உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 15. விடங்கியின் தூது ‘மருதியின் மனத்தை இவ்வளவு விரைவில் கலங்க. வைத்து விட்டாளே! இந்தக் கூன் முதுகு உடைய விடங்கிக்கு என்ன துணிவு? என்னுடைய காவலைக் கடந்து எப்படியோ மாளிகைக்குள் புகுந்துவிட்டாளே! மருதிக்கும் அத்திக்கும் தூதுபோய் வருகிறாள் இவள்! மருதியுடன் இவளைச் சேரவிட்டால் பெருங்கேடு உண்டாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கிழவியை எப்படியேனும் மருதி அறியாமலே மறைத்து விட வேண்டும்! இவள் தொல்லை இனி இருக்கக்கூடாது! மருதி என்னிடம் இருப்பதைப் பற்றி, இவளேதான் அத்தியிடம் சொல்லியிருக்கிறாள். அதற்குமேல் அந்தக் கூத்தன், உதவி தேடிக்கொண்டு என்னை எதிர்க்க வரப் புகார் போயிருக்கிறான்!-ஆம்; அந்த இரும்பிடர்த்தலை அவனை அழைத்துப் போகிறான்; அதில் ஏதோ உண்மை இருக்கிறது! கரிகாலனின் மகள் சேர்ந்து போவதற்குக் காரணம் என்ன? - மணப் பருவம் அடைந்த அப்பெண் - சற்றும் நாணமில்லாதவளாயிருக்கிறாள்! - அவள் அத்திக்காகக் கோபம் கொண்டு சீறி விழுந்தாளே! - காரணம் என்ன? மருதியை இழந்த பின்பு கரிகாலனின் மகள் மீது காதல் கொண்டு விட்டானோ என்னவோ! - பாவம், இந்த மருதி, அந்த அரங்காடும் கூத்தனை எண்ணி எண்ணிக் கண்ணீர் விடுகிறாள்! மேனி கருகுகிறாள்! பெருமூச்சு விடுகிறாள்! ‘ஏன், ‘கரிகாலன் மகளிடம் காதல்கொண்டு. விட்டான் ஆட்டன் அத்தி’ என்று மருதியிடம் கூறலாமா? அப்பொழுதாவது இவள் மனம் மாறி விடாதா? இவள் மனத்தை மாற்றாமல் விடுவதில்லை; என்ன நேர்ந்தாலும் இவளை அத்தி காணும்படி விடேன்; எனினும் அத்தியை அழிக்காதவரை, இவளும் என்னிடம் காதல் கொள்ளால். அத்தியை அழித்து இவள் பனத்தை மாற்ற முயல்வேன்! இல்லையேல், இவள் மனத்தை மாற்றி என் வசமாக்கிய பின்னர், அவனை ஒறுக்க முற்படுவேன்! ஆ? - இன்று சீறி எழும் நாகம் போல் தோன்றும் இவள், நாளை உள்ளி விழாவில் எப்படி நாட்டியம் ஆடப்போகிறாள்! ஒருவேளை முன்பு உடம் பட்டுக் கூறியதை இப்போது மறுத்துக் கூறிவிடுவாளோ என்று எண்ணுகிறேன். எது எப்படியிருந்தாலும் முதலில் இந்தக் கிழவியை மருதியிடமிருந்து பிரித்துவிட வேண்டும்!’ என்று உறுதி செய்துகொண்டவாறே மருதியிருந்த மாடத்தின் முன்புறத்தில் உலாவிக் கொண்டிருந்தான் நல்லடிக்கோன். மருதியின் கோபத்துக்குக் காரணம் என்னவென்று சிந்தித்துக் கொண்டே உலாவிக் கொண்டிருந்தான்; தன்னை மாடத்தை விட்டு வெளியே போகும்படி அவள் சொன்னதை நினைத்து மனம் பொருமி, விடங்கியை வெளியேற்றுவதற்கு வழி தேடினான். மருதியின் வார்த்தைக்குத் தலை பணிபவன்போல் அந்தப்புர மாடத்தை விட்டு வெளியேறி விட்டாலும், மாடத்தின் முன் புறத்திலேயே நடந்து கொண்டிருந்தான். நீண்ட நாழிகை வேறு சிந்தையின்றி அங்கே அவன் நடந்து கொண்டிருப்பதை மாடத்தின் உள்ளிருந்து அம்பை மட்டும் அறிந்து கொண்டாள். ஆனால் அவள் மனத்தில் ஒவ்வொரு கணமும் பயம் துள்ளலாடியது. எந்தச் சமயத்திலும் அவன் மாடத்துள் புகுந்து எதுவும் எதிர் பாராதவிதம் செய்து விடுவானோ என்று எண்ணினாள்; நல்லடிக்கோனின் முக பாவத்தை கொண்டே அவ்விதம் அவள் கருதினாள். அவ்விதம் அவள் கருதிய சிறிது நாழிகையில் மஞ்சள் நிற வெயில் மாடத்துக்குள் புகும் தருணம் - கட்டிலை விட்டு விடங்கியும் மருதியும் எழுந்து சுற்றிலும் பார்த்தார்கள். அம்பை தனியே தூண் மறைவில் நிற்கும் தருணம், அவளைப் பார்த்தும் பாராமலும், மாடத்தின் பின்புறத்தை நோக்கி நடந்தார்கள் இருவரும்; அவ்விருவருடைய கண்களும் ஏதோ ஓர் அரிய உண்மையை வெளிக் காட்டுவதுபோல் பரபரப்புற்றிருந்தன. கோபத்தால் கொதித்து விதிர்ப்புற்றிருந்த மருதி மிக வேகமாக நடந்து சென்றாள் எனினும், அவள் பூமியில் அடிவைக்கும் சப்தம் சிறிதும் பிறர் காதில் கேட்காது. கோபத்தினாலோ அல்லது மனத்திலுள்ள ஆதுரத்தை வெளிப்படுத்த எண்ணியதாலோ மருதியின் மேனி சிவப்பூறி, பூரிப்புற்றுக் காணப்பட்ட தைக் கண்டாள் அம்பை. மருதியின் செய்கை ஒவ்வொரு தருணத்திலும் அம்பைக்கு வியப்பை அளித்தது. ஏன்? மருதி எந்த வகையிலும் பிறரை வியக்க வைக்கும் இயல்புடையவளேதான்! அதனால்தான் அவளுடைய கோபத்தைக் கண்ட தருணத்தில் கூட, நல்லடிக்கோன் சினம் கொள்ளாமல் வியப்பால் விதிர்ப்புற்று மாடத்தை விட்டு வெளியேறினான்! ஆம்! உண்மையில் மருதி ஓர் அதிசயப் பெண்பிறவிதான்! மருதி விடங்கியுடன் எங்கே போகிறாள்? எந்தக் காரியத்தைக் கருதிப் போகிறாள்?’ என்று சிந்தை செய்தாள் அம்பை. அவள் சிந்தனைக்குப் புலப்படக் கூடியதல்லவே, மருதியின் போக்கு! - ‘ஏதோ ரகஸ்ய சம்பாஷணை செய்யவே மருதியும் விடங்கியும் தனியிடம் போகிறார்கள்’ என்று எண்ணினாள் அம்பை, ஆனால், ‘அவ்விருவரும், தப்பிப் போக முயன்றால்?’ என்ற எண்ணமும் அதனுடன் அவள் மனத்தில் எழுந்தது. உடனே, மருதி போகும் இடத்தைத் தூண் மறைவில் நின்றபடியே பார்த்தாள். மாடத்தின் பின்புறம், கொடி மாடத்தின் முற்றத்தை நோக்கியே அவ்விருவரும் போவதைக் கண்டாள். அம்பையும் சிறிதே பின் தொடர்ந்தாள்; ஆனால் அம்பை பின்னே ஒற்றறிய வருகிறாள் என்பதை உணர்ந்துதானே, மருதி, மாடத்தின் பின்புறவாயிலில் கதவைச் சார்த்தித் தாழிட்டுக் கொண்டு போய்விட்டாள்? அம்பை, கதவு தாழிட்டிருப்பதைக் கண்டு திகைப்புடன் நின்றுவிட்டாள். அவள் மனத்தில் பயம் மிகுதியாயிற்று. கதவின் சிறு சந்து வழியே உற்றுப் பார்த்தாள். கொடி மாடத்தின் முற்றத்தில் மருதியும் விடங்கியும் நின்று கொண்டபடியே ரகஸ்யப் பேச்சில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்தாள். பேச்சின் குரல், காற்றுப் போக்கில் கேட்டதேயன்றி, அதன் விவரத்தை முற்றும் அவளால் அறிய முடியவில்லை. அப்படியே நீண்ட நாழிகை கவலையோடு நின்றாள் அம்பை. கதிரவனின் ஒளி மறையும் தருணம் அம்பையின் கண்களுக்குக் கொடி மாடத்திலிருக்கும், அவ்விருவரின் உருவமும் காண முடியவில்லை; கதவைத் திறந்து பார்க்க முடியாமலும் ஆகிவிட்டது. உடனே அம்பை பரபரப்புற்றாள். ‘இன்னும் கதவு திறக்கப்படவில்லையே! மருதியைப் பெயர் கூறிக் கூவி அழைக்கலாமா? அல்லது அரசிளங்குமரரிடம் போய்ச் சொல்லலாமா? இப்போது பேச்சின் குரல் கூடக் கேட்கவில்லையே! ஒருவேளை எங்கேனும் வழியறிந்து தப்பிவிட்டால் என்ன செய்வது?’ என்று யோசித்தாள். சிறிது நாழிகைக்கு முன் கேட்ட. பேச்சுக் குரல்கூட, இப்போது கேட்காமல் இருக்கையில், சந்தேகம் உண்டாகாமல் இருக்குமா? இருவர் கூடி இருக்கையில் பேச்சின் குரல் கேட்காமல் எப்படி இருக்க முடியும்? இருளோ சூழ்ந்து விட்டது! கொடி செடிகள் நிறைந்த இடத்தில் இருளில் துணிவோடு எப்படி இருக்க முடியும்? பேச்சின் ஒலி கேட்காதிருந்த அத்தருணம், ‘சர சர’ வென்று ஏதோ சப்தம் உண்டாவதைக் கேட்டு அம்பை நடுநடுங்கினாள். சட்டென்று அவளுக்கு அருகில் யாரோ நடக்கும் சப்தம் கேட்பதை உணர்ந்தாள். தாழிட்டிருந்த கதவு மெள்ள திறக்கப்பட்டது: ‘நல்ல வேளை, மருதி வந்துவிட்டாள்’ என்று எண்ணி ஆறுதல் பெற்று எதிர் நோக்கினாள் அம்பை. கதவு திறக்கப் பட்டதும், அவள் கண்ட காட்சி! கையில் வாளுடன் மருண்ட பார்வையோடு மிக விரைவாக முன் வந்தது ஓர் உருவம்! என்ன அதிசயம்! மருதியும் விடங்கியும் அல்லவா கதவைத் தாழிட்டுச் சென்றார்கள்! ஆனால் கதவைத் திறந்து வந்த உருவம் விடங்கியும் அல்ல, மருதியும் அல்ல! அம்பை ஒருகணம் திகைத்து மூச்சு நின்றுவிட்டாற்போல் திணறினாள்; வேகமாகப் பின்னே நடந்தாள். அந்த உருவம் கதவை மீண்டும் சார்த்திவிட்டு அம்பையின் அருகில் வந்தது. பேச்சு மூச்சற்று நின்ற அம்பை, ‘ஆ! யார்!’ என்று வீறிட்டாள். “அம்பை, நான் தான் நல்லடிக்கோன்! பயப்படாதே! விரைவில் மாடத்துக்கு வெளியே வா! அவர்கள் வருகிறார்கள்” என்று வேகமாக நடந்தான். மாடத்தைவிட்டு. பயம் அகன்ற அம்பை அரசிளங் குமரனைப் பின்தொடர்ந்தாள். நல்லடிக்கோனும் அம்பையும் மாடத்தின் வாயிலை விட்டு முன்புறம் சென்றார்கள். அப்போதே சேடியர் இருவர் மாடத்துக்குள் மணி விளக்குகள் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். “அம்பை, மருதி, விடங்கியை வெளியே அனுப்பப் போகிறாள்; அவளிடம் ஏதோ ஒலை அனுப்பியிருக்கிறாள். எனக்குத் தெரியாமல் அனுப்புவதற்காக உன்னைக் கேட்கப் போகிறாள். நீ பயமில்லாமல், மருதியின் விருப்பம்போல் விடங்கியை வெளியே அனுப்பிவிடு. நான் பார்த்துக் கொள்கிறேன். என்னைப் பார்த்ததாகவே அவளிடம் தெரிவிக்காதே! விரைவில் அங்கேயே போ!” என்று கூறிப் புறப்பட்டான். “நீங்கள் எப்படிக் கொடிமாடத்தை அடைந் தீர்கள்?” என்று ஆதுரத்தோடு கேட்டாள் அம்பை. “மருதியும் விடங்கியும் கொடிமாடம் போவதையும் நீ பின் தொடர்வதையும் கதவு தாழிடப்பட்டதையும் நான் சாளரத்தின் வழியே பார்த்தேன். உடனே சந்தேகம் கொண்டு மேல்மாடத்தில் ஏறி அதன் வழியே கொடி மாடத்தை அடைந்தேன். சுவர் மறைவில் இருந்த படியே அவர்கள் பேச்சை ஒற்றுக்கேட்டேன். விரைவில் போ!” என்றான். அடுத்த கணமே நல்லடிக்கோன், முன் மாளிகையை அடைந்து விட்டான். அம்பை பரபரப்புடன் அந்தப்புர மாடத்தை அடைந்தாள். தடாலென்று கொடி மாடத்தின் கதவு திறக்கப்பட்டது. மருதியும் விடங்கியும் வெளி வந்தனர். விளக்குகள் நாலு புறமும் ஒளி விட்டன. “அம்பை, நீ இங்கேதான் இருந்தாயா?” என்று கேட்டாள் மருதி பதற்றத்துடன். - “ஆமாம்! ஏன்?...” “நான் தாழிட்டுச் சென்ற கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றனவே! - காரணம்!” “நான் அறியேன், மருதி! ஒருவேளை கதவின் தாழ் தானாகவே விலகியிருக்கும்! வேறு யாரும் இங்கே இல்லையே! நான் மட்டுமே இங்கு இருக்கிறேன்.” “ஆச்சரியமாக இருக்கிறதே! எப்படியிருந்தாலும் எனக்குப் பயமில்லை! என்னை என்ன செய்ய முடியும்? யாரோ, ஒற்றறிய வந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒற்றறிந்த எவரும் என்ன தெரிந்து கொண்டிருப்பார்கள்!” என்று கடுகடுத்த முகத்தோடு சொல்லிவிட்டுக் கட்டிலில் அமர்ந்தாள். வாசனைப் புகை அவ்வறையில் எழுந்து மணம் வீசியது. தீபங்கள் மாடத்துக்கு அணியாக விளங்கின: சித்திரத்தில் வண்ணமிட்டு எழுதினாற்போல ஒளிப் பிழம்புகள், விளக்கில் சுடர்விட்டன. மருதியின் அருகில் பொன் வட்டில் ஒன்றில் முல்லையும் மல்லிகையும் - மாலைகளாகவும் - உதிர் பூக்களாகவும் குவித்து வைத்திருந்தன. அவற்றின் மணம் மென்மெல, காற்றின் சஞ்சார மிகுதியில் அறை முழுவதும் பரவியது; வாசனைப் புகையின், நறு மணமும், பூக்களின் சுகந்தமும் மருதியின் உள்ளத்தில் ஓர் அமைதியை உண்டாக்கின. அடுத்தாற் போல் வீணை வித்தகியான ஒரு சேடி, யாழின் நரம்பைத் தெறித்து, இசையொலியை எழுப்பிக் கொண்டிருந்தாள். அவ்வறையின் ஒருபுறம், அந்திப் போதில் என்றும் மங்களப் பாடல் பாடும் பெண் ஒருத்தி மங்கள கீதம் பாடிக் கொண்டிருந்தாள். கட்டிலில் அமர்ந்த சிறிது நாழிகையில், மருதி கடைக் கண்னால் விடங்கியை அருகில் அழைத்தாள். அவளும், குறிப்பறிந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அம்பையை ஒருமுறை உற்று நோக்கிவிட்டு மருதி காரணமில்லாமல், கலகலவென்று நகைத்தாள். அம்பை சட்டென்று திரும்பிப் பார்த்தாள். மருதி அவளை அருகில் அழைத்தாள். “அம்பை, அம்பை! உண்மையைச் சொல்வாயா?” என்றாள் தாழ்ந்த குரலோடு; அம்பை மெள்ள நகைத்துக் கொண்டே கட்டிலில் உட்கார்ந்தாள். “என்ன உண்மை? இங்கே யாரும் வரவில்லை! நான்தான் சொல்கிறேனே!” “அது இருக்கட்டும்; எனக்கு ஓர் உதவி செய்வாயா?” என்று சுற்று முற்றும் பார்த்தாள். அம்பை மருண்ட பார்வையோடு, “என்ன உதவி? உனக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்; தயக்கம் இல்லாமல் சொல்!” என்றாள் மென் குரலுடன். “அம்பை, நான் சொல்லப்போவதை யாரிடமும் சொல்லாதே. உன்னை நம்புகிறேன். உங்கள் அரசிளங் குமரர் அறியாமல் செய்ய வேண்டிய காரியம்...” “அப்படி என்ன காரியம்? என்னால் செய்ய முடிந்தால் செய்கிறேன்.” “நான் சொல்லப் போகும் காரியத்தை நீ செய்தால், உன்னை என்றும் மறவேன்; இது ஒன்று மட்டும் போதும்.” “மருதி, கவலையில்லாமல் சொல்; நான் செய்கிறேன்!” “விடங்கியைக் கருவூர் அனுப்புகிறேன் என் காதலரிடம்; உங்கள் இளவரசர் அறியக்கூடாது!” “மருதி, அனுப்புவதானால் இத்தருணமே அனுப்பி விடு; இத்தருணம் இளவரசர் பார்க்க முடியாது. எப்படியாவது மாளிகையைவிட்டு வெளியேற்றி விடுகிறேன்.” அம்பை அப்படிக் கூறிய அளவிலே மருதி திகைத்து விட்டாள், “விடங்கியை மாளிகைக்குள் புகுவதற்கே முதலில் அநுமதிக்காத அம்பையா இப்படிக் கூறுகிறாள்!” என்று பிரமித்து விட்டாள். ஆனால் அம்பை உடம்பட்டவுடனே மருதியின் உள்ளம் உவகையால் துள்ளியது. “விடங்கி, நீ விரைவில் புறப்பட்டுப் போ!” என்று விடை கொடுத்தாள் மருதி. விடங்கி வேகமாக நடையிட்டுப் புறப்பட்டாள். மருதி சிறிது சந்தேகத்தோடு அம்பையைப் பார்த்து, “அம்பை, உண்மையாக உன்னை நம்புகிறேன். என்னே வஞ்சிக்க வேண்டாம்” என்று கூறினாள். “இல்லை! மருதி, நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்: உன்னை நான் அறியேனா? என்னிடம் உனக்கு நம்பிக்கை இல்லையா? - இனி விடங்கியைப் பற்றிச் சிந்தனையே செய்ய வேண்டாம். கவலையை விட்டுவிடு” என்று கூறிக் கொண்டே அம்பை விடங்கியுடன் அந்தப்புர மாடத்தை விட்டு வெளியேறினாள். கட்டிலில் அமர்ந்திருந்த மருதி, சிறிதே எழுந்து நின்று விடங்கி போவதைப் பார்த்தாள். அவள் உருவம் மறைந்தது. ஆறுதலுடன் மீண்டும் கட்டிலில் அமர்ந்து கொண்டாள். மனத்திலுள்ள பெருஞ் சுமை நீங்கி விட்டதாகக் கருதினாள். அவள் மனம் வீணையின் இன்னிசையில் ஒன்றியது. அம்பையுடன் விடங்கி அச்சத்துடன் யோய்க் கொண்டிருந்தாள். மாளிகையின் முன் புறத்தையும் கடந்தாள். ஆனால் மாளிகையை விட்டு வீதியை அடைய ஆதுரப்பட்டாள் விடங்கி; யாரையோ எதிர் பார்த்தவளாய், அம்பை தயங்கி நின்றாள். மாளிகையின் முன் கூடத்தில், அதே தருணம் இருளைக் கிழித்து எழும் மின்னல்போல் வாள் ஏந்தி முன் வந்தான் நல்லடிக்கோன். அவனைப் பின் தொடர்ந்து இரு வாள் வீரர் வந்து நின்றார்கள். “அம்பை, நீ போய் அங்கே காவலிரு!” என்றான் கடுங் குரலில் நல்லடிக்கோன். அம்பை ஓடி மறைந்தாள்: “ஆ என்னை விட்டு விடடா!” என்றாள் கிழவி விடங்கி. “சீ! நில் அப்படியே! அடே, இவளைப் பிடித்துக் கட்டி அரண்மனைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றான் நல்லடிக்கோன். மறுகணமே விடங்கி சிறைப்பட்டு அரண்மனைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். |