உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முகை 24. விலாசினி முன்புறத்துப் பெரிய அறை. வடகிழக்கு மூலைச் சீன மேசை மீதிருந்த வானொலிப் பெட்டி, ஜப்பானிய இசையை நிறுத்திவிட்டு, வழக்கமான செய்திக் கதையைப் படிக்கத் தொடங்கியது. கீழ்ப் பக்கத்துத் தோட்டத்துச் செடிகளினூடே புகுந்து மூன்று நீள்சதுர ஜன்னல்களின் வழியாய் உள்ளே வந்த சூரிய வெளிச்சம், அசைந்தாடிய செடி நிழல்களால் அலைப்புண்டு தடுமாறியது. திண்டுகள் அணைந்த சோபாவின்மீது விலாசினி சாய்ந்திருந்தாள். அப்போதுதான் குளிப்பாட்டி உலர்த்திய கரிய கூந்தலில், வலக்காது மேலே இரண்டு இலைகளின் துணையோடு ஒற்றை ரோஜா பூத்திருந்தது. நெற்றியின் பொன்னிறத்துக்கு மறுவாகக் குங்குமத் திலகம் - இல்லை, உதட்டுச் சாயப் பொட்டு. பட்டும் படாமல் செவ்வண்ணம் தீட்டிய இதழ்கள் விரிந்து முத்துப்பல் வரிசையைக் காட்டின. மெத்தைத் தலை முக்காலியை இழுத்துப் போட்டுக் கால்களுக்குத் தாங்கல் கொடுத்தாள். பக்கத்து நாற்காலியில் கிடந்த ஊதா வெல்வெட் வட்டத் திண்டை எடுத்து மார்போடணைத்து அழுத்தினாள். ம்ஹ்ம் - ம்ஹ்ம் - ம்ஹ்ம்... காலமெல்லாம் இப்படியே கழிய வேண்டியதுதான். திண்டு நசுங்கியது. ம்ஹ்ம்... ம்ஹ்ம்... ம்ஹ்ம்... பாழுந்தடியர்கள் பன்றி எருமை காண்டாமிருகம். விழுந்து புரளவும் கடிக்கவும் வாந்தி எடுக்கவும்தான் தெரியும். ஒருவனைப் போல் எல்லாரும் - மாலை போட்டவன், கூட்டி வந்தவன், ஒட்டிக் கொண்டவன், வக்கீல், டாக்டர், என்ஜினியர், காப்டன், மேஜர், ஜெனரல், பன்றி, எருமை, காண்டாமிருகம் புரள்வது, கடிப்பது, வாந்தி எடுப்பது... வெல்வெட் திண்டின் மாரணைப்பும் கற்பனைச் சுரப்புமாய்ச் சேர்ந்து விளைத்த போதை நரம்புப் பின்னலில் முறுக்கேற்றி மெய்மறத்தியது. கண்கள் மேலே செருகின. ம்ஹ்ம், ம்ஹ்ம்... மலையாளத்தில் பாலக்காடு அருகே பிறந்து வளர்ந்து சென்னைக்குப் படிக்கப் போகும் வரையில் விலாசினி மனம் வருந்தி அறியாள். பிறகு வருத்தத்தின் மேல் வருத்தமும் ஏமாற்றத்தின் மேல் ஏமாற்றமுமாய்ப் பாய்ந்து வந்து உடலையும் உள்ளத்தையும் வாட்டின. அவள் தாய் அம்மணியுடன் சம்பந்தம் வைத்திருந்த புடைவைக் கடை அனந்தகிருஷ்ண ஐயர், சம்பந்தப்பிள்ளைகளுக்குச் செய்ததில் எவ்விதக் குறைவுமில்லை. மனைவி வயிற்றுப் பிள்ளைகளைப்போலவே அம்மணி வயிற்றுப் பிள்ளைகளையும் சீமைக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். கடைக்குட்டி விலாசினி சென்னையில் படித்துக் கொண்டிருக்கும்போது பத்மநாபன் என்ற வக்கீலுக்கு மாலையிட்டதன் விளைவாக வாழ்க்கைச் சுழலில் சிக்கிக் கொண்டாள். இல்லையேல் அவளையும் சீமைக்கு அனுப்பி வைத்திருப்பார் ஐயர். வெதுவெதுப்பாய் இதமூட்டிய இளஞ்சூடு கொடுந்தீயாயப் பற்றிச் சுட்டது. சுவாமி, இப்படியும் ஓர் ஆண் பிள்ளையா! என்ன விபரீதப் பழக்கம்... மூடியிருந்த கண்களை நெருக்கியிறுக்கி மூச்சைத் துரத்தினாள். மாலையிட்டவனால் தான் கெட்டேன். மெரினாவிலும், எஸ்பிளனேடிலும், எழும்பூரிலும், அடையாரிலும் அலைந்தேன். திருச்சூர் பட்டன் வந்து சேர்ந்தான். வேலையாகிக் கப்பலேறியவளைப் பின் தொடர்ந்தானே, ஏன்? தலைவிதி. இந்தப் பிராமணனுக்கு இருந்திருந்தாற்போல் வந்த கேடு. நாகரிகப் பெண்ணிடம் வெறுப்புத் தட்டிவிட்டதாம். பரட்டைத் தலை அழுக்குடல்காரிகள்தான் பிடிக்கிறது... பர்மாவுக்குக் கப்பலேறிவிட்டான். பெரிய தேச பக்தன்... கட்டியழுது கத்த ஒரு பிள்ளை இல்லை. கல்யாணத்துக்கு முன் இருமுறை கருச்சிதைவானதில் கருவாசல் அடைத்துவிட்டதா... இராது, பார்வதி, சுஜாதா... குண்டு குண்டாய்ப் பிள்ளை பெற்றுக் கொண்டிருக்கிறார்களே... ம்ஹ்ம்... ம்ஹ்ம்... ம்ஹ்ம்... சாகும்வரை இந்த மிருகங்களையே கட்டி மாரடிக்க வேண்டியதுதானா? பன்றி, எருமை, காண்டாமிருகம் - விழுந்து புரள்வது, கடிப்பது, வாந்தி எடுப்பது... ச்சீ! மிருகங்கள் பன்றி எருமை காண்டாமிருகம். சரஸ்வதி இருந்தாள். அவளும் தொலைந்து போனாள். ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்... வீட்டுக்குக் குறைவில்லை. கத்ரீ - ஸ்பென்ஸ் கம்பெனி மானேஜர்களுக்காகக் கட்டப்பட்டது. சுற்றிலும் பெரிய தோட்டம். பல அறைகள், சுவரில் அரிய ஓவியங்கள். தரையில் பாரசீகக் கம்பள விரிப்புகள். சீமையிலிருந்து வரவழைக்கப்பட்ட பண்ட பாத்திரங்கள், இவ்வளவும் ஜப்பானியர் அள்ளிச் சென்றது போக மிஞ்சியவை. “அய்லான்! பாவா கோப்பி.” இனிய மென்குரல் கட்டளை பாடியது. “யாமெம்.” மேசை மீதிருந்த ஆமையோட்டுப் பெட்டியைத் திறந்து ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்து வளையங்களாக ஊதினாள். பிறகு மூக்கு வழியாய்ப் புகை புறப்பட்டது. யுத்தம் முடியும்வரை இந்த நாற்றம் பிடித்த சிகரெட்தான். சிகரெட்டாம் சிகரெட். சிகரெட்டைப் பாரேன். யுத்தம் முடிந்தபின் பிரிட்டிஷ் சிகரெட் கேரிக்... ஷாம்பெய்ன், ஷெர்ரி, ஷடவ்ட்... இந்தச் சனியன்களின் தொல்லையும் ஓய்ந்து போகும். நல்ல ஆண்பிள்ளையாக ஒருவனைக் கூட்டிக்கொண்டு பினாங்குக்குப் போய்விடலாம். வசிப்பதற்கு அதுதான் நல்ல ஊர். இந்தச் சனியன்கள் பன்றி எருமை காண்டாமிருகம் விழுந்து புரள்வது கடிப்பது வாந்தி எடுப்பது... ப்ஊஉஉ... சீ, என்ன சிகரெட் இது... எழுந்து, வாயிலிருந்த சிகரெட்டைக் கையில் எடுத்துச் சாம்பல் கிண்ணத்தில் போட்டு நசுக்கினாள். ஜரிகைச் செருப்பை மாட்டிக் கொண்டு போய்க் கண்ணாடி முன் நின்று பார்த்தாள். வழுவழுப்பாய்த் திரண்ட பொன் மேனிச் சிலை நேரில் நின்றது. சாயச் சிகப்பு இதழ்களை விரித்தாள். பல்லழகு தெரிந்தது. நெற்றியில் தொங்கிய கேசக் கற்றைகளைச் சரி செய்தாள். இடக்கை கழுத்தையும் கன்னங்களையும் வருடியது. அப்படியே கட்டிப் பிடித்தணைத்து முத்தம் கொடுக்கவாடி, என் கண்ணே விலாசினிக் குட்டி...! தாங்க முடியாத சிரிப்பு பீறிட்டு வந்தது. தன் காதல் கொண்டவள் தன் உருவத்தைப் பார்த்தவாறே சிரித்து நின்றாள்... திரும்பி நடந்து போய் சோபாவில் சாய்ந்தாள். மேசைமீது காபி இருந்தது. எடுத்துக் குடித்தாள். கதவு மணி கிணுகிணுத்தது. எந்த மிருகம் இது... எதாயிருந்தாலும் சரி, இப்பொழுது இடக்குத்தான். காப்டன் மேஜர் ஜெனரல் பன்றி எருமை கண்டாமிருகம். எந்த மிருமானாலும் சரி, இடக்குத்தான். சனியன்கள் சனியன்கள் சனியன்கள். எனக்குக் கிறுக்குப் பிடிக்கப் போகிறது. கிறுக்கு கிறுக்கு கிறுக்கூஉஉ... அய்லான் ஓசையில்லாமல் வந்து நீட்டிய சீட்டை வாங்கிப் பார்த்தாள். காப்டன் கே.ஆர்.விஜயன், ஐ.என்.ஏ. “எப்படி ஆள்?” “கறுப்பு - ஆனால் அழகன்.” வானொலிப் பெட்டியை அடைக்கச் சொல்லி விட்டுக் கண்ணாடியை நோக்கி விரைந்தாள். இடக்கை மாராப்பைச் சிறிது இறக்கியது. கூந்தல் காட்டில் மலர்ந்திருந்த ரோஜாப்பூவை வலக்கை சரி செய்தது. யாரிவன், எதற்காக வந்திருக்கிறான், மலையாளிப் பெயர்போல் இருக்கிறதே... ஜெனரல் அனுப்பி இருப்பானோ... அந்தச் சரக்கு கொள்முதல் இலாகா காப்டனின் நண்பனாக இருக்கலாம். மேசைக்குத் தெற்கே கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, வரச் சொல்லும்படி பணிப்பெண்ணிடம் உத்தரவிட்டாள். வளர்ந்த உடல் - தமிழன்! சாம்பல் நிறச் சராயும் வெள்ளைச் சட்டையுமாய் வந்தான். நடையுடை பாவனை, தோற்பை எல்லாம் கூடி யாரோ பெரிய புள்ளி என்று அறிவித்தன. வெறும் காப்டனா, முக்கியமான ஆளா... கத்தி போன்ற உடல். செதுக்கி அமைத்தவை போல் கைகால் மார்பிடுப்பு... பார்த்தபடியே இருந்தாள். ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்... பாண்டியன் தென்புற ஜன்னலை நோக்கி மெத்த மெதுவாய் நடந்தான். வலப்புறம் மூலையில் இருக்கிறாள். முதலில் ஒப்புயர்வற்ற அழகைக் கண்ட வியப்பு, பிறகு முகப்புகழ்ச்சி, வழிக்கு வராவிடின் குகை மனிதனின் வல்லடிமுறை... ‘யாரையும் காணோமே’ பார்வையுடன் பட்டுத்திரை தொங்கிய உள்கட்டு நிலைப்படியை நெருங்கினான். “ஹல்லோ!” அவயவங்கள் குலுங்க எழுந்து நடந்து நின்றாள். வந்தவன் திடுக்கிட்டுத் திரும்பினான். உதடுகள் விரிந்து மூடி, விரிந்து மூடின. தொண்டையில் எச்சில் இறங்கிற்று. கண்கள் இமைக்காமல் அகன்று விழித்தன. தலை லேசாய் ஆடுவது போலிருந்தது. கைகள் இரண்டும் கொஞ்சம் மேலே உயர்ந்து நிலைத்து நின்றன. “ஹ்ம்... ஹ்ம்.” குரல்வளையில் அடைப்பு. “நமஸ்காரம்.” “நமஸ்காரம். இப்படி வந்து உட்காருங்கள்.” தலை இடப்புறமாய்ச் சாய்ந்தது. எத்தனை எத்தனையோ பேர். ஆனால் இப்படிப் பார்த்ததுமே கிறுகிறுத்துத் திணறியவன் யாருமில்லை. பருவம் வந்தும் பழக்கமில்லாத பாப்பா போலும். மடியில் தூக்கி வைத்துக் கொண்டு சொல்லித்தர வேண்டும் சின்னப் பாப்பாவுக்கு... வந்தவன் விலகாப் பார்வையாய்ப் பார்த்து மயங்கி நின்றான். “உட்காருங்கள்.” நாற்காலியைச் சுட்டிக்காட்டி நாணம் தோன்ற நகைத்தாள். “நான் நிற்கிறேன், நீங்கள் உட்காருங்கள்.” “ஏன் அப்படிப் பார்க்கின்றீர்கள், ஹ்ம்?” மலையாள வாடை அறவே இல்லாத தமிழ்க் கேள்வியைப் போட்டுவிட்டு, உதடுகளைத் துருத்திச் சிரித்தாள். “இல்லை... ம்.” “பார்க்கப் பிசாசுபோல் இருக்கிறேனா... ஹ்ம்? தயவுசெய்து உட்காருங்கள்.” “ம்ம்... நான்.” அமர்ந்தான். “அய்லான்!” பாண்டியனுக்கு எதிர் நாற்காலியில் உட்கார்ந்தாள். “யா மெம்.” “கோப்பி, கேக், புவா.” “பாய்க், மெம்” பணிப்பெண் நகர்ந்தாள். “சிங்கப்பூரில்தான் இருக்கிறீர்களா? நான் பார்த்ததில்லையே!” “தென்கிழக்கு ஆசியாவெங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.” பார்வை அமைதியாகி, விலாசினியின் கழுத்துக்குக் கீழிறங்கி ஊசலாடியது. இடையிடையே கால்களையும், மடிமீது கிடந்த கைகளையும் நோக்கிற்று. விலாசினியின் முகம் ரத்தமேறிச் சிவந்தது. கண்கள் சந்தித்தபோது, ஆணாளனின் பார்வையை எதிர முடியாமல் தலைகுனிந்தாள். என்ன பார்வை, என்ன பார்வை...! என்ன உடல் என்ன உடல்...! மரவையில் காபி கூஜாவையும் வெள்ளித் தம்ளர்களையும், கண்ணாடிக் கும்பாக்களில் கேக்குகளையும் பழ அரியல்களையும் கொண்டுவந்து பக்க மேசையில வைத்துவிட்டுப் பணிப்பெண் போனாள். “காபி குடியுங்கள்” ஊற்றித் தம்ளரை நீட்டினாள். தம்ளரைக் கையில் வாங்கிக் கொண்டு புருவம் நெரிந்து, கண்கள் மேலேற, உதடுகளை விரிக்காமல் முறுவலித்தான். எதிரே இருந்தவளின் உடலுறுப்புகள் புடைத்துக் குமுறிக் கொண்டிருந்தன. “தனியாக இருக்கும் பெண்ணிடம் வந்து இப்படிக் குர்ரென்று பார்ப்பதுதான் தமிழ்ப் பண்போ?” போலிக் கோபத்துடன் தலையை ஆட்டினாள். “மன்னிக்கவும்” தம்ளரை மேசையில் வைத்துவிட்டு எழுந்தான். “ஏன், என்ன? உட்காருங்கள்.” “எனக்கும் இப்பொழுது மனம் சரியில்லை. கனவு காண்பதுபோல் இருக்கிறது. ஏதாவது உளறிவிடுவேன்.” “தயவுசெய்து உட்காருங்கள். எனக்கும்தான் மனது சரியில்லை.” கழுத்தை வெட்டினாள். கண்கள் செருகின. “சும்மா உளறுங்கள், நானும் உளறுகிறேன், ஹும்?” “ஏதாவது உளறிவிட்டால் கோபித்துக் கொள்ளக் கூடாது” உட்கார்ந்தான். “உளறுங்கள், வேண்டாமென்று சொல்லவில்லை. வந்த காரியத்தைச் சொல்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தால், ஹும்? என்னைப் பார்த்தால் எப்படி இருக்கிறது? பெண் மாதிரியா, பிசாசு மாதிரியா?” “சொல்ல மாட்டேன். கோபித்துக் கொள்வீர்கள்” கைகள் சட்டைத் துணியைப் பிடித்துப் பிசைந்தன. “சும்மா சொல்லுங்கள். மனதில் தோன்றியதைச் சொல்ல வேண்டும். அதுதான் ஆண்பிள்ளைக்கு அழகு.” “நீங்கள் பெண்ணல்ல, தேவதை. மலையாளத்தில் அழகிகள் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உங்களைப் போல்...” கைகளை அகல விரித்தான். “சரி, வருகிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லை.” “சும்மா ஏமாற்றுப் பேச்சு... நான் என்ன அப்படிப் பெரிய அழகியா...? சும்மா சொல்கிறீர்கள்... ம்ஹ்ம்... வந்த காரியத்தைச் சொல்லுங்கள்... என்ன முகாம்?” “சேனைத் தலைமையகம். நான்... ஒரு முக்கிய வேலை.” தோல் பையைத் திறந்து காகிதங்களைப் புரட்டினான். ஒய்ன் சீசா தலையைக் காட்டியது. “அது உங்களுக்கா?” “இல்லை, மேலிடத்துப் புள்ளி ஒருவருக்கு. பேங்காக்கில் வாங்கினேன். வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்” தலையை உயர்த்தினான். “நான் இங்கு வந்த காரணம் வேறு. ஆனால் உங்களைக் கண்டதும் மனம் பேதலித்துவிட்டது” குறி தெரியும்படி திறவையாக வேட்கைக் கண்களால் பார்த்தான். “ம்... உங்களிடம் ஒரு வரம் கேட்கவா?” “என்ன வரம்? நான் என்ன ரிஷியா!” வெட்கம் வந்தவள்போல் மாராப்பை இறுக்கி மூடிக்கொண்டு உட்பக்கம் திரும்பினாள். “அய்லான்!” “யா மெம்.” “ரொட்டி வாங்கி வா, நேரமாகிறது.” “யா மெம்.” முன் கதவைச் சாத்திவிட்டுப் பணிப்பெண் வெளியேறினாள். பாண்டியன் சாவதானமாக எழுந்து விலாசினியின் வலக்கையைத் தனது இடக்கையால் பிடித்து லேசாகச் சுண்டினான். “ஐயையோ, என்னயிது...! விடுங்கள்... ஆஅஅ ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹம் ம்ம்ஹஹ்” எஃகுக் கைகள் இடுப்பை வளைத்துத் தூக்கின. “ம்ஹம் ம்ஹம் ம்ஹ்ம் இங்கு வேண்டாம். ஹம் ஹம் ஹம், அங்கே...” உள்ளே தூக்கிச் சென்றான். “நான் திருடினேனா? குடித்துவிட்டு எருமை மாதிரிப் புரள்வது கடிப்பது. இவனுக்கெல்லாம் ராணுவ வேலையா? பன்றி குளிக்கவே குளிக்காது. மேலெல்லாம் நாற்றம். சட்டைப் பையில் எப்போதும் நிறையப் பணம் வைத்திருப்பான். கையை விட்டால் ஒரே காகிதக் கட்டு. பணநோட்டுகள் சேர்ந்திருக்குமென்று எடுத்துப் போட்டேன். அவனிடம் பணம் எடுத்தால் என்னவாம், உழைத்துச் சம்பளம் வாங்குகிறானோ.” “வேலைக்காரி வருகிறாள், கதவுச் சத்தம்.” “வரட்டும், எங்கேயோ ஞாபகம், ஹும்?” பிடரியில் கடித்தாள். “ஐயோ, வலிக்கிறது, என் மனதையே பறித்துக் கொண்டாயே, விலாசினிக் குட்டி, என் கண்ணே!” “ஹும்க்கும், பொய், பொய் எங்கே என்னைப் பார்த்துச் சொல்லுங்கள்.” “விலாசினிக் கண்ணே, இனிமேல் உனக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார். இங்கே பார், இந்தக் கடிதங்கள் உன்னிடம் இருப்பது நேதாஜி காதுவரை போய்விட்டது. உன்னைப் பிடித்தடைத்துக் கடிதங்களைக் கைப்பற்ற வேண்டுமாறு கட்டளை. நம்முடைய நல்ல காலம், இந்தக் கேஸ் என் கைக்கு வந்தது... எவ்விதப் பயமும் வேண்டாம். இந்த விவகாரத்திலிருந்து உன் பெயரை நீக்கிவிடுகிறேன்...” உடலை அணைத்து நசுக்கிக் கழுத்தில் முத்தமிட்டான். “முக்கியமான கடிதத்தை யாமசாக்கியிடம் கொடுத்து விட்டாய். அதை எப்படியாவது அவனிடமிருந்து வாங்கித் தந்துவிடு.” “நானா கொடுத்தேன்? அலமாரியில் கிடந்த கட்டைப் பிரித்துப் பார்த்து இரண்டு மூன்று காகிதங்களை எடுத்துக் கொண்டான். அவனிடம் எப்படிக் கேட்க முடியும்? கொன்று விடுவானே, கொன்று விடுவானே. கட்டாயம் கொன்று விடுவானே... விஷயம் வெளியானால் என்னோடு போகாது. என் அண்ணன் பெயரும் கெட்டுவிடும். என்ன செய்வேன், என்ன செய்வேன்.” கழுத்தைக் கட்டிக்கொண்டு புலம்பினாள். “விலாசினிக் கண்ணே! பயப்படாதே. நான் உன் பக்கம் இருக்கும்வரை உனக்கோ, உன் அண்ணனுக்கோ எவ்விதக் கேடும் வராது. விசாரணையை வேறு பக்கம் திசை திருப்பிவிட நினைத்திருக்கிறேன்... என்னுடன் வந்த சிப்பாய்கள் சாதா உடையில் வெளியே நிற்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது கதை சொல்லி ஏமாற்ற வேண்டும்... ம்ம்” “என் கண்ணா! என் ராஜா! நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்.” “பயப்படாதே உனக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. வேறு யாராவது சில்லறைப் புள்ளிகளைப் பிடித்து... ம்... யாமசாக்கி எப்போது வருவான்?” “எனக்கு எப்படித் தெரியும்? எப்போதாவது வரும், கழுதை.” “வழக்கமாக என்ன நாள்களில் வருவான்?” “அப்படி வழக்கமெல்லாம் இல்லை. போன தடவை, என் காலைக் கட்டிக்கொண்டு புலம்பினான். நல்ல குடிவெறி. ‘உன்னை எப்படிப் பிரிந்திருப்பேன்’ என்று சொல்லிக்கொண்டே, மேலெல்லாம் கடித்துக் குதறிவிட்டது, மிருகம்.” “ரங்கூனுக்குப் போயிருப்பானோ?” “சுமத்திரா மெடானு சபானு யோஷி என்று குடிவெறியில் என்னென்னமோ உளறினான். அவன் பாஷையில்...” “ஒரே போக்காய்ப் போய்த் தொலையட்டும் சனியன். அவன் வந்தால் எனக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும். ம்? ‘அச்சுதனுக்குக் காய்ச்சல். உடனே வரவும்’ என்று எழுதி, உறையில் அடைத்துக் கத்தே மாளிகை வாசலில் உள்ள பச்சைத் தபால் பெட்டியில் போட்டுவிட வேண்டும். என் விலாசம்: காப்டன் விஜயன், ஆர்090, கத்தே மாளிகை - 28. ம்ம் அவனைச் சந்தித்துப் பேசினால்தான் உன்னை இந்த வில்லங்கத்திலிருந்து விடுவிக்க வழிசெய்ய முடியும்... எழுதுவாயா?” “ஐயோ, அவன் வம்பு வேண்டாம், கெம்பித்தாய்க்காரன்...” “யாராயிருந்தால் என்ன, என்னிடம் வாலாட்டினானோ அதோடு அவன் காலி. சரி, அவன் வந்ததும் எழுதுவாயா?” “சரி.” “நேரமாகிறது. வெளியே நிற்பவர்கள் ஏதோ ஆபத்தென்று நினைத்து உள்ளே புகுந்துவிட்டால் தொல்லை... வரவா?” “ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்... மீண்டும் எப்பொழுது வருவீர்கள்?” “நாளை இரவு.” “வேண்டாம், பகலிலேயே இதே நேரம் வாருங்கள். இதுதான் வசதியான சமயம்.” கழுத்தைக் கரங்களால் கட்டி இறுக்கிக் கொண்டு முத்தமாரி பொழிந்து விடைகொடுத்தாள். தெருவில், இடப்புறம் திரும்பி நடந்தான்... பயங்கரப் பிராணி... மணியான உடல்... எனக்குமேல் ஆறேழு வயதாவது இருக்கும். அரசாங்கத் தலைவருக்கு வந்த ரகசியக் கடிதங்களைச் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு வேசி வீட்டுக்குப் போவதென்றால் எப்படி... யாமசாக்கி கோரியதால் கடிதங்கள் கொண்டு வரப்பட்டனவா, அவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டதன் மேல், கொண்டுவரச் சொன்னானா... கெம்பித்தாய் - விலாசினி உறவு சாதாரணமானதல்ல. ஆரம்ப முதலே இருந்து வருகிறது. அவர்கள்தாம் இந்த வீட்டை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வீட்டு வசதிக்காக எதுவும் செய்வாள்... தேவை ஏற்படின், என்னை அரிமணையில் வைத்துக் கூறு கூறாய் நறுக்கி விடுவாள்... பயங்கரப்பிராணி... கெம்பித்தாய் - விலாசினி - ஜெனரல்... புயலிலே ஒரு தோணி : அட்டவணை |
முதற் பதிப்பின் முன்னுரை |
இரண்டாம் பதிப்பின் முன்னுரை | 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|