உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
ப. சிங்காரம் |
ப. சிங்காரம் (12-08-1920 - 30-12-1997), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் தன் வாழ்வின் பெரும் பகுதியை கழித்த இவர், இரண்டு புதினங்களை மட்டுமே எழுதியுள்ளார். இவரின் “புயலிலே ஒரு தோணி” புதினம் காலத்தை கடந்து நிற்கும் வல்லமை பெற்று விளங்குகிறது. சிங்காரம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கம்புனரியில் கு. பழனிவேல் நாடார் மற்றும் உண்ணாமலை அம்மாளுக்கு, ஆகஸ்டு 12, 1920இல் மூன்றாவது மகனாகப் பிறந்தார். சுப்பிரமணியன் மற்றும் பாஸ்கரன் இவருடைய சகோதரர்கள் ஆவர். இவரது பாட்டனார் குமாரசாமி நாடாருடன் இணைந்து இவரது குடும்பத்தினர் ஆடை வியாபாரம் செய்துள்ளனர். இவர் தனது ஆரம்பக் கல்வியை சிங்கம்புணரி ஆரம்பப் பள்ளியில் படித்தார். பின்னர் மதுரையிலுள்ள செயிண்ட் மேரிஸ் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். இவர் தனது 18வது வயதில் எஸ். கே. சின்னமுத்து பிள்ளையுடன் பணி புரிய இந்தோனேசியாவிலுள்ள மேடானுக்குச் சென்றார். அங்கு திருமணம் செய்து கொண்டார். இவரது 25வது வயதில், இவரின் மனைவி மற்றும் குழந்தை பேறுகாலத்தின் போது இறந்துவிட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மீண்டும் இந்தியா வந்து மதுரையில் வசித்தார். ப. சிங்காரம் தனது 18வது வயதில் மேடானுக்குச் சென்றார். அப்போது உலகம் இரண்டாவது உலகப் போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அதனால் கடல்வழி போக்குவரத்து சரியாக நடைபெறவில்லை. இதன் விளைவாக கப்பலில் இருந்து பெறக்கூடிய தமிழ் பத்திரிகைகள் சிங்காரத்திற்கு கிடைக்கவில்லை. பினாங்கு நூலகம் அவருக்கு ஆறுதலை அளித்து, ஹெமிங்வே, டால்ஸ்டாய், பால்க்னர், செக்கோவ் மற்றும் தஸ்தயெவ்ஸ்கியை அறிமுகம் செய்தது. சிங்காரம் இரண்டு புதினங்கள் மட்டுமே எழுதியுள்ளார். இவற்றை வெளியிடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அதனால் அவர் எழுதிய 2 நாவல்களை வெளியிட்ட பிறகு அவர் ஊக்கத்தை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். சிங்காரம், 1950இல் இந்தியா திரும்பியவுடன் “கடலுக்கு அப்பால்” என்கிற புதினத்தை எழுதினார். இதை வெளியிடுவதற்கு இவர் மேற்கொண்ட முயற்சிகள் வீணாயின. இவருடைய நண்பர் மூலமாக இந்தப் புதினம், கலைமகள் பதிப்பகத்திற்கு போட்டிக்காக அனுப்பப்பட்டது. போட்டியில் இந்தப் புதினம் முதல் பரிசை வென்றது. இறுதியில் கலைமகள் பதிப்பகத்தின் வழியாக 1959இல் “கடலுக்கு அப்பால்” புதினத்தை வெளியிட்டார். புயலிலே ஒரு தோணி புதினத்தை 1962இல் எழுதினார். நண்பரின் கடும் முயற்சியினால் 1972இல் கலைஞன் பதிப்பகம் இதை வெளியிட்டது. நவீன தமிழ் எழுத்தாளர்கள் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு என்று இந்தப் புதினத்தை குறிப்பிடுகிறார்கள். இரண்டாம் உலகப் போரின் பின்னணியில், சுமத்திராவில் நடக்கும் கதையை இந்தப் புதினம் எடுத்துரைக்கிறது. பல திரைப்பட தயாரிப்பாளர்கள் "புயலிலே ஒரு தோணி" கதையை படமாக எடுக்க விரும்பியுள்ளனர். ஆனால் புத்தகத்தில் வருவது போன்று திரையில் காட்டுவது இயலாது என்கிற காரணத்தால் அதை தவிர்ப்பதாக கூறியுள்ளனர். சிங்காரம் 1946இல் இந்தியா திரும்பியவுடன், மீண்டும் இந்தோனேசியா செல்ல திட்டமிட்டார். அது இயலாத காரணத்தால், மதுரையிலுள்ள ‘தினத்தந்தி’ நாளேடு நிறுவனத்தில் பணி புரிந்து 1987இல் விருப்ப ஓய்வு பெற்றார். அவர் யாருடனும் அதிகமாக நெருங்கிப் பழகவில்லை. 50 வருடங்களாக மதுரையிலுள்ள ஒய். எம். சி. ஏ. விடுதியில் தனியாக வாழ்ந்தார். எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி மற்றும் பலர் அவரைச் சந்தித்து பேசியுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துக்கூறி மீண்டும் அவரை எழுதுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் சிங்காரம் அவர்களின் வேண்டுகோளைத் தவிர்த்து தான் எழுதப்போவதில்லை என்று கூறியுள்ளார். 1997இல், தனது வருமானங்களை சமூக நல அறக்கட்டளைக்கு வழங்கினார். அதே வருடத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் டிசம்பர் 30, 1997 இல் காலமானார். அவர் இறந்ததைப் பற்றி யாரிடமும் தெரிவிக்கத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ப. சிங்காரம் எழுதிய நூல்கள் |