உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
20. மகளின் ஆசையும் மன்னரின் ஆறுதலும்
“குழலொலி யாழொலி கூத்தொலி யேத்தொலி யெங்கும் குழாம் பெருகி விழா வொலி விண்ண ளவுஞ்சென்று விம்மி மிகு திருவாரூரின் புழ விடையார்க்கு வழி வழியாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடியா ரொடுங் கூடியெம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே” - சேந்தனாரின் திருப்பல்லாண்டு சரபோஜி மன்னர் காசியாத்திரை செல்வதை முன்னிட்டு, பந்தணை நல்லூரிலுள்ள பசுபதீசுவர சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்து ஆலயத்தில் திருவிளக்குகள் ஏற்றிப் பிரசாதம் அனுப்பி வைத்திருந்தார்கள். தஞ்சைக் கீழ் வாசலில் அமைந்துள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு தாழம்பூ அர்ச்சனை செய்து, பிரசாதம் கொண்டு வந்திருந்தார்கள். திருவரங்கம் அரங்கநாதப் பெருமாளுக்குத் துளசி அர்ச்சனை, நைவேத்தியம் செய்து பிரசாதம் அனுப்பி இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இப்படிப் பல திருக்கோவில்களிலிருந்து சிறப்புப் பூஜையும், அபிஷேகமும் செய்து பிரசாதங்களை அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள். மன்னர் மேற்கொள்ளப் போகும் காசியாத்திரையை அவை நினைவு படுத்திக் கொண்டே இருந்தன. வரும் பிரசாதங்களைச் சம்பிரதாயமாக, வெள்ளித் தட்டில் வைத்து ஷர்க்கேல் ராமோஜி அனுப்பி வைப்பார். தேவியர் மூவருக்கும் அது வழங்கப்படும். அகல்யாபாய் அவற்றை எடுத்து வைத்திருந்து, ஞாபகமாக மகன் சிவாஜிக்கும், மகள் சுலக்ஷணாவுக்கும் நெற்றியில் இட்டு, சிறிது நைவேத்தியம் சாப்பிடவும் கொடுப்பாள். சுலக்ஷணா அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளமாட்டாள். அந்த தவத்தின் பெருமையைப் பற்றிக் கேட்பாள். புராணக் கதைகள் இருப்பின் சொல்லும்படி வற்புறுத்துவாள். அன்று அப்படி வந்திருந்த போது, யமுனாபாய் கூடவே அமர்ந்திருந்தாள். சுலக்ஷணாவுக்குப் பெரியம்மாவின் கையினால் குங்குமப் பிரசாதம் கிடைத்தது. “இது எங்கிருந்து வந்திருக்கிறது தெரியுமா உனக்கு? திருவாரூரில் உள்ள தியாகேசப் பெருமான் சந்நிதியிலிருந்து வந்து சேர்ந்திருக்கிறது. கமலாம்பாள் சந்நிதியிலும், நீலோத்பலாம்பாள் சந்நிதியிலும் இருந்து குங்கும அர்ச்சனை செய்து பிரசாதத்தை உனக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்!” என்று சொன்னாள் யமுனாபாய். “பெரியம்மா! நீங்கள் திருவாரூருக்குப் போனதுண்டா?” என்று ஆவலோடு கேட்டாள் சுலக்ஷணா. “போயிருக்கிறேன் குழந்தாய்! நமது மூதாதையரான சகஜி மன்னர், தியாகராஜப் பெருமானிடம் மிகுந்த பற்று வைத்திருந்தவர்.* தியாகராஜ விநோத்சித்ர பிரபஞ்ச நாடகம் என்ற நூலையே எழுதி இருக்கிறார். தியாகேச பதமுது, பஞ்சரத்னம் போன்ற கீர்த்தனைகளையும் இயற்றி இருக்கிறார். அவருடைய ஓவியம் கூட, சகோதரர்களான முதலாம் சரபோஜி, துனஜா ஆகியவர்களுடன் ஈசனை வணங்கும் தோற்றத்தில் அங்கே எழுதி வைக்கப்பட்டுள்ளது. பாரி நாயனம் என்ற நாதசுரக் கருவியை அங்கேயல்லாமல் வேறு எங்கேயும் காணமுடியாது. குடமுழா என்ற பஞ்சமுக வாத்தியத்தையும் அங்கே ஈசன் சந்நிதியில் மட்டுமே சோடா உபசாரத்தின் போது வாசித்துக் காட்டுவார்கள். திருவாரூர் திருக்கோவிலுக்கு, தேர்த்திருவிழாவின் போது ஒரு முறை நான் போயிருக்கிறேன். இவற்றை எல்லாம் கண்டிருக்கிறேன்!” என்றாள் யமுனாபாய். (* திருவாரூர் திருக்கோவில் - குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய நூலில் குறிப்பு.) “பெரியம்மா! அங்கே நடனமாதரின் நாட்டிய விழாவும் நடைபெறுமாமே! நீங்கள் கண்டதுண்டா? தலைக்கோலி என்ற விருது பெற்ற ஆடல் மகளிரின் வழிவந்த பெண்கள் பலர் அங்கே நடனம் ஆடுகிறார்களாமே! நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று ஆவலோடு கேட்டாள் சுலக்ஷணா. “ஆமாம் குழந்தாய்! அங்கே தேவாசிரிய மண்டபத்தில் சோமாஸ்கந்தர் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி, ஆடல் அரசிகளின் நடனத்தைக் கண்டு ரசித்துப் பாராட்டியதாகச் சிற்பங்களும் உண்டு. ஆடலரசனான எம்பெருமானின் முன்னிலையில் ஆடியதாகக் காட்டப்பட்டுள்ள ஆரணங்குகளே தலைக்கோலி என்ற புகழ்பெற்ற நாட்டிய நங்கையர். தலைசிறந்த திருவாரூர் நாட்டியமணிகள் இங்கே தஞ்சைப் பெருங்கோவிலுக்கும் வந்து ஆடுவதுண்டு. இசைவாணர்கள் இசைமுழங்க, ஆரியமும் தமிழும் பாட, தாளங்கள் முழங்க, அவர்கள் தஞ்சை ஈசன்முன் ஆடும் கண்கொள்ளாக் காட்சி, கம்பீரம் மிகுந்தது மகளே!” என்று குரலில் பெருமிதம் தொனிக்கச் சொன்ன யமுனாபாய், அந்தக் காட்சியை மீண்டும் நினைத்துப் பார்ப்பதைப் போலக் கண்களை மூடிக் கொண்டாள். அதைப் பார்த்த சுலக்ஷணாவின் முகத்தில் ஒளி மிதந்தது. கண்களில் நீர் துளிர்த்தது. இரு கைகளையும் கூப்பியபடி, தியாகேசப் பெருமான் அந்த நடனக் காட்சியைக் கண்டு பாராட்டும் காட்சியை மனத்தில் நினைத்தவளாக அமர்ந்திருந்தாள். அருகில் அமர்ந்திருந்த இளையராணி அகல்யாபாய் இதைக் கண்டு திகைத்துப் போனாள். “அக்கா! என்ன சொல்கிறீர்கள்? இதன் விளைவைத் தாங்கள் உணரவில்லையா? ஏற்கெனவே சுலக்ஷணா நாட்டியப் பித்துப் பிடித்து அலைகிறாள். அந்த ஆசையை மேலும் வளர்த்து விடுவதைப் போல, என்னென்னவோ சொல்லிக் கொண்டு போகிறீர்களே? போதும் அக்கா!” என்று கெஞ்சும் குரலில் மூத்த ராணியைத் தடுக்க முயன்றாள். “அகல்யா! ஏன் பதறித் துடிக்கிறாய்? என்ன நடந்து விட்டது இப்போது? ஈசனையும் ஆடற்கலையையும் யாராவது பிரித்துப் பேச முடியுமா? நந்திதேவர் குடமுழவம் இசைக்க, விரிசடைப் பெருமான் ஊர்த்துவதாண்டவம் ஆட அருகே தோல்வியால் சோர்வுற்ற காளிதேவி நாணி நிற்க - ஆகா! அந்த சிற்பம் எத்தனை அற்புதமானது? குழந்தை அதைக்காண ஆசைப்படுவதில் என்ன தவறு?” என்று கேட்டாள் யமுனா. “ஆமாம் பெரியம்மா! நான் பரதநாட்டியம் என்ற சொல்லை எடுத்தாலே அம்மாவுக்குப் பிடிப்பதில்லை. நான் ஏதோ செய்யத் தகாத ஒரு செயலைப் புரிந்து விட்டது போல என்னைக் கடுமையாகக் கண்டிக்கிறாள். நீங்களே சொல்லுங்கள். அந்த அற்புதமான கலையில் அம்மா என்ன தவற்றைக் கண்டுவிட்டாள்? ஏன் அதை நான் கற்றுக் கொள்ளக் கூடாது?” என்று குறுக்கிட்டாள் சுலக்ஷணா. “அக்கா! பார்த்தீர்களா? பார்த்தீர்களா? இது என்ன விபரீதமான ஆசை? இதை வளர விடலாமா? இந்தப் பித்து இவளுக்கு எப்படிப் பிடித்தது? நம்மைப் போன்ற குலமகளிர் இந்த நினைப்பையே மனத்தில் வைப்பதும் தவறு அல்லவா? ஏதோ குழந்தை பார்த்து ரசித்துவிட்டுப் போகட்டும் என்று அனுமதி கொடுத்தது தப்பாகப் போயிற்று. நட்டுவனார், கானம் பாடுபவர்கள், வீணை வாசிப்பவர்கள், கெட்டி மத்தளம் அடிப்பவர்கள் என்று எல்லோரையும் இங்கே கொண்டு வந்து விட விரும்புகிறாள் உங்கள் மகள். எல்லாம் அவள் தந்தையார் கொடுத்த இடம்! இப்போது அந்த மலையாளத்து மோகினியின் பழக்கம் வேறு!” என்று கடுகடுப்புடன் சொன்னாள் அகல்யா! “புவனா என் தோழியாக இருக்கக் கூடாதா? நான் அரசகுமாரி என்பதால் என் தோழியும் ஓர் இளவரசியாகத் தான் இருக்க வேண்டுமா? நீ எனக்கு கிருஷ்ண - சுதாமர் கதையைக் கூறியிருக்கிறாயே? கிருஷ்ணர் யாதவகுல அரசர் என்றாலும் ஏழை அந்தணரான சுதாமர் அவருக்கு நெருங்கிய நண்பராக இருக்கவில்லையா?” என்று கேட்டாள் சுலக்ஷணா. “சுலக்ஷணா ஆண்கள் விஷயம் வேறு, பெண்கள் விஷயம் வேறு. ஒருக்காலும் நம்முடைய சமுதாயத்தில் அது போன்ற சுதந்திரம் கிடையாது. அதுவும் அரச குடும்பத்தில் பிறந்து, அந்தப்புர வாசம் என்று ஒதுங்கிவிட்ட பின்னர், வெளி உலகத் தொடர்பே நமக்கு இருக்க முடியாது. அப்படி இருக்க நீ அந்த நடனமாதின் மகளுடன் நட்புக் கொள்வதையும், அவளைப் போலவே நாட்டியம் கற்றுக் கொள்ள ஆசைப்படுவதையும் உலகம் எப்படி அனுமதிக்கும்? உலகமே அனுமதித்தாலும் நான் ஒரு நாளும் சம்மதிக்கவே மாட்டேன். அந்த ஆசையை அடியோடு மறந்து விடு!” என்று குரல் கலங்கக் கூறினாள் இளையராணி. “எதற்காக மறக்க வேண்டும் அம்மா? கலை உலகச் சக்கரவர்த்தி சரபோஜி மன்னரின் மகளாகப் பிறந்த குற்றத்திற்காகவா? ஆலயங்களிலும், கலை விழாக்களிலும் ஆடல் மகளிர் வந்து ஆடும் கலைப் பண்பை ஆதரித்துப் போற்றி வரும் அரசர், அதைத் தமது மகளின் விருப்பமாக மாறுவதைச் சகித்துக் கொள்ள மாட்டார் என்று எண்ணியதாலா? சொல்லு அம்மா? அப்பாவைப் போல எனக்கு ஏன் கலையார்வம் இருக்கக் கூடாது? நானும் ஏன் இந்தத் தெய்வீகக் கலையைக் கற்றுக் கொள்ளக் கூடாது?” என்று உணர்ச்சி மிகுந்த குரலில் வாதாடினாள் சுலக்ஷணா. “மிக்க நன்று மகளே! வெகு அழகாகச் சொன்னாய்!” என்று அந்தப் பேச்சை மெச்சிய வண்ணம் அந்தப்புரத்தினுள் வந்து நின்றார் சரபோஜி மன்னர். தந்தையைக் கண்டதும் சுலக்ஷணா ஓடிப் போய் அவரது விரிந்த கைகளின் அணைப்பிற்குள் புகுந்து கொண்டாள். இருப்பினும் தாயின் கோபம் இன்னும் தணியவில்லையோ என்ற சந்தேகத்துடன், அன்னையைத் திரும்பிப் பார்த்தாள். அதுவும் உண்மைதான்! அகல்யாவின் கண்களில் பறந்த பொறி இன்னும் அடங்கவில்லை. “சுவாமி! தங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அந்தப் பிஞ்சு உள்ளத்தில் விபரீத ஆசைகளைத் தோற்றுவித்து விடாதீர்கள். எது நல்லது? எது பொல்லாதது? இதைச் சரிவர உணர்ந்து கொள்ளும் பருவத்தைக் கூட எட்டி இராத அவள், நடனமாதர் கூடவோ, அவர்களுடைய குழந்தைகளுடனோ பழக முற்படும் ஆவலுக்குத் தூபம் போட்டு விடாதீர்கள். தங்கள் கலையார்வத்தை மதிப்பவளேயானாலும் என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது!” என்று கை குவித்து கண்ணீர் மல்க எழுந்து வந்து அரசரின் காலடியில் அமர்ந்தாள் அகல்யாபாய். அவளைத் தேற்றுவதே போல மன்னரும் அவளது முதுகில் தட்டிக் கொடுத்தார். அந்த நிலையில் அங்கே மேலும் இருக்க விரும்பாதவளாய் யமுனாபாய். “வா, சுலக்ஷணா! நாம் என்னுடைய அறைக்குப் போகலாம். பிறகு அம்மா வந்து உன்னை அழைத்துக் கொண்டு போவார்கள். இப்போது நீ இங்கே தொடர்ந்து இருப்பது அம்மாவுக்கு எரிச்சலை மூட்டும்” என்று கூறி சுலக்ஷணாவின் கையைப் பற்றியபடி மெல்ல அங்கிருந்து வெளியேறினாள். “அகல்யா! ஏன் விபரீதமான கற்பனைகளில் ஈடுபடுகிறாய்? இப்போது என்ன நடந்துவிட்டது? உன் மகள் சுலக்ஷணா எந்தத் தவற்றையும் செய்து விடவில்லையே?” என்று அமைதியான குரலில் கேட்டார் மன்னர். “இன்னும் என்ன நடக்க வேண்டும் அரசே? மலையாளத்திலிருந்து வந்த நாட்டியக்காரியின் மகள், தங்கள் ஆதரவுடன் தஞ்சையில் தங்கிப் பரதநாட்டியம் கற்றுக் கொள்ளப் போகிறாள். சுலக்ஷணாவும் அவளைத் தோழியாக ஏற்றுக் கொண்டு, அவளைப் போலவே தானும் நடனம் பயில ஆசைப்படுகிறாள். இப்படி ஒரு விபரீதமான ஆசை நேர்ந்துள்ள வேளையில், நாமும் காசியாத்திரை புறப்பட்டுச் செல்லவிருக்கிறோம். நாம் இல்லாதபோது என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? நினைத்துப் பார்த்தால் எனக்கு நெஞ்சு பொறுக்கவில்லை சுவாமி!” “கவலைப்படாதே அகல்யா! தவறாக எதுவும் நடந்து விடாது. உன்னுடைய அனுமதியைப் பெறாமல், உன் மகள் அப்படி எதிலும் ஈடுபடவே மாட்டாள், போதுமா? ஆயினும் நீ இந்த அற்புதமான கலையையோ, இதைப் பயிலும் நாட்டிய நங்கையரையோ இழிவாகப் பேசுவது சரியல்ல தேவி! இது இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கலை. இறைவனே உலகுக்கு ஆடிக்காட்டிய அற்புதக் கலை. அதை நாம் அலட்சியமாகப் பேசலாமா? எனது சரசுவதிமகால் நூல் நிலையத்தில் இதற்காக ஒரு தனிப்பகுதியையே அமைக்க நான் எவ்வளவு பாடுபட்டு வருகிறேன் தெரியுமா?” “இருக்கலாம் சுவாமி! ஆனால் உயர் குலத்தவரோ, கௌரவமான குடும்பத்தினரோ இதைக் கற்றுக் கொள்ள முயலுகிறார்களா? இதைப் பயிலும் நடனமாதரை ஆதரிக்கிறார்களா? அவர்களிடம் அன்பும் பரிவும் காட்டுகிறார்களா? ஏதோ பொழுது போக்கிற்காக வேண்டுமானால் ஆடுவதை ரசிக்கலாம். ஆனால் மரியாதை கொடுக்கச் சம்மதிப்பார்களா? அப்படிப்பட்ட நிலையில் உள்ள மகளிருடன் நமது மகள் பழகலாமா? அந்தக் கலையைப் பயில ஆசைப்படலாமா? நீங்களே சொல்லுங்கள் அரசே!” என்று குமுறினாள் அகல்யாபாய். “அகல்யா! நீ ரொம்பவும் தடுமாறிப் போயிருக்கிறாய். ஆகையால், நான் இப்போது சொல்லும் வாதங்களை நீ ஏற்றுக் கொள்ள உனது மனம் இடம் தராது. இருப்பினும் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகிறேன். கவனமாகக் கேள். உனது மனம் அமைதி பெற அந்தத் தியாகராசப் பெருமான் அருளட்டும்!” என்று புன்னகையுடன் கூறினார் மன்னர். “சுவாமி! என்ன சொல்லப் போகிறீர்கள்? மீண்டும் திருவாரூர் தெற்குத் தளிசேரியில் வாழும் ஆடலரங்குகளின் கதையா?” என்று பொறுமை இழந்து கேட்டாள் அகல்யாபாய். “அல்ல தேவி! இது நமது மரியாதைக்குரிய மகான் ஒருவரின் கதை தான். அவரும் திருவாரூரில் வாழ்பவர் தாம்” என்று கூறி நிறுத்தினார் சரபோஜி. “யார் அவர்? மகானாக இருந்தால், அவருக்கும் நடனக் கலைக்கும் என்ன சம்பந்தம்?” என்று குமுறும் குரலில் கேட்டாள் இளையராணி. “உனக்குத் தெரியும் தேவி! அவருடைய ‘பாலகோபால’ என்ற பைரவி ராகக் கீர்த்தனையை, நீயே உனது நய மிகுந்த குரலில் எனக்குப் பாடிக் காட்டி இருக்கிறாய். உனக்கு அவரிடம் மிகுந்த மரியாதை உண்டு.” “என்ன குருகுகமூர்த்தியான முத்துசாமி தீட்சிதரைப் பற்றியா குறிப்பிடுகிறீர்கள்? அவரது அற்புதமான சம்ஸ்கிருதக் கீர்த்தனைகள் எவ்வளவு தூரம் பக்தியைத் தூண்டி மெய்சிலிர்க்க வைக்கக் கூடியவை? அவருக்கும் தாங்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கும் விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்?” என்று சிறிது பொறுமை இழந்து கேட்டாள் இளையராணி. “உண்டு அகல்யா! இது அந்த மகானின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான். அது மட்டுமல்ல; அந்த நிகழ்ச்சியை ஒட்டி வழக்கமாக சம்ஸ்கிருத மொழியிலேயே கீர்த்தனைகளை இயற்றும் முத்துசாமி தீட்சிதர் தோடி ராகத்தில், தெலுங்கு மொழியில் ‘ரூபே மூஜுசி’ என்ற வர்ணத்தையும் பாடி இருக்கிறார்...” “ஆச்சரியமாக இருக்கிறதே சுவாமி?” “ஆமாம் தேவி! அந்த நிகழ்ச்சியிலும் சரி; அவர் பாடியதிலும் சரி, ஓர் அதிசயம் இருக்கத்தான் செய்கிறது. ஆண்டவனின் லீலையை நம்மைப் போன்ற எளியவர்களால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? சொல்லுகிறேன் கேள்!” என்று கூறத் தொடங்கினார் மன்னர் சரபோஜி. அந்தக் கதையைக் கேட்கும் ஆர்வத்தில் அந்த அறையின் கதவு வரையில் வந்து, திரைச் சுருளின் மறைவில் சுலக்ஷணா நின்றதை இளையராணியும் கவனிக்கவில்லை, மன்னரும் பார்க்கவில்லை! புவன மோகினி : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
|