சேறைக் கவிராசபிள்ளை

இயற்றிய

வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா

திருச்சிற்றம்பலம்

விநாயகர் காப்பு

சீர்உலா வீதிச் சிவாய நகர் ஆள்வார்தம்
பேர்உலா நாளும் பிறங்கவே - நேரலார்
ஆர்க்குஞ் சரமுகன்நேர் ஆன அரிவரிசேர்
கார்க்குஞ் சரமுகனே காப்பு.

நூல்

சீராரும் ஞானச் சிறப்பின் கதிர்படைத்த
பாராருந் தெய்வ பராபரமாய் - யாராலும் 1

காணா வடிவமதாய்க் காண்பானும் காட்சியுமாய்ப்
பூண் ஆபரணப் பொருளேயாய்ச் - சேணாகி 2

ஆனந்தம் ஆகி அறிவாய் அளவுபடாத்
தான்அந்தம் இல்லாத் தனிமுதலாய் - வான்அந்தம் 3

இல்லா நிலையத் (து) எழுந்துபரி பூரணத்தின்
சொல்லாய் அகண்ட துரியமதாய் - எல்லாம் ஆம் 4

காலத்தின் எல்லை கடந்துபர நாதத்தின்
மூலத்தே மன்னும் முதற்பொருளாய் - ஞாலத்துள் 5

ஓங்காரம் ஆகி உணர்வாய் உணர்வதற்கு
நீங்காத சோதி நிருமலமாய்ப் பாங்கான 6

தற்பரமாய் வேறாய்ச் சகளமதாய் நிட்களமாய்ச்
சிற்பரமே ஆன சிவபெருமான் - கற்பனையால் 7

உன்னும் அளவில் உயர்குடிலைப் பாற்றோன்றி
மின்னும்நா தத்திடை விந்துதித்தே - அன்னதுதான் 8

சாருமிடத் (து) ஓங்குபஞ்ச சாதாக்கி யத்துள்ளே
ஓரு மகிமை உருத்திரர்கள் - மேருமுதல் 9

தலச் சிறப்பு

வெற்பெல்லாம் நோக்கியந்த வெற்பிலுயர்வெற் (பு) எதுவென்று
அற்புதமாய் நோக்கும் அளவிலெதிர் - கற்பமொரு 10

காலத் தெழும்பரிதி கால்வீசி மண்டலமேற்
சீலத் திருந்த செயலெனவே - பாலுற்றோர் 11

தன்மயம (து) ஆகத் தயங்குகதிர் வீசி நின்ற
மின்மயமாம் மாணிக்க வெற்பணுகிப் - புன்மையெலாம் 12

மாற்றிஅடி யார்க்கருள வாட்போக்கி யாம்எனவே
ஏற்றமுறு நாமம் இசைந்தபிரான் - கூற்றுலகுஞ் 13

செல்லாப் பிரேதகனாய்ச் செல்கென் (று) ஒருமுனிவன்
சொல்லாற் பணியுந் துரந்தரனை - வல்லாளன் 14

ஆக்கியே சின்னாள் அரசுசெய்வித் (து) அந்தியத்தில்
நோக்குசிவ லோகமுற நோக்கினோன் - தாக்கமரில் 15

உள்ளங் குலையா (து) உயர்மறையோர் சந்தியின் நீர்
வெள்ளம் பெருகி விலக்கவே - தள்ளிவரும் 16

செங்கதிரோன் தானவர்செய் தீமை தனையொழியச்
சங்கரவென் றேத்துந் தகைமையான் - பொங்குகனல் 17

ஆனஇடி யேறும் அபிடேகஞ் செய்யவரந்
தானருளி நின்ற தலைமையான் - வானவர்கோன் 18

அன்றுமுனி யாற்படைத்த ஆயிரங்கோ சங்களும்மெய்
துன்றியகண் ணாகத் தொகுத்திட்டோன் - ஒன்றிவரும் 19

கும்பயோ னிக்கெதிர்போய்க் கூறியபஞ் சாக்கரத்தின்
விம்பமாய் என்றும் விளங்குவோன் - அம்புயம் நேர் 20

கையதனால் மாணிக்கம் காமித் (து) எடுக்கவரும்
வெய்யவனாம் ஆரியன்முன் மேவியிதை - அய்யநீ 21

வேண்டினையேல் பொன்னியறல் மிக்ககுடம் ஆயிரந்தான்
ஈண்டு தருதியேல் ஈவமென - ஆண் (டு) அவன் போய்க் 22

கொண்டுவரும் ஆயிரத்தைக் கூறுந்தொள் யாயிரமாய்க்
கண்டுபொசி வாசிக் கணக்குரைத்தே - மிண்டுகள் போற் 23

பன்னுநூ றாங்குடத்திற் பத்திலதாய் வாங்கியதில்
உன்னுகுடம் ஒன்றில் உழக்கில தாய் - அன்னது நீ 24

தாவெனவே உள்ளம் தரியாமல் வாளுருவி
ஆவெனவே வெட்டும் அவனெதிரே - சேவினொடு 25

காணவந்து முத்திக் கபாடந் திறந்தருளிப்
பூணு முடித்தழும்பு பூண்டபிரான் - வேணபடி 26

சொன்ன பொசி வாசியறி தூநலத்தால் எவ்வுலகும்
மன்னுபொசி வாசியென வைகினோன் - கன்னிமார் 27

எண்ணினது தான்முடிக்க ஏமவடி வாளெதிரே
நண்ணி அருளும் நலத்தினான் - புண்ணியமெய்த் 28

தொண்டர் குழாமிருந்து தூயதவம் செய்வதற்கே
கண்டதெனும் பஞ்சாக் கரக்குகையான் - அண்டியே 29

பேதலிக்கும் நேரியர்கோன் பெண்டிர் உளங்கனிந்து
காதலிக்கும் பொன்னாரம் காட்டினான் - தீ (து) அகல 30

வந்திக்கும் மாருதத்தை மன்னுநிச ரூபமதாய்ப்
பந்திக்கும் நீர்மை பகர்ந்திட்டோன் - சிந்தித்தே 31

வேண்டாது வேண்டி விரும்புமுரு கேசனிட்ட
தூண்டா மணியின் சுடர்விளக்கோன் - சேண் தாவு 32

தீர்த்தச் சிறப்பு

தன்மலையின் கீழ்பால் சதாகதியின் தீர்த்தம்அயல்
நன்மை தரும்குலிச நற்றடமும் - தன்மமிகும் 33

தென்றிசையி லேநாக தீர்த்தமுடன் தென்மேற்கே
துன்றுகதிர் வீசும் சுடர்த்தடமும் - என்றுமுயர் 34

மேற்றிசைக்குப் போதகமும் மேவுவட மேற்குமறை
சாற்றும் உரோமசரன் சார்தடமும் - சீற்றம் 35

பொருதவட பால்விந்தைப் பொய்கையும் ஈசானம்
தருபரத்து வாசத் தடமும் - பெருகியே 36

அட்டதிக்கும் மேவஅணுகினோர் பாவமெலாம்
கட்டறுக்கும் பஞ்சாக் கரச்சுனையும் - தொட்டவுடன் 37

வல்வினையை நீக்கி மறுசென்மம் ஆக்கியருட்
செல்வநல்கும் தெய்வத் திருச்சுனையும் - தொல்லைநாள் 38

ஓங்குகடல் ஆழ்ந்த உலகையொரு கோட்டதனால்
தாங்கும் வராகத் தடஞ்சுனையும் - பாங்குறவே 39

சூழ்ந்துதனை வாழ்த்தும் சுரும்பார் குழலியிடம்
வாழ்ந்து பிரியா மகிமையான் - தாழ்ந்தவர்க்கே 40

தானிழலாய் நின்றார் தமக்கும் ஒருநிழலாய்
மாநிழல்செய் நிம்ப வனத்தினான் - பானுகுலம் 41

தோன்றுதிரு நீலகண்டச் சோழன் பணிவிடைக்கே
ஏன்றுகதி நல்கும் இயற்கையான் - மூன்றுலகும் 42

மேயதவத் தோரெண்மர் வேண்டியே பூசிக்கத்
தூயவரம் ஈய்ந்தருளும் தோன்றலான் - சேயினையே 43

தங்கைக் களித்தால் தலையளிப்பேன் என்றவன்பால்
அங்கத் தியாகம் அருளினோன் - பங்கயத்து 44

வேதா அமைப்பும் விலகுமெனச் சார்ந்தவர்க்கு
மாதானம் முற்றும் வழங்குவோன் - தாதாரும் 45

தசாங்கம்

கிரி

ஆகமெலி ஆயனுக்காய் அன்றெரித்த நாள்முதலாய்க்
காகம் அணுகாக் கனகிரியான் - மாக நிறை 46

ஆறு

கற்பகப்பூங் காவெனவே காமித் ததுகொடுக்கும்
அற்புதமாங் காவேரி யாற்றினான் - பொற்பமரும் 47

நாடு

கோட்டினால் ஓங்கு குலவரையைக் காலிடந்தே
நாட்டியிடும் குன்றுசூழ் நாட்டினான் - வாட்டினார் 48

நகர்

கற்கரைய வீசுசந்த்ர காசவாள் பெற்றதனால்
துற்கைதான் மாறித் தொடர்ந்தெதிரே - நிற்கும் 49

வரமந் திமமா மயிடா சுரன் மெய்ப்
பிரமத் தியானை பிளிற - உரமுற்று 50

மண்ணஞ்ச வீட்டுநாள் வானோர் சிவாயவென
நண்ணும் சிவாய நகரினான் - விண்ணவர்க்குள் 51

குதிரை

வாசியான் எவ்வுயிர்க்கும் மன்னுமிடை பிங்கலையூர்
வாசியான் என்றுரைக்கும் வாசியான் - பாசநிலை 52

யானை

சேதிக்கும் நாற்கரணத் தின்முடிசேர் மெய்ஞ்ஞான
ஆதிக் கடக்கமதத் (து) ஆனையான் சோதிக்கும் 53

மாலை

மாலயனும் காணா வடிவில் புனைந்தருளும்
மாலையினும் பொன்னிதழி மாலையான் - காலதென 54

முரசு

மூலத் திடைகிளைத்து மும்மண் டலங்கடந்துள்
ஆலிக்கும் நாதத் (து) அணிமுரசான் - ஞாலத்தைச் 55

கொடி

சுட்டழல தாக்கும் சுடலையினும் தற்பிரியாக்
கொட்டமிகும் ஏற்றுக் கொடியினான் - மட்டலாப் 56

ஆணை

பிண்டமும் நாதாந்தப் பெருவெளியும் பல்கோடி
அண்டமுமாம் அஞ்செழுத்தின் ஆணையான்-ஒண்டொடியார் 57

இரத்தினகிரியீசனின் பெரும்புகழ்

ஆர்க்குமா ணிக்கமலை ஆகத்தான் - போற்றுமிசை
யார்க்குமா ணிக்கமலை யாகத்தான் - பார்க்குள் 58

மதிக்கவரு மாறு மலையான் சடையில்
மதிக்கவரும் ஆறு மலையான் - துதிக்கவரும் 59

கண்டங் கரிய கரியுடையான் நீலமணிக்
கண்டம் கரிய கரியுடையான் - தொண்டின் 60

அமலையொரு பாகத் (து) அணைவான் பிறவா
தமலை யொருபாகத் (து) அணைவான் - சமரமுக 61

வீரன்மார்த் தாண்டன் விதிமுதலோர் போற்றுதிதி
வாரன் சிவயோக மாகரணன் - ஓருமனக் 62

கேத்திரன்பஞ் சாங்கன் கிரீசன் அம ரேசனென்று
தோத்திரஞ்செய் வேதத் துழனியான் - பாத்திரங்கம் 63

பாணியான் வேணியான் பாணிச் சடைமுடியான்
காணியான் வாணியான் காணியான் - மாணிக்கக் 64

கூத்தன்மா சித்திரையான் கூறினவை காசியான்
ஆத்தன் நமனுக்கே ஆனியான் - ஏத்துசபை 65

ஆடியான் ஆவணியான் ஆன புரட் (டு) ஆசியான்
மூடிமால் ஐப்பசியான் முத்தமிழ்க்கே - நாடிவருங் 66

கார்த்திகையான் கொன்றையினுங் காமிக்கும் மார்கழியான்
வார்த்தை மிகுதையான் மாசியான் - மூர்த்திகமாம் 67

விம்பங் குனியான் விரும்புபல மாதத்தான்
நம்பு வருட நகுமுகத்தான் - பம்பு 68

சொரூபநி தான சுதான மகேச
விரூபக ணேச விநோத - அரூப 69

நிரம்பிய கண்ட நிறைந்து பரந்த
அரன்பரன் அம்பலவன் அன்று - திருந்தலரை 70

வாட்டுஞ் சுவா யம்பு மனுச்சித் திரைமாதம்
ஓட்டு திரு நாளில் உகந்தொருநாள் - நாட்டியபூ 71

பவனி

காப்பணிதலும் கொடியேற்றமும்

மண்டலமே லுற்றிரவி மண்டலம்புக் காமெனவே
விண்டலந்தோய் மண்டபத்தில் வீற்றிருந்தே - தொண்டருக்கு 72

மெய்க்காப் பருள விரும்புசிவா யந்நகரில்
கைக்காப் பணிந்து கருணையுடன் - மிக்க 73

கொடியேற்றி வீதி குலவியபின் அந்தப்
படியே யெழுந்தருளிப் பானு - நெடிதான 74

கேசாதி பாதமாக அணிகள் அணிந்த வகை

மாணிக்க வெற்பை வலஞ்செய்து பொன்மலையைப்
பூணிக்கை யாய்த்தொழவே போனதற்பின் - காணிக்கை 75

வாங்குமணி நீலம் மலர்க்கரத்தி லேயிருந்து
வீங்குசுடர் மேலுற்ற விம்பமென - ஓங்கு 76

முடித்தழும்பின் சோரிதுள்ளி முன்னுறைந்த தென்ன
அடுத் (து) எதிரே நின்றங் கழகாய் - மடுத்தவினை 77

நீத்தபுரு கூதன் நிழலெனவே வானவரைக்
காத்தமறு மேல்போய்க் கசிந்ததெனப் - பார்த் (து) எரிசெய் 78

காகமே லின்னங் கனற்கண் புகைந்ததெனப்
பாகபரஞ் செவ்வி படிந்ததென - மேகமுடன் 79

தெள்ளு திருச்சாந்து திலகமணிந் தேகொடிய
புள்ளுலவா முன்றிலிடை போய்த்திரும்பி - வெள்ளியென 80

மின்னும் பசுங்கிரண வெண்பட்டு மேற்சாத்தித்
துன்னுங் கடுக்கைத் தொடைசாத்தி - மன்னுங் 81

கலவைக் குளிர்சாத்திக் கற்பூரஞ் சாத்திச்
சலவைச் செழுஞ்சாந்து சாத்தி - உலகுதொழு 82

மாமுதுவர் வெண்சா மரையிரட்ட வாணு தலார்
தாமும் பலகீதந் தான்பாடக் - காமருபூந் 83

தென்றற் கொழுந்துலவச் செந்தீப ராசியுடன்
நின்றுச்சி விண்ணின் நிலவெறிப்ப - முன்றிலிடைப் 84

புங்கவர்கள் சூழ்ந்து புகழ்ந்துவரப் போந்தழகாய்
அங்கண் இனிதுற் (று) அருளியபின் - பொங்கியெழும் 85

அவ்வியந்தீர் சைவத்து அருமறையோர் ஆகமத்தின்
திவ்வியமாம் பூசை செலுத்துதலும் - எவ்வமதன் 86

அம்பஞ்சும் அஞ்சா (து) அடல்புரிய அஞ்சுவர்போல்
செம்பொன் செய் பள்ளியறை சேர்ந்தணுகி - வம்பஞ்சும் 87

அம்மை முலை புல்லி அகிலாண் டமும்புரக்குஞ்
செம்மை யொடுங்களபச் சேறாடி - மும்மையுந்தான் 88

சீலித் தறியுஞ் சிவயோகம் உட்கிளர
ஆலித் துறங்கும் அனந்தலினைக் - காலத்தே 89

வந்தெழுப்பு மாயிரவி வானவன்கை நீட்டுதலுங்
கந்தமல ரோதியுடன் கண்மலர்ந்தே - அந்தரத்துக் 90

கங்கைநீ ராதிக் கடவுளர்போய்க் கொண்டுவருஞ்
செங்கை நீர் மல்குந் திருச்சடைமேல் - முங்கினோர் 91

துக்க மயலகற்றும் தூயபொன்னி நீராடி
மிக்க நவ பூசை விதிகொண்டு - திக்குடைதான் 92

கட்டுண்டு மாவின் கலைகரிய (து) ஆய்ப்பொறிமேற்
பட்ட புலியாடை பழுதென்றே - விட்டெறிந்து 93

செம்பொற் கலையுடுத்தே தேசு பெறுமகிலங்
கம்பித் திடாதமரும் கச்சசைத்தே - உம்பருக்குள் 94

ஓங்குபொருள் மூன்றும் ஒருபொருளாய் நின்றதென
வாங்கும் உபவீதம் மார்பணிந்து - பாங்குடனே 95

கேசாதிபாதம்

எல்லா நிறைபொருளும் எய்தி முடிவிடத்தே
வில்லார் மணிமகுடம் வேய்ந்தருளிக் - கல்லாரம் 96

மிக்கமா ணிக்கமலை வேழத்தின் ஓடையெனத்
தக்கநுதற் பட்டம் தரித்தருளி - எக்கியபண் 97

பாடும் இருவர் பயிலிடத்தே பொற்குழையும்
தோடும் அணிந்து துலங்கவே - ஓடியதன் 98

மங்கை விடத்தால் மணிக்கந் தரம்பிடித்த
செங்கையிற்பொன் மாலை சிறக்கவே - அங்கணுயர் 99

வேய்முத்துக் கண்டசரம் வேண்மார்பி லேயிலக
வாய்முத்த மிட்டு வசீகரிக்க - சேய்முத்து 100

கந்தரநீ லத்தையொளி காணப் புறமொதுங்கி
வந்ததெனக் கேயூரம் வாள்விதிர்ப்ப - மந்தரமாய்த் 101

தொக்கமணி ஒன்பதினாற் சூழ்ந்துசுடர் கால்துருவச்
சக்கரநேர் தோள் வலையந் தான்பிறங்க - மிக்க 102

உருக்கொண்டு பல்கதிரும் ஒன்றான தென்னத்
தருக்கு மணிப்பதக்கந் தாழ - நெருக்கியணி 103

பொற்பாந்தள் ஈன்ற புதியமணி மாலிகையும்
வெற்பாந் தகைய வெயிலெறிப்பக் - கற்பாந்த 104

வெள்ளந் தனையுறிஞ்ச வெம்பசிகொண் டேயிருந்த
கள்ளமழு வோர்செங் கரமருவத் - துள்ளுசடைத் 105

திவ்வியமாம் பச்சைச் செழும்புற் கொழுந்ததனைக்
கவ்வுவபோல் ஓர்கைக் கலைகுதிக்க - எவ்வுயிர்க்கும் 106

புண்டரிகத் தாளே புகலிடமாம் என்பதனைக்
கண்டறியும் ஈங்கென வோர் கைநீட்ட - எண்டிசைக்கும் 107

காட்சி தருஞ்சமையங் காணிதுவென் றேயுணர்த்துஞ்
சூட்சியொடு செங்கைத் துடிதுடிக்க - மாட்சி 108

வலம்புரிகைக் கொண்டோன் மலர்க்கணுறு தாள்மேற்
சிலம்பலம்பி மோதிச் சிலம்ப - அலம்பு 109

தலைமாலை யாடச் சடையும் பிறையும்
அலைமோதி யாட அணியும் - மலரிதழி 110

மாலை துவண்டாட மாமறைகொண் டாடவன்பர்
வேலை பரந்து மிடைந்தாடப் - பாலனைய 111

சங்கம் அதிரத் தடாரி முழவதிரத்
துங்க முரசத் தொகையதிர - எங்களம்மை 112

காவிக் கிரணமலர்க் கண்ணுகந்து காக்கவே
தாவித் திருவாடு தண்டேறி - மூவுலகும் 113

உற்றமதன் ஆடற் குதவிசெய வேநிலவும்
கொற்ற மதிவெண் குடைநிழற்றச் - சுற்றியெழுந்(து) 114

இன்னமுநா டன்னம் எதிர்வந்து காண்பதென
வன்னமலி வெண்சா மரையசையத் - தன்னையே 115

மோசமறக் கண்டோர் முடியா வினையகல
வீசுவபோல் ஆலவட்டம் வீசவே - தேசுலவும் 116

விம்பமணிக் காளாஞ்சி மிக்க அடைப்பைவரச்
செம்பொற் பிரம்பு சிலரேந்த - அம்பரமும் 117

பொன்னிடுபாறைக்கயலே வந்து மணித் தேர் ஏறுதல்

மன்னுமணிக் கோபுரத்தின் வாசல் பலகடந்து
பொன்னிடுபா றைக்கயலே போந்தருளி - முன்னொருநாள் 118

கூட்டுபதி னொன்றான கோநகரத் தார்முன் போய்
நாட்டுமிதி னாமோர் நகரமெனத் - தேட்டமதாய் 119

ஈசனார் சொல்ல இசைவுகொண்ட நாள்முதலாய்
மாசிலாது ஓங்கு மகிமையுடன் - தேசமேற் 120

பன்னிருவ ராகிப் பல திசையுங் கீர்த்திசெல
மன்னியே வாழும் வணிகரன்பால் - பின் இயற்றும் 121

ஆதவனும் சந்திரனும் ஆழி வடிவமதாம்
மாதம் அயனம் வருடமுதல் - ஓதுபல 122

உம்பர்களும் மெய்யாம் உலக ரதமனைய
செம்பொன்மணித் தேரேறித் தேவியுடன் - பம்பை 123

வாத்தியங்களின் முழக்கம்

தடாரி துடிதிமிலை தண்ணுமை கைத்தாளம்
விடாத முரசுமணி மேளங் - குடமுழா 124

சங்கு திமிரி தவில்பட நாகசுர
மங்கல கீதமுதல் வாத்தியமும் - பொங்கியெழ 125

பிச்சம் முதலிய சின்னம் சூழ்ந்து வரல்

மாமணிக்காற் பிச்ச வணிகள் பிறங்கியிடத்
தூமணிவெள் ளேற்றுத் துவசமுறச் - சோமனெனும் 126

வெண்சந் திரவட்டம் மேலசைந்து தாழ்வதெனத்
தண்சந் திரவட்டை தான்சுழற்றப் - பண்சருவிப் 127

பிரமன் முதலியோர் தத்தம் வாகனங்களில் வருதல்

பாடுமறை யோனனமும் பாற்கடலோன் புள்ளேறும்
நாடுமுனை வீரன் நவில்விடையும் - நீடொளியாய் 128

விண்டவழு மிக்கோர் விமானமணித் தேர்மிசையின்
அண்டவி நாயகன் சேய் ஆகுமயில் - எண்டிசையோர் 129

மாமறிக டாப்பூத மச்ச மிரலைநகு
தேமருவு புட்பரதஞ் சேவினிலுந் - தாமுறவே 130

காளி வடுகன் கனலனைய சாத்தனிவர்
ஆளி ஞமலி யடுகளிறும் - வாளியங்கட் 131

சத்தகன்னி மாரெண்மர் சாற்றும் பதினொருவர்
நித்திய மாமிருவர் நீதியொடுந் - தத்தம் 132

விமான மிசையேற விஞ்சையர் கந்தர்ப்பர்
உமாபதியென் றேத்தி உவப்பக் - குமாரியென 133

அத்தியை யும்பாவை யாக்கினார் பண்பாடி
முத்துச் சிவிகையின் மேல் முன்னடக்க - எத்திசையுங் 134

[போற்றும்அப் பூதி புதல்வன் அராவிடமே பாற்றும்அவர் தேவாரம் பாடிவரச் - சாற்றும்]

கராநுங்குஞ் சேயினையுங் காமித் தழைத்தார்
இராசசின்ன மோடுற் றிறைஞ்சத் - தராபதிமுன் 135

வாம்பரிய தாக வனநரியைக் காண்பித்தார்
காம்பினர வாகனத்(து) அணுக - ஏம்பலுடன் 136

தந்தையிரு தாள்தடிந்த சண்டேசன் கேடகத்தில்
வந்தருள அன்பர் வணங்கவே - எந்தை 137

ஆதிசைவக் குருமார் முதலியோர் ஏத்திச் சூழ்ந்துவரல்

பரவைமனைக் கேகப் பரவுதமிழ் வேந்தன்
மரபதனி லுதித்து வந்தே - குருவடிவு 138

கொண்டு சிவாயநகர்க் கோயி லிடத்துறையும்
பண்டிதராம் வாட்போக்கிப் பண்டிதரும் - எண்டிசைமேற் 139

செல்லும் புகழ்சேர் தியாகவிநோ தக்குருவுஞ்
சொல்லும் பழைய சுருதியுணர் - வல்லமையான் 140

மண்டலஞ்சேர் மாணிக்க வாசகநற் றேசிகரும்
முண்டகனேர் தட்சணா மூர்த்தியெனும் - பண்டிதருஞ் 141

சைவ சிவாகமத்துத் தாநிகராம் வேதியரும்
தெய்வ மறையோரும் திரண்டேத்த - வையமெலாம் 142

பேரான கீர்த்திப் பெரியோர்பாற் கம்பையனும்
சீரான செங்கோல் செலுத்திவரப் - பாரோரும் 143

விண்டாரும் மாதவரும் வேலா யுதமுகிலும்
பண்டார நாமம் பரித்தோரும் - கொண்டாடிக் 144

கொத்தடிமை யானோருங் கோயிற் கணக்கருடன்
உத்தமமாங் கூல முடையாரும் - நித்தியமும் 145

கல்லுங் கரையக் கனிந்தவிசை பாடிவரும்
முல்லை நகையார் முதல்அடிமை - எல்லவரும் 146

திருச்சின்னங்கள் கட்டியங்கூறல்

சூழ்ந்து வரவே சுருதிமுடிக் கெட்டாமல்
வாழ்ந்தசிவன் வந்தான் வழிவிலகித் - தாழ்ந்தகுறை 147

தீரவே நாளுந் தினகர்சகா யன்வந்தான்
ஆரியன்முன் னான அரன்வந்தான் - பார் அறிய 148

வந்தமா ணிக்க மலைக்கொழுந்தன் வந்தான்மெய்
தந்த முடித்தழும்பன் றான்வந்தான் - எந்தமெதிர் 149

சென்றபிரான் வந்தான் சிவாயநக ராதிவந்தான்
கொன்றையணி பார்வைக் குளன்வந்தான் - என்று திருச் 150

மகளிர் குழாங்கள்

சின்னங்கள் ஆர்ப்பத் திகந்தமட வாருடனே
மன்னுங் ககன மடந்தையருங் - கின்னரர்தம் 151

கன்னியரும் நாகரிளங் கன்னியரும் விஞ்சையர்கள்
கன்னியரும் சித்தரிளங் கன்னியரும் - மின்னனைய 152

மாநிலமின் னார்தம் வடிவமெடுத் தேகனக
மேனிலை மாடத்து மேடையினும் - வானளவு 153

மண்டபத்தும் சாளரத்தும் மாளிகையும் சூளிகையும்
விண்டடவு கோபுரத்தும் மெய்த்ததேப் - புண்டரிக 154

வல்லி யனைய மடவார் மகமேரு
வில்லி யெதிரேபோய் விரகமதாய் - நில்லுமென 155

ஓடுமணித் தேர்மேல் உமாபதியைப் பார்த்(து) எவருஞ்
சூடுமலர்க் கையாற் றொழுதிடுவார் - தேடரிய 156

மாணிக்கக் கூத்தரே மாரா வளிமுத்தங்
காணிக்கை யோசொற் கடிதெண்ணீர் - பூணுற்ற 157

பச்சை வடிவம் பசலை நிற மாமெமைப் போல்
இச்சையிற்பூண் டீரோ வெனக்கேளீர் - கச்சரவப் 158

பாம்பை யணைவீர் பகருமல்குற் பாம்பணையச்
சோம்ப லேதென்று துதித்திடீர் - வீம்பின் 159

விட நுகர்வீர் காம விடமகற்ற வேறோர்
இடமறியீ ரோவென் றிசையீர் - சடையிலொரு 160

மானைச் சுமந்தீர் மடமா னனையார்முன்
ஏனிச்சை யில்லார்போல் எய்தினீர் - போன 161

பொசிவாசி கொள்வீர் புனலுகவே கண்கள்
கசிவாசி தீரக் கருதீர் - இசையும் 162

முலைத்தழும்பு பூண முயங்காமல் வீணே
தலைத்தழும்பு பூண்பாரோ சாற்றீர் - கலைச்சியெதிர் 163

மெய்வளையக் கூடலிலே மேவி வளை பகர்வீர்
கைவளையை வாங்கக் கடவீரோ - பொய்வளையா 164

வாட்போக்கி யானால் மதன்போர் களையாமல்
நாட்போக்கி வீணை நவிற்றினீர் - தீட்பினுடல் 165

வெண்ணீற தாக வெளுப்பான தென்மடவார்
கண்ணேறு பட்டதோ காணென்பார் - புண்ணேறி 166

எய்த்தாரைக் காப்பீ ரெனவந்தும் எம்மிடத்தில்
கைத்தாய ரால்வீணை கற்பித்தீர் - பைத்த 167

பணியா பரணம் பதைக்க வந்தார் மாலால்
தணிவாரோ வென்று தளர்வார் - மணிவண்ணன் 168

கண்ணிடந்தும் நெஞ்சங் கனியா (து) இருந்தவர்க்குப்
பெண்ணிடத் (து) ஏதன்பென்று பேசுவார்-விண்ணவர்க்கு 169

மெய்ப்பாக வேம்பை விரும்புவார்க் குக்கரும்பு
கைப்பாகு மோவென்று கண்பிசைவார் - எய்ப்பை 170

அறியார் கரத்தூசல் ஆட்டுவர்போல் ஓடிப்
பிறியார் அவரிலொரு பேதை - வெறிகமழும் 171

பேதை

கற்பகப்பூங் காவீன்ற காமக் குருத்தெனலாம்
அற்புதமாய்த் தோன்றும் அபரஞ்சி - தற்பரனைக் 172

கண்டுவலஞ் செய்யக் கருதுமுகி லைக்குறித்து
மண்டலமே லாடா மடமஞ்ஞை - தொண்டருக்குள் 173

நேசம் பெருக நிமலருல காம்பரத்து
வாசந் தொடுக்கா மலர்க்கண்ணி - மூசு நிழற் 174

சாலை நிகர் ரத்னா சலக்குருவின் அங்கைசேர்
மாலை புகுதா மருக்கொழுந்து - கோலமதன் 175

தேடா வசந்தத் தியாகரா சர்க்கெதிர்போய்க்
கூடா (து) உலவும் குளிர்தென்றல் - பாடாமுன் 176

பாவலர்க்கே செம்பொனிடு பாறையிடஞ் சென்றபிரான்
ஆவற் கடல்படியா ஆரமுதம் - யாவர்க்கும் 177

தாயிற் சிறந்தார்தன் தாயகமாய் வந்துதித்த
வேயிற் பிறவா விளைமுத்தம் - நாயனார்க் (கு) 178

ஆட்டுபுனற் காவேரி யாற்றின் அறலெனவே
கூட்டி முடியாக் குழலினாள் - மேட்டிமையாய்ச் 179

சம்பந்த னோடெதிர்த்தே தாழ்ந்துகழு வேறு தற்கு
வெம்பந்த மானோர் விரதம்போல் - எம்பிரான் 180

தத்துவநீத் தோன்மகத்தில் சாரும் சுரர்வீர
பத்திரன்முன் ஏந்தும் படையெனவும் - அத்தனார் 181

எல்லாம் ஒருவடிவாம் என்னக் கொலைசிறிதும்
கல்லா நிலைபடைத்த கண்ணினாள் - செல்லாகத் 182

தாங்குசடை யோன்உகந்து தானிருக்கும் கம்பைநதி
மாங்குயிலும் ஒவ்வா மழலையாள் - ஈங்(கு) அமலன் 183

சேல்வாய்த் திடாதமரும் தெய்வங்கள் போல் இறந்தே
ஏல்வாய் முளைக்கும் எயிற்றினாள் - மால்வாய்வைத் (து) 184

உண்டபகி ரண்டமதாய் ஓங்கும் திருக்குறிப்புத்
தொண்டர்க்(கு) அடங்குந் துணைக்கரமாய்த் - தெண்டிரையுள் 185

மோது சுதைக்குடமாய் முன்வந் தெழுந்தினிமேல்
சூதுபெறத் தோன்றும் துணைமுலையாள் - தாதுசெறி 186

செந்தா மரைமலரும் செந்தீபம் ஆமெனவே
நொந்தாங் (கு) அணுகி நுவலுவாள் - நந்தாத 187

அன்னையரை நோக்கி அணிபுனைய வேயெனக்கு
வன்னமுலை காட்டுமென மாழ்குவாள் - தன்னுருவம் 188

நேராய் அணுகு நிழலையொரு பாங்கியெனச்
சீரார் மனைபுகுந்து தேடுவாள் - பார்ஏழும் 189

மின்னும் மணிக்கிரணம் மிக்க மணி ஆடரங்கில்
தன்னைநிகர் ஆயம் தழுவவே - பொன்னுமணி 190

யால்அமைத்த சிற்றிலிடை ஆர்க்குமணற் சோறருந்த
வாலமதி யால் விருந்தை வாவெனுமுன் - சீலமிகும் 191

அண்ட கடாகத் தவர்முழக்கும் மானதஞ்சேர்
புண்டரிக வேதன் புகல்முழக்கும் - பண்டை 192

மறைமுழக்கும் பேரி மணிமுழக்கும் வானோர்
முறைமுழக்கும் முன்னே முழங்க - நிறைதவத்தால் 193

கோலும் சுரும்பார் குழல்பால் இருந் (து) எவரும்
மாலும் தெரியா வடிவத்தான் - சூலப் 194

படையான் விடையான் பவளச் சடையான்
அடையா தவர்பால் அடையான் - இடையிலும்பர் 195

அத்தி தரித்தான் அதிரநகு வெண்டலையான்
தத்தி முயலகனைத் தான்மிதித்தான் - கொத்தவரும் 196

கொக்கிறகு சூடினான் கூர்மத்தின் ஓடணிந்தான்
மிக்கமாணிக்கமலை மேவினான் - திக்கெலாம் 197

கொண்டாடும் பன்னிருவர் கூட்டம் பணிசெய்யக்
கண்டோர் சரணங்காண் என்னவே - விண்தாவு 198

வெற்றிமணித் தேர்மீதில் மேவுதலும் ஈங்கிவளும்
சிற்றில் ஒழிந்து தெருவணுகிச் சுற்றிவரும் 199

அன்னையர்போல் தானும் அடியில் பணிந் (து) அமலன்
பொன்னுருவை நோக்கிப் புதுவிருந்தாய் - என்னருகில் 200

வாராரோ இந்த மலைக்கொழுந்தர் தாம் எனலும்
ஆரா வமுதே அமரருக்கும் - பேரான 201

விண்விருந்து செய்தார் விடைக்கலது நீசமைத்த
மண்விருந்து தேடி வருவாரோ - கண்விருந்து 202

செய்வதே போதுமெனச் செம்பொன்மணித் தேர்கடவி
மைவளரும் கண்டர் மறைந்திடலும் - பெய்வளையைத் 203

தாங்கியகைத் தாயர் தமதகம்புக் கார்மதனும்
பூங்கணையை ஏவாமல் போயினான் - பாங்கொருத்தி 204

பெதும்பை

மன்னும் எழிற்பெதும்பை வைகறையில் பக்குவமாய்ப்
பன்னுமுகை யன்ன பருவத்தாள் - முன் உதய 205

வெய்யோன் அகலநிலா வேட்டெழுமுன் பார்க்கின்ற
மையார் சகோரத்தின் வண்மையாள் - தொய்யாத 206

சித்தசன் செங்கோல் செலுத்தற் (கு) இளவரசாய்
வைத்தபிடே கஞ்செய் வனப்பினாள் - நித்தியமும் 207

போற்றியே தான்வளர்த்த புட்களினால் காமரசம்
தோற்றியே சொல்லும் துழனியாள் - சாற்றியசெம் 208

பொன்னா பரணம் புழுகுசவ்வா (து) இன்னதெனத்
தன்னால் அறியத் தகும் வாயாள் - முன்னான 209

கும்பமுலை மாதர் குறிப்பறிந்து கூடுவள் போல்
விம்பவிதழ் நோக்கும் விரகினாள் - நம்பரால் 210

வந்தமுனிக் (கு) அஞ்சி மறைந்தெட்டிப் பார்க்கின்ற
விந்த மொசித்தெழுந்த மென்முலையாள் - செந்தமிழ் நாட்(டு) 211

ஆடலார் ஏவுமுகில் அன்று நான் மாடமேற்
கூடல்போற் கூடுங் குழலினாள் - நாடியினி 212

மேலமலன் ஏவ வெளியிலுறா ஆழியெனக்
கால நிலையறியும் கண்ணினாள் - பாலனைய 213

கன்னியிளம் பேட்டெகினக் காலின் நடைசிறிது
தன்னடையிற் காட்டும் தகைமையினாள் - தென்னவர்கோன் 214

ஏற்கைமணம் நாட எழுந்தென்றல் வந்துலவிக்
காக்க நறைகமழ்பூங் காவனத்தே - தீர்க்க 215

மயில்கண்டு சாய மழலைக் (கு) ஒதுங்குங்
குயில்கண்டு கூவக் குலாவி - அயல்வண்டும் 216

வாஞ்சித் (து) அணுக மணிக்கிரணம் ஊடாடும்
பூஞ்சித்ர மண்டபத்தில் போய்ஏறிக் - காஞ்சிபுனை 217

சிற்றிடை ஆயஞ் செறிய இருந் (து) அதிலோர்
பொற்றொடியை நோக்கிப் புரிகுழலே - வெற்றிபெற 218

ஆடும் கழங்கினை நாம் ஆடுதுமென் (று) அங்கையினால்
நாடும் கிரண நவமணியும் -தேடி 219

எடுத்திமையோர் வேள்வி இருந்த வலன் அங்கம்
தடுத்தமணி ஈதெனவே தள்ளி - அடுத்துவளர் 220

மாமலைமா ணிக்க மலையதனில் ஏழுமணி
தாமலையா (து) ஏந்திச் சராசரமும் - காமுறவே 221

ஒன்றென் (று) அகில உகாந்தத் தினுங்கிளைத்து
நின்றபெரு வேம்பின் நிழல்பாடி - ஒன்றும் 222

இரண்டென் (று) இருவகையாய் எய்து பிரமத்தி
பரந்ததனை வீட்டினது பாடி - இரங்குதற்கே 223

மூன்றென்று நாவலர்சொல் முத்தமிழ்கேட் (டு) அம்பொனிடத்
தோன்றிய பொன்பாறைத் தொழில்பாடி - அன்றவற்கு 224

நாலென்று நாலாய் நகுபதமும் ஈவமினி
மேலென்று நின்ற விதம்பாடிச் - சீலமுடன் 225

அஞ்சென்று மேனாள் அமைத்ததொழில் ஆற்றுதற்கே
பஞ்சகர்த்தா ஆன பயன்பாடி - இன்சொல்லால் 226

ஆறென்று காவேரி யாறதனை யேவிரும்பும்
மாறிலா நேச வளம்பாடி - வீறுடனே 227

ஏழென்று (று) அடியார் எழுபிறப்பும் மாற்றியருள்
ஆழியென வைகும் அவைபாடித் - தோழிமார் 228

முன்னமே ஆட முகமலர்ந்து போதுமினி
அன்னமே என்னும் அளவிலே - சொன்னநவ 229

கோட்டையான் அன்பர் குறிப்பின் நிலையகழான்
தாட்டியவான் விண்கொத் தளத்தினான் - காட்டியசீர் 230

நீங்காத கொம்மையான் நீண்ட அலங்கத்தான்
ஓங்காரம் மூழ்கலார் உட்படியான் - பாங்கான 231

திண்ணகத்தான் ஞானத் திருவாச லான்சலதிக்
கண்ணகத்தான் ஒல்கு கபாடத்தான் - எண்ணரிய 232

கோபுரத்தான் ஆடுங் கொடியந் திரமுடையான்
தாபதற்குள் எட்டாத் தடமதிலான் - மாபுலவன் 233

முற்றுமாள் ஆவணத்தான் முத்திதர மறுகான்
சற்று நயந் தோரைத் தான்முடுக்கான் - பற்றிலர்முன் 234

சந்தியான் ஓதும் சதுக்க மனையிலக்காய்ச்
சிந்தியான் பாகத் தெருவையான் - வந்தியார் 235

மாடத்தான் எல்லாம் மருவி வளரண்ட
கூடத்தான் தென்சிவதைக் கோயிலான் - நாடித்தான் 236

இம்பர் அணுகும் இலகுமணித் தேர்கடவி
உம்பரொடு மேவ உடனெழுந்தே - அம்புயநேர் 237

கைக்கழங்கை மேலோர் களங்கம் எனவெறிந்தாள்
மெய்க்களங்கம் நீத்தமதி விம்பமெனத் - திக்களந்த 238

மூர லொடுமடவார் முன்போய்த் தொழத்தொழுதாள்
வேரல் மணிமுகத்தாள் விண்மணியை - நேரலர்க்கே 239

சேயான தெய்வச் சிகாமணியை அன்பரைக்
காயா (து) அருள் பொழியும் கண்மணியை - வாயால் 240

வழுத்தினாள் மாணிக்க மாமணியின் மார்பில்
அழுத்தமுலை போதாதென் (று) ஆய்ந்தாள் - விழுத்தகைய 241

அன்னையரை நோக்கி அழகுமணித் தேர்மீதில்
என்னையிவர் பாகத் (து) இருத்துமென - முன்னம் 242

மலையா னவர்க்கு மலைகொடுத்த மான்போல்
நிலையா னவளோ நிகழ்த்தாய் - குலமயிலே 243

என்பாரை நோக்கிநீர் ஏதறிவீர் சென்னியிலோர்
மின்பாரீர் என்று விளம்புதலும் - முன்பாகச் 244

சென்றமணித் தேரின் சிரோமணியைப் பார்த்தெவரும்
ஒன்றியபே ராசை யுடையீரே - இன்றெமது 245

கையதனை நீங்காத கன்னிக்கும் பேராசை
செய்யவோ வந்தீர் சிவனேநீர் - துய்ய 246

வடிவாள் இடத்திருந்தும் வாளுருவி வெட்ட
முடிதாழ்த் திருந்த முறையோ - அடலைமிகுங் 247

காடேறிக் கூத்தாடிக் கண்ட விடநுகர
மாடேறி யோடு மதியோதான் - கோடேறி 248

ஏசு கபாலத் (து) இரந்தடியான் சேயிறைச்சி
கூசியிடா துண்ணக் குறித்ததோ - காசினிமேல் 249

என்சொல்வோ மானாலும் எத்தவே கற்றீரென் (று)
இன்சொலா ளோடுமனைக் (கு) எய் தினார் - வஞ்சமதன் 250

கண்டுமறி யாதவன்போல் கைக்கரும்பை உள்ளடக்கி
விண்டகல்வான் போலயலே மேவினான் - மண்டலத்தில் 251

மங்கை

எல்லா உயிர்க்கும் இறையைத் திறைகொள்ள
வல்லாள் எனவுதித்த மாமங்கை - உல்லாச 252

மங்கையர்கட் (கு) எல்லாம் மனோரதமாய் உற்பவித்த
செங்கமலம் மேவாத் திருமங்கை - இங்கிதத்தால் 253

வீறும் பெருமிதமும் மிக்ககல்வி நன்னலமும்
கூறுமநு ராகக் குறிப்பினாள் - மாறிலாக் 254

கைவலனோர் பஞ்சாக் கரமடுவில் வந்துதித்த
சைவலத்தை ஒப்பான தாழ்குழலாள் - மெய்வலத்தால் 255

அன்றிருபால் ஆன அமுதம் விடம் இரண்டும்
இன்றொருபால் உற்ற (து) எனுங்கண்ணாள் - கொன்றையணி 256

மாலையான் கூத்தில் மருவுவான் தாளத்தின்
கோலம் அனைய குவிமுலையாள் - ஞாலமெல்லாம் 257

சேமித் திடமருட்டும் திவ்வியம்போ லேயிளையோர்
காமித் திடநடக்கும் காட்சியாள் - வாமத்தின் 258

அந்தரங்க மான அடல்மதன நூல்படிக்க
வந்தரங்கில் ஏறி வயங்குவாள் - முந்தி 259

மறம்பொசிந்த பார்வை வகுக்காமுன் காமம்
புறம்பொசிந்து காட்டும் புதியாள் - நிறம்பொசிந்து 260

வீசு கதிர்பரப்பி விண்ணும் புவியுமொரு
தேசு பெறமணியாற் செய்குன்றில் - நேசமுடன் 261

வந்தபல மாதர் வளைய நடுவிருந்தே
அந்த மிகுமதுரை அம்மானைச் - சொந்தமதாங் 262

கூட்டுத் தலையாய்க் கொடுத்ததலை ஈதெனவே
ஆட்டுத் தலைபடைத்த அம்மானை - வீட்டி 263

அலைக்கே வலைவீசும் அம்மானை நாளும்
மலைக்கே துறையாம் அம்மானை - நிலைப்பாய் 264

அட்டி புரிபாச்சி லாச்சிரமத் தேபுணரக்
கொட்டமிகு மானைக் கொடுத்தருளும் - செட்டியெனும் 265

அம்மானை யும்படைத்த அம்மானைப் பாடியிவள்
அம்மானை யாடும் அளவிலே - பெம்மான் 266

கரதலமார் சூலன் கபாலன்கல் லாலன்
வரதன்நா கீசன் மகேசன் - பரதநவில் 267

பாதன் அபேதன் பழைய மறைக்கீதன்
நாதனுயர் வேதாந்தன் நாதாந்தன் - போதமிகும் 268

பன்னிருவ ரீசன் பகரு மலைவாசன்
மின்னிருவர் மோகன் விடைப்பாகன் - மின்னும் 269

அமலனருள் நேயன் அடியர் சகாயன்
விமலன் அரூபன் விரூபன் - திமிலமிகு 270

கூத்தாடல் கொள்ளுங் கொடிநெடுந்தேர் மீதுறலும்
பார்த்தாடல் விட்டிவளும் பாங்கணுகிப் - பூத்தூவி 271

வந்தித்தாள் அங்கே மதிமருட்ட வேமதனும்
சந்தித்தான் அந்தச் சமையத்தே - முந்தித்தான் 272

மாதா யரைப்பார்த்து மற்றிவர்தாம் மங்கையரை
ஏதால் அணைவார் இசையுமெனக் - கேதாரி 273

மங்கைக்கே மோக மயலகற்றி னாரதுவுஞ்
செங்கைப்பூ வாலே தினம்பரவிச் - சங்கையுடன் 274

வாழ்த்தியிடுங் கன்றாப்பூர் மங்கைக்கே அன்றுசெவி
தாழ்த்திருந்தார் அந்தத் தகைமையும் - வீழ்த்தி 275

வருமுத் தரகோச மங்கைக் கயலே
தருபட்ட மங்கை தனக்கும் - நிருமித்த 276

வண்ணமும் நீகேட்டு மங்கையே யானாலுன்
எண்ணம் முடித்தி எனலுமெதிர் - நண்ணும்அரன் 277

ஆழிமணித் தேர்கடவி ஆங்ககன்றான் அவ்வளவில்
வாழி மதன்பகழி மாரிபெய்ய - ஊழிநாள் 278

வந்ததோ என்ன மயங்கிமட வாருடனே
இந்துதோய் மாடத் தினிற்புகுந்தாள் - சந்ததமும் 279

மடந்தை

மோகரச தாழிமுளைத் (து) அதனி லேகனிந்த
நாகரிக யோகம் நவில்மடந்தை - வாகுடனே 280

பின்னிவிட்ட கூந்தல் பிறையுந் திகழுமுகில்
மின்னிவிட்ட தான வினோதத்தாள் - தன்னுதலில் 281

இட்டபொட்டை நோக்கி இளையோர்கள் வந்துதினம்
வட்டமிட்டுப் பார்க்கும் வனப்பினாள் - துட்டமதன் 282

கைச்சிலையில் பூட்டுங் கணையெனவே வையமெலாம்
நச்சி அளக்கும் நயனத்தாள் - உச்சிதமாம் 283

போர்க்குமதன் ஏந்திப் புடைவிதிர்க்குங் கேடகநேர்
காக்குமணித் தோடிட்ட காதினாள் - சேர்க்கும் 284

புதியமணி மூக்குத்தி பொற்குமிழின் வந்து
பதியுநிலா வீசப் பயில்வாள் - மதியனைய 285

முல்லைநகை யீன்ற முளரிக் கலங்கரித்த
மெல்லிதழ்ச்செவ் வாய்மலரின் மேன்மையாள் - வல்லபஞ்சேர் 286

புட்குரல்கள் ஓரெட்டும் பூணா பரணமெனக்
கட்குலவு பூகநேர் கந்தரத்தாள் - உட்கனிவால் 287

எம்பிரான் நாமம் இசைத் தபசுங் கிள்ளைசேர்
செம்பொனார் சூடகத்தின் செங்கையாள் - பம்பிப் 288

புடைபரந்து விம்மியே பூரித் திறுகித்
தடையிலா (து) ஓங்கும் தனத்தாள் - மடமையற 289

ஓங்கும் இளைஞர் உயிர்சுழிக்க வேசுழித்துள்
வாங்கியிடும் உந்தி வலஞ்சுழியாள் - தாங்கரிய 290

காமநூல் அன்ன கனகமணி மேகலையின்
சேமநூல் பூணுற்ற சிற்றிடையாள் - தாமரையின் 291

வட்டமதாய் ஆடரவ வாயென வேயுலகைத்
தெட்டியிடும் அல்குற் சிறப்பினாள் - கட்டுபசும் 292

பொற்கதலி நேராய்வெம் போர்மதனன் மண்டபஞ்சேர்
சொற்கவினும் மோகத் துடையினாள் - கற்கடக 293

மேலாம் வராலடியில் மின்னுமணி நூபுரத்தின்
பாலான செம்பொற் பதாம்புயத்தாள் - மாலாதி 294

இந்திரரும் மோகித் (து) இனிதிறைஞ்ச வாள்விதிர்க்குஞ்
சந்திர காந்தத் தலத்தினிடை - வந்திருந்தே 295

ஆங்கு மணிமகதி யாழ்வீணை மீட்டியெதிர்
பாங்கியர்பண் பாடப் பரவசமாய்ப் - பூங்குழலீர் 296

விண்ணுக்கும் மண்ணுக்கும் வேறாம் உலகுக்கும்
கண்ணுக் (கு) இனிதான காவலரை - எண்ணித்தான் 297

சொல்லுவீர் என்னத் துணைவிக்கா ஈமத்தைப்
புல்லுவான் ஆண்மை புகலவோ - இல்லவள் தன் 298

மூக்கிழந்தும் வாழ்தன் முகமிழந்தும் மோகிக்கும்
வாக்கிளையான் மேன்மை வகுக்கவோ - நோக்கரிய 299

அங்கமெலா மாதர் அழகுகுறி பூண்டதனாற்
பங்கமுறு வானைப் பகரவோ - செங்கைபோய் 300

இன்னமுநாம் மேவி யிடக்குளிகை யாய்த்திரட்டிப்
பன்னியைவைத் தான்மகிமை பன்னவோ -முன்னியற்றும் 301

மாமகத்தில் தேய்ந்தானை மன்னியபல் போனானைத்
தாமுரைக்க லாகுமோ தாரணியில் - காமமிகும் 302

பெண்ணுக்கும் ஆணுக்கும் பேரழகன் என்பதுதான்
எண்ணிற் சிவனே காண் ஏந்திழையே - கண்ணுக் (கு) 303

இனியவாட் போக்கியான் இன்பநலம் எய்தக்
கனிவுசெய் யாயெனலும் காலால் - முனியுநமன் 304

ஆகத்தி லேயுதைத்தான் அண்டர் தமைச்சிதைத்தான்
மாகத் தெழுந்தான் மலைக்கொழுந்தான் - நாகத்தின் 305

பூசை உகந்தான் புரிசடையின் நீர்முகந்தான்
ஆசை யுடையான் அருட்கொடையான் - தேசு 306

பெருங்கனகத் தேர்மேல் பிரான் பவனி எய்த
இருமருங்கி னாரோடும் எய்தி - விருந்தினையே 307

சாதிக்கும் பாத சரோருகமும் மாமுடியும்
சோதிக்கு மாறு தொழுதிட்டாள் - நீதிக்குள் 308

நீங்கா நிலையீர் நிறைகவர்வ தென்னெனவே
பூங்காவி பாயப் புழுங்கினாள் - பாங்காக 309

ஆறு தலையுடையீ ரானால் இனியெனக்கோர்
ஆறுதலைச் சொல்ல லாகாதோ - வீறுடனே 310

சார்ந்தாரைக் காத்தவரே சஞ்சலத்தால் வந்தருகு
சார்ந்தாரைக் காக்கத் தயவிலையோ - நீந்தாமல் 311

முன் பார்த்த கண்ணால் முனிமதனை இன்றடக்கப்
பின்பார்த்தல் ஒண்ணாதோ பேசுமென - அன்பால் 312

பரவும் அளவில் பராபரன் பொற்றேரும்
தெருவகல மாதர் செறிந்தே - உருவிலிகைத் 313

தூற்றும் பகழித் தொடைமடக்கி உள்வாங்கப்
போற்றுமணி மாளிகையில் புக்கினார் - ஆற்றலுடன் 314

அரிவை

மேனாள் அமைத்த வினோத வடிவமெலாந்
தானாதிக் கந்தான் தனிசெலுத்த - மானார்தம் 315

அங்கமெலாம் நோக்கி அலங்காரத் தூரியத்தைச்
செங்கையிலே ஏந்தித் திசைமுகத்தோன் - சங்கை 316

பிதிரா (து) எழுதிப் பிரமிக்க விட்ட
அதிரூப மான அரிவை - மதிதிறம்பா 317

வேதன் முதலனந்த விண்ணவரும் பல்லுயிரும்
பாதத் (து) அடங்கப் பரிந்தொடுக்கி - நாதனார் 318

ஏகீ பவித்தாடும் எல்லை யிருட்பிழம்பின்
வாகீன் றனைய மலர்க்குழலாள் - ஆகாயம் 319

முற்றும் அளவாக முன்னோன் வளைத்திட்ட
பொற்றனுவே அன்ன புருவத்தாள் - வெற்றிபெறச் 320

சங்கார காலந் தனித்திருந்து தூண்டுமரன்
உங்கார மேபோன் றொளிர்கண்ணாள் - மங்காத 321

முப்புரமு நீறாக முன்னகைத்தார் மூரலெனச்
செப்புரமே செய்யுஞ் சிறுநகையாள் - துப்புரவு 322

மூட்டுபகி ரண்ட முகட்டையிடித் தேபொருப்பை
வாட்டும் புளக வனமுலையாள் - தீட்டியபொன் 323

தூரியத்தில் வாயாத் துடியைத் துடியெனவே
வாரியற்கை பூண்ட மருங்குலாள் - நீரணியைப் 324

பூசித் திடநேர் புகழ்சே டனும்பதறி
ஆசித் திடமருட்டும் அல்குலாள் - தேசத்தோர் 325

பூவுலகம் என்பதனைப் பூவாம் எனச்செறிந்து
பாவுமர விந்தநேர் பாதத்தாள் - யாவருக்கும் 326

அற்புதம தான அனங்கள் அதிகாரம்
கற்பிக்கும் மோகக் கருத்தினாள் - பொற்பமரும் 327

காமா லயம்போல் கனகமணி மண்டபத்தில்
மாமாத ரோடு மகிழ்ந்திருந்தே - பூமானாம் 328

மாணிக்கச் கூத்தனைநாம் மைய லிடைப்படுத்தப்
பாணித் (து) உபாயம் பகருமெனப் - பேணிப் 329

பொசிவாசி கொள்வார்க்குப் பூவையர்க ணீரே
விசுவாசம் என்றும் விடாதே - அசைவிலா 330

வேதண்டமும் பணியும் வெண்பிறையும் அங்கமதாய்த்
தீதண்டா மேனித் திருவழகை - மூதண்டம் 331

காணநீ காட்டினால் காமித் (து) அணைவரெனப்
பூணிளையார் தேற்றும் பொழுதவளும் - நாணினால் 332

மேருச் சிலைவளைத்தார் வேதத் தலைகிளைத்தார்
பாருக் கிடைமுளைத்தார் பாம்பணைந்தார் - ஆரியற்கு 333

முத்தி கொடுத்தார் முனியா(து) எனையடுத்தார்
நித்த விதான நிதானத்தார் - பத்திமையால் 334

வாம்பரித்தேர் தூண்டி வரலுமட வாருடனே
பூம்பரித்தேர் அன்ன புரிகுழலாள் - சாம்பசிவன் 335

கண்பட்டாற் போதுமெனக் கைவசம தாக்குதற்கே
பெண்பட்டங் கட்டிப் பிறப்பட்டாள் - பண்பட்ட 336

பின்னணியாய்க் கூந்தல் பிறழஅல்குல் தேரதனை
முன்னணிய தாக்கி முலையானை - அன்னவர்பால் 337

தாக்க மதமீறித் தானை கொடுநடந்து
தாக்கினாள் அந்தச் சமருக்கே - நோக்கினாள் 338

மன்மதனைக் காய்ந்தார் மலைப்பரோ செங்காட்டில்
பின்மகவைக் கொன்றார் பிதற்றுவரோ - வன்மனத்துச் 339

சிங்கத்தைக் கண்டார் திகைப்பரோ வெம்புலியின்
அங்கத் தினையுரித்தார் அஞ்சுவரோ - பொங்கியெழு 340

மாவைச் செகுத்தார் மயங்குவரோ மானேயுன்
ஆவல் அணிவகுப்பால் ஆவதென்ன - வாவெனவே 341

சொல்லும் அளவில் சுரும்பார் குழலிபுணர்
வல்லவன்தேர் அங்கே மறைந்திடலும் - அல்லென்னும் 342

நீல நெருப்பும் நிலாச்சொரியும் வெண்ணெருப்பும்
மேலணுக வீணே வெளி நின்றாள் - சால 343

தெரிவை

அலங்கார மான அலைகடலில் மெய்யாம்
நலங்காணும் மந்தரத்தை நாட்டி - நிலஞ்சிறந்த 344

பேரழகி னால்கடையப் பெண்ணமுதாய் வந்துதித்த
ஆரமுதம் வாய்மை அறிதெரிவை - சாரும் 345

சுரதரதி கேளி சுகோதயம தானா
விரத வடிவேல் விழியாள் - சரசகுண 346

சல்லாப லீலா சனமருவு சையோக
உல்லாச மானஒயில் நடையாள் - கல்லார 347

மாமாலி காபரண மண்டலஞ்சேர் கொண்டலெனக்
காமா லிகைசேர் கருங்குழலாள் - பூமேவு 348

வச்சிரவேள் சூடா மணிமகுட மாங்கனகக்
கச்சறவே விம்மும் கனதனத்தாள் - பச்செனவே 349

மன்னி உலகை மருட்ட ஒளித்திருந்த
மின்னனைய சூட்சி வெளியிடையாள் - பொன்னவிரும் 350

தட்டெனலாய் ரோம சலாகைக் கெதிர்விரக
நிட்டை புரியும் நிதம்பத்தாள் - அட்டதிக்கும் 351

மோகிக்க வேதன் முடித்த திலோத்தமையும்
தாகிக்க ஊன்றும் சரணத்தாள் - மேகத்தின் 352

வண்ணமால் மோகினி யாய்வந்து வளைந்ததெனக்
கண்ணுதலார் முன்னடக்கும் காட்சியாள் - நண்ணும் 353

அவயவமும் பூணும் அலங்கரித்தே நாளும்
நவவடிவம் ஆன நலத்தாள் - சிவபெருமான் 354

கீர்த்தி புகலெனவே கிள்ளை உரைக்கும்அந்த
வார்த்தை வினவி மலரணைமேல் - மூர்த்தமொன்றில் 355

எண்ணில் உகாந்தம் இறந்ததென வேயிருந்தாள்
பண்ணறிந்து பாவலர்போல் பாடினாள் - அண்ண லெதிர் 356

வந்தருள்வார் என்ன மகரயாழ் கைக்கொண்டு
சந்தவிசை பாடும் சமையத்தே - அந்தரமேல் 357

ஆடு பதத்தழும்பர் ஆரணநூல் வாய்த்தழும்பர்
ஏடெதிரே செல்ல எதிர்வைகை - நாடன்கை 358

மாற்றினால் அன்று வகுத்த திருத்தழும்பர்
கூற்றை யுதைத்த குலைத்தழும்பர் - போற்றுமுமை 359

கம்பா நதியில் கலந்தணைத்த மெய்த்தழும்பர்
உம்பர் முடிவைத் துறைத்தழும்பர் - அம்புவிமேல் 360

எத்தழும்ப ரேனும் இறைவனிடி நாகத்தால்
முத்தழும்ப ரான முடித்தழும்பர் - சித்ரமணித் 361

தேரதனில் ஏறித் தெருவணுக மற்றிவளும்
தாருலா வீணை தனையெறிந்தே - காரிருளில் 362

பாடியபாணற்கே பலகையிட்டார் முன்னணுகி
நாடியே மூவர் நவில்வதற்கே - தேடரிய 363

பொன்னிடுவீர் ஆனால் புளகமுலைப் பொன்னழிக்கப்
பின்னிடுவ(து) என்ன பிரானேமுன் - பன்னுதமிழ்ச் 364

சங்கத்தோன் வேண்டச் சரீரத்தை யேயுதவித்
துங்கத் தியாகியெனத் தோன்றுமக்குச் - செங்கனிவாய் 365

மாதர் மொழிகேளா வகையே(து) எனலு(ம்)மதன்
தீதிலா நோக்கம் சில கொடுத்தே - சோதியாம் 366

மாமணித்தேர் வீதி மறைய இவளுமொரு
பூமருபொன் மாடம் புகுந்திட்டாள் - காமருபூம் 367

பேரிளம் பெண்

பொன்னுதிக்கு மாறுதித்த பொன்னாட்(டு) அரம்பையரும்
பின்னுதிக்க முன்னுதித்த பேரிளம்பெண் - நன்னயஞ்சேர் 368

பாகு மொழியும் பல நடையும் கூட்டியொரு
வாகு புரியும் வசீகரத்தாள் - நாகரிக 369

வல்லி முதிர்ந்து மலரத் தழைந்ததென
மெல்ல அழகெறிக்கும் மெய்யினாள் - சொல்லும் 370

கலையும் மதியும் கலைபற்றி நின்ற
நிலையும் பிரியா நிலையாள் - மலையமெனத் 371

தானே வளர்ந்தால் சரிவும் தகுமெனவே
மேனாள் சரிந்து விழுந்ததோ - நானாவாம் 372

நூலிடையாம் சிங்கத்தை நோக்கி வணங்குதற்கே
கோலி மதயானை குறித்ததோ - மேலெல்லாம் 373

கட்டுண்டு வாராற் கசங்கினமென் றேகவலைப்
பட்டுமுகம் சாய்ந்திருந்த பான்மையோ - எட்டியே 374

கும்பமதாய் வந்த குவலயத்தின் மேல்சீறி
வெம்பியே பார்க்கும் விதந்தானோ - அம்புவிமேல் 375

எல்லா வரையும் இருக்கநாம் அந்தரத்தே
நில்லோம் எனவிறங்கு நீர்மையோ - வல்லான 376

வெற்றி இனி நமக்கு மேவா(து) எனக்குழைந்து
முற்றியே வீழ்ந்த முலையினாள் - கற்றதனால் 377

நேருஞ் சுரத நிலையறிசிற் றின்பமெலாம்
பேரின்பம் ஆக்கும் பெருமிதத்தாள் - ஆரியனைக் 378

காத்தபிரான் கண்ணின் கருணையென வேகுளிரப்
பாத்தசீர் நீங்காத பார்வையாள் - பூத்(து)ஒளிரும் 379

கொம்பெனலாம் எம்பிரான் கோலா கலச்சரணம்
நம்பும் உபய நளினத்தாள் - உம்பர்களும் 380

காணா மலைக்கொழுந்தைக் கண்டு பணியுமதே
பூணார மாய்நினையும் பொற்பினாள் - நாணாமல் 381

ஆறு பருவத்(து) அடங்கா ததுமுடிக்க
வீறுடனே எண்ணும் விபரத்தாள் - மீறியே 382

வீசு நிலா வெறிக்கும் வெண்ணிலா முற்றத்தே
பாசிழையார் தந்த பலகைவைத்தே - காசு 383

பரப்பியே கூடல் பயிலுமணி ஒன்பான்
நிரப்பியே பார்க்கும் நெறியை - விருப்பமிக 384

முன்னதாம் முத்தைவேய் முத்தென் றிடமடவார்
என்னநீ கண்டாய் எனமயங்கித் - தன்னை 385

மறந்து பவளத்தை வாழ்த்தி அரன்வேணி
சிறந்ததென மாதர் செறிந்தே - அறந்திறம்பா 386

மானே தகாதெனுமுன் மாமணியை நோக்கியிது
தேனார் இதழியார் தேகமெனத் - தானே 387

மருவ மனங்கொண்டு மையலுறும் எல்லை
அரிபிரமர் காணா அமலன் - விரிபுவனி 388

ஆண்டவன்மா தேவன் அகில சபைநடனத்
தாண்டவன் நாகேசன் சராசரமும் - பூண்டவனாம் 389

காலகா லன்பரமன் கங்காள ரூபனுயர்
ஆலநீ ழற்பயிலும் ஆனந்தன் - கோல 390

அருணா சலன் நிமலன் அற்புதம தானான்
கருணா கரன்கமலக் கண்ணன் - சரணமலர் 391

வந்திக்கும் நேசன் மகேசன்மார்த் தாண்டனுளஞ்
சிந்திக்கும் யோக சிவவிரதன் - பைந்தொடியாய் 392

பன்னிருவர் பாலுகந்த பன்னிருவர் போற்றியது
பன்னிருவர் வாழ்த்தவே பன்னிருவர் - என்னுடனே 393

என்று வருநடையான் ஏகாம் பரவுடையான்
துன்று பிறைச்சடையான் சூர்விடையான் - கொன்றை 394

மருக்கொழுந்து சூடி மலைக்கொழுந்தாய் நின்றான்
திருக்கொழுந்து வீசும் தெருவில் - அருக்கரென 395

ஆடகத் தேர்மீதில் அணுகுதலும் ஆங்கமைத்த
கூடல் ஒழிந்துபோய்க் கும்பிட்டாள் - நீடுமணித் 396

தேரில் வருவார் திருவுளமுந் தஞ்செயலும்
பாரில் அறியும் படி நினைந்தே - மாரவேள் 397

பூங்கணையும் தென்றற் புலியும் மதிக்குடையும்
மாங்குயிலும் மேன்மேல் வருத்தாமல் - ஓங்கியெழு 398

மந்திரமே தேவே மருந்தே மணியேசொல்
தந்திரமே வாழ்வே தயாநிதியே - எந்திரமே 399

அன்பே பொருளே அருட்கடலே யாவர்க்கும்
முன்பே சிவமே முழுமுதலே - என்பார்முன் 400

பாராமல் இன்னம் பராமுகமே பண்ணுமோ
ஆரா அமுதென் (று) அடிபணிந்தாள் - நேராய்க் 401

கலைக்கொழுந்து சூடக் கருதும்நீர் என்றன்
முலைக்கொழுந்து சூட முயங்கீர் - அலைத்துவரும் 402

காவேரி நீரில் கனிவாம்நீர் என்னதரப்
பூவேறு நீரைப் பொருந்தீடீர் - மூவாச் 403

சுரும்பார் குழலிசைக்கும் சொற்கடவீர் என்வாய்க்
கரும்பார் குழலிசைக்குங் காவீர் - திரும்பிமுகம் 404

பாரீர் எனத்தொடரும் பைந்தொடிமேல் அன்புவைத்துக்
காரீர் எனுமென்னைக் கைவிடான் - ஏரான் அக் 405

கன்னிதுற்கை நாகம் கடவுளர்கோன் காலிரவி
மின்னிடிகொள் மாமுனிவர் வேண்டவே - கின்னரர்தம் 406

மாதர் ககன மடவார் திசைமடவார்
பூதல மின்னாரும் புடைசூழ - ஆதி 407

விரகேசன் தென்சிவதை வீதிதொறும் தேர்மேல்
உரகேசன் போந்தான் உலா. 408

வாட்போக்கியென்னும் இரத்தினகிரியுலா முற்றிற்று

வாழி

வாழி சிவாயநகர் வாட்போக்கி யார்வாழி
வாழிமா ணிக்க மலைவாழி - ஊழியினும்
தொண்டரெலாம் வாழி சுருதி சிவாகமமும்
மண்டலமும் வாழி மகிழ்ந்து.

திருச்சிற்றம்பலம்