கிளார்க் வேலைக்கும் அரிசி தின்பதற்குமே லாயக்கு என்று எண்ணியிருந்தேன்.”

     “அது உண்மையே.”

     “இல்லை, இப்பொழுது என் கருத்து மாறிவிட்டது.”

     கர்னல் சில விநாடிகள் மவுனமாய் வலக்கையில் சிகரெட் புகைவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் குறுகின.

     “ரக்பீர்லால் பாழுந்தடியன்... அவன் மனைவி ஆற்றில் குதித்துச் செத்துப் போனாள். முதல் ரக அயோக்கியன்... நீ செய்தது ராணுவச் சட்டப்படி கடுங்குற்றம். சமய சந்தர்ப்பங்களின் உதவியால் உயிர் பிழைத்தாய்.”

     சிகரெட் சாம்பலை விரலால் தட்டிக் கொஞ்சம் கொஞ்சமாய் அகற்றிக் கொண்டிருந்தார்.

     “உனக்கு முதன்முதலாகக் கொடுக்கப் போகும் வேலை கொஞ்சம் கடினமானதே. ஆனால் செயல் திறனைக் காட்டுவதற்கான அரும்பெரும் வாய்ப்பு... நவயுக நெப்போலியனான நமது ஜெனரல் சிவநாத்ராயைத் தெரியுமா?”

     “கேள்விப் பட்டிருக்கிறேன்.”

     “ரஷ்யாவில் ஜெர்மன் மத்திய சேனைத் தொகுதிப் பான்சர்கள், குடெரியான்* தலைமையில் அன்றி, ஜெனரல் சிவநாத்ராய் தலைமையில் இயங்கியிருப்பின், மாஸ்கோ வீழ்ந்திருக்கும் என்பது ராணுவ நிபுனர் ஒருவரின் கருத்து; அவர் யார், தெரியுமா?”

     * கர்னல் ஜெனரல் ஹய்ன்ஸ் குடெரியான் - ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஜெர்மன் ‘மின்னல் போர்’ சேனாதிபதி. பிரெஞ்சு ராணுவத்தைச் சின்னாபின்னமாய்ச் சிதைத்தெறிந்த பான்சர் முன்னணிக்குத் தலைமை தாங்கிய சூரன். இவர் பாய்ச்சல் வேகத்தைப் பார்த்து அரண்ட ஹிட்லர், நிற்பாட்டு உத்தரவு பிறப்பித்திராவிடின் 338 ஆயிரம் நேசத் துருப்புகள் ‘டன்கெர்க்’கில் கப்பலேறித் தப்பியிருக்க முடியாதென்பது ராணுவ நிபுணர்களின் ஒருமித்த தீர்ப்பு.

     “தெரியும். ஜெனரல் சிவநாத்ராய்.”

     “ஆ! சொல்லிவிட்டாயே.”

     “அவர் போர்முகப்புக்குப் போகாமல் சிங்கப்பூரிலேயே இருப்பது ஏன்?”

     “அரிசிக் கிடங்கைப் பார்த்துக் கொள்ளச் சரியான வீரன் வேறு யாரும் தென்படாததால்.”

     “ஜோத்தோ, கீர்த்தியுடன் தேர்வு... இப்போது அலுவல்... நான் சொல்லப் போவது மிகமிக ரகசியமான - சிக்கலான விஷயம். என்னுடைய அனுமதியின்றி இதை யாருக்கும் சொல்லக்கூடாது. ஜெனரல் சிவநாத்ராய் - அவர்தான் அரிசி வியாபாரி - அவரிடமிருந்த முக்கியமான கடிதம் ஒன்று மறைந்து விட்டது. கவனிக்கிறாயா?”

     “கவனித்துக் கொண்டிருக்கிறேன். கர்னல் சாப்.”

     “அதை எப்படியாவது கண்டுபிடித்துக் கொண்டு வர வேண்டும்.”

     “சரி, அடையாளம்?”

     “நேதாஜிக்குப் பர்மா விடுதலைச் சேனையின் தலைவர் அவுங்சான் எழுதியது. மஞ்சள் காகிதம், வங்காளி எழுத்து...”

     “வங்காளி எழுத்து?”

     “அவுங்சானுக்கு வங்காளி பாஷை தெரியும்.”

     “எனக்கு வங்காளி எழுத்தில் பழக்கமில்லையே.”

     “என்ன மஜும்தார் நீ! மீன் தின்னவும் தெரியாது போலும்.”

     குனிந்து மேசையின் வலப்புறச் செருகு ஒன்றை இழுத்து, வங்கமொழி அச்சு, கையெழுத்துக் காகிதங்களை எடுத்து நீட்டினார்.

     வாங்கிப் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தான்.

     “வைத்துக் கொள்.”

     “நன்றி” காகிதங்களைச் சராய்ப் பைக்குள் திணித்துக்கொண்டு கேட்டான்: “எங்கு எப்பொழுது, ஏன் காணாமற் போயிற்றென்று எனக்குத் தெரியலாமா?”

     “ஜெனரலின் அறையில் உள்ள பெட்டகத்திலிருந்து சென்ற ஒரு மாத காலத்திற்குள். ஏன்? கடிதம் ஜப்பானியருக்கு விரோதமானது.”

     “மன்னிக்கவும், அரிசி வியாபாரிக்கு யார்மீது சந்தேகம்?”

     “சர்ச்சில்மீது! ஹஹ்ஹஹ்ஹா” வெடிச்சிரிப்புக் கிளம்பியது. “ஜெனரலின் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிவதில் பயனில்லை. ஷம்சு மயக்கத்தில் அவரே கடிதத்தைத் தின்றிருக்கவும் கூடும்.”

     “நான் ஜெனரலிடம் போய் இதுபற்றிப் பேசலாமா, இடத்தைப் பார்க்கலாமா?”

     “நோ நோ நோ. நீ வெறும் லெப்டினன்ட். நெப்போலியர்கள் தராதர விஷயத்தில் மிகவும் கண்டிப்பாயிருப்பர்.”

     “தாங்கள் போய்...”

     “நான் கர்னல்தான். ஜெனரலுக்கு ஜெனரல், கர்னலுக்கு கர்னல். அதுதவிர, ஜெனரலுக்கு என்னைப் பிடிக்காது. வீண் தகராறுகள் ஏற்படும்... நேதாஜி உத்தரவு பிறப்பித்தால், அதுவேறு விஷயம்; நீயே போய் விசாரிக்கலாம்.”

     “மன்னிக்கவும், நேதாஜிக்கு விஷயம் தெரியுமா?”

     “மன்னிப்புக் கோரிக்கைகள் போதும், நிறுத்திக்கொள்... அவர் வெளியூர் போயிருந்தபோது தனி அஞ்சலன் மாறலாய் வந்த கடிதம். திரும்பியதும், கொடுக்க மறந்து விட்டார்கள். கடிதம் வந்ததைத் தெரிந்து, கொண்டுவரச் சொல்கையில் பார்த்திருக்கிறார்கள்; காணோம். கடிதம் எப்படியும் தன் கைக்கு வந்து சேர வேண்டுமென்பது நேதாஜியின் கட்டளை - ஜெனரலுக்கு அல்ல, எனக்கு...! அரச நீதி எப்படி இருக்கிறது, பார்.”

     கண நேரத்தில் சோகச் சிலையாய் மாறிப்போன கர்னல் இரு கைகளையும் அகல விரித்தார்.

     பாண்டியன் சிரித்தான்.

     “சிரிக்காதே, இளைஞனே, சிரிக்காதே. என் மனம் துயரக்கடலில் ஆழ்ந்து துடிக்கிறது.”

     “தங்களுக்கு யார்மீது சந்தேகம்?”

     “யார்மீதும் இல்லை... அது போகட்டும். இந்தத் துயரமான கடித விவகாரத்தை ஒதுக்கிவிட்டுக் கொஞ்சம் மகிழ்ச்சியான விஷயங்கள் பற்றிப் பேசலாம்... க்ம்ஹ்... திருமதி விலாசினி என்ற அழகியைத் தெரியுமா? சுதந்திர இயக்கப் பெருந்தலைவர்களில் ஒருவரான பி.எஸ்.மேனன் - பொட்டாத்து சங்குண்ணி மேனனின் தங்கை.”

     “கேள்விப்பட்டதுதான்.”

     “எப்படி?”

     “தட்டுவாணி என்று.”

     “த்ச்தச்த்ச்... மிகக் கடுமையான சொல், மிக மிகக் கடுமையான சொல்... பெரிய இடத்து பெண்களைப் பற்றிப் பேசுகையில் எப்போதுமே நாசூக்கான வார்த்தைகளை உபயோகித்துப் பழக வேண்டும்... பேரழகி, பொன்னிறம், உருண்டு திரண்டு போதையூட்டும் உறுப்புகள்.”

     கர்னலின் கண்கள் கனவு மண்டலத்தில் மிதந்தன.

     “அவளுடைய வாடிக்கைக்காரர்களில் ஒருவர் நமது ஜெனரல்.”

     “வாடிக்கைக்காரர்கள்! இதுவும் கடுமையான சொல்... பரவாயில்லை... விலை அதிகம். ஓர் இரவுக்குப் பல அரிசி மூட்டைகள். ரேஷன் பொறுப்பு என்னிடமில்லை... திருமதி விலாசினியிடம் ஏதாவது துப்புக் கிடைக்கும் என்று பார்க்கலாம்.”

     “தேவை ஏற்படின் வல்லடி முறைகள்?”

     “ஆபத்து. வலிய புரவலர்கள் பலர்.”

     “காதல் நாடகம்?”

     “நோ யூஸ். அத்துடன் அவளுக்குக் கறுப்பு ரத்தம் பிடிக்காதென்று கேள்வி. வெள்ளை, பழுப்பு, மஞ்சள்... ஹஹ்ஹஹ்ஹா.”

     நாடகச் சிரிப்பு முழங்கியது.

     “மஞ்சள் ரத்த வரிசைசையில் சீனர்களும் உண்டோ?”

     “இராது, ஆபத்தான பள்ளத்தில் காலை விடமாட்டாள்.”

     “நன்றி, விலாசினியின்... மன்னிக்கவும், தாங்கள் அனுமதித்திருப்பதால் குறுக்கு விசாரணை போல் கேள்விமேல் கேள்வி...”

     “எத்தனை கேள்வி வேண்டுமாயினும் கேள். எனக்கு வேண்டியது அவுங்சான் கடிதம்.”

     “அல்லது என் சாவு.” சிரித்தான்.

     “அல்லது... தோல்விக்குரிய தண்டனை. ஒவ்வொன்றுக்கும் விலை உண்டு. இளைஞனே, விலை உண்டு. வெற்றிக்கு விலை உண்டு; தோல்விக்கும் விலை உண்டு. விலையின்றி எதையும் பெற முடியாது. அது நிற்க, மீண்டும் சொல்கிறேன்; எத்தனை கேள்வி வேண்டுமாயினும் கேள், எனக்கு வேண்டியது அவுங்சான் கடிதம்.”

     “அதை நான் கொண்டு வருவேன்.”

     “ஜோத்தோ! வெற்றிக்கு முதல்படி முடியுமென்ற நம்பிக்கை.”

     “திருமதி விலாசினியின் மஞ்சள் ரத்த வரிசையில் யார் யாரைக் கவனிக்கலாம்?”

     “கெம்பித்தாய் மேஜர் சடாவோ யாமசாக்கி. அவனுடைய கொள்கை: சந்தேகம் உதித்ததும் சுட்டுத் தள்ளு. ஹஹ்ஹஹ்ஹா... எ வெரி டஃப் கஸ்டமர்.”

     “ஆளைத் தெரியாது.”

     “படம் தருகிறேன்.”

     “விலாசினியிடம் சச்சரவு ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். புகார் செய்கிறாள். என்ன ஆகும்?”

     “சிக்கல், பெரிய வில்லங்கம். வலிய புரவலர்கள் பலர்... கூடுமானவரை இப்போதைக்கு முரட்டு வேலை எதுவும் வேண்டாம்.”

     “மேஜர் யாமசாக்கி?”

     “கெம்பித்தாய் மேஜர் சடாவோ யாமசாக்கியிடம் அரைகுறை வேலைக்கே இடமில்லை. வெற்றி அல்லது சாவு... அவுங்சான் கையெழுத்து உனக்குத் தெரியாதே, காட்டுகிறேன்.”

     குனிந்து, வலப்புறக் கீழ்ச் செருகைத் திறந்திழுத்துக் கடிதப் புகைப்படங்கள் சிலவற்றை எடுத்து மேசை மீது போட்டார்.

     “மனதில் பதியவைத்துக் கொள்.”

     கையெழுத்தைக் கொஞ்ச நேரம் கூர்ந்து கவனித்து மனனப்படுத்திக் கொண்டு, புகைப்படங்களை அடுக்கி எடுத்துக் கொடுத்தான். கர்னல் அவற்றை வாங்கி மீண்டும் செருகுக்குள் திணித்துப் பூட்டினார்.

     “யாமசாக்கி ரங்கூனில் இருந்தவன். அவுங்சான் பற்றிய விவரங்கள் தெரியும்.”

     மணியை அழுத்தினார். ஓடிவந்த சிப்பாயிடம் காபி கொண்டு வரும்படி சொல்லிவிட்டு, புது சிகரெட் ஒன்றை எடுத்து வாயில் கவ்விப் பழையதில் பற்ற வைத்து, மேற்புறச் சுவரைப் பார்த்தவாறு புகையை இழுத்து ஊதிக் கொண்டிருந்தார். பிறகு பாண்டியன் திக்கில் திரும்பி சிகரெட் பெட்டியை நீட்டினார்.

     ஒன்றை உருவிப் பற்ற வைத்தான். வாயில் புகைச்சுருள்கள் கிளம்பிக் கலைந்து கொண்டிருந்தன. கர்னலின் எகத்தாளப் பேச்சு முறையில் நடிப்பு எவ்வளவு, இயல்பு எவ்வளவு... நடிப்புக்குக் காரணம் வேடிக்கையா, ஏமாற்று வேலையா... நகைச்சுவை, ஆழம் பார்ப்பது...

     காபி வந்தது. ஊற்றிக் குடித்தனர்.

     “ம்க்ம்ம்ஃம், ம்க்ம்ம்ஃம்...” கர்னல் நன்கு சாய்ந்து கால்களை நீட்டினார் “இப்பொழுது, நாம் தெரிந்து கொண்ட தகவல்கள்...”

     “கடிதம் காணாமல் போயிற்று. யாமசாக்கி சொல்லியோ, அவனிடம் கொடுத்துப் பணம் பெறலாமென்றோ, நமது நெப்போலியனிடமிருந்து மேன்மை தாங்கிய திருமதி விலாசினி அம்மையார் அவர்கள் திருடியிருக்கலாம். அல்லது நெப்போலியனுக்கு ஏதோ ஓர் இடுக்கியைப் போட்டு அவரே கொண்டு போய்க் கொடுக்கும்படி செய்திருக்கலாம். கடிதம் ஒருவேளை தற்செயலாகவும் தவறியிருக்கக் கூடும்... அது நிற்க, ஜப்பானியர் இப்போது அயர்ந்து போயிருக்கிறார்கள். நடக்கிறபடி நடக்கட்டும்.”

     “முடிவுகள் பிரமாதம். அவுங்சான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?”

     “ஆ, அது பரம ரகசியம்! உனக்கு எப்படித் தெரிந்தது?”

     “திஸ் இஸ் லண்டன் காலிங் இன் த...”

     “வாட்! சிறையில் ரேடியோ?”

     “பி.பி.சி செய்திகளைத் தவறாமல் கேட்கும் நண்பர் ஒருவர் எனக்குத் தினசரி தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார்.”

     “சிறை விதிகளுக்குப் புறம்பாக - பலத்த கட்டுக் காவலையும் மீறி, நீ துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்திருக்கிறாய். இந்தக் குற்றச்சாட்டின்மீது பின்னர் விசாரணை நடைபெறும்... அது ஒருபுறம் இருக்கட்டும், கடிதம் ஜப்பானியர் கையில் சிக்கினால் நேதாஜி மீது சந்தேகம் பிறக்கும்.”

     “ஆகவே கடிதத்தை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும்.”

     “அவ்வளவுதான். தமிழர்களைப் பற்றிய எனது மதிப்பு ஒவ்வொரு விநாடியும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. உங்கள் கறுப்பு நிறம்தான் எனக்கோ, விலாசினிக்கோ பிடிக்கவில்லை. ஹஹ்ஹஹ்ஹா.”

     “கறுப்பும் வெள்ளையுமே இயற்கை நிறங்கள். மற்றவை கலப்படம்.”

     “ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா... கலப்படம்! கலப்படம்! ஹஹ்ஹஹ்ஹா” கர்னல் கெக்கலித்தார். “என் பழுப்பு நிறத்தைக் குறிப்பிடுகிறாயோ? நீயும் அசல் கறுப்பனல்ல, நினைவிருக்கட்டும். அப்புறம்?”

     “விலாசினியை மடக்க ஒரு யோசனை...”

     “ஷாம்பெய்ன் அல்லது ஒய்ன் - அசல் சீமைச் சரக்கு... அவளுக்கு உயிர். ஆனால் கிடைப்பதரிது.”

     “கிடைக்கும். விலை அதிகமாயிருக்கலாம். கிடைக்காவிடின் போலிக்கு அசல் உருவம் தயாரிக்க முடியும். சீன நிபுணர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.”

     “இன்னொன்று. பெண்களைப் பற்றி உனக்கு எவ்வளவு தெரியும்? விலாசினி பல ஆடவர்களை மடக்கிக் கை தேர்ந்தவள். அவளைக் கவிழ்ப்பதற்குப் பரந்த பெண் - அனுபவம் தேவை. உனக்கு அப்படி அனுபவம் உண்டா?”

     “போதிய அளவுக்கு உண்டு.”

     “வயது குறைவாய்த் தெரிகிறதே.”

     “சிறு வயதிலேயே அனுபவம் ஆரம்பித்து விட்டது.”

     “ஜோத்தோ! இந்த விவகாரத்துக்கு அது பயன்படும். சரி, ஒரு சிக்கல். விடை சொல் பார்க்கலாம். படித்துப் பட்டங்கள் பல பெற்ற பணக்காரப் பெண் ஒருத்தியை அப்பாவி இளைஞன் ஒருவன் மணக்கிறான். அலுவலகத்திலிருந்து அவன் வீடு திரும்பும் நேரமெல்லாம், நாய்க்குட்டியுடன் கடற்கரையில் அல்லது கடை வீதியில் திரிகிறாள். சமைக்கத் தெரியாது என்று சொல்வதோடு, பிள்ளை பிறந்தால் உடல் கெட்டுப் போகுமென்றும் சண்டித்தனம் செய்கிறாள். அவளை மடக்க என்ன செய்வது, சொல் பார்க்கலாம்.”

     ஆவலுடன் பதிலை எதிர்பார்ப்பவர்போல் முன்னே குனிந்தார்.

     “மிகச் சுலபம், மிக மிகச் சுலபம். முதலில் நெஞ்சு மயிர் தெரிவதற்காகச் சட்டை, பனியனைக் கழற்றி எறிந்துவிட வேண்டும். பிறகு மனையாளின் கொண்டையைப் பிரித்திழுத்துப் பிடித்துக் கொண்டு, கன்னத்தில் இரண்டு அறை - குடெரியான் வகை. குண்டியில் இரண்டு மிதி - ரொகொசாவ்ஸ்கி ரகம். இறுதி நடவடிக்கையாகக் கீழே விழுத்தாட்டி ஒரு எற்று. அப்புறம்? - நானே சமைத்துப் போடுகிறேன். தங்களுக்கு என்ன பிடிக்கும்? மோர்க் குழம்பா, பருப்புக் குழம்பா, வற்றல் குழம்பா? ஆட்டுக் கறியா, மீன் கறியா, கோழிக்கறியா...? அதிருக்கட்டும். வெந்நீர் போட்டுத் தருகிறேன். குளியுங்கள். அதற்குமுன் ஆபீஸ் அலுப்புத் தீரக் கொஞ்ச நெரம் உடலைப் பிடித்துவிடவா? - பிறகு கதநாயகனும் கதாநாயகியும் ஈருயிரும் ஓருடலுமாய் ஆண்டுக்கொரு பிள்ளை பெற்றுக் கொண்டு நெடுநாள் வாழ்ந்திருப்பர். சுபம், சுபம், சுபம்.”

     கர்னல் அறை அதிரச் சிரிக்கலானார்.

     “நீ முரட்டு வைத்தியன்...! மிக முரட்டு வைத்தியன்! நோயாளிப் பெண்ணை உன்னிடம் ஒப்படைப்பது ஆபத்தான வேலை.”

     “உடனடிப் பலனுக்கு முரட்டு வைத்தியம். ஒரு வேளை மருந்திலேயே குணம் தெரியும். குணமின்றேல் பணம் வாபஸ். குறிப்பு: பத்தியம் இல்லை... ம்... இந்தச் சிக்கலின் உண்மை...”

     “புரிகிறது, வடவர் சூழ்ச்சியாக இருக்கலாம். ஹ்ம்? உனக்குக் கூரிய மதிநுட்பம் இருக்கிறது.”

     உள் சட்டைப் பையிலிருந்து நேதாஜியின் கடிதம் ஒன்றை நீட்டினார்.

     வாங்கிப் படித்துப் பார்த்தான். கடிதம் பூடகமாக, ஆனால் தகவல் தெரிந்தவர்களுக்கு விளங்கும்படியாக இருந்தது.

     “முதலில் விலாசினியைக் கவனி. யாமசாக்கி விவகாரம் பெரிய சிக்கல். நேதாஜியிடம் கலந்து பேசுகிறேன். தெளிவான நேரடிக் கட்டளையின்றி அவன் வம்புக்குப் போகக்கூடாது.”

     “சரி.”

     “தேவைப்படும் பணத்தை நேரில் வந்து வாங்கிக் கொள்.”

     “சரி.”

     “செக்யூரிட்டி செர்வீஸில் பணத்துக்குப் பஞ்சமில்லை. செயல் வீரர்கள்தாம் குறைவு... இன்னொரு விஷயம்; யாமசாக்கி திடுமென மறைந்து விட்டான். புலன்விசாரணை நடக்கிறது.”

     “படம்...”

     “ஆமாம்” மேசைச் செருகு ஒன்றை இழுத்துச் சிறு புகைப்படம் ஒன்றை எடுத்து நீட்டினார். “வைத்துக் கொள். கோத்தா பாலிங் பள்ளிகள் பலவற்றை நீந்தியவன்: மஞ்சூரியாவில் ஜெனரல் டோய்ஹாராவிடம் கை பழகிய ஆள். நினைவிருக்கட்டும்.”

     “மன்னிக்கவும், நீங்களே விலாசினியைக் கவனித்தால் என்ன?”

     “இருமுறை முயன்றேன், தோல்வி. மனதை மயக்கும் உடல், அவளை அணுகியதுமே கடமை காற்றில் பறந்து விடுகிறது. மேலும், அவளை நெருங்குவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. குருட்டடியாய் அமுக்கினால்தான். விலாசினியை மடக்க முடியுமென்று நம்புகிறாயா?”

     “முயன்று பார்க்கிறேன். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு நாலு போடு போட்டால் உண்மையைக் கக்கி விடுவாள். நீங்கள்தான் ‘மயிலே மயிலே இறகு போடு’ வகையில் நடந்து கொள்ளும்படி...”

     “நான் அப்படியொன்றும் சொல்லவில்லை. எச்சரிக்கையாக நடந்து கொள்ளச் சொல்கிறேன். விலாசினியின் அண்ணன் நமது மதிப்பிற்குரிய தலைவர்களில் ஒருவர்; நேதாஜியின் பள்ளித் தோழர்; அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்... இதற்குமேல் சொல்லத் தேவையில்லை... கோத்தாபாலிங் கைவரிசை சில சமயங்களில் ஆபத்தாக முடியும்.”

     “ஆம்.”

     “என்னைப் பார்க்க விரும்பினால் எந்நேரமும் வரலாம். இந்தச் சீட்டை வைத்துக் கொள்.”

     முத்திரையிட்ட அட்டைத்துண்டு ஒன்றைக் கொடுத்தார். பிறகு மேசையின் நடுச் செருகைத் திறந்து, டாலர் நோட்டுகள் நிறைந்த காக்கி உறையைத் தூக்கிப் போட்டார்.

     “எடுத்துக் கொள். விவரமான செலவுச் சிட்டை தேவையில்லை. இன்ன தேதியிலிருந்து இன்ன தேதிவரை இவ்வளவு என்று எழுதிக் கொடுத்தால் போதும்... எனினும் சிக்கனமாய்ச் செலவு செய்வது நல்ல பழக்கம்.”

     “நன்றி, கர்னல் சாப்.” எழுந்தான்.

     “தளவாடங்கள்?”

     “இல்லை.”

     கர்னல் இடப்புறச் செருகை இழுத்து, வயலட் கோலங்கள் போட்ட பச்சைக் காகிதத்தை உருவி எடுத்து, ஓர் உறைக்குள் போட்டுக் கொடுத்தார்.

     “நீ போகலாம்” என்று கையை நீட்டினார்.

     கை குலுக்கினார்கள்.

     வந்தனை செய்துவிட்டுத் திரும்பி நடந்தான்.