(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

10. மறைந்த வீரன் யார்?

     சோழனின் பட்டத்து யானை உறையூரை விட்டுப் புறப்பட்டு, கரூர்க் கோட்டையை அணுகிக் கொண்டிருந்தது. ஆயுதபாணிகளான வீரர் நூற்றுவர் யானையைச் சூழ்ந்து காவல் காத்துச் சென்றார்கள். வெற்றிச் சின்னமான புலிக்கொடி யானை மீது இலங்கிக் கொண்டிருந்தது. துதிக்கையை இருபுறமும் வீசிக் கொண்டே, யானை கடுநடையுடன் சென்றது. கரூர்க் கோட்டையும் கண்களுக்கு இலக்காயிற்று. ஆமிராவதியின் அணை முகப்பிலும், கோட்டையின் வாயில் புறத்திலும், மதிள் புறத்திலும் சோழ நாட்டு வீரர்கள் காவல் காத்து நின்றார்கள்.

     கடுநடையுடன் செல்லும் யானை முன்னிலும் மிகுதியாகக் கடுகியது. அதனைச் சூழ்ந்து செல்லும் வீரர்கள் செய்த ஆரவாரத்தால் அதன் மனம் வெறிகொண்டது. பாகன், அதன் வெறியைக் கண்டதும் அடக்க எண்ணி அங்குசத்தால் மத்தகத்தில் அழுத்தி யானையைத் தன் போக்கிலே மாற்ற முயன்றான். யானையின் வெறி தணியவில்லை; அதன் வேகம் குறையவில்லை. சூழ்ந்து வந்த வீரர்கள் அகலப் போகும்படி நேர்ந்தது. பாகனின் முயற்சி பயன்படவில்லை. கோட்டை வாயிலுக்குள் யானை புகுந்து போகவேண்டுமே! சாலையிலிருந்து அணை வழியே ஆமிராவதியைக் கடக்க வேண்டுமே!

     யானை சாலையோடு வேகமாகச் சென்றது; கிழக்குத் திக்கிலிருந்து வரும் யானை நேர் மேற்காகச் சாலையோடு போகத் தலைப்பட்டது. வீரர்களின் முயற்சியும், பாகனின் உபாயமும் பயன்படவில்லை. ஆமிராவதியின் கரையோடு, கோட்டை வாயிலையும் கடந்து யானை செல்லவே மற்ற வீரர்களும் சேர்ந்து யானையைப் பின் தொடர்ந்தனர்.

     மேற்குத் திக்கிலே, ஆமிராவதிக் கோட்டையின் அக மதிளுக்குள் புகுந்து பாய்ந்து வரும் இடத்திற்கு நேராகச் சாலையில் ஒரு குதிரை நின்றது. அந்தக் குதிரையில் அமர்ந்திருந்த இருவரில் ஒருவன் மட்டும் கீழே இறங்கி ஆமிராவதியில் இறங்கினான். மதிளின் தொடக்கமும், நகரின் மேற்கு எல்லையும் அவ்விடமே தான். அன்றியும் ஆமிராவதியாறு அம்மதிளின் ஒருபுறத்திலே புகுந்து மற்றொரு புறத்திலே பாய்ந்து வெளிவரும் இடம் அதுவே தான். கரை துளும்பச் செல்லும் ஆறு, மதிளுக்குள் சிறு மதகு வழியே ‘குபுகுபு’ வென்று பாய்ந்து புகுந்து மற்றொரு மதகு வழியே குமிழியிட்டு வெளி வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அந்தக் காட்சியைக் கண்டு களித்து நின்றானோ என்று கூறும்படி இருந்தது, நீர்த் துறையில் நின்ற வீரனின் காட்சி. ஆஜானுபாகுவான அவ்வீரன், வேலைக் கையில் ஏந்தி ஏதோ சிந்தித்து நின்றான் என்றே சொல்லவேண்டும். அவன் சிந்தனை என்ன?

     சாலையில் குதிரை மீது இருக்கும் வீரனிடம் ஏதோ கூறிவிட்டு மார்பளவு நீரில் இறங்கிவிட்டான் அவ்வீரன் குதிரையும் மெள்ள மேற்குநோக்கிச் செல்லத் தலைப்பட்டது. ஆனால், கீழ்ப்புறமிருந்து வரும் வெறிகொண்ட யானையும் அதைத் தொடர்ந்து வரும் வீரர்களும் அவ்விடத்தை அணுகிவிட்டார்கள். வெறிபிடித்த யானையின் கண்களுக்கு சாலையிலே செல்லும் குதிரை இலக்காயிற்று. யானை வரும் வேகத்தைக் கண்டு குதிரையைக் கடிதாகச் செலுத்தினான் அதிலிருந்த வீரன். ஆற்றில் நின்ற வீரன் அந்தக் காட்சியைக் கண்டான். எக்காரணத்தாலோ அவன் அதிகப் பரபரப்புக் கொண்டான். சாலையில் சூழ்ந்துவரும் வீரர்களும், அவனைப் பார்த்துப் பிரமிப்புற்றார்கள்; மேற்கே குதிரையில் கடுவேகத்தோடு போகும் வீ ரன் யார் என்றும் சந்தேகம் கொண்டார்கள்.

     மார்பளவு ஆழத்தில் ஆமிராவதியில் இறங்கி நின்ற வீரனின் கையிலிருந்த வேல், ஒரு கணம் பளிச்சிட்டது. சூரியனின் ஒளி நழுவிவிட்டது போன்ற காட்சி தோன்றியது. ‘விர்’ என்ற ஒலியோடு வேல், வெறிபிடித்த, யானையின் ஒரு புறத்துக் கண்ணில் பாய்ந்து புகுந்தது. ஆற்றில் நின்ற வீரனின் கை வேல்தான், சாலையில் போகும் வெறிகொண்ட யானையின் கண்ணில் பாய்ந்தது; அடுத்த கணமே ‘ஒ’வென்று கூவியபடியே, துதிக் கையை மேலே தூக்கிக்கொண்டு தடுமாறித் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு நின்றது யானை. திடுக்கிட்டுப் போனார்கள் சூழ்ந்துவந்த வீரர்கள் . யானையின் கண்ணீல் வேல் பாய்ந்து நிற்பதைக் கண்டார்கள். பாகன் திடுக்கிட்டான். மறுகணமே யானை, வேல் பாய்ந்து வந்த திக்கைக் கண்டுகொண்டது. மற்ற வீரர்களும், வேலை எறிந்த வீரனைப் பிடிக்க முற்பட்டனர். யானை பெருங்கோபம் கொண்டது. அதன் வெறி அதிகமாகிவிட்டது. நிலம் அதிரும்படிக் குதித்தது. தன் துதிக்கையால், கண்ணில் பாய்ந்து நிற்கும் வேலைக் கர்ச்சித்துக்கொண்டே பறித்தது. துதிக்கையால் பறித்துக்கொண்ட வேலைச் சுழற்றியது. ஆற்றில் மூழ்கித் தப்புவதற்கு முயன்ற வீரன் மீது இலக்கு வைத்து வீசியது. ‘ஆ’ என்று ஆவலம் கொட்டி உடல் நடுங்கினர் வீரர். ஆனால் வேல் பாய்ந்ததும், குபுக் என்ற ஒரு சத்தம் கேட்டது. ஆற்றில் நின்ற வீரன் காணப் படவில்லை. அவன் மறைந்து விட்டானா? அல்லது மாய்ந்து விட்டானோ? அந்த மாயத்தை யார் கண்டார்கள்? யானை எறிந்த வேல் பட்டு , அவன் மாண்டு போயிருப்பான்; சிறிது நாழிகையில் அவன் பிணம் மிதக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். மிதக்காவிடில், மதிள்புறத்து மதகில் செருகியிருக்கும் என்று பலர் நம்பினார்கள். இந்நிலையில் எல்லாரும் திடுக்கிடும்படியாக மதிளுக்குள் நீர் புகும் இடமாகிய மதகுப் புறத்தில் அவ்வீரனின் தலை தெரிந்தது; இறந்த நிலையில் அன்று; உயிருடன்தான்! மேற்கு நோக்கிச் சாலை வழியே போகும் குதிரை வீரன் தடையின்றிப் போய் விட்டானா என்று, மதகில் தலை நீட்டிய வீரன் பார்த்தான். குதிரை நெடுந்துரத்துக்கு அப்பால் போய் விட்டது என்பதை உணர்ந்ததும், ‘குபுக்’ என்று அம் மதகு வழியே புகுந்து மதிளுக்கு உட்புறத்தை அடைந்து விட்டான் அவ்வீரன். அவன் செயல் பிரமிக்கத் தக்கதுதானே!

     யானையின் நோக்கமும் ஈடேறவில்லை; வீரர்களும் ஒன்றும் செய்வதற்கில்லை. அலையும் சுழற்சியும் மிகுதியான இடம் அது. ஆற்றின் ஆழமும் அதிகம். ‘காவலை மீறி, ரகஸ்யமாக நகருக்குள் புக முயலும் பகை வீரனின் துணிவுள்ள காரியமாக இருக்கிறதே இது! இவன் யார்? குதிரையில் சென்ற வீரன் யார்? இவன் வேலை எறிந்ததற்குக் காரணம் என்ன? சோழனின் பட்டத்து யானையின் கண்ணைக் கெடுக்க இவனுக்கு என்ன தைரியம்? இவன் சேர நாட்டு வீரன்தான்! - யாரோ! இம் மதகு வழியே இவன் புகுந்து போகிறானே! என்ன அதிசயம்! எவ்வளவு தீரம்! - இவனுடைய செயலிலிருந்து பெரிய வீரன் இவன் என்று தெரிகிறது. சோழ வேந்தனின் பட்டத்து யானையை வேலால் எறிந்ததிலிருந்து இவன் பகைவன் என்றே தெரிகிறது, ரகஸ்யமாக நகருக்குள் புகுந்து ஏதோ பெருங்கலகம் உண்டாக்கவே இவன் இம் மதகு வழியே துணிவுடன் புகுந்து போகிறான். விரைவில் இச் செய்தியை அரசனிடம் தெரிவிக்க வேண்டும்’ என்று யாவரும் ஒருங்கே யோசித்துப் புறப்பட்டார்கள். மதகு வழியே புகுந்த வீரன் மறைந்து விட்டான்.

     ஒற்றைக் கண்ணை இழந்த யானைக்கும் வெறி தணிந்தது. கண்ணை இழந்த வேதனையால் அது கர்ச்சித்துக் கொண்டே திரும்பியது. அரசனிடம் செய்தி கூற விரைந்து சென்றார்கள் வீரர்கள். என்ன அதிசயம் இது? பட்டத்து யானையின் கண் கெட்டது, சோழ நாட்டிற்கு நேரப் போகும் பெருங் கேடு ஒன்றையல்லவா அறிவுறுத்தியது? அவ்விதம் யானையின் கண்ணை ஊனமாக்கிய வீரன் யார்? அவன், நீரில் அவ்வளவு எளிதாக மூழ்கியும் நீந்தியும் தன் திறமையைக் காட்டினானே! யானை எறிந்த வேலுக்குக் கூடத் தப்பி விட்டானே! அவன் நிச்சயம் ஓர் அற்பமான மனிதன் அல்ல!

     மதகுக்குள் மூழ்கிப் புகுந்து சென்றவன் மிக எளிதில் மதிளின் உட்புறத்தை அடைந்து விட்டான். அடைந்து அக நகரின் கரையில் ஏறினான்; கரையேறியவன் சட்டென்று பரபரப்போடு நகருக்குள் போகும் சிறு சந்து வழியே விரைந்து நடந்தான்.

     யாரேனும் கண்டுவிடுவரோ என்ற கலக்கத்தால் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே அம்புபோல் பாய்ந்து சென்றான் அந்த வீரன். நகரின் உள்ளே புகுந்த பின்பும் அவன் யாரையும் அந்த வழியில் காணவில்லை: அச்சிறு சந்து வழியே அம்பெனக் கடிதாகச் சென்றவன், புலவர் வாழும் வீதியை அடைந்தான். நாவலரும் பாவலரும் வாழ்வதற்கு என்று அமைத்த தனி வீதி அது; அவ் வீதியிலுள்ள புலவர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களுமே, அச்சிறு சந்து வழியே, ஆமிராவதி நீர்த்துறைக்கு வருவார்கள். வேறு யாருக்கும் அந்த வழி உரியதல்ல.

     புலவர் வாழும் வீதியிலே கணக்கற்ற நாவலரும் பாவலரும் இருந்தனர். அவரவர்கள் தத் தமக்குரிய மாளிகையிலே இன்பமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று முடிமன்னர்களாலும் நன்கு மதிக்கப்பெற்ற புலவர்கள் அங்கே இருந்தனர். முடி மன்னர்களுக்குள் பெரும் போர் மூண்ட போதிலும் அப்புலவர்கள், பகை - நட்பு என்று வேறு பாடு கொள்ளாமல் அம்மும் மன்னர்களிடமும் சுதந்தரமாகப் பழகுவார்கள். ‘என் பகைவனிடம் இப்புலவர் சென்று வருகிறாரே’ என்று எந்த அரசனும் மனவேறுபாடு அடையான். இரு பெரு வேந்தர்கள் போராடும் போர்க்களத்தில் கூட புலவர்கள் உரிமையோடு பழகுவார்கள். ஆகவே, தமிழ் நாட்டுப் பழம் புலவர்கள், ஓர் அரசனுக்கோ, ஒரு நாட்டிற்கோ உரிமையானவர் அல்லர். தமிழகம் முழுவதும் அவர் களுக்கு உரியது. தமிழர் அனைவரும் அவர்களுக்கு உரிமையானவர்கள். அவர்களை அடக்கவோ, ஒறுக்கவோ யாருக்கும் உரிமையில்லை. குற்றம் கண்டால், அவன் முடிமன்னனானாலும் இகழ்ந்து பாடுவார்கள்; பெருமை புலப்பட்டால், அவன் ஏழையானாலும் புகழ்ந்து பாடுவார்கள். உண்மைக்கே நிலைக்களமானவர்கள் தமிழ் நாட்டுப் புலவர்கள் என்றால் அது மிகையாகாது. ‘பொய் யடிமையில்லாத புலவர்கள்!’ என்று புகழ் கொண்டவர்கள்.

     இத்தகைய புலவர் வாழும் வீதியிலேதான் அவ்வீரன் புகுந்தான். மிக வேகமாகச் சென்றவன் ஒரு மாளிகைக்குள் புகுந்தான். அம்மாளிகையின் முன்கூடத்தில் ஒரு கட்டிலில் பஞ்சணை மீது சாய்ந்து கொண்டிருந்தார் புலவர் - அவர் பெயர் இரும்பிடர்த் தலையார் என்பது. அவர் ஒரு புலவர் மட்டுமல்ல; வீரரும் ஆவார். ஆனால் உண்மையில் அவர் ஒரு புலவர்தான். அப்போது அவருக்கு வயது எண்பதுக்குமேல் ஆகிவிட்டது. ஆகவே, அவரை ‘முது கிழவர்’ என்று சொல்லவும் வேண்டுமா? சோழநாட்டின் பெரும் பகுதியை, காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து ஆண்டு வரும், கரிகாற் பெருவளத்தான் வன்னும் சோழவேந்தனுக்கு ‘மாமன்’ என்ற உறவு முறையுடையவர்.

     இன்னும் இவரைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் ஒன்றைப் பிரதானமாகச் சொல்லலாம். கரிகாற் பெருவளத்தானுக்கு சோழநாட்டின் அரசுரிமையை அளித்தவர் இவரே தான். பாண்டியனின் பெரும் படைப்பலம் கொண்டு பகைவரை அழித்து, கரிகாலனுக்கு முடி சூட்டினார். கரிகாலனுக்கு பதினாறு வயது முடிவதற்குள்ளேயே அவனை அரசு கட்டிலில் ஏற்றியவர் இவர். அது மட்டுமா? கரிகாலன் சிறு குழந்தைப் பருவத்தில் பகைவரால் சூழ்ந்து கொள்ளப்பட்டு அவன் இருந்த, மாளிகையோடு கடுந்தீயால் கொளுத்தப்பட்டான். அப்போது இப்புலவர் - இரும்பிடர்த் தலையார் என்ன செய்தார் தெரியுமா?

     தன் உயிரைப் பெரிதாக மதிக்கவில்லை. பாலகனான திருமா வளவனைக் (கரிகாலனின் முற்பெயர்) காப்பாற்ற முற்பட்டார். எரியால் மூடப்பட்ட மாளிகைக்குள் தாவிச் சென்றார். தமிழர் செல்வமான அவனை வாரி எடுத்துத் தோளோடு தழுவிக்கொண்டார். தம் உடல் வெந்ததையும் பாராட்ட வில்லை. மாளிகையை விட்டு வெளியே தப்பி ஓடினார்; பின் தொடர்ந்த பகைவரை, வாள்கொண்டு வீழ்த்தினார்: அப்போது சிறிதே காவில் நெருப்புப் பட்டு கருகிவிட்டது பாலகனுக்கு - தமிழகத்தின் தவக்கொழுந்துக்கு. அதனால் ‘கரிகாலன்’ என்று பெயர் பெற்றான் அந்தச் செல்வச் சிறுவன். அது கிடக்கட்டும்! இவர் இல்லையேல், கரிகாலன் பெயரே இல்லாமல் மாய்ந்து போயிருக்குமல்லவா? இத்தகைய வீர தீரச் செயல்களைச் செய்த இவரை ‘வீரருள் வீரர்’ என்று ஏன் சொல்லக் கூடாது? இத்தகைய வீரரிடம், தமிழ்த் தெய்வமும் குடிகொண்டிருந்தது: செஞ்சொற் கவிகளை இயற்றுவதில் இணையற்ற புலமையுடையவர். எனவே, ‘புலவருள் புலவராகவும்’ இவர் வாழ்ந்தார். மற்றப் புலவர்களிடத்தே இவருக்கு மிகுந்த மதிப்பு உண்டு. வீரராகவும் புலவராகவும் விளங்குவதால் இவரிடம், அரசர்கள் கூட அஞ்சுவார்கள். இரும்பிடர்த் தலையார் என்றால் யாரும் தலை வணங்குவார்கள். இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிப்பதற்கும், இன்பமாகப் பொழுது போக்குவதற்கும் ஏற்ற இடம் என்று கருதி கரூரில் நெடுநாட்களாக இவர் வாழ்ந்து வருபவர்; முன்பு கரிகாலன் கூட, பிறர் அறியாதபடி இவர் மாளிகையில் பலநாட்கள் மறைந்து வளர்ந்தது உண்டு.

     இத்தகைய பல பெருமைகளுக்கு உரியவரான இரும் பிடர்த்தலையார், மாளிகையின் முன்கூடத்தில் கட்டிலில் சாய்ந்து கொண்டிருப்பதை அங்கே வந்த வீரன் கண்டான்.

     “புலவரே வணங்குகிறேன்” என்று கூறி இரும்பிடர்த் தலையாரின் முன் வணங்கி நின்றான். சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவர் மெள்ள எழுந்து உட்கார்ந்து கொண்ட படியே வியப்போடு அவ்வீரனைப் பார்த்தார். அவர் முகத்தில் புன்னகை அரும்பியது. ஆஜானுபாகுவான வீரனின் கண்களில் ஒளி மின்னலிடுவதையும், அவனுடைய வசீகர முகத்தையும் கண்டு சிறிதே பார்த்தபடியே நகை செய்தார்.

     “அத்தி... உன்னைக்கண்டு... பலநாட்கள் இருக்குமே! இதில் அமர்ந்துகொள்” என்று கட்டிலின் ஒரு புறத்தைச் சுட்டிக்கட்டினார். ஆம்! அவன் அத்தியேதான்!

     “புலவரே, சென்ற வருஷம் உள்ளி விழாவில் என்னைப் பார்த்திருப்பீர்கள்!...” என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் அமர்ந்தான். புலவர் மௌனமாக இருந்து விட்டு மறுபடியும் பேசலானார்.

     “அத்தி... நாட்டு நிலை மிகவும் சீர்கேடு அடைந்திருக்கும் இந்நிலையில் நீ... எப்படி உள்ளே புகுந்து வந்தாய்?... உன் ஆடைகள் ஏன் நனைந்திருக்கின்றன?”

     “ஆம்! உள்ளே புக முடியாதுதான் மதகுப் புறத்துச் சந்து வழியே வருகிறேன்; ஆமிராவதிக்குள் புகுந்து மதிளைக் கடந்து வந்துவிட்டேன்... இந்த வழியில் பிறர் பார்க்கமுடியாது என்ற நினைப்பால்...”

     புலவர் திடுக்கிட்டுப் போனார்:

     “ஆமிராவதியின் மதகுக்குள் புகுந்து இக்கரை வந்து விட்டாயா?... அத்தி... இவ்விதக் காரியங்கள் எப்போதாவது கேட்டை உண்டாக்கும்! புதர்கள் நிறைந்த இடுக்கு வழியே மூழ்கி வருவதென்றால்... அற்பமில்ல! உயிருக்கே...”

     “எனக்கு இது போன்ற காரியங்கள் அற்பமே தான். ஆனால் தங்கள் வார்த்தைகளுக்குத் தலை வணங்குகிறேன்.”

     “இருக்கட்டும்... வேறு ஆடைகளை நீ அணிந்து கொள்...” என்று சொல்விவிட்டுப் புலவர் மாளிகையின் உட்புறத்தை நோக்கினார்; உள்ளேயிருந்த ஒரு கட்டிலில் சிறு பெண் ஒருத்தி ஓலையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்; அவளைப் பார்த்தபடியே, “ஆதி!” என்றார். மறுகணமே அந்தப் பெண் தலை நிமிர்ந்தாள்.

     “வருகிறேன்” என்று கூறிக்கொண்டே முன் வந்தாள். அவள் கையில் ஓலையும் எழுத்தாணியும் இருந்தன. வந்தவள் ஒரு முறை அத்தியைப் பார்த்தாள். அத்தியும் வியப்போடு அப்பெண்ணையும், அவள் கையிலிருந்த ஓலையையும் கண்டான். துணிவுடன் முன்வந்த அப்பெண், சற்றுப் பின்னே நடந்தாள். புலவர் பக்கமாக மறைந்து நின்று கொண்டாள். அவள் மறைந்து நின்றாள் என்பது உண்மை. ஆனால் அவள் கண்கள் மட்டும் அத்தியை, மருண்டு பார்ப்பதும், ஒரு கணம் தன் மேனியைப் பார்த்துக் கொள்வதும், அடுத்த கணம் புலவரைப் பார்ப்பதுமாகத் தடுமாறின; அவள் யார்?



மருதியின் காதல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16