உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 12. புகார் யாத்திரை அரசிளங்குமரியான ஆதிக்கு நாட்டியம் கற்றுக் கொடுக்கத் துணிந்து விட்டான் அத்தி. புலவர் கேட்ட தற்குத் தயக்கத்தோடு துணிவான மறுமொழி தந்து விட்டான். ஆனால் அவன் மனம் பலவிதமாக எண்ணத் தலைப்பட்டது. அவனிடம் பார்வையைப் பறிகொடுத்த அரசிளங்குமரியும் திகைத்து விட்டாள். புலவரின் மனத்தில், ‘முன் செய்த புண்ணியப் பயனே இவன் இப்போது இங்கு வந்திருக்கிறான்’ என்று இடைவிடாமல் தோன்றிக் கொண்டிருந்தது. புன்னகையோடு மின்னலென அறைக்குள் ஓடினாள் ஆதி. சிறிது நாழிகைக் கெல்லாம் இனிய உணவு வகைகளை இருவருக்கும் பொற் கிண்ணங்களிலே கொணர்ந்து வைத்தாள். புலவர் விருப்பம் நிறைந்த பார்வையோடு அத்தியைப் பார்த்து உண்ணுமாறு வேண்டிக் கொண்டார். அத்தி பெரிதும் தயக்கத்தோடு ஒரு முறை ஆதியை மருண்டு பார்த்தான், பரிசோதகன் போல. அதன்பின் உணவு அருந்திக் கொண்டே புலவரிடம் பேசத் தொடங்கினான். “புலவரே, ஒப்புக் கொண்டு விட்டேனே! நிறை வேற்றுவது சிரமமாக இருக்குமோ என்று எண்ணுகிறேன்” என்று அத்தி கூறுகையிலே ஆதியின் முகம் வாடியது. புலவர் வியப்போடு அத்தியைப் பார்த்தார். சந்தேகத்தால் அவர் கண்கள் துடித்தன. “ஏன்? தடை என்ன இருக்கிறது? தமிழகத்தின் புகழ் பெற்ற முடி மன்னனின் அரசிளங்குமரிக்கு நாட்டியம் கற்றுக் கொடுக்கும் பாக்கியம் உனக்குத் கிட்டியிருக்கிறதே!... இனி மறுத்துச் சொல்விப் பயன் இல்லை! என்னிடமிருந்து உன்னால் இனி தப்பமுடியாது!” என்று பெருமிதத்தோடு நகை ததும்பப் பார்த்தார். ஆதியின் முகம் கருகிவிட்டது. “புலவரே, மறுத்துச் சொல்லவில்லை; நகர்க்காவலை என் நண்பன் கோதை மார்பனிடம் ஒப்படைத்து விட்டு வந்தேன்; உடனே திரும்பி வருவதாக வாக்களித்திருக்கிறேன்...” என்று சொன்னான். “நல்லது, அத்தி. தொண்டிப் பட்டினத்தைக் கோதை மார்பனே காவல் செய்யலாம்; அதனால் உனக்குக் கவலை வேண்டாம். தொண்டியைப்போல் எத்தனை நகரங்கள் வேண்டுமானலும், நான் தருகிறேன்; என்னை நீ அறிந்தவனாயிற்றே! இன்று உனக்குச் சேரநாட்டு ஆட்சியே...” “இல்லை! இல்லை! நான் அப்படித் தவறாகப் பேச வில்லையே! தங்கள் பெருமை நான் அறியாததல்லவே!... என்னவோ என் மனம் இருள் சூழ்ந்து தடுமாறுகிறது!... தாங்கள் எனக்கு இட்ட கட்டளையை நான் மறுக்கவில்லை. திருமகள் போன்ற இவளுக்குப் பணி புரிவதை என் கடமையாகவே நான் கருதுகிறேன்...” என்று சொன்னான். சொல்லிவிட்டு நீர் துளும்பிய கண்களால் புலவரைப் பார்த்தான். “பின், என்ன? இனி வேறு சிந்தனைக்கு இடம் கொடாதே!” என்றார் புலவர். “வேறு சிந்தனை இல்லை புலவரே; அந்தக் கணிகையையோ அல்லது அவளை மயக்கிய அந்த நல்லடிக் கோனையோ பழிவாங்க வேண்டுமென்று என் மனம் வேகம் கொண்டிருக்கிறது.” “அத்தி, அவ்விருவரையும் மறந்துவிடு. நிலையற்றது தானாகவே மறைந்துவிடும். நிலையுள்ளதுதான் நினைவில் சுழலும்; வீணாகக் கலங்காதே. இன்று இந்நகரில் பங்குனி உத்தர விழா நடக்கிறது! தெரியுமா உனக்கு...?” என்று பேச்சை மாற்றினார். “இந்நகரில் பங்குனி உத்தர விழாவா?” “ஆம்! இந்நகரில் செய்யும் உள்ளிவிழாவை உறையூரில் நடத்தும்படி செங்கணான் கட்டளையிட்டிருக் கிறான். அதேபோல் உறையூரில் நடப்பதற்குரிய பங்குனி உத்தர விழா இந்நகரில் நடக்கிறது; அதற்குத்தான் பட்டத்து யானை வந்தது!” “செங்கணானின் வெற்றித் திமிர்! என்ன அதிசயம்! எவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்து எவ்வளவு தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டான் சேரன்! பாவம்! உலகமே இப்படித்தான்.” ‘நல்லவேளை! புத்தி மாறிவிட்டது. நான் எண்ணியது போலவே ஆகிவிட்டதே! எளிதில் இணங்கி விட்டாரே என்று முதலில் நினைத்தேன்; எளிதில் மாறியும் விட்டார்: ஆனால் என்ன! புலவரிடமிருந்து தப்பிவிடுவாரா?’ என்று தனக்குள் பிதற்றிக் கொண்டாள் அரசிளங்குமரி ஆதி. “அத்தி, ஒருவனுடைய உயர்வு தாழ்வு அவனுடைய செயலிலேயே இருக்கிறது. ஆகவே, மனிதன் அடையும் உயர்வு தாழ்வுகளுக்கு அவனுடைய செயலே காரணமாக இருக்கிறது . ...அது இருக்கட்டும்; மேற்கொண்டு நடக்கவேண்டியதை யோசிப்போம்...” புலவர் சிறிது நாழிகை மௌனமாக இருந்தார். ‘இது என்ன? நான் இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டேன்; எல்லாம் மர்மமாக இருக்கிறதே! என் காரியத்தை நான் இன்னும் முடித்தாகவில்லை! என் வாழ்வு... இப்படியாக வேண்டுமா? எல்லாம் மாறுதலா?’ என்று யோசனையில் ஆழ்ந்திருந்தான் அத்தி. “அத்தி, இன்று இரவு புறப்பட்டாக வேண்டும்; பல்லக்கில்தான் போக வேண்டியிருக்கிறது. எல்லையைக் கடக்கும் வரையில்தான்...” என்றார். “என்னை அறிந்து கொண்டு விட்டால்! - இன்று எங்கும் கூட்டமாக இருக்குமே!” “அப்படி ஒன்றும் நேராது; நேர்ந்தாலும் நான் இருக்கிறேன்; என்னுடைய பல்லக்கு எங்கு வேண்டுமானாலும் போகும்; தடையே இராது. நீ கவலைப் படாதே!” என்று புலவர் கூறுகையில், வாயில் புறமிருந்து யாரோ அழைக்கும் குரல் கேட்டது. புலவர் ஆதியைப் பார்த்தார். ஆதி சட்டென்று வாயிலை எட்டிப் பார்த்தாள். அத்தி பதற்றத்துடன் யார் வருகிறார்களோ என்று பார்த்துக் கொண்டிருந்தான். “பொய்கையார் வருகிறார்” என்றாள் ஆதி. உடனே புலவர், அத்தியை அறைக்குள் மறைந்திருக்கும்படி கண்களால் குறிப்பிட்டார். பொருக்கெனப் பாய்ந்து சென்றான் அத்தி. அறைக்குள் புகுந்து கொண்டான். பொய்கையாரும் உள்ளே வந்தார். “வாருங்கள், வாருங்கள்!” என்று கூறிப் பொய்கை யாரைக் கட்டிலில் அமரும்படிக் குறிப்பிட்டார் புலவர். பொய்கையார் என்ற புலவரும் கட்டிலில் இரும் பிடர்த் தலையாரின் அருகில் அமர்ந்து கொண்டார். அத்தி மறைந்து கொண்டதைக் கண்டு ஆதிக்கு உவகை உண்டாயிற்று. ‘எப்படியோ, இவர் நம் வசம் ஆகி. விட்டார்’ என்று ஏமாப்புற்றாள். பொய்கையார் சிரித் துக்கொண்டே, “என்ன, ஆதியின் முகத்தில் இவ்வளவு சிரிப்பு! என்னைக் கண்டு நகை செய்கிறாளா?” என்றார். இரும்பிடர்த்தலையார் புன்னகை செய்தார். ஆதியின் உட்கோளை அவர் அறியாதவரா என்ன? மெல்ல தலை நிமிர்ந்து அன்பு கனிய ஆதியைப் பார்த்துக் குறிப்புக் காட்டினார். ஆதியின் முகம் நாணத்தால் சிவந்தது. “பொய்கையாரே, நான் எப்போதுமே இப்படித். தான். தங்கள் வரவால் என் மனம் மகிழ்ச்சியுற்று இவ்வாறு நகை முகத்துடன் நிற்கிறேன்; வேறல்ல; தாமரை சூரியனைக் கண்டு மலர்கிறது; ஆம்பல் சந்திரனைக் கண்டு அலர்கிறது; நிலவைக் கண்டு கடல் கொந்தளித்து எக்களிப்புச் செய்கிறது. சந்திரனைக் கண்டு காந்தக் கற்கள் குளிர் நீரைக் கக்குகின்றன. ஆகவே, ஆறறிவு படைத்த மானிடத்தின் செய்கை, அவற்றைக் காட்டிலும் அதிசயம் உடையது தானே!...” என்று ஆதி கூறினாள். புலவர் திகைப்புடன், “ஆதி... அமர்ந்து கொள்” என்று கூறிவிட்டு இரும்பிடர்த்தலையாரைப் பார்த்து, “எப்போதும் ஆதியின் பேச்சு, எனக்குக் குதூகலத்தை உண்டாக்குகிறது. இவள் அறிவு இவள் தந்தையின் பேரறிவினும் சிறப்புடையது. இவளால் கரிகாலனுக்குப் புகழ் ஏற்றம் உண்டாகும்” என்றார். பொருள் பொதிந்த வார்த்தைகளை ஆதி கூறியதை இரும்பிடர்த்தலையார் உணர்ந்து கொண்டார்; ஆம், அவள் கூறியவற்றில் வரும் சூரியனும் சந்திரனும் யாரைக் குறிக்கின்றன? பொய்கையாரையா? - இல்லை. அறைக்குள் மறைந்து கொண்டிருக்கும் அத்தியையே அவள் குறிப்பிட்டாள். இதைப்பற்றி இன்னும் விமர்சனம் செய்யவேண்டுமா? உண்மை, பொய்கையாருக்கு எப்படித் தெரியும்? அவர் கவிதையுள்ளம் ஆதியின் பேச்சை நன்கு மதித்தது. ஆனால், அவர் வந்த காரியம் வேறானதால் அதிகமாக வேறு சிந்தனையில் அவர் ஈடுபடவில்லை. சேரன் கணைக்காலிரும்பொறையை விடுதலை செய்ய வேண்டுமென்று பொய்கையார் இராப்பகலாக முயன்றார். சோழன் செங்கணான் சிறிதும், மனம் இரங்க வில்லை. வெற்றித் திமிர் கொண்ட அவன், சேரனைச் சிறையிலேயே இருத்தி வருந்த வேண்டுமென்று உறுதி கொண்டிருந்தான். ஆனால், அவன் தமிழ்நாட்டு அறிஞர் எவர்க்கும் தலைபணிபவன்; சிவபக்தன்; திருமாலுக்கு அடிமை. புலவர் பலராலும் பாமாலை பெற்றவன்; வள்ளல். எவ்வளவு நற்குணங்களும் புகழும் பெருமையும் அவன் பெற்றிருந்தாலும், சேரன் கணக்காலிரும்பொறை விஷயத்தில் அவன் யார் சொல்லையும் ஏற்கவில்லை. அவ்வளவு சேரனிடம் பகை வயிரம் கொண்டிருந்தது அவன் மனம். ஆகையால், சேரனின் நண்பர் பொய்கையார், அவன் விடுதலைக்காகப் பாடுபட்டும் பயனில்லாது போய்விட்டது. இரும்பிடர்த்தலையாரின் யோசனையை ஏற்றுத்தான் பொய்கையார் சோழனிடம் சென்றார்; ஆகவே அவனிடம் போய்வந்த வரலாற்றை முறையிட்டுக் கொள்ளவே அங்கு வந்தார். பொய்கையாரின் முகத்தைக் கொண்டே அவர் வந்த காரியத்தை அறிந்துகொண்டார் இரும்பிடர்த்தலையார். “என்ன ஆயிற்று? ‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ என்றுதான் முடிந்ததா?” என்றார் இரும்பிடர்த்தலையார். “அப்படித்தான் ஆயிற்று; என்னால் இயன்றவரை சொல்லிப் பார்த்தாயிற்று. அவன் உயிர் வேண்டுமானாலும் தருவானாம்; சேரனைச் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டுமாம். எனக்குத் தோன்றுகிறது தங்கள் மருகன் கரிகாலன் கட்டளையிட்டால் போதுமென்று. ஏனென்றால், அவன் இட்ட பிச்சைதானே செங்கணானுக்கு!” “அப்படிச் சொல்வது முறையல்ல. முறை தெரிந்த கரிகாலன் அப்படிச் சொல்வானா? நான் சொன்னால் என்ன? முக்கண் மூர்த்தியே வந்து சொன்னால்தான் என்ன? முறைக்கு மாறாக எதுவும் அவன் செய்ய மாட்டான்! நான் சொன்னபடிச் செய்யுங்கள்!” “அதனால் மட்டும்!...” “இல்லை; செங்கணான் வெற்றித் திமிரில் மூழ்கி இருக்கிறான். அவன் வெற்றியைச் சிறப்பித்துப் பாடினால் நிச்சயம் விடுதலைக்கு ஒப்புக்கொள்வான்; அதுவும் அவன் புலவர் புகழ்ச்சிப் பாட்டுக்களை விரும்புபவன். சேரனை வென்ற வெற்றிச் சிறப்பையே பாடுங்கள்; சேரனைப் புறங்கண்ட போர்களில் சோழனை மிகுதியாகப் புகழ்ந்து பாடுங்கள். நிச்சயம் சேரனுக்கு விடுதலை அளிக்க முற்படுவான்; வேறு யோசனையே வேண்டாம்.” “அப்படியே செய்கிறேன். நேற்று மாலையில் சேரன் சிறைப்பட்டிருக்கும் குணவாயில் கோட்டம் போயிருந்தேன்; உள்ளே போக அனுமதி கிடைக்கவில்லை. நான் வந்திருப்பதைச் சிறைக் காவலரைக் கொண்டு சேரனுக்கு உணர்த்தினேன். சேரன் எனக்குச் சில வார்த்தைகளைச் சொல்லியனுப்பினான்.” “என்ன?” என்று வியப்போடு கேட்டார். “ஒவ்வொரு கணமும் உயிர் தேய்ந்து கொண்டிருக்கிறது; பலவகையிலும், ஒவ்வொரு நாளும் கொடுமை செய்யப்படுகிறது. வாழ்வைக் காட்டிலும் சாவே மேல் என்று துணிந்து விட்டேன்; அதிக நாட்கள் இப்படியே இருப்பேன் என்று சொல்ல முடியாது; விடுதலை பெற்று உங்களையெல்லாம் நான் காணக் கிடைக்குமா?” என்று முறையிட்டிருக்கிறான் என்று கூறும்போது பொய்கையாரின் கண்களில் நீர் சுரந்து விட்டது, “விரைவிலேயே விடுதலைக்கு முயன்றால் நல்லது; இன்றே...!” “இன்றே பாடி விடுகிறேன். இந்த உதவி கூட என்னால் செய்ய முடியாதா, என் நண்பனுக்கு, விதியின் கொடுமை! இதைச் சொல்லிப் போகவே வந்தேன். வேறில்லை!” என்று எழுந்திருந்தார் பொய்கையார். “நான் இன்று நிலவு புறப்பட்டவுடன் புகார் போகிறேன். ஆதியை அழைத்து வருமாறு கரிகாலன் கட்டளையிட்டிருக்கிறான். இவளுக்கு மணப் பருவம் வந்துவிட்டதே என்றுதான். விரைவில் இவளுக்கு உயர் மணவாளன் கிடைக்கப் போகிறான்.” “ஆம்; ஆதி அரசிளங்குமரியாயிற்றே! கரிகாலனின் புதல்வி என்றால் ‘நான்முன், நான் முன்’ என்று நாலு திக்கிலிருந்தும் அரசிளங்குமரர் வருவார்கள்! இவளை வாழ்க்கைத் துணைவியாக அடைபவன் பெரும் பாக்கியம், செய்தவன்தான்! ஆதி, மங்களம் உண்டாகுக: புலவரே, நான் போய் வருகிறேன். தெய்வம் துணை செய்ய வேண்டும்; தங்கள் வாக்கு உண்மையாக வேண்டும்.” “உங்கள் பக்கம் வெற்றி! இம்முறை நிச்சயம் செங்கணான் உங்கள் சொல்லைத் தவறமாட்டான். போய் வாருங்கள்.” பொய்கையார் மிகுந்த கவலையுடன் புலவரின் மாளிகையை விட்டு வெளியேறினார். இரும்பிடர்த்தலையார் சிறிது நாழிகை கழித்து “அத் தி!” என்று அழைத்தார். அத்தி வெளி வந்தான். கட்டிலில் அமர்ந்து கொண்டான். “எல்லாம் கேட்டாயா?” “கேட்டேன்” என்றான் அமைதியோடு. “பொய்கையாருக்குச் சோழனோடு தொடர்பு இருக்கிறது. ஒருவேளை உன்னைப் பார்த்தால் ஏதேனும் நேர்ந்து விடலாம் என்றுதான் மறைந்திருக்கச் சொன்னேன்.” “என்னைப் பார்த்திருந்தால் காரியம் வேறுவிதமாகத்தான் முடிந்திருக்கும். எப்படியேனும், ஒருவர் கண்ணிலும் அகப்படாமல் தப்பிப் போக வேண்டும்” என்றான் அத்தி. “கவலை உனக்கு எதற்கு? நான் பார்த்துக் கொள்கிறேன்... வா, மாளிகையின் பின்புறம், பூஞ்சோலையில் உலாவிவிட்டு வரலாம். ஆதி, புறப்படுவதற்கு ஆயத்தமாகட்டும்” என்று சொல்லிக் கொண்டே மாளிகையின் பின்புறம் சென்றார். விடைபோன்ற நடையுடன் அவரைப் பின் தொடர்ந்தான் அத்தி. ஆதிக்கு உண்டான மகிழ்ச்சிக்கு எல்லை உண்டா? உடல் பூரித்தாள்; விறுவிறென்று சென்று ‘மல்லர்’களை அழைத்துப் பல்லக்கை ஆயத்தம் செய்யும்படி கட்டளையிட்டாள். சேடியர்களைக் கொண்டு ஆடையாபரணங்களை எடுத்து வைத்துக் கொண்டாள்; எப்போது நிலவு புறப்படப் போகிறது என்று எதிர்பார்த்து ஏக்கத்தோடு - ஆதுரத்தோடு கட்டிலில் அமர்ந்தாள். அவளைப் பிரிய வேண்டுமே யென்று வருத்தத்தோடு சேடியர்களெல்லாரும் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஆதியின் நினைவு எங்கோ சுழன்றது. நீண்ட நாழிகை கடந்தது. மேல் வானம் செவ்வானமாக மாறியது. சூரியனும் சிவந்து கொதித்துவிட்டு மறைந்தான். மங்கிப் புறப்பட்ட முழுமதியிலிருந்து, இன்ப வெள்ளொளி ததும்பிப் பரந்தது. பால் நிறை குடம் பொங்கி எங்கும் பால் மதியமானதுபோல், வான மெங்கும் மெள்ள மெள்ள, முழுமதியின் வெண்ணிலவு பரந்து ஒளி வீசியது. ‘ஏன், இவர்கள் இன்னும் வரவில்லை?’ என்று மாளிகையின் பின்புறத்தை நோக்கினாள். அத்தியும் புலவரும் வந்து கொண்டிருந்தனர். உள்ளே வந்ததும், ஆதி ஆயத்தமாக இருப்பதை உணர்ந்து கொண்டார் புலவர். அதிக நாழிகை தாமதிக்கவில்லை. பல்லக்கு, புறப்படச் சித்தமாயிருந்தது. “ஆதி, புறப்பட வேண்டியதுதானே!” என்றார். “நான் புறப்பட்டு விட்டேனே! நீங்கள் இன்னும் வரவில்லையே என்று இருக்கிறேன்” என்றாள். மாளிகைக் காவலரிடம் தகுந்தவாறு காவலுடன் இருக்கும்படி சொல்லிவிட்டு, புலவர் புறப்பட்டார். அத்தியுடனும் ஆதியுடனும் புலவர் பல்லக்கில் ஏறிக் கொண்டார். புலவர் மாளிகையைவிட்டுப் பல்லக்கு புறப்பட்டது. நேராக வீதி வழியேதான் சென்றது. பல்லக்கின் ஒரு புறம் கதவு சார்த்தப்பட்டும், ஒருபுறம் மெல்லிய ஆடையால் மூடப்பட்டும் இருந்தது. புலவரும் ஆதியும் ஒருபுறமும், அத்தி ஒருபுறமும் அமர்ந்திருந்தனர். புலவர் வாழ் வீதியைக் கடந்து அரச வீதியையும் கடந்து சென்றது பல்லக்கு. அரண்மனையையும் கடந்தாயிற்று. அப்புறம் கோட்டை மதிளை அடைந்த அளவில், மதிளகக் காவலர் பல்லக்கைத் தடை செய்தனர். “உள்ளே, யார்?” என்ற கேள்வியைக் கேட்டனர். “புலவர் இரும்பிடர்த்தலையாரின் பல்லக்கு! புலவர் புகார்ப் பட்டினத்துக்கு யாத்திரை போகிறார் என்றனர் மல்லர்கள். “புலவர் பெருமான், மன்னிக்க!” என்றனர் தலை வணங்கிய வீரர். “ஆம்! நான்தான்! சிவிகையைச் செல்ல விடுக” என்றார் புலவர். கோட்டை வாயிலைக் கடந்து பல்லக்கு ஆமிராவதியின் அணை மீது சென்றது. அணை முகப்பிலும் காவலர் தடை செய்து, முன்புபோல் செல்லவிட்டனர். இவ்வாறு கருவூரின் கோட்டை வாயிலைக் கடந்து, ஆமிராவதியின் சாலை வழியே, கிழக்குத் திக்கு நோக்கி, பல்லக்கு கடுகியது. சாலையில் பல்லக்கு போகவே, நிலவின் இன்பத்தையும் இரவில் அமைதியையும் ஒரு புறம் ஆமிராவதியின் அழகையும் கண்டு களித்துக் கொண்டே போவதற்காகப் பல்லக்கின் இருபுறத்தையும் திறந்துவிட்டனர். மாளிகையை விட்டுப் புறப்பட்டது தொடங்கி மௌனமாக இருந்த மூவரும், சாலை வழியே யாத்திரை தொடங்கிய அளவிலே பேசத் தலைப்பட்டனர். அந்தச் சாலையில் போக்குவரத்து இல்லாத அச்சமயத்தில் இவர்கள் பேச்சைக் கேட்பவர் வேறு யார் இருப்பார்கள்? அவர்கள் பேச்சிடையே ஆதியின் கண்டத் தொனி தான் மிகுதியாகக் கேட்டது. அவளுடைய பேச்சிலிருந்து அத்தி அவள் இயல்பை ஒருவாறு அறிந்து கொண்டான்; ‘வாதம் செய்வதில் பின்னிடாதவள்; வாக்குத் திறமை பெற்றவள்; இவள் பெரிய வித்தகி தான்’ என்று உறுதி செய்து கொண்டான். அவன் சிந்தனையைக் கலைத்து, “அத்தி, உறையூர் அணுகி விட்டது” என்றார் புலவர். ‘உறையூர்’ என்றவுடன், அத்தியின் மனம் திடுக்கிட்டது. வேகம் கொண்டது. அவனுடைய உள்ளத்தின் ஆழத்தில் புகைந்து கொண்டிருந்த வேதனை, சர்ப்பம் போல் சீறி எழுந்து அவன் அறிவைக் கௌவியது; அவ் வேதனைக்குக் காரணம் யார்? - மருதிதான். 'மருதி சிறைப்பட்டுக் கிடக்கும்’ - ஆனால், அத்தியின் நினைப்பு என்ன? ‘நல்லடிக்கோனின் மோக வலையில் சிக்கிய கணிகை மருதி, இந்த உறையூரில்தான் இருக்கிறாளோ! நான் இவ்வழியே அமைதியாகப் போவதா? மனத்தில் துயரத்தை அமிழ்த்திக் கொண்டு ஏன் இப்படி அடங்கிப் போகவேண்டும்? என் துயருக்குக் காரணமாகிய அந்தக் கணிகையையும் அந்தக் கள்வனையும் என் வாளுக்கு விருந்தாக்கி விட்டால் அப்புறம் சிறிதும் மனத்தில் துயரின் சின்னம் தெரியாதல்லவா? ஆனால், நான் ஒரு பேடி! அவளுக்காகப் போரில் புறங்காட்டி ஓடி வந்தேனே! அதற்குப் பயன் இதுதான்! நானும் இப்போது இவ்விருவரிடமும் அகப்பட்டுக் கொண்டு மீள வழி தெரியாமல் தவிக்க நேர்ந்ததே! என் இருதயத்தில் தீயைப் பற்ற வைத்த கள்வியும் கள்வனும் இவ்வுறையூரில் இன்பமாக இருக்கையில், நான் மட்டும் இதைப் பொறுத்துக் கொண்டு பேடிபோல் போவதா? இல்லை! இல்லை!! எது வரினும் இனி என் இருதயம் இளகாது! எப்படியேனும் இந்த வலையிலிருந்து தப்பிப் பகை கடிந்து மீளவேண்டும்!’ - என்று சிந்தித்தான். அவன் சிந்தனையின் வேகம் மிகுதியாகிக் கொண்டிருந்தது. உறையூரின் எல்லை அணுகியது. நிசப்தமான அந்தச் சாலையில், ‘கட கட’ வென்ற முழக்கம் எதிரிட்டு வந்தது. ‘இது என்ன முழக்கம்?’ என்று மூவரும் கிழக்குத் திக்கை உற்றுப் பார்த்தார்கள். “அத்தி, இது... ஆம்! தேர் ஒன்று வருகிறது! யாருடையது என்று பார்ப்போம்!...” என்றார் புலவர். அத்தி தலை நீட்டிப் பார்த்தான். மிக வேகத்தோடு வந்து கொண்டிருந்தது தேர். ‘இவ்வளவு வேகத்துடன், வரும் தேர் யாருடையதோ?’ என்று யோசித்தான். “அத்தி, அதோ அணுகிவிட்டது தேர்! வேகமாகப் போய்விடப் போகிறது! யாருடையது என்று மட்டும் பார்.” “பார்க்கிறேன்” என்று கூறி அத்தி ஆயத்தமாக உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தான். வெண்ணிலவில், தேர் மிக வேகமாக வருவது நன்கு தெரிந்தது. அந்தச் சாலையில் தேர் கிழக்கிலிருந்தும், பல்லக்கு மேற்கிலிருந்தும் சென்று சந்தித்தன. வேகமாக வந்த தேர், பல்லக்கை அணுகியது; பல்லக்கும் மெள்ளவே சென்றது; பல்லக்கிலிருந்து ஒருபுறமாக, இரண்டு முகங்கள் தெரிந்தன; அத்தியும் புலவருமே அவ்விதம் தலை நீட்டிப் பார்த்தார்கள். சட்டென்று தேர் நின்றது; அவ்வளவு வேகமும் சட்டென்று தணிந்தது; தேர் நின்றதைக் கண்டு, பல்லக்கும் நின்றது. “சிவிகையில் போவது யார்?” என்ற குரல் தேரிலிருந்து எதிரொலித்தது. “கேட்பவர் யார்?” என்று புலவர் கேட்டார். பல்லக்குச் சிறிதே கீழ்ப்புறமும், தேர் மேற்கு புறமும் நின்றது. புலவரின் கேள்வியால் தேரிலிருந்தவன் பந்துபோல் தாவி நிலத்தில் குதித்தான். அவன் ஒருவனே தேரில் இருந்தவன். நிலவொளியில், அவன் தாவிக் குதிக்கையில், அவன் கையிலிருந்த வாள் மின்னலிட்டது. புலவர் திகைத்துவிட்டார். ‘இவன் ஒரு வீரன்!’ என்று துணிந்தார் புலவர். அத்தி கூர்ந்து பார்த்தான். அதற்குள்ளாக அவ்வீரன் பல்லக்கினிடம் அணுகிவிட்டான். நிமிர்ந்த தலையோடு கடுத்த குரலில் பேசினான்: “சிவிகைக்குள் யார்?” என்றான்; அவன் முகம் நன்கு தெரிந்தது, புலவர் கண்களுக்கு. அவனைக் கண்டவுடன் தலையை உள்ளிழுத்துக் கொண்டான் அத்தி. “ஓ! நல்லடிக்கோனா! எங்கே போகிறாய் இரவில்?” என்றார் புலவர் இரும்பிடர்த்தலையார். “ஓ! புலவரா? மன்னிக்கவேண்டும்; நான் கருவூர் போகிறேன்... காரியமிருக்கிறது. உள்ளே இன்னும் யார்? இரண்டு முகங்கள் வெளியே தெரிந்தனவே!” என்றான் நல்லடிக்கோன். “வேறு யாரும் இல்லை! கரிகாலன் மகள் ஆதி இருக்கிறாள். அது இருக்கட்டும்! என்ன காரியம்? அவ்வளவு...” என்று பேச்சை மாற்றினார் புலவர். “ஆம்! மிகவும் பாடுபட்டுப் போரிட்டு, சிறைப் பிடித்த சேரனை விடுதலை செய்ய வேண்டுமாம்! அவனை விடுதலை செய்தால் இவ்வளவு காலம் போர் புரிந்த தெல்லாம் வீணாகி விடுகிறது. அவன் விடுதலையானால் தொல்லை அதிகமாகும். மறுபடியும் அவன் சேனதிபதிகளை யெல்லாம் சேர்த்துக்கொண்டு போர் செய்ய முற்படுவான். அவனை விடுதலை செய்யக்கூடாதென்று சொல்லவே இவ்வளவு கடிதாகப் போகிறேன்” என்று கூறிக்கொண்டே பல்லக்கை உற்றுப் பார்த்தான். “அப்படியா?” என்று புலவர் கேட்டுக்கொண்டிருக்கையில் அத்தி கடுஞ்சினம் கொண்டான். “பேடி! இதோ பெற்றுக்கொள்!” என்று தன் அரையில் கட்டிய உறையிலிருந்து வாளே எடுத்து உயர்த்தினான். வேகமாக வாள் மேலெழுந்து ஒளி வீசியது. மெய்மறந்து, “ஐயோ” என்று வீறிட்டவாறே அத்தியின் கையைப் பிடித்தாள் ஆதி. வாள் வீச்சுத் தவறியது; அத்தியின் வேகம் தணிந்தது, ஆதியின் தளிர்க்கைபட்டு. அடுத்தகணமே ஆதி கையை எடுத்துக்கொண்டாள் நாணம்கொண்டு. புலவர் பிரமித்துவிட்டார். சட்டென்று அத்தியை மறைத்துக் கொண்டார். “புலவரே, குரல் அத்தியினுடையதா? இந்தச் சூழ்ச்சி...” என்று துணிவோடு முன் நின்று பேசினான். “மருதியின் மனம் குளிரும்படி உனக்கு வாள் மாலை சூட்டுகிறேன்” என்றான் அத்தி சினம் மிகுந்து. புலவர் அவனை அடக்கி விட்டார். போர் மூண்டால் கொலை, யார் பக்கமோ? - ஆதி துடிதுடித்து விட்டாள். நல்லடிக்கோன் விடுபவனாயில்லை. “புலவரே, அத்தியைச் சிவிகையை விட்டு வெளியேற்றுங்கள். அவன் சிறைப்பட்டவன்! இதோ அவனை சிறைப்படுத்தப் போகிறேன்; என் தேர்க்காலில் கட்டி இழுத்துச் செல்கிறேன்.” “நல்லடிக்கோன், கருவூர் போகும் காரியத்தைப் பார். வீணே வார்த்தைகளை...” “புலவரே, சூழ்ச்சி நடவாது! அத்தியை விட்டாலன்றி இவ்விடம் விட்டுப் பல்லக்கை புறப்பட விடுவேனா அல்லது அவன் திறமையைப் பார்ப்போம். என் வாள் வன்மையைக் காட்டுகிறேன்” என்று கூறி, வாளை உருவி நின்றான். இளங்காளையாகிய அவன் சினத்துடன் வெறிபிடித்து நின்றான். “அத்தி என்னிடம் சிறைப்பட்டிருக்கிறான். அவனை விடமுடியாது. என்னிடம் உன் வெறியைக் காட்டாதே! உன்னைப்போல் நூற்றுக்கணக்காக வெறியர்களை அடக்கியிருக்கிறேன். உன்னுடன் வாள்யுத்தம் செய்யவேண்டுமானால் நான் வருகிறேன். இல்லையேல், கரிகாலன் மகள் இருக்கிறாள்! ஆனால், அத்தியை நீ காணமுடியாது” என்றார் புலவர். நல்லடிக்கோன் திகைத்து விட்டான், புலவரின் வாய்மொழியைக் கேட்டு. “என் வேதனையை ஆற்றிக் கொள்கிறேன். சிறிது நாழிகை கீழே இறங்குகிறேன்” என்றான் அத்தி. “அத்தி, உனக்கு வேதனையை ஆற்றிக்கொள்ளக் காலம் வரும்; இப்போது என் சொல்லை மறுக்காதே” என்றார் புலவர். “புலவரே, பெண்ணுடன் போர்புரியும் பேடியல்ல நான்! நிச்சயம் அத்தியை நான் விடேன்” என்று கூறிப் பல்லக்கைப் பிடித்துக் கொண்டான். புலவர் கடுங்கோபம் கொண்டார். கிழத் தன்மை மாறி இளமைத் தன்மைக்குரிய கோபவெறி துள்ளாடியது அவர் சொற்களில். தளர்வுற்றிருந்த அவர் மேனி மிடுக்குற்றது. கருணையால் களிதுள்ளிய கண்கள் கோபத்தால் சிவந்து துடித்தன. “நல்லடிக்கோன், உன் உயிருக்குக் கேடு உண்டாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்றார் புலவர். “அவன் உயிருக்கு யமனாக இருக்க நான் விரும்புகிறேன் புலவரே” என்றான் அத்தி, பதற்றத்துடன். “இல்லை; பெண்ணுடன் போர் புரிந்தால் பேடி என்று எண்ணும் இந்தப் பாதகனை, என் கை வாள் கொண்டு வீழ்த்துகிறேன்; அப்பொழுதாவது இவன் வீரசுவர்க்கம் போகட்டும்” என்று ஆதி கூறினாள். ஆதியின் வார்த்தைகளைக் கேட்டு அத்தி திகைத்து விட்டான். ‘இவளுக்கு இவ்வளவு வீரத்தை ஊட்டியவர் இப்புலவரல்லவா?’ என்று வியப்புற்றான். “ஆதி, அத்தி, நீங்கள் இருவரும் சிவிகையைவிட்டு இறங்கவேண்டாம்; இப்படியே இருங்கள்” என்று கூறி விட்டு, “அடே, மல்லர்களே, சிவிகையை இறக்குங்கள்” என்றார். சிவிகை நிலத்தில் இறக்கப்பட்டது. அடுத்தகணமே பல்லக்கின் ஒரு புறத்து முகப்பிலிருந்து புலவர் வெளிவந்தார். பல்லக்கின் முன் நிற்கும் நல்லடிக்கோனை அணுகினார். நல்லடிக்கோன் அஞ்சா நெஞ்சினாய் நின்றான். “புலவரே, அத்தியை விட்டாலன்றி சிறிதும் சிவிகையைப் போகவிடேன்” என்றான். “நிச்சயம்! உன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளாயா?” “முடியாது! மாற்றிக் கொள்வது என்ற பேச்சே வேண்டாம்.” “அப்படியானல், இதோ மாற்றிக்கொள்!...” என்று கூறிவிட்டு அவன் இரு தோள்களையும், பிடித்து அழுத்தினர். மும்முறை அவனைத் தூக்கிச் சுழற்றினார். “ஐயோ!” என்று வீறிட்டான் அவன். அப்புறம் பேச்சு மூச்சில்லை. நல்லடிக்கோன் நினைவிழந்தான் என்பதை உணர்ந்தவுடனே அப்படியே சாலையில் அவனைக் கிடத்திவிட்டு, சிவிகைக்குள் புகுந்தார். சிவிகையில் இருந்தபடியே அந்தக் காட்சியை ஆதியும் அத்தியும் பார்த்தார்கள். ஆதிக்கு அது வியப்பாக இல்லை. அத்தி அடைந்த வியப்புக்கு அளவில்லை; “மல்லர்களே, சிவிகை விரைவில் போகவேண்டும்” என்று புலவர் கட்டளையிட்டார். சிவிகை புறப்பட்டது. “உயிர் இருக்கிறதா... இல்லையா?” என்று ஆதியும் அத்தியும் கேட்டார்கள் அமைதியாக. “இன்னும் அரை நாழிகை கழித்துத்தான் அவனுக்கு நினைவு வரும்; வேறு... அப்படி ஒன்றும் இல்லை.” “நினைவு வந்தவுடன் மறுபடியும் பின் தொடர்ந்து, வந்தால் என்ன செய்வது?” என்று ஆதி கேட்டாள். “இனி பின் தொடர்ந்து வருவான் என்று சொல்வதற்கில்லை. வந்தால், அவன் ஆயுள் இன்றோடு முடியும்.” “புலவரே, உறையூர் எல்லையை இப்போது கடந்து விட்டோமல்லவா?” என்றான் அத்தி. “கடந்தாயிற்று; சிராப்பள்ளிமலையைக் கடந்து கொண்டிருக்கிறோம்” என்றார் புலவர். “புலவரே, எனக்காக இவ்வளவு சிரமம் தங்களுக்கு எதற்கு? அல்லாமல் எனக்குக் கிடைக்க இருந்த வாள் விருந்தையும் தடுத்துவிட்டீர்கள்! என்னையும் பெரிய விலங்கு போட்டு...” என்று தடுமாற்றத்தோடு அத்தி பேசினான். “அத்தி, ஆதியின் அறுசுவை விருந்தை அருந்திய நீ, வாள் விருந்தை இப்போது விரும்பாதே!... உன்னை விலங்கு போட்டது விதியா?... அல்லது... அத்தி! அது விதியின் செயல்! நீயாக வந்து அகப்பட்டுக் கொண்டாய் கூட்டில்; பிறர் புகமுடியாத கூட்டில் நீ புகுந்து விட்டாய். இனி, தப்ப முடியாது. ஆனால் கூடு உன்னுடையதுதான்; சந்தேகமில்லை; கவலைப்படாதே! இந்த விதிக்குத் தவறி நடக்க முடியாது!” என்று புலவர் கூறினார். “தங்கள் ஆக்ஞை எனக்கு நன்றாக விளங்க வில்லையே!” என்றான் அத்தி. “விளங்காமலிருப்பதே நல்லதல்லவா?” என்று மெள்ள நகை செய்தாள் ஆதி. “முற்றும் விளங்காமலே இருந்தால் நல்லதுதான்; விளங்கியும் விளங்காமலும் இருப்பது உள்ளத்தைப் புண் படுத்துகிறதே!” என்று கேட்டான் அத்தி. “அதனால் என்ன? பிறர் உள்ளம் புண் பட்டிருக்கையில்...” என்றாள் ஆதி. “அத்தி, ஆதி - இருவரும் சிறிது நாழிகை பேசாமலிருந்தால் உங்கள் இருவருள்ளமும் புண் ஆறி விடும்” என்றார் புலவர். சிவிகையில் பேச்சு அவிந்தது. புகார் நோக்கி விரைந்தது சிவிகை. இனி அவர்களைத் தடை செய்வோர் யார்? |