உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) முன்னுரை தமிழ் காத்த தெய்வமான மகாமகோபாத்யாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களிடம் நான் தமிழ் பயின்ற நாட்களில் ஓர் ஆர்வம் பிறந்தது. ‘தமிழில் இலக்கியப் பெருமை கொண்ட நெடுங் கதைகள் சில எழுத வேண்டும்’ என்ற எண்ணமே அது. இளங்கோ படைத்த சிலப்பதிகாரக் கதை போல, சிறப்பு மிக்க நெடுங்கதை ஒன்று வசன நடையில் எழுத எண்ணினேன். அதன் விளைவாக எழுந்த நூல்களில் ஒன்றே ‘மருதியின் காதல்’. என் முயற்சிக்கு முதல் பயிற்சியாக, ‘சிவக சிந்தாமணி’யை வசன நடையில் எழுதினேன். 1942-ஆம் ஆண்டின் இறுதியில் ‘சுதேசமித்திரன்’ வாரப்பதிப்பில் அது வெளி வந்தது. இரண்டாவது முயற்சியில், மறைந்த மாகாவியமான ‘குண்டலகேசி’ கதையை, கிடைத்த சில குறிப்புகளைக் கொண்டு ‘என்’ படைப்பாக உருவாக்கினேன். மூன்றாவதாக, சோழ மன்னனுக்கும் நாக நாட்டு அரசிளங்குமரிக்கும் ஏற்பட்ட காதல் வாழ்வைக் கருவாக வைத்து ‘நாக கன்னிகை’ என்ற நெடுங்கதையினை எழுதினேன்; இவ்விரண்டும் மித்திரனில் 1943, 1944-இல் வெளிவந்தன. ‘சுதேசமித்திரன்’ எனக்குத் தொடர்ந்து மேலும் வாய்ப்பளித்தது. அதற்குமேல் என் எண்ணம் விரிவு பெற்றது. முழு நிறைவு கொண்ட ‘சிறந்த காதல் பெருங்கதை’ ஒன்றை உருவாக்க முனைந்தேன். தமிழின் தொன்மை வளத்திற்கு வழிகாட்டியாக ஒரு சுவடு கிடைத்தால் போதும், அதைப் பின்பற்றிப் புதிய படைப்பாக ஒரு நெடுங்கதை எழுதுவது என்று துணிந்து முயன்றேன். அதன் விளைவே இந்த ‘மருதியின் காதல்’. இந்தப் படைப்பு, 1944-ஆம் ஆண்டின் இறுதியில் ‘சுதேச மித்திரன்’ வாரப்பதிப்பில் வெளிவந்தது. 1946-ஆம் ஆண்டில் முடிவுற்றது. 72 அத்தியாயங்களாக, 72 வாரங்களில் வெளிவந்தது ‘மருதியின் காதல்’. சுமார் 16 ஆண்டுகட்குப்பின், இன்று ‘மருதியின் காதல்’ புத்தகமாக, அதுவும் தமிழகத்தின் நன்மதிப்புக்குரிய ‘கலைமகள் காரியாலய’ வெளியீடாக வெளிவருகிறது என்றால் வேறு நான் என்ன சொல்வேன்? எப்போதும் போல் எனக்கு அன்புடன் ஆதரவு தந்து என் ‘மருதியின் காத’லைப் புத்தகமாக வெளியிட்டுள்ள என் மதிப்பிற்குரிய ‘கலைமகள்’ அதிபர் ஸ்ரீமான் நா. ராமரத்னம் அவர்களுக்கு என்றும் மறவாத என் உள்ளம் ஆர்ந்த வணக்கமும் நன்றியும் உரியன. இனி ‘மருதியின் காதல்’ நெடுங்கதையை நான் எப்படி எழுதினேன் என்பதைப்பற்றி விளக்கம் தருவது அவசியம் என்று எண்ணுகிறேன்; ஆசிரியனுக்குள்ள ‘கடமை’யுள் ஒன்று இது என்றே எழுதுகிறேன். என்னுடைய புதிய படைப்பே ‘மருதியின் காதல்’ எனின், அதற்குத் தனிச் சிறப்பு உண்டல்லவா? தமிழில் தொன்மை வாய்ந்த சங்க இலக்கியங்களில் என் படைப்புக்கு இடம் தேடி முயன்றேன்; அவை பொய்யடிமையில்லாத புலவர்களின் வாய் மொழியல்லவா? அக நானுற்றில் பரணர் பாடிய பாடல்களில் ஒன்று என் உள்ளத்தைத் தொட்டது. (அகம். 222) ‘கழார் விழவின் ஆடும்... ஆட்டனத்தி... காவிரி வவ்வலின், மதிமருண்டலந்த, ஆதிமந்தி காதலற் காட்டி, படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதி’ என்ற வரிகள் என் உள்ளம் கவர்ந்ததில் வியப்பில்லையன்றோ! இந்தப் பாடலில் காணும் செய்தி என்ன? ‘கழார் விழவு’ என்றால் என்ன? ஆட்டனத்தியைக் காவிரி வவ்வியது எப்படி? ஆதிமந்தி என்பவள் யார்? இவளுக்குக் காதலனைக் காட்டிய மருதி என்பவள் யார்? இவள் ஏன் கடல் புகுந்தாள்? - என்பன பற்றி ஆராய்ந்தேன். ‘அகத்தில்’ அகப்பட்ட 7 பாடல்களில் பரணர் பாடிய 6 பாடல்கள் இச் செய்தி பற்றிக் குறிப்பிடுகின்றன. (அகம் 46, 135, 222, 236, 376, 396.) அகத்தில் வெள்ளி வீதியார் என்ற பெண் புலவர் பாடிய பாடல் ஒன்றும் (அகம். 45) இச் செய்தியைக் கூறுகின்றது. இந்த ஏழு பாடல்களில் 222-ஆம் பாடல் ஒன்று மட்டும் மருதியைக் கூறுகின்றது. மருதியைப் பற்றி வேறு எந்தச் சான்றும் இலக்கியத்திலோ, வரலாற்றிலோ இல்லை எனத் தெளிந்தேன். ‘காதலனை இழந்த ஆதிமந்தி வருந்துகிறாள்’ என்கிறது 45-ஆம் பாடல். ‘காதலனைத் தேடி வருந்தினாள்’ என்கிறது 46-ஆம் பாடல். ‘காதலன் பிரிவால் ஆதிமந்தி அறிவிழந்தாள்’ என்கிறது 135-ஆம் பாடல். ‘கழார் விழாவில் நாட்டியம் ஆடிய அத்தியைக் காவிரி வவ்வியதால் மனம் கலங்கிய ஆதிமந்திக்குக் காதலனைக் காட்டிக் கடல் புகுந்தாள் மருதி’ என்கிறது 222-ஆம் பாடல். ‘அத்தியைக் கண்டீரோ என்று நாட்டில் - ஊரில் தேடி அவனைக் கடல் கொண்டிலது - காவிரி மறைத்திலது என்று புலம்பிச் சென்றாள் ஆதிமந்தி’ என்கிறது 236-ஆம் பாடல். ‘கழார்த் துறையில் கரிகாலன் காணக் காவிரியில் ஆடிய அத்தியைக் காவிரி வவ்வியது’ என்கிறது. 376-ஆம் பாடல். ‘ஆதிமந்தி வருந்தும்படியாக அத்தியைக் காவிரி வவ்வியது’ என்கிறது 396-ஆம் பாடல். இவ்வளவு பாடல்களிலும் செய்தி ஒன்றே கூறப்படுகிறது. ஒரு பாட்டில் மட்டும் மருதி தோன்றுகிறாள். “ஆதிமந்தியின் காதலன் அத்தி. இவன் கழாரில் கரிகாலன் காணக் காவிரியில் மூழ்கிவிட்டான். அவனைத் தேடி அலைந்தாள் ஆதிமந்தி. கடல் அவளுக்கு அவனைக் காட்டியதும் கடல் புகுந்தாள் மருதி” - இதுவே பாடல்கள் அனைத்தும் கூறும் செய்தி; இவ்வளவே கதைக்குச் சான்றுடைய நிகழ்ச்சி. கரிகாலன் ஒரு பாட்டில் கூறப்படுகிறான். மருதி ஒரு பாட்டில் கூறப்படுகிறாள். மற்ற 5 பாடல்களில் ஆதிமந்தி காதலனை இழந்த அவலம் கூறப்படுகிறது. இந்தச் சிறிய நிகழ்ச்சிக்கு வேறு சான்றுகள் உண்டா எனத் தேடினேன். இந்த 7 பாடல்கள் தவிர, ‘சிலப்பதிகாரத்’தின் ஐந்து வரிகள் தவிர வேறு சான்றுகள் இல்லை. இளங்கோ பாடிய சிலப்பதிகாரத்தில் கற்புடைய மங்கையரைப் பற்றிக் கூறும்போது வஞ்சின மாலைப் பகுதியில் (வஞ்சின மாலை: 10-15) “மன்னன் கரிகால் வளவன் மகன் வஞ்சிக்கோன், தன்னைப் புனல் கொள்ள, தான் புனலின்பின் சென்று, கல் நவில் தோளாயோ என்ன, கடல் வந்து முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழிஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்” என்று கூறப்படுகிறது. இளங்கோவும் அத்தி, ஆதிமந்தி இருவர் பெயரையும் கூறவில்லை. ஆதிமந்தியைக் கரிகாலனுடைய மகளாகவும் அத்தியை, வஞ்சிக்கோனாகவும் கருதினேன். ஆதிமந்திக்கு கடல் அத்தியைக் காட்டியது என்கிறார். மருதியின் பாத்திரமே இல்லை. இளங்கோவும், பரணரும் கூறும் நிகழ்ச்சி ஒன்றே தானோ, வெவ்வேறோ! எவ்விதமாயினும் காலத்தாலும் பெருமையாலும் முதல் வைத்தெண்ணப்பெறும் பரணர் வாக்கில், ‘பாடல்சால் சிறப்பின் மருதி’ என்று கூறப்பட்டவள் இளங்கோவால் மறக்கப்பட்டாள்! ஏனோ அறியேன்? இது புரியாத ஒரு புதிர்! ‘ஆதிமந்திக்குக் காதலனைக் காட்டி, படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதி’ என்று பரணர் கூறுகிறாரே, இதில் என் நெடுங்கதைக்கு அடிப்படைக் கரு இருப்பதாக முடிவு செய்தேன். ஆதிமந்தி பாடியதாகக் குறுந்தொகையில் ஒரு பாட்டு உள்ளது. (குறுந். 31) தன்னை ஆடுகள மகள் என்றும் தன் காதலனும் ஓர் ஆடுகள மகன் என்றும் கூறுகிறாள். அதிலும் குறிப்பாக எதுவும் இல்லை. ‘ஆதிமந்தி-ஆட்டனத்தி’ இருவரைப் பற்றின செய்தியை அகநானுறும் (7-பாடல்கள்) சிலப்பதிகாரமும் (வஞ். 10-15) கூறுவதிலும் முரண்பாடு இருப்பினும், இவ்விரு நூல்களும் ஒரே செய்தியைக் கூறுகின்றன. இவை கூறும் கதாபாத்திரங்கள் ஆதிமந்தி-1, ஆட்டனத்தி-2, கரிகாலன்-3. மருதி-4- என நால்வரே. இந்த நால்வர் தவிர, மற்ற அனைவரும் என்னால் எழுதப்பட்ட நெடுங்கதையில் புதிய அமைப்பில் இணைக்கப்பட்டவர்களே யாவர். பரணர் மட்டுமே ‘மருதி’யைக் கூறுகிறார். மருதியின் நிலையில் ‘கட’லைக் கூறுகிறார் இளங்கோ. மருதியைப் பற்றிக் குறிப்பிட்ட பரணரும் அவளை யாரெனச் சொல்லவில்லை. மேலும் இந்தப் பெயரளவில் கூட வேறு சான்றுகள் இல்லை, மருதியைப்பற்றி. இந்நிலையில் எனக்குள்ள ஆர்வமோ மருதியைக் கதாநாயகியாக வைத்து நெடுங்கதை அமைக்க வேண்டும் என்பது. எனவே, மருதி ஏன் கடல் புகுந்தாள்? அப்படி என்ன சம்பவம் நிகழ்ந்தது? காரணம் என்ன? இந்த மருதிக்குப் பிறப்பு எங்கே? வளம் எங்கே? செயல் என்ன? குணம் என்ன? குலம் என்ன? இனமென்ன? முதியவளா? இளமைப் பிராயத்தவளா? - என்றெல்லாம் யோசித்தேன்; சான்று தேடினேன். பரணர் வாக்கிலும் ஒன்றும் அறிய முடியாமல் ஒரே வரியில் தோன்றி மறைந்த மின்னல் கொடியாளை வேறெங்கும் கண்டிலேன். இவள் ஓர் ‘அநாதை’ என்பது புலப்பட்டது. பரணரே இவளை யாரென்று கூறவில்லையே? ஆனால், அவரால் புகழப்பட்ட பெருமையுடையவளாயிற்றே இவள்? அற்பமானவளா என்ன? இவளே என் நெடுங் கதைக்குக் கதாநாயகியானாள்! பரணர் மீது பழிபோடாமல் நானே இவளை அத்தியின் காதலியாக்கினேன்! அத்திக்கு மருதி என்ன தொடர்பு உடையவள் என்று பரணரும் கூறவில்லை. ‘மருதியின் காதல்’ நெடுங்கதையில் ‘அத்தி’யை ‘மருதியின் காதல’னாக உருவாக்கியது நான் துணிந்து செய்த செயலே. பரணரால் கூறப்பட்ட நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு, அதுவும் யாரென்று கூறப்படாத மருதியைக் கதாநாயகியாகக் கொண்டு நெடுங்கதை எழுதத் தீர்மானித்தேன். அநாதை மருதியை நாட்டியத் திலக மாக்கினேன். கரிகாலன், ஆதிமந்தி, அத்தி - மூவரையும், யாரென்று அறியப்படாத மருதியையும் கொண்டு நெடுங்கதை எப்படி அமைப்பது? என் படைப்பாக ‘உயர்ந்த கதை’ உருவாக்குவதற்கு இதைவிடச் சிறந்த வாய்ப்பு வேறில்லை அல்லவா? இலக்கியத்திலும் வரலாற்றிலும் காணப்படும் பலரையும் ‘மருதியின் காத’லில் பிணைத்திருக்கிறேன். காலத்தால் ஒன்றுபட்டவர்களும் சிறிதே முன்பின் வாழ்ந்தவர்களும் இதில் இணைந்துள்ளனர். அதுமட்டுமோ? இந்த என் நெடுங்கதையில் வரும் குண சித்திரங்களை எதிரும் புதிருமாகச் சந்திக்கி வைத்து, சிந்திக்க வைத்து, சிரிக்கவும் அழவும், சினக்கவும் வெறுக்கவும், வாழவும் சாகவும் வைத்து ஒரு புதிய அமைப்பை உருவாக்கினேன். இது எனக்கே உரிய அமைப்பு - வேறு சான்றுகள் தேடவேண்டியதில்லை. ‘மருதியின் காத’லில் உள்ள குணசித்திரங்களின் சம்பவக் கோவையும் சந்திப்பும், குணவேறுபாடும், சூழ்நிலை விசித்திரங்களும் பல சுவைகளும் என் அமைப்பாகும். வேறு இலக்கியத்திலோ வரலாற்றிலோ இவை காண முடியாதவை. பரணர் பாடிக் காட்டிய நிகழ்ச்சியில் - மருதியைக் கதாநாயகியாக வைத்து நான் அமைத்துக் கொண்ட நெடுங்கதைக்கு ‘ஆதாரபீடம்’ என் கதையேதான்; வேறில்லை. யாரோ, எந்த ஊரோ, என்ன இனமோ, என்ன குலமோ, வயதென்னவோ, வாழ்வென்னவோ, நிலை என்னவோ, நிறம் என்னவோ என்று தெரியாதிருந்த அநாதையான மருதியைத் தமிழ்நாட்டின் பழங்குடியினரான நெய்தல் நிலத்துப் பரதவ இனமாக்கி, அவளை அதிரூபவதியான இளம் பிராயத்தவளாக்கி, நாட்டியத் திலகமாக்கி, அதிமேதையாக்கி, சேர நாட்டுச் செம்மல் அத்திக்கு உடையவளாக்கி, தன் பிறப்பைத் தான் அறியாத நிலையில் கற்பின் செல்வியாக்கி, வீரப்பெண்ணாக்கி, கரிகாலனையே வாதிட்டு வெல்லும் நீதிக் களஞ்சியமாக்கி, முடிவில் காதல் ஜோதியாக்கி, துறவின் சிகரமாக்கி, ‘பாடல் சால் சிறப்பின் மருதி’ யை உயர் கதாநாயகியாக்கித் தந்த தந்தை நான்தானே! எனவே எனக்குள்ள உரிமை அற்பமானதன்று! மருதியைப் போலவே அவளுக்குச் சமமாக, அத்திக்கும் ஆதிமந்திக்கும் கரிகாலனுக்கும் கூடப் பல்வேறு நிகழ்ச்சிகளையும் சுவைகளையும் புதிதாகவே அமைத்து உருவாக்கினேன். சான்று பகர்ந்த செய்தியில் உள்ள அந்நால்வர் அல்லாமல், எத் தொடர்பும் இல்லாத பலரையும் ‘மருதியின் காத’லுடன் பிணைத்தேன். அவர்களில் மிகவும் பிரதானமான பாத்திரம் நல்லடிக்கோன்! இவனுக்கும் மருதிக்கும் என்ன தொடர்பு? இவனுக்கும் அத்திக்கும் என்ன தொடர்பு? இவனுக்கும் கரிகாலனுக்கும் என்ன தொடர்பு? இவனுக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு? என்றாலே போதும். அந்த அளவுக்கு எங்கோ கிடந்தவனைத் தட்டி எழுப்பிக் கொணர்ந்தேன். இலக்கியச் சான்று வரலாற்றுச் சான்று இரண்டாலும் மருதிக்கோ அல்லது இக்கதையில் வேறு யாருக்குமோ எந்தத் தொடர்பும் இல்லாத நல்லடிக்கோனைத் தொடர்புக்கு ஆளாக்கியவன் நானே தான். ‘எண் தோள் ஈசற்கு எழுபது மாடக்கோயில் செய்த சோழன் செங்கணானின் மகன் நல்லடிக்கோன்’ என்கிறது, அன்பில் செப்பேடு. சோழர் வரலாற்றிலே பெயரளவில் காணப்படும் இவனை, எப்படி வேண்டுமானலும், சித்திரிக்கலாம் என்று எண்ணி, மருதிக்குத் தீங்கு செய்பவனாக உருவாக்கினேன். ‘நல்லடி’ என்ற பெயருள்ள இவனை, முதலில் கொடியவனாகவும், முடிவில் நல்லவனாகவும் உருவாக்கினேன்; பல தவறுகளுக்குப் பின் திருந்துவது மனித இயற்கையன்றோ? காலத்தால், இடத்தால் வேறுபட்ட நல்லடிக்கோனை, நான், ‘மருதியின் காத’லில் வில்லன் என்னும் குணசித்திரமாகப் புதிதாகச் சேர்த்துக் கொண்டேன் என்பது கலப்பற்ற உண்மை. “சோழர் மருகன், வல்லங்கிழவோன், நல்லடி உள்ளானாகவும்” எனப்படுவதால், வல்லத்தில் இருந்தவனான, நல்லடிக்கோனை ‘உறையூர் மன்னன்’ எனச் சித்திரித்தேன், என் கதைக்கு வளம் கொடுப்பதற்காக. நல்லடிக்கோனை உறையூர்ச் சோழன் என்பதே என் படைப்பு. 1. நல்லடிக்கோன், 2. இரும்பிடர்த்தலையார், 3. நெய்தல் வீரன், 4. வேங்கை மார்பன், 5. கோதை மார்பன், 6. விடங்கி, 7. அம்பை, 8. அந்தரி, 9. மாதங்கி, 10. கரிகாலன் புதல்வர் இருவர் - யாவரும் என்னால் ‘மருதியின் காத’லில் புதிதாகப் பிணைக்கப்பட்டவர்களே. என் படைப்பிலே அமைக்கப்பட்ட புதிய பாத்திரங்களே இவர்கள் அனைவரும். இதுபோல் மேலும் சிலரும் உள்ளனர். அத்தியும் இரும்பொறையும்: அகநானூற்றுப் பாடல்களைக்கொண்டு அத்தி, ஆடல்வல்லவன் என அறிந்தேன். இவனை, ‘வஞ்சிக்கோன்’ என்று இளங்கோ கூறினலும், அகநானூற்றுச் சான்று கொண்டு, இவனைச் சிற்றரசன் என்றே அறியலாம். சேரப் பேரரசனான கணைக்காலிரும்பொறை சோழனுடன் போர் புரிந்தபோது, சேர சேனாபதிகள் அறுவர் கூறப்படுகிறார்கள். அறுவரில் அத்தியும் ஒருவன். எனவே, வஞ்சியில் சேரப் பேரரசன் வாழ்ந்தபோது, தொண்டியில் சிற்றரசனான அத்தி இருந்தான் எனச் சித்திரித்துள்ளேன். அதுவே முறையாகும். தொண்டி மன்னன் அத்தி என்பது என் படைப்பு. முடிவில் அத்தி, உறையூர் நல்லடிக்கோனை வென்றபின் வஞ்சியில் சேரநாட்டின் பேரரசனாக ஆனான் என்றும், முடிசூடியபோது ‘கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரலிரும்பொறை’ எனப் பட்டம் பெற்றானென்றும் புதிதாகக் கூறியுள்ளேன். வரலாற்றின்படி, கருவூர்ச் சேரலிரும்பொறை வேறு ஓர் சேரன்; அந்தப் பெயரை அத்திக்குச் சூட்டி, இருவரும் ஒருவரே என்று நான் கூறியுள்ளேன். இது வரலாற்றுக்கே முரண்பாடு தானே! சேரனுக்கும் சோழனுக்கும் நிகழ்ந்த போரையே என் ‘மருதியின் காதல்’ நெடுங் கதைக்கு அடிப்பீடமாக்கிக் கொண்டுள்ளேன். சோழ சேரப் போர், புறத்திலும், அகத்திலும், களவழி நாற்பது என்ற நூலிலும் விளக்கப் பட்டுள்ளது. தனித்தனியே சில கதாபாத்திரங்களைப் பற்றி என் அமைப்பின் விளக்கம் கூறக் கடமையுடையேன். அத்தி: அத்தி தொண்டி மன்னன் என்பது, அத்திக்கும் மருதிக்கும் நாட்டியப் போட்டி நிகழ்ந்தது. அதுகொண்டு இருவரும் காதலரானது, போரில் மருதியின் பிரிவு, பிரிவில் அத்தி ஆதியைக் கண்டது. புலவர் இரும்பிடர்த்தலையாருடன் அத்தி நட்பானது, அவர்களுடன் புகார் சென்றது, ஆதிக்கு நாட்டியம் பயில்வித்தது. அவளைக் காதலித்தது, கரிகாலன் வெறுப்புக்கு ஆளானது, அவளுடன் நாடு கடந்தது, மருதிக்காக நல்லடிக்கோன் மீது போர் தொடுத்தது, மருதியை வெறுத்து ஆதியை மணந்தது, வஞ்சியில் முடிசூட்டிக் கொண்டது, மருதி மீது அநுதாபம் கொண்டது, நல்லடிக்கோனைச் சிறையிலிட்டது, விழாவில் மறைந்து மருதியிடம் சென்றது, முதலியன என் சொந்தப் படைப்பாகும். மருதி: மருதி புகாரில் பிறந்தவள் என்பது, அவள் பரதவ இனத்தில் பிறந்த பெண் என்பது, நெய்தல் வீரன் என்ற பரதவத் தலைவனுக்கு மகள் என்பது, அவள் சிறுவயதில் பெற்றோரைப் பிரிந்து நாட்டியம் கற்றாள் என்பது, அவள் அத்தியுடன் பணயம் வைத்து நாட்டியம் ஆடினாள் என்பது, அத்தியின் காதலியாகக் கணிகை போல் வாழ்ந்தாள் என்பது, அவள் நல்லடிக்கோனால் சிறைப்பட்டு துயர்ப்பட்டாள் என்பது, தன் பிறப்புணர்ந்தபின் ஆதியை மணந்த அத்தி மீது குறை கூறிக் கரிகாலனுக்குமுன் வழக்குரைத்தாள் என்பது, முடிவில் துறவுடன் அவள் புகார்க் கடற்கரையில் இருந்தாள் என்பது, அந்நிலையில் காவிரி விழாவில் மூழ்கிய அத்தி மீண்டும் தன்னை அடைந்தபோது வரவேற்றாள் என்பது, அதன்பின் அத்தியைத் தேடி வந்த ஆதியிடம் அவனைச் சேர்ப்பித்து, அவன் பிரிவால் தன் உயிரைத் தியாகம் செய்தாள் என்பது - ஆகிய அனைத்திற்கும் இலக்கியச் சான்று இல்லை, சரித்திரச் சான்றும் இல்லை; இவை யாவுமே என் சொந்தப் படைப்பு. இரும்பிடர்த்தலையார்: இவர் சங்ககாலப் புலவர். கரிகாலனைச் சிறுவயதில் காப்பாற்றி முடிசூட்டியவர். இச்செயல் கரிகாலன் சம் பந்தமானது. எனவே கரிகாலனின் மாமனான இரும்பிடர்த் தலையாரை ஒரு ‘தீயவ’னாக இந்த வரலாற்றில் புதியதாகச் சேர்த்ததே என் முழுப்படைப்பு. கரிகாலன் இள வயதிலேயே கிழவனாக வாழ்ந்த புலவரைப் பிற்காலத்திற்குக் கொணர்ந்தேன். எத் தொடர்பும் இல்லாத இவர் அத்தியையோ, மருதியையோ ஆதியையோ நல்லடிக்கோனையோ கண்டவர் இல்லை - அப்படி வரலாறோ, இலக்கியமோ, வேறு சான்றோ இல்லை. கரிகாலனின் சம்பந்தமுள்ள இவரை என் நாவலுக்கு முக்கியமான பாத்திரமாக நானே சேர்த்துக் கொண்டேன். இன்னும் மேலே என்ன ஆதாரம் சொல்ல இருக்கிறது? என் படைப்பின் அம்சமே, இவர் இக் கதையில் புகுந்தமைக்கு முதல் ஆதாரம். கரிகாலன்: வரலாறு கூறும் மூன்று கரிகாலர்களில் இந்தக் கரிகாலன்தான் என் நெடுங்கதையில் எப்படி ஆதாரபூர்வமான வன்? ஆதிமந்தியின் தந்தை என்ற சந்தேகமுள்ள ஒரே சம்பந்தமேதான் இவனுக்கு, என் கதையில் ஆதாரம் வேறில்லை. அதனாலேயே கரிகாலனையும் என் நாவலுக்கு உயிர்ப் பாத்திரமாகச் சேர்த்தேன். என் நாவலில் வரும் விசேஷ சம்பவங்களைக் கொண்ட கரிகாலனை இந்நிலையில் இலக்கியத்திலோ வரலாற்றிலோ காணமுடியாது. ஏமாற்றம் அடைவீர்கள் என்று உறுதி கூறுகிறேன். ஆதி மந்தி: ஆதிமந்தியைப் பற்றிக் கூறினால் இவள் கணவனைக் காவிரியில் இழந்து, காவிரியோடு அழுது தேடிச் சென்றாள். மருதி என்பவள் காட்டக் கணவனைக் கண்டாள் என்பது ஒன்றுதான் இலக்கியம் - இதுதான் சரித்திரம் என்றும் கூறப்படலாம். இவள் கருவூரில் புலவர் இரும்பிடர்த்தலையாரிடம் தமிழ் பயின்றது, அங்கு வந்த அத்தியைக் கண்டு காதல் கொண்டது, அவனிடம் நாட்டியும் பயில விரும்பி அவனுடன் புகார் சென்றது, புகாரில் அத்தியிடம் நாட்டியம் கற்றது, கரிகாலன் வெறுப்புக்கு ஆளான அத்தியுடன் புலவரின் உதவியாலும் சகோதரர் உதவியாலும் நாடு கடந்து ஓடியது, உறையூரில் மருதி மீது பொறாமை கொண்டது, அவளை வெறுத்தது, அதன் பின் அத்தியுடன் புகார் சென்றது, மருதியின் வழக்கில் பயந்தது, மணவிழா, கரூரில் அத்தியுடன் வாழ்ந்தது, கழார் நீர் விழா, விழாவில் அத்தியுடன் நாட்டியம், அவன் பிரிவு, மருதியிடம் அத்தி இருப்பதாகத் தேடிச் சென்றது. அதன் பின் அவனை அடைவது என்பன அனைத்தும் என் சொந்தப் படைப்பு. மணக்கிள்ளி-பெருவிறற்கிள்ளி: கரிகாலனுக்குப் புதல்வர் யாவர் என வரலாறு துணிந்து கூறவில்லை. இந்நிலையில் கரிகாலனின் புதல்வராக மேற்கண்ட இருவரை - பெயரளவில் காணப்பட்டவரை - என் கதைக்குள் சேர்த்துக் கொண்டேன். இவர்கள் ஆதியையோ, மருதியையோ, அத்தியையோ கண்டவர்கள் என்ற அளவில் கூடச் சான்றில்லை இலக்கியத்திலும், வரலாற்றிலும். நெய்தல் வீரன்: இப்படி ஒரு கதாபாத்திரம் புதிதாக அமைத்தேன். இவன் என் முழுக் கற்பனை. மருதிக்குத் தந்தை வேண்டுமே! இவன் மருதி சம்பந்தமாகவும், யார் சம்பந்தமாகவும் இலக்கியத்திலோ, வரலாற்றிலோ எதிலும் இடம் பெறாதவன் - முழுமையும் என் சிருஷ்டி. ஆதிக்கு அத்தியைக் காட்டி மறைந்த மருதிக்கு ஒரு தந்தை அவசியம் வேண்டியதே! அதுவும் தமிழ்நாட்டுப் பழங்குடித் தலைவனாக - பரதவ இனத்தவனாக இவனைக் குறிப்பிட்டேன். மருதியின் தந்தை பரதவர் தலைவன் என்று அவனுக்கு ஒரு பெருமையையும் தந்தேன். எனவே பரதவர் தலைவன் நெய்தல் வீரன் கலப்பற்ற கற்பனைப் பாத்திரம். இவன் பெயர், இவன் இனம் யாவும் என் சிருஷ்டியே. வஞ்சி: மருதிக்குத் தாய்; வஞ்சி; நெய்தல் வீரனைப் போன்றே என் முழுக் கற்பனைப் பாத்திரம் இவள். விடங்கி: இவளும் என் கற்பனைப் பாத்திரம். நாட்டியக் கணிகையான இவளே மருதியைச் சிறு வயதிலேயே, புகாரிலிருந்து தொண்டிக்கு அழைத்துச் சென்று நாட்டியம் பயில்வித்தாள் என்றும், அதன்பின்பே அத்தியின் நட்புக்கு மருதி அடிமையானாள் என்றும், இவளே தகுந்த சமயத்தில் மருதியின் பிறப்புண்மையைக் கூறி அத்தியின் மனத்தை மாற்றினாள் என்றும் அமைத்து உள்ளேன். இவை என் சொந்த அமைப்பு. நல்லடிக்கோன்: இவன் செங்களுன் என்ற சோழனின் மகன் என்ற ஒரே செய்தியை அன்பில் செப்பேடு சொல்கிறது. அவ்வளவே. இவன் அத்தியின் காலத்திற்கும் ‘மருதியின் காதல்’ காலத்திற்கும் என்னல் இழுக்கப்பட்டவன். அது மட்டுமல்ல: இவனை ஆதார பூர்வமாக யாருமே - கரிகாலன், அத்தி, மருதி, ஆதி, புலவர் முதலிய எந்தக் கதாபாத்திரமும் பார்க்காதவர்கள் - பேசாதவர்கள். என் நாவலுக்கு முன் எவ்விதத்திலும் தொடர்பற்ற அநாதை இவன். இந்த அநாதை நல்லடிக்கோனை - செங்கணான் மகன் என்ற ஒரே காரணத்துக்காக நிராதரவாகச் சரித்திரத்தில் தொங்கிக் கொண்டிருந்த நல்லடிக்கோனை தீயவனாக உருவாக்கினேன்; உறையூர் அரசனாக்கி, மருதி மீது காதல் கொண்டவனாக்கி, போரில் மாவீரனாக்கி, அத்தியுடன் பகைவனாக்கி, மருதியைச் சிறை செய்தவனாக்கி, அவளை அடைய முயன்றவனாக்கி, அதற்காகப் பல சதிகள் புரிந்தவனாக்கி, முடிவில் குணவாயில் கோட்டத்து ஜைனத் துறவியாக்கி, மருதியின் புகழ் பாடி அத்திக்கே அறிவு புகட்டுபவனாக்கி, சிறைப்பட்டுத் தானாகவே சிறையில் உண்மைக்கு உரைகல்லாக மாய்ந்தவனாக்கி, இவனைத் திருந்திய தீயோனாகப் படைத்தேன். இவன் இல்லையேல் என் ‘மருதியின் காத’லே வெற்றி பெறாது. இவன் எனக்கென்றே செங்கணானுக்கு மகனாகத் தோன்றினான். இவனை என் நெடுங்கதை மூலம் கற்பனைச் சரடு மூலம் தமிழ் உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளேன். முதலில் சொல்ல வேண்டியதை முடிவில் இங்கே சொல்கிறேன். ‘களவழி நாற்பது’ என்ற நூலில், கணைக்கால் இரும்பொறை என்ற சேரமன்னனுக்கும் செங்கணான் என்ற சோழ மன்னனுக்கும் போர் நிகழ்ந்த நிகழ்ச்சி உள்ளது; அந்தப் போரில் சேரனின் பக்கம் சேனாபதிகள் அறுவர் இருந்ததாக ‘அகநானூறு’ கூறுகிறது. அறுவரில் அத்தியும் ஒருவன். எனவே என் கதையில் முதலில் அந்தப் போரை, விவரித்து அதிலிருந்து அத்தியைக் கதாநாயகனாகக் கொண்ட அமைப்பைத் துவக்கினேன். கதை நிகழ்ந்த இடங்களாகத் தொண்டியையும் புகாரையும், உறையூரையும், கருவூரையும், சிராப்பள்ளியையும் நான் அமைத்திருப்பதற்கும் வரலாற்றிலோ இலக்கியத்திலோ ஆதாரம் இல்லை. இவை என் கதையமைப்புப் பற்றிய சிறு விளக்கமாகும். முடிவாக ஒன்று கூற எண்ணுகிறேன்: எழுத்துலகில் தார்மிக நியதியில்லை. பிறர் கதையைக் களவாடுவது, கற்பனையைச் சூறையிடுவது, கயமைத் தன்மை யல்லவா? இதற்கு முடிவில்லை யென்றால் எழுத்துலகம் சீரழிந்தே போகும் - போய்க்கொண்டிருக்கிறது. இந்த அழிவுக்கு வசதி படைத்தவர்கள் உறுதுணையாக இருப்பது அநீதியாகும். என் ‘மருதியின் காதல்’ 1944-ஆம் ஆண்டில் எழுதப் பெற்றது. 16-ஆண்டுகட்குப் பின் புத்தகமாக மலர்கிறது. இந்த அமைப்பைத் திரைப்பட அமைப்பிலும், நாடகத்திலும், புத்தகத்திலும் பலர் கையாண்டிருப்பதைக் காண்கிறேன். வாசகர்களும் எழுத்துலக முற்போக்குடைய பேரறிவாளர்களும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுகிறேன். முடிவு கண்டு முடிவு செய்ய வேண்டுகிறேன். மீண்டும் என் நன்றியையும் வணக்கத்தையும், ‘சுதேசமித்திர’னுக்கும் ‘கலைமக’ளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் என் பணிக்கு ஆதரவு தருமென்று நம்பித் தமிழ்த் தாயை வணங்குகிறேன். அன்பன், வ. வேணுகோபாலன் ‘தமிழ்க்கடல்’ திருவிடைமருதூர் 15, ஆகஸ்டு 1961 |