மலர்

36. தங்கையா

     தங்கையா வீட்டுக்கு முன் போய் நின்றது சாடோ. பாண்டியன் இறங்கிப் படியேறிக் கதவைத் தட்டினான்.

     “வரலாம்.”

     கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

     “ஏன் இவ்வளவு நேரம்?”

     “மெட்ராஸ் ஸ்ட்ராட்டில் கொஞ்சம் வேலை.”

     தங்கையா எழுந்து போய், அடுத்த வீட்டுப் பையனை அழைத்து காபி வாங்கக் கல்கத்தா ஸ்ட்ராட்டுக்கு அனுப்பிவிட்டு வந்து, பாண்டியன் எதிரே உட்கார்ந்தான்.

     சிங்கப்பூரிலிருந்து ராஜரத்தினத்தின் தோடி இசை வானொலியாய் மிதந்து வருகிறது.

     “காரைக்குடி ஆனந்த மடத்துக்கு முன்னே நள்ளிரவில் ராஜரத்தினத்தின் தோடியைக் கேட்க வேண்டும்.”

     “ஏன் நள்ளிரவு? ஏன் ஆனந்த மடம்?”

     “நாதசுரம் கேட்பதற்குரிய நேரம் ஊரடங்கிய நள்ளிரவு. காரைக்குடி சித்திரை விழாவில், ஊர்வலம் ஆனந்த மடத்துக்கு முன்னே வரும்போது நள்ளிரவாகிவிடும்.”

     “நான் கேட்டதெல்லாம் இங்கு சுப்பிரமணியசாமி கோயில் மாரிமுத்தா பிள்ளை நாயனக் கச்சேரியும், பினாங் சாமித்துரை அண்ணாவி கச்சேரியும்தான்.”

     “ராஜரத்தினத்தின் இசைத்தட்டுகளைக் கேட்கும் போதெல்லாம், ‘சின்ன வயசாயிருந்தாலும் பரவாயில்லை, கொஞ்ச விஷய ஞானம் இருக்குது’ என்று மாரிமுத்தாபிள்ளை குறிப்பிடுவதைக் கவனித்திருக்கிறாயா?”

     தங்கையா, முகட்டைப் பார்த்து உடல் குலுங்கச் சிரித்தான்...

     “தில்லைமுத்து கடிதம் எழுதுகிறானா? தைப்பிங்கில் இருப்பது தெரிந்திருந்தால் போய்ப் பார்த்திருப்பேன். ஏன் அங்கே கிளம்பி விட்டான்?”

     “அண்ணன், தம்பி எல்லாருமே அங்கேதான் இருக்கிறார்கள். நல்ல வேலையும் கிடைத்தது. கிளம்பி விட்டான். போய் ஒரு கடிதம் எழுதினான். அதோடு சரி.”

     “அண்ணன் என்ன செய்கிறார்?”

     “மத்திசன் எஸ்டேட்டில் பெரிய கிராணி. செல்வாக்கான ஆள்.”

     “தங்கையா, மெடானிலிருந்து புறப்படப் போகிறேன்.”

     “ஊருக்குத்தானே, எப்போது?”

     “காட்டுக்கு - இந்தொனேசிய விடுதலைப் படை முகாம் ஒன்றுக்கு.”

     “உனக்குக் கிறுக்கா, அல்லது...”

     “முடிவு செய்து விட்டேன். நாளையிலிருந்து வனவாசம். தூமாஸ் காட்டில் கொரில்லாப் படை தயாராய் நிற்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் டச்சு ராணுவத்தைத் திணறடித்துக் காட்டுவோம்.”

     “உனக்குக் கிறுக்குதான். சந்தேகமில்லை. ஓட்டைத் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு உங்கள் படை என்ன செய்யும்? ஆயுதம் கடத்திக் கொடுத்ததும், பயிற்சி அளித்ததுமே போதும். ஊருக்குப் புறப்படு. அல்லது உன் துருத்தியை ஊதிக்கொண்டு சும்மா இரு.”

     “தூமாஸ் படை என்ன செய்கிறதென்பதைப் பொறுத்திருந்து பார்.”

     “கொஞ்சம் சிந்தித்துப் பார். டச்சுக்காரர்களிடம் எத்தனை விமானங்கள், டாங்கிகள், பீரங்கிகள்...”

     “நமக்கு மேலான வல்லவனை வீழ்த்துவதுதான் திறமை.”

     “நான் சொல்வதைக் கேள். இந்த நாட்டை டச்சுக்காரர் ஆண்டாலும், இந்தொனேசியர் ஆண்டாலும் நமக்கு ஒன்றுதான். அப்படி இருக்க வீண் தொல்லை ஏன்?”

     “வீணான தொல்லை, பயனான தொல்லை, எல்லாமே ஒன்றுதான்... புனல் நாட்டை மிஞிலி ஆக்கிரமிக்கிறான். ஆய் எயினன் உதவியை அந்நாட்டார் கோருகிறார்கள். அவன் என்ன செய்தான்? ‘அஞ்சேல்’ என்று அபயம் கொடுத்துப் போர்க்களத்துக்கு விரைந்தான்.”

     “சரி, ‘அஞ்சேல்’ என்று களத்துக்கு விரைந்து சென்ற ‘வண் மகிழ் வெளியன் வேண்மான் ஆய் எயினன்’ என்ன ஆனான்? சூரிய வெப்பம் சுட்டு வருத்த வெகுநேரம் பாழிப் பறந்தலையில் குற்றுயிராய்க் கிடந்து துடித்த பின் செத்து மாண்டான்.”

     “ஆனால் எத்தனை வீர மரணம்! புகழ்மிகு சாவு!” வலக்கை தலைக்கு மேல் உயர்ந்தது.“... ‘பொன்றுதல் ஒரு காலத்தும் தவிருமோ பொதுமைத்தன்றோ, இன்றுளார் நாளை மாள்வார் புகழுக்கும் இறுதி உண்டோ...” சங்க நூல்கள் பிழைத்திருக்கும் வரையில் அவன் புகழ் மறையாது.”

     காபி குடித்து, சிகரெட் பற்ற வைத்தார்கள்.

     “பாண்டி!” கனைத்துக்கொண்டு ஆரம்பித்தான். “உன் முடிவை மாற்றும்படி நான் சொல்லப்போவதில்லை. ஆனால் ஒன்று சொல்வேன். இந்தச் சுதந்திர - சமத்துவ - சகோதரத்துவம் என்ற மாயக் கற்பனையில் சிக்கி, வீண் தொல்லைகளுக்கு உள்ளாவதென்பது எனக்கு அடியோடு பிடிக்கவில்லை.”

     “கற்பனை, ஆனால் அழகிய வடிவமைப்பு. கற்பனையின்றேல் வாழ்க்கையில்லை; கொள்கையில்லை; சமுதாயமில்லை. கற்பு என்ற கற்பனை இன்றேல் குடும்ப வாழ்க்கை - அதாவது லட்சியக் குடும்ப வாழ்க்கை ஏது?”

     “கற்பனைகளை நீக்கிய உண்மை - அடிப்படை அறிவு வழியில் மானிடன் செல்ல வேண்டு மென்பதே என் கட்சி.”

     “நன்று, உண்மை - அடிப்படை அறிவு வழி எது? அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொருவர் அறிவுக்கும் வெவ்வேறு உண்மை தென்படும். அவரவர் அறிவுப் போக்கில் சென்றால் குழப்பமும் அதன் விளைவாக அழிவுமே கிட்டுமே. ஆகவேதான் கற்பனை முடிவு - சமுதாய ஒருமை - அறிவுக்கு வரம்பு. வெறும் அறிவு - அதாவது அறிவதையே குறிக்கோளாகக் கொண்ட அறிவு அறிவாகாது. நல்லது கெட்டதை அறிவதே அறிவு - ‘அறிவாவது நல்லதன் நலனும் - தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்’ என்பான் நச்சினார்க்கினியனும்.”

     “நல்லது எது, தீயது எது?”

     “சமுதாயம் தனது மொத்த நலனைக் கருதி நல்லதென்றும் தீயதென்றும் விதிப்பது.”

     “வரம்பு தேவை என்பதற்காக அறிவுக்குப் பொருந்தாததையும் மனிதன் ஏற்க வேண்டும், ம்?”

     “வரம்பிலா அறிவுத் திறனும் புல்லறிவும் ஒன்றே. மடையனாக விரும்பாத அறிஞன் தானாகவே தனது அறிவுப் பரப்புக்கு ஒரு வேலி அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏதோ ஒரு பெயர். திருவள்ளுவனுக்கு அறநெறி; மணிவாசகனுக்குப் பக்திநெறி; தாயுமானவனுக்குத் தவநெறி. நம்மைப் போன்ற நடப்பு மனிதர்களுக்குச் சான்றோர் வகுத்து வைத்திருக்கும் நன்னெறி.”

     “சான்றோர் வகுத்து வைத்திருக்கும் ‘நன்னெறி’ - நீ சூட்டிய பெயர். நல்லதா, கெட்டதா என்று ஆராயும் உரிமை கூட நமக்குக் கிடையாதோ?”

     “உண்டு. ஏன் கொலை செய்யக் கூடாது? பிறர் நம்மைக் கொல்லாமலிருக்க. ஏன் பொய் சொல்லக் கூடாது? பிறர் நம்மை நம்புவதற்காக. பிற பெண்டிரை ஏன் விழையலாகாது? நம் பெண்டிர் பிறரை விழையாமலிருக்க. ஆனால், சில கோட்பாடுகளுக்கு இவ்வளவு சுலபமாய் விளக்கம் காண முடியாது.”

     “ஓஹோ! ‘நண்டிற்கு மூக்குண்டோவெனில் அஃது ஆசிரியன் கூறலான் உண்டென்பது’ என்றாற்போல், விளங்காதவற்றையும் ஒப்புக் கொள்ள வேண்டியது தானோ?”

     “வேறு என்னதான் செய்வது, சொல். ஆசிரியனோ தொல்காப்பியன்! உரைப்பவனோ பேராசிரியன்! நாமோ ஆனா - ஆவன்னாச் சிறார். ஐயம் ஏற்படும்போது, வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற கொள்கை உறுதுணையாக இருக்கும்.”

     “வல்லான் வகுத்த வாய்க்காலில் மறுபேச்சின்றி வீழ வேண்டியது தானோ?”

     “ஆம், மிதந்து நீந்த, அல்லது மூழ்கிச் சாக ஒரு வாய்க்கால். அதிலே பிடித்துத் தள்ள ஒரு வல்லான். மனித மந்தைகள் என்றென்றும் எப்பொழுதும் எதிர்பார்த்திருப்பது எதை? வல்லான் வகுத்ததொரு வாய்க்காலை. வல்லான் யார்? புத்த பிரானா, ஃபியூர் ஹிட்லரா, கிறிஸ்து இயேசுவா, காம்ரேட் லெனினா? என்பதல்ல கேள்வி. அவன் வல்லவனா - தன் கருத்தைப் பிறர் ஏற்கச் செய்யும் திறனாளியா? சுட்டிக் காட்டுபவன் வல்லவனாயிருந்தால் மானிடன் எந்த வாய்க்காலிலும் விழத் தயார். ஏன்? ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும் என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு வாய்க்காலில் வீழ்ந்தேயாக வேண்டுமென்பது மன்பதையின் தலை எழுத்து. எந்த வாய்க்காலில் எப்படி விழுவதென்று முடிவு செய்யும் பொறுப்பை எவனாவது ஒரு வல்லான் கையில் ஒப்படைப்பது மந்தைகளின் இயல்பு. பரலோக இன்பபுரியெனும் துறக்கத்தையோ, இகலோகத் துறக்கமெனும் இன்பபுரியையோ இதுவரையில் யாரும் காட்டியதில்லை; கண்டதுமில்லை. எனினும் யாராமொருவன் துணிந்து அம்பலலேறி, அவற்றிலொன்றைக் காட்டுவதாக முழங்குவானாயின் ‘போற்றி! போற்றி! போற்றி!’ என்று அவனைப் பின்பற்றி ஓடித்திரிய மனித மந்தைகள் என்றென்றும் காத்து நிற்கின்றன.”

     “நானே வல்லான்; நான் வகுப்பதே வாய்க்கால் என்று பறைசாற்றி, மனித மந்தைகளை வசப்படுத்தித் திரியும் தான்தோன்றி ரட்சகர்களிடமிருந்து மானிடன் தப்ப வழி இல்லையா?”

     “இல்லை. குளத்தில் வீழாமல் தப்பினும், குட்டையில் வீழ்வதைத் தவிர்க்க இயலாது. இதோ, இந்த உடல் ரட்சகனின் தமுக்கடிப்பைக் கேள்:

     “ட்ரிட்டோன் - அற்புத ட்ரிட்டோன் பாசி அமிர்தம்! ஸ்கின்கிஸ்! மேனி அழகு நல்கும் மேன்மை மிகு சோப்! இவற்றின் மகத்தான மகோன்னத மாபெரும் கூட்டு. அற்புத ரிட்டோன் பாசி அமிர்தம் கலந்த சோப் உலகிலேயே ஒன்றுதான் - அது ஸ்கின்கிஸ்! அழகு தரும் ஸ்கின்கிஸ்! ஆனந்தம் அளிக்கும் ஸ்கின்கிஸ்! *ஹார்லி தெரு டாக்டர்கள் 100 பேர் உங்களுக்கு ஸ்கின்கிஸ் சோப்பை சிபாரிசு செய்கின்றனர். 1000 ஹாலிவுட் நடிகைகள் நாள்தோறும் ஸ்கின்கிஸ் சோப் தேய்த்துக் குளிக்கிறார்கள். ஸ்கின்கிஸ்! இடமிருந்து படிக்கினும், வலமிருந்து படிக்கினும் ஸ்கின்கிஸ்! அற்புத ட்ரிட்டோன் பாசி அமிர்தம் கலந்த ஸ்கின்கிஸ் சோப்! திரையுலகத் தாரகையாம் பொன்மேனிப் பூம்பாவை கும்கும் லோலா - முக்கிய அளவுகள் 38”-24”-38” - ஸ்கின்கிஸ் சோப்பின் மகத்தான மகோன்னத மாபெரும் மகிமை குறித்து அவருடைய கோவைக் கனிச் செவ்வாயாலேயே சொல்கிறார், கேளுங்கள்.

     * லண்டனில் பிரபல வைத்திய நிபுணர்கள் தொழில் நடத்தும் தெரு.

     “என் மேனி அழகைக் காத்துக் கொள்ள நான் தினசரி மும்முறை தேய்த்துக் குளிக்கும் சோப் ஸ்கின்கிஸ். நான் எங்கு போய் ஒளிந்தாலும் ஆடவர்கள் என்னைத் தேடிக் கண்டடைந்து விடுவது ஏன்? ஸ்கின்கிஸ் இன்ப மணம். நான் எட்டாத் தொலைவில் இருப்பினும் இளையோரும் முதியோரும் என்னை நினைத்துப் பரவசமடைவது ஏன்? ஸ்கின்கிஸ் இன்பக் கனவு. தேய்க்கும் போதெல்லாம் இனிய முத்த உணர்ச்சியை அளித்து உள்ளும் புறமும் இன்ப சுகம் தருகிறது ஸ்கின்கிஸ். என்னைப் போல நீங்களும் மேனி அழகுடன் புளகாங்கித முத்த உணர்ச்சியும் பெற விரும்பினால், இன்றே ஸ்கின்கிஸ் சோப் வாங்குங்கள். தினசரி தவறாமல் ஸ்கின்கிஸ் சோப் தேய்த்துக் குளியுங்கள்...”

     இதுவரை ‘திரையுலகத் தாரகை’ கும்கும் லோலாவின் ஸ்கின்கிஸ் அனுபவத்தைக் கேட்டீர்கள். இப்போது ‘நாட்டிய ஜோதி’ ஜில்ஜில் பாலா...”

     “மஞ்சள் ஒழிக! ஸ்கின்கிஸ் வாழ்க!” தங்கையாவின் வலக்கை மேசையை ஓங்கிக் குத்தியது; கண்கள் சிரித்தன. “உனக்கு மணியான வாணிபக் குரல்!”

     “சந்தை வியாபாரப் பழக்கம்... மஞ்சள் பூசிக் குளிப்பதால் மேனி அழகு நீடிப்பதும், ஸ்கின்கிஸ் அரிப்பினால் சருமம் ஊறிக் காய்ந்த செருப்புத் தோலென மாறி விடுவதும் உண்மையாக இருக்கலாம். இருப்பினும், பாமரர் - குறிப்பாக, மேல்மட்ட மூடர்கள் விழைவது நன்மையை அல்ல; சொல்வல் நாவலர்களால் விஞ்ஞான வேத மந்த்ர கோஷங்களுடன் விதந்து கூறப்படும் புதுமையே, புதுமை! புத்தம் புதுமை! புதுமையினும் புதுமை.”

     “இதுதான் இந்த வருஷத்திய புதுமாடல் பன்றிமுக கார்! சென்ற வருஷத்துப் புலிமுக மாடலில் நான்கே நான்கு கதவுகள். இந்த வருஷத்துப் புதிய பன்றிமுக மாடலிலோ 5 கதவுகள்! நினைவில் இருக்கட்டும் ஐ - ந் - து - ஐந்து கதவுகள்! இது வேறு எந்த மாடல் காரிலும் இல்லாத புது வசதி - உங்களுக்காக, உங்களையே கருதி, உங்களுக்காகவே செய்யப்பட்ட தனிச்சிறப்பு வசதி. மறக்க வேண்டாம் - ஐந்து கதவுகள்... இதே! புத்தம் புதுப்புதிய முக்கோண வடிவக் கரடி வண்ணக் கடிகாரம். இன்றைய தேதியையும் கிழமையையும் காட்டுவதோடு, நேற்றைய தேதி கிழமையையும் காட்டவல்ல கடிகாரம் உலகிலேயே இது ஒன்றுதான்...”

     “நிறுத்து! நிறுத்து... எனக்கு அந்தக் கடிகாரம் ஒன்று வேண்டும்போல இருக்கிறது. யார் தலையிலாவது, அவர்களுக்குத் தேவையில்லாப் பண்டங்களைக் கட்டி விடுவதும் ஒருவகை சமுதாயத் தொண்டுதான். தொழில் வளம் பெருகுமல்லவா?”

     “ஆ! தேவையில்லாப் பண்டங்கள் எத்தனை எத்தனை இந்தக் கடைவீதியில் விற்பனையாகின்றன! என்று வியந்தான் ஒரு ஞானி.”

     “ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்று நிபுணர்கள் தோன்றவே செய்வர். மந்தை - மானிடர் எப்படியோ போகட்டும். கற்பனைக் கோட்பாடுகள் இல்லாத இயற்கைச் சமுதாயத்தில் ஆறறிவு மனிதன் நல்வாழ்வு நடத்த முடியாதா என்பதே என் கேள்வி.”

     “இயற்கை வாழ்வில் மனிதன் அப்பழுக்கில்லாத விலங்கு. செயற்கைச் சமுதாயத்தில்தான் மானிடன் - வேட்டி கட்டி மறைக்கும் பிராணி. வேட்டிக் கற்பனை தோன்றியபின் அதன் விளைவான கற்புக் கற்பனை, உடைமைக் கற்பனை, தெய்வக் கற்பனை எல்லாம் தோன்றியே தீரும். கற்பனைகள் இல்லாவிடின் சமுதாயப் பண்பே கிடையாது.”

     “தெய்வக் கற்பனை இல்லை என்று வைத்துக் கொள்வோம், அதனால் ஏற்படும் தீங்கு என்ன?”

     “ஆசை எனும் கயிற்றில் ஆடும் மனக்குரங்கை எல்வாறு கட்டுப்படுத்துவது, எவ்வாறு மனஅமைதி பெறுவது? ஆசைக்கோர் அளவில்லை. தாயுமானவன் பாடுகிறான்:

     ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லம் கட்டி ஆளினும்
     கடல்மீதிலே ஆணைசெலவே நினைவர் அளகேசன் நிகராக
     அம்பொன் மிகவைத்தபேரும் நேசித்து ரசவாத வித்தைக்
     கலைந்திடுவர். நெடுநாளிருந்த பேரும் நிலையாகவேயினும்
     நெஞ்ச புண்ணாவர்... (காயகல்பம் தேடி)

     ஆசைகள் நிறைவேறுவதோ அவரவர் தகுதி திறமையை மட்டும் பொறுத்ததல்ல. ஆகவே தான் மனிதத் திறமை - முயற்சி மமதைக்கு எல்லை வகுக்கும் தெய்வக் கற்பனை. மனமெனும் வரையற்ற பரப்புக்கு ஒரு வேலி.”

     “தெய்வக் கற்பனை விவகாரத்தைப் பேசித் தீர்க்க இப்போது நேரமில்லை; இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்ளலாம். அவர் - நமது நண்பர் ஆய் எயினன் - பாழிப் பறந்தலையில் போய் வீழ்ந்ததற்குக் காரணம் எதுவோ?”

     “இப்போது சின்னமங்கலம் பாண்டியன் மயங்கி நிற்கும் கற்பனையில் - வலியாருக்கு எதிராக எளியோருக்கு உதவும் நற்பண்பு; அடிமைத் தளையை அறுக்க உதவும் ஆண்மை முதலிய பல கோட்பாடுகளைக் கொண்ட இனிய கற்பனை அது. எயினனுக்கும் மிஞிலிக்கும் இடையே ஏற்கெனவே மண் - பெண் பூசல் இருந்திருக்குமா என்ற ஆராய்ச்சி இப்போது தேவையில்லை.”

     தங்கையா நகைத்தவாறே மேசையில் கிடந்த சிகரெட் பெட்டியைத் தூக்கினான்.

     “சரி சரி, எப்படியாவது போ... அறிவு நெறி - உண்மை நாட்டம் தவறு என்று சாதிப்பவனிடம் எதைச் சொல்லி என்ன பயன்?”

     “தங்கையா, எல்லையற்ற அறிவுவாதம் போன்ற அபத்தம் வேறெதுவுமில்லை. அதற்கு வரம்பில்லை; குழப்பம் அழிவையே உண்டாக்கும். ஆண் - பெண் உறவின் உண்மை என்ன? இப்போதைய விதிவிலக்குகள் எந்த அடிப்படையில் வகுக்கப்பட்டன? ஃபேரோ மன்னர்கள் உடன் பிறந்த சகோதரிகளையும், சொந்தப் புதல்வியரையும் மணந்து பிள்ளை பெற்றனர்... கிளியோபாத்ராவுக்குத் தந்தையால் விதிக்கப்பட்ட கணவன் அவளுடைய சொந்த தம்பி!”

     “சமுதாயப் பழக்க வழக்கங்கள் அவ்வப்போதைய நிலவரத்திற்கேற்ப மாறும்.”

     “ஆம். ஆனால், அறநெறிகளும் அவ்வாறே மாறுவதாயிருப்பினும் சொல்லொணாக் குழப்பம் தோன்றிவிடும். ஆகவேதான் நிலையான சில கோட்பாடுகள்.”

     “ஓகோ! சமூக நலனுக்குத் தேவையான சில கோட்பாடுகள் - அதாவது கற்பனைகள் - துலக்கமாகச் சொல்வதாயிருந்தால் பொய்மைகள்.”

     “கற்பனை என்றாலும், பொய்மை என்றாலும் எனக்குச் சம்மதமே. எதைக் குறிக்கிறோம் என்பதே முக்கியம். ஏதாவது ஒன்றில் அசையாத நம்பிக்கை இல்லாவிடின், வாழ்க்கையில் பற்று இருக்க முடியாது. வயதாக ஆக, ஆய்வுத் திறன் பெருகப் பெருக நம் உறவுகள் உடைமைகள் திறமைகள் சாதனைகள் எல்லாமே புளித்து விடுகின்றன. நிலையான உறவு எது, உடைமை எது? நிலையான திறமை எது, சாதனை எது? எதுவுமே இல்லை; எனவேதான், நிலையற்ற வாழ்வில் நிலை காண நிறைய நம்பிக்கைகள்”

     “பொய்க் கற்பனைகள்.”

     “பெயர்பற்றி எனக்கு அக்கறை இல்லை. பூமி தன்னைச் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிக் கொண்டிருக்கிறதென்று நீ நம்புவது ஏன்? நீ கண்டனையோ, கண்டார் கூறக் கேட்டனையோ? அது யாரோ ஒருவன் மனதில் கற்பனையாகத் தோன்றி, நம்பிக்கையான உண்மைதானே? வெளிச்சம் விநாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் பயணம் செய்கிறதென்று எந்தக் கருவி, எந்தக் கணக்கின்படி அளந்து கூறிற்று? கருவியும் கணக்கும் மனக் கற்பனை அளவு வடிவில் உண்டாக்கப்பட்டவை அல்லவா?

     வானத்தின்மீது மயிலாடக் கண்டேன்
     மயில் குயிலாச்சுதடி - அக்கச்சி
     மயில் குயிலாச்சுதடி

     என்றதும் மனத்திரையில் தோன்றிய கற்பனையே. எனினும் பொய்யாளரின் வஞ்சனை நாடகங்களையும் பொம்மலாட்ட இரும்புப் பேய்களையும் பார்த்திருப்பினும் அது இனிய காட்சி அன்றோ!”

     “ஆகவே?”

     “கற்பனைக்கும் உண்மைக்கும் வேற்றுமை காண முடியாதென்கிறேன்.”

     “தெய்வ சித்தம், மறுபிறப்பு முதலியன கற்பனைக் கொள்கைகள். நீயும் நானும், அட்லாண்டிக் ஆழியும் ஆஸ்திரேலியா கண்டமும் அறிவுவழியால் தெரியப்பட்ட உண்மை முடிவுகள்.”

     “ஓஹோ! மதுரை என்றொரு நகரம் இருப்பதைக் கேட்டு அறியாத, பார்த்துத் தெரியாத கபான்ஜாஹே பாத்தாக்காரன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு மதுரை உண்மையா, பொய்மையா?”

     “மதுரையின் இருப்பும் இன்மையும் கபான்ஜாஹே பாத்தாக்காரனைப் பொறுத்தது அல்ல; அவன் கேட்டு அறிந்து கொள்ளலாம். பார்த்துத் தெரியவும், விரும்பினால் மதுரைக்கே போய்ப் பார்க்கலாம்.”

     “சரி, எவரெஸ்ட் சிகரத்தை அறிந்து தெரியாதவன்?”

     “ஒவ்வொருவனும் அதில் ஏறி நின்று பார்க்க முடியாது. பார்த்ததாகச் சொல்வோர் கூற்றை நம்ப வேண்டியதே.”

     “செவ்வாய்க் கிரகம்?”

     “வானியல் வல்லுநர்கள் பூமியில் இருந்து கொண்டே அனுமானமாகச் சொல்வதை நம்புவதுதவிர வேறுவழி இல்லை.”

     “ஆகவே, வெவ்வேறு வகையானவற்றைத் தெரிவதற்கு வெவ்வேறு முறைகள். தெரியாததை இன்மை என்றும் புரியாததைப் பொய்மையென்றும் கூறுவது பிழை.”

     “தர்க்கத் திறமையால் என் சிந்தையைக் குழப்பப் பார்க்கிறாய். அறிவுநெறி தவறென்பதுதானே உன் கட்சி?”

     “இல்லை. வேலியற்ற அறிவு மனிதனை அழிக்கும் என்கிறேன். அறிவுநெறி என்பது, பண அளவுக்கேற்ப இணங்கிவரும் விலைமாதைப் போல், மனிதனின் விருப்ப ஆற்றலுக் கொப்ப வளைந்து கொடுக்கும் தன்மை உடையது. விருப்பம் எனும் வித்திலிருந்து முளைத்த மன முடிவுகளை மெய்ப்பித்துக் காட்ட அறிவுநெறி எப்போதுமே உதவி வந்திருக்கிறது. பூமி தட்டை உருண்டை, முட்டை என்ற வல்லோர் மனமுடிவுகளை அவ்வப்போது மெய்ப்பித்து வந்திருக்கும் அறிவுவழி, இனிமேல் பூமி பெட்டி வடிவம் என்றும் - வலியவன் யாராவது அப்படித் துணிந்து சொன்னால் - மெய்ப்பித்துக் காட்டச் சித்தமாயிருக்கிறது. முடிவெடுப்பவனே மெய்ப்பிப்பவனாகவும், மெய்ப்பிப்பவனே அதற்கான கருவிகளைச் செய்விப்பவனாகவும் இருப்பதால், மெய்ப்பிப்பது மிக மிகச் சுலபமான வேலை.”

     “அறிவு நெறியைத் திரித்துக் காட்டிப் பேசுகிறாய். அது நிற்க. டச்சுக்காரர் - இந்தொனேசியர் பூசலில் நீ ஏன் தலையிடுகிறாய், சொல்”

     “கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கெங்கு போர் நடந்தாலும் முன்சென்று உதவுவது ஆய் எயினன் வழிவந்த நம்முடைய கடப்பாடு அன்றோ!”

     “டச்சுக் கொடுங்கோன்மையை எதிர்த்து இந்தொனேசியரின் செங்கோன்மைக்காகப் போராடப் போகிறாயாக்கும்.”

     “உண்மைக் காரணம் எனது விருப்பமே. மனதில் சலிப்புத் தோன்றியிருக்கிறது. கொஞ்ச காலத்துக்காவது இடம் பொருள் ஏவல் மாறினால் தான் மனதில் அமைதி பிறக்கும்.”

     “உன் முடிவு எனக்குப் பிடிக்கவிலலை. நன்கு சிந்தித்துத் தீர்மானம் செய்.”

     “தகவல் அனுப்புகிறேன், போய் வரவா?”

     “சரி, மனநிறைவோடு திரும்பி வா.”